தோன்றாத்துணை:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

மலையாள இலக்கிய ஆசிரியர்களுடன் நீங்கள் தற்கொலையைப்பற்றி விவாதித்த அந்த தீவிரமான கட்டுரையின் இறுதியை அடைந்தபோது ஒருவகையான நெஞ்சைக்கவ்வும் உணர்ச்சியை  அடைந்தேன்.  அந்த விவாதம் முழுக்க நீங்கள் எப்படி நிதானமாக இருந்தீர்கள் என்பது ஆச்சரியமானது. உங்கள் அன்னையின் தற்கொலை நிகழ்ந்தபோது அது உங்கள் வாழ்க்கை நோக்கில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என ஊகிக்கிறேன். அந்த தற்கொலைகள் நிகழ்ந்தபோது உங்களுக்கு எத்தனை வயது என்று தெரியவில்லை.  அது அவ்வளவு வலிமிக்கதாக இருக்கக்கூடாதென்ற உங்கள் ஏக்கம் வெளிப்பட்டது.

பெரும்பாலான தற்கொலைகள் தற்காலிக மனஎழுச்சியின் விளைவுகள் மட்டுமே என்பதைக் கவனித்திருக்கிறேன். சரியான நேரத்தில் தலையிட்டு ஆலோசனை அவ்ழங்கினால் அவற்றை தவிர்த்திருக்க முடியும். நான் டெல்லியில் இருந்தபோது நடந்த என் நண்பனின் தற்கொலை இன்றும் என் நினைவில் நீடிக்கிறது.  அவன் தொழில் நுட்பத்திறன்ம் உடையவன் .நல்ல குடும்பம். ஒரு குழந்தையும் உண்டு. இதுநாள்வரை அவனை தற்கொலை செய்ய வைத்த விஷயம் எது என்று  என்னால் ஊகிக்க முடியவில்லை.
சங்கரநாராயணன்
தோன்றாத்துணை – தவிர்க்க முடியாத துணை- என்ற தலைப்புக்கு என்ன பொருள்?

அன்புள்ள சங்கர நாராயணன்

தற்கொலையைப்பற்றி நான் மீள மீள எழுதுவதற்கும் ஒரே காரணம்தான் , அதை உயிர்வாழ்பவர்களால் முழுமையாகப்புரிந்துகொள்ள முடிவதில்லை

தோன்றாத்துணை என்பது கண்ணுக்குத்தெரியாத துணை. அந்த அறையில் இன்னொருவர் வந்து அம்ர்ந்தது போல் இருந்தது என்ற வரி வருகிறதே , அதுதான். மரணம்

ஜெ

அன்புள்ள ஜெ

தோன்றாத்துணை கட்டுரையை நேற்று வாசித்தேன். முதலிலே அக்கட்டுரை எங்கே செல்கிறதென்றே எனக்குத் தெரியவில்லை, ஆனால் சட்டென்று ஒரு சிறுகதை போல அது முடிந்தபோது அந்த வரி வரைக்கும் வந்த உணர்ச்சிகள் எல்லாமே தலைகீழாக மாறின. அது வரை ஒரு வகையான அச்சம் அருவருப்பு பீதி எல்லாம்தான் காணப்பட்டது. ஆனால் கடைசியில் துக்கமும் வெறுமையும் ஏற்பட்டது. ராத்திரியில் தனிமையில் அமர்ந்து அதைப் படித்துக்கொண்டிருந்தேன். முத்லில் அச்சம் உருவானது. ஆனால் கடைசியில் இருட்டான அறையிலேயே கொஞ்ச நேரம் அபப்டியே இருக்கவேணும்போல இருந்தது

எஸ். கலையரசி

அன்புள்ள ஜெயமோகன்

தோன்றாத்துணை ஓர் அற்புதமான கட்டுரை. அந்தக்கட்டுரை அல்லது கதையின் சிரப்பே அதில் வரக்கூடிய எழுத்தாளர்களின் குணங்கள் ஓரிரு சொற்களின் வழியாக சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருந்தமைதான். என்னால் பூனத்தின் குஞ்சப்துல்லா பேசும் பாணியை மறக்கவே முடியவில்லை. தூக்கில் சாவது நல்ல விசயம் என்று அவர் கைகுலுக்குவதை நினைத்து சிரித்தேன். மரணத்தை இப்படி சாதாரனமாக பேச ஆரம்பித்தால் அது இன்னும் பயங்கரமாக ஆகிவிடுகிறது

செல்வம்
சென்னை

அன்புள்ள ஜெயமோகன்

தோன்றாத்துணை கட்டுரையை பலமுறை வாசித்தேன். எத்தனையோ ஞாபகங்களை உண்டுபண்ணியது அந்த கட்டுரை. சின்னவயசில் நாம் தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிவதில்லை. பிறகு நீண்டகாலம் கழிந்து நினைத்துப்பார்க்கும்போது அந்த பேச்சையெல்லாம் நினைவுக்கு வரவழைத்தால் பயமாக இருக்கும். உதாரணமாக நான் கல்லூரியில் படிக்கும்போது நான்கு தோழிகள் எப்போதும் கூட்டமாகவே அலைவோம். சேர்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். அப்போதுதான் வைதேகி காத்திருந்தாள் என்ற சினிமா வந்திருந்தது. அதில் ஒரு பெண் விஜயகாந்தை காதலித்து அவர் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யப்போகிறார் என்று நினைத்து தற்கொலை செய்துகொள்வாள். அதைப்பற்றி நாங்கள் ஹாஸ்டலில் உட்கார்ந்து ராத்திரி ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது செல்வி என்ற தோழி தற்கொலை செய்துகொண்டவள் ஒரு முட்டாள் என்றும் அவளெல்லாம் சாவதுதான் சரி என்றும் சொன்னாள். நாங்கள் எல்லாம் அவளை திட்டினோம். ஆனால் அவளே பிறகு தற்கொலை செய்துகொண்டாள் என்று கேள்விபப்ட்டேன். அந்த அறையிலே மரணமும் வந்து உட்கார்ந்திருந்ததா என்று இந்தக் கட்டுரையை படிக்கும்போது நினைத்துக்கொண்டேன்

கமலாதேவி
மதுரை

அன்புள்ள ஜெயமோகன்,

தோன்றாத்துணை மிகவும் பயமுறுத்தும் கட்டுரை. தூக்கு என்றுதான் சாதாரணமாக கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த அளவுக்கு விரிவாக யோசித்ததே இல்லை. நீங்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் மிகவும் பயமூட்டுகின்றன. என் கல்லூரி நண்பன் ஒருவன் வீட்டிற்கு லீவில் போனபோது பம்புசெட் ரூமில் தூக்கு போட்டுக்கொண்டான். அவனுடைய மரணத்தை நான் நேரில் கண்டதுபோல உங்கள் கட்டுரையை வாசித்தபிறகு உணர்ந்தேன். கொடூரமான கட்டுரை அது

அழகப்பன் குணசேகரன்

தோன்றாத்துணை http://jeyamohan.in/?p=775

முந்தைய கட்டுரைகடவல்லூர் அன்யோன்யம்
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸ்;கடிதம்