ஈரோட்டில் பசுமை பாரதம் என்ற அமைப்பை நடத்திவரும் கிருஷ்ணன், சிவா, பாபு, செந்தில் முதலியவர்கள் சில வருடங்களாக நண்பர்கள். இருமாதங்களுக்கு ஒருமுறை ஒரு வனவலம் என்பது திட்டம். குறைந்த செலவில் கடுமையான பயணம் என்பது எங்கள் வழிமுறை. இம்முறை நான் பேருந்தில் ஈரோடு போனேன். அன்று பகலில் ஈரோட்டு வாசகர்களைச் சந்தித்தேன். பேருந்தில் வீரக்குமார் என்ற வாசகர் தற்செயலாக அறிமுகமானார். நண்பர்களுடன் ஈரோடு அருகே உள்ள ஒரு சிற்றூருக்குச் செல்வது வழக்கம். அது அமைதியான செழிப்பான கொங்குவட்டாரக் கிராமம். அங்குள்ள ஒரு சிறு டீக்கடையில் ஏற்கனவே சொன்னால் நல்ல சிற்றுண்டி செய்து தருவார்கள். அங்கே நடைசென்றபடி உரையாடினோம். இம்முறை இந்திய சிந்தனை மரபில் கீதை பற்றியும் லா.ச.ரா பற்றியும்.
கொங்கு வட்டார அரசியல்வாதிகளான சுப்பராயன், சி.சே.சு.ராஜன்,சி சுப்ரமணியம் ஆகியோர் அம்மக்களுக்கு மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள். அம்மாதிரி அதிருஷ்டம் சிவகாசி, விருதுநகர்காரர்களுக்கு காமராஜ் மூலம் ஓரளவு கிடைத்தது. பிற எந்தப்பகுதி அரசியல்வாதிகளும் தங்கள் மக்களுக்காக அந்த அளவுக்கு உழைக்கவில்லை. அமராவதி, பவானி, பரம்பிக்குளம்- ஆழியாறு அணைக்கட்டுகள் மூலம் கொங்குமண்டலம் தமிழ்நாட்டிலேயே வளமான மண்ணாக உள்ளது. எங்குபார்த்தாலும் வள்ர்ச்சியையும் செழிப்பையும் காணமுடிகிறது. வறுமையே கண்ணில் படாமல் இன்று நாம் சுற்றக்கூடிய ஒரே தமிழக பகுதி இதுதான்.
இன்னொரு விஷயமும் சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சாதி மேலாதிக்கத்துடன் இருக்கும். அப்பகுதியின் வளர்ச்சியில் அச்சாதியின் குணாதிசயம் முக்கியமான பங்கு வகிக்கும். அப்படிப் பார்த்தால் கொங்கு மண்டலத்தின் சாதியான கொங்கு கவுண்டர்கள் மிக மிக கடுமையான உழைப்பாளிகளாகவும் ஒற்றுமை கொண்டவர்களாகவும் இருக்கும் அதேநேரத்தில் பிற்சாதியினரிடம் மிக இணக்கமானவர்களாகவும் பண்பானவர்களாகவும் இருக்கிறார்கள். தமிழகச் சாதிகளிலேயே ‘நோபிள்’ என நான் கொங்குக் கவுண்டர்களை மட்டுமே சொல்லத்துணிவேன்.
இரவில் கிளம்பி நேராக சாலக்குடி வழியாக ஆதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்குப் போனோம். குற்றாலம் பெரிய அருவியை விட இரு மடங்கு உயரம். இருமடங்கு நீர். ஆனால் அருகே நெருங்கவே முடியாது. மணிரத்தினத்தின் ஆஸ்தான நீர்வீழ்ச்சி. கடைசியாக ஐஸ்வரியா ராய் நனைந்து ஆடியிருக்கிறார். [குரு.] சுற்றிலும் எந்த கட்டுமானங்களும் இல்லாமல் பசுமைக்காடாக மட்டுமே இருப்பதுதான் காரணம். அங்கே ஒரு ரிஸார்ட்டில் தங்கினோம்.
பிறகு காட்டுச்சாலை வழியாக நேராக வால்பாறை. 90 கிலோமீட்டர் தூரத்தை நான்குமணிநேரத்தில் கடந்தோம். அப்படிப்பட்ட சாலை.வரும் வழியில் எனேகமாக ஊர்களே இல்லை. இருமுறை காட்டுக்குள் ஓடிய ஆற்றுக்குள் இறங்கி நீராடினோம். வால்பாறை வந்து பச்சைக்கடல் ஒன்ற் புயலில் கொந்தளித்து அப்படியே உறைந்திருந்தது போலக்கிடந்த புல்வெளிகளைப் பார்த்துவிட்டு ஆனைமலைக்கு வந்தோம்
ஆனைமலையில் தங்க உருப்படியான விடுதி மாசாணியம்மன் கோயிலருகே உள்ள மாசாணி என்ற ஓட்டல். இந்த தெய்வம் கடந்த 5 வருடத்தில் திடீர் புகழடைந்து பணம் அள்ளிக் கொண்டு இருக்கிறது. ஊர் இன்னும் சிலவருடங்களில் பெரிய சுற்றுலா மையமாகிவிடலாம். எங்கும் கட்டுமானப்பணிகள். இது ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான சிறு தெய்வம். பிரசவத்தில் இறந்த ஒரு பெண். அவளை கிடந்த வாக்கில் பெரிய சிலையாக வழிபடுகிறார்கள். மண்சிலை. சிலைக்கு வற்றல் மிளகாயை அரைத்து பூசினால் செய்வினை சரியாகுமென ஒரு நம்பிக்கை.
ஆனைமலையில் சாப்பிட்ட ஓட்டலில் ஒரு கரிய பெண்ணைப்பார்த்தேன். பிளாஸ்டிக் கருமை! கோயில் சிலை போன்ற முகம். பெரிய மூக்குத்திகள். பதினாறு பதினெட்டு இருக்கும். மிக மிக ஏழை என்பது தெரிந்தது. அனேகமாக அவளது முதல் வெளியூர் பயணமாக இருக்கும். அப்படியே பூரித்து பொங்கி உடம்பே சிரிப்பாக அமர்ந்திருந்தாள். எல்லாவற்றுக்குமே வாயைப்பொத்தி குலுங்கினாள். அவளது வாழ்க்கையின் பொற்கணங்கள் அவை என்பதை அவளே அறிந்திருப்பாளா என்று தெரியவில்லை
காலையில் டாப் ஸ்லிப் போனோம். காதுகளில் வியர்வையின் ஆவி அடிக்கும்படி ஒரு கானுலா. எட்டு கிலோமிட்டர்.. திரும்பி வந்து சற்று ஓய்வு, பிறகு மீண்டும் இன்நொரு கானுலா. இரவில் காரிலேயே காட்டுக்குள் சென்றோம். ஒரு இடத்தில் முயல் சாலையைக் கடந்தது. ‘பின்னால் புலி வந்திருக்கும்’ என்றார் கிருஷ்ணன் வேடிக்கையாக. மேலும் சென்று வழியில் காட்டெருதுக் கூட்டத்தைப் பார்த்தபின் மேலே சென்று மான்களைக் கண்டு திரும்பும் வழியில் இன்னொரு வண்டி வந்துகொண்டிருந்தது. ‘என்ன பார்த்தீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘காட்டெருமையைப் பார்த்தோமே நீங்கள் பார்க்கவில்லையா?’ என்றோம். ‘இல்லையே சார், சாணிதான் கிடந்தது’ என்றார்கள். ‘எல்லாவற்றுக்கும் யோகம் வேணும் சார்!’ என்று சொல்லி நாங்கள் வந்துவிட்டோம்.
ஆனால் அவர்கள் அரைமணிநேரத்தில் பதற்றத்துடன் வந்தார்கள். ‘சிறுத்தை சார்! சிறுத்தையைப் பாத்தோம்! ரோடு கிராஸ் பண்ணிச்சு… வீடியோ எடுத்தோம்’ என்று காட்டினார்கள். நாங்கள் முயலைப் பார்த்த அதே இடம். முயலுக்குப் பின்னால் அது வந்து நாங்கள் பேசுவதைக் கேட்டு புதருக்குள் இருந்திருக்கிறது.
டாப் ஸ்லிப்பில் யானை டாக்டர் என அழைக்கப்பட்ட மறைந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைவாக ஒரு புகைப்படக் கண்காட்சி உள்ளது. 40 வருடம் டாப் ஸ்லிப்பில் யானைகளுக்காகவே வாழ்ந்த மாமனிதர். 300 யானைகளுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள், காட்டுவிலங்குகள்!
மறுநாள் பறம்பிக்குளம் சரணாலயத்துக்குப் போனோம். தமிழகப் பகுதியைவிட சட்டங்களும் கண்காணிப்பும் அதிகம். காட்டில் நீர்வளமும் செழிப்பும் அதிகம். மான்கூட்டங்கள் காட்டெருதுக் கூட்டங்களை தொடர்ச்சியாகப் பார்த்தோம். நான் இதுவரைக் கண்ட சரணாலயங்களில் சிறப்பாக பேணப்படுவது அதுவே.
காடு எனக்குள் எப்போதும் உள்ளது. அதை அவ்வப்போது வெளியே பிரதிபலித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.