தமிழ் நவீன மொழிப் பரிணாமத்தில் திராவிட இயக்க எழுத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அவர்களுக்கு நவீனப் இலக்கிய பரப்பில் இடமில்லை என்றே விமர்சகனாக நான் நினைக்கிறேன். நவீன இலக்கியம் அவருடன் தொடர்பற்ற ஒரு தனிச் சரடாகவே உருவாகி வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. ஆனால் மொழியை கருத்தியல்ச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் ஒரு காலகட்டம் தமிழில் தொடங்கியபோது அதன் ஒரு முக்கியமான தரப்பாக அவர்கள் ஒலித்திருக்கிறார்கள். மொழிச்செயல்பாட்டை மக்கள்மயகாக்கியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் காந்திய இயக்கமும் பின்னர் இடதுசாரிகளும் உருவாக்கிய கல்வி மற்றும் இதழியல் புரட்சியின் அடுத்த கட்டநீட்சியாக திராவிட இயக்கத்தவர் மேலெழுந்து வந்தார்கள். அவர்கள் இதழ்களான திராவிட நாடு குடியரசு போன்றவை பரவலாக அவர்கள் உருவாக்கிய கிராமப்புற வாசகசாலைகளில் வாசிக்கப்பட்டன. பொன்னி போன்ற இதழ்களில் தொடர்ந்து அவர்களின் எழுத்தாளர்கள் எழுதினார்கள்.
திராவிட எழுத்தாளர்கள் என்று சொல்லும்போது இன்று திராவிட இயக்கத்தின் அனுதாபிகளைக்கூட சேர்த்துவிடும் ஒரு போக்கு இருக்கிறது. ஆனால் திராவிட இயக்க எழுத்தாளர் என்று வரையறுக்கும்போது திராவிட இயக்கக் கொள்கைகளை முற்றிலும் ஏற்றுக் கொண்டு, அவர்களின் மொழி மற்றும் அரசியலை தங்கள் அடையாளமாக கொண்டு, அவர்களின் இதழ்களில் எழுதிய எழுத்தாளர்களைக் குறிப்பிட வேண்டும். அவ்வகையில் எஸ்.எஸ்.தென்னரசு தான் அவர்களின் முதன்மையான படைப்பாளி என்று எனக்குத் தோன்றுகிறது. அவருடைய சில சிறுகதைகளும் கோபுரகலசம் என்ற நாவலும் முக்கியமானவை. சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி போன்றவர்களை இன்றைய சூழலில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் என்று சுட்டிக் காட்டத்தக்கவர்கள்
திராவிட இயக்க எழுத்துக்கு என சில அடையாளங்கள் உண்டு. அவை நேரடியாக எளிய வாசகனிடம் பேசக்கூடிய மொழிநடை கொண்டவை. வாசகனைக் கவரும் மிகையான ஒலியும் அப்பட்டமான உணர்வுகளும் நிறைந்தவை. பொதுவாக தனித்தமிழ் நோக்கிச் செல்லக்கூடியவை. சமூக சீர்திருத்தப் பிரச்சாரத் தன்மை அவற்றின் மையம். உரையாடல்களை அச்சுத்தமிழில் அமைப்பது அவர்களிடம் வழக்கமாக இருந்தது. பின்னாளில் பேச்சுத் தமிழில் அமைக்கும்போது கூட அது குறிப்பிட்ட சாதிய வட்டார அடையாளமில்லாத ஒரு பேச்சுத் தமிழில் அமைத்தனர்.
இன்று திராவிட இயக்கத்தின் இலக்கிய எழுத்துக்களை பார்க்கும்போது அவர்களுடைய முதன்மையான பிரச்னையாக இருந்தது ஆண் பெண் உறவுதான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அவர்கள் அரசியல்கருத்துக்களையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் பெருவாரியாக கட்டுரைகளில்தான் எழுதியிருக்கிறார்கள். கதைகளை அகத்துறை சார்ந்தவையாகத்தான் அணுகியிருக்கிறார்கள்.
திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு உண்மையில் அவர்களின் ஆண் பெண் உறவு சார்ந்த பார்வையில் ஒரு மிகப்பெரிய இக்கட்டு இருந்தது. அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதும், பொற்காலமாக முன் நிறுத்தியதும் சங்ககாலத்தையும் காப்பியகாலத்தையும்தான். ஆகவே சங்ககால, காப்பிய கால விழுமியங்களை அவர்கள் தங்களுக்கென எடுத்து முன் வைத்தார்கள். அவ்விழுமியங்கள் நவீன காலகட்டத்துடன் முரண்படுபவை. தொன்மையான பழங்குடிக்காலப் பண்பாடு கொண்டவை. ஆகவே பொதுவாக ஆணாதிக்கநோக்கு கொண்டவை. ஆனால் அவர்கள் பேசிய சமூக சீர்திருத்த நோக்கு ஆண்பெண் சமத்துவத்தை முன்வைப்பது
இந்த முரண்பாடை சமன் செய்வதற்காக அறிவுலகத்தில் ஒரு கழைக்கூட்டாட்டத்தை நிகழ்த்துகிறார்கள். அதன் பொருட்டே அவர்கள் அத்தனை கதைகளை திரும்ப திரும்ப எழுதியிருக்கிறார்கள். சி.என்.அண்ணாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு போன்றவர்களின் கதைகளில் மாதவியும் கண்ணகியும் வெவ்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப வருவதைப்பார்க்கலாம். நவநாகரிகப் பெண்களை மாதவியாகவும், தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்களைக் கட்டிக் காத்து நிற்கும் படித்த பெண்ணை கண்ணகியாகவும் உருவகித்து அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அவர்களுடைய பார்வையில் ஒருவனை மட்டுமே உள்ளத்தாலும் நினைக்கும் கற்பு, குடும்பத்துக்கு அடங்கி இருத்தல், கணவனுக்கு தோள் கொடுத்து நிற்றல், ஒருபோதும் ஆணின் அகந்தையை புண்படுத்தாமல் அவனுக்கு இணைந்து வாழ்தல் போன்ற விழுமியங்கள் உயர்ந்தவையாக கருதப்படுகின்றன. அதே சமயம் சாதிமத பேதங்கள் பிற்போக்காகவும் கருதப்படுகின்றன. ஆகவே அவர் உருவாக்கும் கண்ணகி நவீன கல்வி பெற்றவளாகவும் ,சாதி மதம் போன்றவற்றின் பிடியில் இருந்து வெளிவந்தவளாகவும் ,அதே சமயம் விரும்பியே பழைய கண்ணகியின் பெண்ணடிமைத்தன வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவளாகவும் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் முன்வைக்கும் மாதவி நவீன கல்வி கற்றவளாகவும், அதேசமயம் போகங்களில் திளைப்பவளாகவும், ஆண்களை துச்சமாக நினைப்பவளாகவும், தமிழ் பண்பாட்டை உதாசீனம் செய்பவளாகவும் இருப்பாள்.
இந்தக் கண்ணகி, மாதவி, கோவலன் என்ற மூன்று உருவகங்களைக் கொண்டே பெரும்பாலான திராவிட இயக்கப் படைப்புகளை புரிந்து கொள்ள முடியும். திராவிட இயக்க எழுத்துக்களுக்கு இன்று கலைப்பெறுமானம் உண்டா என்றால் இல்லை என்பதே என் பதில். அவை சென்ற காலத்தின் ஆவணங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். சென்றகால வாழ்க்கையை அவை காட்டுகின்றனவா என்றாலும் இல்லை என்றே பொருள். அவை இங்கு நடந்த ஒரு கருத்தியல் பரிணாமத்தைக் காட்டுகின்றன. அதில் செயல்பட்ட உளநிலைகள் என்ன, அவர்கள் எவ்வாறு அந்த இக்கட்டைக் கடந்து வந்தார்கள் என்பதைப் பார்ப்பதற்கான மொழிப்பதிவுகள் அவை.
தமிழக நவீன இலக்கியம் திராவிட இயக்கத்திற்கு முன்னதாகவே உருவாகிவிட்டது. அதன் முன் பலவீனமான கலையை உருவாக்கும் பரப்பியக்கமாகவே திராவிட இயக்கம் இருந்தது. ஆனால் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் திராவிட இயக்கமே நவீன இலக்கியத்தை உருவாக்கியது. சிங்கப்பூரின் தமிழர்பெருந்தலைவரான சாரங்கபாணி திராவிட இயக்கத்தவர். ஈ.வே.ரா அவர்களின் நண்பர். திராவிட இயக்கத்தின் பங்களிப்பில் முக்கியமானது இது என்பதில் ஐயமில்லை.
சிங்கப்பூரின் திராவிட இயக்கச் சார்புள்ள தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாளி திரு ந.பழநிவேலு அவர்கள். பாரதிதாசனின் பாசறையை சேர்ந்தவர் என்று அவரை அவரது நூல் அறிமுகம் செய்கிறது. பாரதிதாசனின் கவிதா மண்டலத்தில் இவரின் பல கவிதைகள் பிரசுமாகியிருக்கின்றன. 1940 முதல் 40 ஆண்டுகாலம் சிங்கை வானொலியில் அவர் பணியாற்றியிருக்கிறார். இளங்கண்ணன், இராம கண்ணபிரான் போன்றவர்களுக்கு முன்னோடி அவர்
அவருடைய ’காதல் கிளியும் தியாக குயிலும்’ என்னும் தொகுப்பை வாசித்தேன். அதன் தலைப்பே சுட்டுவது போல நேரடியாக திராவிட இயக்க நெடி கொண்டது. திராவிட இயக்கம் முன்வைத்த அந்த இருமை தலைப்பிலேயே வெளிப்பட்டுவிடுகிறது. தலைப்புக்கதை எல்லா வகையிலும் திராவிட இயக்கம் உருவாக்கிய கண்ணகி-கோவலன் – மாதவி உருவகங்களால் ஆனது.
இளவயதிலேயே சம்பந்தனுக்கு விசாலாட்சி என்று முடிவாகிவிடுகிறது. அப்படியே அவர்கள் வளர்கிறார்கள். சம்பந்தன் வளர்ந்து வரும்போது இந்திராணி என்ற நவநாகரிக நங்கையைக் கண்டு காதலுறுகிறான். அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். விசாலாட்சியைக் கைவிட்டு விட்டு அவளைத் திருமணம் செய்யப் போகிறான். விசாலாட்சி தியாக உள்ளத்துடன் அவனுடைய அந்த மனமாற்றத்தை அங்கீகரித்து அவன் இந்திராணியை மணம் புரிந்துகொள்ளட்டும் என்று சொல்கிறாள். ஆனால் தான் காலம் முழுக்க கன்னியாகவே இருப்பேன் என்று சொல்கிறாள். சம்பந்தன் பலவாறு மன்றாடியும் கூட அவனை மறக்கவோ தன் நிலையிலிருந்து மாறவோ விசாலாட்சி முற்படவில்லை. ஏனென்றால் ஒருவரை ஏற்றுக்கொண்டபின் இன்னொருவரை எண்ணுவதும் பாவம் என நினைக்கும் தமிழ் விழுமியம் கொண்டவள் அவள்.
இந்நிலையில் மதனகோபாலன் என்பவன் விசாலாட்சியிடம் வந்து, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன். அவன் உன்னைக் கைவிட்டால் என்ன என்னை மணந்துகொள்’ என்று கேட்கிறான். விசாலாட்சி அந்த ‘வீணனை’ வசை பாடி எந்நிலையிலும் சம்மந்தனை உளபூர்வமாக ஏற்றுக் கொண்ட மனைவியாகவே தான் இருப்பேன் என்பதைச் சொல்கிறாள்.
இதை புதர்மறைவிலிருந்து கேட்ட இந்திராணியும் சம்பந்தனும் வெளியே வருகிறார்கள். இந்திராணி விசாலாட்சியை இன்னமும் சம்பந்தனை நினைத்திருக்கிறாய் என்றால் நீ என் கணவனை கைப்பற்ற நினைக்கிறாய் என வசைபாடும்போது விசாலாட்சி தனித்தமிழில் தன் கற்பின் திறனையும் சம்பந்தனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தன் வாழ்க்கையும் பற்றி சொல்கிறாள். அவளுடைய கற்பின் மேன்மையைக் கண்ட சம்மந்தன் மனம் மாறி அவளையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறான்.
இந்தக் கதையின் அடுத்த கட்டம் என்பது இந்திராணி விசாலாட்சிக்கு எழுதும் ஒரு கடிதம் வழியாக அவள் எவ்வளவு நல்லவள் என்றும், விசாலாட்சியின் கற்புத்திறனைக் கண்ட அவள் சம்பந்தனே விசாலாட்சியை மணக்கவேண்டுமென்பதற்காகத்தான் அந்த நாடகத்தை ஆடினாள் என்றும் தெரியவருகிறது.
அங்கும் கதை முடியாமல் மேலும் நகர்ந்து சென்று இந்திராணி இன்னொருவனை மணக்கும் தகவல் வரும்போது சம்பந்தன் மருத்துவமனையில் படுத்திருக்க விசாலாட்சி அவனுக்காக கன்னியாகவே காத்திருப்பதைக் காட்டுகிறது. சம்பந்தன் இறந்துவிடுகிறான். அச்செய்திகேட்டு விசாலாட்சி ’ஆ…!’ என்று அழுதபடி இறந்து விழுகிறாள். ஆம் ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்னும் தருணம்தான்
இந்தக் கதையை இன்று படிக்கும்போது இதன் செயற்கைத் தன்மை நம்மில் ஒரு மெல்லிய புன்னகையைத்தான் உருவாக்குகிறது. குறிப்பாக இதில் உள்ள மேடைநாடகத்தன்மை. விசாலாட்சியும் மதனகோபாலும் பேசிக் கொண்டிருக்கும்போது ‘புதர் மறைவி’லிருந்து அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்திராணியும் சம்பந்தனும். இப்படி இருவர் முக்கியமான செய்தியைப் பேசிக் கொண்டிருக்கும்போது புதர் மறைவிலிருந்தோ பக்கத்திலிருந்தோ கேட்டுக் கொண்டிருக்கும் காட்சி இளங்கண்ணன் முதலிய சிங்கப்பூர் இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்பாளிகள் பெரும்பாலானவர்களின் கதைகளில் வருகிறது. இது அன்றைய மேடை நாடக செல்வாக்கை காட்டுகிறது. அப்படியெல்லாம் மிக அந்தரங்கமான உரையாடலை இன்னொருவர் எளிதில் கேட்டுவிட முடியாது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
அதேபோல கடிதங்கள் வழியாக ஒரு உணர்வை நேரடியாக சொல்வது. அக்காலத்தில் நிறைய கடிதங்கள் எழுதப்பட்டிருந்தாலும் தங்கள் அந்தரங்க விஷயங்களை நேரடியாக விளக்கமாக எழுதும் வழக்கம் தமிழ் சமூகத்தில் என்றுமே இருந்ததில்லை. அந்த கடிதஉத்தி ஆங்கில இலக்கியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆங்கில இலக்கியத்தில் கடிதங்கள் எழுதுவதும் Errand Boy என்று அழைக்கப்படும் பையன்களிடம் கடிதங்களை கொடுத்தனுப்புவதும் சாதாரணமாக இருந்த வழக்கம். கணவன் மனைவிக்கே கடிதம் அனுப்புவதுண்டு. தமிழகத்தின் அக்கால மேடைகளில் கடிதம் வருவது ஒரு திருப்புமுனை அல்லது உச்சம்.
இவ்விரு உத்திகளுமே திராவிட இயக்கச் செல்வாக்கையே காட்டுகின்றன. திராவிட இயக்கம் மேடைநாடகத்தை இலக்கியத்தை விடமுக்கியமானதாக நினைத்தது. இலக்கியத்தையே மேடைநாடகம் போல எழுதியது. பாவலரின் முக்கியமான பங்களிப்பும் வானொலி நாடகங்களில்தான். சிங்கப்பூரின் ஆரம்பகாலத்தில் வானொலியே முக்கியமான இலக்கிய ஊடகமாக இருந்திருக்கிறது. வானொலி நாடகங்கள் என்னும் வடிவிலேயே பெரும்பலான புனைவுகள் உள்ளன. இவர்களின் எழுத்தில் வானொலியின் செல்வாக்கைப்பற்றி தனியாகவே ஆராயவேண்டும்.
இந்தக் கதையின் உருவகங்களில் சிலப்பதிகாரம் நேரடியாகவே உள்ளது. விசாலாட்சி கண்ணகியாக உருவகிக்கப்பட்டிருக்கிறாள். அவளை கைவிட்டுச் செல்லும் காதலன் மீது பெரும்பற்றுடன் இருக்கிறாள். அவனைக் காதலனாக அன்றி கணவனாகவே நினைக்கிறாள். அவனுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறாள். இன்றைய பெண்ணியவாதிகளுக்கு எரிச்சலூட்டும் பெண்ணாக விசாலாட்சி இருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவளை ஒரு லட்சியக் கதாபாத்திரமாக பழனிவேலு காண்கிறார்.
அதே போல சம்பந்தன் தன்னை ‘உயிருக்குயிராய்’ காதலிக்கும் ஒரு பெண்ணை, தானும் நெடுங்காலம் காதலித்த பெண்ணை ,இன்னொரு பெண்ணின் பொருட்டு எளிதாக விட்டுச் செல்கிறான். பிறகு அவள் மேன்மையை உணர்ந்து அவன் மனந்திருந்துவது ஒரு மேன்மையான் விஷயமாக சொல்லப்படுகிறதே ஒழிய அவனுடைய தகுதிக்குறைவாக எண்ணப்படவில்லை. ஏனெனில் அவன் மலர்விட்டு மலர் தாவும் வண்டு. கோவலன் மாதவியிடம் செல்வது இயல்பான ஒன்றாகத்தானே தமிழ்மரபு காண்கிறது. கண்ணகி கற்புடன் இருப்பது போலவே ஆணின் இயல்பாகவே அந்த கற்பின்மையும் நம் மரபில் முன்வைக்கப்படுகிறது.
இந்திராணி இங்கு மாதவியாக வருகிறாள். மாதவியை எப்படி கதை முடிவில் ஒரு லட்சியக் கதாபாத்திரமாக இளங்கோ மாற்றுகிறாரோ அதே போல ஒரு கடிதம் வழியாக ஒரு இந்திராணியை ஆசிரியர் காட்டிவிடுகிறார். இவ்வளவுக்குப்பிறகும் கதையை முடிக்க அவரால் முடியவில்லை. ஏனெனில் விசாலாட்சி சம்பந்தனை மணந்து எட்டுபிள்ளைகளுக்கு அன்னையானாள் என்றால் அவள் கண்ணகியாக ஆகமாட்டாள். ஆகவே சம்மந்தன் தேவையின்றி நோய்ப்படுக்கைக்குச் செல்ல, இவள் கன்னியாகவே வாழ்ந்து அவன் இறந்த செய்திக்கு அப்புறம் உயிர் துறக்கிறாள். ஆகவே அவள் கன்னித்தெய்வ்மாக கோயில் கொள்கிறாள். அவளுக்கு சிங்கையில் மெர்லைன் பக்கத்தில் ஒரு சிலை வைக்கவேண்டுமென்ற கோரிக்கை மட்டும்தான் இக்கதையின் இறுதியில் மௌனமாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
பாவலரின் கதைகள் பலவற்றில் இந்த ஒழுக்கச் சிக்கல் தொடர்ந்து பேசப்படுவதை நாம் பார்க்கலாம். ’என் கதாநாயகி’ என்ற கதையில் கதாசிரியரிடமே வந்து தனது கணவனுக்காக வாதிடும் கண்ணகியை நாம் பார்க்கிறோம். ”நாங்கள் இருவரும் மலரும் மணமும் போலவும் நகமும் சதையும் போலவும் மனம் ஒன்றி இன்ப வாழ்க்கை நடத்தி வருகிறோம் . என்றாலும் நீர் எழுதி வெளியிட்ட கதை என் மானத்தை குலைப்பதாக இருக்கிறது என்னைப்போன்ற சகோதரிகளின் மன உறுதியைக் கெடுப்பதாக இருக்கிறது. ஆகவே உமது மேல் மானநஷ்ட வழக்குக் கொடுப்போம்” என்று கண்ணகி சொல்ல அக்கதையை எழுதிய கதாசிரியர் கனவிலிருந்து விழிப்பதாக முடியும் கதை இவர்களைத் தொடர்ந்து கண்ணகி கனவிலும் வந்து மிரட்டிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
இது தவிர ’மத்தாப்பு சுந்தரி’ என்னும் கதை அந்தக் காலத்து திராவிட இயக்கத்துக் கதைகளுக்கு நிகரானது இது. நேரடியாகவே சிங்கப்பூர்ப் பெண்களை மணந்து கைவிட்டு விட்டுச் செல்லும் கணவர்களை சாடும் ஒரு தன்னுரையை நோக்கி சென்று முடிகிறது இக்கதை. இதைத் தவிர எளிமையான அறங்களை போதிக்கும் கதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. ’நத்தைகள்’ என்ற கதையில் ஒரு குடும்பத்தின் டாம்பிகம் கேலி செய்யப்படுகிறது. கதையின் இறுதியில் ஆசிரியரே என்று அழைத்து அந்த டாம்பிகத்தை சுட்டிக் காட்டி அவர்களை நத்தைகள் என்று நமக்கு அறிமுகம் செய்கிறார்.
’இரக்கம் வென்றது’ என்ற கதையில் தான் மழை நனைந்து ஒதுங்க நேர்ந்த போதுதான் மழை நனைந்ததால் தாமதமாக வந்த ஊழியனின் தரப்பை உணர்ந்த கணபதியாபிள்ளை மனநிலை காட்டப்படுகிறது.இந்தக்கதையும் ஆரம்பகால திராவிட இயக்க எழுத்திலுள்ள ஒரு இக்கட்டையும் அதை அவர்கள் ஒரு கதைமாதிரியை கையாண்டு கடந்துசென்றதையும் காட்டுகிறது.
அக்காலகட்டம் முதலாளி – தொழிலாளி முரண்பாட்டை பேசிய இடதுசாரிகளின் குரல் ஓங்கி ஒலித்த வரலாற்றுத்தருணம். முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவு ஆண்டை அடிமை உறவுதான் என்றும் சுரண்டலே அதன் அடிப்படை என்றும் அவர்கள் சொன்னார்கள். அது ஒரு உயிரோட்டமான அந்தரங்க உறவாகவே அன்றைய மக்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். மாறாக ,வலதுசாரிக்கதைகளில் அதை ஒரு மானுட உறவாக முன்வைக்கும் குரல் எழுந்தது.
திராவிட இயக்கத்தவர் நடுவே மாட்டிக்கொண்டார்கள். அவர்களின் பல சமூகக் கருத்துக்கள் இடதுசாரித்தன்மை கொண்டவை. சமூகசீர்திருத்தமும் மதச்சீர்திருத்தமும் அவர்களின் நோக்கம். ஆனால் அவர்களின் பொருளியல் நோக்கு வலதுசாரித்தன்மை கொண்டது. இந்த முரண்பாட்டை வெல்ல அவர்கள் ஒரு கழைக்கூத்தாட்டத்தை நிகழ்த்தினர். கொடுமையான முதலாளி இரக்கமின்றிச் சுரண்டுவதைச் சித்தரிப்பார்கள். ஆனால் அந்த முதலாளி உண்மையை உணர்ந்து மனம் மாறுவதாக முடிப்பார்கள்.
அல்லது அவரது மகனோ மகளோ இரக்கம் கொண்டவர்களாகவும் தொழிலாளர்களுடன் இணைந்து யோசிப்பவர்களாகவும் இருப்பார்கள். [இந்த ‘டெம்ப்ளேட்’ பின்னர் எம்.ஜி.ஆர் சினிமாக்களுக்கான ஒன்றாக மாறியது. எம்ஜியார் பலகதைகளில் கருணைகொண்ட முதலாளி அல்லது முதலாளியின் தொழிலாளர்சார்புடைய மகன்]. மொத்தத்தில் அவர்கள் சொல்ல வருவது முதலாளி தொழிலாளி உறவு ஒருவகை உணர்வுபூர்வ மானுட உறவுதான், அதன் அடிப்படை சுரண்டல் அல்ல என்றே. ஆனால் இடதுசாரிகள் உருவாக்கிய குரூரமான சுரண்டல்சித்திரத்தை அப்படியே எடுத்தாளவும் செய்தார்கள்.
ந.பழனிவேலு அவர்களின் கதை அந்த கதைக்கட்டுமானத்தை அப்படியே எடுத்துப்பயன்படுத்துகிறது. ஒருநாள் மழையில் நனைந்ததுமே கணபதியாபிள்ளைக்கு உழைப்பாளரின் துயர் புரிந்துவிடுகிறது. சிங்கையின் பின்னாளைய எழுத்தாளர்களான இளங்கண்ணன் போன்றவர்கள் இந்தச் சமரசத்தைச் செய்யாமலேயே எழுதியிருப்பதைக் காணலாம்.
இந்தவகையான கழைக்கூத்தாட்டம் இன்றும்கூட சிங்கை எழுத்துக்களில் நீடிப்பதைக் காணலாம். குறிப்பாக இங்கே எழுதப்படும் ‘பணிப்பெண்பிரச்சினை’ பற்றிய கதைகள். அவற்றில் பணிப்பெண்ணை உழைப்புச்சுரண்டலாகப் பார்ப்பதா அல்லது உறவாக அணுகுவதா என்னும் தடுமாற்றம் எப்போதும் உள்ளது. முன்னோடியால் உருவாக்கப்பட்ட ‘டெம்ப்ளேட்டுகள்’ எளிதில் அழிவதில்லை. உருமாறி எப்போதும் சூழலில் இருந்துகொண்டிருக்கும்.
*
திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளின் பொதுத்தன்மைகளை ஆராய்வதற்கு அவர்கள் எதிர்கொண்ட சில பண்பாட்டு சிக்கல்கள், அவர்கள் உருவாக்கிய சில கதைக்கட்டுகள் முக்கியமான தடையங்கள். அவற்றில் முதன்மையானது மேலேசொன்ன கண்ணகிxமாதவி முரண். தொழிலாளர்x முதலாளர் முரண் இன்னொன்று.
ந.பழனிவேலு அவர்களின் எல்லாக் கதைகளையும் இப்படிச் சில அடிப்படை மாதிரிவடிவங்களாகச் சுருக்கி ஆராயலாம். அவரது திராவிட இயக்க முன்னோடிகளின் பார்வையின், அழகியலின் தொடர்ச்சியாக அவரை அணுகவேண்டும். அவரது வானொலிநாடகங்கள் உட்பட அனைத்துப்படைப்புகளும் பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் தேசியக்கலைக்கழகம் அதற்கு நிதியுதவி செய்துள்ளது. எளிமையான மொழியில் அறசிக்கல்களைப் பேசும் நீதிக்கதைகள் இவை என்று பொதுவாக வரையறுக்கலாம்.
தொடக்ககாலக் கதைகள் என்றவகையில் இவை இன்று ஒரு வாசகனுக்கு எவ்வகையிலும் கலைரீதியாக பெறுமானமுடையவை அல்ல. ஆனால் இங்கு இலக்கியத்தின் அடிப்படைக் கவலைகளும் நிலைபாடுகளும் உருவாகிவந்த வரலாற்றைக் காட்டும் படைப்புகள் இவை. அந்தக் காலகட்டத்தில் திராவிட இயகக்த்தின் பார்வை எவ்வாறு இங்கு செயல்பட்டது, பொற்காலங்களை இறந்தகாலத்தில் எப்படித் தேடினர், இறந்த கால விழுமியங்களை சம காலத்தில் கொண்டு வந்து பொருத்துவதற்காக ஆடிய கருத்துநடனம் என்ன அனைத்தையும் இவ்வெழுத்துக்கள் வழியாக அறியமுடியும். இன்றும் அவர்களின் விழுமியங்கள் எவ்வாறு சிங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில் கரந்து திரிந்து உறைகின்றன, எவை மாறியுள்ளன என்பதையெல்லாம் ஆராயமுன்வரும் சமூகவியலாளனுக்கு இப்படைப்புகள் முக்கியமானவை.
’காதல் கிளியும் தியாக குயிலும்’. பாவலர் ந.பழனிவேலு