சிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம்

IMG_4284

ஜெ

நீங்கள் விமர்சனம் செய்திருந்த சூர்யரத்னா என்பவர் உங்கள்மீது போலீஸில் புகார் செய்திருப்பதாக எழுதியிருந்ததை வாசித்தீர்களா? அதன் கீழே ஆல்பர்ப்பஸ் அங்கிள்ஸ் எழுதிய கமெண்டுகளில் நீங்கள் கழுவி ஊற்றப்பட்டிருக்கிறீர்கள். வாசித்துப்பாருங்கள்.

https://www.facebook.com/suriya.rethnna/posts/1130910236991679

சூர்யரத்னாவின் பதிவு

மகாதேவன்

*

அன்புள்ள மகாதேவன்,

சிங்கப்பூருக்குச் செல்லும்வரை அங்குள்ள கருத்துச்சூழல் குறித்து ஒரு குறிப்பிட்ட மனச்சித்திரம் என்னிடம் இருந்தது, அரசு சார்ந்த கட்டுப்பாடுகள் அங்கு மிக அதிகம்போலும் என்று. ஏனென்றால் அங்கே இலக்கிய விமர்சனம் என்பது அனேகமாக இல்லை. எல்லாமே பாராட்டுக்கள்தான். அங்குள்ளவர்கள் பாராட்டிக்கொள்வார்கள். இங்கிருந்து செல்பவர்கள் மேலும் பாராட்டுவார்கள். ஆகவே தரம் தரமில்லாமை என்னும் பிரிவினையே இல்லை. அங்கு எழுதும் எல்லாருமே இலக்கியமேதைகள்தான். தனிப்பேச்சுக்களில் சிலர் இலக்கிய மதிப்பீடுகளைச் சொல்வார்கள். பொதுமேடையில் பட்டியல்களும் பாராட்டுரைகளும் மட்டுமே.

இத்தகைய மனநிலை சலிக்காமல் எல்லா மேடைகளையும் ஆக்ரமிப்பவர்களுக்குச் சாதகமானது, ஆனால் படைப்புத்திறன் கொண்டவர்களுக்கு எதிரானது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதற்குக்காரணம் அரசுசார்ந்த கெடுபிடிகளாக இருக்கலாமென்ற எண்ணம் எழுவது இயல்பே. ஆனால் உண்மையில் கலை, இலக்கியத்தளத்தில் சிங்கப்பூர் அரசின் போக்கு அப்படி இல்லை என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அங்குள்ள அரசு சார்ந்த அமைப்புகளின் அணுகுமுறை இன்று சுதந்திரமான கலையிலக்கியச் செயல்பாடுகளுக்கு ஆதரவானதாகவே உள்ளது.

அங்குள்ள சீன, மலாய் எழுத்துக்கள் தரமானவையாகவே உள்ளன. அங்குசென்று அவ்வெழுத்துக்களை வாசித்தபோது வந்த சோர்வே சிங்கைத் தமிழிலக்கியத்தை விமர்சிக்கவேண்டுமென எண்ணவைத்தது. ஏனென்றால் சிங்கைத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பணம் செலவிடும் சிங்கை அரசுக்கு உண்மையில் இவர்களின் தரம் என்னவென்று தெரியாது. இங்கிருந்து செல்பவர்களும் பாராட்டிவிட்டு வருவதனால் அதை மதிப்பிடவே முடியாத நிலை. ஒட்டுமொத்தக் காரணம் விமர்சனமின்மை. சூழலில் உள்ள அச்சம். ஆனால் அதற்கு அரசு காரணம் அல்ல.

பிரச்சினை இருப்பது அங்குள்ள தமிழ்ச்சூழலில்தான். திருமதி சூர்யரத்னாவின் குறிப்பு அதற்கு மிகச்சரியான உதாரணம். அந்தக் குறிப்பை அது ஒரு சரியான உதாரணம் என்பதற்காக மட்டுமே பரிசீலிக்கலாம். இலக்கியச் செயல்பாட்டின் ஒரு பகுதியே கருத்தியல் மற்றும் வடிவம் சார்ந்த பரஸ்பர விமர்சனம் என்பதை சிங்கை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பதில்லை. அதை அவர்கள் தனிப்பட்ட தாக்குதல் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். அது தாங்கள் வகிக்கும் பதவிகள், பெற்றுக்கொள்ளும் சலுகைகளுக்கு எதிரான செயல்பாடாக எடுத்துக்கொள்கிறார்கள். இலக்கியவிமர்சனம் என்னும் துறை இருப்பதே அவர்களுக்குத்தெரியவில்லை.

விமர்சனங்கள் கோபமூட்டுவது இயல்பு. எதிர்வினை கடுமையாக இருப்பதும் இயல்பு. ஆனால் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் எளிய விமர்சனங்களுக்குக்கூட நாம் இங்கே நினைக்கக்கூட முடியாத பல தளங்களில் எதிர்வினை ஆற்றுகிறார்கள். அரசு சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் பிற எழுத்தாளர்களைப் பற்றி முறையீடுகளை அனுப்புகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு புகார்க் கடிதங்கள் அனுப்புகிறார்கள். விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாகச் சித்தரித்து வழக்கு தொடுக்கிறார்கள். வழக்கு தொடுப்பதாக மிரட்டுகிறார்கள். சூர்யரத்னாவின் குறிப்பில் அதைக்காணலாம்.

ஆகவே சிங்கப்பூரின் சில நபர்களைப்பற்றிப் பேசவே பலர் அஞ்சுகிறார்கள். அவர்கள் புகார் கடிதங்களைக் கொண்டே சூழலை மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். சூர்யரத்னாவை அவர்கள்தான் தூண்டிவிடுகிறார்கள். சூர்யரத்னாவின் பதிவில் பின்னூட்டம் வழியாக அவருக்கு ஊக்கமளிக்கிறார்கள்.

இது நிகழக்காரணம் பல அமைப்புகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை என்பதுதான். அவர்களில் சீனரும் மலாயரும் அதிகம். உண்மையில் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் தங்களிடம் வரும் புகார்களை அணுகுகிறார்கள். அந்த நல்லெண்ணத்தை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். திரித்தும் வளைத்தும் இவர்கள் செய்யும் புகார்களை உள்ளே நுழைந்து உண்மையை அறிய மேலே இருப்பவர்களுக்கு அவகாசமில்லை. ஆகவே சூழலை அச்சம் ஆள்கிறது. விவாதமே நிகழ்வதில்லை.

திருமதி சூர்யரத்னாவின் பதிவைப்பாருங்கள். என் விமர்சனத்தொடரை வாசிக்கும் எவரும் நான் ஒரு சிங்கப்பூர்த் தனித்தன்மையை, சிங்கப்பூர் அழகியலைத்தான் தேடுகிறேன் என்பது புரியும். அவர் அதை நேர்மாறாகத் திரிக்கிறார். நான் அங்கு பிறந்து வளர்ந்தவர்களுக்கு எதிராகவும் அங்கு சென்று குடியேறியவர்களின் சார்பாகவும் எழுதுகிறேன் எனும் பிரிவினையை சாதுரியமாக உருவாக்குகிறார். இந்தக்காழ்ப்பு அங்கு இவரைப் போன்றவர்களால் ஊடகங்களில் சென்ற சிலவருடங்களாகப் பரப்பப்படுகிறது. இப்படி முத்திரை குத்துவது சிங்கப்பூரில் உள்ள பிரபலமான உத்தி. நான் அங்கே பணியாற்றும் பொருட்டு சென்றிருந்தேன் என்றால் இந்தப்பழியை அஞ்சி இலக்கியம் பேசுவதையே நிறுத்திவிட்டிருப்பேன்.

இதேபோல மத, இன, பாலியல் சார்ந்த உள்ளர்த்தங்களைக் கற்பித்து அத்தனை இலக்கிய விவாதங்களையும் திரிக்க இவர்களால் முடியும். சிங்கப்பூர் அரசு பல்லின ஒற்றுமையை ஒரு முக்கியமான விழுமியமாக நினைப்பதனால் அதற்கு எதிரான செயல்பாடாக எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் இவர்கள் சித்தரித்துவிடுவார்கள். இவர்களால் மொத்தச்சூழலும் இறுக்கமாகிவிட்டிருக்கிறது.

சிங்கப்பூரின் அவதூறு, பதிப்புரிமைச் சட்டங்களை நண்பர்களின் உதவியுடன் வாசித்தேன். இந்தியாவின் சட்டத்தின் அதே சொற்றொடர்களுடன் கிட்டத்தட்ட நகல் போல அமைந்துள்ளன. ஆனால் இந்தியாவை விட மேலும் சுதந்திரங்களை அளிப்பதாகவும் மேலும் பல துணைவகுப்புகள் வழியாக எழுதுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை அளிப்பதாகவுமே அச்சட்டங்களின் நோக்கு உள்ளது. [பார்க்க: சிங்கப்பூர் அவதூறுச் சட்டம் ] அதாவது சிங்கப்பூர் சட்டப்படி நான் எழுதியது எவ்வகையிலும் குற்றம் அல்ல. புகைப்படங்களைப் பிரசுரிப்பதில்கூட சட்டரீதியாக காப்புரிமை பெறாது பொதுவெளியில் உள்ள படங்களை பிரசுரிப்பது தவறல்ல என்றே சட்டம் சொல்கிறது. அப்படங்களை திரிப்பதும் உள்ளர்த்தம் அளிப்பதுமே குற்றம். அப்படி பிரசுரித்தால் கூட புகைப்படங்களை நீக்கும்படி கோரி அப்படி நீக்காதபட்சம் மட்டுமே புகார் அளிக்கவும் முடியும்.

இத்தகைய நல்லெண்ணமும் நெகிழ்வும் கொண்ட சட்டத்தை பயன்படுத்தி எப்படி இப்படி ஒரு மிரட்டல் விடுக்கப்படுகிறது? ஏனென்றால் அதை வைத்து பலவகையிலும் தொந்தரவு அளிக்கமுடியும். எழுதுபவர்களின் பணியிடங்களில் சிக்கல்களை உருவாக்க முடியும். இந்த மனநிலை உள்ள ஒரு சூழலில் எப்படி இலக்கிய விமர்சனம் உருவாக முடியும்?

அதேசமயம் திருமதி சூர்யரத்னா என்னைப்பற்றி பயன்படுத்தியிருக்கும் சொற்கள் நேரடியான அவமதிப்பு. நாய் என்று என்னை குறிப்பிடுகிறார். விளக்குபிடித்தல் போன்ற ஆபாசவசைகளைப் பயன்படுத்துகிறார். என் தனிப்பட்ட நேர்மையை குற்றம்சாட்டுகிறார். இந்தியச்சட்டப்படி நான் வழக்கு தொடுக்கமுடியும். சிங்கப்பூரின் அனைத்து அரசுசார் அமைப்புகளுக்கும் அவ்வழக்கு சம்பந்தமான தகவல்களைத் தெரிவித்து அவரைப்பற்றி முறையீடு செய்யவும் முடியும். சட்டப்படி அவர் பதிவில் உள்ள மிகக்கீழ்த்தரமான பின்னூட்டங்களுக்கும் அவரே பொறுப்பு.

ஆனால் நாம் பொதுவாக இங்கே அதைச் செய்வதில்லை. மறைந்த பிரமிள் இலங்கையிலிருந்து இந்தியாவந்து சட்டவிரோதமாகக் குடியிருந்தவர். அவரால் வாழ்நாள் முழுக்க மிகமிகக் கடுமையாக, தனிப்பட்ட முறையில்கூட எல்லை மீறிச் சென்று, தாக்கப்பட்ட வெங்கட் சாமிநாதன் இந்திய உளவுத்துறையில் உயர்பதவியில் இருந்தவர். சாமிநாதன் ஒரு சொல் சொல்லியிருந்தால் பிரமிள் சிறை சென்றிருப்பார். சாமிநாதன் அதைச்செய்யவில்லை. பிரமிளை எதிர்த்து எழுதினார். ஏனென்றால் அதை செய்ய ஆரம்பித்தால் இலக்கிய விவாதங்களில் நாம் அதிகார அமைப்புகளை உள்ளே இழுக்கிறோம். அதிகபட்சம் பத்து மானநஷ்ட வழக்குகள் போதும், மொத்தக் கருத்தியல் இயக்கத்தையே முடக்கிவிடலாம்.

இந்திய நீதிமன்றங்களும் மானநஷ்டவழக்குகளை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. கருத்துச்சுதந்திரத்தின் தரப்பில் நின்றபடியே அவை அவதூறு வழக்குகளை நோக்குகின்றன. சட்டப்படி ஒரு கருத்து எப்படிப்பட்டதானாலும் தன்னளவில் அவதூறு ஆவதில்லை, அதைச் சொல்பவனின் நோக்கமே அதை அவதூறாக ஆக்குகிறது. சிங்கப்பூர் இலக்கியத்தின் மொத்தப் படைப்பிலக்கியத்தையும் நாட்கணக்காக அமர்ந்து வாசித்து எழுதிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளனாகிய நான், சூர்யரத்னா என்னும் முதிரா எழுத்தாளரின் புகழை அழிக்க சதி செய்யவேண்டியதில்லை. அதன் மூலம் அவருக்கு இழப்பு உருவாக்க முயலவும் வேண்டியதில்லை – மாறாக அவர் செய்வதுதான் ஒரு முக்கியமான எழுத்தாளனும் எழுத்தை தொழிலாகக் கொண்டவனுமாகிய என் நற்பெயரை அழித்து இழப்பை உருவாக்கும் திட்டமிட்ட குற்றநடவடிக்கை.

ஆக, செல்லுபடியாகும் ஒரு வழக்கே உண்மையில் இல்லை. ஆனால் சட்டநடவடிக்கை என மிரட்டமுடியும், தொந்தரவு அளிக்கவும் பணச்செலவு வைக்கவும் முடியும். அதைவைத்து மிரட்டி விமர்சனத்தையும் கருத்துச்செயல்பாட்டையும் முடக்க முடியும். அதையே அவர் செய்கிறார். யோசித்துப்பாருங்கள், இனி சிங்கை அரசு அழைக்கும் எவரேனும் ஏதேனும் விமர்சனக் கருத்தைச் சொல்ல துணிவார்களா? சிங்கை அரசு உருவாக்க முயலும் கருத்தியல் தளத்தையே அழிக்கும் செயல் இது. உண்மையில் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டியவர்கள் சிங்கப்பூர் பண்பாட்டுச்சூழல் பற்றி உண்மையான அக்கறை கொண்ட அங்குள்ளவர்கள்தான்.

இன்னும் ஒரு வேடிக்கையான விஷயத்தை வாசகர் கவனிக்கலாம். ஒர் எழுத்தாளர் ஒரு விருதை அரசிடமிருந்து பெற்றிருந்தார் என்றால் அதன்பின் அவரை எவரும் எவ்வகையிலும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்கள் சிங்கப்பூரில் சிலர். அவ்வாறு விமர்சிப்பது அந்த அரசுசார் அமைப்பை அவமதிப்பது என்று வாதிடுகிறார்கள். உடனடியாக அந்த அமைப்புகளிடம் அவர்களின் தேர்வை அந்த விமர்சகர் குற்றம்சாட்டுவதாகவும் அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் புகார்களை அனுப்பிவிடுவார்கள். சூர்யரத்னா அதைச்செய்வதை அவரது குறிப்பில் காணலாம்.

அதாவது இந்தியச்சூழலில் வைத்துப்பார்த்தால் சாகித்ய அக்காதமி விருது பெற்ற ஒருவரை எவ்வகையில் விமர்சித்தாலும் அது சாகித்ய அக்காதமியை விமர்சிப்பது. அதற்கு நிதி அளித்த அரசை விமர்சிப்பது. ஆகவே அரசுக்கு எதிரான செயல். நடவடிக்கை வேண்டும். இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மனநிலையை நோக்கி நாம் சிரிக்கலாம். ஆனால் அங்கு தமிழ்ச்சூழலில் அது ஒரு முக்கியமான மிரட்டல். அரசுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை, இவர்களே செய்வது.

உண்மையில் இந்தியாவில் ஒருவர் அரசு அமைப்புகளை இப்படி தன்னை பாதுகாப்பதற்காக இழுப்பதுதான் குற்றம். அரசு சார்ந்த விருதுகளோ பரிசுகளோ அதைப்பெற்றவர்களால் ஒரு தகுதிச்சான்றாக எங்குமே சொல்லப்படக்கூடாது. ‘பரத்’ முதலிய பட்டங்களை பெயருக்குப்பின் சேர்ப்பதுகூட சட்டவிரோதம். அரசை அல்லது அதன் பண்பாட்டு அமைப்புகளை அதன் பரிசை பெற்றவர் தனக்கு ஆதரவாக எங்குமே மேற்கோள்காட்டக்கூடாது. ஆனால் சிங்கப்பூரில் பலர் இதைச் சொல்கிறார்கள். அங்கே எழுதும் அத்தனை பேருமே ஏதேனும் விருது பெற்றவர்கள்தான். அப்படியென்றால் என்ன விமர்சனம் நிகழமுடியும்?

சூர்யரத்னா உள்ளிட்ட சிங்கப்பூர்வாழ் தமிழர்கள் தமிழக எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் அவமதிப்பு நிறைந்த ஒரு வரி உண்டு. ‘டாலருக்காகத்தானே வந்தாய்? பொறுக்கிக்கொண்டு எங்களை பாராட்டிவிட்டுப் போகவேண்டியதுதானே?” இதை அவர் தன் முகநூல் குறிப்பிலும் சொல்லியிருப்பதைக் காணலாம். உண்மையில் தமிழ் எழுத்தாளர் பலருக்கு அவர்களின் பணம் பெரிய தொகைதான். அவர்கள் பெரும்பாலும் மேலோட்டமான பாராட்டுகளை அளித்துவிட்டு வந்துவிடுவதும் உண்மை. அந்தப்பணம் பெரிதுதான், ஆனால் எனக்கு அல்ல. அங்குள்ள உயர்தர ஆசிரியரின் ஊதியம் எனக்கு அளிக்கப்பட்டாலும்கூட இரண்டுமாதக் காலம் அங்கிருப்பது எனக்கு பொருளியல் இழப்பே. நான் அங்குவந்தது ஒரு வளர்ந்த நாட்டின் சூழலை அறிய. அங்குள்ள மாணவர்களை சந்திக்க. சர்வதேசத்தரமுள்ள வகுப்புகளை அவர்களுக்கு அளித்திருக்கிறேன்.

*

சூர்யரத்னாவின் அந்த முகநூல் குறிப்பு பலவகையான குற்றங்களை ஆற்றுகிறது. ஒன்று, அங்கு அரசு அழைப்பின்பேரில் வரும் எழுத்தாளர்களை அவமதிக்கிறது. அவர்கள் கூலிக்காக வருபவர்கள் என இழிவுசெய்கிறது. இரண்டு, சிங்கப்பூரில் உள்ள நிரந்தரவாசிகள் x குடிமகன்கள் என்னும் பிரச்சினையை தேவையில்லாமல் சமூக ஊடகங்களுக்குக் கொண்டு வந்து வெறுப்பை வளர்க்கிறது. பின்னூட்டங்களில் மிகக்கடுமையான சமூகவெறுப்பு உள்ளது, அதற்கும் அவரே பொறுப்பு. மூன்று, சிங்கப்பூர் அரசு உருவாக்க நினைக்கும் இலக்கியம் சார்ந்த பொது உரையாடலுக்கு எதிராக எழுத்தாளர்களை பிளாக்மெயில் செய்யும் உத்தியை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது. நான்கு, இந்திய ,சிங்கப்பூர் அரசுநிறுவனங்களின் பெயரை தன் தனிப்பட்ட வணிகநோக்கங்களைப் பாதுகாக்க பயன்படுத்துகிறது.

*

ஏன் கடுமையான விமர்சனம்? நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். எழுத்து முயற்சி கடும்விமர்சனத்திற்குரியது அல்ல. கனிவுடன் நோக்கப்படவேண்டியது அது. ஆனால் சூர்யரத்னாவின் எழுத்துக்கள் அவரே சொல்வதுபோல அங்கே கல்விக்கூடங்களில் முன்னுதாரணங்களாகக் கற்பிக்கப்படுகின்றன. அவர் அங்கே உயர்நிலைப்பள்ளி அளவில் இலக்கிய வகுப்புகளை நடத்துகிறார். [அவர் எழுதுவதே உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காகத்தான் எனச் சொல்கிறார். பாலியல் வன்மங்கள் கொண்ட அந்தக்கருக்களை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் படிக்கலாமா என அங்குள்ள கல்வித்துறைதான் முடிவுசெய்யவேண்டும்]

எப்படியானாலும் அங்குள்ள மாணவர்களுக்கு முன் ஒரு முன்னுதாரணமாக நிற்கையில் அவர் இன்னும் கொஞ்சம் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளலாமே என்பது மட்டும்தான் என் கருத்து. சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்வியில் சர்வதேசத்தரம் கொண்ட ஆசிரியர்கள் அன்றி எவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. பண்பாட்டுக்கல்வியில் மட்டும் ஏன் முதிரா எழுத்து முன்வைக்கப்படவேண்டும் என்பது மட்டுமே என் கேள்வி. நான் சுட்டிக்காட்டுவது எழுத்தின்வழி எனக்குக் கிடைக்கும் தரமின்மையை மட்டுமே. தனிப்பட்ட ஆளுமையை அல்ல.

அத்துடன் அந்த தேசம் பெரும்பணத்தை இதற்காக அளிக்கிறது. அதைப் பெற்றுக்கொள்பவர் தன் தகுதியை பெருக்கிக்கொண்டாக வேண்டும். அதற்காக உழைக்கவேண்டும். வாசிக்கவேண்டும். சூர்யரத்னா எழுத ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றன. பலநூல்கள் வெளிவந்துவிட்டன. முதிரா எழுத்தையே அப்படியே வருடக்கணக்காக நீட்டி ஒரு அளவுகோலாகவே ஒரு சமூகத்தின்முன் வைப்பது அந்த அரசுக்கு எதிரான செயல்பாடு.

இங்கிருந்து பொருள்நாடிச் செல்லும் எழுத்தாளர்களின் போலிப்பாராட்டு அங்குள்ள எழுத்தாளர்களை இருளிலேயே வைத்திருக்கிறது. நான் அதை உணர்ந்த பின்னரே உண்மையை உடைத்துச் சொல்லிவிட வேண்டுமென முடிவெடுத்தேன். அதை முழுமையாக விரிவாக அனைத்துக் கோணங்களிலும் நோக்கும் விமர்சனத் தொடர்மூலம் முன்வைக்க வேண்டுமென நினைத்தேன்.

அங்குள்ள சூழலை மிக நன்றாக அறிந்த பின்னரே இக்கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பித்தேன். முதலில் அங்குள்ள ஒட்டுமொத்த இலக்கிய மரபைச் சார்ந்து ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கவேண்டுமென எண்ணினேன். ஏற்கனவே நா.கோவிந்தசாமி, இளங்கோவன், ஸ்ரீலட்சுமி ஆகியோர் கூரிய விமர்சன நோக்குடன் பொதுச்சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவை உதிரிக்குரல்களாக நின்றுவிட்டன.. அவர்களுக்கு மேலதிகமாக நான் அளிக்கக்கூடுவது மொத்தத் தமிழிலக்கியத்தின் பின்னணியில் சிங்கப்பூர் இலக்கியத்தை மதிப்பிடுவதும் உள்ளோட்டங்களை அடையாளம் காண்பதும்தான். அதைச் செய்யாமல் விமர்சனம் முன்னகர முடியாது.

அதாவது, முதலில் சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் canon எது என வகுக்கவேண்டும். அதை பலகோணங்களிலான விவாதம் மூலமே செய்யமுடியும். நான் அவ்விவாதத்தை தொடங்கி வைக்க விரும்பினேன். எழுதுபவர் எல்லாம் எழுத்தாளர் அல்ல என அவர்களுக்குச் சொல்ல விரும்பினேன். எவர் என்ன செய்திருக்கிறார்கள் என ஒரு குணரீதியான கணிப்பு என்னுடையது. அதற்காக நாளுக்கு நான்கு நூல்கள் வீதம் நாளும் ஐந்துமணிநேரம் அமர்ந்து வாசித்தேன். எனக்களிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக.

வசைகளும் பூசல்களும்தான் பதிலுக்கு வருமென நான் அறிவேன். வரட்டும். நான் எழுதவேண்டியதை எழுதி முடிக்கிறேன். அது காலத்தின் முன் இங்கு கிடக்கட்டும். அடுத்த தலைமுறை எழுந்து வரும்போது அதைப் பரிசீலிக்கட்டும். விவாதிக்கட்டும் ,விரித்தெடுக்கட்டும், தேவையென்றால் விமர்சனப்பதிலோடு தூக்கிவீசட்டும். இது முழுமையான மதிப்பீடு அல்ல என்றும் நான் அறிவேன். ஆனால் இது ஒரு ஆத்மார்த்தமான தொடக்கம். எனக்கு நேர்மையான முயற்சிகள்மேல் நம்பிக்கை உண்டு, அவை காலம்கடந்தேனும் விளைச்சலையே அளிக்கும்.

============================================================

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

முந்தைய கட்டுரைஜெயகாந்தனின் முகம்
அடுத்த கட்டுரைபறப்பதற்கு முந்தைய சிறகடிப்புகள்