இனிய ஜெயம்,
இங்கே கடலூரில் பல வருடங்களாக டீக்கடை நடத்தும் சேட்டா, என் நெருங்கிய நண்பர். தாங்கு கட்டைகள் உளுத்து உதிர்ந்து, பாய்லர் புகையின் அடித்தளம் மேல் நிற்கும், கரி படிந்த கூரை, மண்ணெண்ணெய் புகை படிந்த சுவர்கள், வியர்த்த தசையின் ஸ்பரிசம் தரும், டேபிள் சேர்கள், கொச்சை வாடை வீசும் தேனீர் கிளாஸ்கள், நடுவே எழுந்தருளும் குளிக்காத சேட்டா.
உங்கள் சேட்டை பதிவை படித்த நாள் முதல் அவரை சேட்டா, என அழைத்த நாட்களை விட, ஜேஷ்டா என அழைத்த நாட்கள்தான் அதிகம். அவருக்கு டீ போட மட்டும்தான் தெரியாது மற்றபடி நிறைய தெரியும் என சில வாரங்கள் முன்புதான் அறிந்தேன். ”ஜேஷ்டா அப்டின்னா எனக்கு தெரியாதுனு நினைச்சியா” என நமுட்டு சிரிப்புடன் மலையாளத்தில் கேட்டார். [ஹும் மலையாள மண்டை].
சில தினங்கள் முன்பு, திருச்சியில் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோவில் என இணையத்தில் வாசித்த, உயியக் கொண்டான் உஜ்ஜிவநாதர் கோவில் சென்றிருந்தேன். சிறிய பாறை மேல் கட்டப் பட்டிரிருந்த, சிறிய காவல் கோட்டம் போல தோற்றம், தந்த கோவில். பதினெட்டாம் நூற்றாண்டு கர்நாடகப் போரில், பிரெஞ்சு மற்றும் இதர படைத் தலைவர்கள் இங்கே தங்கியதாக, இணையம் தெரிவிக்கிறது. அஞ்சனாக்ஷி அம்மனை சேவித்து விட்டு கோவிலை சுற்றினேன். மதியம். நல்ல பசி. புதிய ஆடை சூடி, இரு கரங்களிலும் குழந்தைகளை ஏந்தி, முகமே தெரியாத தடபுடல் அலங்காரத்தில் இருந்த படிமை முன் அமர்ந்தேன். பாரதம் எங்கும் கோவில் கோவிலாக நுழைந்து, உண்டு திரிந்த குறுகுறுப்பில் ஏதேனும் கிடைக்குமா என கண்கள் இயல்பாக சுழன்றது. உய்யக்கொண்டான் கிருபை ஒரு முதியவர் வாயிலாக இரண்டு வாழைப்பழமும், பஞ்சாமிர்தமுமாக கிடைத்தது.
புறங்கைத் தேனை நக்கியபடி, ”ஐயா இது என்ன சாமி ” என்றேன். அவர் சொன்னார் ”தம்பி இதுக்குப் பேரு ஜேஷ்டா தேவி, இவளக் கும்பிட்டா கெட்ட கனவு இல்லாத நல்ல தூக்கம் வரும், வண்டி டிரைவருங்க இந்த அம்மனுக்கு செவ்வரளி சூட்டி கும்பிட்டுட்டு போவாங்க. எந்த விபத்தும் இல்லாம அம்மா காப்பாத்துவான்னு நம்பிக்கை. இவளுக்கு புதுப் புடவை சாத்தி கும்பிட்டா சரியான வேலை, தேவையான இட மாற்றம் கிடைக்கும்” என்றார். நான் சந்தேகம் விலகாமல் ”பேர் என்ன சொன்னீங்க ஜேஷ்டா தேவியா?” அவர் ”ஆமாப்பா ஜேஷ்டா தேவி, பார்வதியோட அம்சம்” என்றார். ஆனாலும் இது ரொம்ப சேட்டை.