வணக்கம். நலம் என எண்ணுகிறேன்.
புறப்பாடு படித்து முடித்தவுடன் கடிதம் எழுதவேண்டும் என்றிருந்தேன். தள்ளிப்போய்விட்டது. பரவாயில்லை இப்பொழுது எழுதியேவிட்டேன். இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கி வந்தது புறப்பாடு. இரண்டு முறை முதல் பத்தியை மட்டும் படிப்பேன், காரணமின்றி மூடிவிடுவேன். எதேச்சையாக பெப்பர்ஸ் டிவியில் தங்கள் பேட்டியை கண்டேன். அதில் இதனை குறிப்பிட்டிருந்தீர்கள். சரி என்னதான் இருக்கிறதென்று படிக்கத் தொடங்கினேன். நான்கு நாட்களிலே படித்துவிட்டேன், வேலைக்கு போகும் போதும் வரும் போதுமென. எனக்கே ஆச்சரியம் தான்.
நீங்கள் குறிப்பிடுவது போல நல்ல இலக்கிய வாசகனாக நான் இல்லை என்பது இதை முடித்த பின்பு தான் விளங்கிற்று. காரணம் என்னால் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி படிக்க முடிவது வெகு சிரமமாக தோன்றுகிறது. விருப்பமில்லாததெல்லாம் வெறுப்பை தருகிறது. அந்த முதல் கட்ட கஷ்டத்தை தாண்டி படித்து முடித்துவிட்டால் நிச்சயம் ஒரு தெளிவு கிட்டுகிறது. ஒருவேளை நான் கொஞ்சம், கொஞ்சம் இலக்கிய வாசகனாகிறேனோ என்னவோ? இரண்டாவது என் நுண்ணுணர்வு சார்ந்து. அது மிக குறைச்சலாக இருக்கிறதோ என்று பல நேரங்களில் தோன்றும்.
புறப்பாடு ஒரு வகையில் உங்கள் கடந்த காலமா? என்று சந்தேகம் வருகிறது. மேற்கு உலக நாவலைப் போல அது ஒரு சாகச நாவலாக தோன்றுகிறது. என்னால் அது அனுபவம் என புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு அது நிச்சயம் கஷ்டம். காரணம் சுவற்றில் எறியப்பட்ட பந்துகள் அவர்கள், திரும்பி எங்கு எறியப்பட்டதோ அங்குதானே வரமுடியும். புறப்பாடு என்பதின் அர்த்தம் படித்து முடித்ததும் விரிந்து கொண்டது.
உங்கள் எழுத்து ஒரு வகையில் போதை. ஆமாம். ரப்பர் நாவலில் வரும் குன்னத்துக்கல் மாட்டுவண்டிக் காட்சி அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. நான் கிராமத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில் மாடுகளுடனும், மாட்டு வண்டியிலும் பயணம் செய்த அனுபவமுண்டு, பொன்மணியைப் போல. சாதாரண மாட்டு வண்டிதானே என்று முதலில் தோன்றியது. படிக்க படிக்க என்னை மறந்து நாவலுக்குள்ளே போய்விட்டேன். அந்த அத்தியாம் முடிந்த பிறகுதான் அட! என்றிருந்தது. ஒருவேளை அந்த நினைவுகள் என் நெஞ்சிலே கிடந்திருக்கும் போல அது அப்படியே காட்சியாக மாறி என்னை ஆட்கொண்டது. இந்த மாதிரி வேளைகளில் தான் என் நுன்னுணர்வு சாகவில்லை என்று கண்டுகொள்வேன். நன்றி.
அதே போல் புறப்பாட்டிலும் என்னைக் கவர்ந்த ஒரு காட்சி, இரயிலிருந்து மனிதர்களை மலம் போல வெளியேறினார்கள். பிறகு தண்ணீரில் அடித்து செல்வதைப் போல கலைந்து போனார்கள். நிச்சயம் மனதிலிருந்து விலகாத காட்சி இது. சாதராண விசயங்கள் உங்கள் எழுத்தின் மூலம் பெரிதாகிறது, ரசிக்கும் படியாகிறது. எழுத்தின் அகலம் மிகப் பெரியது, கங்கையைப் போல.
எவ்வளவு அனுபவங்கள்? காசியிலிருந்து, தமிழ்நாடுவரை. அடிமனதில் தேடலின் அழுத்தம் இல்லாமல், புறப்படுவது ஒன்றும் எளிதானது இல்லை. அனுபவத்தின் வழி ஏதேனும் அடைந்தே ஆகவேண்டும் என்ற கட்டயாம் உண்டோ?
எனக்கு தெரிந்தவரை அவைகள் அடைந்து ஆக வேண்டும் என்ற பொரியை தூண்டுகிறது. அவ்வளவுதான். உதாரணம் காற்றில் நடப்பவர்கள். நரிக்குறவனுக்கு இருக்கிற குல அறம், அப்படியே என்னை ஆட்டிவிட்டது. படித்து முடித்த பிறகு மனம் கனமாக இருந்தது. மூன்றாம் முறை கிளம்பும்போது திரும்பவும் அந்த வீட்டுப்பிள்ளையாக வரமாட்டேன் என்பது, ஒருவகையில் என்னைப் போன்றோரும் வீட்டுப்பிள்ளையாக முடியாமல் இருப்பது நினைவில் வருகிறது. நிறைய இடங்களில் அழமான எழுத்து அப்படியே என்னைச் சுட்டுவிடுவதாய், நினைத்து கண்ணீர்விடுவதாய், ஆராய்ந்து கொள்ள வேண்டியதாய் உள்ளது.
உணர்ச்சி அதிகமாய் இருப்பதால், என்ன எழுதுகிறோம் என்று நிதானம் இழந்து எழுதிவிட்டேன். திருப்பி படித்து பிழை எல்லாம் திருத்தமாட்டேன். உள்ளத்திலிருந்து எழுந்த குமுறல், படித்தவுடன் கொட்டிவிட்டேன்.
மகேந்திரன்.