பிரேமை -கடிதங்கள்

unnamed

சார் பிரேமையின் நிலம் வாசித்தேன். அதென்ன சார் அத்தனை பெண்களும் பேமா என்றே பெயர்வைத்திருக்கிறார்கள்? ஆனால் அழகாகத்தான் இருக்கிறது கேட்கவும் அழைக்கவும்!!

ஆயுதங்களுக்கு பதிலாக தேயிலையைக்கொடுத்தோமா? இப்படி ஒரு பண்டமாற்று இருந்ததே  இதை படித்துதான் தெரிந்துகொண்டேன். அந்த பாரம்பரிய பெண்களின் உடை எப்படி இருந்திருக்கும் என ஆவலாய் தேடினேன், ஆனால் புகைப்படம் இல்லை. அதுவும் நளினமாக இருக்கும் என்று வேறு சொல்லி இருந்தீர்களா?

அந்த கிம் சுங் கும்பலில் மூன்று பேரும் உடைக்குள்ளேயே புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது,. நம் ஊரிலும் இப்படி இருந்தால் முதுகில் மூட்டை தூக்காமல் இருப்பார்கள் மாணவர்கள்.

லாமாக்களின் முகத்தை நான் இதை படித்தபின் தேடி ஒரு படத்தில் பார்த்தேன் . சுட்ட வாழையிலை போலவே தான் சுருக்கங்கள் இருக்கிறது.

அந்த கலைமணி சொன்ன பூட்டான் மொழியிலான அந்த திரைப்படத்தின் பெயர், ஏதொ ஒரு ஒலி எழுப்பியது போல இருந்தது, , யாக் நல்ல மிருகம்தான். ஆனாலும் கறுப்பு டீ நமக்கு நல்லது.- இதெல்லாம் உங்களுக்கே உரிய சிறப்பு நகைச்சுவை!!!

அரசியின் பெயரும் பேமாவேதானா?

டீக்கடைகளில் மது விற்பனை, சுத்தமான தெருக்கள், அரசு வேலையிலும் கல்விநிலையங்களிலும் பாரம்பரிய உடை, நான்கு அலகுகளுடன் பெயர்,  பள்ளிகள் , கருப்பு டீ, பொரித்து வைக்கப்பட்டிருந்த கருவாடு (சமைத்த பிறகும் மீனைப்பார்த்தால் அது நன்னீர் வாழ்வது என கண்டு பிடிக்கமுடியுமா சார்?)  மடாலயங்கள், அருங்காட்சியகம், என்று விவரித்திருக்கிறீர்கள். பூடானை  நாங்களும் சுற்றிப்பார்த்தது போல இருந்தது

நன்றி சார்!!

அன்புடன் லோகமாதேவி

***

அன்புள்ள ஜெ

பிரேமையின் நிலம் கட்டுரையை இயல்பாக எழுதப்பட்ட ஒரு பயணக்குறிப்பு என்று சொல்லலாம். அதை வாசிக்கையில் எழும் மனக்கிளர்ச்சி அருமையானது. முற்றிலும் புதியநிலம். அங்கே முற்றிலும் புதிய மனித முகங்கள். அதேசமயம் தெரிந்த மதம். ஆகவே அன்னியத்தன்மை இல்லை.

நீங்கள் எழுதிய குறிப்பிலேயே அந்த நிலத்தின் ஆழமான வரவேற்புமனநிலை தெரியவருகிறது. அதுதான் அந்த உற்சாகத்தை உருவாக்குகிறது என நினைக்கிறேன்

ஆர்.பிரபாகர்

முந்தைய கட்டுரைபொய்யெழுத்தின் திரை
அடுத்த கட்டுரைநவீனத்துவத்தின் முதல்முகம்