நவீனத்துவத்தின் முதல்முகம்

நா_கோவிந்தசாமி

நவீன இலக்கியத்தின் பொதுவான அழகியல் மற்றும் கொள்கைகளைப்பற்றி பரவலாகப் பேசப்பட்டுவிட்டது. அதன் பொதுமனநிலை என்னவாக இருக்க முடியும்? அந்த வினாவே பிற சூழலில் எழுந்ததில்லை. ஏனெனில் நவீனஇலக்கியம் அந்த மனநிலையை வெளிப்படுத்தியபடியேதான் ஆரம்பிக்கிறது. உதாரணமாக தமிழில் நவீனஇலக்கியத்தின் பொதுமனநிலை என்பது புதுமைப்பித்தனிலேயே நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. உண்மையில் புதுமைப்பித்தனுக்குப் பிறகுதான் நவீன இலக்கியத்துக்கு எதிரான மனநிலை கொண்ட திராவிட இயக்க படைப்புகளும், கல்வித்துறை சார்ந்த ஒழுக்க போதனைப் படைப்புகளும் வர ஆரம்பித்தன. ஆகவே அங்கே ஒப்பீடுக்கான இடம் அமையவே இல்லை.

சிங்கப்பூர் இலக்கியத்தை பார்க்கும்போது எழுபதுகளின் இறுதியில்தான் நவீன இலக்கியத்துக்கான மனநிலை இங்கு உருவாகிறது என்று தோன்றுகிறது. முந்தைய படைப்பாளிகளில் புதுமைதாசன், இளங்கண்ணன் போன்றவர்களில் அதன் தொடக்கக்கூறுகளே உள்ளன. அதுவரை தமிழகத் திராவிட இயக்க எழுத்துக்கள் மற்றும் நல்லொழுக்க எழுத்துக்களிலிருந்து ஊக்கம் பெற்ற அடையாளம் தேடும் படைப்புகளும் அடையாளத்தை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்யும் படைப்புகளுமே இங்கு ஓங்கி நின்றன.

அந்த பகைப்புலத்தில் வைத்து இங்குள்ள நவீன இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்புகளைப் பார்க்கும்போது அவற்றில் உள்ள பொதுமனநிலை தெளிவாக தெரிகிறது. அதற்குs சிறந்த உதாரணம் நா.கோவிந்தசாமியின் படைப்புகள். ஒருவகையில் அவரைத்தான் நவீன இலக்கியத்தின் தொடக்கம் என்று சொல்லலாம். அந்த மனநிலை என்பது அமைப்பிற்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்வது, எப்போதுமே விமர்சன தன்மையுடன் இருப்பது.

நவீன இலக்கியத்தின் ஆரம்ப கால படைப்புகள் அனைவரிடமும் இந்த விமர்சனம் ஒரு எதிர்மறைத் தன்மையுடன் வெளிப்பட்டது என்பதையும் மறக்க முடியாது. சமூக விமர்சனத்தன்மை, அமைப்பை விமர்சனம் செய்யும் தன்மை, தன்னை விமர்சனம் செய்யும் தன்மை என விமர்சனத் தன்மைதான் நவீன இலக்கியத்தின் அடிப்படை மனநிலை என்று ஒற்றைவரியில் சொல்லலாம். அந்த சமரசமற்ற விமர்சனத்தன்மை அனைத்துப் படைப்புகளிலும் ஓங்கி இருப்பதனால்தான் நா.கோவிந்தசாமியின் சிறுகதைகளை நவீன இலக்கியத்தின் தொடக்கம் என்று சொல்லமுனைகிறேன்.

அதற்கு முந்தைய படைப்புகளிலும் விமர்சனத்தன்மை உண்டு. ஆனால் அவை சுயவிமர்சனத்தன்மை கொண்டவை அல்ல. அவை ஒரு நிலைபாட்டை எடுத்துக் கொண்டு, ஒரு கொள்கை அல்லது கோட்பாட்டை தழுவிக்கொண்டு, அதன் அடிப்படையில் சமூகத்தை விமர்சனம் செய்யக்கூடியவை. நா.கோவிந்தசாமி தனி மனிதனாக நின்று தன்னை சூழ்ந்துள்ள சமூக இயக்கத்தை விமர்சனத்துடன் பார்க்கிறார்.

இந்த விமர்சனம் அவரில் ஒரு கசப்பான எதிர்மறைத்தன்மையைத்தான் உருவாக்குகிறது. இங்கு நிகழ்வு எதிலும் நான் இல்லை என்ற ஒற்றை வரியை இப்படைப்புகளின் மைய பிரக்ஞையாக உள்ளது. தலைப்பே சொல்வது போல தேடி அலைதல் என்று தான் அவருடைய கதைகளை சொல்ல முடியும்.

நா.கோவிந்தசாமி தமிழக நவீனத்துவத்தின் ஐம்பதாண்டு வரலாறுள்ள மரபுடன் தன்னை வலுவாகப் பிணைத்துக் கொள்ளவில்லை என்றுதான் இச்சிறுகதைகள் காட்டுகின்றன. பொதுவாக ஒரு படைப்பாளியை இவருடைய படைப்புகளின் முன்னோடி வரிசை எது என்று ஆராயும் ஒரு பழக்கம் எனக்குண்டு. உதாரணமாக வண்ணநிலவனையும் வண்ணதாசனையும் ஜானகிராமன் மரபில் கொண்டு சேர்க்கலாம். கந்தர்வனையும் ச.தமிழ்ச்செல்வனையும் கு.அழகிரிசாமியின் மரபில் கொண்டு சேர்க்கலாம்.

நா.கோவிந்தசாமியை தமிழ் நவீன புனைவிலக்கியத்தில் ஜெயகாந்தனுடன்தான் சேர்க்க முடியும் ,அதுவும் மிக குறைவான அளவுக்கே. ஜெயகாந்தன் படைப்பில் இருக்கும் விரிவான தர்க்கத் தன்மையோ கதாபாத்திரங்களை மிகுந்த ஆற்றலுடன் உருவாக்கும் தன்மையோ இவரது படைப்புகளில் இல்லை. ஜெயகாந்தனின் சமூக விமர்சன பார்வையின் பாதிப்பு கொண்ட படைப்புகள் என்று இவற்றை சொல்ல முடியும். பெரும்பாலான படைப்புகள் வடிவரீதியாக ஆரம்ப நிலையில் உள்ளவை என்பதை மறுக்க முடியாது.

இக்கதைகளில் நேரடியாக வெளிப்படாது ஒரு தனிமனிதன் இருக்கிறான் என்பதை குறிப்பிடவேண்டும். அவன் சிங்கப்பூரின் சமுதாய அமைப்பில் ஒருவன் அல்ல. தமிழ்பண்பாட்டுப் பெருமிதங்கள் கொண்டவன் அல்ல. அடையாளங்களை சூடிக்கொள்ள விரும்புபவனும் அல்ல. இதையெல்லாம் நாம் ஏன் செய்கிறோம் என்று ஒவ்வொரு முறையும் வினவிக்கொள்ளக்கூடிய ஒருவன். இதன் அர்த்தத்தையும் அர்த்தமின்மையையும் தன்னை வைத்து மதிப்பிடக்கூடிய வன். முதல் முறையாக இப்படிப்பட்ட குழம்பிப் போன தடுமாறி நிற்கக்கூடிய ஒருவனை கதையுரைப்பவனாக புனைவுலகுக்குள் கொண்டு வந்ததுதான் நா.கோவிந்தசாமியின் முதன்மையான பங்களிப்பு என்று நினைக்கிறேன்.

இத்தொகுதியில் உள்ள பல கதைகள் சிங்கப்பூரின் உருவாகி வரும் நவீனசமூக அமைப்பை கசப்புடன் விலகி நின்று நோக்குபவை. உதாரணமாக ’திசை’. கொட்டகையில் வைத்து வழிபடப்படும் நாட்டார்த் தெய்வங்களுக்கு ஒரு ஆலயம் அமைப்பதற்கான முயற்சி நிகழ்கிறது. அந்த நிலத்தை விரும்பும் பெருநிறுவனங்கள் அருகே இடமளித்து ஆலயம் கட்ட உதவுகின்றன. ஆனால் அந்த ஆலயத்திற்கு நிதிதிரட்டும் போக்கில் தமிழ் சமுதாயம் பலபிரிவுகளாகப் பிரிந்து பூசலில் இறங்குகிறது.

நேரடியாகப்பார்த்தால் ஓர் ஆலயம் கட்டும் முயற்சி என்று இந்தக்க் கதையை சொல்லிவிடலாம். ஆனால் இங்கு ஒரு தமிழ் அடையாளத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தையே கோவிந்தசாமி பேசுகிறார். தன்னிச்சையாக இதுதான் என் அடையாளம் என்று ஒரு கொட்டகைக்குள் ஒரு தெய்வத்தை நிறுவ தமிழர்களால் முடிகிறது. ’சரி, அதுதான் உன் தெய்வமென்றால் அதை ஒரு அமைப்பாக்கிக் கொண்டு வா’ என்று இந்த அமைப்பு கேட்கும் போது அதன் அடிப்படையில் தங்களை திரட்டிக் கொள்ள முடியவில்லை. அதற்குள் சாதிகள், உட்சாதிகள், மதங்கள், துணைமதங்கள் என பல பிரிவினைகள் உள்ளே வருகின்றன. ஆதிக்க மனிதர்கள் அடிபணியும் மனிதர்கள் இச்சகம் பேசுபவர்கள் என்று பலபேர் உள்ளே வருகிறார்கள்.

வெளிப்பார்வைக்கு ஒரு சமூகமாகவும் உள்ளே பல நூறு பூசல்களின் தொகுப்பாகவுமே தமிழ் சமுதாயம் இருக்க முடிகிறது. இது தான் இந்தக் கதையில் நா.கோவிந்தசாமி உருவாக்கும் நுண்ணிய சமூகவிமர்சனம். சிங்கப்பூரின் இன்றைய தமிழ் அமைப்புகளின் வரலாற்றை மட்டும் எடுத்துப்பார்த்தால் இந்தக் கதை அவர்களைச் சுட்டுவது என்று ஒருவன் எண்ணக்கூடும்.

நவீன இலக்கியம் உருவாக்கிய புதிய கூறுமுறைக்குள் அமைந்த கதை என்று இதைச் சொல்லலாம் ஆனால் எழுதித் தேர்ந்த ஒரு கையால் எழுதப்பட்டதல்ல. முதிராத எழுத்தின் பல இயல்புகள் இக்கதைக்குள் உள்ளன. கதை ஆசிரியரால் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. நுணுக்கமான காட்சிகள் மற்றும் உரையாடல்கள் வழியாக சித்தரிக்கப்படவேண்டிய பல நிகழ்வுகள் வெறும் குறிப்புகளாகவே வெளிப்படுகின்றன.

சிறந்த படைப்புகளாக வெளிப்படுவதற்கான கதைப்பயிற்சி குறைவாக இருப்பதையே நா.கோவிந்தசாமியின் கணிசமான கதைகள் காட்டுகின்றன. பெரும்பாலான கதைகளை அவர் சுருக்கித்தான் சொல்லியிருக்கிறார். பெரும்பாலான கதைகள் ஆசிரியரின் பார்வையில் நிகழ்வனவற்றை அங்குமிங்குமிருந்து எடுத்து தொகுத்து அளிக்கும் தன்மை கொண்டவை. கதாபாத்திரங்களின் அடிப்படை இயல்புகளை தான் சொல்லாது வாசகன் உணரும் திறனே சிறுகதை ஆசிரியனின் திறமை. அத்திறன் வெளிப்படும் கதைகள் எதுவும் இவருடைய புனைவுகளில் இல்லை. ஆகவே இத்தொகுப்பை வாசித்த பிறகு அனேகமாக எந்த கதாபாத்திரத்தின் பெயரோ குணாதிசயமோ நினைவில் நிற்பதில்லை.

ஜெயகாந்தன் என்று சொல்லும்போதே கௌரிப்பாட்டியோ, சோசப்போ, ஓங்கூர் சாமியோ நினைவில் எழுவது போல நாம் ஆளுமைகளை இப்புனைவில் நாம் தேட முடிவதில்லை. ஆயினும் ஜெயகாந்தன் உருவாக்கிய அறிவார்ந்த தன்னுணர்வும், சமூக உருவாக்கத்தை ஒட்டு மொத்தமாக பார்க்கும் பார்வையும் இருப்பதனால் சிங்கப்பூரின் நவீனப்புனைவிலக்கிய மரபின் முதன்மையான புள்ளி என்று இந்தப்படைப்பை சொல்லலாம்.

இன்னொரு உதாரணம் தேடல். தமிழ்ச் சமுதாயம் தனக்கான தலைவனைத் தேடும் பதட்டத்திலிருக்கும் சித்திரம் இந்தக்கதையில் உள்ளது. யார் தலைவர், எப்படிப்பட்ட தலைவர் தேவை என்று ஒரு அமைப்பு கொந்தளிப்புடன் விவாதிக்கிறது. அங்கு வீச்சுடன் எழுந்துவரும் ஒரு இளைஞனைப் பார்த்தவுடன் இனி அவன்தான் தலைவன் என்று அவன் பின்னால் செல்கிறது. ‘தலைவர்களைத் தேடாதீர்கள். ஒரு சமுதாயமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்’ என நேரடியாகச் சொல்லி இக்கதை முடிகிறது. வாழ்நாள் முழுக்க ஜெயகாந்தன் தன் படைப்புகளின் மூலமாக வைத்த ஒரு வரி தான் இது.

நமது நிலப்பிரபுத்துவ அமைப்பின் தலைமை வழிபாடு நாயக வழிபாடு ஆகியவற்றிற்கு எதிராக ஒரு வெகுஜன தொகுப்பு அடையாளத்தை முன்வைத்ததே ஜெயகாந்தனின் முக்கியமான கருத்தியல் பங்களிப்பு. ஒரு சமூகமாக ஒவ்வொருவரும் உணரும்போது வரும் ஆற்றலே அச்சமுதாயத்தை முன்நிறுத்துமே ஒழிய ஒரு தலைவனைத் தெரிவு செய்து அத்தலைவனுக்கு பின்னால் செல்வது அல்ல. அத்தலைவனின் சுயநலங்களுக்குப் பலியாக வேண்டியிருக்கும் என்பது ஒன்று. இன்னொன்று, தலைவர்கள் ஆக ஆக விரும்புபவர்களின் அதிகாரப்போட்டியினால் அவ்வரசியலே எப்போதும் பூசல்களமாகவே இருக்கும் என்பது. ஆனால் இக்கதையில் அது ஒரு நேரடிக்கருத்தாகவே வெளிப்படுகிறது. புனைவில் திரண்டுவரும் வாசகக் கண்டடைந்தலாக அல்ல

நா.கோவிந்தசாமியில் இருக்கும் இன்னொரு ஜெயகாந்தனின் அம்சம் அறிவுஜீவிக் கதாபாத்திரங்கள். வெவ்வேறு கருத்து நிலைகளை பிரதிபலிக்கும் மனிதர்கள், அவர்களுக்கு இடையேயான உறவு போன்றவை. அமைப்பு என்னும் கதையை பல ஜெயகாந்தனின் கதைகளுடன் நாம் ஒப்பு நோக்க முடியும். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது. பெண்ணியக் கருத்துக்களின் பிரதிநிதியாக நிற்கும் ஒரு பெண்ணின் உள்ளார்ந்த ஏக்கம் வேறொரு திசையில் ஓர் அடிப்படை ஆண்மகனை நாடுவதைச் சொல்லும் கதை அது. வலுவாக ஜெயகாந்தனால் சொல்லப்பட்ட கதைத்தளம் திறனற்ற மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்த நுண்ணிய தளத்தை தொட்டுப்பேச முயல்வதே நவீன இலக்கியத்தின் சவாலை எதிர்கொண்டமையைத்தான் காட்டுகிறது.

இத்தொகுதியின் முக்கியமான படைப்பென்பது வேள்வி. நா.கோவிந்தசாமியின் படைப்பாக சிங்கப்பூரில் அதிகம் அறியப்படுவது இந்த நாவலே. இது ஓர் ஆலயத்தைப்பற்றி ஆய்வு செய்ய வரும் இளைஞனொருவன் கண்டடைவது என்ன என்ற கோணத்தில் எழுதப்பட்டது. அனேகமாக திசை என்னும் சிறுகதையின் விரிவான வடிவம். இதனுடைய கதைக்கட்டு மிக எளிமையானது. கதைநாயகனாகிய கருப்பண்ண மண்டோர் கோயிலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். பல்லாண்டுகளாக அவர் கோயிலுக்குள் நுழைவதில்லை. அது அவர் உருவாக்கிய கோயில்.

அவர்கள் வேட்டைச் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தனது குலதெய்வமாகிய நாட்டார்த்தெய்வத்திற்கு அவர் தன்னியல்பான பக்தியொன்றால் அமைத்த அந்த ஆலயம் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இயைப தானும் வளர்கிறது. சிங்கப்பூரின் நவீனத்துவத்தை தானும் அடைகிறது. சலவைக்கல் பளபளக்கும் ஒரு அதிநவீன வளாகமாக மாறுகிறது. அந்த வளாகத்தில் முனியப்பசாமி மெல்ல வெளியே தள்ளப்பட்டு உருமாற்றமடைந்து விஷ்ணுவும் சிவனும் முருகனும் அங்கு உள்ளே புகுந்து புராணங்கள் பேசப்படுகின்றன. திருமறைகள் ஓதப்படுகின்றன. பக்தியும் நோன்புகளும் வந்து சேர்கின்றன. ‘எல்லாம் கடவுள் தானே ? உனது கடவுள் இப்போது இந்தக் கடவுளாக மாறிவிட்டார் இப்போது என்ன? இதை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே?” என்று அவருக்கு சமாதானம் சொல்லப்படுகிறது. ஆனால் அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

கருப்பண்ண மண்டோர் ‘வெளியே’ அமர்ந்திருக்கும் சித்திரமே இதை முக்கியமான படைப்பாக ஆற்றப் போதுமானது. கருப்பசாமியும் முனியப்பசாமியும் கொண்டுள்ள தொன்மையும் வரலாறும் வேறு. அந்த அடிப்படை அடுக்கு மேல் மேலும் மேலுமென ஏற்றிவைக்கப்படுகின்றன பற்பல பண்பாட்டு அடுக்குகள். தமிழில் பல கோணங்களில் எழுதப்பட்டுவிட்ட கதைதான். நாஞ்சில்நாடன் எழுதியிருக்கிறார். நான் எழுதியிருக்கிறேன் [மாடன் மோட்சம்] ஆனால் இக்கதை ஒருவகையில் சிங்கப்பூரின் நவீனச் சமூக உருவாக்கத்தின் குறியீடாகவே மாறி நின்றிருக்கிறது. அழுத்தப்பட்ட அடித்தளத்தின் பிரதிநிதியாக வெளியே நின்றிருக்கும் கருப்பண்ண மண்டோர் இன்னொரு சீற்றம்கொண்ட நாட்டார்த்தெய்வம் போலத் தெரிகிறார்.

‘வேள்வி’ என்னும் தலைப்புக்கு மீளும்போது இக்கதை மேலுமொரு அர்த்தம் கொள்கிறது. உள்ளே நிகழும் சடங்குகளா அல்லது வெளியே அமர்ந்திருக்கும் மண்டோரின் பிடிவாதமா எது வேள்வி? வேள்வி என்றால் வேட்டல். உக்கிரமான வேட்டல் மண்டோருடையது அல்லவா?

நா.கோவிந்தசாமியின் புனைவுப்பரப்பு மிகக்குறுகியது. ஒருசிலகதைகளும் வேள்வி என்னும் குறுநாவலும் மட்டுமே கொண்டது. அவரது கவனம் விரைவிலேயே தமிழ்க்கணனி சார்ந்து திரும்பியது. அதில் ஒரு முன்னோடியாக அவர் பங்களிப்பாற்றினார். வேள்வி குறுநாவலை எழுதி பத்தாண்டுகளுக்குப்பின்னரே அதை வெளியிடும் துணிவைப்பெற்றதாக அவர் சொல்கிறார். மிகச்சிறிய சமூகத்தின் எளிய பூசல்களை எதிர்கொள்ள அவர் தயங்கியிருக்கக் கூடும். அதுவே அவர் நிறைய எழுதாமலிருக்கக் காரணமாக அமைந்திருக்கலாம். சிங்கப்பூர் தமிழிலக்கியத்திற்கு அது மிகப்பெரிய இழப்பே.

நா.கோவிந்தசாமி ஒரு முக்கியமான இலக்கியமையமாகச் சிங்கப்பூரில் செயல்பட்டிருக்கிறார். அவருடனான விவாதங்கள் வழியாக இங்கு நவீன இலக்கியத்தின் சில எழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். அவரை ஓர் இலக்கிய இயக்கமாகச் சொல்லமுடியும், விரைவிலேயே நின்றுவிட்ட ஓர் இயக்கமாக.

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

முந்தைய கட்டுரைபிரேமை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுறப்பாடு -கடிதம்