தமிழ் வாழ்க்கையின் உறவுச்சிக்கல்கள்

11

அன்புள்ள ஜெயமோகன்,

“நம் தமிழ் பொது மனதில் உறவுகளை பேணிக்கொள்ள விருப்பமோ; உறவுகளின் மீது உள்ளார்ந்த நம்பிக்கையோ இல்லையோ?” என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

என் மனைவி இந்தியா திரும்பிய இந்த ஒன்றை வருடங்களில் எங்கள் இருவர் பெற்றோர் வீட்டிலிருந்தும் அதை சுற்றிய முதல் வட்ட உறவுகளை (சுமார் 10+ குடும்பங்கள்), அவற்றில் முளைத்து, தினம் ஒரு துளிராய் தழைக்கும் பிரச்சினைகளை யோசிக்கும்போது இப்படி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஓவ்வொரு பிரச்சினையின் போதும் சம்மந்தப்பட்டவர்களை உட்காரவைத்து, நானோ மாலதியோ பேசிக்கொண்டே இருக்கிறோம். கணவன்-மனைவி; மாமியார்/மாமனார், மருமகள்/மருமகன், நங்கை-கொழுந்தி, மாப்பிளை-மச்சான் என வாய்ப்புள்ள எல்லா உறவுகளிலும் எதோ ஒன்று வந்து உட்கார்ந்து கொண்டு அவர்களை பிய்த்து எரிந்துகொன்டே இருக்கிறது. எங்களுடன் நெருக்கமாக உள்ள நண்பர்களின் குடும்பங்களிலும் இதையே பார்க்கிறேன்.

இந்த சமரசங்களில் நாங்கள் (மனைவியும் நானும்) ஒன்றும் வித்துவான்கள் இல்லைதான். நாங்கள் சமரசம் செய்துவைப்பதில் நம்பிக்கையும் இல்லாதவர்கள். எங்கள் முயற்சி எல்லாமே, சம்மந்தப்பட்டவர்களை மனம் விட்டு பேச வைப்பதும்; அவர்களை சுற்றி இருப்பவர்களை வத்திவைக்கும் முயற்சிலிருந்து தடுத்து வைப்பதும்தான். நோண்டி நோண்டி அவர்களை பிறர் மீது தனக்கு என்ன பிரச்சினை என்று எங்களிடம் சொல்ல வைக்கிறோம். அதில் அவர் கொண்டுள்ள தவறான புரிதல் இருந்தால் சொல்லி சொல்லி புரியவைக்கிறோம். மறுபுறம் தப்பு இருந்தால் அதற்கான காரணம் ஏதும் இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறோம். மறுபக்கத்தின் நியாயங்களை, நல்ல எண்ணங்களை நிரூபிக்கிறோம். வெறுமனே “அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போ” என்று சொல்வதில்லை; அது ரொம்ப நாளுக்கு தாங்காது என்பது தெரியும். “போக போக சரி ஆய்டும்” என்று வெற்று நம்பிக்கை தர மனசு வரவில்லை; அப்படி எதுவும் சரி ஆகாது என்று தெரியும். ஒருவரை ஒருவர் கஷ்டப்படுத்தும் நிகழ்வுகள் குறையலாம் கூடலாம், ஆனால் மனதளவில் எதுவும் சரி ஆவதில்லை.

ஆனால் எங்கள் முயற்சி எதுவமே ஒரு உறவைக்கூட சரி செய்யவில்லை.

முக்கால்வாசி பிரச்சினைகள் தனக்கு பூ கொஞ்சமாக கொடுத்ததாகவோ, இட்லிக்கு சட்னி வைக்காததாகவே இருக்கிறது. அல்லது அதைத்தான் வெளியில் சொல்கிறார்கள். யாரும் இன்னொருவர் பணம், வாழ்க்கை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறமை என்று இதுவரை சொல்லவில்லை. தன் தாழ்வு மனப்பான்மைதான் காரணம் என்று சொல்வதில்லை. யாருக்கும் தன் தன்னம்பிக்கையின்மை காரணமாக தெரிவதில்லை.

எல்லாமே வேறு ஒருவரிடம் தான் சொல்லப்படுகிறது. யாருக்குமே பிரச்சினைகளை சம்மந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசினால் சரி செய்து உறவை மீட்டெடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இல்லை. இதை என் உறவுக்காரி ஒருவர் சொல்ல கேட்டதுதான் இந்த கடிதத்திற்கான தூண்டுதல். ஒருநாளின் பல செயல்கள், எண்ணங்கள் ஒரு எதிர்நிலையிலேயே நிகழ்கிறது. [உங்களுக்கு வரும் நேரடியான திட்டல் கடிதங்கள் ஒரு விதிவிலக்கு]

இது எதுவும் நம் யாருக்கும் புதில்லை; எதுவும் என் கூரிய அறிவினால் புதிதாக கண்டுபிடிக்கபட்டதும் அல்லதான். இதற்கான காரணம் என்ன என தேடியபொழுது கீழ்கண்டவாறு நான் நினைக்கிறன். [அதை என் மனைவி ஒத்துக்கொள்ளவில்லை என்பதை பதிவுசெய்து பின்விளைவுகளிலிருந்து என்னை நானே காப்பாற்றிக்கொள்கிறேன்]

தமிழ்நாட்டில் புதியதாக குடும்பம் தொடங்கும் இளைஞர்களுக்கு நேர்மறையான உறவுகளை கொண்டாடும், உறவுகளோடு உரையாடும், உறவுகளில் இயல்பாக எழும் பிரச்சினைகளை உரையாடல் மூலம் தீர்க்கும் முன் மாதிரிகள் சமூகத்தில் இல்லாததே அதன் காரணமாக இருக்கவேண்டும். சமூகத்துடன் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் சினிமா, தொலைக்காட்சி தொடர்களும் பெரும்பாலும் எதிர்மறை உறவுகளையே காண்பிக்கின்றன. நம் பழமொழிகள் கூட ஒரு விதிவிலக்கல்ல. எல்லா இடங்களில் இருந்தும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படும் உறவுச் சிக்கல்கள் அவற்றை இயல்பான ஒன்றாக நிரூபித்துவிடுகின்றது.

உறவுகளில் சிக்கல் என்பது மனோதத்துவப்படி ஒருவேளை இயல்பானதாகக்கூட இருக்கலாம். இரண்டு நபர்கள் நெருங்கி வந்து உறவாடும் போது விட்டுக்கொடுத்தலும், மாற்றிக்கொள்ளுதலும், மறுத்தலும், பகிர்தலும் நடந்தே தீரும். இது சிக்கல் என்பதை ஒரு உறவின் இயல்பான உப-உற்பத்தியாக ஆக்கிவிடும். உண்மைதான்.

ஆனால் ஒரு சமூகமாக அதற்கான நேரடி தீர்வை முன்வைக்க நாம் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது. பிரச்சினைகளை சம்மந்தப்பட்டவர்கள் பேசி புரிந்து தீர்வுகண்டு உறவுகளை சரிசெய்துகொள்ள முடியும் என்று சொல்லித்தர, நம்பிக்கையை விதைக்க முழுதாய் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது. நம் பாரம்பரிய தீர்வுகள் எல்லாமே ஒருவரை விட்டுக்கொடுக்க வைப்பதும், அட்ஜஸ்ட் செய்து போவதும், குடும்ப பெரியவர் நாட்டாமை செய்வதும், பிறரிடம் சொல்லி அழுவதும், உள்ளுக்குள் புதைத்துகொள்வதும், பெரும்பாலான நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தும் உரிமை கூட மறுக்கப்பட்டதுமாகவே இருந்து வந்துள்ளது. நம் காணொளி காட்சிகளோ விஷம் வைத்தல் வரை போகிறதே ஒழிய இழுத்து வைத்து பேசுவதை தீர்வாக சொல்வதில்லை. [இவை ஒருவேளை நம் சமூகத்திற்கு ஒரு வடிகாலோ என்று நீங்கள் வியப்பதை நான் மருத்துக்கூறவில்லை…முழுதாய் ஏற்றுகொள்ளமுடியாவிட்டாலும்]

அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். நேரடியாக சம்மந்தப்பட்டவர்களிடம். ஒருவர் சொல்லுவதை எதிராளி நம்புகிறார். உன்னை மன்னித்துவிட்டேன் என்று வார்த்தைகளில் சொல்கிறார். அவரின் செயல்கள் அதை உறுதிப்படுத்திய வண்ணமே உள்ளன. பத்து வருடங்கள் அமெரிக்க வாழ்க்கையில் ஒருவருடனான பிரச்சினையை அவரிடம் நேரில் சொல்லி தீர்க்க முயலாமல் இன்னொருவரிடம் முதலில் சொல்லி அதிகம் கேட்டதில்லை. கேட்ட சில நிகழ்வுகளும் நம் தமிழர் கொடையே. அப்படி ஏதாவது பிரச்சினையை நான் சொல்லும்போது ஒரு அமெரிக்கனின் கேள்வி “நீ சம்பந்தப்பட்டவன்கிட்ட நேரா பேசிப்பாத்தியா?” என்பதுதான். அலுவலகத்தில் எப்போதாவது HR அல்லது டைரக்டர் அல்லது எங்கள் boss-ஐ பற்றி நாங்கள் பேசிகொள்ளுவோம். அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது என் தோழி ஒருத்தி அந்த HR/டைரக்டர் கிட்டே போய் இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே இது சரியான புரிதலா; என்ன காரணம் என்று கேட்டுவிடுவார். அவர் சொல்லும் விளக்கத்தை கொண்டுவந்து எங்கள் முன் வைப்பார். நாங்கள் எதிராளிக்கு இன்னும் ஒரு அடி நெருங்கி இருப்போம். இங்கோ நாம் “அவள்கிட்ட சொல்லிடாதே” என்று சொல்லித்தான் குறை சொல்ல ஆரம்பிக்கிறோம்.

எங்கள் பங்குக்கு அமெரிக்காவில் இருந்த வரை எங்களுக்கும் பிற குடும்பங்களுக்கும் இடையே வரும் பிரச்சினைகளை அவர்களை கூப்பிட்டு வைத்து பேசியிருக்கிறோம். பாதி முறைக்கு மேல் அந்த முயற்சி எங்கள் உறவுகளை மறுபடி சரி செய்தது. அப்படி பேசாமல் ஆறப்போட்ட எதுவும் சரியாகவில்லை. இங்கு நம்மூரில் அப்படி பேச தொடங்கும்போதே, “ச்சே ச்சே அதல்லாம் ஒன்றுமில்லை” என்று தவிர்த்து நடித்து ஓடுவதே இதுவரை நடந்துள்ளது.

பெரும்பாலானவர்களின் சிந்தனையை, அதன் வீச்சை அவர்கள் அதுவரை அதிகம் கேட்டுவந்த சொற்றோடர்களே தீர்மானிக்கிறது என்று தோன்றுகிறது. தான் இதுவரை கேள்விப்படாத/நினைவில் நில்லாத வரியை சிந்திப்பது என்பது ஒரு மனதுக்கு சவாலே. அந்த வகையில் நமது கேளிக்கைகளும், நிகழ்வுகளும் உறவுகளின் எதிர்மறை பிம்பத்தை, அதன் தீர்க்கமுடியாமையை கட்டமைத்த வண்ணமே உள்ளது.

“மொழி ஒருவரின் சிந்தனைகளை” கட்டமைக்கிறது (whorfiansim) என்பது இன்னும் முழுதாக நிறுவப்படாத, ஆனால் மெல்ல மெல்ல நிறுவப்பட்டுக்கொண்டு வருகிற ஒரு கருதுகோள்.

நன்றி

கௌதமன்

*

அன்புள்ள கௌதமன்,

இந்தியக்குடும்பங்களில் உறவுகளுக்கிடையே உள்ள உரசல்களைப்பற்றி புனைகதைகளில் நிறையவே எழுதப்பட்டுள்ளது. சமூகத்தின் முன்னுதாரணங்கள், சமூகத்தில் உள்ள ஊடகங்கள் ஆகியவற்றில் விடைதேடுவதை விட இச்சமூகத்தின் கட்டமைப்பில் விடைதேடுவதே மேலும் பொருத்தமானதாக அமையும். மனிதர்கள் வெளியே இருந்து தங்கள் இயல்புகளைப் பெற்றுக்கொள்வதில்லை. அவற்றை அவர்கள் தங்கள் இளமைமுதல் குடும்பச்சூழலில் இருந்தே உருவாக்கிக் கொள்கிறார்கள்

இந்தியாவில் நமது குடும்பவாழ்க்கை, சமூக வாழ்க்கை பண்டைய பழங்குடி மனநிலைகளுடன் நீடிக்கிறது. நிலப்பிரபுத்துவகால உறவுமுறைகளும் விழுமியங்களும் பெரும்பாலும் அப்படியே உள்ளன. மறுபக்கம் நம் பொருளியல் வாழ்க்கை முதலாளித்துவ அமைப்புக்குள் சென்றுவிட்டது. முதலாளித்துவத்திற்கு உரிய சில விழுமியங்கள் உண்டு. பொருள் சார்ந்து மட்டுமே அனைத்தையும் மதிப்பிடும் மனநிலை என அதை எளிமையாகச் சொல்லலாம். அந்த மனநிலையை நாம் அடைந்துவிட்டோம். ஆனால் அதே பழங்குடி, நிலப்பிரபுத்துவ உறவுமுறைகளைப் பேணுகிறோம். இதுதான் சிக்கல் என நான் நினைக்கிறேன். [இதுவும் ஒரு ஊகம் மட்டுமே. மார்க்ஸிய சமூகப்பபுக்குச் சட்டகம் இப்படி யோசிக்க உதவுகிறது. இதை இப்படி யோசித்துப்பார்க்கலாம், அவ்வளவுதான்.

நாஞ்சில்நாடனின் பல கதைகள் இந்த முரண்பாட்டில் இருந்து எழுந்தவை. தாய்மாமன் ஒருவன் மருமகன் கல்யாணத்துக்குச் செல்கிறார். திருமணம் நிகழ்வது நட்சத்திரக் கல்யாணவிடுதியாக இருக்கும் அரண்மனையில் [கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்] அங்கே இன்னொருவரை தாய்மாமனாக மணையில் அமர்த்திவிடுகிறார்கள். ஏனென்றால் இவர் ஏழை.

முதலாளித்துவ அமைப்புடன் இணைபிரியாதிருப்பது தனிமனித சுதந்திரம். இன்னொருவர் வாழ்க்கையில் தலையிடாமலிருப்பது. தாய் பிள்ளை, கணவன் மனைவி ஆனாலும் எல்லை வகுத்துக்கொண்டு உறவாடுவது. பொருளியல் அனைத்தையும் தீர்மானிக்கும் நிலையில் தனிமனித எல்லைகள் மிக அவசியமானவை. அதை நாம் கற்றுக்கொள்ளவே இல்லை

வழக்கமாக இலக்கியவாதிகளின் ’டெம்ப்லேட்’ ஒன்று உண்டு. கிராம மக்கள் உறவை மதிப்பவர்கள், நகரங்களில் எல்லாம் பணம்தான் என. ஆனால் நடைமுறையில் எவ்வளவுதூரம் கிராமம் நோக்கிச் செல்கிறோமோ அவ்வளவுதூரம் உறவுகளில் பணக்கணக்குகளும் மோதல்களும் இருப்பதையே இன்று காண்கிறோம். நகர் வாழ்க்கையில் மெல்ல மெல்ல உறவுகளை ‘அளவோடு’ வைத்துக்கொள்ள பழகிவிட்டார்கள். ஆகவே பங்காளிச்சண்டையும் மாமியார்ச்சண்டையும் மிகவும் குறைந்துவருகின்றன. அதாவது நிலப்பிரபுத்துவ பண்பாடு தேய்ந்து முழுமையாக முதலாளித்துவப்பண்பாடு வருகிறது. நீங்கள் முழுமையான முதலாளித்துவப்பண்பாட்டில் இருந்து இங்கே வந்து பார்க்கிறீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவம்புகளின் சிற்றுலகம்
அடுத்த கட்டுரைபெருநகர்த் தனிமை