கோதையின் மடியில் 3

நாங்கள் தங்கிய இடம் பட்டிசீமா. அக்டோபர் முப்பதாம் தேதி அதிகாலை ஐந்தரைக்கே கிருஷ்ணனும் சர்மாவும் சிலரும் எழுந்துகொள்ளும் ஒலி கேட்டது. இரவில் நாங்கள் தூங்க பன்னிரண்டுமணி ஆகியது. எனவே இன்னும் கொஞ்சநேரம் தூங்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் கோதாவரியில் ஒரு காலையை இழக்க மனமில்லை. மூச்சுப்பிடித்து எழுந்துவிட்டேன். நல்ல குளிர் இருந்தது. காற்று ஈரமாகச் சுழன்றடித்தது. மாடியில் வசந்தகுமார் வழக்கம்போல புகை இழுத்துக்கொண்டிருந்தார்.

படகிலே

நீரின் நிறம் இப்போது கலங்கலாக இல்லை. அல்லது காற்றுவெளியின் கலங்கல்நிறத்தில் அது கரைந்திருந்தது. நீர்ப்பரப்பில் சிறிப்ய பூச்சிபிடிக்கும் குருவிகள் தத்தித்ததி பறந்தன. சூடான டீயை கொண்டு வந்து மேலேயே பரிமாறினார்கள். மெல்ல அனைவருமே மேலே வந்துவிட்டார்கள். மெத்தைகளையும் எடுத்துவிட்டார்கள். கடைக்குட்டி தனசேகர் மட்டும் வீட்டு வழக்கப்படி போர்வையை சுருட்டிக்கொண்டு நடுக்கூடத்தில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தான்.

கரையோரமாக நிறுத்தினார்கள். இறங்கி படி ஏறி கிராமத்துக்குள் சென்று சிறிய காலைநடை போனோம். நனைந்த கிராமம். ஆனால் சுத்தமாக இருந்தது. ஒரு பள்ளிக்கூடம். குழந்தைகள் சீருடைகளுடன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். பெண்கள் வேலைக்குச்சென்றுகொண்டிருந்தார்கள். சாதாரணமான கிராமப்பெண்களில்கூட திருத்தமற்ற முகங்களை பார்ப்பது அரிதாக இருந்தது. புகைப்படம் எடுக்க சற்றே வெட்கத்துடன் ஒப்புக்கொண்டார்கள்.

நதியோரம்

பனைமரங்கள் அருகுவகுத்த வயல்வெளிக்கு வந்து சேர்ந்தோம். கிணறு ஒன்று தரைமட்டம் வரை நிரம்பிக்கிடந்தது. பனைகள் நனைந்து கருமையாக நின்றன. திரும்பி நடந்து ஒரு டீக்கடையில் ஒதுங்கினோம். அங்கே காலையுணவு போண்டா. மைதாமாவில் செய்யப்பட்டு எண்ணையில் பொரித்தெடுத்த உருண்டை. அதை சட்டினி தொட்டு சாப்பிடுகிறார்கள். ஆளுக்கொரு உருண்டை சாப்பிட்டோம். அங்கே இருபது உருண்டையை ஒருய் தட்டில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதரிடம் அரங்கசாமி தெலுங்கில் பேசினார். அவர் முன்னோடிகள் தமிழகம் வந்து 400 வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் அங்கே தெலுங்கை மாற்றிவிட்டிருந்தார்கள். பேசப்பட்டவர் ’யூ ஸ்போக் இங்கிலீஷ்’ என்று மன்றாடினார்.


கிராமத்தில் ஒரு முகம்

திரும்பவந்தபோது தனிக்கும்பலாகச் சென்ற வசந்தகுமார் மற்றும் சிறில் அலெக்ஸ் கூட்டம் காலைக்கடன்களை கழித்து காத்திருந்தது. நீரில் இறங்கி குளித்தோம். வெளியே குளிர் இருந்தமையால் நீரில் குளிரில்லை. உற்சாகமான குளியல். படகில் ஏறியதுமே காலையுணவு. அதே உருண்டைதான். கூடவே ரவா உப்புமா. ஆந்திராவில் எல்லா குழம்பும் காரக்குழம்பு. எல்லா சட்டினிகளும் காரச்சட்னி. சிறு தூறல் இருந்தாலும் மாடியில் அமர்ந்து நதிக்கரையை பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு முகம்

மெல்ல நதியில் இருபக்கங்களிலும் குன்றுகள் தெரிய ஆரம்பித்தன. அடர்ந்த மரங்கள் உடலெங்கும் மண்டி மாபெரும் பசுங்குவியல்களாக தெரிந்தன. நீரில் அவற்றின் நிழல் தெரிய இரு முக்கோணங்கள் இணைந்து சாய்வான சதுரமாக ஆயின. காடுகளை குவித்து போட்டது போல் இருந்தது. படகின் போக்குக்கு ஏற்ப மெல்ல திரும்பி தங்கள் முகம் காட்டிக்கொண்டே வந்தன. அவற்றில் இருந்து பறவைகள் கிளம்பி ஆற்றுக்கு மேலே தளர்வாக பறந்து மறுபக்கம் சென்றன.

மணல்மேட்டில்

அடர்ந்த காட்டில் எங்காவது நுழைந்து ஒரு சிறிய நடை சென்று வரலாம் என்றார்கள் நண்பர்கள். படகுக்காரர்களே இடத்தை தேர்வுசெய்தார்கள். கோதாவரியில் மீன்பிடிப்பவர்களின் சிறிய கிராமத்தில் படகு நின்றது. மீன்களை பிடித்தபின் வலைக்குள் போட்டு ஆற்றிலேயே விட்டு வைக்கிறார்கள். நாங்கள் போய் கேட்டபின்னர்தான் அவற்றை வெளியே எடுத்தார்கள். தலா ஏழு கிலோ எடைகொண்ட இரு மின்களை 200 ரூபாய்க்கு வாங்கினோம். அவர்களே சுத்தம் செய்தும் அளித்தார்கள்

அந்த நேரத்தில் கிராமத்தை ஒட்டி உள்ளே செல்லும் ஓடை வழியாக ஏறி காட்டுக்குள் சென்றோம். நீராவி நிறைந்த காடு. இலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. நல்லவேளையாக அட்டைகள் இல்லை. மூச்சு இரைக்க மேலேறிச்சென்றோம். மூங்கில்கூட்டங்கள் சில இடங்களில் நின்றன. ஓரிரு இலந்தை மரங்கள். மற்றபடி பெயர்தெரியா மரங்கள் இடவெளியின்றி செறிந்த பசும்பரப்பு. மூச்சு சிக்க ஆரம்பித்தபோது திரும்ப முடிவெடுத்தோம்.

மணலில்

மீனுடன் மீண்டும் படகில் ஏறிக்கொண்டோம். அடுத்த இடத்தில் நிறுத்தினார்கள். அங்கே ஒரு நீர்வீழ்ச்சி இருப்பதாக படகுக்காரர் சொல்லி ஒருவர் வழிகாட்டியாகவும் வந்தார். கோதாவரியில் ஒரு சிற்றாறு வந்து கலக்கும் இடம் அது. அந்த சிற்றாறின் கரை வழியாகச் சென்றோம். சிறிய கிராமங்கள் சில இருந்தன. ஆற்றின் கரையில் படியும் வண்டலில் வேலியிட்டு விவசாயம் செய்திருந்தார்கள்.

அருவி என்று அவர்கள் சொன்னது இரு பாறைகள் நடுவே நீர் சீறிப்பாயும் ஒரு இடத்தைத்தான். நீர் மேலே இருந்து விழுந்தால்தான் அருவி என்று எப்படி அவர்களுக்கு விளக்குவதென தெரியவில்லை. சரி என்று அந்த் ஆற்றிலும் குளிக்கலாமென முடிவுசெய்தோம். கிட்டத்தட்ட சமதளத்தில் பாயும அருவிதான் அந்த ஆறு. அத்தனை வேகம். அதன் மோதலை தாங்கியபடி சரல்தரையில் கால்களை பதித்து அமர்ந்து குளித்தது உற்சாகமாக இருந்தது. ‘ஜட்டிய கழட்டிட்டு போக பாக்குதே’ என்று கிருஷ்ணன் அங்கலாய்த்தார்.

காலைச்சிரிப்புகள்

மீண்டும் படகில் ஏறிக்கொண்டோம். இம்முறை நல்ல களைப்பு. நீண்ட நடை, குளியல். யுவன் சென்று படுத்துக்கொண்டான். நாங்கள் உடைமாற்றிக்கொண்டு மேலே சென்று அமர்ந்துகொண்டோம். விவாதம் அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டுச் சென்றது. தமிழக அரசியல், பழையஇலக்கியம். நான் ஒருபோர்ன் நாவல் எழுதவேண்டும் என்று அரங்கசாமி கேட்டுக்கொண்டார். அந்த வகைதான் நான் இன்னமும் தொடாததாக இருக்கிறது என்றார். ’அனல்காற்றில்’ அதற்கான சூசகங்கள் உள்ளன என்றார் கிருஷ்ணன்.

காட்டில்

பாலியல் நாவல் எழுதுவது எளிதல்ல, சாதாரண எழுத்தாளர்களால் அது முடியாது என்றேன். மனம் கலக்காதபோது உடல் வெறும் யந்திரம்தான். போர்ன் எழுதும் பலர் வெறும் இயந்திர அசைவுகளையே எழுதி வைக்கிறார்கள். பாலுறவு என்பது மனதின் ஆழம் உடலில் வெளிப்படும் தருணம். மனம் உடலையும் உடல் மனதையும் கண்டுகொள்ளும் இடம். அதை சிலராலேயே சிறப்பாக எழுத முடியும். நான் உதாரணத்துக்கு ஆல்பர்ட்டோ மொரோவியோ எழுதிய இரு கதைகளைச் சொன்னேன்.

விவாதம்

மதிய உணவுக்குப்பின்னர் மீண்டும் மாடியில் வந்தமர்ந்தோம். கொஞ்சநேரத்தில் சாரல் வலுத்து உடலை நனைத்தது. ஆகவே கீழிறங்கிச் சென்றோம். மீண்டும் கொஞ்சம் சாரல் நிலைத்தபோது மேலே வந்தோம். ஒருகட்டத்தில் பேச்சு வெறும் சிரிப்பாகவே ஆகியது. அத்தனைபேருமே ஏதேனும் நகைச்சுவை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேருமே சிரித்துக் கொண்டிருந்தார்கள். மாலையில் மீண்டும் மணல் பரப்பில் இறங்கி நடந்தோம்.

காட்டில்

மாலை ஒளியில் இருபக்கமும் மலைகள் பச்சை அடர்ந்து இறுக கோதாவரியின் நீர்ப்பரப்பு நீலநிறம் கொண்டு அடர்ந்து இருளாகி மறைந்தது. அந்தியில் ஒரு கோயில் அருகே சென்று நிறுத்தினோம். பலபடிகள் ஏறிச்சென்றோம். ஏழரைக்கே கோயில் சாத்தப்பட்டிருந்தது. ராமசாமி கோயில். பட்டாபிஷேக ராமன். சர்மா சென்று வயதான அர்ச்சகரை கூட்டிவந்தார். அவர் கதவை திறந்து அர்ச்சனை செய்து பிரசாதம் தந்தார். 300 வருடம் பழைய கோயில். இப்போது எடுத்துக்கட்டியிருந்தார்கள்.

சிறில்

மழை பெய்துகொண்டே இருந்தது. படகில் ஏறிக்கொண்டோம். உணவுண்ட பின்னர் பேசிக்கோண்டிருந்தோம். ஆனால் அத்தனைபேரும் நன்றாக களைத்திருந்தமையால் சீக்கிரமே தூங்கிவிட்டோம். வெளியே நெடுநேரம் மழை உக்கிரமாகக் கொட்டிக்கொண்டிருந்தது. நான் நள்ளிரவில் கழிப்பிடம் செல்ல எழுந்தபோது கோதாவரியை பார்த்தேன். வானத்து நீல ஒளியில் கனவுபோல தெரிந்தது நீர்வெளி

[மேலும்]

முந்தைய கட்டுரைதஞ்சை:கடிதம்
அடுத்த கட்டுரைகோதையின் மடியில் 4