விஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு

 

 DSC_7721

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற காவிய முகாம் என்னுடைய வாசிப்பு உலகில் எண்ணற்ற திறப்புகளை அளித்தது. இதுவரையிலான என்னுடைய வாசிப்பின் வழிகளும் அதன்வழி நான் கண்டடைந்த அறிதல்களையும் மீட்டெடுத்துப் பார்த்துக் கொள்ளவும் அதன் சரி தவறுகளை மறுமதிப்பீடு செய்து கொள்ளவும் அந்தரங்கமாக இந்த முகாம் எனக்கு உதவியது. வருடாவருடம் ஊட்டியில் நடக்கும் முகாம், இந்த முறை சிங்கப்பூரில் நடைபெற்றது என் போன்ற தீவிர இலக்கிய வாசகர்களுக்கு அமைந்த நல்லூழ். நீரிழுவையில் அடித்துச் செல்லப்பட்டவன் கால்களுக்குக் கீழ் தட்டுப்படும் பாறையைப் போல சிக்கெனப் பற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை, கம்பராமாயண வாசிப்புடன் முகாம் துவங்கியது (“என்ன ஒரு இனிய ஆரம்பம்! புரட்டாசி முதல் நாள் பெருமாளின் ராம காதையுடன் துவங்குகிறது முகாம்”, பக்திப்பெருக்கில் என் மனைவி என்னிடம் சொன்னது). நாஞ்சில் நாடன் நடத்த வேண்டிய அமர்வு. அவரது தாயார் காலமானதால் அவரால் வர இயலவில்லை. நண்பர் ராஜகோபாலன் இந்த அமர்வை நன்கு வழிநடத்தினார். ஒவ்வொரு பாடலையும் பங்கேற்பாளர்கள் வாசித்ததும் ஜெயமோகன் சுருக்கமாகவும் நுட்பமாகவும் பாடலின் அர்த்தத்தை விவரித்தார். சு.வேணுகோபால், பேராசிரியர் சிவக்குமரன் ஆகியோரும் தங்கள் கருத்துகளால் பங்களித்தனர். பெரும்பாலானவர்களுக்கு கம்பராமாயண அறிமுகமும் விளக்கமும் கிடைக்கப் பெறுவது பள்ளிகளிலும், கோயில் உபன்யாசகர்கள் மூலமாகத்தான். இவ்விரு அரங்குகளிலும் மரபான முறையிலேயே கம்பராமாயணப் பாடல்களை விளக்குவார்கள். பெரும்பாலான சமயங்களில் அது கேட்பவனை ஒருவகை மனவிலக்கத்தை நோக்கியே தள்ளிச் செல்லும். ஆனால், விஷ்ணுபுரம் காவிய முகாமில் வாசிக்கப்படும்/விவாதிக்கப்படும் கம்பராமாயணப் பாடல்கள் வாழ்நாள் முழுக்க ஒரு வாசகனுக்கு நினைவிருக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கம்பராமாயணத்தின் பக்தி சார்ந்த புனித அரிதாரங்கள் களையப்பட்டு, தமிழின் பேரிலக்கிய கவிதை என்ற வகையிலேயே கம்பரின் பாடல்கள் அணுகப்படுகின்றன. இந்த அணுகுமுறையே வாசகனை முதலில் ஈர்க்கின்றது.

DSC_7751

 

முதல் பாடலான “உலகம் யாவையும்” துவங்கி பாலகாண்டம் மற்றும் அயோத்தி காண்டத்தில் சில முக்கியமான, உணர்வெழுச்சியூட்டும் விதிமுகூர்த்தங்கள் அடங்கிய நாற்பது பாடல்களை இந்த அமர்வில் பொருள் கேட்டோம். மறக்க முடியாத பாடல்கள். இரண்டு மூன்று முறை பொருளுணர்ந்து படித்தால் மனப்பாடம் ஆகிவிடுமளவுக்கு எளிமையான பாடல்கள். அதற்கு ஜெயமோகன் சொன்ன விளக்கமும் மறக்க முடியாதது.  கம்பராமாயண வாசிப்பு சார்ந்து ஜெயமோகன் சில முக்கியமான அடிப்படைகளை விவரித்தார். முதலில், கம்பரின் இவ்விருத்தங்களை மனதில் வாசியாமல், வாய்விட்டு வாசிக்க வேண்டும். அக்காலத்தில் கவிதைகள் வாசிப்பவனுக்காக அல்லாமல் செவியால் கேட்பவனுக்காக இயற்றப்பட்டமையால், நாமும் வாய் விட்டு வாசிக்கும்போது கவிதையின் ஓசைநயம் நம்மையறியாமல் பாடலை நம் அகத்தின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும். இன்னும் சொல்லப் போனால், இப்பாடல்களை வாசிப்பதைக் காட்டிலும் பாடுவதே இதன் அர்த்தத்தை அனுபவிக்க மிகச்சிறந்த வழியென்றார் (இதையே டி.கே.சி தன்னுடைய “கம்பர் தரும் ராமாயணம்” என்ற புத்தக முன்னுரையில் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர்ந்தேன்). கம்பராமாயணம் போன்ற காவியங்களுக்கு கூட்டு வாசிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கினார். மேலும், ஒரு காவியம் என்பது விதை போல. ஒரு குறிப்பிட்ட பண்பாடு முழுக்க அழிந்தாலும், அந்தக் காவியத்தை வைத்தே அந்த பண்பாட்டை மீண்டும் மலர வைக்க முடியும் என்ற எலியட்டின் கருத்தை முன்வைத்தார்.

DSC_7756

 

கம்பராமாயணத்தின் பாயிரம் பகுதியை வாசிக்கையில் பெரும்பாலான காவியங்களில் “உலகம்” என்ற வார்த்தையே முதல் வார்த்தையாக வருவதை ஜெயமோகன் சுட்டிக்காட்டினார். காவியத்தின் முதல் வார்த்தை என்பது பார்த்திவப் பரமாணு போல (பிண்டத்தில் தன்னைத் தானிருக்கிறேன் என்று உணரும் முதல் அணு. தன்னைத் தானே பெருக்கி உயிராக ஆகும் விதை). அந்த முதல் சொல் பெருகிப் பெருகி மகா காவியமாக ஆவதாலேயே காவியங்களின் முதல் சொல் மிகுந்த கவனத்துக்குரியதாக ஆகிறது என்றார்.

கம்பராமாயண அமர்வில் கம்பனின் பாடல்களை வாசிக்க வாசிக்க நெகிழ்வூட்டும் பரவச நிலைக்குள்ளானேன். தசரதன் கைகேயி உரையாடல், கைகேயி ராமனிடம் காடேகச் சொல்வது (ஆழிசூழ் உலகமெலாம் பரதனே ஆள ..) ராமன் கைகேயிடம் சொல்வது (மன்னவன் பணி அன்றாகின்…), கோசலை ராமன் உரையாடல் (முறைமை அன்று என்பது ஒன்று உண்டு..), ராமன் இலக்குவனிடம் விதியின் பிழையைச் சொல்லும் இடம் (நதியின் பிழையன்று நறும்புனலின்மை..), பரதனின் குழாம் கண்டு குகன் வெகுண்டெழுவது (ஆழ நெடுங்திரை ஆறு கடந்திவர் போவாரோ?..) போன்ற பாடல்களின் இனிமை இன்னும் செவியிலறைகிறது.

அன்றிரவு உறக்கத்தில் கனவிலென சில பாடல்களின் வரிகள் மனதில் ஓடியபடியிருந்தன. “என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும் நன்மகன், இந்த நாடு இறவாமை நய…, மன்னவன் பணி அன்றாகின் நும் பணி மறுப்பெனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ.., தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ.. போன்ற வரிகளின் ரீங்காரத்தின் மையத்தில்தான் அன்றிரவு துயில முடிந்தது.

DSC_7871

 

கம்பராமாயணம் காட்டும் லட்சிய அரசன், லட்சிய மகன், லட்சிய மனைவி, லட்சிய தம்பி, லட்சிய தூதன் என்று ராமாயணத்தின் மைய கதாபாத்திரங்கள் அனைவரும் உச்ச கதாபாத்திரங்களாக இருப்பது ராமாயணத்திற்கே உரிய தனிச்சிறப்பென்றார் ஜெயமோகன்.

மதிய உணவிற்குப் பின் மகாராஜன் அருணாச்சலம் தி.ஜானகிராமனின் “பாயசம்” மற்றும் “கங்காஸ்தானம்” சிறுகதைகளை விமர்சித்து உரை நிகழ்த்தினார். இந்த இரு கதைகளின் நுட்பங்கள், சிறப்புகள் என நீண்டு சென்றது விவாதம். பாயசம் கதையில் பெரும்பாலானவர்களுக்குப் பிடி கிடைக்காத நவீன ஓவியங்கள் வரும் பகுதியைப் பற்றி ஜெயமோகன் விளக்கினார். முக்கிய கதாபாத்திரத்தின் (சாமிநாது) எதிர்மறை மனவோட்டத்தை மேலும் தூண்டிவிடும் குறியீடுகளாக நவீன ஓவியங்கள் இக்கதையில் இடம்பெறுகின்றன என்றார். அதைத் தொடர்ந்து தி.ஜாவிற்கு நவீன ஓவியங்களின் மீது இருந்த மனவிலக்கத்தைப் பற்றியும் ஜெயமோகன் பேசினார். கங்காஸ்தானம் கதையில், கதாநாயகனின் மனைவி அவனை ஏமாற்றிவனுக்கும் சேர்த்து கங்கையில் பாவமுழுக்கிடச் சொல்லும் இடம் அக்கதையின் உச்சம் என்றார். அந்த உச்சத்தைத் தவற விட்டு குதர்க்கமாக கதையைப் புரிந்துகொள்வது கதையின் மீது செலுத்தப்படும் அறிவார்ந்த வன்முறை என்றார்.

கதையில் இடம்பெறும் சில நுண்சித்திரங்களைக் கூட நேர்த்தியாக, இயல்பாக அமைப்பதுதான் நல்ல எழுத்தாளனின் வெற்றி என்றார் ஜெயமோகன். அத்தகைய நம்பகமான நுண்சித்திரங்கள் தி.ஜாவின் கதைகளில் அதிகம் இடம்பெறும் என்றார்.

அதனைத் தொடர்ந்து சு.வேணுகோபால் கதைகளில் காணப்படும் உளம் சார்ந்த பாலியல் சிக்கல் குறித்து அரங்கசாமி பேசினார். சு.வேணுகோபால் வாசகரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தன்னுடைய கதைகளின் பின்புலத்தில் விரிந்திருக்கும் அவரது பால்யம் சார்ந்த சில நினைவுகளையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.

IMG_20160918_092947

இரண்டாம் நாள் காலை முதல் அமர்வில் வேணு வெட்ராயன் தேவதேவன் கவிதைகளை முன்வைத்து ஒரு உரை நிகழ்த்தினார். தத்துவத்தின் பார்வையில் கவிதை, வாசகன் மனதில் “நிகழும்” கணத்தைப் பற்றிப் பேசினார். இது ஒரு முக்கியமான உரையாக அமைந்திருந்தது. பௌத்த தத்துவச் சொற்களின் ஒளியில் கவிதை, வாசகன் மனதில், அறிமுகமாகி, நிகழ்ந்து, பின் அறிதலாகக் கடந்து செல்லும் பயணத்தைப் பற்றி விளக்கினார் வேணு. விருத்தி, விகல்பம், ஆத்மவசியம், அகப் பிரபஞ்சம், புறப்பிரபஞ்சம், அந்தகாரண விருத்தி, சப்தகாரணவிருத்தி, ததாகாரணவிருத்தி போன்ற பௌத்த சொற்களை இந்த உரையின் மூலம் அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது.

அதனைத் தொடர்ந்து பேசிய ஜெயமோகன், கவிதையின் சொற்சேர்க்கை, சொல்லின்பம் பற்றி விளக்கமளித்தார். “மந்திரம் போல் வேண்டும் சொல்லின்பம்” என்ற பாரதியின் வரியைத் தொடர்ந்து, கவிதை வாசிப்பென்பது மனதில் ஒரு தியானத்தன்மையைக் கொடுக்கும் அனுபவம் என்றும், கவிதை என்பது மந்திரத்துக்கு இணையானது என்றும் சொன்னவர், மந்திரம் என்பது மனித மனதின் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஸுப்தி..நிர்வாணத்தைத் தாண்டி உள்ளே பயணிக்கக் கூடியது, அதற்கிணையான இயல்புடையதே நல்ல கவிதை என்றார். சில கேள்விகளுக்கு புத்தரிடமே மௌனம் மட்டும்தான் பதிலாகக் கிடைத்தது என்றும் அதனை “Golden silence of Buddha” என்பார்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா?, உயிர்கள் மறைந்ததும் எங்கு போகின்றன? இங்கு நடப்பவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? போன்ற கேள்விகளுக்கு புத்தரே மௌனம் சாதித்தார் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

IMG_20160918_102228

 

அடுத்து சிங்கப்பூர் எழுத்தாளர் கனகலதா, தனக்குப் பிடித்த இலங்கைக் கவிதைகளைக் குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஜெயமோகன் இயல்பாகவே கலாபூர்வம் மிளிரும் கவிதைகளையும், கலாபூர்வமாகத் தென்படும் வகையில் ‘போல’ச் செய்யும் செயற்கையான கவிதைகளையும் இனம்கண்டுகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். பிரமிளின் கவிதை வரியான “ வழிதொறும் நிழல்வெளிக் கண்ணிகள், திசை தடுமாற்றும் ஆயிரம் வடுக்கள்..” தன் வாழ்வின் துக்ககரமான நாட்களில் அவரை அலைக்கழித்ததைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சு.வேணுகோபால் தனக்குப் பிடித்த சேரனின் கவிதை வரிகளை நினைவு கூர்ந்தார், “முகில்களின் மீது நெருப்பு தன் சேதியை எழுதிவிட்டது, இன்னும் எதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருக்கிறீர்கள், சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக..” (இதே கவிதை வரிகளை ஜெயமோகன் குமரகுருபனின் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசிய நிகழ்ச்சியிலும் பேசியதை நினைவு கூர்ந்தேன்). கவிதை என்பது சொற்சேர்க்கையின் அழகியலையும் ரசிப்பது என்ற முக்கியமான கருத்தும் சொல்லப்பட்டது. அரவிந்தரின் “Supreme Poetic Utterance” , “Rational Intelligent work”, “Irrational Intelligent work” போன்ற சொற்பதங்களை விளக்கி, கலை அழகுள்ள கவிதையையும், போலச் செய்யும் போலியான கவிதையையும் குறித்த மேலதிகமான விபரத்தையும் ஜெயமோகன் கொடுத்தார்.

தேநீர் இடைவெளிக்குப் பின் கிருஷ்ணன் சில இலக்கியப் படைப்புகளை முன்வைத்து அவற்றில் வரும் முக்கிய கதைமாந்தர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எப்படிக் கடக்கிறார்கள்? அதன் பின் அவர்கள் என்னவாக மாறுகிறார்கள்? அந்த சூழலைக் கடந்தபின் தன் இயல்பிலிருந்து திரிகிறார்களா அல்லது தன் ஆளுமையை அதன்பின் மலரச் செய்கிறார்களா? என்பதைப் பற்றி செறிவாகப் பேசினார்.

தன் உரைக்காக அவர் எடுத்துக் கொண்ட படைப்புகள்: அசடன் நாவல் (தஸ்தயேவ்ஸ்கி), துறவியின் மோகம் நாவல் (தல்ஸ்தோய்), தந்தை கோரியா (பால்சாக்), சதுரங்க குதிரைகள் (கிரிராஜ் கிஷோர்), காமினி மூலம் சிறுகதை( ஆ. மாதவன்), நிழலின் தனிமை நாவல் (தேவி பாரதி). இதனைத் தொடர்ந்து கேள்வி பதில் பகுதி சிறப்பாக இருந்தது. கிருஷ்ணனும், ஈரோடு செந்திலும் தங்கள் வழக்கறிஞர் தொழிலில் தாங்கள் சந்தித்த குற்றவாளிகளையும், குற்றச்செயல்களையும், அதன் பின் குற்றவாளிகளின் மனநிலை, குற்றவாளிகளின் குடும்பத்தாரின் மனநிலை குறித்தும் விரிவாகப் பேசினார். மனித மூளையின் இயல்பைப் பற்றியும், மூளையின் இயல்பான அமைப்பிலேயே குற்றவாளிகளின் இயல்புகள் நிறுவப்பட்டுவிடுகின்றன என்ற புதிய தகவலையும் அறிந்து கொள்ள முடிந்தது.

IMG_20160918_124514

 

மதிய உணவு இடைவெளிக்குப் பின் சௌந்தர், தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் நாவலைப் பற்றிப் பேசினார். ஆயுர்வேதம், அலோபதி இரண்டிற்குமான விவாதங்களும், அவற்றின் வெற்றி தோல்விகளையும் மையமாக அமைந்த நாவல் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும், உண்மையில் இந்த நாவல், இறப்பை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மருத்துவ முறையையும், இறப்போடு போராடித் தோற்கும் மருத்துவ முறையையும் பற்றிய நாவல். நாவலில் வரும் ஜீவன் மஷாய் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி பலரும் பேசியது, நாவல் படிக்காமலே, அவரை நான் விரும்பச் செய்து விட்டது. இந்திய இலக்கிய விமர்சகர்கள் பலரும் இந்திய அளவில் முதன்மையான நாவலாக இந்த நாவலை அங்கீகரித்துள்ளார்கள் என்ற செய்தி, இந்த நாவலை வாசிக்கும் ஆசையை என்னுள் தூண்டிவிட்டிருக்கிறது. மனிதர்கள் தாம் இறக்கும் காலத்தை அறிந்த பின்னர் இயல்பான அமைதியுடன் கடவுள் நாம சங்கீர்த்தனத்திலும், ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்து விடுவதும் இந்திய மனதுக்கே வாய்த்த அருங்குணமாகத்தான் தோன்றுகிறது.

அதனைத் தொடர்ந்து ராஜகோபாலன், ப.சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” நாவலைப் பற்றி விரிவாகப் பேசினார். நாவலின் களம், ப.சிங்காரத்தில் வெளிப்படும் நுட்பமான தெரு/இடக் காட்சிகள், பகடி, மொழி ஆளுமை, தமிழ் குறித்தும் தமிழர்களின் இனப்பெருமை குறித்தும் மார்தட்டும் பேர்வழிகளை பகடி செய்வது போன்ற காட்சிகள் குறித்துப் பேசினார்.

ஜெயமோகன், இந்நாவலின் பலம் குறித்துப் பேசும் அதே வேளையில் இதன் பலவீனம் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்றார். வடிவ ரீதியாக இது தோல்வியடைந்த நாவல் என்றார். இந்த நாவலில் நெகிழ்வூட்டும் காட்சிகள் இல்லை என்ற கேள்விக்கு, ஆண்டியப்ப பிள்ளை “வளவி” கேட்ட தன் மகளுக்கு வளவி செய்து போட முடியாத ஒரு துயரம் மட்டுமே இந்த நாவலில் வரும் நெகிழ்வூட்டும் காட்சி என்றார். (எனக்கு, பினாங் செல்லும் பாண்டியனிடம் ரத்தினம் என்ற பையன் தன் தந்தையைத் தேடி அவர் இருக்குமிடம் தெரிவிக்க வேண்டும் காட்சி கூட நெகிழ்வூட்டும் காட்சியாகத்தான் தோன்றியது, பின்னாளில் ரத்தினம் என்ற அந்தப் பையன் ஐ.என்.ஏ-வில் சேர்ந்து அதன்பின் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை என்று பாண்டியன் நினைத்துப் பார்க்கும் சித்திரம் மட்டும் வருகிறது.) துயரத்தைக் கூட பகடியின் மொழியில் சொல்லிச் செல்கிறார் சிங்காரம். இந்தோநேசியாவின் “சைலேந்திரர்களை” வென்ற ராஜேந்திர சோழனின் படைகளைப் பற்றிச் சொல்லிச் செல்லும் இடத்தில் (இந்த இடத்தில் மட்டும்தான் தமிழரின் வீரத்தை/ பெருமையை அவர் மெச்சுகிறார் எனத் தெரிகிறது), அந்த வீரத் தமிழர்கள் சென்ற அதே கடல் பகுதியில் அவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் செல்கிறார்கள், படையெடுப்புக்காக அல்ல.. வயிற்றுப் பிழைப்புக்காக.. என்று எழுதுகிறார், சிங்காரம்.

IMG_20160918_160000

அடுத்த அமர்வில், எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுடம் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. திருப்பூர் என்ற தொழில்நகரம் காலமாற்றத்தில் இப்போது எவ்வாறு உருமாறியிருக்கிறது என்று பேசினார் கோபாலகிருஷ்ணன். கலை ரீதியாக, வடிவ ரீதியாக, தனக்குப் பிடித்த நாவலாக ஜெயமோகனின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைச் சொன்ன அவர், அந்த நாவலில் இரு இடங்கள் (ஏசு கிருஸ்து வரும் இடம், தல்ஸ்தோய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி இடையே நிகழும் உரையாடல்) தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்தப் பகுதிகளை அடிக்கடி வாசிப்பதாகவும் சொன்னார்.

இறுதி அமர்வில் சிங்கப்பூர் தமிழிலக்கிய சூழலையும், சிங்கப்பூரில் தமிழ் சந்திக்கும் நெருக்கடிகளையும், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே தமிழை வளர்த்தெடுக்க அரசின் ஆதரவோடு இங்குள்ள தமிழ் அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், சிங்கப்பூரில் ஜெயமோகன் போன்ற ஒரு ஆசானின் தேவையைப் பற்றியும் விரிவாகப் பேசினார். இதன் மூலம் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சியைப் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரத்தை சென்னை நண்பர்களுக்கு தொகுத்தளித்தார் திரு அருண் மகிழ்நன்.

நிகழ்ச்சி நடந்த இரு நாட்களும் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க முடிந்தது. அறிவார்ந்த விவாதங்களையெல்லாம் தாண்டி எல்லோரும் சிரிக்கச் சிரிக்க, கேலியும், அங்கதமுமாக சபை நிறைந்திருந்தது. ஜெயமோகன் இருக்கும் அவைகளில் இது வியப்பளிக்கும் விஷயமல்ல என்றாலும், இரு நாட்களும் அவையில் குன்றாமல் இருந்த நகைச்சுவையும், அடிக்கடி எழும் வெடிச்சிரிப்புகளும், மனதை மலர்த்தியவாறு இருந்தன. அடுத்து விவாதங்களின் மையம். ஜெயமோகன் ஒரு மூத்த மாணவரைப் போல அவையை நடத்திச் சென்றதும், விவாதம் திசை திரும்பும் போதெல்லாம் மீண்டும் சுக்கானைப் பிடித்து வழிக்குக் கொண்டு வருவதும் இப்படி ஒருவரின் அவசியத்தை உணர்த்தியது. இந்த மையம் இல்லாவிட்டால், விவாதம் வீரியமாக நடைபெற முடியாது என்றே தோன்றுகிறது. அடுத்து மரியாதை நிமித்தமான Protocol-கள் இல்லாமல் சகஜமான ஒரு மனோபாவமே அனைவரிலும் தென்பட்டது மிக ஆரோக்கியமான விஷயம். ஜெயமோகனிடம் ஒரு நிமிடம் பேசினாலும், ஒரு புதிய தகவல் கிடைப்பதும், இலக்கியம் சார்ந்து சில திறப்புகள் கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது எனக்கு. அவரிடம் விடைபெறும் கணத்தில் கூட சித்ராவிடம் அவர் நாவலின் அழகியல் பற்றியதான உரையாடலில் “நாவல் என்பது தத்துவத்தின் கலை வடிவம்” என்று ஒரு வரியைச் சொன்னார். இந்த வரியை அப்படியே மனதில் அள்ளிக் கொண்டு வீடு திரும்பினேன். நிறைவான இரு நாட்கள். இனி ஒருபோதும் இப்படி அமையுமா என்ற கேள்வியை எழுப்பிய இரு நாட்கள்.

 

– கணேஷ் பாபு

சிங்கப்பூர்

 

 

முந்தைய கட்டுரைபிரம்பும் குரலும்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் -கடிதங்கள்