வம்புகளின் சிற்றுலகம்

கமலாதேவி அரவிந்தன் திண்ணை இணையதளம் வழியாக எனக்கு முன்னரே அறிமுகமானவர். திண்ணையின் எழுத்துக்குப்பைகளில் ஓரிரு வரிகள் வாசித்து கவனத்தைக் கவரும் சிலவற்றை மட்டுமே மேற்கொண்டு வாசிப்பது என் வழக்கமாக இருந்தது. ஆகவே அவரது எழுத்தைக் கவனித்ததில்லை. இப்போது சிங்கப்பூர் வந்தபின்னர்தான் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார் என்பதை அறிந்துகொண்டேன். அவரது கதைகளை தொகுதிகளாக வாசித்தேன்.

கமலாதேவி அரவிந்தன் இருமொழிகளில் எழுதுபவர். மலையாளம் அவரது தாய்மொழி. இருமொழி இலக்கியமரபிலிருந்தும் அவர் ஒரு துளியையேனும் கற்றுக்கொள்ளக்கூடாது எனமிகப்பிடிவாதமாக இதுநாள் வரை இருந்திருக்கிறார் என்னும் எண்ணமே எழுகிறது. முதிரா எழுத்து என நெடுங்காலமாக எழுதிவரும் இவ்வெழுத்தாளரின் படைப்புலகைச் சொல்வது சங்கடமளிப்பது, ஆனால் அதுவே உண்மை.

மலேய, சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர்களான இளங்கண்ணன், கண்ணபிரான் முதலியவர்களின் கதைகள் பலவகையான கலைக்குறைபாடுகள் கொண்டவை. ஆனாலும் அவை நேர்மையான நோக்கம் கொண்டவை. இங்கு ஒரு பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கவும் நிலைநிறுத்தவும் முயல்பவை. கமலாதேவி அரவிந்தனின் உள்ளம் வம்புகளில் மட்டுமே ஆழ்வது. அது ஒருபக்கம் இலக்கிய வம்புகளை தன் கோணத்தில் நோக்குகிறது. இன்னொருபக்கம் பாலியல் சார்ந்த குடும்ப வம்புகளை நோக்குகிறது

வம்புகள் இலக்கியத்தின் மூலப்பொருட்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் வம்புகளை அணுகும் இலக்கியவாதி அதற்குள் புழங்குபவன் அல்ல. மானுடரை அறிவதற்கான ரத்தமாதிரிகளாகவே அவன் அவற்றை அணுகுவான். விருப்புவெறுப்புகளால் அல்ல, நுணுக்கமான உளவியல்பார்வையுடனும், விலகல்நோக்குடனுமே ஆய்வுசெய்வான். கமலாதேவி அரவிந்தன் அக்கப்போரையே மீண்டும் மீண்டும் திறனற்ற உரைநடையுடன் எழுதிவைத்திருக்கிறார்.

தலைப்பே சொல்வதுபோல ‘கரவு’ தான் கமலாதேவியின் இக்கதைகளின் பொதுப்பொருள். முதற்கதையான ‘அடோஜோபில’ மனைவியுடன் பூசலிட்டு தற்கொலை செய்துகொள்ள கேரளத்தின் கடற்கரை ஊருக்கு வருபவனைப்பற்றிச் சொல்கிறது. அங்கு ஓர் இளம்பெண்ணைப்பார்க்கிறான். உடனே ஒரு மாதிரியான காதல், உடலுறவு. அவனிடமிருந்து பணம் பறித்தபின் அவள் அவனை விட்டுவிடுகிறாள். அவன் மனம்திரும்பி மனைவியிடமே வருகிறான். உண்மையில் அவனுக்கு என்னவேண்டுமென்று கிளம்பிச்சென்றான் என்று எண்ணத்தோன்றுகிறது

சிங்கப்பூர் விமானநிலையத்தில் இறங்கி சொந்த வீட்டுக்குச் செல்கிறான் கதாநாயகன். மனைவி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காபி போடுகிறான். மனம்திருந்திவிட்டான் அல்லவா? ‘ஏன் கோபமே வரவில்லை என்று புரியவில்லை. அலுங்காமல் குலுங்காமல் வேணி இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். பொழுதுதான் விடியட்டுமே, அப்படி என்ன அவசரம்? ரங்கராஜன் காத்திருந்தான்’ என முடிகிறது கதை. இந்தக் கருவுக்கு கோவளம் வர்ணனை, மீன்குழம்பு வர்ணனை, மீனவர்களின் கூப்பாடு என என்னென்னவோ சேர்க்கப்பட்டு குத்துமதிப்பாக கதை சமைக்கப்பட்டுள்ளது.

அதோடு மொழி. ‘கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்தப்புத்தகம்’ என்ற வரியை வாசித்து திகிலாகிவிட்டேன். ஆலவட்டம் என்பது துணியால் செய்யப்பட்டு சாமி ஊர்வலங்களில் இருபக்கமும் பிடித்துக்கொண்டு போகப்படும் வட்டவடிவமான அலங்காரம். காற்றில் சிலுசிலுக்கும். தமிழிலும் மலையாளத்திலும் ஆலவட்டம்தான். பாவாடை ஆலவட்டம் போடுவதை சினிமாவில் எழுதிவிட்டார்கள். புத்தகம் ஆலவட்டம் போடுவது எப்படி என எண்ண எண்ண மண்டை குழம்புகிறது

அந்தக்கதை ‘எங்கேயும் மனிதர்கள்’ ஓர் இலக்கிய வம்பு. எவரெனத் தெரியவில்லை, அனேகமாக அது ஆசிரியையின் உள்ளம் உருவாக்கிக்கொண்ட சூழலாக இருக்கவேண்டும். நம்பீசன் என்னும் பெரும் படைப்பாளி சாதிபார்ப்பவராக இருக்கிறார். தூய உள்ளமும், சமரச நோக்கமும், படைப்பு வீரியமும், நேர்மையும் கொண்ட சுமி என்னும் சிங்கப்பூர்க் கதாசிரியை [இருக்காதா பின்னே?] அந்த தாழ்ந்த சாதி இலக்கியவாதியை இரக்கம்கொண்டு பாராட்டுகிறார். சுமி கதை எழுதவும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கலாம்.

தலைப்புக்கதையான கரவு மணஒப்பந்தம் மீறிய ரகசிய உறவின் கதை. ராமலிங்கத்தின் மனைவி புவனியை தாமஸ் காதலிக்கிறான். அவர்களுக்குள் ஒரு மெல்லிய காமப்பரிமாற்றம். ஆனால் உடலுறவு இல்லை. புவனியின் மகன் வளர்கிறான். தாமஸ் செத்துப்போகிறான். புவனி தன் மகன் ராஜாவை காதலன் பொருட்டு குளிக்கச் சொல்கிறாள். ‘தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சாம்பலாகிப்போன தாமஸின் ஜீஸஸ் லாக்கெட்டை என்ன செய்வதென்று அவனுக்குப்புரியவில்லை’ என கதை முடிகிறது

கு.ப. ராஜகோபாலன் தமிழிலும் காரூர் நீலகண்டபிள்ளை மலையாளத்திலும் பாலியல்மீறல்களின் நுண்ணிய தளங்களை எழுதி முக்கால்நூற்றாண்டு கடந்தபின் வரும் கதை இது என எண்ணிப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. வேறு எந்தத் தொழிலிலாவது அந்தத்தொழிலின் அடிப்படைகள் தெரியாமல் அதில் இறங்கமுடியுமா என வியக்கிறேன்

இத்தொகுதியின் அனைத்துக்கதைகளுமே இப்படி எளிய வம்புகள் மட்டுமே. ஒரு சிறிய வேறுபாடு என்றால் கண்ணிநுண்சிறுதாம்பு என்னும் கதையைச் சொல்லலாம். மனநலவிடுதியின் பெண்களைபற்றிய அச்சித்திரமே சினிமாவில் வரும் ‘பைத்தியங்களின்’ சேஷ்டைகளைப்பார்த்து எழுதப்பட்டது. ஆனாலும் மிக எளிதாக முறிந்துவிடும் பெண்களைப்பற்றிய எளிய குறிப்புகள் ஒருவகையில் உள்ளத்தை தாக்குகின்றன. கண்ணிநுண்சிறுதாம்பு என்னும் தலைப்பும் நன்று

கமலாதேவி அரவிந்தனின் இத்தொகுதியின் கதைகளில் அவர் தன்னை ஒரு பெரிய இலக்கியச்சாதனையாளராக எண்ணி கதைக்குள் வாதிடுவதை உணரமுடிகிறது. அவர் தன்னைப்பற்றிய விமர்சனத்தை தானே கடுமையாக உருவாக்கிக்கொள்ளலாம். அது அவரை நல்ல கதைகள் சிலவற்றை எழுதச்செய்யக்கூடும். கதை என்னும் வடிவை இன்னமும்கூட அவர் கற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் பெரும் படைப்பாளிகள் எழுதிச்சென்ற மொழி இது.

*

பின்னட்டையே இந்நூலை ஒரு சிறந்த நகைச்சுவை நூலாக ஆக்குகிறது. அந்தக்கோணத்தில் வாசிப்பவர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்திற்குரியது இது. ‘வை.மு.கோதைநாயகி அம்மாள் காலந்தொட்டு இன்றைய உமா மகேஸ்வரி வரை பெண்ணெழுத்து என்பது வாழ்வியல் பிரச்சினைகளை, அறச்சீற்றங்களைக்கூட, இணைமுரணில், பாதரசக்குண்டுகளாய், பெண்மொழியில் சொல்லத்தெரிந்தவர்களாகவே வாசகனைக் கவர்கிறார்கள். கணநேர அதிசயங்களைக்கூட சுவையான சிந்தனையில் ஊடுபாவி கட்டமைக்கப்பட்டக் கதைகளின் மூலம் இயங்காற்றலால் எழுதி வென்ற கதைகள் நிதர்சனச் சான்றாக இங்குண்டு. பரிசுபெற்ற கதைகள் என்பதனால் சொகுசாய் சொல்லவரவில்லை. உச்சபட்ச சிந்தனையைக்கூட மொழிநடைக்கும் அப்பாற்பட்ட செவ்வியல் பாணியில் எழுதும்போது கருத்தியல்தளம் அசாத்திய கேள்விக்குறியோடு எம்மைத் திகைக்க வைத்துள்ளது’ என தன் கதைகளைப்பற்றி மிகுந்த அவையடக்கத்துடன் சொல்லும் கமலாதேவி நம்மை இறும்பூது களியுவகை போன்றவற்றை எய்தவைக்கிறார்.

அவர் மேலும் மனம் கனிந்து ‘தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் எழுதும்போது நான் கற்றவை ஏராளம். அமைப்பியல் வாதக்கோட்பாடுகள் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு லக்கானின் உளவியல் கோட்பாடு என நுட்பமாக மலையாள வகுப்பில் கற்றுக்கொண்டதை எல்லாம் எனது பல மலையாளக்கதைகளின் வழியாக நான் பரிசோதித்ததுண்டு. கருத்துக்களால் ஆன கதைகளை stories of ideas என்றும் புனைவின்வழி வயப்படுத்தும் எழுத்துக்களை fiction of ideas என்றும் விமர்சகர் வாதிட்டார்கள். ஆங்கும் வாழ்க்கையை அதன் அனைத்து அழுக்காறுகளோடும் [!] அந்தரங்க முணுமுணுப்புகளோடும் மானுடம்தழுவிய அகச்சிக்கலோடு கூடிய மீட்சிப்பெட்டகம் நிஜமாக வெளிப்படும்போது உண்மையும் கற்பனாவாதத்தோடும் கூடிய கதைகளை விகாசத்தின் கிரகிப்பில் உன்னதமாக எடுபட்டன. அத்தகைய கதைகளே முதன்மைப்பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டன என்பதைச் சிறு வெட்கத்துடன் இங்கு பதிவுசெய்கிறேன்’ எனும்போது தமிழில் உயர்தர நகைச்சுவை இல்லை என்று சொன்னவர் யார் என்று கேட்கத்தோன்றுகிறது

[கரவு, கமலாதேவி அரவிந்தன். தங்கமீன் பதிப்பகம்]

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ் வாழ்க்கையின் உறவுச்சிக்கல்கள்