கோதையின் மடியில் 2

ஒரு பயணத்தின் முதல் சில மணிநேரங்களில் பலவிதமான அலை பாய்தல்களுடன் இருக்கிறது மனம். வசதிகளை கணக்கிடுவதும் வசதிப் படுத்திக் கொள்வதுமாக மேல்மனம். புதிய அனுபவங்களுக்கான கிளர்ச்சி நிறைந்த ஆழ்மனம். மெல்ல மெல்ல பறவைகள் மரத்தில் அணைகின்றன. கலைசல் ஒலிகள் அடங்குகின்றன. ஆமாம், இதோ இங்கே இருக்கிறேன், இதுதான், இதுவேதான் என்று மனம் சொல்லிக் கொள்ள ஆரம்பிக்கிறது.

ஒரு நிறைவும் இனிய களைப்பும் உருவாகிறது. அகம் கட்டுகளை அவிழ்க்க ஆரம்பிக்கிறது. வாழ்க்கை சார்ந்த எல்லாம் மிக எளிமையானவையாக சர்வசாதாரணமானவையாக கண்முன் கிடக்கின்றன. ‘நான் இருக்கிறேன்’ என்ற உணர்வாக ஒருகணமும்’ எல்லாமும் இருக்கின்றன’ என்ற உணர்வாக மறுகணமும் நம்மை உணர்கிறோம். அந்நிலையையே நாம் நிம்மதி என்கிறோம்.அதன்பின் மனம் துள்ள ஆரம்பிக்கிறது. சின்னச்சின்ன நகைச்சுவைகளுக்கெல்லாம் சிரிக்கிறோம். கிண்டல்செய்துகொள்கிறோம்.

கோதாவரியைப் பார்த்தபடி படகின் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இனிய நகைச்சுவைகள். யுவன் எப்போதுமே சொற்களை மடக்கி வேடிக்கைகளை உருவாக்குவதில் திறன் மிக்கவன். சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இருபக்கமும் காட்சிகள் நிதானமாக மாறிக் கொண்டிருந்தன. நகரம் மறைந்தது. இரு பக்கமும் பெரிய மணல்மேடுகள். அவை ஆர்ட்டிக் பனிப்பாறைகள் போல அடுக்கடுக்காக இருந்தன. ஆற்றின் நாநுனி நக்கி உணவை விண்டு விழுந்தவை.

அந்தப்பகுதியில் கோதாவரி இரண்டு கிலோமீட்டருக்குமேல் அகலம் இருக்கும். நாங்கள் சென்றது இரு கைநதிகளில் ஒன்றில். அங்கு சராசரி ஆழம் நூற்றியிருபது அடி என்றார்கள். நடுவே ஆற்றிடைக்குறை தென்பட்டது. மணல்மேடு. அதன்மேல் எருமைகள் மேய்ந்துகொண்டிருந்தன. நீர்ப்பரப்பின் அருகே தெரிந்தது ஆடுகள் என்று தோன்றியது. மெல்ல மெல்ல அவை பெரிய பறவைகள் என்று தெளிவாகியது. ஃப்ளெமிங்கோக்கள். இந்தியாவில் ஃப்ளெமிங்கோ உண்டு என்று அஜிதன் சொன்னதாக இளங்கோ சொன்னார்.

படகின் மாடியில்…

யுவன், ராமச்சந்திர ஷர்மா இருவருமே பாடகர்கள். ஆகவே இயல்பாகவே பேச்சு பாட்டை நோக்கிச் சென்றது. யுவன் பழைய தமிழ்ப்பாடல்களைப்பாட ஷர்மா மரபிசைப்பாடல்களைப்பாடினார். சோனி கீழே அமர்ந்து பாடவே விரும்பினார். ஒலிப்பெருக்கி இல்லாமல் பாட முடியாது. அவை கீழே இருந்தன. ஆனால் அந்த நேரத்தில் கீழே அறைக்குள் சென்றமர யாருமே விரும்பவில்லை.

கொஞ்சநேரம் பொறுத்தபின் பாடகர்கள் மேலேயே வந்துவிட்டார்கள். பாடுவது அவர்களுக்கு தொழில்மட்டுமல்ல, ஒரு தனிப்பட்ட ஆர்வமும் கூட. பாடாமல் இருக்க முடியவில்லை. மேல்தளத்திற்கு ஒலிப்பெருக்கிகளை கொண்டுவந்து வைத்தோம். சோனி கணீர் குரலில் பாட ஆரம்பித்தார். பெரும்பாலும் தெலுங்கு நாட்டுப்புறப்பாடல்கள். அந்த மெட்டுக்கள் பல ஏற்கனவே தமிழ்நாட்டில் திரையிசை மூலம்பிரபலமடைந்திருந்தன. ‘ஏருபூட்டி போறவனே அய்யா சின்னய்யா’ போன்றவை. அந்த மனநிலைக்கு அப்பாடல்கள் உற்சாகமளித்தன

யுவன் சந்திரசேகர் ‘என்னடி ராக்கம்மா’ ’ மணப்பாறை மாடுகட்டி ‘ முதலிய குத்துப்பாடல்களைப்பாட தாளக்காரர் பறையில் சிறப்பாக தாளம் கொடுத்தார். பாடல்கள் தெரியாதபோதுகூட இரண்டாம் அடியில் தாளத்தைப்பிடித்துக்கொள்ளும் அவரது திறமை ஆச்சரியம் கொள்ளச்செய்தது. இசைபற்றி நடுநடுவே விவாதங்கள்.

மணப்பாறை மாடுகட்டி…
யுவன் பாடுகிறான்

மதிய உணவு படகிலேயே. மீன் கறியும் மீன்பொரித்ததும் அசைவர்களுக்கு. சாம்பார் ரசமும் மோரும் சைவர்களுக்கு. ஆந்திராவின் தனித்தன்மை மிக்க உணவு. எல்லாவற்றிலும் மிளகாய்த்தூளை அள்ளிபோட்டிருந்தார்கள். அந்த காரத்தை நெய்யோ எண்ணையோ விட்டு குறைத்து கொஞ்சம் சீனியைக் கலந்து மென்மையாக்கிய ருசி. தென்னிந்திய உணவுகளில் எனக்கு ஆந்திர உணவுதான் மிகப்பிடித்தமானது. ஆனால் மறுநாள் மிகவும் கஷ்டப்படுவேன்.

மதிய உணவுக்குப்பின்னர் பாடகர்கள் இறங்கிச்சென்றார்கள். படகை மணற்கரை ஒன்றில் நெருங்கச்செய்து நிறுத்தினார் சமதானி. அனைவரும் இறங்கி கழுத்தளவு நீரில் குளித்தோம். கோதாவரி உரிய வழிகாட்டுதல் இல்லாமல் குளிக்கக்கூடாத நதி. நீரின் வேகம் மிக அதிகம், ஆனால் கண்ணுக்கு தெரியாது. சுழிகள் பல உண்டு. புதைமணலும் எதிர்பாராத ஆழமும் உண்டு. நாங்கள் குளிக்கையில் சமதானி அதற்கு ஒரு எல்லையை அளித்து அவ்வெல்லையை நாங்கள் மீறாதபடி கூவிக்கொண்டே இருந்தார்.அவரது கூச்சல் இல்லாமல் குளித்தால் குளித்த நிறைவே உருவாகாத நிலையை சீக்கிரமே அடைந்தொம்

மணல்மேடுக்கரை

மாலையில் சிறு தூறல் ஆரம்பித்தது. கீழே வந்து அமர்ந்துகொண்டோம். கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தால் தூறல் நின்றது. மீண்டும் மேலே சென்றோம். இரு இடங்களில் நின்று மணல்வெளிமீது நடந்தோம். பற்பல அடி உயரத்துக்கு தூய வெண்மணல் வெளி. மணல் மலைகள். மணலை அறுத்து ஓடிவந்து கோதையில் கலக்கும் சிற்றோடைகள். கரையோரங்களில் மரங்கள் அடர்ந்த காடுகள் வர ஆரம்பித்தன. சில இடங்களில் சிற்றூர்கள். அவற்றின் வட்டக்கூடை போன்ற குடிசைக்கூரைகள். அங்கிருந்து கிளம்பும் சமையல்புகை.

மணல்வெளிகள் மேல் கரிய புள்ளிகளாக எருமைகள் நகர்ந்தன. அவை ஆற்றுக்குறைகளில் எப்படி வந்தன? படகில் கொண்டு விடுவார்கள் போல என்று தனசேகர் சொன்னார். ஆனால் மூன்றாம் நாள் இருபதுக்கும் மேற்பட்ட எருமைகள் ஒரே கும்பலாக ஸீல் மீன்கள் போல வட்டமான தீவாக நீரில் நீந்தி செல்வதைக் கண்டோம். ஆற்றின் சுழல்களும் வேகமும் ஒரு பொருட்டே இல்லை அவற்றுக்கு.

மணலில்

ஆங்காங்கே மணல்மேடுகளில் இறங்கி நடந்தோம். பிரம்மாண்டமான கேக் போல அடுக்கடுக்காக மணல். கரையோர நீரோடைகள் அதை முப்பதடி ஆழம் வரை வெட்டி வந்து கோதையில் இறங்கின. சிறில் ஓர் ஓடையில் சிறிய அணை ஒன்றைக் கட்டினார். ஆங்கிலக்கவிதைகளில் கன்னிமணல் என்று வரும் சொல்லாட்சியை உணர முடிந்தது. எனக்கு ஒரு புள்ளிகூட வைக்கப்படாத வெண்தாள் போல இருந்தது. சிலசமயம் புரியாத மொழியில் பறவைக்கால்தட எழுத்துக்கள் இருக்கும். எங்கள் காலட்சிகள் தோல்தையல் கோடுகள் போல நீண்டு சென்றன.

நானும் தனசேகரும் வினோதும் மணல் மேட்டை ஓடியே சுற்றிவந்தோம். உச்சவேகத்தில் அரைகிலோமீட்டர் வரை ஓட முடிந்தது. அதன் பின் நுரையீரல் பிய்ந்துவிடுவதுபோல வலித்தது. மணலுக்கு அப்பால் காட்டுக்குள் நீர் சொட்டிக்கொண்டே இருக்கும் ஒலி. அங்கிருந்து பார்க்கையில் ஆறு மிகச்சிறிதாகத் தெரிந்தது. எங்கள் படகு ஒரு பொம்மைபோல. அந்த அனுபவத்தை ஏதோ ஒருவகையில் சொல்லாக ஆக்க ஒவ்வொருவரும் முயல்வது போல் இருந்தது. இளவெயில்மேல் நடப்பது போல இருக்கிறது என்றார் ஒருவர். விரைவிலேயே சொற்களை இழந்து சிறுவர்களாக ஆனோம்.



கரையோரக்கிராமம்

இருட்டிக்கொண்டே வந்தது. கோதாவரிப்பரப்பு மட்டும் உலோகம் போல ஒளிர்ந்து பின்பு இருட்டுக்குள் மறைந்தது. சிறுமழையில் நனைந்து கொண்டே கொஞ்சநேரம் மேலே அமர்ந்திருந்தோம். கரையோரமாக படகை ஒதுக்கிவிட்டு படகிலேயே இரவுணவு. காரம் கொதிக்கும் குழம்பு. ஆனால் தவிர்க்கமுடியாத சுவை கொண்டது. பிறகு அத்தனைபேரும் பெரிய உட்கூடத்தில் படுத்தோம். 20 மெத்தைகளை வாடகைக்கு எடுத்திருந்தோம். அவற்றை விரித்துக்கொண்டு படுத்தோம்

அரங்கசாமி பேய்க்கதை கேட்டார். இருட்டுக்குள் பேய்க்கதை சொல்லவேண்டும் என்பது விதி. நான் நான்கு பேய்க்கதைகள் சொன்னேன். படகு சம்பந்தமான பேய்க்கதை தேவை என்பதனால் ஒரு மீனவர் ரயிலில் சொன்ன கதையை விரிவாக்கிச் சொன்னேன். கயால்பட்டணம் கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மீன்பிடிக்கலாகாது என்று சடங்குத்தடை உண்டு. அதைமீறி இருவர் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். ஆழ்ந்த அமைதியான கடல். மீனால் படகு நிறைகிறது. ஒருவர் போதையில் தூங்கிவிட இன்னொருவர் படகை ஓட்டுகிறார். அப்போது அசப்பில் திரும்பினால் படகை பற்றியபடி கடலுக்குள் இருந்து உள்ளே பார்க்கும் பத்து உறைந்த முகங்களை கண்டார். கைகளும் தலைகளும் மட்டும். கண்சிமிட்டினால் அக்காட்சி இல்லை. வேறெங்கோ நோக்கியபின் சட்டென்று திரும்பினால் மட்டுமே அதைக் காணமுடிந்தது. நண்பரை எழுப்பினார். அவரும் அதைக் காண்கிறார்.

அந்திமயங்க…

மீனை அள்ளி திரும்பி கடலுக்கே போட்டுவிடுகிறார்கள். மறுநாள் கரைக்கு வந்துவிடுகிறார்கள். மீனுடன் வர முயன்றிருந்தால் மரணம்தான். அங்கே முன்பு ஒரு கப்பல் மூழ்கியிருக்கிறது. ஆவலுடன் கதைகேட்ட நண்பர்கள் உற்சாகமாக சிரித்து கருத்து சொல்லி அறிவார்ந்த அறுவைசிகிழ்ச்சைக்கும் கதையை உள்ளாக்கினார்கள். ஆனால் கழிப்பிடம் போவதற்கு மட்டும் துணை அழைத்துக்கொண்டார்கள்



இரவில்

[மேலும்]

முந்தைய கட்டுரைபாலாவும் இடலாக்குடி ராஜாவும்
அடுத்த கட்டுரைஎன் பேட்டி