சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3

இன்று இரண்டாவது நாள் அமர்வு. நேற்று மாலை வளைகுடாப்பூந்தோட்டம் பார்த்துவிட்டு திரும்பியபோது கிருஷ்ணனும் சந்திரசேகரும் வந்தார்கள். சப்பாத்தி சுட்டு சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கே ரெடியாகிவிடவேண்டும் என சரவணன் சொல்லியிருந்தார்.

இருந்தும் இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இத்தகைய நிகழ்ச்சிகளின் பிரச்சினையே இதுதான் நீண்ட அரங்குகள் நம்மை மேலும் பேசவைக்கின்றன. உள்ளம் கொப்பளிப்பதைப் பேசாமல் தூங்கமுடியாது

DSC_7714

ஏழரைக்கு அவர் வந்தார் . எட்டேகால் மணிக்கெல்லாம் நாங்கள் எம்டிஐஎஸ் வளாகத்திற்குச் சென்றுவிட்டோம். செந்தேசாவில் தங்கிய கும்பல் அங்கே முன்னரே வேனில் வந்திறங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

காலையுணவுக்குப்பின் அரங்கு தொடங்கியது. விஜயராகவன் முன்னுரை சொல்லி விழாவைத் தொடங்கிவைத்தார்.

விஜயராகவன் வரவேற்புரை

முதல் அமர்வில் கவிதைகளைப்பற்றி வேணு வெட்ராயன் பேசினார். தேவதேவன் கவிதைகளை முன்வைத்து கவிதை உருவாகும் கணம், கவிதை வாசகனில் நிகழும் கணம் பற்றி விளக்கினார். இந்திய அறிதல்முறைகளின் வழியாக, குறிப்பாக பௌத்த மெய்யியலின் கோணத்தில் அவர் அணுகியது மாறுபட்டதாக இருந்தது.

தேவதேவனின் கூழாங்கற்கள் என்னும் கவிதையை எடுத்துக்கொண்டு அதிலுள்ள கவிதையாக்கம் கூழாங்கல் என்று மூளை அறியும் அனைத்தையும் அழித்து ஒரு திகைப்பை உருவாக்குவதும் அதன் வழியாக புதிய அனுபவத்தை அளிப்பதும்தான் என விளக்கினார்

கவிதை முகிழ்ப்பதும் அறியப்படுவதும் – வேணு வெட்ராயன்

அடுத்ததாக சிங்கப்பூரைச்சேர்ந்த செல்வி கனகலதா கவிதைகளைப்பற்றிப் பேசினார். அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் இலங்கைக் கவிதைகளைச் சார்ந்தே அவரது விவாதம் அமைந்திருந்தது. கவிதை வாசிப்பின் படிநிலைகளைப்பற்றி பேசினார். கவிதைகளை வாசகன் வரிகளை மட்டும் கொண்டு வாசிப்பது, கவிஞனின் வாழ்க்கையைக்  கொண்டு வாசிப்பது என்னும் இரு வகை வாசிப்புகள் சாத்தியமாவதைப்பற்றிப் பேசினார்

ராஜகோபலன் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றிப் பேசுகிறார்

தேநீர் இடைவேளைக்குப்பின்னர்   புனைவுகளைப்பற்றிய  விவாத அரங்கில் கிருஷ்ணன் அவரைக் கவர்ந்த ஏழு புனைவுத்தருனங்களைச் சார்ந்து ஒரு தீவிரமான தருணம் எப்படி  ஒரு மனிதனை முன்பில்லாதவனாக மாற்றுகிறது, தன்னைக் கண்டடையச்செய்கிறது, ஒன்றுமே செய்வதில்லை என்னும் கோணத்தில் விளக்கினார்.

செல்வி கனகலதா. கவிதையின் வாசிப்புமுறைகள் பற்றிப்பேசுகிறார்

அசடன் [தஸ்தயேவ்ஸ்கி] ஃபாதர் செர்ஜியஸ் [தல்ஸ்தோய்] ஃபாதர் தந்தை கோரியா [பால்சாக்] சதுரங்க குதிரைகள் [கிரிராஜ் கிஷோர்] காமினி மூலம் [ஆ.மாதவன்] நிழலின் தனிமை [தேவி பாரதி] ஆகிய புனைவுகளை அவர் தெரிவுசெய்திருந்தார்

பொதுவாக நிகழ்வதுபோல விவாதத்தில் இக்கதைகளுடன் இணைந்துகொள்ளும் கதைகளும் நாவல் தருணங்களும் நினைவுகூரப்பட்டன. ஏனஸ்டோ டல்லாஸின் வெறும்நுரைதான், பிரேம்சந்தின் லட்டு, அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, சாமர்செட் மாமின் ரெயின் என. இவ்வாறு ஒரு கதை பலகதைகளை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் அனுபவமே இலக்கிய அனுபவமாக ஆகியது.

சு வேணுகோபால் இடையீடு

மதிய அமர்வில் சௌந்தர் தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கியநிகேதனம் நாவலைப்பற்றிப் பேசினார். பழைமைக்கும் புதுமைக்குமான போராட்டமும் பரஸ்பர அங்கீகாரமும் ஆக அந்நாவலைப் பார்க்கலாம் என்றார். இந்தியாவுக்கு மேற்குலகுக்குமான இணக்கும் பிணக்குமாகவும் அந்நாவலைப்பார்க்கலாம் என்றார்

தொடர்ந்த விவாதத்தில் ஆயுர்வேதம் அலோபதி ஆகிய முறைமைகளைப்பற்றிய விவாதமாக மரபு நவீனம் ஆகியவற்றுக்கிடையே இருக்கும் ஒத்திசைவு மற்றும் முரண்பாடு பற்றி பேசப்பட்டது.

புனைவின் திருப்புமுனைத் தருணங்கள் – கிருஷ்ணன்

ராஜகோபாலன் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலைப்பற்றிப் பேசினார். சிங்காரத்தின் சாகசச் சித்தரிப்பு, மொழிநடை அங்கதம் ஆகியவற்றைப்பற்றி குறிப்பிட்டார்.

விவாதத்தில் உலகளாவிப் பரந்துள்ள தமிழ்ச்சமூகம் மிகக்குறைவாகவே உலகம் பற்றி எழுதியிருக்கிறது, காரணம் வெளிநோக்கிப்பார்க்கும் பார்வையே இல்லாததுதான் என குறிப்பிடப்பட்டது.

எம் கோபாலகிருஷ்ணனுடன் நேர்முகம்

எம்.கோபாலகிருஷ்ணனுடன் அவருடைய புனைவுலகம் அவர் எழுதிவரும் படைப்புகளைப்பற்றி வாசகர்கள் கேள்வி கேட்க அவர் பதிலிறுத்தார். மிகப்பெரிய சமூக இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ள தமிழில் அனேகமாக அதைப்பற்றி பெரிதாக ஏதும் எழுதப்படவில்லை என்று சொல்லப்பட்டது. அப்படி எழுதும் எண்ணம் அப்போது உருவாவதாக கோபாலகிருஷ்ணன் சொன்னார்

முடிவில் சிங்கப்பூர் இலக்கியச்சூழலைப் பற்றியும் அங்கு தமிழ் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப்பற்றியும் பேரா அருண் மகிழ்நன் பேசினார்.

ஆரோக்கியநிகேதனம் – சௌந்தர் பேசுகிறார்

மாலை ஐந்துமணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதன்பின் புத்தரின் பல் வைக்கப்பட்டிருக்கும் ஆலயத்திற்குச் சென்றோம். சீனக் கடைகள் வழியாக நடந்து சிங்கப்பூரின் சிங்கச் சிலை அமைந்திருக்கும் சதுக்கத்திற்கு வந்தோம். இரவு ஒன்பது மணிவரை அங்கே சுற்றிக்கொண்டிருந்தோம். ஒரு கோஷ்டி ஷாப்பிங் என்று தேக்கோ சென்றது. இன்னொரு கோஷ்டி வேறு இடங்களில் சுற்றுவதற்காகச் சென்றது.

பேரா அருண் மகிழ்நன் அவர்களுடன்

படங்கள் வெங்கடாச்சலம் ஏகாம்பரம்

மேலும்படங்கள்

முந்தைய கட்டுரைசயாம் – பர்மா ரயில் பாதை
அடுத்த கட்டுரைகோப்ரா