சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்

வணக்கம்,

சிங்கப்பூர் இலக்கிய மரபைப்பற்றி தேசியக்கல்விக்கழகத்தின் இணைப்பேராசிரியர் சிவகுமாரன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு செய்தியைச் சொன்னார். சிங்கப்பூரின் தொடக்ககாலத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான முல்லைவாணன் கரையிலிருந்து மூட்டைகளை தோளில் தூக்கிக் கொண்டு பலகை வழியாக நடந்து சென்று படகுகளில் ஏற்றும் பணியைச் செய்துவந்தார். அவர் சொன்னபோதே ஒரு சின்ன திடுக்கிடலுடன் அந்தக் காட்சியை நான் என் கற்பனையில் பார்த்தேன்.

மக்களுடன் மக்களாக இருந்து எழுதுவதாக எல்லாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கடுமையான உடலுழைப்பு என்பது அறிவுசார்ந்த செயல்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது. உடலூக்கம் அறிவுச்செயல்பாடுக்கு மிக இன்றியமையாத ஒன்று. எட்டு மணி நேரம் சுமை தூக்கிக் களைத்த ஒருவரால் அதன் பிறகு தசைகளைத் தளர்த்தி ஓய்வெடுக்க மட்டுமே முடியும். மூளையை இயக்கும் உயிர் விசை மிகவும் குறைந்திருக்கும். அதற்குப்பின்னரும் அவர் எழுதினாரென்றால் ‘போரும் அமைதியும்’ எழுதிய டால்ஸ்டாய் பிரபுவின் உயிர்ஆற்றலுக்கு நிகரான ஆற்றல் அவருக்கு இருந்தது என்றுதான் அர்த்தம். மகா காவியங்களை எழுதும் முனிவர்களுக்கு நிகரான தவவல்லமையைக் கொண்டது அச்செயல். இந்த மேடையில் அந்த முன்னோடிக்காக எழுத்தாளன் என்ற முறையில், அவருடைய வழி வந்தவன் என்ற முறையில் தலை வணங்குகிறேன்.

அன்றைய படைப்பாளிகள் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை ஒரு உரைச்சித்திரமாகவே பேராசிரியர் சிவகுமாரன் சொன்னார். புத்தகங்களைத் தாங்களே அச்சிட்டு அவற்றை சைக்கிளில் கட்டிக் கொண்டு தொழில் சார்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் வீடுகளுக்குச் சென்று விற்றிருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் பேருந்து தரிக்கும் இடங்களில் நின்று கூவி விற்றிருக்கிறார்கள். பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புத்தகங்களுடன் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி நன்கொடை பெற்று கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். அப்போது கூட அதிகபட்சம் முன்னூறு பிரதிகள் விற்றிருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்கள் கணிசமான பணத்தை இழந்திருப்பார்கள். அவர்கள் செய்த தொழிலை வைத்து பார்த்தால் அந்தப்பணம் என்பது எளிய தொகை அல்ல, அவர்களின் ரத்தம்..

Paranan singapore1

 

பிறிதொரு எழுத்தாளரைப்பற்றி கேள்விப்பட்டேன். பரணன் என்ற பெயரில் அவர் கவிதைகள் எழுதினார். பிறப்பால் மலையாளி. தென்கிழக்குஆசியநாடுகளின் பெரிய விருதான ஆசியான் விருது பெற்ற கவிஞராயினும் ஒரு உணவகத்தில் தட்டு கழுவி மேசை துடைக்கும் பணியைத்தான் இறுதி வரை செய்து வந்தார். அந்த உணவகத்திலேயே உயிர் துறந்தார்.  அந்த சென்ற காலப் படைப்பாளியைப்பற்றி எண்ணியபோது ஒன்றிலிருந்து ஒன்றாக பல வாயில்கள் எனக்குத் திறந்து கொண்டன. முதற்கேள்வி பிறப்பால் மலையாளியாகிய அவர் ஏன் தன்னை தமிழ் அடையாளத்திற்குள் செலுத்திக் கொண்டார்? இரண்டாவதாக பரணன் என்ற பெயரை ஏன் அதற்கு அவர் தேர்ந்தெடுத்தார்?

பரணன் தளைதட்டாது மரபுக்கவிதையின் அனைத்து வடிவங்களையும் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர் என்றார்கள். அப்படியென்றால் தனக்கு அரிதாகக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியை அவர் அதற்காகச் செலவிட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒருவருக்கு கல்வி நிலையங்களின் முறையான கல்வி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்கள் அமைந்திருக்க மாட்டார்கள். நூலகங்கள் கூட அரிதாகவே கிடைத்திருக்கும் அன்றைய சூழலில். சுயமுயற்சியால் தேடி அலைந்து அந்த தேர்ச்சியை அவர் அடைந்தார். அவரை செலுத்திய அந்த விசை எது?

அக்கேள்விக்கான விடைகளைக் கண்டுகொண்டோமென்றால் சிங்கைத் தமிழிலக்கியத்தின் விதை திறந்து முதல் முளை வெளிவந்த தருணத்தை தொட்டு அறிந்துவிடலாம். பரணர் சங்க இலக்கியத்தை சார்ந்த ஒரு பெயர். கபிலரும் பரணரும் அவர்களின் கவிதை சார்ந்த ஒரு குறிப்பிட்ட அடையாளம் உடையவர்கள். அவர்கள் எழுதிய நிலப்பகுதியில் பெரும்பகுதி குறிஞ்சி. அதாவது இன்றைய கேரளப்பெருநிலம். சங்க இலக்கியத்திற்குள் புகும் மலையாளிகளுக்கு மிக உவப்பான கவிஞர்களாக இருப்பவர்கள் இவர்கள் இருவருமே. காடு நாவலில் கபிலரின் சொல் வழியாகவே நான் பிறந்து வளர்ந்த கேரள எல்லையோரக்காடுகளைக் நான் காட்டியிருக்கிறேன். வறனுறல் அறியாச்சோலை என்று கபிலர் சொல்லும் அந்த நிலமே நான் பிறந்து வளர்ந்து வாழ்வது.

நெடுந்தொலைவில் இங்கே இந்த நெரிசலான துறைமுக நகரத்தில் வாழ்ந்த அந்த முன்னோடிக் கவிஞன் பரணன் என்ற பெயரைத் தனக்கு சூட்டிக் கொள்ளும் போது சங்க காலத்து குறிஞ்சி நிலத்திற்கு மட்டும் செல்லவில்லை, தான் விட்டு வந்த கேரள நிலத்திற்கும் தான் செல்கிறான். மலையாளத்திற்கும் தமிழிற்கும் பொதுவான ஓர் இறந்த காலத்திற்கு செல்கிறான். அங்கு தன்னுடைய அடையாளத்தை அவன் கண்டடைகிறான். அதை மரபுசார்ந்த கவிதைகள் வழியாக நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து நிறுவுகிறான்.

கவிஞர் பரணனிடம் எவரும் புதுக்கவிதையைப்பற்றிப் பேசியிருக்க முடியாது. அது அவருக்கு மிகப்பெரிய ஒவ்வாமையைத்தான் அளித்திருக்கும். ஏனெனில் அவர் நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்திற்கு சென்று கொண்டிருந்தார். தான் வாழ்ந்த மண்ணைத் தோண்டித் தோண்டி மூதாதையர் வாழ்ந்த நிலத்திற்கு செல்வதைப்போல. அங்கொரு முதுமக்கள் தாழியைக் கண்டடைந்து அதற்குள் உறங்கிக் கிடக்கும் எலும்பு ஒன்றில் தன் மூதாதையைக் கண்டடைவது போல.

இங்கே சிங்கப்பூர் மண்ணில் நின்று கொண்டு ஒருவன் சங்க இலக்கியத்தில் தனக்கொரு முன் தொடர்ச்சியைக் கண்டு கொள்வதில் இருக்கும் கனவும் ஏக்கமும் தனிமையும் என்னை உலுக்குகின்றன. அந்த ஆதி உள எழுச்சியின் முன் மிகச்சிறியவனாக மாறுகிறேன். அனைத்தையும் இழந்தாலும் இப்படி ஒரு ரகசியச் சுரங்கம் மூலம் தன் மூதாதையரைச் சென்று அடையும் வழி ஒரு திறந்து கிடக்கிறதே என்று எண்ணி மனநிறைவு கொள்கிறேன். நான் செய்து கொண்டிருப்பதும் அதுவல்லவா என்று எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

பிறிதொரு முன்னோடியைப்பற்றி எனக்குச் சொன்னார்கள். அ.நா. மொய்தீன் என்று அவருக்குப்பெயர். ஒற்றைக்காசுகளாகவே பணம் திரட்டி உமறுப்புலவர் பெயரில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஓர் எளிய வாயிற்காவலராகவே தன் வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். இன்றும் இந்த சிங்கப்பூர் மண்ணில் தமிழர்களின் அடையாளமாக நின்றிருக்கும் உமறுப்புலவர் மையத்தின் தொடக்கப்புள்ளி அவர். தனது வேரை அவர் எட்டயபுரத்தில் பள்ளி வாசலுக்குப்பின்னால் அமைந்துள்ள கபரிடத்தில் துயிலும் தமிழின் பெருங்கவிஞரிடம் கண்டு கொண்டது, பரணன் தன் வேரைக் கண்டு கொண்டதற்கு நிகரானது.

சிங்கப்பூர் இலக்கியத்தின் தொடக்கத்தை இவ்வாறு வகுக்கலாம். அந்நிய நாடொன்றில் தன் வேர்களை கண்டு கொள்ளுதல் அதை சமகாலத்தில் வைத்து வரையறுத்துக் கொள்ளுதல்.

எந்த ஒரு பண்பாட்டிலும் இலக்கியம் அடையாளத்தை தேடுவதாகவும் வரையறுப்பதாகவுமே தொடங்கும். பலசமயம் இனம் ,வட்டாரம், குருதியுறவுகள் சார்ந்து ஒருவகையான குறுக்கல் போக்காகவே அது அமையும். சென்றகாலத்திற்குள் ஊடுருவி தனக்கென ஒரு தொப்புள் கொடித் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்ளவே அது எத்தனிக்கும். அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில் இலக்கியம் என்பதே தன்னளவில் மனிதகுலம் தனக்கு உணர்வு ரீதியான ஒரு தொடர்ச்சியை கட்டமைத்துக் கொள்ளும் பொருட்டு கண்டுபிடித்ததே. தொல்பழங்காலத்தில் தனது மூதாதையரின் கதைகளை தன் வாரிசுகளுக்குச் சொல்லி ஒரு தலைமுறைத் தொடர்ச்சியை உருவாக்கிய ஆதிக் கதைசொல்லிதான் அனைத்து இலக்கியத்திற்கும் தொடக்கம்.

உலகம் முழுக்க சொல்லப்படும் கதைகள் பெரும்பாலும் குலவரிசைக்கதைகளாக இருப்பதைப்பார்க்கலாம். மகாபாரதத்தில் கணிசமான பகுதிகள் குலவரிசைப்பட்டியல்களாகவே அமைந்துள்ளன. அனைத்து வகைகளிலும் அறுபடாத ஒரு தொடர்ச்சியை மொழிக்குள் நீடிக்க வைப்பது இலக்கியத்தின் கடமை. வேரிலிருந்து இலைநுனி வரைக்கும் செல்லும் ஒரு ரசஓட்டமே இலக்கியம் என்று கூட சொல்லலாம். தொன்மையான இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் கூட  பழங்காலத்திலிருந்து ஒரு வேர்த்தொடர்ச்சி எடுத்துக் கொண்டு ஒரு அடையாளத்தை சமைக்கும் தன்மை அவற்றுக்கு இருப்பதைக்காணலாம்.

உதாரணமாக, சங்கப்பாடல்களை எடுத்துக் கொண்டால் நமக்குக் கிடைக்கும் மிகத் தொன்மையான பாடல்களிலேயே

வடாது பனி படு நெடுவரை வடக்கும்

குடாது குமரியின் குடக்கும்

என ஒரு இந்திய அடையாளத்தை அது உருவாக்கிக் கொள்வதை பார்க்கலாம். அதற்குள் மன்னர்கள் ,குடிகள், நிலம் என பல அடையாளங்களை அவை கட்டமைத்துக் கொள்கின்றன. இந்த அடையாளங்களுக்கு தங்களுக்கு முந்தைய பழங்குடி மரபிலிருந்து ஆதாரங்களை உருவாக்கிக் கொள்கின்றன.

நவீன இலக்கியமும் அவ்வாறுதான். தமிழில் நவீன இலக்கியத்தின் தொடக்கம் என்பது பாரதி. அதை அவன் எழுதப்புகும்போதே ’யாமறிந்த புலவரிலே கம்பரைபோல வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல்” என்றொரு பட்டியலை முன்வைக்கிறான். அவர்களின் தொடர்ச்சியாக தன்னைப்பற்றி சொல்லும் போது ’சொல்புதிது பொருள்புதிது நவகவிதை’ என்று தன் கவிதையை அடையாளப்படுத்துகிறான்.

மலேசியாவின் மூக்கு நுனியாக இருந்த இந்த மண்ணில் பல்வேறு வழிகளூடாக இங்கு வந்து சேர்ந்து கடும் உழைப்பினூடாக வாழ்க்கையை உருவாக்கிக் கொண்ட நமது முன்னோடிகள் தங்களுக்கு ஒரு வேர்த்தொடர்ச்சியை தமிழகத்தில் கண்டடைந்தனர். அவற்றை இங்கு நட்டு தங்கள் குருதியை ஊற்றி வளர்த்து ஓர் அடையாளத்தை உருவாக்கினர்.

ஆரம்பகாலச் சிங்கப்பூர் கதைகள் அனைத்திலுமே இந்த அடையாள உருவாக்கம் ஒரு பெரும்பங்கை வகிப்பதை நான் பார்க்கிறேன். இங்கு அவர்கள் வரும்போது அவர்களின் இன அடையாளமும் இந்திய தேசமென்ற அடையாளமும் வலுவாக இல்லை. மாறாக மொழியே தூலமான அடையாளமாக இருந்தது. ஆகவே தங்களை மொழி சார்ந்து அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே மொழிசார்ந்த அடையாள அரசியலை தமிழகத்தில் முன்னெடுத்த திராவிட இயக்கத்துடன் அவர்களுக்கான தொடர்பு உருவாகியது.

ma
மா இளங்கண்ணன் [புகைப்படம் :நன்றி தேசிய கலைக்கழகம் சிங்கப்பூர்]

 

சிங்கை படைப்புகளை கால வரிசைப்படி அடுக்கும்போது மிக எளிதாக தமிழ்நாட்டில் உருவாகி வந்த தமிழியயக்கக் கொள்கைகளுடன் சிங்கப்பூர் எழுத்துகள் தங்களை இணைத்துக் கொள்வதைக் கண்டேன். அங்கிருந்த தமிழறிஞர்களையும் தமிழியக்க அரசியல்வாதிகளையும் இங்கு அழைத்துவந்து அவர்களிடம் இந்த வழிகாட்டுதலைப் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அது ஓர் அடையாளம் பெற்றுக்கொள்ளுதலே ஒழிய அவர்களின் தேசிய உருவகத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளுதல் அல்ல. அப்படி நிகழவுமில்லை. இங்குள்ள மூன்றுபட்டைகொண்ட பண்பாட்டுத் தேசியத்துடன்தான் சிங்கைத் தமிழர்கள் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அதற்குள் தங்கள் தனித்தன்மையை வரையறுக்கவே தமிழியக்கத்தின் தொடர்பு பயன்பட்டது என நினைக்கிறேன்.

இவ்வாறு வேர் தேடிச்சென்று அடையாளத்தை நிறுவி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் படைப்புகளுக்கு சில அழகியல் தனியியியல்புகள் உண்டு.

ஒன்று: நான் ஏற்கனவே சொன்னது போல பழமை நாட்டம். அவர்களின் கனவுகளும் ஏக்கங்களும் இறந்தகாலம் நோக்கியவை. ஆகவே அவர்கள் பழைமையை சார்ந்தே சிந்திப்பார்கள். முற்போக்கான கொள்கைகளுக்குக்கூட தொல்பழங்காலத்தில் இருந்த ஒரு பொற்காலத்திலிருந்து சான்று தேடுவார்கள்.

இரண்டு: ஒரு பண்பாட்டை சில அடிப்படைக்கூறுகளைக் கொண்டு சுருக்கும் ஒரு முயற்சி. அதாவது பண்பாட்டின் உள்முரண்பாடுகளையோ உள்விவாதங்களையோ கணக்கில் கொள்ளாமல் சில அடிப்படைப் புள்ளிகளை மட்டும் கண்டடைந்து அவையே தமிழ்ப் பண்பாடு என்றும் தமிழ் மரபு என்றும் நிரூபிக்கும் ஒரு குறுக்கல் போக்கு. (Reductionism).

மூன்று: இவ்வடையாளங்களை வலியுறுத்திக் கூறும் நோக்கம் கொண்டமையால் உருவாகிவரும் ஒருவகையான முழக்க குரல் , அறைகூவும் பாணி, பிரச்சாரம் செய்யும் போக்கு. ஆகவே இப்படைப்புகள் அனைத்துமே ஒருவகையான மேடைமுழக்கத்தன்மை கொண்டுள்ளன.

மரபுக்கவிதை இயல்பாகவே பழமையான மொழியைக் கொண்டது. அம்மனநிலையிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும்போது இன்றைய யதார்த்த மொழிக்குள் வருவதற்கு இவர்களுக்கு சங்கடம் இருக்கிறது. யதார்த்த மொழியில் கதைகளை எழுதும்போது கூட ஆசிரியர்கூற்றாக வரும் மொழியானது அணிகளும் அலங்காரங்களும் கொண்டதாகவும், மிகையுணர்ச்சி சார்ந்ததாகவும் உள்ளது. தமிழ்ப்பண்பாடு என்று சிலவற்றை அவர்கள் உருவகித்துக் கொள்கிறார்கள். அன்றைய திராவிட இயக்கம் முன்வைத்த காதல்,மானம்,வீரம் ஆகியவை. இங்கு சிங்கப்பூரில் அவற்றை முன்வைக்கும்போது கூடுதலாக தமிழ் ஒழுக்கம் என்பதையும் பேசுகிறார்கள்என்று தோன்றுகிறது. காரணம் இங்கு அவர்கள் கண்ட சீன, மலேய ஒழுக்கவியல் சற்று மாறுபட்டது.

இந்த ஆரம்ப காலக் கதைகள் அனைத்தையுமே அழகியல் ரீதியாக ‘பிரச்சார இலக்கியம்’ என்று வரையறுத்துவிட முடியும் பிரச்சார இலக்கியத்தின் அடிப்படைப்பண்பு என்னவென்றால் அப்பிரச்சார நோக்கத்துக்கு அப்பால் அவற்றால் செயல்பட முடியாது என்பதுதான். ஒரு பிரச்சார இலக்கியத்தை நோக்கி ‘ஆம், நீ சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று ஒருவாசகன் சொல்லிவிடுவானென்றால் அதன்பிறகு அந்தப்பிரச்சார இலக்கியத்துக்கு அவனிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. பிரச்சாரம் செய்யப்பட்ட விஷயங்கள் சமூகத்தில் பரவலாக ஏற்கப்படுமென்றால் அப்படைப்புகள் வரலாற்றுத் தடயங்களாக மாறி பின்னால் நின்றுவிடும்.

கலைப்படைப்புகள் அப்படி அல்ல. அவை முடிவிலாது முளைக்கக்கூடியவை. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வெவ்வேறு அர்த்தங்களை அளித்தபடி தன்னைப் புதுப்பித்துக் கொள்பவை. அவை ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் தெரிந்த தளத்தில் நிற்பவை மட்டும் அல்ல. முழுக்க முழுக்கப் பேசிய பிறகும் கூட பேசப்படாத ஒரு பக்கம் அவற்றில் எப்போதுமே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் கலைப்படைப்புகள் கலைஞனின் சிந்தனையும் செயலூக்கமும் வெளிப்படுபவை அல்ல. அவனுடைய ஆழ்மன வெளிப்ப்பாடுகள் அவை. மொழி வழியாக வெளிப்படும் கனவுகள் அவை.

பிரச்சார இலக்கியத்தில் எவை பிரச்சார நோக்கத்தை கடந்து செல்கின்றனவோ அவை மட்டுமே கலைபடைப்புகளாக எஞ்சுகின்றன. அவ்வாறான படைப்புகள் மேலே சொன்னதுபோல அடையாளத்தேடலும் அடையாள வலியுறுத்தலும் ஓங்கி நிற்கும் காலத்தில் மிகக் குறைவாக இருக்கும். அது இயல்பானதே. இன்று அந்தக்காலகட்டத்தின் ஆழ்மனவிசையை நாம் ஏற்றுக் கொள்ளும் போதே அவற்றை விமர்சன பூர்வமாக அணுகி அவற்றில் எது கலை எது பிரச்சாரம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தப் பார்வையை தெளிவாக உருவாக்கிக் கொள்ளவில்லையென்றால் நாம் கலையின் தொடர்ச்சியை இழந்துவிடுவோம்.

வரலாறென ஒரு படைப்பை மதிப்பிடுவது வேறு ,கலை ரீதியாக மதிப்பிடுவது வேறு. இங்கு உருவான தமிழ் அடையாளக் கண்டடைதலும் அது உருவாக்கிய இலக்கிய அலைகளும் என் வணக்கத்துக்குரியவை. இலக்கிய வரலாற்றில் தவிர்க்கக்கூடாதவை. அதேசமயம் அவற்றில் ஓரிரு படைப்புகளையே கலை ரீதியான் பெறுமானம் உள்ளவை, இன்றும் நம்முடன் பேசுபவை என்று சொல்வேன். இங்கு அவற்றை சார்ந்த விமர்சனத்தை நான் முன் வைக்க விரும்பவில்லை. அத்தகைய ஒரு கறாரான விமர்சனப்பார்வையை இங்குள்ள இன்றைய தலைமுறையினர் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிறிதொரு தருணத்தில் ஒவ்வொரு படைப்பாக எடுத்து இதை நான் ஏன் சொல்கிறேன் என்று என்னால் விளக்க முடியுமென நினைக்கிறேன்.

அடையாள உருவகத்தின் அடுத்த கட்டமாக அமைவது சீர்திருத்தப் பார்வை. இயல்பான பரிணாம வளர்ச்சி அது. ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை உகந்தது என நீங்கள் பண்பாட்டுக்கு முன்னால் வைத்தீர்கள் என்றால் அந்த அடையாளத்துக்கு ஒவ்வாத அனைத்தையும் மாற்றி அமைக்க முயலுவீர்கள். அதுவே சீர்திருத்த நோக்கு. சீர்திருத்தநோக்கு எப்போதும் எதிர்கால நோக்கு கொண்டதாக அமையவேண்டுமென்பதில்லை. எதிர்காலத்தை இறந்தகால மாதிரியில் அமைக்கவிரும்புபவர்கள் திரும்பிப்பார்த்து சீர்திருத்தம்பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

இந்தியாவில் மூன்று வகையான சீர்திருத்தப் பேரியக்கங்கள் நவீன காலகட்டத்தில் ஆரம்பித்தன. ஒன்று மதச்சீர்திருத்த இயக்கம். தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம், ராஜாராம் மோகன்ராய் உருவாக்கிய பிரம்ம சமாஜம், விவேகானந்தரின் பேரியக்கம் என தொடங்கி முதல் காந்திய இயக்கம் வரை ஒரு வரலாற்றுத்தொடர்ச்சி அது. அறிஞர்களும் ஞானிகளும் இந்து மதத்தின் முரண்பாடுகளையும் மூட நம்பிக்கைகளையும் சீர்திருத்த முயன்றார்கள். அவ்வலை இந்தியா முழுக்க பரவவே கேரளத்தின் நாராயணகுரு போன்று தமிழகத்தில் வள்ளலார் போன்று வெவ்வேறு மதச் சீர்திருத்தவாதிகள் உருவாயினர்.

 

MG_1657-1-273x300
கண்ணபிரான்

 

இதன் விளைவாக உருவான சமூக சீர்திருத்த அலை இரண்டாவது. மரபார்ந்த சமூக கட்டுமானத்தை உடைத்து மறுஆக்கம் செய்து நவீன காலகட்டத்துக்கு கொண்டு வரும் பெருமுயற்சி இது. மகாத்மா புலேயிலிருந்து கேரளத்தின் அய்யங்காளி, ஈ.வெ.ரா வரைக்கும் ஒரு பெரும் பட்டியலை நாம் போட முடியும். சாதிய ஒழிப்பு, பெண்விடுதலை, பண்ணையடிமை மனநிலை அகற்றல் போன்ற தளங்களில் பெரும்பணி நிகழ்ந்தது.

மூன்றாவதாக பண்பாட்டுச் சீர்திருத்தம்.சென்றகாலப்பண்பாட்டிலிருந்து சாராம்சமான பகுதிகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து அவற்றை முன்னிறுத்தி தேவையற்ற பகுதிகளை களைவதற்கான ஒரு முயற்சி அது. இந்தியசிந்தனை மரபு இவ்வியக்கத்தால்தான் மீட்டு எடுக்கப்பட்டது. ஈஸ்வர சந்திர வித்யாசாகரிலிருந்து சுப்ரமணிய பாரதி வரை பல்லாயிரம் அறிஞர்களை நாம் வரிசையாகச் சொல்லமுடியும்

தமிழில் பண்பாட்டு சீர்திருத்தத்திற்குள் மூன்று சரடுகள் உண்டு.

ஒன்று : மொழிச் சீர்திருத்தம் இதைத் தனித்தமிழ் இயக்கம் என்று சொல்வோம். தமிழின் பிற மொழிக்கலப்பைக் களைவது, தமிழைச் செம்மைப்படுத்தி ஒரு தகுதர அமைப்பை உருவாக்குவது ஆகியவை நம்முடைய முதன்மை இலக்காக இருந்தது. பரிதிமாற்கலைஞர் மறைமலையடிகள் தொடங்கி மொழிச் சீர்திருத்தவாதிகளின் பட்டியல் நமக்குத் தெரியும்

இரண்டு: தமிழிசை இயக்கம். சங்ககாலத்திலிருந்து உருவாகி வளர்ந்து ,சிலப்பதிகார காலத்தில் குறிப்பிடப்பட்டு, ஆழ்வார்களின் வழியாக பண்ணிசையாக நீடித்த தமிழிசை இந்தியாவின் பிற இசை மரபுகளுடன் கலந்து ஒட்டுமொத்தமாக தென்னிந்திய இசையென்று இன்று அறியப்படுகிறது. கர்நாடக சங்கீதம் என்று அதற்கு இன்னொரு பெயர் உண்டு. இந்த இசையின் தமிழ்வேர்களை முன்னிறுத்துவதும் அதன் தமிழ்த்தனித்தன்மையை மீட்டு எடுப்பதுமே தமிழிசை இயக்கம். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அதன் தொடக்கப்புள்ளி

மூன்றாவது: தமிழ்ப் பதிப்பியக்கம். தமிழின் அனைத்துத் தொன்மையான நூல்களையும் பிழையற அச்சிட்டு தமிழுக்கு கொண்டு வருவதும், அதற்கு சமகால உரை எழுதுவதும் இவ்வியக்கத்தின் நோக்கம். உ.வே.சாமிநாதய்யர், சௌரிப்பெருமாள் அரங்கன், சி.வை தாமோதரம்பிள்ளை என இதன் முன்னோடிகள் பலர்

சிங்கப்பூர் இலக்கியத்தின் இரண்டாம் காலகட்டம் என்பது சீர்திருத்தநோக்கை முன்வைப்பது என்று நூல்களின் வழியாகத் தெரிகிறது. ஆனால் பொதுவாகக் கவனிக்கும்போது மேலே சொல்லப்பட்ட சீர்திருத்த அலைகளில் மதச்சீர்திருத்த இயக்கம் மிகக்குறைவாகவே இங்கு நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. இங்குள்ள படைப்புகளில் அதன் தடையங்கள் இல்லை. வெளியே என்ன நிகழ்ந்தது என்பதை எவராவது ஆய்வுநோக்கில் சொல்லவேண்டும். சைவ வைணவ வழிபாடுகள், சிறுதெய்வ வழிபாடுகள் அதன் பழைமையான வடிவில் அப்படியே இங்கே நீடிக்கின்றன. வள்ளலார் இயக்கத்தின் செல்வாக்கு சிங்கையில் பெரிய அளவு இருந்ததாகத் தெரியவில்லை.

சொல்லப்போனால் இங்குள்ள சைவ இயக்கங்களைப்பார்க்கையில் சைவமதம் பலவகையான சீர்திருத்த இயக்கங்களால் மறுவார்ப்பு செய்யப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய கண்மூடித்தனமான உணர்வுநிலைகள், ஆசாரங்கள் இங்கே நீடிப்பதைக் காணமுடிகிறது. பிற மதங்களுடனும் இந்துமதத்தின் பிற வழிகளுடனும் அனைத்து வாயில்களையும் மூடிக்கொண்ட சில அமைப்புகளைக்கூட நான் பார்த்தேன்.

சமூக சீர்திருத்த அலை மிகுந்த வீச்சுடன் பல புனைகதைகளில் வெளிப்பட்டுள்ளது. இளங்கண்ணன், புதுமைதாசன் போன்றவர்களின் கதைகளைப் பார்க்கையில் தமிழகத்தின் சமூக சீர்திருத்த இயக்கங்களின் கருத்துகள் நேரடியாக வெளிப்படுவதைக் காண்கிறேன். சமூக உறவுகளின் இறுக்கங்கள், பழைமையான ஆசாரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளை மறு அமைப்பு செய்யும் விழைவு வெளிப்படுகிறது. திராவிட இயக்கத்தின் சமூக சீர்திருத்தக் கருத்துகள் எழுபதுகள் வரைக்கும் கூட இங்குள்ள இலக்கியத்தில் ஓங்கி ஒலிப்பதை என்னால் காண முடிகிறது.

பண்பாட்டுச் சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் தமிழிசை இயக்கத்தின் செல்வாக்கு பெருமளவு தென்படவில்லை என்னும் மனப்பதிவே எனக்குள்ளது. தமிழ் பதிப்பியக்கம் சார்ந்தும் இங்கு போதுமான அளவுக்கு ஊக்கம் தென்படவில்லை. காரணம் சிங்கப்பூரின் தொன்மை என்று ஒன்று இல்லை. ஆயினும் கூட சிங்கப்பூர் நாட்டுப்புற பாடல்களைத் தொகுப்பதோ சிங்கப்பூர் வாய்மொழி மரபுகளைத் தொகுப்பதோ குறைவாகவே நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூரில் முன்னரே அச்சிடப்பட்டு மறைந்து போன நூல்களை அச்சுக்குக் கொண்டு வருவதுகூட ஓர் இயக்கமாக இங்கு நிகழவில்லை என்று தான் தோன்றுகிறது. இவ்வகையில் மறைந்த நண்பர் ஈழநாதன் சிலமுயற்சிகளை மேற்கொண்டதை நான் அறிவேன். இன்னமும் கூட அதில் பெரும்பணி ஆற்றப்படலாம்.[பேரா அருண் மகிழ்நன் முன்னெடுப்பில் இப்போது சிங்கை இலக்கியங்களை வலையேற்றும் முயற்சி நிகழ்ந்துவருகிறது]

ஆனால் தமிழ்ப் பண்பாட்டுச் சீர்திருத்த அலையின் மூன்று கூறுகளில் ஒன்றாகிய தனித்தமிழ் இயக்கம் ஒரு வலுவான செல்வாக்கை இங்கு செலுத்தியிருப்பதை இங்கு காணமுடிகிறது. மொழித் தூய்மைக்கான குரல், மொழி பேணப்படுவதற்கான குரல் தொடர்ச்சியாக இங்கு ஒலித்து வருகிறது. இன்றும்கூட சிங்கையில் இலக்கியச்சூழலில் ஓங்கி ஒலிக்கும் முக்கியமான கருத்துத் தரப்பாக இது உள்ளது.

இந்த இரண்டாவது காலகட்டம், அதாவது சீர்த்திருத்த அலை ஏறத்தாழ எண்பதுகள் வரைக்கும் நீடிப்பதை பார்க்க முடிகிறது. பொதுவான என் நோக்கில் இளங்கண்ணன், இராம.கண்ணபிரான் போன்றவர்களை உதாரணமாக காட்டுவேன். ஒருவகையில் இதுவும் ஒரு பிரச்சார தன்மை கொண்ட எழுத்துக்களை உருவாக்கும் காலகட்டம் தான். சமூக சீர்திருத்தமும் மொழிச் சீர்திருத்தமும் அறிவார்ந்தவை. ஆகவே ஆசிரியனின் அறிவிலிருந்து எழக்கூடியவை .வாசகனை மாணவனாகக் கண்டு அவனுக்கு அறிவுறுத்தும் தோரணை கொண்டவை. இன்றும் கூட இம்மரபின் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் கவிதைகளிலும் கதைகளிலும் வாச்கனை நோக்கி எழுத்தாளனோ கவிஞனோ ஒர் உயரத்தில் நின்று கொண்டு பேசுவதை நாம் பார்க்கலாம். ஆகவே இவற்றுக்கு ஒரு மேடைப்பேச்சின் தோரணையும் வந்து விடுகிறது.

சமூக அவலங்களை நோக்கிய அக்கறையும் அவற்றை மாற்றியமைக்க வேண்டுமென்ற தீவிரமும் இப்படைப்புகளில் வெளிப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கான சமூக முக்கியத்துவம் மறுக்க முடியாதது. இவை எழுப்பும் குரல்கள் தவிர்க்கப்படமுடியாதவை ஆனால் அதே சமயம் இவை தீர்வுகளையும் முன் வைக்கின்றன. அத்தீர்வுகளை யார் உருவாக்கினார்கள் என்று பார்த்தால் தத்துவ வாதிகளோ அரசியல்வாதிகளோதான். அவர்களுக்கு பின்னால் சென்று அவர்களின் பிரச்சாரகர்களாகவே எழுத்தாளன் செயல்படுகிறான்.

அவ்வாறு பின்செல்வது முதன்மை எழுத்தாளனின் இயல்பல்ல. அவனுடைய ஆய்வுக்கூடம் வேறு. அங்குள்ள ஆய்வு முறைமைகளும் வேறு. ஒர் எழுத்தாளன் காந்தியாலோ ஈ.வெ.ராவாலோ, கார்ல் மார்க்ஸாலோ செலுத்தப்படுவான் என்றால் அவன் பிரச்சாரகன். தன் உள்ளுணர்வால் மட்டும் செலுத்தப்படுவான் என்றால் மட்டும்தான் அவன் கலைஞன். சீர்திருத்தப் படைப்புக்ளை மதிப்பிடும்போது இந்த அளவுகோலை பயன்படுத்த மீண்டும் வலியுறுத்துகிறேன். அந்த தெரிவில் எவை கலைப்படைப்புகள் என்பதை விமர்சன நோக்குடன் விவாதித்து தொகுத்துக்கொள்ளும் சூழலிலேயே மேலும் கலைப்படைப்புக்கள் எழமுடியும். சிங்கப்பூருக்கு இன்று தேவை என நான் நினைப்பதே இந்த வரலாற்றுப் பொறுப்புள்ள அதேசமயம் கறாரான விமர்சன நோக்குதான்.

1992-ல் சுந்தர ராமசாமி இல்லத்தில் நா. கோவிந்தசாமியின் ‘தேடி’ என்ற சிறுகதைத் தொகுதி இருப்பதை பார்த்தேன். அதைப்பற்றிக் கேட்டபோது “என் நண்பர். சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் முதற்புள்ளி இவரே” என்று சு.ரா சொன்னார். அன்று நான் எனக்கான விடைகளை அளிக்கும் எழுத்தாளர்களை தேடி தாகத்துடன் ஓடிக்கொண்டிருந்ததனால் அந்நூலை படிக்கவில்லை. மீண்டும் எட்டாண்டுகள் கழித்து நான் மருதம் என்ற பெயரில் ஒரு இணைய தளம் தொடங்கினேன். அதற்குரிய தகுதர எழுத்துக்கள் விலை கொடுத்து வாங்குவதற்கான பண வசதி அன்று இருக்கவில்லை. அதை நா.கோவிந்தசாமியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்க நண்பர் கோபால் ராஜாராம் அறிவுறுத்தியதன் பேரில் நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அப்போதுதான் தேடி என்ற தொகுப்பை  படித்து பார்த்தேன்.

img-425145800-0001

 

சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியென்று அந்நூலை சு.ராவைப்போல நானும் சொல்வேன். அதுவரைக்கும் எந்த நவீன இலக்கியமும் இல்லையா என்றால் நவீன காலகட்டம் தொடங்கிவிட்டிருந்தது, நவீனப்படைப்புகள் வரவில்லை என்றே என் பதில் அமையும். நவீன உரைநடை, நவீன இலக்கியவடிவங்கள் வந்துவிட்டிருந்தன. ஆனால் நவீன இலக்கியம் என்பது மேலும் சில பண்புக்கூறுகள் கொண்டது. அதைத்தொடங்கிவைத்தவர் நா.கோவிந்தசாமி

அவை இவை.

ஒன்று: சமூகத்தையும் பண்பாடையும் தனி மனிதனாக எதிர் நிலையிலிருந்து நின்று பார்க்கும் பார்வை. சமூகப் பண்பாட்டுக்கட்டமைப்பின் ஒரு பகுதியாக தன்னை வைத்துக் கொள்வதற்கு மாறாக விலகி நின்று அதை விமர்சனத்துடன் நோக்கும் பார்வை அது. நவீன இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று என அந்த விலகலைச் சொல்வேன். அதை நாம் புதுமைப்பித்தனிடம் பார்க்கலாம். அவர் சமகாலத்து பொதுச்சிந்தனையின் அலைகள் எதிலும் அடித்துச்செல்லப்பட்டவர் அல்ல. அரசியலிலோ தத்துவத்திலோ அவருக்கு வழிகாட்டிகள் இல்லை. அவர் தனி அலை

இரண்டு: அடையாளங்களை சூடிக் கொள்வதற்கு பதிலாக அடையாளங்களை அவிழ்த்துப்பார்க்கும் பார்வை. இரக்கமற்ற ஒரு சுயவிமர்சனம் அது. தன்னை வெவ்வேறு வகையில் தொகுத்துக்கொள்வது அல்ல, தன்னை உடைத்து உடைத்து விரிப்பது அது

மூன்று: மூளை சார்ந்து எழுதாமல் தன்னுடைய ஆழ்மனத்தவிப்புகளையும் கண்டடைதல்களையும் ஏதோ ஒரு வகையில் மொழியில் முன்வைக்கக்கூடிய ஒரு எத்தனம். இம்மூன்று அம்சங்களும் கூடும்போது நவீன இலக்கியத்தின் தனித்தன்மை அமைகிறது.

ஏன்? நவீன இலக்கியவாசிப்பு என்பது அரங்கவாசிப்பு அல்ல. கூட்டுவாசிப்பு அல்ல. அது அந்தரங்க வாசிப்பு. எழுத்தாளனுடன் வாசகன் மிகுந்த தனிமையில் உரையாடுவது அது. ஆகவேதான் சபைகளில் முன்வைக்கப்படும்போது நவீன இலக்கியப்படைப்புகள் வெளிறியதுபோலத் தெரிகின்றன. மேடையில் முழங்கும் படைப்புகள் நவீன இலக்கியத்தின் இயல்புகள் இல்லாமல் இருக்கின்றன. தமிழில் இன்றுகூட இவ்விரு இலக்கிய வகைபாடுகளும் மிகத்தெளிவாக வெவ்வேறாகவே உள்லன

இக்காரணத்தால் ஒரு பொதுவெளியில் நின்று வாசிக்கும் வாசகன் நவீன இலக்கியத்தை புரியாதது என்று நிராகரிப்பான். அதேசமயம் அந்தரங்கமாக வாசிப்பவன் மிக எளிதாக அதை நெருங்கிச் செல்வான். ஒரு காதல்முத்தம் போல மிக அந்தரங்கமாக நிகழ்வது இலக்கியத்தின் தொடர்புறுத்தல். எனவே ஓர் இலக்கியப்படைப்பு சொல்ல வருவது என்ன என்று மேடையில் விளக்கச்சொன்னால் அது தயங்கி நின்றுவிடும். இலக்கியப்படைப்பு பிரச்சாரம் செய்யாது. வாசகனை தனது மாணவனாக அல்ல சகஹிருதயனாக கருதுவது அது. சஹ- ஹிருதயன் என்றால் இணையான இதயம் கொண்டவன். எழுத்தாளனின் நேர்மறுபக்கம். எழுத்தாளனை நிரப்புபவன் அவன்

வாசகன் அங்கு புனை கதையை தெரிந்து கொள்பவனல்ல. தானும் சேர்ந்து கற்பனைசெய்து விரிவாக்கம் செய்பவன். ஆகவே சகபடைப்பாளி அவன். அவனுடைய தகுதியை முன்னரே உணர்ந்த ஆசிரியன் அவனிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் தான் சொல்வான். அவனே மேற்கொண்டு கற்பனை செய்ய விட்டுவிடுவான். வாசகனே சிந்திக்க அனுமதிப்பான். அதற்குத் தடையாக நிற்கும் எதுவும் தன்னுடைய படைப்பில் இருக்கக்கூடாது என்று நினைப்பான். ஆகவே அவனுடைய படைப்பு அமைதி கொண்டதாக இருக்கும். இடைவெளிகள் நிறைந்ததாக இருக்கும். முடிந்தபின்னரும் புதிதாக தொடங்குவது போல் இருக்கும். சொல்வதைவிட உணர்த்துவது அதிகமாக இருக்கும். உட்குறிப்புகள் நிறைந்ததாக இருக்கும்.

அத்தகைய ஒரு இலக்கியத்துக்கான தொடக்கம் என்று நா.கோவிந்தசாமி அவர்களைச் சொல்வேன் அவர்களுக்கு நான் இரு கடிதங்களை போட்டிருக்கிறேன். நேரில் சந்திக்க அமையவில்லை. சிங்கப்பூர் இலக்கியத்தில் கோவிந்தசாமி அவர்கள் ஒரு ஆழமான பாதிப்பை உருவாக்கினார் என்பார்கள். எனது நண்பர் ரெ.பாண்டியன் கோவிந்தசாமியைப்பற்றி நிறையவே சொன்னார். அலைக்கழிப்பும் கொந்தளிப்பும் நிறைந்த ஒரு ஆளுமையாக இருந்தார். ஒரு மருத்துவ சிகிச்சைக்கு உடன்பட்டிருந்தார் என்றால் இன்றும் உயிர் வாழ்ந்திருக்க கூடும்.

பரணன் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களிடமிருந்து கோவிந்தசாமிக்கு உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். கோவிந்தசாமி பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தார். உடலுழைப்பு சார்ந்த தொழில் செய்தவரல்ல. உலகியல் சார்ந்த கவலைகள் அவருக்கில்லை. அவருடையது அடுத்த கட்ட பயணம், அடுத்த கட்ட துயரம்

ஆக, சிங்கப்பூர் நவீன இலக்கியத்தில் இன்று நுழையும் ஒர் எழுத்தாளனுக்கு முன்னால் மூன்று பாதைகள் உள்ளன. இன்னமும் முதற்காலகட்டத்திலேயே நின்றபடி அடையாளத்தேடலை தமிழகத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சென்றடையும் அந்த தமிழடையாளம் தமிழகத்தின் ஊழல், சாதியரசியல், போலித்தனமான மேடைக்கூச்சல்கள், பரஸ்பரப்பாராட்டுகளின் சம்பிரதாயம் ஆகியவற்றால் ஆனது.

இன்னும் இரண்டாவது காலகட்டத்தையே திரும்ப எழுதிக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சமூகம் இன்றிருக்கும் நிலை அவர்களுக்குத்தெரியாது. கலையின் இயல்பும் பொறுப்பும் என்ன என்று தெரியாது. இங்கே வந்தபின் நான் ‘முதிர்கன்னி’ களுக்காகவும் விதவைகளுக்காகவும் இரங்கி எழுதப்பட்ட பல கவிதைகளையும் கதைகளையும் வாசித்தேன். இந்தியச்சூழலிலேயே அந்தக் குரலுக்குரிய காலகட்டம் மாறி ஒரு தலைமுறை ஆகிறது. சிங்கப்பூரில் சொல்லவே வேண்டாம்

மூன்றாம் காலகட்டத்துக்கு வந்து விட்ட எழுத்தாளர்கள் ஓரிருவரே இருக்கிறார்கள். மூன்றாவது காலகட்டத்தை வந்தடைய அவர்கள் நிறைய வாசித்தாகவேண்டும். இலக்கியமரபையும் இலக்கியத்தின் வடிவத்தையும் கற்று அறியவேண்டும். அதன் வழியாக தனக்குமட்டுமே உரிய மொழியையும் உணர்வுநிலையையும் வந்தடையவேண்டும்.

மூன்றாவது காலகட்டத்தின் அலைக்கழிப்பைப்பற்றி முதலில் சொன்னேன். வாசகனை சஹிருதயனாக பார்க்கும் பண்பு காரணமாகவே அவ்வாறு அல்லாத பொதுவாசகர்களுக்கு அவை பூடகத்தன்மை கொண்ட படைப்புகளாகவே உள்ளன. அவை வாசகன் கோருவதை பேசுபவை அல்ல, ஆசிரியன் உணர்வதைப் பேசுபவை. ஏற்கனவே பேசிக்கொண்டிருப்பவற்றை முன்வைப்பவை அல்ல, அப்போது உருவாகி வருபவை.

புரியாமை என்னும் சொல்லால் நவீன இலக்கியத்தை எளிதில் நிராகரித்துவிட முடியும். அப்படி நிராகரிக்க வேண்டுமென்றால் உலக அரங்கில் தனித்து நிற்கும் பல படைப்புகளை நீங்கள் நிராகரிக்க வேண்டியிருக்கும். பயிற்சியில்லாதவனுக்கு புரியக்கூடிய படைப்பென்பது உலகத்தில் எதுவும் இருக்காது .அப்படி ஒர் அறிவியல்பிரிவு இருக்க முடியுமா என்ன? சிங்கப்பூரின் இலக்கியப்பேச்சுக்களில் தமிழ் இலக்கியச்சூழலில் பரவலாக இன்று மறைந்துவிட்ட ‘புரியாமை பற்றிய மனக்குறை’ அதிகமாக ஒலிப்பதனால் இதைச் சொல்கிறேன்.

இலக்கியப்படைப்பு வாசகனிடம் கோருவது இலக்கிய வடிவங்களிலான ஒரு பயிற்சியை .கூர்ந்த வாசிப்பை. சுயமாக ஓரளவு கற்பனை செய்யும்தன்மையை. தானே சிந்திக்கும் பயிற்சியை. ஆகவே வாசகன் தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வாசகன் தன்னை அப்படைப்பை நோக்கி செலுத்த வேண்டியிருக்கிறது. ஒருபோதும் படைப்பு வாசகனை நோக்கி இறங்கி வரக்கூடாது. வாசகன் படைப்பை நோக்கிச் செல்ல வேண்டும். ஆகவே நல்லபடைப்பு வாசகனை வளர வைக்கிறது. வாசகனை நோக்கி வரும் படைப்புகள் வாசகனை அதே மந்த கதியில் அவனை அமர வைக்கும். எப்போதும் அவனை வளர்க்காது.

நவீன இலக்கியத்தில் அறிமுகமும் அவற்றை எழுதவேண்டும் என்னும் ஆர்வமும் கொண்ட ஓர் எழுத்தாளர் வட்டத்தை சிங்கப்பூரில் இன்று பார்க்கிறேன். ஓர் உதாரணத்துக்காக ஜெயந்திசங்கர், சித்ரா ரமேஷ், மாதங்கி, ஷானவாஸ், எம்.கே.குமார், கனகலதா,அழகுநிலா, சித்துராஜ் பொன்ராஜ் என சிலரைக் குறிப்பிடுவேன். அவர்களின் படைப்புக்களை நவீன இலக்கியவிமர்சனத்தின் அழகியல்நோக்கில் மதிப்பிடவேண்டியிருக்கிறது.

M._K._Menon
எம்.கே.மேனன்,[விலாசினி]

 

கடைசியாக, சிங்கப்பூர் இலக்கியத்தின் எதிர்காலச் செல்நெறியாக எதைச் சொல்வேன்? ஓர் இலக்கியவிமர்சகனாக இலக்கியம் எப்படிச்செல்லவேண்டுமென நான் சொல்லமுடியாது. ஒரு படைப்பாளியாக நான் வழிகாட்டவும்கூடாது. ஆனால் ஒரு வாசகனாக நான் எதிர்பார்க்கலாம். அதையே இங்கே சொல்லவிரும்புகிறேன்.

சிங்கப்பூர் நவீனஇலக்கியத்தின் பொதுவான இயல்பு என நான் நினைப்பது அதன் அன்றாடத்தன்மை. சமகால வாழ்க்கையின் ஒரு சிறிய துளியையே அவை பெரும்பாலும் சித்தரிக்கின்றன. கண்டிப்பாக அதுவே நவீன இலக்கியத்தின் முதல் தேவை. ஆனால் இலக்கியம் அதையும் கடந்துசென்றுகொண்டே இருக்கும். நா.கோவிந்தசாமியில் தொடங்குகிறது என நான் சொன்ன அந்த எழுத்துமுறைக்கு நவீனத்துவம் என்று பெயர். அது அன்றாட வாழ்க்கையின்மீது மானுட உள்ளத்தைக் கொண்டுசென்று படியவைக்கிறது. ஆசிரியனின் ஆழ்மனம் அந்தத்தருணத்தை தொட்டு வளர்த்து விரித்துச்செல்கிறது. தனிமனிதநோக்கின் காலகட்டமே நவீனத்துவம் என்பது

இன்றைய காலகட்டம் நவீனத்துவத்தைக் கடந்துள்ளது. இன்று தனிமனிதன் என்பதே ஒருவகையான வரலாற்றுப் பண்பாட்டு உருவகம் மட்டுமே என்னும் கருத்து இன்று உருவாகிவந்துள்ளது. அந்த தனிமனிதனை வரலாறாக பண்பாட்டுப்பெருக்காக உடைத்து விரித்துப் பார்க்கும் காலகட்டம். அந்த வரலாற்றுநோக்குதான் இன்றைய புனைகதையின் முக்கியமான தேவை. வாழ்க்கையை அந்தந்த தருணங்களில் மட்டுமே வைத்துப்பார்க்கும் காலகட்டம் கடந்துவிட்டது

உதாரணத்துக்கு, ஒரு சீனப்பெண் இங்கு பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். கையில் ஒரு கறுப்புக்குழந்தை இருக்கிறது. அதை எழுத்தாளன் பார்க்கிறான். இதுதான் கரு என வைத்துக்கொள்வோம். அந்தக்காட்சியில் இருந்து ஒரு சமூக சீர்திருத்தக் கருத்துக்கு, ஒரு பண்பாட்டுக்கருத்துக்குச் சென்றுசேர்வது பழைய எழுத்துமுறை. அதை ஒரு தனிமனித நோக்கில் அணுகி அந்தப்பெண்ணின் அத்தருணத்தை நுட்பமாக விரிப்பது நவீனத்துவ எழுத்துமுறை. அந்தப்பெண் அங்கே நிற்பது ஒரு வரலாற்றுத்தருணம். ஈராயிரம் ஆண்டுகளாக தென்னாசியக் கடற்கரைகளில் வணிகம்செய்யவந்த சீன வணிகர்குழுக்களில் இருந்து வந்தவள் அவள். முந்நூறாண்டுகளாக ஐரோப்பிய வணிகப்படையெடுப்பால் அலைக்கழிக்கப்பட்டவள். இரு உலகப்போர்களைக் கண்டவள். மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது இங்கே வந்தவள். மாறியசூழலில் ஒரு இந்தியனை மணந்திருக்கலாம். அவன் ஈராயிரம் வருடப் பண்பாடு கொண்டவன். ராஜராஜசோழனும் திருமலைநாயக்கனும் ஆண்ட மண்ணிலிருந்து வந்தவன். இந்த வரலாற்றுச்சூழல் உருவாக்கிய பண்பாட்டுக்கொந்தளிப்பு அவளை கட்டமைத்துள்ளது. இவையனைத்தையும் கொண்டு அவளை புரிந்துகொள்ள முயல்வதே இன்றைய எழுத்துமுறை.

அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட முல்லைவாணனின் காலகட்டம், அடையாளத்தை வரையறுத்து அதனடிப்படையில் சீர்திருத்தம்பேசிய இளங்கண்ணனின் காலகட்டம், அடையாளத்தை தன் ஆழ்மனதைக்கொண்டு பரிசீலித்த கோவிந்தசாமியின் காலகட்டம் என மூன்று காலகட்டங்கள் கடந்துசென்றுவிட்டன. இன்று அடையாளம் உருவாகி வந்த மொத்த வரலாற்றுப் பண்பாட்டுச்சூழலையும் கருத்தில்கொண்டு ஒவ்வொரு வாழ்க்கைத்தருணத்தையும் பார்க்கும் மூன்றாவது காலகட்டம். அன்றாடவாழ்க்கையின் தருணங்களில் நிகழும் எளிய திருப்பங்கள், உணர்வெழுச்சிகள், கண்டடைதல்களை இனிமேலும் நாம் எழுதிக்கொண்டிருக்கமுடியாது. எழுத்தாளனின் பொறுப்பும் சவாலும் பலமடங்காக விரிந்துள்ளது இன்று.

எம்.கே.மேனோன் மலையாளத்தில் விலாசினி என்னும் பேரில் எழுதிய அவகாசிகள் [உரிமையாளர்கள்,வாரிசுகள்] என்னும் மலையாளநாவலை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கிட்டத்தட்ட 4000 பக்கம் நீளமுள்ள இந்நாவல் சமீபகாலம் வரை இந்தியாவின் மிகநீளமான நாவலாக கருதப்பட்டது. விலாசினி சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றியவர். அவகாசிகள் உலகப்போர் முடிந்த கொந்தளிப்பான சூழலில் தொடங்கி மலேசியாவும் சிங்கப்பூரும் பிரிந்த காலகட்டத்தை கடந்து நவீன வரலாறு வரை வந்து நிற்கிறது. அந்தப்பின்னணியில் பலநூறு தனிமனிதர்களின் அந்தரங்கக்கொந்தளிப்புகளை வைத்து ஆராய்கிறது. சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து இன்றுவரை எழுதப்பட்ட எந்த ஒருநாவலையும் ஒரு பேச்சுக்குக்கூட அவகாசிகளின் அருகே வைத்து ஒப்பிட்டுப்பார்க்கமுடியாது. அதை தமிழில் மொழியாக்கம்செய்து வெளியிடலாம். சிங்கப்பூர் அரசு சார் அமைப்புகள் உதவுமென்றால் நான் ஏற்பாடு செய்யமுடியும். சிங்கப்பூரில் இன்று எழுதுபவர்களுக்கான மிகப்பெரிய வழிகாட்டுதலாக, அறைகூவலாக அது அமையும்.

இன்றைய சூழலில் சிங்கப்பூர் இலக்கியத்தின் முன் உள்ள சவால் என்பது இதுதான், அடையாளங்களைக் கடந்து அடையாளங்களை ஆக்கி விளையாடும் வரலாற்று விசைகளை, பண்பாட்டு உட்குறிப்புகளைப்பற்றியும் பேசுவது. மானுட உணர்வுகளை அந்த பெரும் பகைப்புலத்தில் வைத்துப்பார்ப்பது. இந்நாட்டின் இச்சமூகதின் உள்ளத்தையும் ஆளுமையையும் வடிவமைத்துள்ள அனைத்து பண்பாட்டுக்கூறுகளையும் கண்டடைவது,அதன் உளவியல்கூறுகளை கட்டமைத்திருக்கும் ஆழ்படிமங்களை மீட்டு எடுப்பது. இனி எழுதவேண்டியது தனித்தனியாக தமிழ், சீன,மலேய வாழ்க்கையை அல்ல சிங்கப்பூர்வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக. அது நிகழுமென எதிர்பார்க்கிறேன்.

நன்றி

 

சிங்கப்பூர் உமறுப்புலவர் மையத்தில் 15-9-2016 அன்று நிகழந்த சிங்கப்பூர் இலக்கிய போக்குகள் குறித்த கருத்தரங்கில் பேசிய உரையின் வரிவடிவம்

 

சிங்கப்பூர் உமறுப்புலவர் பள்ளியின் வரலாறு

 

சிங்கப்பூர் நூல்களைதரவிறக்கி வாசிப்பதற்கான நூலகத் திட்டம்

 

முந்தைய கட்டுரைபாலாவின் காட்சிமொழி
அடுத்த கட்டுரைஇந்திரா பார்த்தசாரதியின் பெயர்