பிரேமையின் நிலம்

unnamed

 

 

காங்க்டாக்கில் இருந்து அதிகாலை ஆறுமணிக்கு சிலிகுரிக்குக் கிளம்பினோம். அங்கிருந்து பூட்டான் செல்வதாக திட்டம். 2012 மே மாதம் 22 ஆம் தேதி. வடகிழக்கு மாவட்டங்களைப் பார்ப்பதற்காக நானும் நண்பர்களும் கிளம்பி வந்திருந்தோம். சிலிகுரி வடகிழக்கை இந்தியாவுடன் இணைக்கும் புட்டிக்கழுத்துப் பகுதி. அங்கிருந்துதான் பூட்டானுக்கும் செல்லவேண்டும்.

 

சிலிகுரிவரை அரிய காட்சி என்பது சமவெளியில் உள்ள தேயிலைத்தோட்டங்கள். அஸாமிய தேயிலை ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. நாம் சோவியத் ருஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கத்தொடங்கியபோது பதிலுக்கு தேயிலையை கொடுக்க ஆரம்பித்தோம். ஒப்பந்தப்படி அவர்கள் அதை மறுக்கமுடியாது. வேண்டாம் என்று சொல்வதற்கான உரிமையும் அன்று அம்மக்களுக்கு இல்லை.

 

ஆகவே நம்மவர்கள் தளிருடன் இலைகளையும் அரைத்துசேர்க்கத் தொடங்கினர். இந்திய டீயின் சர்வதேச மதிப்பு தரைமட்டமாக ஆயிற்று. இன்றும் இந்தியத்தேயிலை நன்மதிப்பை மீளப்பெறவில்லை. இந்திய நிறுவனங்கள்தான் இலங்கை தேயிலைத் தோட்டங்களை நடத்துகின்றன. இலங்கை தேயிலை உலகப்புகழுடன் உள்ளது.

 

சிலிகுரியிலிருந்து பூட்டானுக்குச் செல்ல ஒரு டாட்டா சுமோ வண்டியை வாடகைக்குப் பிடித்தோம். அதில் நெருக்கியடித்து அமர்ந்தோம். நெருக்கம் செலவைக்குறைப்பது மட்டும் அல்ல குளிருக்கும் நல்லது.

 

மலையிறங்கியதும் இளவெயில். இருபக்கமும் வளமான மண். மழைபெய்திருந்தமையால் பச்சை போர்த்தியிருந்த்து.தீஸ்தாவின் கரையோரமாகவே சென்றோம். பூட்டானில் நுழையும் வாசல் புயூச்சோலிங் என்ற ஊர்.  இது வங்காளத்தில் இருக்கிறது. குப்பை மலிந்த ஊர். ஆனால் நல்ல சாலையை எல்லைக்காவல்படை போட்டிருக்கிறது.

 

பூட்டான் நாட்டு நுழைவாயிலில் பூட்டானியக்  கட்டிடப்பாணியில் அமைந்த ஓர் அழகிய தோரணமுகப்பு உள்ளது. நாங்கள் செல்லும்போது தாமதமாகிவிட்ட்து. மதிய உணவு இடைவேளை. ஆகவே நாங்களும் குப்பை மண்டிய தெருவழியாகச் சென்று வங்க ஓட்டல் ஒன்றைக் கண்டுபிடித்து சாப்பிட்டுவிட்டு ஒன்றரை மணிக்கு உள்ளே சென்றோம்.

 

பூட்டானில் நுழைய விசா வேண்டாம். ஆனால் அனுமதிச்சீட்டு வேண்டும். அதற்கு இந்திய பாஸ்போர்ட் அல்லது இந்திய வாக்காளர் அடையாளச்சீட்டு இருக்க வேண்டும் .  பூட்டானின் அரசு அலுவலர்கள் அனைவரும் பூட்டானியமுறைப்படி கிமோனோ போன்ற கருஞ்சிவப்பு ஆடைகளைத்தான் அணிந்திருந்தனர். போருக்குச் செல்வதுபோன்ற தோற்றம். பெண்களின் உடை இன்னும் கொஞ்சம் நளினமானது

 

எங்களுக்கு அனுமதி அளித்த ஊழியையின் பெயர் பேமா. பிரேமா என்ற பெயரின் பூட்டானிய வடிவம் என்று கொஞ்சம் கழித்தே புரிந்தது. அழகான மங்கோலிய முகம். கொஞ்சம் தாய்லாந்து சாயல். செக்கச்சிவந்த முகம். பிரேமை வழியும் நாணம் நிறைந்த சிரிப்பு. பூட்டானிய மொழியில் ஏதோ சொன்னாள். மீண்டும் சொன்னபோதுதான் அது ஆங்கிலம் என்றும் வெல்கம் டு பூட்டான் என்றும் சொல்கிறாள் என்பதே புரிந்தது.

 

அனுமதிகள் பெற்று மாலைமூன்றரை மணிக்கு இரு வண்டிகளில் பூட்டானுக்குள் நுழைந்தோம். ஒரு சிறு எல்லைதான் நமக்கும் பூட்டானுக்கும். இப்பால் குப்பைக்குவியல்கள். எல்லைக்கு அப்பால் பூட்டான் மிகமிகச் சுத்தமான நாடாக இருந்தது. அற்புதமான சாலைகள்.

 

பூட்டானில் மலை ஏற ஏற மீண்டும் குளிர் நெஞ்சை அடைக்க ஆரம்பித்தது. வழியில் ஒரு ராணுவச் சிற்றுண்டிச்சாலையில் சாம்பார்வடையும் பருப்புவடையும் கிடைத்த்து. அங்கே பொறுப்பில் இருந்தவர் காயங்குளத்தைச் சேர்ந்த ஒரு மலையாளி. ஏஷியாநெட் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

இரவு ஒன்பது மணிக்கு பூட்டானுக்குள் நுழைந்தோம். பூட்டானின் தெருக்களும் கட்டிடங்களும் அவர்களுக்கே உரிய தனித்தன்மையான கட்டிடக்கலை கொண்டவை. எல்லா கட்டிடங்களிலும் பௌத்த மடாலயங்களுக்குரிய செந்நிறச் சாய்வுக்கூரையும் முனைவளைவும் இருந்தன. சட்டென்று ஓர் அன்னிய நாட்டுக்குள் நுழைந்த நிறைவு கிடைத்த்து.

 

திம்புவில் ராவன் ஓட்டலில் எங்களுக்காக அறை முன்பதிவுசெய்திருந்தோம். மூன்று நட்சத்திர விடுதி. அது சுற்றுலாப்பருவமல்ல என்பதனால் வாடகை மிகக்குறைவு.மொத்த விடுதியுமே பெண்களால்தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. வெயிட்டர்கள் சமையல்காரர்கள் எல்லாருமே பெண்கள். அதுதான் இங்கே வழக்கம்.

 

உற்சாகமான அழகிய இரு இளம்பெண்கள் பணிவுடன் வரவேற்று அறையைச் சரிசெய்துகொடுத்தார்கள். ஒருத்திக்கு டிப்ஸ் கொடுக்கும்போது பெயரென்ன என்று கேட்டேன். பேமா. இன்னொருத்தி? அவள் நாணத்துடன் பேமா என்றாள். பூட்டானில் எவர் பெயருடனும் நான்கு அலகுகள் இருக்கும். பெயர், தந்தைபெயர், குடும்பப்பெயர், பழங்குடிப்பெயர், ஊர்ப்பெயர். பெயரைக்கேட்டாலே அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிடலாம்

காலை ஐந்து மணிக்கு எழுந்து திம்புவின்  நகரவீதிகள் வழியாக காலைநடை சென்றோம். அங்கே அரசுவேலைகள், கல்விநிலையங்களுக்குப் பாரம்பரிய உடை கட்டாயமென்பதனால் ஊரே விசித்திரமாக இருந்தது. படங்களில் பார்த்த திபெத்துக்கு வந்துசேர்ந்தது போல. பெரும்பாலும் அழகிய புதிய பெரிய கட்டிடங்கள். வறுமை இருப்பதாகத் தெரியவில்லை. சுத்தமாகக் கூட்டப்பட்ட தெருக்கள். நல்ல குளிர் இருந்தது.

ஒரு டீக்கடைக்குள் நுழைந்து டீ குடித்தோம். சிக்கிம் பூட்டான் போன்ற நாடுகளின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா டீக்கடைகளும் மதுக்கடைகளும்கூட என்பதே. எல்லாவகையான மதுக்கோப்பைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெரிய நன்னீர்மீன்கருவாடு பொரித்து வைக்கப்பட்டிருந்தது. கறுப்பு டீ இங்கெல்லாம் மிக அருமையாக இருக்கும். பால் என்றால் யாக்கின் பால் . அது நல்ல மிருகம்தான். ஆனாலும் கறுப்பு டீ நமக்கு நல்லது. டீக்கடை நடத்துவதெல்லாமே பெண்கள். அந்த டீக்கடை உரிமையாளரின் பெயர், ஆம், பேமாவேதான்.

 

நடுவே ஒரு சந்தை இருந்தது. அதைச்சுற்றிச் சென்றவழி முழுக்கப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தார்கள். பாரம்பரிய உடையில் பெண்கள் விசுக் விசுக் என்று சென்றார்கள். ஒரு பெண்ணிடம் இந்த அதிகாலையிலேயே பள்ளியா என்று விசாரித்தோம். அதீத வெட்கத்துடன் ஆமாம் என்று சொல்லிச்சென்றாள்.  பெயர் கேட்கவில்லை. பேமாதான், வேறென்ன இருக்கப்போகிறது?

 

பள்ளிக்கூடமும் பௌத்தமடாலயம்போலவே இருந்தது. பிலுபிலுவென பிள்ளைகள். ஒருவனிடம் பெயர் கேட்டோம். கிம் சுங் என தொடங்கி ஒரு சொல்வரிசையைச் சொல்லி இடுப்புவரை வளைத்து வணங்கி சிறுமணிக்கண்களால் சிரித்தான். அவனை கொஞ்சி விட்டு திரும்பிப்பார்த்தால் பெயரைச் சொல்வதற்காக ஒரு நாற்பது பூட்டானியக்குழந்தைகள் நின்றிருந்தன. எல்லா முகங்களிலும் பரவசச்சிரிப்பு

 

பள்ளிக்கு அப்பால் ஒரு பெரிய கோயில். அது சோர்ட்டன் நினைவகம் என்று அழைக்கப்படுகிறது. பூட்டானின் மூன்றாம் மன்னர் டிக்மே டோர்ஜி வான்சக் [ 1928 –1972]அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டது அது. அவர் வாழ்ந்த போதே தன் நினைவுச்சின்னத்தை புத்தரின் மனமாக உருவகித்து ஓர் ஆலயம் எழுப்பவேண்டுமெனக் கோரியிருந்தாராம். இது திபெத்திய மரபுப்படி கட்டபட்டு  டங்சே ரிம்போச்சே அவர்களால் பிரதிஷ்டைசெய்யப்பட்டது.

 

1974ல் கட்டப்பட்ட இது பல முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. நடுவில் பூட்டான் பாணியிலான உயரமான கோபுரம். சுற்றும் வட்டப்பாதை. அதை நோக்கிச்செல்லும் வழிக்கு இருபக்கமும் பிரார்த்தனைக்கான பெரிய அலங்கார உருளைகள் கொண்ட  கட்டிடங்கள் .

 

காலைநேரத்திலேயே அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து கூப்பிய கைகளுடன் வலம் வந்துகொன்டிருந்தனர். சிறிய உடுக்கை போல ஒன்றைச் சுழற்றியபடி பௌத பிட்சுக்கள் சுற்றிவந்தார்கள். பல வகையான உடைகள் கொண்டவர்கள். ரத்தச்சிவப்பு ஆடையணிந்தவர்கள் திபெத்திய லாமாக்கள் என்று தோன்றியது. சுட்ட வாழையிலை போலச் சுருக்கம் பரவிய மஞ்சள்முகங்கள்.

 

பிரார்த்தனை உருளைகள் அருகே மிக வயதான ஒரு லாமா அமர்ந்திருந்தார். அவற்றை மும்முறை சுற்றும்படி கண்கள் இடுங்க சிரித்துக்கொண்டே சொன்னார். புத்தரின் தர்மசக்கரத்தின் ஒரு வடிவம் அது. புத்தர் அதை முதலில் சுழலச்செய்தாராம். அதைப் பல்லாயிரம் கரங்கள் விடாது சுற்றவைக்கவேண்டும் என்பது மரபு. அவற்றில் பொன்னிற எழுத்துக்களில் மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் செந்நிறமான உருளைகள். அவற்றுக்குரிய போதிசத்வர் அல்லது லாமாவின் பெயரோ உருவமோ பின்பக்கம் இருக்கும். அந்த உருளையைச் சுற்றினால் அந்த குருநாதரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

திரும்ப அறைக்கு வரும் வழியில் கலைமணி என்பவரை சந்தித்தோம். விசித்திரமான மனிதர். கார்கிலுக்குப் போய் அங்கிருந்து பூட்டான் வந்திருக்கிறார். ஓய்வுபெற்ற பள்ளி ஆய்வாளார். முழுநேர வேலையே இந்தியாவைச் சுற்றி வருவது. கறுப்பான குள்ளமான மணிக்குரல்கொண்ட மனிதர்.அவர் கையில் இருந்த மஞ்சள்பையில் தமிழ் இருப்பதைப்பார்த்துத்தான் அவரிடம் பேசப்போனோம். அதை அந்த நோக்கத்துக்காகவே வைத்திருப்பதாகச் சொன்னார். தனியாக வேறு விடுதியில் அறை போட்டிருந்தார்.

 

எங்களுடன் எங்கள் விடுதிக்கும் வந்தார். தான் சென்ற ஊர்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். “இந்தியாவுக்குள்ள போய்ட்டே இருப்பேன் சார். ஒரு நாலு மாசம் ஊர்ல இருந்தா அபூர்வம். பென்ஷன் வருது. வைஃப் இல்ல. பசங்கள்லாம் நல்லா இருக்காங்க. அப்றம் என்னத்துக்கு ஊர்ல? இந்தியா அப்டியே விரிஞ்சு பரந்து கெடக்கு. எல்லாமே நம்ம மண்ணுன்னு நெனைச்சா பாக்கப்பாக்க சலிக்காது. எவ்ளவு எடம்? லடாக் போனீங்களா சார்?”

 

“இல்லை” என்றேன். ”போகணும் சார். லடாக் நம்ம ஊர்லயே அற்புதமான எடம். எல்லா எடங்களிலயும் ஜனங்க என்ன ஒரு அன்பா இருக்காங்க. இந்தியாவப்பாக்க ஆரம்பிச்சா இந்த தமிழன் மலையாளிங்கிற உணர்வெல்லாம் போயிரும். சாதிப்புத்தி போயிரும். சாமியப்பாக்கிற மாதிரி சார்”

 

அன்றுமுழுக்க கலைமணி எங்களுடன் இருந்தார். “சினிமா பாத்தீங்களா சார்?” என்றார். “இல்லை, நாங்க ஊரப்பாக்க வந்திருக்கோம்” என்றேன். “சினிமாத்தியேட்டருக்குப் போகணும் சார். அங்க என்ன படம் ஓடுது, எப்டிப்பட்ட ஆளுங்க வந்து பாக்கிறாங்க, எல்லாம் ரொம்ப முக்கியம்”

 

அங்கே அனேகமாக எல்லாமே நேப்பாளி மொழிப் படங்கள். பூட்டான் மொழியிலும் படங்கள் உண்டு. அரசு மானியத்தில் எடுக்கப்படுபவை. பொதுவாக இந்திப்படங்களை அப்படியே திரும்ப எடுத்துவிடுகிறார்கள். மிகமிகச்சிறிய பட்ஜெட். அனேகமாக ஐம்பதுலட்சம் ரூபாயில் ஒரு படம் எடுக்கப்பட்டுவிடும். இந்திப்படங்கள் இங்கே ஓடுவதுண்டு, ஆனால் அதேகதையில் ஒரு மஞ்சளினக் கதாநாயகி நடித்து மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறார்ர்கள்.

 

“நேத்து அந்தப்படத்தைப் பாத்தேன் சார்” என்றார் கலைமணி. “என்ன படம்?” என்றேன். ஏதோ ஒரு ஒலியை எழுப்பி “ஷாரூக் நடிச்ச படம்தான் சார். திரும்ப எடுத்திருக்காங்க” நான் வேடிக்கையாக “கதாநாயகிபெயர் பேமாவா?” என்றேன். “ஆமா சார்” என்றார் கலைமணி. ”அவங்க ராணிபேரும் பேமாதான்”.

 

பூட்டான் அரசரின் பெயர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சக். இளைஞர். 2011ல் தான் மணமுடித்திருந்தார். மனைவியின்பெயர்  ஜெட்சன் பேமா. பூட்டானுக்கு ராணுவமில்லை. இந்தியா அதன் பாதுகாப்புநாடு. முக்கியமான வருமானமே சுற்றுலாவும் லாட்டரியும்தான்.

 

மறுநாள் கலைமணி மறைந்துவிட்டார். அவர் அப்படி மறைவார் என நான் எண்ணியிருந்தேன். அபாரமான தனிமை கொண்ட மனிதர். ஓர் எல்லைக்குமேல் எவரையும் அனுமதிக்கமாட்டார். பெரிய பயணிகளெல்லாம் அப்படி தனிமையானவர்கள்தான்

 

பூட்டானில் நாலைந்துநாள் இருந்தோம். அங்குள்ள பௌத்த மடாலயங்களைப் பார்த்தோம். குன்றின் உச்சியிலிருக்கும் புலிக்கூடு மடாலயம் இந்தியாவின் அற்புதங்களில் ஒன்று. அங்குள்ள அருங்காட்சியகம் பூட்டானின் வாழ்க்கையை முழுமையாகக்காட்டுவது. அங்கும் ஒரு பேமா வழிகாட்டியாக வந்தார். இன்னொரு பேமா சிறுசட்டை அணிந்து அம்மாவின் கைப்பிடித்து இடுங்கிய கண்களால் எங்களை நோக்கிச் சிரித்தபடி வந்தாள்.

 

திரும்ப ப்யூச்சேலிங்க்குக்கு காரில் வந்துகொண்டிருந்தோம். ஒருகிழவி அழகிய குழந்தையுடன் வந்துகொண்டிருந்தாள். சுட்டபழம் போல சுருங்கிய முகம். இடுங்கியகண்களுக்குள் நீர்த்துளிவிழிகள். பெரிய பற்களுடன்கூடிய சிரிப்பு. “பூட்டானைவிட்டுக் கெளம்பறோம். பேமாகிட்ட பை சொல்லிருவோம்” என்று காரை நிறுத்தினோம்

 

குழந்தையின் பெயர் பேமாவேதான். கிழவிக்கு தன் பேத்தி புகைப்படம் எடுக்கப்படுவதில் பெருமகிழ்ச்சி. பூட்டானை நிறைத்துள்ள பிரேமையிடம் விடைபெற்றுக்கொண்டோம். அந்த வெள்ளிமலைகள், மகத்தான மலைச்சரிவுகள், பொன்னொளிர் முகில்கள், மௌனம் தேங்கிய வெளிநிலங்கள் பிரேமையை மட்டுமே அளிக்கக்கூடியவை.

 

 

 

 

முந்தைய கட்டுரைஇந்திரா பார்த்தசாரதியின் பெயர்
அடுத்த கட்டுரைசிங்கை சந்திப்பு -கடிதம்