«

»


Print this Post

சண்டிகேஸ்வரர் – கடிதம்


1

அன்புள்ள ஜெ

 

நலமா ?

 

சண்டிகேஸ்வரர் குறித்த உங்களது  பதிலை படித்தேன்

 

இதில் மற்றோரு பார்வையை வைக்க விரும்புகிறேன் .எனக்கு தெரிந்த வரையில் சண்டிகேஸ்வரர் என்னும் பெயரை மூன்று இடங்களில் பொருத்தி பார்க்கலாம் :

 

1)சாஃஷாத் சிவனின் ரூபங்களில் ஒன்றான சண்டிகேஸ்வரர் .சிவ ரூபம் என்பதால் தான் ரிஷப ரூபம் ரிஷப வாஹனம் எல்லாம்.தந்த்ர நூலான “சாரதா திலகத்தில் ‘ இவருடைய உபாசனை விளக்க பட்டுள்ளது .”சூல டங்க ச அக்ஷ வலய கமண்டலு ரத்நாகரம் ….”என த்யான சுலோகம் செல்கிறது .இவர் சிவனின் மூர்த்தி பேதங்களில் ஒருவர் .

 

 

2) சிவாலயங்களில் கருவறைக்கு தொட்டு அடுத்த பிரகாரத்தில் காணும் சண்டிகேஸ்வரர் .தனி சந்நிதி இருக்கும்.கை கொட்டி வழிபாடு செய்ய படுவது இங்கு தான் .நமது நண்பர் கேட்டது இவரை குறித்து தான் .இவர் சிவ கணங்களில் ஒருவர்.ஆகம படியும் ,தந்த்ர படியும் சிவனின் நிர்மால்ய தாரி.சிவ பெருமானுக்கு சூட பட்ட மலரும் ,செய்யப்பட்ட நைவேத்தியமும் இவருக்கு தான் முதலில் அக்ர பிரசாதமாக ,முதல் பிரசாதமாக கொடுக்கப்பட வேண்டும் .பின்னர் தான் அதனை மனிதர்கள் எடுத்து கொள்ள இயலும்.

 

இந்த சண்டிகேஸ்வரரை ஆகம மரபுக்குள் கொண்டுவரப்பட்ட தேவதையாக கருதுவதில் பெரிய சிக்கல் உண்டு .சிவனுக்கு மட்டும் அல்ல அனைத்து சைவ தேவதைகளுக்கும் (சில பாஞ்சராத்ர ஆகம நூற்கள் படி வைணவ தேவதைகளுக்கும் ) தனி தனியாக நிர்மால்ய தேவதைகள் உண்டு.இந்த தேவதைகளை சண்டிகேஸ்வரரை ஸ்தாபிதம் செய்வது போலவே ஸ்தாபிப்பது உண்டு.உதாரணமாக நெல்லை அப்பர் கோவிலில் நெல்லையப்பருக்கு சண்டிகேஸ்வரர் ,காந்திமதி அம்மனுக்கு சண்டிகேஸ்வரி .இது போல ஆகமம் சுப்பிரமணியருக்கு சுமித்ர சண்டரை நிர்மால்ய தாரியாக வைக்க வேண்டும் என கூறுகிறது.(த்யானம் :த்ரி நேத்ரம் த்வி புஜம் ரக்தம் சுப்பிரசன்னம் சுயௌவனம் தக்ஷிண சக்தி சம்யுக்தம் ……).எல்லா இடத்திலும்,எல்லா தேவதா ப்ரதிஷ்டையிலும் இத்தகைய நிர்மால்ய தாரிகள் இருப்பதால் உள்ளிணைப்பு கருத்து சரியாக இருக்காது என எண்ணுகிறேன்.

 

3) நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர்.இவரை குறித்து கூறும் சிவ ரஹஸ்யத்தில் தான் ஹர தத்த சிவாச்சாரியாரை குறித்தும் வருகிறது.இந்நூலின் காலத்தை நிர்ணயம் செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன .பக்தர் கணமாக அல்லது கணத்தின் அவதாரமாக கூற பட்டிருக்கலாம் .

 

 

4) காமிகாகமத்தில் நீங்கள் கூறும் படலம்  65 ஐ குறித்து .இந்த படலம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இங்க கிடைக்கிறது

:http://temple.dinamalar.com/news_detail.php?id=11527(நண்பர் கங்காதர குருக்கள் இந்த சுட்டியை தந்தார் ).இது புராதனமான காமிகாகமம் அல்ல .அதனை கொண்டு எழுதப்பட்ட ஒரு கையேடு .இதில் சிவ உருவான சண்டிகேஸ்வரரையும் ,நிர்மால்ய தாரியையும் குழப்பி உள்ளனர் .

 

 

ஆனால் ஆகம வல்லுநர்கள் எளிதில் இதனை பிரித்தறிய ஒரு வழி இருக்கிறது .பிரதிஷ்டை ஸ்வதந்த்ரம் ,பரதந்த்ரம் என இரண்டாக பிரிக்க பட்டுள்ளது என இந்நூலில் கூறப்பட்டுள்ளது ..இதில் ஸ்வதந்த்ர மூர்த்தி சிவன் .எனவே தான் அவர் சுதந்திரமானவர் .தானே அனைத்தையும் செய்யும் ஆற்றல் உள்ளவர் .இவருக்கு தான் தனி ஆலயம் உற்சவம் எல்லாம் .பர தந்த்ர மூர்த்தி நிர்மால்ய தாரி .சிவனை சார்ந்து இருப்பவர் .இவரை ஒரு சிவ க்ஷேத்ரத்திற்குள் தான் வைக்க முடியும் .இவரை சிவன் கோவிலில் பரிவார தேவதையாக காண்கிறோம் .

 

 

உங்களோடு வெகு நாட்களுக்கு பிறகு உரையாட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி .என்று ஊர் திரும்புகிறீர்கள் ?

 

நன்றி

அனீஷ் க்ருஷ்ணன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/90662