மலேசியாவின் நவீன இலக்கியம் பெரும்பாலும் ம.நவீன் ஒருங்கிணைப்பில் நிகழும் வல்லினம் இலக்கிய அமைப்பையும் நண்பர்களையும் சார்ந்தே நிகழ்ந்துவருகிறது. நான் வல்லினத்தின் இருநிகழ்ச்சிகளில் முன்னரே கலந்துகொண்டிருக்கிறேன். இம்முறை சிறுகதை குறித்த ஒரு பட்டறையில் கலந்துகொள்ள நவீன் அழைத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பட்டறை. சனிக்கிழமை காலையே வந்தால் கொஞ்சம் சுற்றிப்பார்க்கலாமென்பது திட்டம்.
அருண்மொழி 6 ஆம்தேதி காலை இங்கே வந்தாள். அவளே பஸ்ஸில் டிக்கெட் எடுத்து ஜூராங் பறவைப்பூங்கா, கலைவைப்பகம், அருங்காட்சியகம் என சென்றுவந்தாள். அந்தச்சாதனையைச் சொல்லிச்சொல்லி பூரிப்பு தாளாமல் ஏகப்பட்ட தொலைபேசிச் செலவு. வெள்ளிக்கிழமையே இங்கிருந்து கொலாலம்பூர் செல்ல பேருந்தில் சீட்டு போட்டிருந்தோம்.
ஆனால் சனி,ஞாயிறு விடுமுறை. திங்கள் பக்ரீத். இரவு பதினொருமணிக்கு பேருந்துநிலையம் சென்றோம். அங்கே கோயம்பேடு பேருந்துநிலையத்தின் தீபாவளிக்கூட்டம் போல தள்ளுமுள்ளு. எல்லா பேருந்துகளும் மணிக்கணக்காகத் தாமதம். புகை, வெக்கை. என்னால் அமர்ந்திருக்கமுடியவில்லை. மூச்சுத்திணறல், கண் எரிச்சல். ஆகவே திரும்பிவந்துவிட்டோம்
சிங்கப்பூர் தரையை அதிதூய்மையுடன் வைத்துள்ளது. ஆனால் காற்று மாசடைந்தது. மிதமிஞ்சிய வாகனப்புகை ரசாயனங்கள். ரசாயன ஆலைகளின் புகை. அருகே உள்ல இந்தோனேசியாவின் காடுகள் எரிக்கப்படும் புகை. அத்துடன் காற்றோட்டமே இல்லை. உயர்ந்த கட்டிடங்கள் நடுவே காற்று ஓடுவதே இல்லை.
இங்கு வந்தபின் நான் நடைசெல்வதையே முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். இரண்டுமுறை நடை சென்றேன். மீண்டால் உடல் முழுக்க கரிப்பசை. தூங்கினால் நள்ளிரவில் மூச்சடைப்பு வந்து விழிப்பு வந்துவிடும். பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளேயே வாழ்கிறேன். நான் பணியாற்றும் தேசியக் கல்விக்கழக – தேசிய தொழில்நுட்ப பல்கலை வளாகம் நல்ல காடு. அங்கே காற்று ஒப்புநோக்கப் பரவாயில்லை. ஆனால் அங்கே கட்டிடங்கள் எழுந்தபடியே உள்ளன.
சரவணன் அளித்த ஒவ்வாமை மாத்திரை இரவில் துயிலச்செய்தது. காலையில் நவீன் அழைத்து காரிலேயே அழைத்துச்செல்வதாகச் சொன்னார். மாலை நான்குமணிக்கு கிளம்பி இரவு பன்னிரண்டரைமணிக்கு கொலாலம்பூர் சென்றுசேர்ந்தோம். வழியெல்லாம் வண்டிகள் தேங்கி நின்று ஊர்ந்தன. ஆனால் பேசிக்கொண்டே சென்றதனால் அலுப்பு தெரியவில்லை
நவீன் நடத்தும் பறை இதழ் சார்பில் ஒரு சிறுகதைப்போட்டி நடத்தப்பட்டு அதில் கலந்துகொண்டவர்களில் 30 பேர் தெரிவுச்செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் நான் சிறுகதையின் செவ்வியல் வடிவம் என்ன என்று பேசினேன். கதைகளை உதாரணமாகக் காட்டி அதை விளக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் சிங்கப்பூரில் இரண்டுமாதமாக என் வேலையே அதுதான்.
காலையில் இரட்டைக்கோபுரம் அருகே சென்று சாப்பிட்டுவிட்டு சுற்றிவந்தோம். விழா மாலையில் முடிந்தது. டாக்டர் ஷண்முகசிவாவுடன் சென்று அவரும் வழக்கறிஞர் பசுபதியும் இணைந்து நடத்தும் மைஸ்கில் என்னும் கல்விநிறுவனத்தைப் பார்த்தோம். உலகமே அறிந்த அமைப்பு அது – கபாலி படத்தில் வருவது. பல்வேறு காரணங்களால் பள்ளிப்படிப்பை முடிக்கமுடியாதுபோன, குற்றப்பின்னணிகொண்ட, பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சிப்பள்ளி.
அங்குள்ள மாணவர்களைச் சந்திக்கும் ஒரு சிறிய நிகழ்ச்சி நடந்தது. திருமதி மலர் அங்கு ஆசிரியையாக பணிபுரிகிறார். சமீபத்தில் நான் சந்தித்த முக்கியமான ஆளுமை. உற்சாகமும் துடிப்பும் நிறைந்தவர். இத்தகைய நிறுவனங்களை அமைப்பது எளிது. ஆனால் நடத்துவதற்குரிய மனிதர்கள் கிடைப்பது மிகமிக அரிது. அர்ப்பணிப்பும் உண்மையான தீவிரமும் இல்லாமல் வேலையாக இதைச்செய்யமுடியாது. மைஸ்கில் நிறுவனம் அவ்வகையில் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது. மலர் அந்த மாணவர்களிடம் உரையாடியதைப்பார்ப்பதே பரவசமூட்டும் அனுபவமாக இருந்தது.
மைஸ்கில் பள்ளி மாணவர்களைச் சந்தித்தது இந்நாளின் மிக உத்வேகமான நிகழ்ச்சி. எப்படிப்பட்டவர்கள் என்றாலும் இளமை உயிரோட்டமானது. கள்ளமற்றது. அங்கிருந்த ஒருமணிநேரமும் மனம் மலர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தேன். அவ்வுரையாடலில் அச்சிறுவர்கள் பலரின் கடந்தகாலமும் எதிர்கால ஆசைகளும் எழுந்து வந்ததைக் காண்பது ஒரு பெரிய வாழ்க்கைத்தரிசனம்
இரவு பன்னிரண்டு மணிக்கு விடுதியறைக்குத் திரும்பிவந்தோம். நான் காலை ஆறுமணிக்கே நவீனின் காரில் கிளம்பி சிங்கப்பூரை பதினொன்றரை மணிக்கு வந்தடைந்தேன். கூட்டிச்செல்லவும் திரும்பக்கொண்டுவந்துவிடவும் நவீனின் நண்பர்களும் இலக்கியவாதிகளுமான ஸ்ரீதரும்,தயாஜியும் வந்திருந்தார்கள்.
சிங்கப்பூரில் என் விருந்தினர்களாக ஈரோடு கிருஷ்ணனும் சந்திரசேகரும் முந்தையநாள் மாலையே வந்து என் அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்தனர். என்னை கூட்டிச்செல்ல எம்.கே.குமார் வந்திருந்தார். அவருடன் அவர்களும் வந்து சிங்கப்பூர் பகுதியில் காத்திருந்தார்கள். புதியமண்ணில் புதியவர்களாகச் சந்தித்துக்கொண்டோம்.