அங்குள்ள அழுக்கு

IMG_0899

வங்காள அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர் ராணி சந்தா. நூறாண்டுகளுக்கு முன்பு அவர் காசிக்கு ஒரு கும்பமேளாவுக்குச் சென்றார். அப்பயண அனுபவங்களை அவர் பூர்ண கும்பம் என்னும் பெயரில் நூலாக எழுதினார். தமிழில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வந்த அந்நூலை நான் முப்பதாண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அது கும்பமேளாவுக்குச் செல்லவேண்டும் என்ற என்னுடைய கனவைத் தூண்டிவிட்டது

2010ல்தான் அந்தக்கனவு நடைமுறைக்கு வந்தது. கும்பமேளா பற்றிய செய்தியை கேட்டதுமே கிளம்பிவிடவேண்டியதுதான் என முடிவுசெய்தேன். உடனே நண்பர்களிடம் கூப்பிட்டுச் சொன்னேன். என் பதிப்பாளர் வசந்தகுமார், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், நண்பர்கள் அரங்கசாமி, கிருஷ்ணன், அருண் உள்ளிட்ட ஒரு குழு உடனே விமானம் பதிவுசெய்து டெல்லிக்கு கிளம்பினோம். டெல்லிவழியாக ஹரித்வார்

ஆனால் கும்பமேளா என்றதுமே நண்பர்கள் தயங்கினர். கிருஷ்ணன் “சார் அங்கே பெருங்கூட்டமா இருக்குமே. குப்பையும் பீயுமா குவிஞ்சு கிடக்கும்னு நினைக்கிறேன்…” என்றார். எனக்கும் அந்தத் தயக்கமிருந்தது. டெல்லியைக் கடக்கும்போது யமுனைக்கரையில் கண்டபெரும் குப்பைமலைகள் அரைத்தூக்கத்தில் தலைமேல் மலைபோலக் கொட்டின

நாங்கள் ஹரித்வாருக்கு வந்திறங்கியபோது அதிகாலை மூன்று மணி. பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு பொட்டல்வெளியில் விளக்கொளியில் புழுதிப்படலம் தங்கச்சல்லாபோல ஜொலித்துக்கோண்டிருந்தது. புழுதிபடிந்த கார்கள் விலாநெருங்கி நிறைந்திருந்தன. புழுதித்தரை மீது விரிக்கப்பட்ட சாக்குகளில் ஏராளமானவர்கள் கம்பிளிக்குவியல்களாகப் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். தூக்கமிழந்த போலீஸ்காரர்கள் கைகளில் ஸ்டென் மெஷின் கன்களுடன் சுற்றிவர ஒரு தீதி உற்சாகமாக டீத்தூள் பால் சர்க்கரை எதுவுமே இல்லாத டீ போட்டு விற்றுக்கொண்டிருந்தாள். குளிருக்கு அதுவும் நன்றாகவே இருந்தது.

நாங்கள் வரும்போது ஹரித்வரில் தங்க பலவகையான ஏற்பாடுகளுடன் வந்திருந்தோம். வரும் வழியிலேயே அந்த எந்த ஏற்பாடும் வேலை செய்யவில்லை என்ற தகவல் வந்தது. ஹரித்வாரில் எங்குமே தங்க இடமில்லை. ரிஷிகேஷ் போய் தங்குங்கள் என்றார்கள். எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் வழியாக ரிஷிகேஷில் ஒரு இடம் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே இடமிருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே ரிஷிகேஷுக்கே செல்வதென்று முடிவுசெய்தோம்.

அது கோயிலூர் மடம் என்று அழைக்கப்படும் ஒரு சத்திரம். அதிகமும் நகரத்தார் சமூகம் தங்குவது. ஆனால் அனைவருக்கும் பொது. அங்கிருக்கும் நிர்வாகியம்மாளை அனைவரும் ஆச்சி என அழைத்தனர். அங்கேயே தங்கி விருந்தினர்களை உபசரிப்பதை ஒரு யோகமாகச் செய்துவருகிறார்கள். அழகான சூழல். வசதியான அறைகள்.

காலையில் எழுந்ததுமே குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். நல்ல சாம்பார், சாதம். பசியில் ருசி பெருகும் விந்தை எத்தனை அனுபவித்தாலும் சலிக்காத அற்புதம். கோயிலூர் மடத்தின் தலைவர் நாச்சியப்ப சுவாமிகளின் படம் சுவரில் இருந்தது. பசி தணிந்து சுவாமிகளின் முகத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

ரிஷிகேஷ் ஊரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். விடுதிகள், கோயில்கள் வழியாக நடந்து லட்சுமண் ஜூலா சென்றோம். கங்கையை மிகச்சிறந்த கோணத்தில் பார்ப்பதற்கான இடங்களில் ஒன்று லட்சுமண் ஜூலா. ஜூலா என்றால் தொட்டில் அது ஒரு கம்பிப்பாலம். வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்டது. ஐந்தடி அகலம். அதன் வழியாக சாரி சாரியாக மறுகரைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். கங்கையின் இருபக்கமும் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் தீபங்கள் ஒளிர்ந்தன. மணியோசை ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தப்பகுதியிலிருந்த விழாக்கோலம் மனதை மயக்குவதென உணர நாம் மனிதர்களை நேசிக்க வேண்டும். அந்த மனிதர்களை முடிவிலாத இறந்த காலத்துடன் பிணைக்கும் பண்பாடு மீது நமக்கு ஒரு பற்று இருக்க வேண்டும்.

வியர்க்கத்தொடங்கியது. கங்கையில் குளிக்கப்போகலாம் என்று சரியான இடம் தேடினோம். கூட்டம் இல்லாத படித்துறைக்காக தேடிச்சென்றுகொண்டே இருந்தோம். “ஊரே கூட்டமா இருக்கு சார். எங்கபாத்தாலும் காலவைக்க முடியாதபடித்தான் இருக்கும்” என்றார் கிருஷ்ணன். ரிஷிகேஷ் தெருக்களில் சுற்றி நடந்து திரிவேணிகட் என்ற படித்துறையை அடைந்தோம். உக்கிரமான வெயில் இருந்தாலும் இமயமலைக்காற்று கொஞ்சம் குளுமை அளித்தது.

திரிவேணி கட் செயற்கையாக சிவப்புக்கற்களால் உருவாக்கப்பட்ட பெரிய படித்துறை. குளிப்பதற்காக கங்கையின் நீர்ப்பெருக்கை வெட்டி கிளை ஒன்று அமைத்திருந்தார்கள். தண்ணீர் பனிக்குளிருடன் விரைக்க வைத்தது. சற்று முன்னர்தான் வெயிலில் வெந்தோம் என்பதே மறந்து விட்டது. ஆச்சரியமாக மிகமிகச் சுத்தமாக இருந்தது. இத்தனைக்கும் அப்பகுதியெங்கும் பெருங்கூட்டம்.

கங்கையில் கண்சிவக்க நீராடி விட்டு கிளம்பினோம். படித்துறை சுத்தமாக இருந்தது. ஏராளமான கோயில்களில் இருந்து பஜனை ஒலி கேட்டபடியே இருந்தது. கான்கிரீட்டில் கட்டப்பட்ட பெரிய சிவன் சிலையும் கீதோபதேசம் சிலையும் வழக்கமான கான்கிரீட்தனம் இல்லாமல் உயிரோட்டமாக இருந்தன. அதற்குக்கீழே விதவிதமான ராஜஸ்தானி தொப்பி அணிந்த வயோதிகர்கள் வழிபட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த முகங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். வயோதிகமுகங்களில் தெரியும் ஒரு கனிவும் சோர்வே இல்லாத அமைதியும் இந்தியாவுக்கே உரியவை என்று தோன்றும். இழந்தவை குறித்த ஏக்கமும் வரும் இறப்பு குறித்த அச்சமும் இல்லாமல் முதுமையில் வாழ்வதற்கு ஆழ்ந்த மனநிலை ஒன்றுதேவை. அதை இந்தியாவில் வேரூன்றியிருக்கும் கர்மா கொள்கை அவர்களுக்கு அளிக்கிறது. அனைத்தும் நம்மைமீறிய பெருநியதி ஒன்றின் ஆடல், நாம் அப்பெருங்காற்றில் தூசுத்துளிகளே என்னும் தன்னுணர்வு. அதை சுருக்கங்களோடிய முகங்களில் தெளிவாகவே காணமுடியும்.

நான் தனியாக துண்டைக்காயவைத்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு தலைப்பாகை முதியவர் எழுந்துவந்து எனக்கு இலைத்தொன்னையில் ஊறவைத்த பொரியும் வெல்லமும் கலந்த பிரசாதத்தைக்கொடுத்தார். முகம் சுருக்கங்கள் இழுபட்டு வலையாக விரிய புன்னகையில் ஒளிவிட்டது. “சிவா கி பிரசாத்” என்றார். வாங்கி சாப்பிட்டேன். அப்பால் நண்பர்கள் படியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அனிச்சையாக இலையை கீழே போட்டுவிட்டு அவர்களை நோக்கிச் சென்றேன்

அந்த முதியவர் கையை ஊன்றி எழுந்து வந்து அந்தத் தொன்னையை எடுத்தார். உடலே கூசிவிட்டது. ஓடிவந்து “மன்னிக்கவும்… மன்னிக்கவும்” என்று சொல்லி அதை எடுக்கப்போனேன். “பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு அவரே எடுத்துக்கொண்டார். “கங்கையன்னையின் கரை… தெய்வங்களின் இடம்” என்றார். நான் மீண்டும் மன்னிப்பு கோரினேன். ஏன் அதைச்செய்தேன் என்றே புரியவில்லை. உண்மையில் குப்பைபோடுவது என் வழக்கமே அல்ல. வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தபின் மறந்தும் குப்பையை கீழேபோடுவதில்லை. அது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது. அன்று என்ன ஆயிற்றென்று இன்றும் எனக்குத்தெரியாது.

நண்பர்கள் அருகே சென்று அமர்ந்துகொண்டேன். கங்கையில் குளிப்பதற்காக ஒரு தமிழ்க்கூட்டம் வந்திருந்தது. கட்டான உடல்கொண்ட, பதினாறிலிருந்து இருபதுக்குள் வயதுள்ள கரிய இளைஞர்கள். எல்லாருமே குடுமி வைத்து பூணூல் போட்டவர்கள். அங்குள்ள ஏதோ மடத்தில் வேதம் பயில்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நீராடி கூச்சலிட்டு கும்மாளமிடுவதை பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்

சட்டென்று அவர்களில் ஒருவனை அந்தப்படிகளில் வந்துகொண்டிருந்த ஒரு வடஇந்திய மனிதர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார். பெரிய தலைப்பாகை கட்டிய அறுபது வயது மனிதர். கைநீட்டியபடி இந்தியில் உரக்க வசைபாடினார். தமிழகர்கள் தாக்கப்படுவதைக் கண்டு கோவை நண்பர் அருண் ஓடிப்போய் “என்ன? என்ன நடந்தது? ஏன் அடித்தீர்கள்?” என்று கேட்டார். அரங்கசாமியும் ஓடிச் சென்றார்.

எல்லாரும் சென்று குழுமவேண்டாம் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். அரங்கசாமி உரத்தகுரலில் அந்த தலைப்பாகைக்காரரிடம் ஏதோ கேட்டார். அவர் உதிரிச் சொற்களில் இவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். சில நிமிடங்களில் இருவரும் சாந்தமாக திரும்பிவிட்டனர். “என்ன?” என்று நான் கேட்டேன். “ஒண்ணுமில்ல சார் விடுங்க” என்றார் அரங்கசாமி. “ஏன் அடித்தார்?” என்று நான் மீண்டும் கேட்ட்டேன். “ஒண்ணுமில்ல சார், நம்ம பசங்க” என்றார் அரங்கசாமி

ஆனால் அருண் கோபத்துடன் நடந்தது என்ன என்று சொன்னார். அடிவாங்கிய அந்தத் தமிழ் இளைஞன் கங்கையின் நடுவே இருந்த மணல்திட்டு மேல் ஏறிச்சென்று மலம் கழித்திருக்கிறான். அறைந்தவர் அந்தப் படித்துறையின் காவலர். “கங்கையன்னையின் மடி.. கங்கையன்னையின் மடி” என்று சொல்லிக்கொண்டே இருந்தார் அவர். அருண் “அடிக்க வேண்டியதுதான் சார். காவாலிப்பசங்க. மானத்தை வாங்கிட்டாங்க’’ என்றார்

அந்த அடிவாங்கிய இளைஞன் ஒன்றும் நடக்காதது போல நண்பர்களுடன் குளிக்க ஆரம்பித்தான். தமிழகத்தின் ஏதாவது கிராமத்தைச்சேர்ந்த வறிய குடும்பத்து இளைஞனாக இருப்பான். ஊரில் மிகச்சாதாரணமாக நிகழ்வது இது. உண்மையிலேயே அவனுக்கு அவன் செய்த பிழை என்ன என்றே புரிந்திருக்காது.

நான் அந்த முதியவரின் முகத்தைப்பார்க்கக் கூசினேன். தலைகுனிந்தபடி நடந்து கடந்தேன். உண்மையில் அது ஒரு பெரிய சுயதரிசனம். அங்குள்ளவர்கள் அழுக்கானவர்கள், குப்பைபோடுபவர்கள் என எப்படி இயல்பாகவே நம் மனம் நம்புகிறது? ஏனென்றால் அவர்கள் நம்மவர்கள் அல்ல. நம் குறை நமக்குக் கண்ணில்படுவதில்லை. அறைவிழுந்தாலொழிய.

அவர்களும் நம்மைப்போலத்தான். குப்பையும் அழுக்கும் குறித்த பிரக்ஞை இந்தியாவில் சர்வதேச விமானநிலையங்களில் பயணம்செய்யும் உயர்குடிப்பயணிகளிடம்கூட இல்லை. ஆனால் நம்மைவிட மேலாக ஒன்று அவர்களிடம் உள்ளது. ஆழ்ந்த மதநம்பிக்கை. அது சூழலையும் நீரையும் காத்துவந்தது இன்றுவரை. நாம் அதையும் இழந்துவிட்டோம்.

[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 2
அடுத்த கட்டுரைசயாம் – பர்மா ரயில் பாதை