எத்தனை பாவனைகள்!

Lohithadas draw

மலையாளத் திரைஎழுத்தாளர் லோகிததாஸ் கேரளத்தின் பண்பாட்டு அடையாளமாகவே இன்று மாறிவிட்டவர். அவரது படங்களில் ஒரு பத்துபடங்களை இன்று அவர்களின் செவ்வியல் படைப்பாக அங்கீகரித்துவிட்டிருக்கிறார்கள். அவர்தான் என்னை சினிமாவுக்குள் அழைத்துவந்தவர். என் நண்பர், வாசகர் என்பதற்கு அப்பால் அண்ணனின் இடத்தில் இருந்தார். 2009-ல் மாரடைப்பால் காலமானார். அவரை எண்ணாமல் இன்றும் ஒருவாரம் கடந்துசெல்வதில்லை எனக்கு.

ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது லோகிசொன்னார் “கிளம்புவோம், எங்காவது போகவேண்டும் போலிருக்கிறது”. நான் திகைப்புடன் “எங்காவது என்றால்?” என்றேன். “எங்காவது… அறைக்குள் இருந்து மூளை சலிக்கிறது”. லோகி பயணங்களை விரும்புபவர் அல்ல. அவரது தேடல் உணவு சார்ந்தது, ஏதாவது ஓட்டலுக்காகத்தான் கிளம்புகிறார் என எண்ணினேன். சட்டைமாற்றிக்கொண்டு உடன்சென்றேன். அவரே காரை ஓட்டினார்

சென்னையை விட்டு வெளியே கார் செல்ல ஆரம்பித்ததும் குழப்பம் வந்தது. லோகி கேரளத்தின் குழந்தை. பிறநிலங்களில் மிக அரிதாகவே பயணம் செய்திருக்கிறார். கேரளத்துக்குப் போவதற்குப் பதிலாக வழி தவறி திருப்பதி பக்கமாகச் செல்கிறாரோ?

நான் தயக்கமாக “எங்கே செல்கிறோம்?“ என்றேன். “எங்கே என்பது ஒரு கேள்வியே அல்ல. செல்கிறோம்” என்றார் லோகி. நாடகத்தனமாக இருந்தது, அவரே அதை நக்கலடித்து “மோகன்லால் சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார். “திரும்பி வரவேண்டும் என்று தோன்றுவது வரைச் செல்வோம். செல்லும் வழியில் நல்ல பரோட்டா மட்டன் கிடைத்தால் சாப்பிடுவோம்.” லோகி சிக்கன் சாப்பிடமாட்டார்

நாங்கள் அன்றிரவு ரேனிகுண்டாவில் தங்கினோம். மறுநாள் குண்டூர். அதன்பின்னர் எங்கோ அற்று அலைந்து சூரியப்பேர் என்னும் ஒரு சிறு ஊர். ஒரு சாலைச்சந்திப்பில் வலமாகத் திரும்புவதா இடமாகத் திரும்புவதா என்பதை அந்தக்கணத்தில் ஸ்டீரிங் தான் தீர்மானிக்கும். ஓர் ஊருக்குப் போன பின்னர் டீக்கடைகளின் போர்டுகளில் ஆங்கிலம் இருக்கிறதா என்று தேடி அந்த ஊர் எது என கண்டுபிடிப்போம். லோகிக்கு ஆந்திரர்களின் காரம் பிடித்திருந்தது. அங்கு கிடைக்கும் வத்தலக்குண்டு மலைப்பழம் போன்ற சுவைகொண்ட வாழைப்பழத்தை தயிரில் சீனிபோட்டுக் கடைந்து சாப்பிடுவதில் பரவசம் அடைந்தார்.

சூரியபேரில் நாங்கள் சாயங்காலம் சென்று சேர்ந்தோம். தங்குமிடம் தேடி அலையத் தொடங்கினோம். லோகி வசதியாகத் தங்க விரும்புபவர். எங்கே சென்றாலும் டிராவலர்ஸ் பங்களா இருக்கிறதா என்றுதான் கேட்பார். பலருக்கு அது என்னவென்றே தெரியாது. சுற்றிவந்துகொண்டிருக்கும்போது ஒருவன் டிவிஎஸ்50 வண்டியில் பின்னால் வந்து மறித்து தமிழில் “வணக்கம் சார்” என்றான். ஆனால் தெலுங்கு ஆள்தான். “என்னசார் வேணும்? தங்கறதுக்கு பங்களாவா? அதெல்லாம் ஏற்பாடு செஞ்சிடலாம் சார்… வாங்கோ” என்றான்.

அவன் எங்களைக் கூட்டிக்கொண்டு சென்ற இடம் உண்மையிலேயே பங்களா. தோட்டம் சூழ்ந்த பழங்காலக் கட்டிடம். ”பேய்ப்பங்களா என நினைக்கிறேன். ராத்திரி இருட்டுக்குள் சலங்கை ஒலி கேட்கும். ஷாம்பூ போட்ட கூந்தலுடன் வெள்ளை ஆடை அணிந்து அழகி வருவாள்” என்று நான் சொன்னேன். “வெள்ளை ஜாக்கெட்டுக்குள் பிரா நன்றாகவே தெரியும்”.

லோகி சிரித்து “ஆனால் பேய்களுக்கு நல்ல இசைஞானம் உண்டு. ஆபேரி, பைரவி போன்ற உருக்கமான ராகங்களில்தான் பாடிக்கொண்டு வரும்…” என்றார். ஆனால் உண்மையில் கொஞ்சம் உதறல் இருந்தது. உள்ளே சுத்தமாகத்தான் பேணப்பட்டிருந்தது. மெத்தை கொஞ்சம் பழையது என்பதைத் தவிர்த்தால் பிரச்சினை ஏதுமில்லை. வாடகை அன்றைய கணக்குக்கு ஆயிரம் ரூபாய் கொஞ்சம் அதிகம். ஆனால் பங்களா.

“பழைய எழுத்தாளர்களுக்கு இந்தமாதிரி சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமைகின்றன. அருமையான கதைகளும் கிடைத்திருக்கின்றன. வைக்கம் முகமது பஷீர் எங்கெல்லாம் போய் தங்கி எதையெல்லாம் சந்தித்திருக்கிறார். நம்மைப்போல சமகால எழுத்தாளர்களுக்குத்தான் பிரியாணிகூட ஒரே மாதிரி கிடைக்கிறது” என்றார் லோகி.

அந்த பங்களா ஒரு ஜமீந்தாருடையது. எங்களைக்கூட்டிவந்தவர் அதையும் அந்தத் தோட்டத்தையும் பராமரிப்பவர். மறுவாடகைக்கு அவ்வப்போது அதை விடுவது அவரது வழக்கம். ஆவலுடன் எங்களுக்குப் பணிவிடைபுரிய வந்து நின்றார். சாப்பாடுக்கு ஆணையிட்டால் ஒருமணிநேரத்தில் கொண்டுவருவதாகச் சொன்னார். மேலே குடிவகைகள் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினார். குடிப்பதில்லை என்றதும் சுருதி மிகவும் குறைந்தது.

லோகி மட்டன் கறியும் சப்பாத்தியும் கேட்டார். நானும் அதையே சொன்னேன், ஆனால் இரவு அசைவம் சாப்பிட்டால் எனக்குக் கெட்டகனவுகள் வரும். வன்முறையாளனாக மாறியிருப்பேன். லோகி குளிர்ந்த நீரில் குளித்து குர்தா பைஜாமா அணிந்து சூரல்நாற்காலியை தூக்கி முற்றத்தில் போட்டு அமர்ந்துகொண்டார். ”ஒரு பிரபுவைப்போல உணர்கிறேன். டேய் என்று அழைக்க ஒருவன் அருகே இருந்தால் நல்லது” என்றார். நான் அருகே அமர்ந்தேன்.

“இதெல்லாம் நல்ல அனுபவங்கள்… உண்மையிலேயே ஒரு பேய் வரவேண்டும். இல்லையேல் ஒரு கொலை. சரி, கொலைவேண்டாம், ஒரு அடிதடி..” என லோகி சொன்னார். “என்ன காலகட்டம் பார். ஒரு போர் இல்லை. பட்டினி இல்லை. எழுதுவதற்கு விஷயமே இல்லையே…” சாப்பாடு வர தாமதமாகியது. இரண்டரை மணிநேரம் கழித்து தொலைவில் வெள்ளை நிற அசைவு கண்ணுக்குப்பட்டது. சாப்பாடுதான். ஆனால் இரண்டுபேர் வருவதுபோலத் தெரிந்தது

வந்தவர் வாட்ச்மேன்தான். அவர் கையில் இடுப்பளவு உயரமான டிபன் கேரியர். அதைக்கொண்டுவந்து திண்ணையில் வைத்தார். உடன் வந்தவர் இருட்டிலேயே மாமரத்தடியில் நின்றுகொண்டார். வாட்ச்மேன் பணிவுடன் “மட்டன்கறி, சப்பாத்தி, மட்டன் ஃபிரை. வாழைப்பழம், தயிர்சாதம் இருக்கிறது. கொக்ககோலாவும் நான்கு பாட்டில் வாங்கிவந்தேன்” என மஞ்சள் பையை காட்டினார்

எங்கள் பார்வை மாமரத்தடி நோக்கிச் செல்ல “அது எனக்குத்தெரிந்த ஒரு பெண். பெத்தாபுரத்துக்காரி. இங்கேதான் இருக்கிறாள். சும்மா பாருங்கள். வேண்டாம் என்றால் போய்விடுவாள்” என்றார். நான் கோபத்துடன் “வேண்டாம்” என்று சொல்ல லோகி மறித்து “வேண்டாம். வரட்டும். பேசிக்கொண்டிருக்கலாம். இன்றைக்கு நமக்கு கதையோகம் இருக்கிறது….” என்றார். அவர் வரச்சொன்னதும் வாட்ச்மேன் கைகாட்டினான்.

அந்தப்பெண்ணுக்கு அவளை அழகாகக் காட்டும்கலை அத்துபடி. இருளில் அவள் மறைந்து நின்றதே ஒரு கலை. அப்படியே விளக்கு வெளிச்சத்தில் நாடகக் கதாநாயகி போலத் தோன்றினாள். உண்மையிலேயே அழகி. அவள் அழகாக இருப்பாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எங்கள் கண்களைப் பார்த்த வாட்ச்மேன் “நல்ல பெண் சார். வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருப்பாள். நன்றாக பாடுவாள். பெத்தாபுரத்துக்காரி. அவளுக்கு எல்லாமே நல்ல பயிற்சி”

அவர் அவளிடம் எங்களுக்குச் சாப்பாடு பரிமாறச்சொல்லிவிட்டுச் சென்றார். அவள் நன்றாகவே தெலுங்குத்தமிழ் பேசினாள். நான் லோகிக்கு பெத்தாபுரம் என்றால் என்ன என்று சொன்னேன். கிழக்குக் கோதாவரியைச் சேர்ந்த பெத்தாபுரமும் அருகே உள்ள ஊர்களும் பாரம்பரியமாகவே விபச்சாரத்துக்குப் புகழ்பெற்றவை. அதை குலத்தொழிலாகச் செய்யும் ஏராளமான குடும்பங்கள் அங்கு உண்டு. “ஆ!கதை!” என லோகி பரவசமானார்

அவளிடம் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டோம், அவளிடம் சும்மா பேசிக்கொண்டிருக்கத்தான் விரும்புகிறோம் என்று. அவளுக்குரிய பணத்தையும் பரிசையும் தந்துவிடுவதாகச் சொன்னோம். அவள் அதில் ஆச்சரியப்படவில்லை. இயல்பாக எடுத்துக்கொண்டு பேசியபடி எங்களுக்குப் பரிமாறினாள். அவள் பெயர் சந்திரகலா. கணவனும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கணவன் லாரி ஓட்டுகிறான். குழந்தைகள் படிக்கிறார்கள். சொந்த லாரிதான். சொந்தமாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி, பிள்ளைகளைப்பற்றி எல்லாம் கேட்டாள். சிரித்தபடி “உண்மை சொல்கிறீர்களே?” என்றாள். லோகி அவள் வளர்ப்புச்சூழல். இளமைப்பருவம் என பல கேள்விகளைக் கேட்டார். எதைக்கேட்டாலும் அவள் நேரடியான மொழியில் சுருக்கமாக பதில் சொன்னாள். எல்லா பதில்களும் மெல்லிய நகைச்சுவையுடன் இருந்தன. “உன் அம்மாவும் இதே தொழில்தானா?” என்றார் லோகி. “இல்லை, மேல்வரும்படிக்காக இட்லிக்கடை நடத்தினாள்” இப்படி. நான் பலமுறை வாய்விட்டுச்சிரித்துவிட்டேன்.

அவளிடம் நாங்கள் சினிமாக்காரர் என்று சொல்லவேண்டாம் என்று லோகி சொல்லியிருந்தார். அவள் சினிமா வாய்ப்புக்காக பேச ஆரம்பித்துவிடுவாள் என்றார். ஆனால் அவரே அவர் சினிமாக்காரர் என்றார். அவள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சினிமாபற்றிய நக்கல்கள் சரசரவென்று வந்து விழுந்தன. என்.டி.ஆர் படங்களின் பெண்கள் அரைடிரௌசர் போட்டு ஆண்பிள்ளைத்தனமாகத்தான் வருவார்கள், ஏனென்றால் அவர் கொஞ்சம் பெண்பிள்ளை மாதிரி இருப்பார் என்றாள்.

பேசப்பேச லோகி ஆர்வமிழந்தபடியே வந்தார். சீக்கிரத்திலேயே “சரி, தூக்கம் வருகிறது” என்றார். உடனே தூங்கிவிட்டோம். மறுநாள் காலை அவள் கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்து அனுப்பினோம். அவள் இயல்பாகச் சிரித்து விடைபெற்றுக் கிளம்பினாள். லோகி என்னிடம் “எனக்கு திடீரென்று சலிப்பாகிவிட்டது. கதையே இல்லை” என்றார்

“ஏன் ?” என்றேன். ”அவளிடம் குற்றவுணர்ச்சியோ தன்னிரக்கமோ இல்லையே. பள்ளிக்கூடவாத்தியார் வேலைக்கும் அவள் செய்வதற்கும் வேறுபாடே தெரியவில்லை…”. நான் அப்போதுதான் அதை உணர்ந்தேன். லோகி கேட்ட கேள்விகள் எல்லாமே ஒரு கண்ணீர்க்கதையை எதிர்பார்த்து. அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள். “ஒருவேளை வெளியே சிரிப்பு உள்ளே கண்ணீர் என்று இருக்குமோ என்று பார்த்தேன். உள்ளேயும் அதே சிரிப்புதான்”

அங்கிருந்து ராஜமுந்திரி சென்றோம். நான் கேட்டேன். “ஏன் லோகி, கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சி இல்லாத ஒரு விபச்சாரியை சினிமாவில் காட்டமுடியுமா?” லோகி “எடுக்கமுடியும், கேன் திரைப்பட விழாவில் காட்ட்லாம்” என்றார்.

குங்குமம் முகங்களின் தேசம் தொடர்

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்னை வெண்முரசு கலந்துரையாடல்