கிருஷ்ண தரிசனம்

7

ஜெ, ​

இது நாள் வரை வெண்முரசின் கிருஷ்ணன் சமகால தொன்மமாக, பிறரின் கண்களின் வழியாக வெளிப்பட்டான். சொல்வளர்காட்டில் உருவாகி வரும் கிருஷ்ணன் புரட்சியாளனும், தத்துவ ஞானியும். தேடலால் அலைக்கழிக்கப்படுபவன். நீலத்தில் வந்த கிருஷ்ணனுக்கும், சொல்வளர் காட்டில் உருவாகி வரும் கிருஷ்ணனுக்கும் எவ்வளவு வித்தியாசம்? நீங்கள் பேலூரில் பிரமனின் கையிலிருக்கும் ஒற்றைத் தந்தி யாழையும்,மறு கையிலிருந்த வஜ்ராயுதத்தையும் கவிதையும், தத்துவமும் என விளக்கியது நினைவுக்கு வருகிறது.

கஸந்ஸாகீஸின் ‘இறுதி சபலத்தின்’ தரிசனமாக நான் புரிந்து வைத்திருப்பது, மகத்தான மனிதர்கள் மகத்தான மனிதர்களாக அவதரிப்பதில்லை, எளிய மனிதர்களாக பிறந்து, மகத்தான செயல்களை செய்வதன் வழியாக, அதன் பொருட்டு அனைத்தையும் இழப்பதன் வழியாக, அதன் பொருளையும், பொருளின்மையையும் ஒன்றாக அறிந்து அல்லாடுவதன் வழியாக, சென்று சேர்கிறார்கள். அப்படி சேர்வதன் வழியாகவே அவர்கள் மகத்தானவர்களாக ஆகிறார்கள் என்பது’. கிறிஸ்துவும் கோபம் கொள்கிறார், ‘இந்த மடையர்களுக்கு ஏன் கடவுள் கையில் நெருப்புடன் அல்லது வாளுடன் வருபவராக இருக்க கூடாது’ என்று நினைக்கிறார், பின்பு இவர்களுக்கு நானும் இல்லா விட்டால் வேறு யார்தான் இருப்பார் என்று கண்ணீர் விடுகிறார். தத்துவத்தை அணுகும் ஒருவனே தீயில் நுழைந்து வருவதை போல அணுக வேண்டும் என்கிறது வெண்முரசு. எனில் கீதையை உரைத்தவன் எவற்றில் எல்லாம் ஆடி நின்றிருக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயங்கள் காட்டுகின்றன.

*

6

மேற்கத்திய அறிதல் முறைகள் ஒவ்வொரு துறைக்கும் தனக்கேயான அறிவுத் துறைகளை கொண்டுள்ளது. கலைக்கு அழகியல் போல. இலக்கியத்திற்கு ஹெர்மெனுட்டிக்ஸ் போல. அவற்றின் அறிதல் அந்த எல்லைக்குள் மட்டுமே செயல்படும். அவற்றை கொண்டு கீழை தரிசனங்களை அணுக முயற்சி செய்தால் அனைத்தையும் வடிவமாக குறுக்கும் இடத்திற்கே இட்டு செல்லும்.

லீலை, தாண்டவம் போன்ற இந்திய தரிசனங்களை அணுகுவது அத்தனை அறிதல் முறைகளையும் உள்ளடக்கி செய்ய வேண்டியது. அதனால் தான் கிருஷ்ணனை புரிந்து கொள்ள கீதையின் தத்துவமும், கீதகோவிந்தத்தின் கவிதையும், சிற்றோவிய மரபும், கேளு சரண் நடனமும், ஹரிகோவிந்தனின் கீத கோவிந்தமும், ​ஜஸ்ராஜின் மதுராஷ்டகமும் கொண்டு நெருங்கி, இவை அனைத்துக்கும் அப்பால் மிதந்து கொண்டிருக்கும் ஒன்றை உணர வேண்டி இருக்கிறது.அப்படி செய்யும் ஒருவனுக்கு இந்த தரிசனங்கள் என்றோ நிகழ்ந்தவை அல்ல, தன் உள்ளுணர்வை திறந்து வைத்திருக்கும் ஒருவனுக்கு, அனைத்தையும் தனித் தனி வடிவமாக அன்றி, அனைத்தையும் ஓன்றாக இணைக்கும் சரடு நோக்கி தேடுபவனுக்கு இன்றும் தொட சாத்தியமானவையே. இதை நான் உணர்ந்தது வெண்முரசு வழியாகவே.

5

மேற்சொன்ன அனைத்து கலைகளிலும் ​கிருஷ்ண தரிசனத்தின் ஏதேனும் ஒரு பகுதியே கிருஷ்ணனாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பாகவதத்தில் வரும் கிருஷ்ணணுக்கும், கீதையின் கிருஷ்ணணுக்கும் உள்ள தூரம் பிற வடிவங்களுக்கிடையிலும் உள்ளது. வெண்முரசு மீண்டும் அவற்றை இணைத்து முழுமையான தரிசனமாக்குகிறது.​ ஓஷோ கிருஷ்ணன் என்பது ஓர் ​உணர்வு நிலை (consicousness) என்கிறார், உங்கள் வார்த்தையில் “அது” (That). எனவே அது என்றோ நிகழ்ந்த ஓன்று அல்ல. இன்றும் உணர கூடிய ஒரு நிலையே என்கிறார்.

*

4

தொடங்கினால் நிறைய எழுத வேண்டும், வெண்முரசின் வழியாக நான் அறிந்தவற்றைக் குறித்து, நான் அறிந்த கிருஷ்ணனை குறித்து. அவனை மதுராவின், பிருந்தாவனின் ஹோலி கொண்டாட்டங்களில் உணரக் கிடைத்த வெவ்வேறு தருணங்கள் குறித்து. ஒரு முழு மாதம் நீடித்த அந்த ​ உணர்வு நிலையை மீண்டும் எதிர் கொள்ள நேரும் என்பதனால் அந்த புகைப்படங்களையே இன்னமும் மறுமுறை பார்க்காமல் இருக்கின்றேன். அந்த கிருஷணனை இந்த அத்தியாயங்கள் காட்டுகின்றன.மதுராவில் இருந்த பதினைந்து நாட்களும், வெண்முரசின்  வழியாக நான் அடைந்தவை எவை என்பதை அறிந்து கொண்டேன். இந்த வாழ் நாள் முழுவதும் நான் அளித்தாலும் கூட அவற்றை வெளிப்படுத்திவிட முடியுமா என்று தெரியவில்லை. வெண்முரசிற்காக இதுவரை நான் தங்களுக்கு நன்றி சொன்னதில்லை, இப்பொழுது நான் அங்கு எடுத்த சில புகைப்படங்களை உங்களுக்கு அனுப்புகிறேன். அதை விட வேறு எப்படியும் என்னால் சொல்லி விட முடியாது.

ஏ.வி.மணிகண்டன்

32

1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53
அடுத்த கட்டுரைபுரட்சி இலக்கியம்