அன்புள்ள ஜெயமோகன்,
இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பல மாதங்களாகவே உங்களுடன் உரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கட்டாயமாக உங்களுக்கு எழுதியே தீர வேண்டும் என்ற சூழ்நிலையில் இப்போது உள்ளேன்.
வாழ்க்கை மற்றும் உறவு சம்பந்தமாக எழுந்த உள தடுமாற்றமே இதற்கு காரணம். சாதி, குலம் சம்பந்தமாக என் சொந்த வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகளும் அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பங்களுமே இதன் முதல் படி. நானும் முற்போக்கு சிந்தனையாளன் என்று எண்ணிக்கொண்டு சாதியை முற்றுமாக ஒதுக்கி வைத்து வாழ்ந்து வந்தேன். உங்கள் கட்டுரைகள் மூலம் அது ஒரு தவறான புரிதல் என்று கண்டேன். நம் சமூக வரலாற்றை தெரிந்து கொள்ள சாதியை பற்றின புறவயமான அறிதல்களும் தேவை படுகின்றன என்பதை புரிந்துகொண்டேன்.
என் பிரச்சனைக்கு வருகிறேன். எங்கள் குடும்பம், நான் என் தங்கை அப்பா அம்மா தாத்தா ஆயா என்று ஆறு பேரை உள்ளடக்கியது. கண்டிப்புகள் இல்லாத பாசமான பெற்றோர்கள். பிறந்தால் இப்படி குழந்தைகள் வேண்டும் என்று எங்களை பார்த்து சுற்றம் ஏங்கும் பிள்ளைகள். எங்கள்சாதியில் ஒரே குலத்தில் பிறந்தால் அவர்களை பங்காளிகள் என்றும் அவருடைய குழந்தைகள் சகோதர சகோதிரிகள் என்றும் வழக்கம் உள்ளது.
நாங்கள் இருவருமே படித்து விட்டு இப்போது சென்னையில் ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். குழந்தைகள் இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள் என்று பெருமையோடு சுற்றி வருகின்றனர் என் பெற்றோர்கள். நாங்கள் பிறந்ததில் இருந்து ஒரே ஊர் தான். பங்காளிகள் உறவுகள் எல்லாமே எங்கள் ஊரை சுற்றியே இருக்கின்றனர்.
நான் என்னோடு கல்லூரியில் படித்த பெண்ணையே காதலித்து மணந்து கொண்டேன். அவளும் எங்கள் சாதிப்பெண்ணே (வேறு குலம்) என்றதனால் ஊராருக்கும் பங்காளிகளுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட மணம் போல ஒரு நல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றி நல்ல படியாக திருமணம் முடிந்துவிட்டது. தங்கைக்கு பின் தான் அண்ணன் திருமணம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் என் திருமணம் என் தங்கைக்கு முன்னால் நடந்த காரணம் அவளுடைய காதல் கதை.
அவளும் கல்லூரி நாட்களில் தன்னோடு படித்த ஒரு பையனை காதலிக்கிறாள். அவனும் எங்கள் சாதிப்பையன் தான். ஆனால் எங்கள் குலமே. அதாவது என் தங்கைக்கு அண்ணன் முறை ஆகிறது சாதிய வழக்கப்படி. இதுவே அவளது திருமணத்துக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. அவள் இஷ்டம் இல்லாமல் வேறு ஒரு மணம் செய்து வைப்பதில் எங்கள் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. எனவே, அவள் ஆசைப்படும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களையும் அதனால் அவள் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கப்போகும் அவமானங்களையும் அவளிடம் சொல்லி புரிய வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஊர் நடுவிலும் பங்காளிகள் நடுவிலும் சொந்தங்கள் நடுவிலும் இனி மேல் பழைய மாதிரி இருக்க முடியாது என்ற வருத்தம் என் பெற்றோர்கள் நிம்மதியை குலைகின்றது. நாங்கள் வார விடுமுறையை கழித்து விட்டு சென்னைக்கு வந்து விட்டாலும் அவர்கள் உலகம் அங்கேயே தான் சுழன்று கொண்டு இருக்க போகிறது.
இவை அனைத்தும் என் தங்கைக்கு புரிந்தாலும் அவள் மனதால் பிரியம் கொண்ட காதலை அவளால் உதறிவிட்டு வர இயலவில்லை. இருபுறமும் அழுகையை மட்டுமே பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இது தான் எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது. நானும் பலவாறு இதை யோசித்து பார்க்கிறேன். “வேறு சாதியில் வேறு மதங்களில், சித்தப்பா பெரியப்பா மகன்களை மகள்களை கூட திருமணம் செய்து கொள்ளகிறாரகள். நம் சாதியிலேயே கூட அத்தை மகன்களை மகள்களை மனக்கிறார்கள். அதிலும் ரத்த சொந்தம் தானே இருக்கிறது” என்று பலவாறு என் மனைவியோடு விவாதித்திருக்கிறேன். அவளோ “அது சரி தான். அனால் நீ உன் சித்தி பெண்ணையோ பெரியப்பா பெண்ணையோ அல்லது உன் தங்கையையோ திருமணம் செய்து கொள்ளவாயா . எல்லா விஷயங்களையும் தர்க்க பூர்வமாக மட்டும் பார்க்க முடியாது” என்பது அவள் கொதித்து எழுந்து சொல்லும் வாதம்.
இந்த விஷயத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். நான் இதை எப்படி அணுகவேண்டும் என்ற குழப்பம் என்னுள் தீராமல், கடலை அடைய முடியாத நதி போல பாய்ந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கை சார்ந்தோ ஆன்மீகம் சார்ந்தோ எந்த ஐயம் வந்தாலும், நான் வந்தடைவது உங்கள் வலைத்தளத்தை தான். இன்றும் உங்களையே நாடி வந்துள்ளேன்.
- S:
(சாதி பெயரை குறிப்பிட்டது இந்த பிரச்னையின் முழுமையை விளக்க தான். இதை பிரசுரிக்கும் போது என் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். )
அன்புடன்,
வாசகர்
***
அன்புள்ள நண்பருக்கு,
குலம், கோத்திரம், சாதி ஆகியவற்றின் வரலாற்றுப்பரிணாமத்தை ஓரளவு உணர்ந்துகொண்டால் இந்தச்சிக்கலை எளிதில் கடக்கமுடியும். பெரிதாக வளர்ந்த குடும்பமே குலம் என்று புரிந்துகொள்ளலாம். அவர்களுக்குள் குருதித் தொடர்பு இருக்கும். குடும்பங்கள் குலங்களாகி வளர்ந்தது வரலாற்றின் ஒரு பெரிய திருப்புமுனை
குலங்களின் தொகுதியே கோத்திரம். கோத்திரம் இயல்பான ஒரு குருதிக்கூட்டம் அல்ல. [கோத்திரம் என்றாலே கூட்டம் என்றுதான் பொருள்] ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலிருந்து ஒன்றாக இடம்பெயரும் குழு ஒரு கூட்டமாக ஆவதுண்டு. ஒரு குறிப்பிட்ட குருவின் மாணவர்கள் கோத்திரமாக ஆவதுண்டு – அந்தணர்களின் கோத்திரப்பிரிவினை இவ்விரு வகைக்குள் அடங்குவதாகவே உள்ளது
ஒரு தொழிலுக்குள் குறிப்பிட்ட துணைத்தொழில் செய்பவர்கள் ஒரு கோத்திரமாகச் செயல்படுவதை ஆசாரிமார் போன்ற கைத்திறனாளர்களிடையே காணலாம். பழங்கால workers guild கள் அவை. இன்னும் பலவகையான கோத்திர அடையாளங்கள் உள்ளன. சில சாதிகளில் அவர்களின் குலதெய்வங்கள் சார்ந்து கோத்திரக்கட்டுமானம் உள்ளது. நில உரிமைகள் சார்ந்துகூட கோத்திர அடையாளம் உள்ளது.
இவை பழங்குடிவாழ்க்கைக்காலம் முதல் உள்ளவை. பல்வேறு நடைமுறைத்தேவைக்காக உருவாகி வந்தவை. கோத்திரங்கள் இணைந்து உட்சாதிகளாகின்றன. உட்சாதிகளின் தொகுப்பே சாதிகள்.
ஆனால் நம் நம்பிக்கையை உறுதிசெய்யும்முகமாக இவை பெரியவர்களால் பிரிவினைசெய்து உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. சமூகவளர்ச்சியின் பரிணாமம் என்பது இணைவே ஒழிய பிரிவு அல்ல.
இங்கே உட்சாதிகள் இல்லாத சாதியே இல்லை. ஆச்சரியமென்னவென்றால் ஆங்கிலேயர் 1891ல் எடுத்த முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒரே இயல்புகொண்ட வெவ்வேறு சாதிகளை ஒன்றாக ஆக்கினர். அவை இணைந்து ஒரே சாதியாக இன்று உள்ளன. இன்றைய பல சாதிகள் அப்படி அன்று உருவானவை. இப்படித்தான் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூறாண்டு கழித்தால் அந்த அடையாளம் அழியாதது, ஆயிரமாண்டுக்காலம் பழைமையானது என நம்ப ஆரம்பிப்போம்.
உட்சாதிகளுக்குள் திருமணம்செய்யும் வழக்கம் சென்ற தலைமுறை வரை இல்லை. இன்று சாதாரணமாக ஆகத் தொடங்கிவிட்டது. கேரளத்தில் சமானமான சாதிகளிடையே திருமணம் சாதாரணமாக ஆகியுள்ளது. நூறாண்டுகளுக்கு முன் துணைச்சாதிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத தனிச்சாதிகளாகவே இயங்கிய. கொள்வினை கொடுப்பினை இல்லை. அதெல்லாம் மாறிவருகின்றன
கோத்திரங்களுக்குள் திருமணம் செய்யக்கூடாது என்பது பல காரணங்களுக்காக. சிலகோத்திரங்கள் ஒரே குருதி கொண்டவை என்பது ஒரு காரணம். ஆனால் அந்த அடையாளத்துக்கு எப்படியும் முந்நூறு நாநூறாண்டுக்காலம் தொன்மை இருக்கும். அப்படிப்பார்த்தால் எவருக்கு எவர் குருதியுறவு என்று இன்று சொல்லவே முடியாது
கோத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று உறவுகொண்டாகவேண்டும்என்பதனாலும், இல்லையேல் சாதியின் கட்டமைப்பு குலைந்துவிடும் என்பதனாலும் ,கோத்திரங்களே சாதிகளாக ஆகிவிடும் என்னும் அச்சத்தாலும் கோத்திரத்திற்குள்ள்ளேயே திருமணம் செய்துகொள்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மற்றபடி சகோதர உறவு என்பதெல்லாம் பயப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்ட மிகைக்கூற்று மட்டுமே.
இன்று இந்த அடையாளங்களெல்லாமே பொருளிழந்து வருகின்றன. இவற்றுடன் உணர்வுரீதியாக சம்பந்தப்படுத்திக்கொள்வது நம்மை மேலும்மேலும் சிறைகளுக்குள் அடைத்துக்கொள்வது மட்டுமே. நான் சாதியையும் சேர்த்தே சொல்வேன். சிறையில் இருக்கும்போது ஓர் அசட்டுப்பாதுகாப்புணர்வு ஏற்படும். ஆனால் வாழ்க்கையை இழந்துவிடுவோம்
கடைசியாக, நாலுபேர் என்னசொல்வார்கள் என்ற கவலையால் வாழ்க்கையை முடிவெடுத்துக்கொள்வதுபோல அபத்தம் வேறில்லை. அந்த நாலுபேர் அதிகம்போனால் நாலுநாட்களுக்குமேல் வம்பாகக்கூட எதையும் பொருட்படுத்துவதில்லை இன்று
இன்றைய வாழ்க்கை முன்பு போல ஒரே ஊரில் ஒரே சாதிசனத்துக்குள் அடைபட்டது அல்ல. அது உலகமெங்கும் பரவி விரிந்துள்ளது. சாதிசார்ந்த வாழ்க்கை இங்கு எங்கும் இன்றில்லை. உழைப்பும் நுகர்வுமாக இன்று வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.
ஜெ