‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58

[ 7 ]

விழித்தெழுந்தபோது தருமன் தன்னை யட்சர்களின் நடுவே கண்டடைந்தார். அஞ்சி எழப்போனபோது “அஞ்சற்க!” என்ற குரல் கேட்டது. நாரையின் குரல் எனத் தெரிந்தது. மீண்டும் அவர் எழமுயன்றார். “இது பகயட்சர்களின் நிலம். பகர்களின் அரசனாகிய என் பெயர் மணிபூரகன். என் குலம் இங்கு பல்லாண்டுகளாக வாழ்கிறது. என் விருந்தினராக இங்கு இருக்கிறீர்கள்” என்றார் முதலில் நின்றிருந்தவர். தலை சுழன்றுகொண்டிருந்தமையால் தருமனால் எழமுடியவில்லை. கையூன்றி அமர்ந்தார்.

மணிபூரகனும் பிறரும் நாரையின் வெண்சிறகுகளால் ஆன பெரிய தலையணியும் வெண்ணிறமாக அடிதிருப்பப்பட்ட மான்தோல் ஆடையும் அணிந்திருந்தனர். கந்தகக்கல்லின் மஞ்சள் நிறம்கொண்ட உடல்கள். நீலக்கூழாங்கற்கள் போன்ற விழிகள். நாரை போல உடலைக் குவித்து கைகளைக் கூட்டியபடி அவர்கள் அவரைச் சூழ்ந்து நின்றிருந்தனர். நான்குபக்கமும் மஞ்சள்நிறமான பாறையடுக்குகள் சூழ்ந்த வட்டமான முற்றத்தில் பொழிந்த வெயில் வெண்மையால் பெருக்கப்பட்டு ஒளிகொண்டிருந்தது. பாறையிடுக்குகளுக்குள் இருள் தெரிந்தது. அவை குகைகள் என தோன்றியது. அங்கிருந்து பெண்களும் குழவியரும் எட்டிப்பார்த்தனர்.

உடலும் ஆடையும் அணியும் வெண்ணிறம் கொண்டிருந்த அவர்கள் அப்படியே அந்த நிலத்தின் வெண்மையில் ஒட்டி விழிமுன்னிருந்து மறைந்துவிடுபவர்கள் போலிருந்தனர். மணிபூரகன் “தாங்கள் எவரென்று தெரிந்துகொள்ளலாமா?” என்றார். “நான் இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாகிய யுதிஷ்டிரன். நாடுதுறந்து கானேகியவன். என் இளையோர் விடாய்நீர் தேடி இங்கு வந்தனர்.” அக்கணமே நினைவு தெளிய கையூன்றி எழுந்தமர்ந்து “அவர்களை நான் பார்த்தேன். அந்தச் சுனையின் கரையில்…” என்றார். நெஞ்சு அறைபட “என் உடன்பிறந்தோர். என்னாயிற்று அவர்களுக்கு? எங்கே அவர்கள்?” என்று கூவினார்.

“அவர்கள் ஒவ்வொருவராக இங்கு வந்தனர். முதலில் அப்பேருடலர். அருந்தவேண்டாம், அச்சுனையின் நீர் நஞ்சு. அது எங்களால் காக்கப்படுவது என்று கூவிச்சொன்னோம். அவர்கள் எங்களை எதிரிகளென்றே எண்ணினர். அவர்கள் படைக்கலம் கொண்டிருந்தமையால் நாங்கள் அருகணையவில்லை, எங்களை விழிகாட்டவுமில்லை. எங்கள் குரலை ஏதோ உளமயக்கென புறந்தள்ளி சுனைநீரை அருந்தி அவர்கள் உயிர்துறந்தனர்” என்றார் மணிபூரகன். தருமன் “இல்லை” என்று கூச்சலிட்டபடி பாய்ந்து அவர் தோளைப் பற்றினார். “அவர்கள் அப்படி இறக்கமுடியாது. அவ்வண்ணம் நிகழமுடியாது.”

மணிபூரகன் சிரித்து “இறப்புக்கு அப்படி நெறிகளுண்டா என்ன?” என்றார். “இல்லை, அவர்கள் இறக்கமாட்டார்கள்” என்றார் தருமன். “அத்தனை எளிய ஊழ்கொண்டவர்கள் அல்ல அவர்கள்.” மணிபூரகன் சிரித்ததும் சூழ்ந்திருந்த யட்சர்களும் சிரிக்கத்தொடங்கினர். அவர்களின் சிரிப்பை ஆற்றாமையுடனும் கண்ணீருடனும் நோக்கி “நிறுத்துங்கள்… அருள்கூர்ந்து நிறுத்துங்கள்… நான் என் தம்பியரை பார்க்கவேண்டும்… உடனே அவர்களை பார்த்தாகவேண்டும்” என்று தருமன் கூவினார். மணிபூரகன் சிரிப்பை அடக்கி “அனைத்து மெய்மைகளையும் அறிந்த ஒருவர் இத்தகைய அறிவின்மையை சொல்லும்போது எங்கோ எதுவோ மறுநிகர் கொள்கிறது” என்றார்.

தருமன் மெல்ல தளர்ந்து “ஆம், உண்மை. இறப்புக்கு மண்ணில் பொருள்கொள்ளும் நெறியென ஏதுமில்லை. முன்னரே நாம் அறியும் ஊழென்றும் ஒன்றில்லை” என்றார். மணிபூரகன் “அவர்கள் தங்கள் நீர்ப்பாவைகளுடன் உரையாடினர். பின்னரே நீரை அருந்தினர்” என்றார். “அவர்களை எனக்கு காட்டுங்கள்… தங்கள் அடிபணிகிறேன். முடியில் சூடுகிறேன். கனியுங்கள்” என அவர் கைகளை பிடித்துக்கொண்டு விம்மினார் தருமன். “வருக!” என மணிபூரகன் அவரை அழைத்துச்சென்றார். “இந்நிலமே மானுடருக்கு நஞ்சு. இக்காற்றில் மானுடரை உளமயக்கி உள்ளே குடியேறி அலையச்செய்து உயிர்குடிக்கும் எங்கள் காவல்தெய்வங்கள் குடிகொள்கின்றன.”

சுனைக்கு அப்பால் சேறு உலர்ந்து உருவான வரம்பு மறைத்தமையால் விழிக்குத் தெரியாமல் நான்கு உடல்களும் கிடந்தன. முதற்கணம் நால்வரும் சிறுமைந்தர்களாக அன்னையருகே துயின்றுகொண்டிருப்பதாக உளம் மயங்கி, உடனே தன்னுணர்வுகொண்டு அதிர்ந்து, முன்னால் ஓடி, திகைத்து நெஞ்சக்குலையில் வேல் செருகப்பட்டவர் போல நின்று நடுங்கினார். கைகள் அறியாது நெஞ்சோடு சேர்ந்து கூப்பிக்கொண்டன. பீமன் கைகளை விரித்து விடுவிக்கப்பட்ட விரல்கள் இல்லை என்பதுபோல் மலர்ந்திருக்க வானை நோக்கி பொருளில்லா விழிநிலைப்புடன் கிடந்தான். அர்ஜுனன் இனிய புன்னகையுடன் துயில்கொள்பவன் போல விழிமூடியிருந்தான். நகுலனும் சகதேவனும் கைகளைப் பற்றியிருந்தனர்.

கால்கள் உயிரிழக்க தருமன் விழப்போனார். நெஞ்சுக்குள் ஒரு நரம்பு சுண்டி இழுபட்டது. இடக்கை அதிர்ந்து பின் தளர்ந்தது. ஓடிக்கொண்டிருந்த உளப்பெருக்கின் அக்கணச்சொல் அப்படியே கல்வெட்டென நிலைத்தது. “நீர்மருது!” அச்சொல்லை நோக்கி மீண்டும் பெருகிய சித்தம் திகைத்துச் சுழன்றுவந்தது. நீர்மருதமா? அதன் பொருளென்ன? பொருளென ஏதேனும் உண்டா? அவர் விழிகளையும் நாவையும் செவிகளையும் ஆண்ட உள்ளத்துணர்வு அவர்கள் இறந்துவிட்டார்களென்பதை உறுதி செய்துகொண்டது. உடலுணர்வு கால்களை இயக்கி கொண்டுசென்றது.

“அவர்கள் எவரெனத் தெரியவில்லை எங்களுக்கு. இங்கு மானுடர் வருவது அரிதினும் அரிது. வருபவர்கள் மீள்வதுமில்லை” என்றார் மணிபூரகன். தருமன் தன் முகம் முழுக்க கண்ணீர் பரவி குளிர்ந்திருப்பதை உணர்ந்தார். அருகே சென்று மண்டியிட்டு பீமனின் தலையை வருடினார். “மந்தா” என மெல்ல அழைத்தபோது ஒலியெழவில்லை. அப்போதறிந்தார், தம்பியரில் தனக்கு முதல்வன் எவன் என. நெஞ்சு கொதித்துருகிக்கொண்டிருக்கையிலும் தொண்டை பதைத்ததே அன்றி ஒலியென ஏதுமெழவில்லை.

அறியா நிலமொன்றில் இருந்தார். அங்கே வெண்ணிற வெயில் மட்டும் சூழ்ந்திருந்தது. எங்கோ பறவைகளின் சிறகடிப்போசைகள். பீமனின் குழலையும் தோள்களையும் நடுங்கும் கைகளால் வருடிக்கொண்டிருந்தார். பின்பு நெடுநேரமாக அவனையே தொட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்து அர்ஜுனனின் கைகளைப் பற்றினார். நாணின் தழும்பேறிய சுட்டுவிரல். இளைய யாதவரின் நினைவு வந்தது. அவரிடம் அச்செய்தியைச் சொல்வதுபோல காட்சி உருவாகி உடனே அழிந்தது. அவர் ஏற்கெனவே அறிந்திருக்கக்கூடும். அர்ஜுனனின் கைமேல் வந்தமர்ந்த ஈ ஒன்றை கையால் வீசித் துரத்தினார். காலில் இருந்த மணல்பொருக்கை தட்டித்துடைத்தார்.

நகுலனையும் சகதேவனையும் அணுகி கன்னங்களை வருடினார். அப்போதும் சிறுவர்களைப்போலவே தோன்றினர். அவர்களுக்கு முதுமையே இல்லை. எண்ணங்கள் ஏன் இப்படி பெருகிச்செல்கின்றன? நீர்மருது. என்ன ஒரு பொருளற்ற சொல். ஆனால்… உடல் சிலிர்க்க அவர் நீர்மருதை கண்டார். அதனருகே செண்பகமரம். அதன் கீழே கிடந்தது பாண்டுவின் உடல். உடனே அறியாமல் அவர் விழி இளையோரின் இடைகளுக்குக் கீழே நோக்கியது. இல்லை, அவர்கள் விழைவுடன் இறக்கவில்லை. ஆனால் அவர்களுக்குள் நிகழ்ந்தது என்ன என்று எவர் அறியக்கூடும். என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? ஏன் இவ்வெண்ணப்பெருக்கு? எதைத்தொட்டு எதைக்கடந்து எங்கு செல்கிறது இது? மரம் விட்டுச்செல்லும் பறவைகளா அவை? அல்லது நெருப்பில் எழும் ஒளியலைகள்தானா?

மணிபூரகன் மெல்ல அசைந்ததை ஓரவிழி கண்டபோது அனைத்தும் கலைந்து அவர் மீண்டார். எழுந்தபோது உடல் இடப்பக்கமாக தள்ளியது. கைகளை ஊன்றி எழுந்து நின்று “யக்‌ஷர்களின் அரசே, என் இளையோருக்கான இறுதிச்செயல்களை இங்கேயே நான் செய்யவேண்டும். அதற்கு உங்கள் குடி எனக்கு உதவவேண்டும். இன்றே நான் கிளம்பி கீழே எனக்காகக் காத்திருக்கும் அந்தணரை அணுகவும் வேண்டும். அதற்குமுன் மான்கொம்பில் சிக்கி இங்கு வந்த அரணிக்கட்டைகளைத் தேடி எடுத்துக்கொள்ளவேண்டும்” என்றார்.

அருகே நின்ற ஒரு யக்‌ஷன் “இந்த அரணிக்கட்டைகள்தானா?” என்று காட்டினான். “ஆம்” என்றார் தருமன். அவன் “இவை அந்த மான் சென்ற வழியில் விழுந்துகிடந்தன… இங்கு அனலுண்ண கீழே சென்றுவரும் மான் அது ஒன்றே” என்றான். “ஆம்” என்று தருமன் பெருமூச்சுடன் சொன்னார். “நீங்கள் விரும்பியதை இங்கு செய்யலாம், அரசே” என்றார் மணிபூரகன். “இவ்விளையோரும் எங்கள் விருந்தினராக ஆகிவிட்டனர் இன்று.”

குழவியரும் பெண்களும் விழிதிருப்பினர். மணிபூரக யக்‌ஷர் திரும்பி நோக்கி தலைவணங்கினார். மஞ்சள்பாறைகளுக்கு அப்பாலிருந்த சிறிய குகைவாயிலிருந்து முதிய யட்சன் ஒருவர் தோன்றினார். நாரையிறகு சூடிய தலை எழுந்தபோது ஒரு பறவை சிறகசைப்பதாகவே தோன்றியது. “எங்கள் முதுமூதாதை…” என்றார் மணிபூரகன். “அவர் பெயர் மணிபத்மர்… இக்குடியின் அரசராக எண்பதாண்டுகாலம் இருந்து கனிந்து விலகியவர். மேலே தனிக்குகையில் விண்ணுடன் உரையாடி வாழ்கிறார்.” தருமன் கைகூப்பி தலைவணங்கி “யட்ச மூதாதையை வணங்குகிறேன்” என்றார்.

அவர் விழிகள் நோக்கற்றவை போலிருந்தன. “எந்நிலையிலும் முறைமை மறக்காத நீ அரசனென்றே காட்டிலும் வாழ்பவன். நன்று” என்றார். “யட்சர்கள் கீழே வாழும் மானுடர் அல்ல. இங்கிருந்து அங்கு செல்லும் இந்த நாரைகளே உயிரழிக்கும் நஞ்சை பரப்புகின்றன. நாங்கள் சென்றால் உங்கள் நகர்கள் முற்றழியும். அங்கிருந்து எவர் இங்கு வந்தாலும் நாங்களும் அழிவோம். எனவே வந்தவரை நாங்கள் மீளவிடுவதில்லை. இங்கு வரும் அயலவர் இங்குள்ள அனல்வாய்களில் எரியூட்டப்படவேண்டுமென்பதே நெடுநாள் நெறி.”

“நாங்கள் அதை அறியவில்லை. விடாய்நீர் தேடி வந்தவர்கள்” என்றார் தருமன். “ஆம், அவர்களில் ஏறிவந்தன எங்கள் தெய்வங்கள். அத்தெய்வங்களினூடாக அவர்களிடம் நீருண்ணும்படி சொன்னேன். எல்லைகடந்து வந்த அவர்களை நானே கொன்றேன்” என்றார் மணிபத்மர். “உன்னிடமும் சொன்னேன்.” தருமன் அவரை நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு “ஆம், நீரில் எழுந்த விழிகளில் இரண்டு உங்களுடையவை” என்றார்.

“அது யட்சர்களின் உளம்புகும்கலை. உன்னுள் இருந்து நான் எடுத்த பாவை அது.” தருமன் “அவர் என் மூதாதை சித்ராங்கதர்” என்றார். “ஆம், என்னுருவை விலக்கி பிறிதொன்று தன்னுருக் காட்டி உன்னை மீட்டது” என்றார் மணிபத்மர். “அதுவே என்னை உன்பால் ஈர்த்தது. நீ கொண்ட நுண்ணறிவை நானும் பெற விழைவூட்டியது. உன்னுள் புகுந்து உரையாடியவன் நானே. நீ அதை ஒரு சுவடிநூலென உளம் கொண்டாய். அந்நூலில் ஒரு நாரையென நான் உருக்கொண்டேன்.”

மணிபத்மர் தருமன் முன் வந்து நின்றார். “எஞ்சும் மூன்று வினாக்களை கேட்கிறேன். நீ சொன்ன விடைகள் அனைத்தும் மானுடருக்குரியவை, யட்சர்களுக்கு அவை பொருளற்றவை. இவற்றுக்கு யட்சர்களுக்கும் உரிய மறுமொழிகளை சொல்க! உன் இளையோரில் ஒருவரை நான் உயிர்கொள்ளச் செய்கிறேன்.” தருமன் திரும்பி நோக்கியபின் “தனியொருவனுக்குரிய அறிவு என இப்புவியில் ஏதுமில்லை. எனவே என் விடைகள் என் ஆசிரியர்களுக்கும் உரியவை” என்றார். மணிபத்மர் “சொல்க, துயர்களில் பெரியது எது? சுமைகளில் அரியது எது? நோய்களில் கொடியது எது?” என்று கேட்டார்.

தருமன் “மைந்தனை இழக்கும் தந்தையின் துயர். மண்ணில் அதற்கு நிகரில்லை, ஏனென்றால் அம்மைந்தரை ஈன்றதுமே அது தொடங்கிவிடுகிறது” என்றார். “சுமைகளில் அரியது கரு தாங்குதல். அன்னை அதை இறக்கிவைக்கவே முடியாது. மூத்தவரே, நோய்களில் கொடியது வஞ்சம். அதற்கு மருந்தே இல்லை. நோயுற்றவரை, அவர் சுற்றத்தை, அவர் எதிரிகளை, அச்சூழலை அழிக்காமல் அது அடங்குவதில்லை.” அவற்றை கண்களைச் சுருக்கி முகம்கூர்ந்து கேட்டிருந்த மணிபத்மர் சிலகணங்களுக்குப்பின் “ஆம், இம்மூன்றுமே எங்கும் திகழும் உண்மைகள். நீ பிறரையும் அறியும் அரசன். உனக்கு நாங்கள் எதிரிகளல்ல” என்றார்.

திரும்பி பாண்டவர்களின் உடல்களை நோக்கிய மணிபத்மர் “அரசே, நான் என் உயிரில் ஒரு பகுதியை இவர்களில் ஒருவருக்கு அளிக்கமுடியும். நீ விழையும் ஒருவனை சுட்டு!” என்றார். தருமன் “இவன் நகுலன், மூன்றாம் இளையோன். இவன் எழுக!” என்றார். விழிசுருங்க கூர்ந்து நோக்கிய மணிபத்மர் “என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவன் வில்விஜயன், அவனின்றி உன் அரசு மீளாது. இவன் பெருந்தோள் பீமன். இவனின்றி நீ இக்காட்டைவிட்டே செல்லமுடியாது. இவனோ வலுவில்லா இளையோன்” என்றார். “ஆம், அதை நானும் அறிவேன். மூத்தவரே, எந்தைக்கு தேவியர் இருவர். குந்திக்கு மைந்தனென நானுள்ளேன். மாத்ரிக்கு மைந்தனென மூத்தவன் எழவேண்டும். அதுவே உகந்த நெறி” என்றார்.

அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. இருமுறை ஏதோ பேசவிழைபவர் போல வாயசைத்தபின் தொண்டையை கனைத்தார். “மூத்தவரே, வாழும் மானுடரின் கடன் உடன்வாழ்பவரிடம் மட்டும் அல்ல, நீத்தாரிடமும் கூடத்தான். ஏனென்றால் நாம் நம் ஆணவத்தால் வாழ்க்கையை துண்டுபடுத்திக்கொள்கிறோம். இது வாளால் வெட்டிப் பிளக்கவியலாத நதிப்பெருக்கு.” மணிபத்மர் “ஆம்” என்றார். அவர் வாய் முதியவர்களுக்குரியபடி நடுங்கிக்கொண்டிருந்தது. அந்த நடுக்கம் உடலெங்கும் பரவியது. தன்னுள் ஓடிய எண்ணங்களில் கட்டுண்டவர் போலிருந்தார்.

பின்பு பெருமூச்சுடன் மீண்டு “அரசனே, அறம் முற்றுணர்ந்தவன் அமரும் அரியணை என்பது அவன் குடிகளுக்குரியது மட்டுமல்ல. தலைமுறைகள் சுட்டிக்காட்டும் தெய்வக்கருவறைபீடம் அது. நீ ஒருநாள் காடுகடந்து ஊர்மீண்டு வென்று அரியணையமரவேண்டும். உன் கைகள் அமுதகலமாக வேண்டும். கோல் சூடி ஆண்டு காலம் கடக்கையில் என்றேனும் அனைத்தும் வீண் என உணர்வாய் என்றால் இங்கு மீண்டு வருக! அன்று நான் உன்னிடம் சொல்ல ஒரு சொல் எஞ்சியிருக்கிறது” என்றார்.

அவர் மெல்ல கையூன்றி தரையில் அமர்ந்தார். “உன் தம்பியர் நால்வருக்கும் என் உயிரை அளிக்கிறேன். அழைத்துச் செல்க!” என்றார். பதறியபடி முன்னால் சென்று “இல்லை, அது முறையல்ல” என்றார் தருமன். “இது முதிர்ந்த உயிர் அரசே. என்று நான் இனியெழும் காலத்தின் அறத்தை முழுமையாகக் கண்டு நிறைகிறேனோ அன்று விடைகொள்ள வேண்டும் என்பது என் ஆசிரியரின் நல்வாக்கு. இன்று அது அமைந்தது. நன்று சூழ்க!” அவர் உடல் மழைவிழுந்து நடுங்கும் இலைபோல அதிரத்தொடங்கியது. மல்லாந்து விழுந்து கைகளால் மண்ணை பற்றிக்கொண்டார். கைகள் இழுபட்டு பின் அசைவிழந்தன. மூச்சு ஏறியமைந்தது. பெண்களும் குழந்தைகளும் ஓடிவந்து அவரைச் சூழ்ந்தனர். யட்சர்கள் அவரை நோக்கி கைகூப்பியபடி அசைவற்று நின்றனர். அவரிலிருந்து அவர் விடுபடும் அக்கணம் ஒரு விதிர்ப்பாகத் தெரிந்தது.

தருமன் பீமனின் அசைவைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பினார். அவன் எழுந்து சுற்றும் நோக்கி “யார்?” என்றான். அக்கணத்திலேயே அர்ஜுனனும் எழுந்துவிட்டான். “மூத்தவரே” என்றான். “இது யக்‌ஷரின் நிலம். நீங்கள் உயிர்மீண்டுவிட்டீர்கள்” என்றார் தருமன். பீமன் எழுந்து தருமனின் கைகளைப் பற்றியபடி “மூத்தவரே, நீங்கள் நலமாக உள்ளீர்கள் அல்லவா?” என்றான். அர்ஜுனன் “உங்களைக் காக்காமல் வீழ்ந்துவிட்டோம், அரசே” என்றான். தருமன் “நானும் நீங்களும் நலமாக இருக்கிறோம். நம் அன்னையரின் அருள்… இதோ இந்த முதிய யட்சரின் கொடை” என்றார்.

மணிபூரகன் அருகே வந்து “அவருடன் நானும் உங்கள் உள்ளத்துக்குள் வந்திருந்தேன். அவர் உள்ளத்துடன் இணைந்திருந்தேன்” என்றார். நகுலனும் சகதேவனும் எழுந்து தங்கள் உடல்களை உணர்ந்து கைகால்களை நீட்டி விரித்துக்கொண்டார்கள். “மூத்தோர் சாவு எங்களுக்குப் பெருவிழவு. இந்நாளை எங்கள் தலைமுறைகள் நினைத்திருக்கும்” என்றார் மணிபூரகன். “மூத்தவரின் புதைவுகொண்டாடி உணவுண்டபின் நீங்கள் திரும்பவேண்டும்.” தருமன் “ஆம், அது என் நல்லூழ்” என்றார்.

கீழே வெண்ணிற மண்ணில் ஒரு சேற்றுத்தடமென முதிய யட்சர் மாறிவிட்டிருந்தார். தருமன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினார். திரும்பி தம்பியரிடம் “இளையோரே, இனி என்றும் உங்கள் மூதாதையர் நிரையில் இவரும் நினைவுகூரப்படவேண்டும்” என ஆணையிட்டார். அவர்கள் சென்று அவர் கால்களில் தலை பணிந்து வணங்கினர்.

 

[ 8 ]

உளமென ஆகிவிடும் இயல்புகொண்டது நிலப்பரப்பு. எண்ணங்களும் வெண்வெளியில் வெண்பெருக்காக இருந்தன. வெண்ணிற ஒளியில் வெண்ணிறமான நாரைகள் பறந்து சென்றன. அவற்றின் நிழல்களும் வெண்ணிறக் கறைகள்போல கடந்தகன்றன. ஓசைகள் வெண்ணிறப் பாறைகளில் பட்டு வெண்ணிறமாக திரும்பி வந்து சூழ்ந்தன. களைப்புடன் நின்றபோது பறந்துகொண்டிருந்த தன்னுணர்வு மெல்ல வந்து தன் உடல்மேல் படிந்ததுபோல உணர்ந்தார். கண்களை மூடிமூடித் திறந்தபோது மெல்ல வெண்ணிற அலைகள் அடங்கி நிழல்சூடிய பாறைகள் மும்முகப் பருவடிவுகொண்டு அணுகின.

நகுலன் “யட்சர்கள் அளித்த குடிநீர் எஞ்சியிருக்கிறது மூத்தவரே, சற்று அருந்துகிறீர்களா?” என்றான். அவர் வேண்டாம் என தலையசைத்தார். “இங்குள்ள பாறைகளில் செந்நிறம்கொண்டவை சொட்டும் நீரை மட்டுமே இவர்கள் அருந்துகிறார்கள்” என்றான் நகுலன். “எரிநிறைந்த மண். எரிபரவிய காற்று. இந்நச்சுவெளியிலும் இவர்கள் வாழ்வது விந்தைதான்” என்றான் சகதேவன். பீமன் “வஞ்சச்சூழலில் பழகியவர்களால் எங்கும் வாழமுடியும், இளையோனே. நாம் இதோ இதையும் வென்று மீள்கிறோம்” என்றான்.

“ஆம், இவ்வுளமயக்குகள் காட்டும் வஞ்சம் இப்போது நினைக்கையிலும் அச்சுறுத்துவது” என்றான் நகுலன். சகதேவனை சுட்டிக்காட்டி “நான் அந்நீர்ப்பரப்பை நோக்கியபோது அதில் எழுந்தவன் இவன். கனிந்து புன்னகை செய்து என்னிடம் அந்நீரை அருந்தும்படி சொன்னான். உருவிலிகளின் குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன, அருந்தலாகாது என்று. நான் தயங்கியபோது அருந்தாவிடில் நான் இறப்பேன் என்றான், ஏனென்றால் முன்னரே அவன் இறந்துவிட்டான் என விழிநீர் உகுத்தான். மூத்தவர்கள் இருவரும் அருந்தாமலேயே உயிரிழந்தனர் என்று சொல்லி அழுதான்” என்றான். விழிநீர் உகுத்தான்.” சகதேவன் சிரித்தபடி “அப்போது இவன் முகத்தை நான் நீரில் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிடம் இவன் மன்றாடிக்கொண்டிருந்தான்” என்றான்.

நகுலன் “நீங்கள் பார்த்த முகம் எது, மூத்தவரே?” என்றான். பீமன் திரும்பி நோக்கியபின் வானில் விழிநட்டு ஒன்றும் சொல்லாமல் நடந்தான். “சொல்லுங்கள் மூத்தவரே, நீங்கள் நோக்கியது யாரை?” என்றான் சகதேவன். “அவனை” என்று பீமன் சொன்னான். அவன் எவரை குறிப்பிடுகிறான் என்று புரிந்துகொண்டு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அப்படியென்றால் நீங்கள் நோக்கியது அவரை அல்லவா?” என்று அர்ஜுனனிடம் நகுலன் கேட்டான். அவன் ஆம் என தலையசைத்தான். “நாம் தனியாக எங்கும் போவதில்லை மூத்தவர்களே, துணையாக அவர்களை கொண்டுசெல்கிறோம்” என்றான் நகுலன் சிரித்தபடி. இறுக்கம் அகன்று இருவரும் புன்னகை செய்தனர்.

“நீங்கள் நோக்கியது எவரை, மூத்தவரே?” என்றான் நகுலன் தருமனிடம். அவர் “மூதாதையான சித்ராங்கதரை. நச்சுப்பொய்கையில் அவர் மூழ்கி மறைந்தார். இங்கு மேலேறி வந்தார்” என்றார். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. “அவர் முகத்தை நான் பார்த்ததில்லை. நம் அரண்மனையில் உள்ள பட்டுத்திரை ஓவியம் ஒன்றில் அவர் முகம் உள்ளது” என்று தருமன் தொடர்ந்தார். “அழகிய முகம். ஆனால் அதில் ஓர் பதற்றம் தெரியும்படி வரைந்திருப்பான் ஓவியன். அந்தப் பதற்றம் அப்படியே அம்முகத்திலும் இருந்தது.” நகுலன் “அது அவரது இறப்புக்குப்பின் வரையப்பட்டது” என்றான்.

“அவர் இன்றும் பதற்றம் கொண்டிருக்கிறார். மூன்று தலைமுறைக்காலம் நீர்க்கடன் அளிக்கப்பட்ட பின்னரும்கூட” என்றார் தருமன். “அந்த விழிகளை நான் மீண்டும் மீண்டும் காண்கிறேன். அவற்றில் மேலும் சொல்ல ஒரு சொல் இருந்தது…” நகுலன் “அது நம் உளமயக்கு, மூத்தவரே. இங்குள்ள கந்தக நஞ்சின் விளைவு அது” என்றான். “ஆம், நஞ்சினால்தான். ஆனால் எப்படியாயினும் என்னுள் இல்லாதது எழுவதில்லை. என்னுள் இருப்பதே வெளியேயும் விரிந்திருப்பது” என்றார் தருமன்.

“நாம் சற்று ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம், மூத்தவரே” என்றான் பீமன். “நாம் இன்று இருட்டுவதற்குள் சென்றுவிடமுடியும்.” நகுலன் “அங்கே முனிவர் எரிகுளத்தின் முன் அமர்ந்திருப்பார்” என்றான். அதை அவர்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தமையால் ஒன்றும் சொல்லவில்லை. தருமன் பாறைமேல் படுத்து விழிகளை மூடிக்கொண்டார். அவர் இமைகளுக்குள் விழியுருளைகள் அசைந்தன. ஏதோ சொல்லப்போவதுபோல இதழ்கள் கசங்கிக்கொண்டிருந்தன. மெல்ல மூச்சொலி எழ நகுலனும் சகதேவனும் துயில்கொண்டனர். தருமனும் சித்தம் மயங்கி அமிழ்ந்துகொண்டிருந்தார். “பகா!” என்ற ஒலியுடன் ஒரு நாரை அவர்களை கடந்து சென்றது. அவ்வொலி கேட்டு அவர் எழுந்தமர்ந்தார்.

SOLVALARKAADU_EPI_58

“மூத்தவரே!” என்றான் பீமன். “இளையோரே, நீங்கள் சென்று அரணிக்கட்டையை சுஃப்ர கௌசிகரிடம் அளியுங்கள். நான் திரும்பி இத்திசை நோக்கி செல்கிறேன்” என்றார் தருமன். “மூத்தவரே, என்ன சொல்கிறீர்கள்? அங்கே எரியுமிழும் கந்தமாதன மலை இருக்கிறது” என்றான் பீமன். “ஆம், அங்குதான் செல்கிறேன். எரிபுகுந்து உருகி மீளவேண்டும் என்று அருகப்படிவர் சொன்னது இதைத்தான்.” பீமன் சினத்துடன் “அறிவின்மை. நீங்கள் அத்தனை தொலைவுவரை செல்லும் உடலாற்றல் கொண்டவர் அல்ல…” என்றான். “இது உடல் பயணம் அல்ல. உடல் அழியுமென்றால் அழிக!” என்றார் தருமன்.

“நானும் உடன் வருகிறேன்” என்றான் பீமன். அவன் குரல் தணிந்து மன்றாட்டாகியது. “தங்களை தனியாக அனுப்பிவிட்டு என்னால் எப்படி இருக்கமுடியும், மூத்தவரே?” அமர்ந்தபடியே அருகணைந்து அவர் கால்களைத் தொட்டு “என்னையும் உடனழைத்துச் செல்லுங்கள்… என் மேல் கருணைகொள்ளுங்கள்” என்றான். தருமன் “மந்தா, புரிந்துகொள்! இது நான் தன்னந்தனியாக செய்யவேண்டிய பயணம். மீண்டுவர ஊழ் இருந்தால் அது நிகழும்” என்றார். நகுலனும் சகதேவனும் எழுந்து திகைப்புடன் நோக்கினர். அர்ஜுனன் “அவர் சென்றுமீளட்டும், மூத்தவரே” என்று பீமனிடம் சொன்னான். “கந்தமாதன மலைமேல் எவரும் சென்றதில்லை. அது பாறையுருகும் அனல்கொண்டது” என்றான் பீமன் உரத்தகுரலில்.

“ஆம், ஆனால் என் வழி அதுவே” என்றார் தருமன். “மூன்றாம் மாதம் முழுநிலவுநாள் வரை எனக்காக காத்திருங்கள். நான் மீளவில்லை என்றால் நகர்மீள்கையில் சகதேவன் இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியை சூடட்டும்.” சகதேவன் கண்களில் நீருடன் கைகூப்பினான். “நன்று சூழ்க!” என்றபடி தருமன் எழுந்துகொண்டார். “சென்று வருக, மூத்தவரே. நாங்கள் அங்கே காத்திருப்போம்” என்று அர்ஜுனன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். நகுலனும் சகதேவனும் உதடுகளை இறுக்கி அழுகையை அடக்கியபடி வணங்க அவர்களை கைதூக்கி வாழ்த்தினார். பீமன் தலைகுனிந்து அப்படியே அமர்ந்திருந்தான். “நான் திரும்பவில்லை என்றால் தான் வாழும் காலம்வரை மைந்தன் என நின்று மந்தன் எனக்கு நீர்க்கடன் செலுத்தட்டும்” என்றபின் அவன் தலையைத் தொட்டுவிட்டு தருமன் திரும்பிப்பாராமல் நடந்துசென்றார்.

முந்தைய கட்டுரைசென்னை வெண்முரசு கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைசண்டிகேஸ்வரர் – கடிதம்