எதிர்மறை மதச்சடங்குகள்

 

 

 

 

 

1

 

அன்புள்ள ஜெ

கோரதெய்வ வழிபாடு பற்றிய தங்களது பதிலை படித்தேன். என்னை எப்போதுமே வியப்புக்குள்ளாக்கும் விஷயமே “எதை நீ தேடுகிறாயோ அது உன்னையும் தேடிக்கொண்டிருக்கிறது” என்ற ரூமியின் வாக்கை போல எதைப்பற்றி எனக்கு கேள்வி எழுகிறதோ அதற்கான பதில் உங்கள் பதிவில் அடுத்தடுத்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

தத்துவரீதியாக உங்களது விளக்கம் நிச்சயம் நாங்கள் யோசிக்காத இன்னொரு கோணம் எப்போதும் போல.

பாதிக்கப்பட்டவர்கள் வெறியிலோ வலியிலோ மற்றவரை பழிவாங்காமல் இருக்கவும் மனசமாதானம் அடையவும் உக்கிர வழிபாடு ஒருவித சமாதானத்தையும் தெம்பையும் தருகிறது என வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் ஒரு காலத்தில் சிவ ஆஞ்சனேய வழிபாட்டிற்கே பயந்த சமூகத்தில் எப்படி பிரத்யங்கரா, வராகி போன்ற வழிபாடுகள் ஆரம்பித்தன.

என் இஸ்லாமிய பள்ளித்தோழி ஒருத்தி பயமுறுத்துவதற்காக முட்டை வச்சிடுவேன் என்பாள் சின்ன சின்ன சண்டைக்கும் அதற்கே அவளோட வச்சிக்காத என பயப்படுவார்கள்.

இப்போது பத்திரிக்கையுடனே யந்திரம் தருகிறார்கள் ஏதோ ஒரு பத்திரிக்கையுடன் சத்ரு சம்கார திரிசதி மந்திர புத்தகத்தை கொடுத்திருந்தார்கள்.

எதிரிகளை அழிக்கும் மிகவும் உக்ரமானதாக கருதப்படும் ஸ்லோகம் அது. தொழிலில் நட்டத்தை சந்திப்பவர்களும் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுமே யோசித்து செய்த வழிபாடு அது.

மரணமந்திரா சத்ரு சம்காரம் என்றெல்லாம் எளிதில் கிடைக்கிறது யூடியூபில்.

“என்னை ஒருவன் அவமதித்தான் அவனுக்கு தக்க பாடம் கற்பிப்பேன் இந்த மந்திரத்தை வைத்து” என ஒருவர் உள்ளீட்டிருந்தார் அப்படியான ஒரு வீடியோவின் கீழே.

கோர தெய்வ வழிபாட்டை நாடும் மனிதமனம் தான் இங்கு கேள்வியாக இருக்கிறது. போன தலைமுறையில் பொருட்கள் இற்றுப்போனாலும் முடிந்தவரை சரிசெய்து உபயோகப்படுத்துவார்கள் அப்புறம் வந்தது யூஸ் அண்ட் த்ரோ பொருட்கள். பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்தது போல் மனிதர்களையும் யூஸ் அண்ட் த்ரோவாக நினைக்க ஆரம்பித்திருக்கிறோமோ என்ற மனிதமனம் தான் பயமுறுத்துகிறது.

சின்ன தவறு செய்தாயா சின்னதாக காயப்படுத்தினாயா என எல்லாவற்றுக்கும் பெரிதாக ரியாக்ட் செய்யும் குரோதம்.

இது ஒருபக்கம் இந்த காலத்தின் அதீதமான மனவிகாரத்தை காண்பிக்கறதல்லவா.

மனிதர்களின் மெல்லிய உணர்வுகள் தொலைந்துபோய்க்கொண்டிருப்பதாக இல்லையா?

கோர தெய்வ வழிபாட்டை விட அகோர மனிதமனம் தான் மிகவும் கலவரப்படுத்துகிறது.

ப்ரியமுடன்
ஸ்ரீப்ரியா

***

அன்புள்ள ஸ்ரீப்ரியா,

கோரதெய்வங்களை வழிபடுவது, மாயமந்திரங்கள், அழித்தொழிப்புக்கான சடங்குகள் ஆகியவை எந்தக்காலத்திலும் கூடவோ குறையவோ செய்யாது. ஐரோப்பாவிலேயேகூட அவை இன்றும் வலுவான மறைமுகச் செயல்பாடுகளாகவே உள்ளன. அவை மானுடனின் அடிப்படையான அச்சம், வஞ்சம், ஐயம் ஆகியவற்றைச் சார்ந்தவை. அவை குறையுமென்றால் இவற்றின் இடத்தில் நேரடியான அடிதடி கொலைகளை நிகழ்த்தும் நிழலுலகம் எழுந்துவரவேண்டும்.

கோரதெய்வங்களை வழிபடுவது, மாயமந்திரங்கள், சடங்குகள் போன்றவை வேதங்களிலேயே உள்ளன. அதர்வவேதம் மறைமுகச்சடங்குகளையே பெரும்பாலும் பேசுகிறது. உலகியல் வெற்றிகளுக்காகச் செய்யப்படும் வேள்விகள் பூதயாகங்கள் எனப்படுகின்றன. அவை எப்போதும் இருந்தன. பலவகையான வேள்விகளை மகாபாரதம் சொல்கிறது. அவற்றின் பழங்குடி வேர் வலுவானது

பின்னர் இச்சடங்குகளும் குறியீடுகளும் தாந்த்ரீக முறைமைகளாக வளர்ச்சி பெற்றன. தாந்த்ரீகம் என்பது ‘குறியீட்டுச்செயல்பாடுகளால் மெய்ஞானத்தை அடையும் முறை’ என வரையறைசெய்யலாம். சைவம் சாக்தம் வைணவம் ஆகிய மூன்று மதங்களுக்குள்ளும் தாந்த்ரீகம் உண்டு. இம்மதங்களிலுள்ள வழிபாட்டுச்சடங்குகளில் பல தாந்திரீக மரபிலிருந்து வந்தவை. சிற்பக்கலையில் தாந்திரீகத்தின் செல்வாக்கு அதிகம்

பின்னர் பக்தி இயக்கம் பேரலையாக எழுந்தபோது தாந்த்ரீக முறைமைகள் கடுமையாக நிராகரித்து ஒடுக்கப்பட்டன. பக்தி இயக்கத்தின் ஆசான்கள் தாந்த்ரீகமுறைகளை பயனற்றவை அழிக்கப்படவேண்டியவை என அறிவுறுத்தினர். பரிபூரண சரணாகதி அன்றி எதுவுமே பயனற்றவை என்பது அவர்களின் கொள்கை.

தாந்த்ரீகத்தின் கொள்கைகளையும் உருவங்களையும் புராணங்களைக்கொண்டு மறுவிளக்கம் அளித்து தங்கள் வழிபாட்டுக்குள் சேர்த்துக்கொண்டது பக்தி இயக்கம். தமிழ்நாட்டில் சோழர்கள், குறிப்பாக சிவனருட்செல்வராகிய ராஜராஜசோழன், தாந்த்ரீக முறையை முற்றாகவே ஒழித்து ஆகம வழிபாட்டுமுறையை நிறுவினார். ஆகமமுறை என்பது தெய்வத்திற்கு எளிய பதினாறு உபச்சாரங்களைச் செய்வதுமட்டுமே. [ஷோடச உபச்சாரம்] தாந்த்ரீகமுறையிலுள்ள விரிவான குறியீட்டுச்செயல்பாடுகள் அகற்றப்பட்டன.

கேரளக்கோயில்களிலும் ராஜராஜன் காலகட்டத்தில் ஆகம முறைக்கு மாற்றப்பட்டு சோழர் ஆட்சி முடிந்ததும் தாந்த்ரீக முறைக்கு மீண்டும் சென்றன. இன்று அங்கே தாந்த்ரீக முறைவழிபாடுகள்தான். பலவகையான சைகைகள், ஒற்றை ஒலிகொண்ட மந்திரங்கள், பலிச்சடங்குகள், படையல்கள் அங்கே இருப்பதைக் காணலாம். இவற்றை பஞ்சமகார பூசை என்பார்கள் [மது, மாவு, மைதுனம், மந்திரம், முத்திரை]

பக்தி இயக்கம் காரணமாக தமிழகத்தில் இத்தகைய வழிபாடுகள் அழியவில்லை, தலைமறைவாயின. பலவடிவங்களில் எங்கெங்கோ எஞ்சியிருந்தன. இந்து வழிபாட்டின் மையப்போக்கின் புரோகிதர்களான பிராமணர் இவற்றைச் செய்வதில்லை. ஆனால் வேறுசாதியினர் செய்யத்தொடங்கினர். குறிப்பாக ஊன்பலி கொண்ட கோயில்களில் பூசை செய்யும் சாதியினரான பண்டாரம், யோகீஸ்வரர் போன்றவர்கள்.

அத்துடன் இங்கே நாட்டார் வழிபாடும் என்றும் இருந்தது. அது தாந்த்ரீகவழிபாட்டுமுறையின் ஒரு பழங்குடி வடிவம்தான். அதில் மந்திரம், சைகை போன்றவை இல்லை. பலி, படையல், சன்னதம் உண்டு.

பக்தி இயக்கம் இருபதாம் நூற்றாண்டில் தளர்வுற்றது. காரணம் நாத்திகப்பிரச்சாரம். கூடவே நடைமுறைவாதத்தின் எழுச்சி. பக்தி இயக்கம் முன்வைக்கும் சரணாகதி தத்துவமும், பெருந்தெய்வத்தைச் சார்ந்த பிரபஞ்சக்கொள்கையும், ஊழ்வினைக்கொள்கையும் மக்களிடையே சற்றுசெல்வாக்கிழந்தன.

ஆனால் ஆழ்மன அச்சங்கள், ஐயங்கள் மற்றும் ஆசைகளால் ஆன மதநம்பிக்கை அங்கேயே அப்படியே தீண்டப்படாமல் நீடித்தது. பக்தி இயக்கம் பின்னடைவு கொள்ளக்கொள்ள அது மேலெழுகிறது.

இன்று சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வக்கோயில்களில் கூட்டம் குறைவு. சரபேஸ்வரர், சனீஸ்வரர் போன்ற தாந்த்ரீகமரபைச் சேர்ந்த சிறுதெய்வக்கோயில்களில் கூட்டம் அம்முகிறது. பக்தி இயக்கம் முன்வைத்த பஜனை, பூசைகள் போன்றவற்றுக்குக் கூட்டம் குறைவு. வாஸ்து, பரிகாரம் போன்றவற்றுக்கு பெருந்திரளென மக்கள் செல்கிறார்கள்.

இந்த மாற்றமே பில்லிசூனியம், ஏவல் போன்ற எதிர்மறை மதச்சடங்குகளை நோக்கியும் மக்கள் செல்வதற்கு வழிவகுக்கிறது. அதற்கு எவ்வகையிலும் கடவுள் எதிர்ப்புப்பிரச்சாரம் எதிர்விசை அல்ல. பக்திசார்ந்த மதநம்பிக்கையின் வளர்ச்சி, தத்துவம்சார்ந்த மதநம்பிக்கையின் வளர்ச்சி, நவீன வரலாற்றுப்பண்பாட்டு நோக்கின் வளர்ச்சி ஆகியவையே எதிர்விசைகளாக அமையமுடியும்

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
அடுத்த கட்டுரைஅழுக்கு படிந்த கண்ணாடி