«

»


Print this Post

அழுக்கு படிந்த கண்ணாடி


1

கேரளத்தின் மெய்ஞானியும் சமூக சீர்திருத்தவாதியுமான நாராயணகுருவின் வழிவந்த நித்ய சைதன்ய யதி அவர்களை என் ஞானகுருவாகக் கொண்டவன். அவர் 1998ல் சமாதியாவது வரை ஊட்டியில் இருந்த அவரது நாராயண குருகுலத்திற்கு மாதந்தோறும் சென்று தங்கி அவருடன் இருக்கும் வழக்கம் இருந்தது. நித்ய சைதன்ய யதியைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன்.

நித்யாவுக்கு பலவகையான சீடர்கள் உண்டு. அவர் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் போர்ட்லண்ட் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைகழகங்களில் தத்துவம் மற்றும் உளவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரது ஆசிரியரான நடராஜகுரு பிரான்ஸின் சார்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக ஆய்வுசெய்தவர். ஆகவே மேலைநாட்டு கல்வியாளர்களான மாணவர்களே அதிகம். உள்ளூர் மாணவர்களிலும் கல்வியாளர்களே மிகுதி.

ஆனால் குருகுலமுறை என்பது தொன்மையான இந்திய வழிமுறைகளின் படி அமைந்தது. மாணவர்கள் இருவகை. என்னைப்போன்ற இல்லற மாணவர்களுக்கு நெறிகள் என ஏதுமில்லை. சொல்லப்போனால் நாங்கள் மாணவர்களே அல்ல. ஆன்மீகக் கல்விக்காக பிற அனைத்தையும் துறந்து வருபவர்களே உண்மையான மாணவர்கள். அவர்கள் குருகுலத்தில் வேலைகளைச் செய்தபடி வகுப்புகளை கவனித்தபடி சிலவருடங்களைக் கழிக்கவேண்டும். பிரம்மசாரிகள் என அவர்கள் அழைக்கப்படுவார்கள். அந்நிலையிலேயே பெரும்பாலானவர்கள் ஆரம்ப வேகம் அடங்கி விலகிச்சென்றுவிடுவார்கள்.

அதன்பின்னர் அவர்களுக்கு நித்ய சைதன்ய யதி தனிப்பட்ட கல்வியை அளிப்பார். பலநிலைகள் அதிலுண்டு. அந்த மாணவரின் இயல்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு மூலநூல் அவருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. விடியற்காலையில் எழுந்து குருவைச் சென்று கண்டு அவரிடமிருந்து அதில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடம் கேட்கவேண்டும். அதன்பின் நாள் முழுக்க வேறெதையும் வாசிக்கக்கூடாது. பாட்டு கேட்கக்கூடாது. வானொலி கேட்கக்கூடாது. எவரிடமும் பேசக்கூடாது. முழுத்தனிமையில் வேலைகளைச் செய்தபடி பகலிரவைக் கழிக்கவேண்டும். அவ்வாறு முழுநூலும் கற்கப்படும்போது அது ரத்தத்தில் ஊறிவிடும்

அதன்பின்னர் ஒருநாள் மிகச்சிறிய தொகை ஒன்றை அளித்து நித்யா அவர்களை இந்தியாவைச் சுற்றிவரச்சொல்லி ஆணையிட்டு அனுப்புவார். அவர்கள் பிச்சை எடுத்தபடி, சிறிய தொழில்கள் செய்தபடி இந்தியாவைச் சுற்றிவருவார்கள். இந்தியாவின் நிலப்பகுதியை பார்ப்பதென்பது உண்மையில் இந்த மண்ணில் நிகழ்ந்த ஆன்மீகச்செயல்பாடுகள் அனைத்தையும் நேரில் பார்ப்பதுதான். இந்த மண்ணாகவே ஞானத்தை உருவகிக்கும் வழக்கம் குருமரபுகளில் உண்டு. அதிலிருந்தே பாரததேவி என்னும் கருத்துருவம் உருவாகிவந்தது. விவேகானந்தர் அப்படி பாரதத்தைச் சுற்றிவந்த கதையை நாம் வாசித்திருப்போம். அத்தனை துறவிகளும் அப்படிச் சுற்றிவந்திருப்பார்கள்.

அவ்வாறு கிளம்பிச்செல்லும்போது ஓரிருநாட்களிலேயே கையிலிருக்கும் பணம் தீர்ந்துவிடும். அதன்பின் பிச்சை எடுக்கவேண்டும். பெரும் பதற்றம் உருவாகும். சிலநாட்கள் பட்டினி கிடப்பவர்கள் உண்டு. என்னசெய்வதென்று அறியாமல் பரிதவிப்பார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆணவம் அடங்கி கைநீட்டிப் பிச்சை எடுக்கத் தொடங்குவார்கள். ஒருகட்டத்தில் எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்னும் நம்பிக்கை வந்துவிடும். அது சிறகு முளைப்பதுபோல. இந்தியாவெங்கும் அலைந்து திரியத்தொடங்குவார்கள்.

அந்தச்சிறகுகள் ஓய்ந்து மீண்டும் வந்தால்தான் ஓர் இடத்தில் அமைதியாக அமரமுடியும். அதன்பின்னரே அவர்கள் யோகசாதனையில் அடுத்த கட்டம்நோக்கிச் செல்கிறார்கள். அப்படி வராமல் கடைசி வரை நாடோடிகளாகவே அமைந்துவிட்டவர்கள் பலர் உண்டு. அது ஒரு பெரும் களியாட்ட நிலை. அப்படி இந்தியா முழுக்க எந்த அடையாளமும் இல்லாமல் சுற்றிவந்தபடி இருக்கும் சில லட்சம்பேர் இருக்கிறார்கள். பயணங்களில் அவர்களை நாம் அடிக்கடிக் காணநேரிடும். நானே ஒருவருடம் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையில் இருந்திருக்கிறேன்.

நித்யாவின் மாணவரான பிரபுதத்தா அவர்களிடம் நான் ஒருமுறை கேட்டேன், “இந்தியாவில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று. “சிறையில் அடைப்பார்கள். அங்கே வாழவேண்டியதுதான். நமக்கு உள்ளும் புறமும் சமம்தான்” என்றார் சிரித்தபடி. அடையாளத்தை பெரும் சுமையாகக் கருதுபவர்கள் அவர்கள். ஆகாயப் பறவைகளைப்போல என அவர்களைச் சொல்லலாம். விதைப்பதில்லை கொய்வதில்லை. வானமே சொந்தம் அவர்களுக்கு.

நான் என் பயணத்தில் பலமுறை அப்படிப்பட்டவர்களைக் கண்டிருக்கிறேன். ஒருமுறை காசியில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் ரயிலில் என்னருகே ஒருவர் அமர்ந்திருந்தார். பழைய அழுக்குக் காவி உடை. தலைப்பாகை. கையில் உடைமை என ஒரு சிறிய பை மட்டுமே. நீண்ட நரைத்த தாடி. தோளில் சரிந்த கூந்தல். இருக்கையில் காலைத் தூக்கிவைத்து அமைதியாக வெளியே நோக்கிக்கொண்டு வந்தார். ஏதோ சாமியார் என நான் நினைத்தேன்.

அன்றெல்லாம் பிரெஞ்சுக்காரரான ஜீன் பால் சார்த்ர் மிகப்பிரபலமான தத்துவ ஆசிரியர். இலக்கியவிமர்சகர், அரசியல்போராளி, நாடக ஆசிரியர் என்னும் நிலைகளில் சார்த்ர் உலகமெங்கும அறியப்பட்டிருந்தார். இருத்தலியம் [Existentialism] என்னும் கோட்பாடு சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டு உலகசிந்தனையை உலுக்கிக் கொண்டிருந்த காலம். சார்த்ரின் இருத்தலும் இன்மையும் [Being and Nothingness] என்னும் நூல் அத்தத்துவத்தின் மூலநூலாக கருதப்பட்டது. அக்கொள்கையைச் சார்ந்து எழுதிய காஃப்கா, காம்யூ போன்றவர்கள் இளைஞர்களால் பரபரப்புடன் வாசிக்கப்பட்டனர்

நான் சார்த்ர் எழுதிய நாசியா [Nausea] என்னும் சுயகுறிப்புநூலை வாசித்துக்கொண்டிருந்தேன். சாதாரணமாகத் திரும்பிய அந்தச்சாமியார் அதை கண்டு கைநீட்டினார். நான் தயக்கத்துடன் அதை நீட்டினேன். வாங்கி புரட்டிப்பார்த்துவிட்டு புன்னகையுட்ன் திருப்பித்தந்தர். “Being and nothingness” என்றார். வெடித்துச் சிரித்துக்கொண்டு “Do you know there is a way called nothingness and being?” [ஒன்றுமில்லாமல் இருப்பது என்னும் நிலை ஒன்றுண்டு, தெரியுமா?]

நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். “பாவம் சார்த்ர், நல்ல மனிதர்” என்றார் அவர். நான் கொஞ்சம் எரிச்சலுடன் “அவரைத்தெரியுமா?” என்றேன். “நன்றாகவே தெரியும். நான் சார்போனில் அவரது மாணவனாக இருந்தேன். அவர் வீட்டில்தான் இருப்பேன்” என்றார். என்னால் திகைப்பை மறுக்கமுடியவில்லை. சாமியார்களிடம் பூர்வாசிரமத்தைப்பற்றிக் கேட்பது தவறு என்று தெரியும் என்பதனால் நான் மேலே பேசவில்லை.

அவரே மெலே சொன்னார். “ஒரு கூரியஎண்ணம் நமக்குள் வந்ததும் நாம் பரவசம் அடைகிறோம். நம்முள் அது வந்தது என்பதனாலேயே அது அரியது, மகத்தானது, அதை உலகுக்குச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என பரபரக்கிறோம். ஆகவே கடுமையாக உழைத்து அதை ஒரு கொள்கையாக ஆக்கிக்கொள்கிறோம். அப்படி கொள்கையாக ஆக்கும்தோறும் நாமே அதை நம்புகிறோம். நம் வாழ்க்கையை அப்படி ஆக்கிக்கொள்கிறோம். அது மிகப்பெரிய நடிப்பு. மெல்ல நடிப்பே வாழ்க்கையென்றாகிவிடுகிறது”

“சார்த்ர் நடித்தார் என்கிறீர்களா?” என்றேன். “ஆம். அவரும் அவர் தோழியும் சேர்ந்து நடித்தார்கள். உலகம் கைதட்டியது”. சார்த்ரின் தோழி சிமோங் த பூவா உலகமெங்கும் இன்று பரவியிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளை உருவாக்கியவர். அவரது இரண்டாம் பாலினம் [The second sex] என்ற நூல் பெண்களின் தன்னுரிமை, விடுதலை, ஆணைச்சாராமல் நின்றிருக்கும் ஆற்றல் ஆகியவற்றை முன்வைப்பது

நான் சீற்றத்துடன் “இருத்தலியலை நீங்கள் நிராகரிக்கலாம், ஆனால் அவர்களை பொய்யானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்றேன். “அவர்கள் பொய்யானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவில்லை. தங்கள் கோட்பாடுகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். அதை மட்டுமே சொன்னேன்” என்றார்.

இருத்தலியலை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். காலம் எல்லையற்றது. இங்கே நிகழும் அனைத்துமே தற்செயல்கள். இதில் மனிதவாழ்க்கைக்கு என தனியான அர்த்தம் ஏதும் இருக்கமுடியாது. அனைத்து அர்த்தங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை மட்டுமே. அவற்றை அறியாமல் நம்புபவன் வாழ்க்கையை இயல்பாக வாழ்கிறான். அவற்றின் பொருள் என்ன என்று தேடுபவன் வெறுமையையே சென்றடைகிறான்.

“இங்குள்ள அனைத்தும் வெறுமை அல்ல. நாம் பொருளை அறியவில்லை என்பதனால், அறியமுடியவில்லை என்பதனால் பொருள் இல்லை என்றாவதில்லை” என்றார் அவர். “பொருள் உள்ளது. அதை அறிய வேண்டுமென்றால் நான் என்ற நிலையில் இருந்து அதை அணுகக்கூடாது. சார்த்ர் தேடியது ‘எனக்கான பொருள் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலை. இதற்கெல்லாம் பொருள் என்ன என்று தேடினால் கண்டுகொள்ளலாம்” என்று அவர் சொன்னார்.

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். மிகமிக எளிது. ஒரு கூழாங்கல்லை எடுத்துப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை பார்ப்பதற்கான தடையை அகற்றவேண்டும். அது நான் என்னும் எண்ணத்தின் தடை. அதிலிருந்து உருவாகும் காமம் குரோதம் மோகம் ஆகிய மூன்று அழுக்குகளின் பூச்சு. அதைக்களைந்து உண்மையை அறிவதே ஆன்மீகமான பயணம். இத்தனை அலைச்சலும் இத்தனை பயிற்சிகளும் அதற்கே

அது என்ன?” என்றேன். ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்என்ற உபநிடதவரியை அவர் சொன்னார். [இங்கனைத்திலும் இறை உறைகிறது] ஒரு வரியாக மிக எளியது. உண்மையனுபவமாக உணர்வதற்கு தவம் தேவைஅதன்பின் அவர் பேசவில்லை. பேசுவார் என நானும் நெடுநேரம் காத்திருந்தேன். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார். நான் அவர் சென்ற பின் எஞ்சிய வெட்டவெளியை பார்த்துக்கொண்டிருந்தேன். ரயில் நகர்ந்தது

நெடுநாட்களுக்குப்பின் சார்த்ரின் அணுக்கமான மாணவி ஒருத்தி அவரைப்பற்றி ஒரு நூலை எழுதினாள். சார்த்ர் கட்டற்ற காம உணர்ச்சி கொண்டவர் என்றும் அவரது ஆய்வுமாணவிகள் அனைவரிடமும் அவர் உறவுகொண்டிருந்தார் என்றும், அதற்காக கட்டாயப்படுத்தி மன்றாடுவார் என்றும் அவள் சொன்னாள்.

அதைவிட முக்கியமானது அவள் சிமோங் த பூவா பற்றி சொன்னது. ஆணைச்சாராது பெண் வாழவேண்டும் என்று வாதிட்டு அவ்வளவு பெரிய நூலை எழுதிய சிமோங் த பூவா அதன்பொருட்டே சார்த்ரை மணம் செய்துகொள்ளாமல் தோழியாக வாழ்ந்தவர். அவர் உண்மையில் சார்த்ரின் விசுவாசமான மனைவியாகவும், அவரது ஆணைக்குக் கட்டுப்பட்ட அடியாளாகவுமே இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தாள் அம்மாணவி. தன் மாணவிகளையும் பேசி மடக்கி சார்த்ருக்கு பாலியல் தேவைக்காகக் கொண்டுசெல்வது சிமோங் த பூவாவின் வழக்கமாம். பிற மாணவிகளும் அதை உறுதிப்படுத்தினர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அகங்காரத்தின் மறுபக்கம் காமமே என நான் அதற்குள் எழுதி எழுதிக் கற்றிருந்தேன். அவை மறைத்து நிற்கும் விழிகளால் அப்பாலுள்ள பிரம்மாண்டத்தைக் காணமுடியாது. அதன்பின் செய்யவேண்டியது எதைக் காண்கிறோமோ அதை கோட்பாடாக ஆக்கி வாதிடவேண்டியதுதான். பாவம் சார்த்ர்என அந்த சாமியாரை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டேன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/90471/