[ 5 ]
வெண்களர் மண்ணில் கால்கள் புதைய தள்ளாடி தருமன் நடந்தார். விழுந்துவிடுவோம் என்னும் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. நடந்துகொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வும் ஒரே இடத்தில் காற்றில் மிதப்பதாக இன்னொரு தன்னுணர்வும் ஒன்று கலந்து ஓடின. பலமுறை விழுந்ததாக உணர்ந்தும் நடந்துகொண்டிருந்தார். ஆனால் விழுந்துகிடப்பதாக உணர்ந்து திகைத்து சூழலை உணர்ந்து எழுந்தமர்ந்தார். கையூன்றி எழுந்து தள்ளாடி நடந்தபோது திசை மயங்கிவிட்டதா என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால் திசையுணர்வு முற்றிலும் இருக்கவில்லை.
கால்கள் தற்போக்கில் நடந்துகொண்டிருந்தன. சித்தம் காலமின்மையில் மிதந்து நின்றது. இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் அணிநிரைந்து சென்றன. சங்கிலிகள் குலுங்கக் குலுங்க யானைகள். எவரோ ‘திறந்த வாயில்’ என்று கூவினார்கள். எவரோ ‘நீர் நிறைந்துள்ளது’ என்றனர். அர்ஜுனன் வேறெங்கோ நோக்கியபடி தேரில் கடந்து சென்றான். யானை ஒன்று பார்வையை மறைக்கும் இருளெனச் சென்றது. தொலைவில் சங்கொலி. ஓர் ஆந்தை வந்து மரக்கிளையில் அமர்ந்தது. அது ஆந்தையல்ல நாரை. தலைக்குமேல் பறந்துசென்றது இன்னொரு நாரை. நாரை இத்தனை பெரிதா? வெண்முகில்போல அவ்வளவு பெரியது. முகில்நிழல் கடந்துசென்றது. எவரோ ‘ஆலமரம்’ என்றனர். மணியோசைகள் நிரைவகுத்தன. ‘அரிசி!’ என்றது ஒரு பெண்குரல்.
ஆற்றுநீரில் சென்று நாணல்களில் படிந்து இழுபட்டு நுனிதவிக்க நின்றுவிடும் ஆடையென சித்தம். மீண்டு எழுந்து தலையை உலுக்கி விடுபட்டு சூழ நோக்கினார். எங்கிருக்கிறேன்? இது எவர் வாழும் இடம்? இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தேன். பின்பு அஸ்தினபுரிக்கு வந்தேன். அவ்வெண்ணத்தால் பிடரியில் அறைபட்டு திடுக்கிட்டு முன்னால் விழப்போனார். பன்னிரு படைக்களத்திலிருந்து நினைவுகள் பொங்கி ஒரே அலையென அறைந்து நகுலனும் சகதேவனும் கிளம்பிச்சென்ற கணத்தை அடைந்தன. அச்சம் எழுந்து குளிரென பொதிந்துகொண்டது. நெஞ்சை அழுத்திய சுமையை ஊதி ஊதி வெளியேற்றினார். பின்னர் நடந்தபோது சீரான விரைவு கூடியது.
மேலும் மேலுமென வெறுமைகொண்டபடியே வந்தது நிலம். பசும்புதர்கள் மறைந்தன. கந்தகப்புகை மறைத்த பாறைகள் காற்றில் கரியமுகம் காட்டி மீண்டும் திரைக்குள் சென்றன. அவருடைய காலடியோசைகளை மட்டும் திருப்பியளித்து அறியாவிழிகளால் ஆழ நோக்கிச் சூழ்ந்திருந்தது நிலம். மலைச்சரிவின் உச்சியில் ஏறி நின்றபோது மறுபக்கம் சரிந்திறங்கிய வெண்ணிலத்திற்கு அப்பால் நீலச்சுனை தெரிந்தது. அங்கு கந்தகத்துளைகள் இருக்கவில்லை. புகை இன்றி தெளிந்திருந்தது காற்று. ஆனால் மலைப்பாறைக்கு அப்பால் எரிதழல்வதுபோல எச்சரிக்கையளித்துக்கொண்டே இருந்தது தன்னுணர்வு. ஒரு நாகம் மெல்ல நெளிந்துசென்றது. மலைப்பாறைகளின் பாசிபூத்த கருமையை தானும் கொண்டிருந்தது அது.
அவர் சரிவிறங்கத் தொடங்கினார். மீண்டும் நினைவுகள் மயங்கின. ஒன்றோடொன்று எண்ணங்கள் முட்டி புகுந்து கலங்கி சொற்குவைகள் ஆயின. சொற்கள் உருண்டு ஓடின. நின்று ஒரு சொல் தானாகவே சுழன்றது. ‘பால்’. பாலா? ஏன்? என்ன பால்? பம்பரம். யானையொன்றின் மணியோசை. செண்பகத்தோட்டம். உள்ளே இறந்து கிடந்த ஆடையற்ற உடல். அதில் விரைத்து எழுந்து விண்நோக்கிய நிறைவடையாத விழைவு. யானையின் மணியோசை. தொலைவில் மீண்டும் ஓர் அழுகை. யார் அது? யாருடைய அழுகை? ஆண். ஆணின் குரல். அறிந்த குரல். மிகமிக அண்மையான குரல்.
மீண்டும் உணர்வுகொண்டபோது அவர் அச்சுனையின் அருகே நின்றிருந்தார். அங்கே ஆழ்ந்த அமைதி நிறைந்திருந்தது. அங்கே மரங்களில்லை. அப்பகுதியில் காற்றும் வீசவில்லை. எதுவும் அசையவில்லை. எனவே எந்த ஓசையும் இல்லை. துணி படபடக்கும் ஓசை. சாளரத்திரையா? மெல்லப்பேசும் ஒலி அது. ‘இல்லை இல்லை இல்லை!’ அவர் அச்சுனைநீரை நோக்கியபடி மெல்ல நடந்தார். நீரில் அவர் உருவம் விழுந்தது. அது அலைநெளிவில்லாது ஆடிப்பாவை போல தெளிவுகொண்டிருந்தது. தொலைவிலிருந்து நோக்கியபோது நீலப்பட்டு போலிருந்த சுனைநீர் வட்டம் அருகணைந்தபோது வான் ஊறிப்பரவிய தாலம் போன்றிருந்தது.
நீரைக் கண்டதுமே விடாய் திகைத்து உடலுக்குள் திரும்பப்புகுந்துவிட்டிருந்தது. அவர் சுனையில் தெரிந்த தன் உருவத்தை நோக்கியபடி அசைவில்லாது நின்றிருந்தார். நால்வரும் எங்கிருக்கின்றனர் என்று ஒரு வினா எழுந்து உடனே கலைந்தது. பேருருவின் கரிய தோற்பரப்பின் வரிகள் அசைந்தமைய யானை ஒன்று அவர் விழிநிறைத்து கடந்துசென்றது. தொலைவில் முரசு முழங்கியது. ஒருவன் எழுந்து சிறுகுழலை முழக்கினான். பகா!
யார் அது? நான் அச்சொல்லை முன்பு கேட்டிருந்தேன். முன்பு எப்போதோ நான் புதருக்கு அப்பால் மானசைவைக் கண்டு வில்கோத்து இழுத்து அம்பு தொடுத்தேன். அவை இணைசேர்ந்த மான்களென ஒன்று துடித்து விழுந்தபோது அறிந்தேன். மான் குளம்புகளைக் கண்டார். ஆம், மான்குளம்புகள்தான். கூரியவை. இணை கொல்லப்பட்ட பின் இத்தனை தொலைவுக்கு ஓடிவந்துள்ளது அது. அதன் கால்தடங்களில் குருதிச்சொட்டுகள். செந்நிறமான கூழாங்கற்களாக அவை உருண்டிருந்தன.
மீண்டும் விழித்துக்கொண்டபோது அவர் மண்டியிட்டு நீரின் அருகே அமர்ந்திருந்தார். முகம் நீருக்கு மிக அருகே இருந்தது. நீருக்குள் அவர் கண்டது ஓர் இளையமுகம். அவன் அவரை நோக்கி புன்னகை செய்தான். “நீங்கள் யார்?” என்றார். “என் பெயர் சித்ராங்கதன்.” அவர் வியப்புடன் “தந்தையே, நீங்களா?” என்றார். “ஆம், நீருக்குள் வாழ்கிறேன். இனிய நீர் இது, அருந்துக!” அவர் முகத்திலிருந்து ஒரு துளி வியர்வை நீரில் விழ அப்பாவை கலைந்து மறைந்தது. விடாயை உணர்ந்தார். சுனைநீரின் நீராவிபட்டு வியர்வை எழுந்தபிறகுதான் விடாய் எழுகிறது. எழுந்ததுமே அது அத்தனை தசைச்சுருள்களையும் விதிர்க்கச் செய்தது. அவ்வெண்ணங்களை உருவாக்கிய விடாய் எண்ணங்கள் தொடாத தழலாக தசைகளில் திகழ்ந்தது.
அவர் கைநீட்டி நீரை அள்ளியபோது மீண்டும் சித்ராங்கதன் தோன்றினான். “மைந்தா, அவன் கந்தர்வன். உன் உள்ளத்தை மயக்குகிறான். வேண்டாம் விலகு… இது நச்சுப்பொய்கை!” அவர் விழிகளால் “ஏன்?” என்றார். “ஏனென்றால் இது அழகியது. இத்தனை அழகுள்ள சுனை நஞ்சுகொண்டதாகவே இருக்கமுடியும்.” அவர் உடல்கொண்ட விடாய் கைநீரை வாய்க்கு தூக்கியது. “வேண்டாம், மைந்தா! இது நான் முன்பு அருந்திய நஞ்சு.” அவர் நீரை கீழே விட்டார். திரும்பி நோக்கியபோது மறுகரையில் நிரையாக தம்பியர் நால்வரும் கிடப்பதை கண்டார். “அவர்கள் அழகை உண்டனர். அழகு என்பது என்ன? அழைப்பு. அழைப்பதெல்லாம் அணைப்பது. அணைப்பதெல்லாம் அள்ளிஉண்பது.” சித்ராங்கதனின் உதடுகள் பேசும்போதும் விழிகள் சொல்லற்றிருந்தன.
“நான் அவர்களிடம் சொன்னேன்” என்று அருகே குரல் கேட்டது. அவர் திரும்பியபோது ஒரு சுனைநாரை நின்றிருப்பதை கண்டார். மானுடவிழிகள் கொண்டிருந்தது அது. அலகைத் திறந்து “இச்சுனை எங்களுக்குரியது… இந்நீரை நாங்கள் காக்கிறோம். அதைச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை” என்றது. தருமன் கால்கள் தளர்ந்து உடல் ஆடிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். விழுந்துவிடக்கூடாது என்று சொல்லிக்கொண்டார். “அவர்களின் அறிவுடன் என்னால் பேசமுடிந்தது. விடாயுடன் நீர் மட்டுமே பேசமுடியும். ஆகவே சுனை அவர்களை வென்றது. இந்நச்சு நீரை அருந்தி உயிரிழந்தனர்.”
“நீ யார்?” என்று அவர் கேட்டார். “நான் பகன் என்னும் யட்சன். இந்தச் சுனையை காப்பவன். இது யட்சர்களின் காடு” என்றது பறவை. அச்சுனையைச் சுற்றி அமைந்த வெண்ணிறமான பாறைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான நாரைகள் சிறகுகள் தாழ்த்தி ஒற்றைக்காலில் அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவற்றை அங்கு வந்தபோதே பார்த்ததை உணர்ந்தார். அவை நோக்கப்பட்டபோதே நாரைகளென்றாயின. விழிவிலக்கியபோது அவற்றின் நோக்குகள் வந்து தைத்தன. “இது கன்மதம் ஊறித்தேங்கிய சுனை. காலமின்மையைச் சூடிய பாறைகளின் சாறு. இதை பிறந்து இருந்து அழியும் எளியோர் அருந்தலாகாது. நீரெனத் தோன்றினாலும் இது நூறுமடங்கு எடைகொண்ட ரசம். மெழுகுத்துணியை கொதிக்கும் இரும்பு என இது கிழித்துச்செல்லும்.”
“நான் அருந்தவில்லை” என்று தருமன் சொன்னார். “உன் ஆணையை தலைகொள்கிறேன். நான் செய்யவேண்டியதென்ன என்று சொல். என் உடலில் இன்னும் சற்றுநேரத்தில் உயிர் அணையும். உன் சொற்களைக் கேட்ட எனக்கு கருணைகாட்ட நீ கடன்பட்டவன்.” நாரை சிறகடித்து மேலும் அருகே வந்தது. “ஆம், உண்மை. ஆனால் இங்கு வந்தவர்கள் எவரும் மீளலாகாதென்பதே எங்களுக்குரிய ஆணை.” அதற்குப் பின்னால் அனைத்து நாரைகளும் ஓசையில்லாமல் வெண்புகை சூழ்வதுபோல வந்தமைந்தன.
“வேதமெய்மை அறிந்தோர் மட்டும் எங்களால் பேணப்படுவார்கள். நீ அவர்களில் ஒருவனென்றால் இன்னீர் ஊற்றை சுட்டுவேன்.” “நான் வேதம் கற்றேன். மெய்யுசாவினேன். ஆனால் மெய்மையை அறிந்தேன் என்று சொல்லமுடியாது. மீன் நீரிலென அதில் நான் இருப்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். அது நானாகிவிட்டதா என்று அறியேன்” என்றார் தருமன். “அரசே, இச்சொற்களே மெய்யறிந்தோனுக்குரியது. சற்றறிந்தோன் தருக்க முற்றறிந்தோன் சொல்லடங்கும் முழுமை அது” என்றது நாரை. “நான் கேட்கும் வினாக்களுக்கு விடைகூறுக! உன் விடைகள் சரியென்றால் நீ மெய்மையைத் தொட்டவன் என்று எண்ணுவேன்.”
தருமன் “நான் விடாய்கொண்டு இறந்துகொண்டிருக்கிறேன்” என்றார். “ஆம், பருவெளியழிந்து எழும் பெருவெளியிலேயே இவ்வுசாவல் நிகழமுடியும்” என்றது நாரை. “இங்கு அனைத்தையும் திரிபடையச்செய்யும் காலம் இல்லை அல்லவா?” தருமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றார்.
[ 6 ]
புன்னகையுடன் பாண்டு தருமனை நோக்கி குனிந்தார். “மைந்தா, சூரியனை எழச் செய்வது எது?” இடையில் கையூன்றி சதசிருங்கத்திற்கு அப்பால் எழுந்த சூரியனை நோக்கி நின்று சிறுவனாகிய தருமன் சொன்னான் “அதற்கு அப்பால் எழும் இன்னொரு பெரும் சூரியன்.” பாண்டு சிரித்தபோது பற்கள் ஒளிவிட்டன. “அதைச் சூழ்ந்திருப்பவை எவை?” அவன் “அதன் முடிவிலாக்கோடி நீர்த்துளிப்பாவைகள்” என்றான். “மைந்தா, அது எப்போது முற்றிருள்கிறது?” அவன் சிலகணங்களுக்குப்பின் சொன்னான் “நோக்கும் விழி இருள்கொள்கையில்.”
சதசிருங்கக் காடுவழியாக பாண்டு நடந்துகொண்டிருந்தார். அவன் அவர் தோளில் அமர்ந்திருந்தான். அவர் காலடியோசை தொடர்ந்து வந்தது. “கதிரவனை விண்ணில் கட்டியிருக்கும் சரடு எது?” என்றார் பாண்டு. “இந்த மரத்தை மண்ணுடன் பிணைத்துள்ளது எதுவோ அது” என்றான் தருமன். அவர்கள் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். தருமன் ஓடிச்சென்று ஒரு சிறு தூவலை எடுத்தான். செம்பருந்தின் சிறகிலிருந்து உதிர்ந்தது. “மூத்தவனே, கல்வி என்பது என்ன?” அவன் திரும்பி நோக்கி “இந்த இறகு நான் அறிவது என்றால் அந்தப் பருந்தே கல்வி” என்றான்.
பாண்டு சிரித்து “சொல், எதனால் ஒருவன் அரியதை அடைகிறான்?” என்றார். “அனைத்தையும் துறக்கும்போது.” அவர் “பிறிதொன்றை வெல்வது எப்படி?” என்றார். “அறிவால்” என்றான் தருமன். “அறிவை அடைவதெப்படி?” தருமன் “அறிந்தோர்முன் மூடனாக உணர்கையில்” என்றான். பாண்டு “ஆம்” என்றார். அவன் நீரோடையில் இருந்து எழுந்தபோது மரத்தடியில் அமர்ந்திருந்த துரோணர் “நன்று இளவரசே, அந்தணனுக்கு ஆற்றல் எது?” என்றார். “வேதம்” என்றான் இளைஞனாகிய தருமன். அவர் முகம் மாறியது. அவர்கள் ஒருசொல்லும் உரையாடாமல் கங்கையிலிருந்து நடந்தனர். “அவர்கள் தவத்தால் உம்பர். இறப்பால் மட்டுமே மானுடர்” என்றான் தருமன். அவர் உடலின் வெம்மை மட்டும் அவனைத் தொட்டது. கருக்கிருளில் விடியலை உணர்ந்த பறவைகள் சிறகு குலைக்கும் ஒலி எழுந்தது. “மறுத்தலே அவர்களின் மறம்” என்றான் தருமன். அவர் “ஆம்” என்றார்.
படைக்கலச்சாலையில் கூரிய அம்புநுனியை சுட்டுவிரலால் வருடியபடி பீஷ்மர் நின்றிருந்தார். “ஆம், படைக்கலமே வீரரின் இறை” என்றான் தருமன். “செயலே வேள்வியாதல் அவர்களின் தவம். கருணையால் அவர்கள் வானோர். அஞ்சுகையில் மானுடர்.” பீஷ்மர் ஐயம் நிறைந்த விழிகளுடன் அவனை நோக்கினார். “அச்சம் ஆழத்திலமையும்தோறும் ஆற்றல்மிகுகிறது” என்றான். அவர் விழிதிருப்பிக்கொண்டார். “எதிரியை அஞ்சுபவனைவிட ஏழுமடங்கு கோழை தன்னை அஞ்சுபவன்.” பீஷ்மரின் தோள்கள் அதிர்வதை அவன் கண்டான்.
கூரிய விழிகளுடன் அர்ஜுனன் அவன் கையை பற்றினான். “மூத்தவரே!” என்றான். அவர்கள் கங்கைக்கரைக் குறுங்காட்டிலிருந்து மேலேறிய இடத்தில் நான்கு சிதைகள் எரிந்துகொண்டிருந்தன. “மூத்தவரே, அவை மானுடஉடல்கள் அல்லவா? அவற்றை ஏன் எரிக்கிறார்கள்?” தருமன் “உடல்களும் விறகுகளே” என்றான். பின்னர் “உயிர் நெய். அது எரியும் வேள்வியே இது” என்றான். “அதன் சடங்குகளை உள்ளம் என்கிறோம். அதில் ஒலிக்கும் அழியாச்சொல்லே வேதம்.” அவன் அச்சிதைகளை நோக்கியபடி நின்றான். கனவுபடிந்த விழிகளைத் தூக்கி “இவ்வேள்வியை இயற்றுபவர் எவர்?” என்றான். “இவ்வேள்விக்குக் காவலனும் யஜமானனும் ஹோதாவும் வேள்வியில் எழும் தெய்வமும் ஒன்றே” என்றான் தருமன்.
மத்ரநாட்டில் சேற்றிலாடிக்கொண்டிருந்தனர். நகுலன் “மூத்தவரே, இந்த வயல் எப்படி உயிர்கொள்கிறது?” என்றான். “விண் மழையென்றாகிறது. மண் விதையென நிற்கிறது” என்றான் தருமன். “முதல் உயிர் புல். அடுத்த உயிர் பசு. அன்னமும் அமுதுமாக எழுவது வானும் மண்ணுமாகிய ஒன்று.” அவர்கள் சேற்று வயலில் ஆடினர். மண்பாவைகள்போல உடல்கள் ஆயின. தழுவி வழுக்கி விழுந்து உருண்டு எழுந்து சிரித்தனர். பீமன் அவர்களைத் தூக்கி சேற்றுக்களியில் வீச மண் நாய்க்குட்டிபோல் இதழ்விரித்து அவர்களைக் கவ்வியது. “சேறுபோல் இனிய மணம் பிறிதில்லை, மூத்தவரே” என்றான் பீமன்.
பாண்டு படுத்திருக்க அப்பால் குந்தி அமர்ந்திருந்தாள். “பிருதை, மைந்தரைப் பெற்றவள் எதையும் இழக்கவில்லை” என்றார். அவள் நிமிர்ந்து நோக்க “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என ஐந்தோம்பாதான் பிறக்கவேயில்லை” என்றார் பாண்டு. அவள் விழிகள் களைப்புகொண்டிருந்தன. கருமுழுத்த பெருவயிற்றை சற்றே சாய்த்து செண்பக மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். “உன் வயிற்றிலெழுக மைந்தர்! அவர் என் மூதாதையரைப் பேணுவர்.”
“மண்ணைவிட எடைகொண்டவள் அன்னை. விண்ணைவிட உயர்ந்தவர் தந்தை” என்று அவர் சொன்னார். “இங்கு நிலையானவை அவை மட்டுமே. உள்ளம் காற்றைவிடக் கடியது. புற்களைவிட பெருகி முளைப்பவை எண்ணங்கள்.” அவள் விழிகள் சற்று வீங்கியிருந்தன. இதழ்கள் வெளுத்திருந்தன. “வானம் காற்றாகிறது. மண் புல்லெனப் பெருகுகிறது. அவை மாற்றுருக்களே என்று அறிந்தால் நீ அமைதிகொள்வாய்.” அவள் விழிமூட இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. பின்பு மெல்ல மூச்செழுந்தது.
மஞ்சத்தில் விழிமூடிக் கிடந்த திரௌபதியின் கரிய முகத்தில் தருமன் மெல்ல முத்தமிட்டார். அவள் “ம்” என்றாள். “நீ துயில்கையிலும் விழிமூடுவதில்லை. உன்னை தென்னவர் வணங்கும் மீன்விழி அன்னை என்பேன்.” அவள் கண்களைத் திறக்காமலேயே புன்னகை செய்தாள். “கல்லென்றிருக்கையிலும் முட்டைக்குள் உயிர் வளர்கிறது. முட்டையெனத் தோன்றுகையிலும் கல் வளராதிருக்கிறது” அவர் சொன்னார். “நாம் இருவரும் அருகருகே இருக்கையில் நோக்குபவர் வேறுபாடு காண்பதில்லை.” அவள் “ஆம்” என்றாள்.
எழுந்து பெருகியோடும் கங்கையை சாளரம் வழியாக நோக்கினார். “தன் விசையை தானே பெருக்கிக்கொண்டு தன் வழியை தானே அமைக்கும் ஆறுகள் எப்போதும் என்னை அச்சுறுத்துகின்றன” என்றார். மஞ்சத்தில் அவள் சொல்லற்றவளாக கிடந்தாள். “என்றும் தனித்த பயணி நான். எங்கிருந்தோ நாடுகடத்தப்பட்டவனென உணர்பவன். நோக்கி சொல்லாடி முகம் கரைந்து அகலும் வழிப்போக்கரே என் துணைவர்.” அவள் நோக்கை முதுகில் உணர்ந்து “இல்லறத்தானுக்கு முதற்துணை மனைவி என்கின்றன நூல்கள். நோயுற்றவனுக்கு மருத்துவன். இறப்பணைபவனுக்கு அவனளித்த கொடைப்பயன். தேடலால் தனித்தவனுக்கு எவையும் நிழலென அமைவதில்லை” என்றார்.
“எரியே அனைவருக்கும் விருந்தினன். அவியூட்டலே நாள்கடன்” என்று ஒரு குரல் சொன்னது. “யார்?” அவர் திகைத்தார். “எரி வாழ்வது நெஞ்சில். அவியென்பது மெய்மை. சொல்லுண்டு கனியும் அப்பசுவின் பாலே அமுது.” அவர் திகைப்புடன் “யார்?” என்றார். “வெறுமை உலவும் விண்ணகத்தில் சூரியன் முழுத்தனிமை கொண்டுள்ளான். தேய்ந்து மீள்கிறான் சூரியன். தண்மை நெருப்பாலும் முற்றிலும் நிகர் செய்யப்பட்டுள்ளது இங்கு. அறிக, பெருவெளியில் செயலும் செயலின்மையும் நிகர்!”
அந்த முகத்தை அவர் கண்டார். அறிந்த முகம். இனிய நகை நிறைந்த விழிகள். அவை விண்பேருருவமென எப்படி பரந்தன? “மேய்ச்சற்களம் இப்புடவி. அறமெனும் பசு பெருந்தன்மையை நாடுகிறது. புகழ் கொடையை. உண்மையை அழிவின்மை. உவகையை நல்லொழுக்கம். செயல்களால் ஆனது துலாவின் ஒரு தட்டு. துலாவின் மறுதட்டில் அமர்ந்துள்ளன ஆக்கி அழித்தாடும் தெய்வங்கள்.” அவ்விழிகள் அவரை நோக்கவில்லை. எவருக்கெனவோ ஒலிக்கும் சொற்கள் விண்முட்டி முழங்குவதென்ன! “செயலாற்றவே கடமைப்பட்டுள்ளாய். விளைவுகளில் உளம் வைக்காதே! செயலின் விளைவுகளில் கருத்தூன்றிச் செயல்பட எண்ணாதே! செயல்படாதிருக்கும் விருப்பும் கொள்ளாதே!”
தனித்த நீண்ட பாதையில் அவர் தன் மைந்தனுடன் நடந்தார். “நீ என் ஆத்மா. என் ஆழத்தை விதைத்துக் கொய்ய தேவர்கள் அளித்த துணை உன் அன்னை. விண் நிறைந்துள்ளது இங்கு வாழ்வைச் சமைக்கும் முகில். பெற்றுக்கொண்டமையால் அளிக்க கடமைப்பட்டவன் மானுடன். செய்நேர்த்தியால் விண்ணவர் மகிழ்கிறார்கள். அறிவோ அகம் அமைந்தது விழையும் செல்வம். இவ்வுடல் அவ்விசையின் யாழ். இதன் நரம்புகளை இனிது மீட்டுக! இசைநிறைந்த யாழ் பிறிதிலா முழுமைகொண்டது.”
“நீ அரசன். படைக்கலமேந்தவிருப்பவன். அறிக, கொல்லாமையே முதல்பெருநெறி! வேள்விகள் கனி ஓயா மரம்.” அவனை குனிந்து நோக்கி அவர் சொன்னார் “யுதிஷ்டிரனே, வெல்லப்பட்ட உள்ளம் அமுதுக்குரிய கலம். அரியோருடன் அமர்க! ஆணவம் ஒழிக! சினமும் காமமும் பெருவிழைவும் கடந்து செல்க! அறம்புலர அந்தணருக்கும் புகழ்பொலிய சூதருக்கும் பணிவுக்கு ஊழியருக்கும் கொடையளி! நட்புக்கென அரசர்களுக்கு அளிக்கட்டும் உன் கைகள்!” மைந்தன் நிமிர்ந்து நோக்கினான். சதசிருங்கத்தின் மலைமுடிகள் இருளில் அமிழ்ந்துகொண்டிருந்தன. விண்மீன்கள் கரிய பழக்கதுப்பில் விதைகளென பிதுங்கி எழுந்தன.
“பெருவெளியை மூடியிருக்கிறது இருள். அப்பாலிருந்து ஒளி வராது தன்னை வெளிப்படுத்தும் வல்லமை எவற்றுக்கும் இல்லை. இருளில் ஒவ்வொன்றும் பிறரிடமிருந்து விலகிச்செல்கின்றன. முடிவிலியைத் தேடும் விழைவால் அவை சிதறடிக்கப்படுகின்றன. அறிக, அவை ஒன்றிலிருந்து எழுந்தவை! அவை செல்லவேண்டிய திசையோ இணைந்திணைந்து செல்லும் ஒருமை.” மைந்தன் தந்தையின் உடலுடன் ஒண்டிக்கொண்டு விழிவிரித்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்தான்.
“அனைத்தையும் துறந்து இங்கு வந்தேன். இப்புவிச்செல்வங்களைத் துறந்தவன் இறந்தவனே” என்றார் பாண்டு. “அரசனற்ற நாடு அழிந்ததென்று சொல்லப்படும். முறையற்ற அந்தணன் செய்யும் நீர்க்கடன்போல. அந்தணர் நிறைவுறாத வேள்விபோல.” மைந்தனின் புன்தலை மேல் அவர் வெம்மூச்சு பட்டுக்கொண்டிருந்தது. “வீண் உடல்கொண்டவன் என நான் என்னை எண்ணியதில்லை. என் உடல்முளைக்கவில்லை என்றாலும் உள்ளம் முளைத்தது. ஆனால் அதை ஊர் அறியவேண்டியதில்லை. நன்மையின் வழி என்றும் வெல்வதே.”
“இன்மைவெளியே உண்ணும் நீரென ஆகிறது. இது பால்சொரியும் பசுவின் அகிடின் அடி. மானுடர் எவரிடமும் இரப்பது நஞ்சு. உண்க! ஊட்டுக! நீத்தார் புரந்து வாழ்க! மைந்தா, தன்னறத்தில் நிலைகொள்வதே உன் தவமென்றாகுக! கடிவாளம் கைவிடப்படாத தேர் காக்கப்படுகிறது. எதிரியை நூறுமுறை தாங்குக! கீழ்மையிலிருந்து நூறுமுறை விலகுக! அவையே பொறுமையும் நாணமும் எனக் கொள்க! மெய்ப்பொருள் சூடுக! அமைதியில் அமைக! அனைவருக்கும் அது நிகழ்கவென விழைக! அனைவருடனும் இணைந்திருக்கும் எளிமையென்றாகுக உன் இயல்நிலை! சினம் நாகம். பெருவிழைவு மதகரி. இக்காடு நீ கடந்து செல்லற்கரியது. கடந்து செல்பவன் அறிவான், இது ஏணி.”
கொடிபறக்க, வெடிப்பொலி எழுப்பி ஒரு படை கடந்து சென்றது. குளம்புகள் அறைபட்ட நிலமென நெஞ்சு நடுங்கி அதிர்ந்தது. சினம்கொண்டு விழி விரிய இதழ்கள் நெளிய குந்தி சொன்னாள் “நீ பெற்றுவந்தது பேடிமையை மட்டுமே.” அவர் கைகள் கோத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “அன்னையே, அனைத்துயிரும் வாழ விழைபவனே தனக்கும் மகிழ்வை விரும்பவேண்டும் என்பதே நெறி. இரக்கமற்றவன் நெறிபிறழ்ந்தோன். தன் கடமைகளை அறியாத மானுடன் இருளில் இருக்கிறான். அதே உண்மையான அறியாமை. இங்குள அனைத்தையும் நான் அறிந்து ஆற்றுவேன் என்பதே ஆணவம். ஆற்றுவதை ஆற்றாமலிருப்பது வீணன் இயல்பு. இவ்விரண்டையும் அறியாதிருப்பதே துயரம். உயிரென மைந்தன் என அரசன் என என் தன்னறத்தில் நிலைகொள்வதே நான் எந்தையிடமிருந்துகொண்ட உறுதி.”
“அச்சத்திற்கு ஆயிரம் சொற்கள்” என்றாள் திரௌபதி. தருமன் “இது அன்னையின் சொல்” என்றார். “ஆம், நானும் அவரும் ஒன்றே. ஐவரை அடைந்து ஐவராலும் கடக்கப்படாமல் எஞ்சும் பெண்கள் நாங்கள்.” தருமன் துயருடன் “இருமுனை எரி” என்றார். வெளியே இந்திரப்பிரஸ்தம் ஒளிகொண்டிருந்தது. விழவுகளுக்கே உரிய மானுடஓசை எழுந்து பெருமுழவின் உட்கார்வையென நகர்மேல் கவிந்த வானை நிறைத்தது. “ராஜசூயம் என்பது ஓர் அறைகூவல். அரசி, எல்லா அறைகூவல்களும் ஊழுக்கும் தெய்வத்திற்கும் எதிராகவே” என்றார். “அஞ்சுகிறேன் என்று சொல்லுங்கள். ஆற்றலில்லை என்று சொல்லுங்கள். அறம் அது என்று சொல்லவேண்டியதில்லை.”
“இது பொறுமை. புலன்களுக்குமேல் அறிவின் ஆணை” என்றார். “வெறும் நூற்சொற்கள்” என்று அவள் கைவீசினாள். “சான்றோர் சொல்லாடுபவன் அகம்நீராடுகிறான்” என்றார். “கொடைகளில் பெரிது அனைத்துயிர்களையும் காத்தல். இதோ உவகை கொப்பளிக்கும் இவ்வெளிய மக்கள்திரள் என்னை விழிகனிந்து நெஞ்சு விம்மச்செய்கிறது. நாளை இதன்பொருட்டு இவர்களில் ஒருவர் குருதிசிந்தினாலும் அது என் பிழையே. முடிசூடி நின்றிருக்கும் என் கடன் இது. கடமையறிந்தவனே நூலாய்ந்தவன். ஆற்றுவதறியாதவன் இறையற்றவன்.”
“இங்குளது இந்நகரம், இவ்வுலகம். இது அனைவருக்கும் உரியது, எவருக்கும் உடைமை அல்ல. இவையனைத்தும் என விரியும் கை அள்ளி அள்ளிச் சேர்க்கிறது. அறிக, அந்தக் கை ஒழிந்தே இருக்கும்! அதில் பொறாமைத் துயர் அறாது. நாம் என உணராமையே அறியாமையின் உச்சம். நான் எனக் கூவுவதே அதன் ஆழம். அளித்தல் அமுதாக்குமென்று அறிக!” அவள் இகழ்ச்சியுடன் உதடுகளைக் கோட்டியபடி அறைவிட்டு சென்றாள். வாயிலில் நின்று “சொற்களில் தன்னை ஒளிப்பவன் புதர்களில் பதுங்கும் எலி” என்றாள். “வசைச்சொற்களில் வீங்கும் ஆணவம் நச்சுநாவுடன் எழும் நாகம்” என்றார் தருமன்.
நாரை அவர் விழிகளை நோக்கியது. “நன்று. அறம், பொருள் இன்பம் மூன்றும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அவை எப்படி இணையமுடியும்?” தருமன் திகைத்து அதை நோக்கியபின் “நாம் பேசிக்கொண்டிருந்தோமா?” என்றார். “ஆம், சொல்!” என்றது நாரை. இகழ்ச்சியுடன் “மனைவியும் அறமும் சேர்ந்து அமையலாகுமென்றால் இணையாதது எது?” என்றபின் கண்களை சற்றுநேரம் மூடினார். பின்பு திறந்து நாரையிடம் “மூன்று கற்கள் நடுவே அடுப்புத்தீ எரிவதுபோல” என்றார்.
“அனைத்து இழிவும் என் மேல் பெய்க!” என்று தலைகுனிந்து அவர் சொன்னார். “அளிக்காதவன் அடையும் இழிவு மட்டும் அணையாதொழிக! யாதவனே, நான் ஷத்ரியனல்ல, அந்தணன். அந்தணனுக்குப் பிறக்கவில்லை, அனலோம்பவில்லை. அந்தண்மையால் அவ்வாறு ஆனேன்.” அவர்களைச் சூழ்ந்திருந்த காடு ரீங்காரத்துடன் இருண்டுகொண்டிருந்தது. இலைகளுக்குமேல் பறவைகளின் ஒலி வலுத்துக்கொண்டே சென்றது. “இனியசொற்கள் கொண்டவன் அனைவருக்கும் ஏற்புடையவன். ஆனால் தன் செயலில் முடிவுறுதி கொண்டவன் சென்றெய்துகிறான். சுற்றம் கொண்டவன் மகிழ்வுகொள்கிறான். அறத்திற்கு தன்னை அளித்தவன் இங்கு நீங்கி அங்கு சென்றாலொழிய இன்பம் அடைவதில்லை. நான் விரும்பி அதை தேர்வுசெய்தேன்.”
“இந்தக் கானக வாழ்க்கை என்னை நிறைவுசெய்கிறது. எவருக்கும் கடன்படவில்லை. எங்கும் சென்று நிற்கவேண்டியதில்லை. எளிய உணவுடன் மரங்களின் அணைப்பில் துயில்கிறேன். யாதவனே, முன்பெப்போதும் நான் இப்படி மகிழ்ந்திருந்ததில்லை. விந்தை, பிறப்பவை அனைத்தும் மண்மறைவதை நாளும் கண்டபின்னரும் என்றுமிருப்போம் என எண்ணுகிறான் மானுடன்! நகரங்கள், கோட்டைகள், அரண்மனைகள், மஞ்சங்கள். எதற்கும் பொருளில்லை. மகிழ்வுகொண்டு வாழும் ஒவ்வொரு கணமும் அவன் ஈட்டிக்கொள்பவை. எதன்பொருட்டேனும் இழக்கும் ஒவ்வொரு கணமும் மீளமுடியாதவை.”
“சொல்வளர்காடுகள்தோறும் சென்றேன். மெய்மை திகழ் நாவுகொண்ட முனிவர் காலடிகளில் அமர்ந்தேன். அறிந்தது ஒன்றே. சொல்லாடுதல் பயனற்றது. மெய்ச்சொற்களோ முரண்பட்டுள்ளன. மறுக்கப்படாதவர் எவருமில்லை. அறமும் நெறியும் சொற்களின் இருளுக்குள் புதையுண்டிருக்கின்றன. மூதாதையர் காலடித்தடங்களோ தெளிவானவை” என்றார் தருமன். “அறிதற்கரியது இப்புவி. இந்தப் பெருங்கலத்தில் பகலிரவுகளை உண்டு நின்றெரிகிறது சூரியன். பருவகாலங்கள் கரண்டிகள். காலம் சமைத்துக்கொண்டிருக்கிறது அதற்கான இன்னுணவை.”
அவர்களைச் சூழ்ந்து மரங்கள் ஒளிகொள்ளத்தொடங்கின. யாதவனின் உடலில் நீலச்சுடர் எழுவதை வியப்புடன் நோக்கினார். பின்பு தன் கைகளை பார்த்தார். “ஒளி!” என்றார். “இவை தங்கள் உள்ளிருந்து ஒளியை எடுத்து அணிகின்றன” என்றார் இளைய யாதவர். “அரசே, இங்கு ஆற்றப்படும் எந்த அருஞ்செயலும் வீணல்ல. அறம்திகழ் செய்கை விண்முட்டி மழையென மண்ணில்பரவுகிறது. அவனை மானுடன் என அறிகின்றனர் தேவர்கள். ஈட்டலும் இழத்தலும் நிகரெனக்கொண்டவர் அனைத்துச் செல்வங்களுக்கும் அரசர். நீங்கள் இன்றுதான் சத்ராஜித்.”
சுடர்பூசிய காடு அவர்களைச் சூழ்ந்து அலையிளகியது. சொல்லணைந்து இருவரும் ஒருவர் ஒளியை ஒருவர் நோக்கி அங்கே அமர்ந்திருந்தனர்.