அத்தனையும் பைத்தியங்கள்

 

samathan 3

 

 

கோதாவரிக்கரையை பூர்விகமாக கொண்ட ராமச்சந்திர ஷர்மா எங்கள் நண்பர்குழுவில் முக்கியமானவர். நல்ல பாடகர். கோதாவரிமேல் ஒரு படகுப்பயணம் செல்வதைப்பற்றி அவர்தான் சொல்லிக்கொண்டே இருந்தார். இரண்டுமுறை திட்டமிட்டோம். இருமுறையும் கோதாவரியில் பெருவெள்ளம். ஒருவழியாக நாள் குறித்தபோது பதற்றமாகிவிட்டோம். மழைபெய்யவேண்டுமா வேண்டாமா? கோதாவரியில் இளமழையில் செல்வது பெரிய அனுபவம். அதற்காக மழை மிஞ்சிவிடவும் கூடாது.

நாங்கள் விஜயவாடா சென்று இறங்கியபோது மொட்டைவெயில் அடித்தது. விஜயவாடாவிலிருந்து பேருந்தில் கோதாவரிக்கரைவரைச் செல்லவேண்டும். “சார் இந்த வெயிலிலே கோதாவரியிலே படகிலே போறதுன்னா எரியுமே” என்று கிருஷ்ணன் சொன்னார். “ஆற்றுக்குமேலே நிழல்கூட இருக்காது” என்று நான் சோகமாகச் சொல்ல “அதானே” என்றார் கிருஷ்ணன்.

ஆனால் கோதாவரிக்கரையை நாங்கள் அடைந்தபோது மென்தூறல் ஆரம்பித்திருந்தது. எங்கள் படகு முப்பதுபேர் வசதியாகத் தங்குமளவுக்குப் பெரியது. அடித்தளத்தில் நீளமான கூடம்போலிருந்த அறையில் படுத்துக்கொள்ளலாம். பைகளை வைக்க தனி அறைகள். மேலே பெரிய திறந்தகூடம். படகைப்பார்த்ததுமே உற்சாகமாகிவிட்டோம். நகரும் விடுதி.

படகோட்டியின்பெயர் சமதானி. எங்களை மாறிமாறிப்பார்த்தபின் “ஆண்கள் மட்டும்தானா? பெண்கள்?” என்றார். “பெண்கள் யாருமில்லை” என்றோம். ”வழியில் ஏறுவார்களா?” என்று மேலும் குழப்பமாகக் கேட்டார். “இல்லை, பெண்களே வரப்போவதில்லை” என்றேன். படகு நகர்ந்தபோதும் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்

மாடியில் சென்று அமர்ந்துகொண்டோம். சமதானி எங்களிடம் வந்து “பாடகர்கள் வேண்டுமா? பாடகிகளும் வருவார்கள்” என்றார். வரச்சொன்னோம். ஒரு பாடகியும் உடன் பறைபோன்ற வாத்தியத்தை முழக்குபவனும் வந்தனர். மெலிந்த வெளிறிய பெண். ஆனால் குரல் அபாரமான கவர்ச்சியுடன் இருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியை நினைவுறுத்துகிறது என்றார் நண்பர்

அந்தப்பெண் பாடிய அத்தனை தெலுங்குப்பாடல்களும் அதிவேகத் தாளம் கொண்டவை. அதாவது குத்துப்பாடல்கள். பொருள்புரியாததனால் மேலும் கவர்ச்சியாக இருந்தன. உடன் அந்த பறையின் தாளம். பெரும்பாலான பாடல்களை எங்கோ கேட்டதுபோலிருந்தது. பின்னர் தெரிந்தது நம் குத்துப்பாடல்கள் அனைத்துக்கும் அதுதான் விதைக்களஞ்சியம் என.

வெயிலில் சரிகையிழைகள்போல பெய்த இளமழைத்தாரைகள். அரைமணிநேரத்திலேயெ ஊரும் வீடும் குடும்பமும் மறந்துபோய்விட்டன. எங்களுடன் இரு பாடகர்கள் இருந்தனர். ராமச்சந்திர ஷர்மாவைப்போலவே எழுத்தாளர் யுவன் சந்திரசேகரும் நன்றாகப்பாடுவார். மேலும் அவருக்கு தெலுங்குக் குத்துப்பாடலும் நிறைய தெரிந்திருந்தது.

அந்தியில் பாடகர்களை காசுகொடுத்து அனுப்பிவைத்தோம். சமதானி ஐயத்துடன் “அனுப்பிவிட்டீர்களா?” என்றார் .”ஏன்?’ என்றேன். “இரவில் குடிக்கும்போது யார் பாடுவார்கள்?” நான் சிரித்தபடி “நாங்கள் குடிப்பதில்லை” என்றேன். “யாருமே குடிக்கமாட்டீர்களா?” என்றார். “இல்லை, குடிக்க எண்ணம் இல்லை” என்றேன்

அவர் திரும்பிச்சென்றபோது பெருங்குழப்பத்தில் இருப்பதை உடம்பே காட்டியது. தன் உதவியாளரிடம் “லிக்கர் லேது. வுமன் லேது. அந்தரிகி மெண்டலு” என்றார். அந்தரிகி மெண்டலு என்னும் சொல்லாட்சி எங்களைக் கவர்ந்தது. எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி மெண்டலுகி” என்று யுவன் உருகிப்பாடினார்

 

samathani 1

சமதானி கையில் சிகரெட்டுடன் நடுவே

 

இரவில் இலக்கியவிவாதம் நிகழ்ந்தது. இலக்கிய விவாதம் வழக்கம்போல இலக்கியப்பூசலாகியது. மேற்கோள்கள், கோட்பாடுகள், ஏற்புகள் மறுப்புகள். இருபதுபேர் அமர்ந்து பேசியமையால் நாற்பது தரப்புகள் உருவாகி வந்தன. சமதானி வந்து நின்று பேச்சை பீதியுடன் கவனித்துக்கொண்டிருந்தார். விவாதம் சூடுபிடிக்க அவர் நடுங்கவே ஆரம்பித்தார்.

அமைப்பாளர் ஷர்மாவிடம் இவர்கள் என்ன பேசுகிறார்கள்?” என்றார். இலக்கியமெல்லாம் அவருக்குப்புரியவில்லை. நக்சலைட்டுகளா?” என விழிபிதுங்கக் கேட்டார். இல்லைஎன்று ஷர்மா சொன்னபோது கொஞ்சமும் நம்பிக்கைவரவுமில்லை. நக்சலிசம் குடி இரண்டும் இல்லாமல் இரவெல்லாம் பேசுவதை அவரால் ஏற்கமுடியவில்லை

காலையில் இளமழைபொழிந்த நதிமேல் படகில் செல்வது பேரனுபவம். கோதாவரி இருபக்கமும் கடல்போல விரிந்துகிடந்தது. அதனுடன் ஒப்பிட்டால் காவேரி ஒரு ஓடைதான். மெல்லிய புகை போல அதிலிருந்து நீராவி எழுந்தது. மழைத்தோகை வருடிச்செல்ல நதிச்சருமம் புல்லரித்தது.

எங்கெல்லாம் இடையளவுக்கு நீர் தெரிகிறதோ அங்கெல்லாம் இறங்கி நீராடினோம். படகைநிறுத்திவிட்டு சமதானி கண்கள் சுருங்க எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் இரண்டாம்முறை குளிக்க படகை நிறுத்தச் சொன்னபோது குளிக்கவா? நீங்கள் குளித்துவிட்டீர்களே?” என்றார். இன்னொரு முறை குளிக்கிறோம்என்றார் அரங்கசாமி. அவர் ஒரு நீர்ப்பைத்தியம்.

மூன்றாம் முறை குளிக்க இறங்கியபோது சமதானி அழாக்குறையாக மறுபடியுமா?” என்றார். நான்காம் முறை குளிக்க இறங்கியபோது கடுப்புடன் அந்தரிகி மெண்டலுஎன்றார். மனதேச தமிளு. அந்தரிகி மெண்டலுஎன அரங்கசாமி அவருக்கு விளக்கத்தலைப்பட்டார். ஐந்தாம்முறை சாமியே அய்யப்பா பாணியில் அந்தரிகீ! மெண்டலுஎன கூவியபடி நீரில் பாய்ந்தோம்

இரண்டாம் நாள் ஒரு மணல்திட்டைப் பார்த்து படகை அங்கே கொண்டுசெல்என்றோம். சமதானி அங்கே போகக்கூடாதுஎன்றார்.ஏன்?” என்றோம். ஆபத்து!என்றபின் மேலே சொல்ல மொழி போதாமையால் பலவகையாக நடித்துக்காட்டினார். அதைஒரு நடனமாக எடுத்துக்கொண்டு போ…. நாங்கள் சொல்கிறோம்.போஎன்றோம். அவர் தலையில் அடித்துக்கொண்டு படகைத் திருப்பினார்.

படகு மணலில் சிக்கி நின்றுவிட்டது. சமதானி கூச்சலிட தொடங்கிவிட்டார். நாங்கள் தள்ளுகிறோம்என்று நீரில் இறங்கினோம். படகின் விசிறி நீருக்குள் மணலில் சிக்கியிருந்தது. அதை தோண்டி எடுத்தோம். அதன்பின் ஐசலா! தேக்குமரத்தாலே என்படகு, ஐலசா!என கூவியபடி படகைத்தள்ளினோம்.

கிட்டத்தட்ட மூன்றுமணிநேரம். மெல்ல படகு கிளம்பியதும் ஓகோ!என கூச்சலிட்டோம். உலகத்திலேயே படகைத்தள்ளிய சுற்றுலாப்பயணிகள் நாம்தான் சார்என்றார் கிருஷ்ணன் பூரிப்புடன். சமதானி அந்தரிகி மெண்டலுஎன்று சொன்னபோது கண்கள் கலங்கியிருந்தன.

கரையில் சாலை தெரியும்போதெல்லாம் இறங்கி ஒரு நடைசென்று மீண்டோம். பெரும்பாலும் சிறிய செம்படவக் கிராமங்கள். மைதாமாவு உருண்டைகளை எண்ணையில் பொரித்து காலையுணவாக உண்டனர். வெற்றிலைபாக்குக் கடைகளில் மது கிடைத்தது. பளிச்சிடும் பற்கள் கொண்ட அழகிய பெண்கள் எங்களைப்பார்த்து நாணினர். இளமழையில் கூரைகள் கருமையாக புகைசூடி நின்றிருந்தன.

ஒவ்வொண்ணையும் அழகாக ஆக்குவதற்காகவே மழை பெய்யுது சார்என்றார் கிருஷ்ணன். மிகையான கவித்துவம் வந்துவிட்டதோ என அஞ்சி நல்ல வளமான மண்ணு…வாழையெல்லாம் நல்லா வரும்என பொருளியலுக்குள் புகுந்தார்.

வழியில் ஒருவர் அருகே ஒரு வாட்டர்ஃபால்இருக்கிறது, காட்டுகிறேன் என்றார். அருவியைப்பார்க்க நாங்கள் இறங்கி நடந்தோம். நான்கு கிலோமீட்டர் நடந்து சென்றால் ஒரு சரிவில் சிற்றாறு ஒன்று வேகமாக ஓடிவருவதைக் காட்டி இதுதான் அருவி என்றார். அந்த சரல்கல் தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு நீர் உடலை தழுவிச்செல்ல கண்மூடி அருவியில் நிற்பதாகக் கற்பனைசெய்து மகிழ்ந்தோம்

கோதாவரியில் பிடித்த மீனை அங்கேயே கழுவிச் சமைத்து உண்டோம். நன்னீர் மீன் நெய் மிக்கது. குழம்பில் ஒரு இஞ்ச் அளவுக்கு நெய் நின்றது. நாபிக்கமலம் காந்தும் அளவுக்குக் காரம். ஆனால் சுவை என்றால் அதுதான். சமதானிதான் சமையல். மீன்குழம்பு நன்றாக இருக்கிறதுஎன்றேன். அவர் கண்களைச் சுருக்கி என்னை பார்த்தார். கடித்துக்கிடித்து வைப்பானோஎன சந்தேகப்படுவதுபோல் இருந்தது

மறுநாள் காலையில் மாடியில் அமர்ந்து இந்திய தத்துவம் பற்றிய உரையாடல். உபநிஷதம், பகவத்கீதை என்றெல்லாம் பேச்சு போனபோது சமதானி வந்து நின்று பார்த்தார். மேலும் சந்தேகம் கொண்டதுபோலிருந்தது. கிருஷ்ணனிடம் அவர் மீன் சாப்பிடுகிறார். பகவத்கீதை பற்றியும் பேசுகிறார். எப்படி?” என்றார். அதுதான் எங்களுக்கும் சந்தேகம்என்றார் கிருஷ்ணன்

மூன்றுநாட்கள் கோதைமேல் பயணம் முடிந்தபோது அந்தி நேரம். விஜயவாடா அருகே கொண்டுவந்து விட்டார் சமதானி. பேரம்பேசி பணம் வாங்க தீவிரமான முகத்துடன் வந்து நின்றார். பணத்தை அவர் சொன்னதுமே நாங்கள் கொடுத்துவிட்டோம். புன்னகையுடன் அந்தரிகி மெண்டலுஎன மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

கிளம்பும்போது நான் அவருக்கு மேலும் ஒரு நூறுரூபாய் கொடுத்தேன். அதை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் தோள்களைத் தழுவி அணைத்துக்கொண்டு வருகிறேன் பாய்என்றேன். திகைத்து வாய் திறந்து தலையசைத்தார்

நாங்கள் காரைநோக்கிச் சென்றோம். சமதானி காலடியோசை ஒலிக்க எங்களை நோக்கி ஓடிவந்தார். என்னை அணுகி சார்!என்றார். நான் நின்றதும் என்னை பாய்ந்து இறுகத்தழுவி வந்தனமு ..வந்தனமுஎன்றார். இம்முறை நான் திகைத்து நின்றேன். அவர் கண்களை துடைத்தபடி திரும்பி படகைநோக்கிச் சென்றார்.

முந்தைய கட்டுரைமுருகபூபதி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46