‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53

[ 8 ]

கிருதயுகத்தில் கோசலநாட்டில் சோமகன் என்னும் சந்திரகுலத்து அரசன் ஒருவன் ஆண்டிருந்தான். நூறுபெண்களை மணந்து ஐம்பதாண்டுகள் வாழ்ந்தும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மைந்தரின்மை அவனை நோயென பீடித்தது. தன்னை நோக்கும் எவ்விழிகளிலும் தனக்கு மைந்தரில்லை என்பதே தெரிவதாக அவன் எண்ணினான். சூழ்ந்தவர் சொற்களும் சிரிப்புகளும் நச்சு முள்ளென்றாயின. துயிலின் இருண்ட ஆழத்திலிருந்து தன் மூதாதையர் ஏங்கி அழும் குரல் எழுந்துவரக் கேட்டான்.

தன் மைந்தரன்றி பிற மைந்தரால் நிறைந்த புவியை வெறுக்கலானான். பிற மைந்தரைப் பெற்ற தந்தையர்மேல் சினம் கொண்டான். தன் துணைவியரை வசைபாடி அகற்றினான். விழைவொன்றை தொட்ட உள்ளம் அதை ஊதி ஊதி வளர்க்கிறது. அந்த ஐந்தெரி நடுவே ஒற்றைக்காலில் நிற்கிறது. சோமகன் துயிலிழந்தான். உணவை ஏற்க மறுத்தது அவன் உடல். அவன் சித்தம் கொந்தளித்து ஆடி ஓய்ந்து பின் அசைவிழந்தது. உடலும் உள்ளமும் ஆற்றலிழக்கவே படுக்கைவிட்டு எழாதவனாக ஆனான். பித்துபடிந்த விழிகளால் சாளரம் வழியாக தெரிந்த உலகை நோக்கியபடி பிணமெனக்கிடந்தான்.

அவன்முன் எமன் தன் இருளெருமை மேல் ஏறி வந்து நின்றான். “அரசே, மண்ணாள்பவனையும் சொல்லாள்பவனையும் தன்னைக்கடந்தவனையும் தானே சென்று அழைத்து வரவேண்டுமென எனக்கு நெறியுள்ளது. என் கணக்கில் உன் நாள் முடிந்துள்ளது. ஆகவே வந்துள்ளேன், எழுக!” என்றான். சோமகன் கண்ணீர் உகுத்தபடி அவனை நோக்கி மாட்டேன் என தலையசைத்தான். “நீ காம்பு கனிந்து உதிரவேண்டிய வயது இது. கண்ணீர் உகுக்கிறாயே?” என்றான் எமன். அவன் வீசிய பாசக்கயிற்றிலிருந்து உளம் திமிறி விலகியபடி “என்னை விடு, நான் உன்னுடன் வர விரும்பவில்லை” என்று சோமகன் சொன்னான்.

“உவந்து வர விரும்பாதவர்களை கொண்டுசெல்ல என்னால் இயலாது. முதுமையால், நோயால், போர்நிறைவால் மானுடர் இங்கிருந்து விடுபட்ட பின்னரே அவர்களை நான் கொய்கிறேன். விரும்பாமல் எவரும் இறப்பதில்லை என்பதே தெய்வங்களின் நெறி” என்றான் எமன். “நீ முதிர்ந்துவிட்டாய். நோயில் தளர்ந்து பிணம்போலிருக்கிறது உன் உடல். உன் உள்ளம் எண்ணங்களுக்கும் ஆற்றலற்றதாக நீர்வற்றிய ஓடையின் சேற்றுத்தடம்போலிருக்கிறது. இதற்கு அப்பால் நீ இங்கிருந்து அடையப்போவதுதான் என்ன?”

சோமகன் “ஆம், என் ஐம்புலன்களும் அணைந்துவிட்டதை உணர்கிறேன். என் நினைவுகள் உதிர்ந்துவிட்டன. முன்னோக்கிச் செல்லும் ஆற்றல் அழிந்துவிட்டது. நேற்றும்நாளையுமின்றி இன்றில் அமைந்து இங்கிருக்கிறேன். ஆயினும் என் உடலுக்குள் சிறுநெருப்பென எரிவது ஒற்றை விழைவே. எனக்குப் பிறக்கும் ஒரு மைந்தனின்றி நான் விண்ணேக முடியாது” என்றான். “விழைவறாது நான் உடலுதிர்ப்பேன் என்றால் உடல்தேடும் உயிர் என இங்கேயே இருப்பேன். எனக்களிக்கப்படும் அன்னமும் நீரும் கொள்ளப்படா. காலமில்லா வெளியில் அணையாத வெறுந்தவிப்பாக எஞ்சுவேன்.”

எமன் உள்ளமிரங்கினான். “சொல்க, மைந்தனை ஏன் நீ விழைகிறாய்?” என்றான். சோமகன் “ஏனென்றால் மானுடனுக்குரிய இரு முதன்மை விழைவுகளில் ஒன்று அது” என்றான். எமன் புன்னகைத்து “அம்மைந்தனை நீ எதன்பொருட்டு இழக்கச் சித்தமாவாய்?” என்றான். “எதன்பொருட்டும் இழக்கமாட்டேன். என் பொருட்டும் என் குடிபொருட்டும் இப்புவியின் அனைத்தின்பொருட்டும் ஏன் தெய்வங்களின்பொருட்டும்கூட!” எமன் புன்னகைத்து “நன்று, நான் உனக்கு பன்னிரண்டு ஆண்டுகளை அளிக்கிறேன். நீ மைந்தனைப் பெற்று வாழ்ந்து அறிந்தபின் வருகிறேன்” என்றான்.

நோய்ப்படுக்கையிலிருந்து சோமகன் எழுந்தான். அதை மருத்துவர் பெருவிந்தை என்று எண்ணினர். தங்கள் வெற்றி எனக் கொண்டாடினர். சோமகனின் முதல் மனைவி காளிகை கருவுற்று ஒரு மைந்தனைப் பெற்றாள். அவள் கருக்கொண்ட நாளிலேயே தீயகுறிகள் தெரியலாயின. அவள் சோமகனின் பட்டத்தரசி, இளவயதிலேயே அவனை மணந்த முதுமகள். குருதிநாள் நின்றே நெடுங்காலமாகியிருந்தது. கருவுற்றதையே அவள் அறியவில்லை. தலைசுற்றி உணவுமறுத்து அவள் படுக்கையிலிருந்தபோதுதான் மருத்துவச்சி ஐயுற்று உடல்நீர் எடுத்து நோக்கினாள். அவள் கருவுற்றிருப்பதை உணர்ந்ததும் ஐயம்கொண்டு பிற மருத்துவச்சிகளிடம் சொன்னாள். அவர்களும் உறுதிசெய்தபின் அரசனிடம் சொன்னார்கள்.

அரசன் அதைக் கேட்டு உவகையும் கூடவே அச்சமும் கொண்டான். அரசி அக்கருவைச் சுமந்து ஈன்று எழுவாளா என்று மருத்துவரிடம் கேட்டான். “நெய் வற்றும் அகல். திரிகாத்து சுடர்மிகாது சென்றணையவேண்டும்” என்றனர் மருத்துவர். அரசியை படுக்கையிலேயே வைத்து மருத்துவர் பேணினர். அவள் நாளுக்குநாள் குருதியிழந்து வெளிறிக்கொண்டே சென்றாள். நகக்கண்கள் பளிங்கென்றாயின. விழிப்பரப்பு சிப்பிபோல வெளுத்தது. உதடுகள் வாடிய ஆம்பல் போலிருந்தன. மூச்சிலசையும் வறுமுலைகளில் காம்புகள் கருமைகொள்ளவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசை தளர்ந்து தொய்ந்தது. புறங்கை வீங்கி குழவியரின் கைபோல ஆகியது. கால்கள் பருத்து ஒளிகொண்டன. பேசவும் ஆற்றலற்று விழிதிறந்து கூரையை நோக்கியபடி அவள் மஞ்சத்தில் படிந்துகிடந்தாள்.

ஏழு மாதம் வரை அவளை அவர்கள் காத்தனர். ஏழாம் மாத முடிவில் குருதிப்போக்கு தொடங்கியது. அதை நிறுத்த அவர்கள் முயன்றபோது கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட துணிப்பொதிபோல அவள் மெலிந்த உடலில் தொங்கிய வயிற்றுக்குள் வாழ்ந்த குழவிதசை வாயிலை நோக்கி இறங்கியது. மருத்துவர் அதை வெளியே எடுத்தபோது உயிரற்ற சிறிய தசைப்பாவை போலிருந்தது. தோல்முளைக்காத வெறுந்தசை. அதன் கைகளோ கால்களோ நெளியவில்லை. குரலெழவுமில்லை. விழிகள் மட்டும் அதிர்ந்தன. அரசி தன் மைந்தனை நோக்க தலையைத் தூக்கினாள். குழந்தையைக் காட்டியபோது முகம்சுளித்து பற்களைக் கடித்தபடி “ஜந்து” என்றாள். தலையை மஞ்சத்தில் அமர்த்தி இருமுறை முனகி மூச்சுவிட்டு துயிலில் ஆழ்ந்தாள்.

மைந்தனை மருத்துவர்கள் எண்ணைக்கொப்பரையில் போட்டு இளவெம்மை ஊட்டி நான்கு மாதம் பேணினர். தோலும் முடியும் நகமும் முளைத்தன. இதழ்விரித்து பாலை ஏற்று அருந்தினான். பசிக்கையில் முகம்சிவக்க உடலதிர சீவிடுபோல ஓசையெழுப்பினான். கால்கள் நிலம்பதியும் அதிர்வை அறிந்து வருவது எவரென உணர்ந்தான். பாலளிக்க வரும் சேடியரைக் கண்டதும் மகிழ்ந்து வாய்திறந்தான். ஆனால் அவன் கைகளோ கால்களோ அசையவில்லை. விழிதிறந்து நோக்கு கொள்ளவுமில்லை.

அன்னை இட்டபெயரே அவனுக்கு நீடித்தது. அவனை அனைவரும் ஜந்து என்றே அழைத்தனர். வெற்றுயிர் என அவனை பிறர் எண்ணினாலும் தந்தை அவன்மேல் பேரன்புகொண்டிருந்தான். அவன் பிறந்த நாளில் ஈற்றறைக்கு வெளியே நின்று தவித்தான். மைந்தனை எண்ணைக்கொப்பரையில் குனிந்து நோக்கியதும் உளமுருகி விழிநீர் பொழிந்தான். இரவும் பகலும் ஆதுரசாலையில் மைந்தனுடன் இருந்தான். விழித்திருக்கும் நேரமெல்லாம் அவனை எண்ணிக்கொண்டிருந்தான். துயிலில் அவனையே கனவுகண்டான். மைந்தன் ஒலியெழுப்பத் தொடங்கியதும் அவ்வொலி கேட்பதற்காக அருகிலேயே அமர்ந்திருந்தான். அவன் தந்தையின் காலடிகளை அறிந்ததும் முகம் மலர்ந்து “ஆ!” என ஒசையிடுவான். “என்னை அழைக்கிறான். தந்தையே என அழைக்கிறான்” என்று சோமகன் கூவி கண்ணீர்மல்குவான்.

தந்தையால் சௌமதத்தன் என்று பெயரிடப்பட்டாலும் அரண்மனையில் ஜந்து என்றே மைந்தன் அழைக்கப்பட்டான். மெல்லிய வெறுப்பும் அருவருப்பும் கொண்டு இடப்பட்ட அப்பெயர் நூறு அன்னையரின் நாவில் இனிய செல்லப்பெயராக மாறியது. இரவும் பகலும் அவன் அன்னையரின் கைகளிலும் மடியிலுமே திகழ்ந்தான். அசைவற்ற கைகால்களும் நோக்கில்லா விழிகளும் கொண்ட அந்தத் தசைக்குவை அவர்களின் விழைவால் பேரழகுகொண்டது. எண்ணும்தோறும் இனிமையளிப்பதாகியது. அவர்கள் அதுவரை அடைந்த வெறுமையனைத்தையும் நிரப்பியது. அவர்களை தெய்வமென ஆட்சிசெய்தது.

சோமகன் தன் மைந்தன்மேல் பெரும்பித்து கொண்டிருந்தான். ஒவ்வொருநாளும் காலையில் மைந்தன் முகத்தில் அவன் விழிக்க விரும்புவான் என்பதனால் அன்னை ஒருத்தி மைந்தனுடன் வந்து அவன் மஞ்சத்தறை வாயிலில் காத்திருப்பாள். அரசவை கூடும்போது அருகமைந்த அறையில் அன்னையர் அவனுடன் காத்திருப்பார்கள். சிற்றிடைவேளைகளில் அவன் அழைத்ததும் மைந்தனை அவனிடம் அளிப்பார்கள். அவன் குரல் கேட்டதுமே மைந்தன் துள்ளித் ததும்பத் தொடங்குவான். ஏழு வயதாகியும் “ஆ!” என்ற ஒற்றைச் சொல்லன்றி எதுவும் அவன் நாவில் எழவில்லை. அவ்வொரு சொல்லில்இருந்தே அவன் உணர்வதனைத்தையும் அறிந்துகொள்ளுமளவுக்கு அவர்கள் அவன்மேல் பெருவிருப்பம் கொண்டிருந்தனர்.

ஒருநாள் கீழ்த்திசையிலிருந்து வந்த புலோமர் என்னும் வைதிகர் அவன் அவையிலமர்ந்து அறமுரைத்துக்கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து வைதிகரும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர். தாழ்ந்த குரலில் புலோமர் பேசிக்கொண்டிருக்க அதைக் கேட்கும்பொருட்டு அனைவரும் அவரை நோக்கி சாய்ந்தனர். அப்போது பக்கத்து அறையில் ஜந்து வீரிட்டலறும் ஒலி கேட்டது. அதைக் கேட்டு நூறு அன்னையரும் கூச்சலிடுவதும் அழுவதும் எழுந்தது. சோமகன் அரியணையில் இருந்து இறங்கி “என்ன? என்ன ஆயிற்று?” என்று கூவியபடி பக்கத்து அறைக்குள் ஓடினான்.

அந்தப் பெரிய கூடத்திற்குள் மைந்தன் கதறியழுதுகொண்டிருக்க அரசியர் அவனை கையில் எடுக்கும்பொருட்டு கூச்சலிட்டபடி முண்டியடித்தனர். “அவனை என்னிடம் கொடுங்கள்!” என அவர்கள் கூவி அழுதனர். அவர்களை அதட்டி விலக்கிவிட்டு மைந்தனை தன் கையில் வாங்கிப் பார்த்த சோமகன் அவன் தொடையில் ஓர் எறும்பு கடித்திருப்பதைக் கண்டான். அந்த வடுவில் அவன் கண்ணீர் விட்டபடி முத்தமிட்டான். வலி அமைந்ததும் ஜந்து உடல்கூச நகைக்கலானான். அன்னையரும் நகைத்தபடி அவனைச் சூழ்ந்து வளையல் ஒலிக்க கைதட்டியும் பறவைகள்போலவும் விலங்குகள்போலவும் ஒலியெழுப்பியும் அவனை மகிழ்விக்கத் தொடங்கினர்.

அதன் பின்னரே சோமகன் அரியணையைவிட்டு இறங்கி ஓடியதை உணர்ந்து கூச்சமடைந்தான். மீண்டும் அவைக்குச் சென்றபோது புலோமர் பேச்சை நிறுத்திவிட்டு அவனுக்காகக் காத்திருந்தார். வைதிகரும் அமைச்சரும் அவர் அருகே கைகட்டி நின்றிருந்தனர். சோமகன் புலோமரை வணங்கி “பொறுத்தருள்க அந்தணரே, நான் முதுமையில் தவமிருந்து பெற்ற மைந்தன். அவனன்றி என் உலகம் பொருள்கொள்வதில்லை. அவனுக்காகவே நான் உயிர்வாழ்கிறேன். அவன் அழுமொலி கேட்டபின் நான் இங்கே அமர்ந்திருக்கமுடியாது” என்றான். அங்கே நிகழ்ந்ததை சொன்னான். “பேரன்பு என்பது பெருந்துன்பமே என இன்று உணர்ந்தேன்” என சொல்லி பெருமூச்சுவிட்டான்.

“இந்த மைந்தன் உனக்கு எவ்வகையில் பொருள் அளிக்கிறான்?” என்றார் புலோமர். “இவனே என் அறம்பொருளின்பம். இவனே என் மூதாதையர். இவனே என் தெய்வவடிவம்” என்றான் சோமகன். “இப்புவியில் எதன்பொருட்டு இவனை இழப்பாய்?” என்றார் புலோமர். அவ்வினாவை எமன் கேட்டதை நினைவுகூர்ந்த சோமகன் “எதன்பொருட்டும் இழக்கமாட்டேன். இங்கும் அங்கும் எதுவும் இவனுக்கு நிகரல்ல” என்றான்.

“ஒற்றை ஒரு மைந்தனைப் பெற்ற தந்தை அப்படித்தான் இருக்கமுடியும். அன்பெல்லாம் அந்த ஒரு மைந்தன்மேல் குவிகிறது. நிறைய மைந்தரைப் பெற்றவர்கள் பலமடங்கு அன்புகொண்டவர்கள். பலமடங்கு உவகையும் அடைவார்கள். ஆனால் அவர்களின் துயர் குறைவே” என்றார் புலோமர். “என் ஊழ் ஒரு மைந்தனை மட்டுமே பெறுவேன் என்பது. நூறு மனைவியர் எனக்கு இருந்தாலும் அவர்களின் வயிறு கனியவில்லை” என்றான் சோமகன். “நூறு மைந்தரை நீ பெறமுடியும். நூறுவிழுது விரித்த ஆலமரமாக ஆக முடியும்” என்றார் புலோமர். திகைப்புடன் “அதெப்படி?” என்றான் சோமகன். “அரசே, பிருகத்ஃபலம் என்னும் மகாபூத வேள்வி ஒன்று உள்ளது. இது கிழக்குநாட்டில் பெருநிலம் முழுக்கப் பரவிய அரசுகொண்ட மாமன்னர்களுக்கு மட்டும் செய்யப்படுவது. நூறு புத்ரகாமேஷ்டிகளுக்கு நிகர் அது. அதை ஆற்றுபவன் நூறு நிகரற்ற மைந்தரைப் பெறுவான்” என்றார் புலோமர்.

“நான் அதைச் செய்ய விழைகிறேன். எனக்கு நூறு மைந்தர் வேண்டும்” என்று அரியணைவிட்டு எழுந்து நின்று சோமகன் கூவினான். “அரசே, அது எவ்விலை கொடுத்தேனும் தாங்கள் விழைவதைப் பெறும் துணிவுள்ள சக்ரவர்த்திகளுக்குரிய வேள்வி. அதர்வவேதத்தின் இருண்டபக்கத்தைச் சேர்ந்தது. எளிய உள்ளம் கொண்டோர் அதை எண்ணவும் இயலாது” என்றார் புலோமர். “நான் விரிமண்ணாளும் பேரரசன். என் விழைவோ பாரதவர்ஷத்தை முழுதாள்வது” என்று சோமகன் சொன்னான். “நூறு மைந்தர் எழட்டும். நான் என் அஸ்வமேதப் புரவியை கட்டவிழ்க்கிறேன்.”

“அரசே, இப்புவியில் எதை அடைந்தாலும் நிகராக ஒன்றை இழந்தாகவேண்டும். கையில் கொடைகளுடன் உங்களிடம் விலைபேச வந்திருக்கும் தெய்வங்கள் நீங்கள் எடுத்துவைக்கப்போகும் மாற்றுப்பண்டம் என்ன என்றே நோக்குகின்றன. இந்த வேள்வியில் பன்னிரண்டரை லட்சம் வெண்ணிறமான பசுக்களை பலியிடவேண்டும்” என்றார் புலோமர். சோமகன் திகைத்து அமர்ந்திருக்க “அல்லது அதற்கு நிகராக தன் தந்தையை பலிப்பசுவாக்கி வேள்வியில் அவியிடவேண்டும்” என்று புலோமர் சொன்னார். சோமகன் இமைக்காமல் நோக்கி அமர்ந்திருந்தான். புலோமர் “அல்லது பெற்றெடுத்த முதல் மைந்தனை பலிப்பசுவாக குருதி கொடுக்கவேண்டும். கொடை கொடுப்பவனின் இழப்பால்தான் அளக்கப்படுகிறது” என்றார்.

“அதெப்படி முடியும்? என்ன பேசுகிறீர்கள்?” என்று தலைமை அமைச்சர் சீறினார். “இச்சொல் இந்த அவையில் எழுந்தமையே பெரும்பழி சூழச்செய்வது” என்றார் இணையமைச்சர். “நான் பேரரசர்களின் வழியையே சொன்னேன். பிறருக்குரியவை அல்ல என்றும் எச்சரித்தேன்” என்றார் புலோமர். “ஒரு மைந்தனை இழந்தாலும் நூறு மைந்தரைப் பெறமுடியும். சிம்மம்போல் உடலாற்றல் கொண்டவர்களும் முழுவாழ்க்கை கொண்டவர்களுமான மைந்தர்களையே தெய்வங்கள் அளிக்கும். வேள்வியில் குறைமைந்தர் எழமாட்டார்.”

ஒரு சொல்லும் உரைக்காது சோமகன் எழுந்து தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான். அவன் தேவியர் வந்து அழைத்தும் திறக்கவில்லை. இரவெல்லாம் துயிலாமல் உலவிக்கொண்டிருந்த ஒலி கேட்டது. அவன் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் ஓங்கி தூண்களை மிதிப்பதும் ஓலமிடுவதும் கேட்டு வெளியே நின்றிருந்த அமைச்சர்கள் அஞ்சினர். மறுநாள் காலை கதவைத் திறந்து வெளிவந்த முதிய அரசன் இளமைகொண்டவனைப்போல் தோன்றினான். இறுகிய உடலுடன் நடந்து சென்று அவையமர்ந்து புலோமரை அழைத்துவர ஆணையிட்டான். வந்து வாழ்த்திநின்ற புலோமரிடம் “நான் ஏற்கிறேன். வேள்வி நிகழ்க! அதில் என் மைந்தனை பலிப்பசுவாக அளிக்கிறேன்” என்றான்.

அவையினர் திகைத்தனர். அமைச்சர் உரக்க “என்ன சொல்கிறீர்கள், அரசே? உங்கள் உயிருக்கு நிகரான மைந்தர் அவர்” என்றார். ஆனால் இரவிலேயே அனைத்தையும் எண்ணிமுடித்திருந்தான் சோமகன். “ஆம், நான் விழைந்தது மைந்தரை. நான் பேரன்பு கொண்டிருப்பது மைந்தர் மேல். இந்தக் குறிப்பிட்ட மைந்தன் அல்ல” என்று அவன் சொன்னான். “இது அசைவற்ற ஊன்பிண்டம். இது எனக்குப் பின் அரசாளுமா? எந்தையருக்கு நுண்சொல் உரைத்து நீர்க்கடன் இயற்றுமா? வேள்விக்காவலனாக அமர்ந்திருக்குமா? இதை மைந்தன் என எண்ணிக்கொண்டது என் இழிதகு உளமயக்குதான். உண்மையான ஆற்றல்கொண்ட நூறுமைந்தர் பிறப்பாரென்றால் இதை இழப்பதில் பிழையில்லை.”

“ஆம், இவனை இழந்தால் நான் துயர்கொள்வேன். ஆனால் நூறு மைந்தரைப் பெற்று அதை நூறுமடங்கு நிகர்செய்வேன்” என்று சோமகன் சொன்னான். “உண்மை, இது பழிசூழ் செயலே. ஆனால் அரசனாகிய நான் என் மக்களுக்கு கடமைப்பட்டவன். எனக்காக அல்ல, என் அரசுக்காகவே நான் மைந்தனைப் பெற விழைந்தேன். நூறு பெருவீரர் என் குடியில் பிறந்தால் என் அரசு பாரதத்தை ஆளும். என் குடியினர் என்னை வாழ்த்துவர். அச்சொல்லில் இப்பழி கரைந்துபோகும். நூறு மைந்தர் அளிக்கும் நீரையும் அன்னத்தையும் பெற்று என் மூதாதையர் என்னை வாழ்த்துவர். அவ்வருளில் இங்குள்ள இழிசொற்கள் மறையும்.”

“ஆற்றல்மிக்க மைந்தன் ஒருவன் பிறந்தால் அவனை இந்நாட்டின்பொருட்டு களம்புக அனுப்பமாட்டேனா என்ன? அவன் களப்பலியானால் நடுகல் சாத்தி தெய்வமாக்கமாட்டேனா என்ன? நூறு வீரர் தன் குலத்தில் பிறக்கும்பொருட்டு இவன் களப்பலியானான் என்று கொள்வோம். இவன் நூறுமரங்கள் முளைக்கும் கணுக்கள் கொண்ட மரத்தடி. இவன் பிறப்பின் நோக்கமே இதுதான் போலும். அவையோரே, இவன் நோய்கொண்டு நொந்து இறந்தால் விண்புகமாட்டான். ஏனென்றால் இங்கு இவன் நற்செயல் என எதுவும் செய்யவில்லை. ஆனால் வேள்வித்தீயில் அவியானான் என்றால் தேவர்கள் இவனை கைபற்றி விண்ணிலேற்றிக் கொண்டுசெல்வர். அவியென பெய்யப்பட்ட அனைத்தும் தூய்மை அடைகின்றன. விண்வாழும் தெய்வங்களை சென்றடைகின்றன.”

“தன் குடிகாக்கும் நூற்றுவரை எழுப்பிவிட்டு இவன் விண்புகட்டும். இவ்வெளிய ஊன்தடி பிறந்து உண்டு வளர்ந்தமைக்கு இப்பெருஞ்செயலே பொருத்தமான பொருள் அளிப்பது. அறியாமலேயே குலம்காக்கும் வீரனென்றாகிறான் இவன்” என்றான் சோமகன். “இவனுக்கு நம் நகர்நடுவே நடுகல் நாட்டி வணங்குவோம். என்றென்றும் இவன் பெயர் நம் குடிநினைவுகளில் வாழட்டும்.” அரசன் சொல்லிமுடித்தபின் அமைச்சர்களுக்கு சொல் இருக்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அமைதியாக நின்றனர்.

செய்தி அறிந்து அன்னையர் நூற்றுவரும் மைந்தனை நடுவே வைத்து உடலால் அரண்கட்டிக் காத்தபடி கதறி அழுதனர். “எங்கள் உயிரை எடுங்கள். எங்களைக் கொன்று அவியிடுங்கள்… எங்கள் மைந்தனை விடப்போவதில்லை” என்று அவர்கள் கூவினர். வாளேந்தி வந்த வீரர்களுக்கு முன்னால் சென்று விழுந்து “இங்கேயே உயிர்துறப்போம். எங்கள் மைந்தனை தொடவிடமாட்டோம்” என்றனர். நெஞ்சிலறைந்து அழுதனர். உடைவாளை எடுத்து தங்கள் கழுத்தில் வைத்து “எங்கள் குருதியை மிதித்துக் கொண்டுசெல்க மைந்தனை!” என்றனர்.

அரசியரின் சினம் அறிந்து புலோமர் அங்கு வந்தார். “அரசியரே, உங்கள் ஒவ்வொருவரின் வயிற்றிலும் பிறக்கவிருக்கும் மைந்தர்களை நீங்கள் தடைசெய்கிறீர்கள். இவ்வூன்தடி உங்கள் கைகளில் தவழ்ந்தது உங்கள் மைந்தர் என மறுபடியும் பிறப்பதற்கே என்று அறிக! இவன்மேல் நீங்கள் காட்டிய பேரன்பு இவன் உங்கள் மைந்தனாகப்போகிறவன் என்பதனால்தான்” என்றார். அவர்கள் கண்ணீர் வழிய அவர் சொற்களைக் கேட்டனர். “உங்களில் எவருக்கு மைந்தன் பிறக்க விருப்பமுள்ளதோ அவர்கள் மட்டும் இப்பால் வருக! பிறர் அங்கு நின்று மைந்தனை காத்துக்கொள்க!” என்றார் புலோமர்.

நூறாவது அரசியான பத்மை கண்ணீருடன் “இவன் என் உயிருக்கு நிகர். ஆனால் பெண்ணென நான் ஒரு மைந்தனில்லாமல் இறக்க விரும்பவில்லை” என்றபடி விலகி நின்றாள். இன்னொரு அரசியும் “ஆம், நான் மைந்தனில்லாமல் இறந்தால் விண்ணுலகு செல்லமாட்டேன்” என்று விலகி வந்தாள். “நான் இக்குழவியில் கண்டது பிறக்க இயலாத என் மைந்தனைத்தான். அவன் வருக!” என இன்னொருத்தி விலகினாள். அனைத்து அரசிகளும் ஜந்துவை விட்டுவிட்டு விலகினர். அவனை வயிற்றில் சுமந்துபெற்ற முதல் அரசி மட்டும் அவனை மடியில் வைத்து அணைத்து கண்ணீர் விட்டபடி உடல்குறுக்கி அமர்ந்திருந்தாள்.

“அரசி, உங்களை அன்னையென்று அழைக்கக்கூட அறியாத இந்த மைந்தனால் என்ன பயன்? முடிசூடி அமர்ந்து கோசலத்தை ஆளும் சக்ரவர்த்தி ஒருவன் எழவேண்டிய வயிறு உங்களுடையது” என்றார் புலோமர். அவள் “விலகுக! என் செவிக்கு நஞ்சாகிய சொற்களை சொல்லாதொழிக!” என்று கூவினாள். “மைந்தன் என்பவன் மைந்தனுக்குரிய இயல்புகளின் தொகுதி அல்லவா? இவன் இயல்புகள் என்ன? உங்கள் கைகளில் வாழும் இந்த ஊன்பொதியால் உங்கள் அன்னையுள்ளம் நிறைவடைகிறதா?” என்றார் புலோமர். “பேசாதே… விலகு!” என்று அன்னை கூவினாள்.

“அரசி, உங்கள் வயிற்றில் இப்போதே கருத்துவடிவாக வந்துவிட்டான் பேராற்றல் மிக்க மைந்தன். உங்கள் கண்களும் கைகளும் அறிந்துவிட்ட இந்த ஊன்குவைக்காக உங்கள் கனவகம் மட்டுமே அறிந்த அம்மைந்தனைக் கொல்ல முடிவெடுக்கிறீர்கள் இப்போது” என்றார் புலோமர். அரசி நிமிர்ந்து தன் நெஞ்சிலும் வயிற்றிலும் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு வீரிட்டலறினாள். பின்னர் மைந்தனை அப்படியே விட்டுவிட்டு ஓடி தன் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டாள். புலோமர் தன் மாணவர்களிடம் “பலிவிலங்கை வேள்விப்பந்தலுக்கு கொண்டுசெல்லுங்கள்” என்றார்.

அவர்கள் ஜந்துவை தூக்கிக்கொண்டு சென்றபோது அவன் அஞ்சி கழுத்து இறுகிய கன்றுபோல அமறல் ஒலியெழுப்பி துடித்தான். “ஆ! ஆ!” என அவன் அழுதது அம்மா அம்மா என்றே அவர்களின் செவிகளுக்கு ஒலித்தது. அரசியரில் மூவர் உள்ளம்பொறாமல் ஓடிவந்து அவன் ஒருகையைப்பற்றி இழுத்தனர். இளவைதிகர் அவனை மறுபக்கம் இழுத்தனர். பிற அரசியர் “வந்துவிடடீ… வேண்டாம்” என்று அவர்களை அழைத்தனர். அழுதபடி கையை விட்டுவிட்டுச் சென்று முழந்தாளிட்டமர்ந்து கதறி அழுதனர் அம்மூவரும். அரசியரின் அழுகைக்குரல் சூழ ஜந்து வேள்விப்பந்தலுக்கு கொண்டுசெல்லப்பட்டான்.

அங்கே வேள்விக்காவலனாக சோமகன் அமர்ந்திருந்தான். தந்தையின் குரலைக் கேட்டதும் ஜந்து மகிழ்ந்து மூக்கை அத்திசை நோக்கி திருப்பியபடி சிரித்து “ஆ! ஆ!” என ஓசையிட்டான். அவனை அவர்கள் கொண்டுசென்று மணைப்பலகையில் அமரச்செய்தனர். அவன் அஞ்சி தலைதிருப்பியபோது சோமகன் அவன் தோளைத்தொட்டு “அசையாதே, ஜந்து” என்றான். அவன் ஒருபோதும் அப்பெயரை சொல்வதில்லை. சௌமதத்தன் என்றே சொல்வது வழக்கம். அப்போது அச்சொல் அவனை வெறுப்புக்குரியவனாக ஆக்க உதவியது. ஜந்து தந்தையின் தொடுகையை உணர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் கழுத்தில் வேள்விக்கத்தி குளிராகத் தொட்டபோதும் அவன் நகைத்தான்.

அவர்கள் அவன் கழுத்தின் குருதிநாளத்தை அறுத்து பெருகிய குருதியை வேள்விக்குளத்தில் கொட்டினர். முதல்முறையாக ஜந்துவின் கைகளும் கால்களும் துடித்து இழுபட்டு நீண்டன. அவன் இருகைகளையும் விரித்து கால்களை உந்தி சோமகனை நோக்கி தாவினான். “தந்தையே” என்று கூவினான். அதற்குள் மூச்சுக்குழாயும் அறுபட்டதனால் அடுத்த சொல் குருதித்தெறிப்புகளாக அவனை பிடித்துக்கொண்டிருந்த வைதிகர்மீதும் அப்பால் நின்றிருந்த அரசன்மீதும் தெறித்தது. அவன் கைகால்கள் அதிர்ந்துகொண்டே இருந்தன.

அவன் தலையை துண்டித்து அப்பால் எடுத்து வைத்தபின் அவன் உடலை சிறுதுண்டுகளாக வெட்டி எரிகுளத்திலிட்டனர். பாம்புச்சீறல்கள்போலவும் கூகைக்குழறல்போலவும் யானைப்பிளிறல்போலவும் எழுந்த அதர்வம் அப்பலியை ஏற்றுக்கொண்டது. நெய்விழுந்த தீ எழுந்து கூரைதொட்டு நின்று ஆடியது. ஊன் உருகும் வாடை எழுந்து அரண்மனைக்குள் சூழ்ந்தபோது அரசியர் நெஞ்சில் அறைந்தபடி கதறி அழுதனர். சிலர் உப்பரிகைகளிலிருந்து கீழே குதிக்க ஓடினர். அவர்களை பிறர் பிடித்துத் தடுத்தனர். மைந்தனின் குருதியன்னை நினைவிழந்து படுத்திருந்தாள். இறுதியாக தலையையும் அவியிலிட்டபின் நூறு அதர்வச் சொல்நிரையை ஆயிரம் முறை சொல்லி அவ்வேள்வியை புலோமர் நிறைவுசெய்தார்.

அன்னையர் பித்துப்பிடித்தவர்கள்போல பலமாதகாலம் ஆடையணியாமல் அணிபூணாமல் இன்னுணவும் ஏற்காமல் இருந்தனர். சோமகனும் இறுகிய முகமும் வற்றிக்குறுகிய சொற்களுமாக அரசச்செயல்களை மட்டும் செய்து வாழ்ந்தான். ஆறுமாதங்களுக்குப் பின் அரசியர் ஒவ்வொருவராக கருவுறத்தொடங்கினர். ஒவ்வொரு கருவுறுதல் செய்தி வந்தபோதும் பிற அனைவரும் உவகைகொண்டனர். நூறுபேரும் கருவுற்ற செய்தி நூறுமடங்கு களிப்பாகியது. நூறு மடங்கு கொண்டாடிய சோமகன் ஜந்துவை அரிதாகவே எண்ணிக்கொண்டான். நூறு கருச்சடங்குகள் ஆற்றப்பட்டபோது முழுமையாகவே மறந்தான்.

அரசியர் தாங்கள் கருக்கொள்ளும்வரைதான் ஜந்துவை நினைத்திருந்தனர். தங்கள் வயிற்றில் உயிரை உணர்ந்தபின் வேறெதையும் அவர்கள் எண்ணாதவர் ஆயினர். நூறுமைந்தரும் ஒவ்வொருவராக மண்ணுக்கு வந்தபோது அரண்மனையும் அந்நாடும் ஜந்துவை முழுமையாக மறந்தனர். அவனுக்கு நகரின் தெற்குமூலையில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு அங்கே அவன் பலியான அன்று மட்டும் நெய்விளக்கு ஏற்றப்பட்டது. முதல்நாள் விளக்கேற்று விழாவுக்கு அரசியர் சூழ அரசன் வந்திருந்தான். கண்ணீருடன் கைகூப்பி அம்முற்றத்தில் நின்றிருந்தார்கள். அடுத்த ஆண்டு மைந்தர்களை கருவுற்றிருந்தமையால் அரசியர் வரவில்லை. அதற்கடுத்த ஆண்டு அரசனும் அக்கோயிலுக்கு செல்லவில்லை. அவை வைதிகரே உரியமுறையில் பூசனைகளை செய்தார்.

ஜந்து எப்போதாவது அவன் குருதியன்னையின் கனவில் வந்தான். அவன் விழிகள் கொண்டு நோக்கி துயரத்துடன் கைநீட்டி “அன்னையே!” என்று அழைத்தான். அவள் கருநிறைந்திருந்த நாளில் இருமுறை அக்கனவுக்குப் பின் கதறி எழுந்து ஓடமுயன்று கீழே விழுந்தாள். கனவுக்குறி நோக்கும் நிமித்திகர் நோக்கி ஜந்து அவள் வயிற்றில் மீண்டும் மைந்தனாக பிறக்க விழைகிறான் என்பதே அக்கனவின் பொருள் என்று உரைத்தனர்.

அதன்வண்ணமே நீண்ட உடலும் பெரிய கைகளும் அரசனுக்குரிய இலக்கணங்களும் கொண்டு நற்பொழுதில் பிறந்த மைந்தன் ஜந்துவின் இடுப்பில் இருந்த அதே மச்சத்தை தானும் கொண்டிருந்தான். அவன் பேரரசன் ஆவான் என்றனர் நிமித்திகர். அவனுக்கு சௌமதத்தன் என்று அன்னை பெயரிட்டாள். இளமையிலேயே படைக்கலம் கையிலெடுத்த அவன் பெருந்திறல்வீரனாக வளர்ந்தான். தன் உடன்பிறந்தார் துணையுடன் ஆரியவர்த்தத்தை முழுதும் வென்று அஸ்வமேதமும் ராஜசூயமும் நிகழ்த்தி சத்ராஜித் என அறியப்பட்டான். துலா சரியாமல் நெறிகாப்பவன் என குடிக்கு புகழ்சேர்த்தான்.

தந்தையும் அன்னையரும் முற்றிலும் மறந்தாலும் அவன் மட்டும் தன் மூத்தவனை மறக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் ஜந்துவின் ஆலயத்திற்குச் சென்று வணங்கி படையலும் பூசையும் இட்டு மீள்வது அவன் வழக்கமாக இருந்தது. தன் வாழ்வு என்பது பிறிதொரு விழைவின் ஈடேற்றமே என அவன் அறிந்திருந்தான். சிலையாக நின்றிருந்த ஜந்து கூரிய விழிநோக்கு கொண்டிருந்தான். அவன் முன் நிற்கும் எவரும் அவ்விழிகளை ஏறிடமுடியாமல் விலகிச்செல்வதே வழக்கம். சௌமதத்தன் மட்டுமே அவ்விழிகளை நோக்கியபடி நெடுநேரம் நின்றிருப்பான். “என்னை நான் நோக்கிக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது” என்று அவன் சொன்னான்.

முந்தைய கட்டுரைஆல்
அடுத்த கட்டுரைகிருஷ்ண தரிசனம்