அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
மெளனியின் இலக்கிய இடம் கட்டுரையை வாசித்தேன். “ஒர் தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான்” இந்த ஒரு வரியைப் பற்றியே இக்கடிதம்.சரியாக இதைப்பற்றித்தான் உஙகளுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
இங்கு வாசகசாலை என்ற இலக்கிய அமைப்பு கவிஞர் இசையின் படைப்புலகம் குறித்து கூட்டம் நடத்தினார்கள். அதில் நான் அவரின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து ஒரு வாசகனாய் பேசினேன். பேசப்போவதை முன்கூட்டியே எழுதி வைத்துக்கொண்டேன். எழுதியதைப் படிக்கும்பொழுது நான் கவனித்தது நான் மிகவும் ரசித்தவிசயங்களை ஏன் அவை எனக்குப் பிடித்தமானவைகளாக இருக்கின்றன என்பதை சொல்ல முயன்றிருக்கிறேன்.முடிந்தவரை கூட்டத்தில் பேசுவதால் இயல்பாக இருக்கும் மிகைப்படுத்துதலை தவிக்க வேண்டுமென்பதில்கவனமாய் இருந்தேன்.
எதையும் கூட்டியோ குறைத்தோ சொல்லவில்லை. எனக்குத் தோன்றியைதை எழுதியிருக்கிறேன். மேலும்பரந்துபட்ட வாசிப்பனுபவமில்லையாதலால் ஒரு தேர்ந்த விமர்சனமாக அமையவேண்டுமென்றெல்லாம்கவலைப்படவில்லை. எனக்கு முக்கியமாகப் பட்டது நான் உணர்ந்ததைச் சொல்லவேண்டும். இருந்தும் ஏனோ மனம்திருப்தி அடையவில்லை. அது ஒரு வகையில் பள்ளியில் தலைப்புக் கொடுத்து கட்டுரை எழுதச் சொன்னால் எப்படிஎழுதுவேனோ அப்படி இருப்பதாகத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இத்துடன் நான் எழுதியதை உங்களுக்குஅனுப்புகிறேன் ( மணல் வீடு இதழின் ஆசிரியர் பேஸ்புக்கில் எழுதியதைப் பார்த்துவிட்டு இசையின் கவிதைகளைப்பற்றிய உங்கள் பார்வையை தொகுத்து அனுப்புங்கள் என்று கேட்டார். அவருக்கும் அனுப்பியுள்ளேன்) மேலும்இன்று வண்ணதாசன் அவர்களின் கிருஷ்ணன் வைத்த வீடு சிறுகதைத் தொகுப்பைப் பற்றி சில பத்திகள் பேஸ்புக்கில்எழுதினேன். அதையும் இணைப்பில் சேர்த்துள்ளேன். உங்களிடம் நான் என்ன கேட்க வேண்டுமென்பதை ஆரம்பத்தில் மேற்கோள் காட்டியுள்ள வரி எனக்கு தெளிவாக்கியது.
நான் வாசிக்கும்பொழுது பரபரப்புக்கு உள்ளாவதில்லை. பரவசமடைவதாகவும் உறுதியாகத் தெரியவில்லை.அதே சமயம் எனக்குப் பிடித்த விசயத்தில் அதிகமாக கரைந்து போகிறேனோ என்று தோன்றுகிறது. இதுவாசிப்பின் ஆரம்ப நிலையினால் ஏற்படுகிறதா?வாசிக்கும்பொழுது படைப்பின் மீது ஒரு சிறு விலக்கை ஏற்படுத்திக்கொண்டால் (அது சாத்தியமென்றால்) இன்னும் ஆழமான பார்வையை முன் வைக்க இயலுமா? மேலும்நான் இவ்வாறு பழகினால் எனக்கு ஒரு பெரிய நாவலை தொகுத்துக்கொள்வதற்கு உதவுமா? உதராணமாக நான்விஷ்ணுபுரம் நாவலின் தத்துவமாக காண்பது :
சித்தர் யாருமே ஏறாத வான்முட்டும் சிகரத்தில் ஏறுவார். அங்கு உச்சியில் என்ன இருந்தது என்று கேட்ப்பார்கள்.ஒன்றுமே இல்லை என்று சொல்வார். ஒரு பிட்சு வடக்கிலிருந்து தெற்கிற்கு ஒரு புனித இடம் தேடி வருவார்.அவ்விடத்தைப் பார்க்கும்பொழுது இவ்வளவுதான இவ்விடம் என்று அவருக்குத் தோன்றும். தத்துவமோதல் முடிந்துவெற்றிப் பெற்றபின் அத்துறவியைப் பார்த்து சித்தர் கூறுவார் இனிதான் இவன் வெறுமையை உணர்வானென்று (நினைவிலிருந்து எழுதுகிறேன்). நான் இந்த மூன்று இடங்களின் வாயிலாக விஷ்ணுபுரத்தைப் புரிந்துகொள்கிறேன்.
கேட்க வந்ததை சரியாக கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்பொழுது பதில் அளிக்கவும்.
நன்றி.
சங்கர்
***
அன்புள்ள சங்கர்
திலீப்குமாரின் சொந்தக்கருத்து, இலக்கியவாச்கான் இலக்கியப்படைப்பால் புல்லரிப்போ உணர்வெழுச்சியோ கொள்ளமாட்டான் என்பது. அது உண்மை என்றால் உலகின் தேர்ந்த இலக்கியவிமர்சகர்களில் பலரை இலக்கியவாசகர் அல்ல என்று சொல்லவேண்டியிருக்கும். வ.உ.சி அய்யரில் தொடங்கி தமிழ் இலக்கியவிமர்சகர் பலரை நிராகரிக்கவேண்டியிருக்கும்.
திலீப்குமாரின் அந்த நிலைபாடு நவீனத்துவ காலகட்டத்திற்குரியது. நவீனத்துவம் தர்க்கபூர்வமான நிலைபாட்டுக்கு மைய இடம் கொடுப்பது. இலக்கியத்தை வடிவ ஒழுங்காக மட்டும் அணுகுவது. சமநிலையே இலக்கியத்தின் இயல்பென நினைப்பது. நுண்மையை மட்டுமே ரசிக்கப்பழகியது.
நவீனத்துவத்தின் கட்டமைப்பை உடைத்துக் கடந்து பலவகையான எழுதுமுறைகள் உருவாகிவந்த காலம் இது. தர்க்கத்தை மீறிச்செல்லலும் பித்தும் உணர்வுக்கொந்தளிப்புகளும் , ஆழ்நிலை அறிதல்களுமெல்லாம் கலந்த இலக்கியவடிவுகள் உருவாகி வந்துள்ளன. இன்று திலீப்குமாரின் நிலைபாடு கொண்ட விமர்சகன் புனைகதைகளுக்குள் நுழையவே முடியாது. அனைத்திலும் எளிமையான தர்க்கபுத்தியை மட்டும் போட்டு அதில் சிக்குவதை மட்டுமே அடையவேண்டியிருக்கும்.
இலக்கியவாசகன் கருத்துக்களைப் பதிவுசெய்யத் தொடங்கும்போது விமர்சகன் ஆகிறான். அக்கருத்துக்களுக்கு ஓர் ஒத்திசைவு இருந்தாகவேண்டும் அதற்கு கருத்துக்களுக்கிடையே மையச்சரடெனச் செல்லும் ஒரு மதிப்பீடு தேவை. அது அழகியல் சார்ந்ததோ அறவியல் சார்ந்ததோ அரசியல் சார்ந்ததோ ஆக இருக்கலாம். அவ்வளவுதான் இலக்கியவிமர்சகனுக்குரிய தேவைகள். தன் தரப்பை அவன் தெளிவுறச்சொல்லிவிட்டான் என்றால் விமர்சகன் ஆகிவிடுகிறான்
விஷ்ணுபுரம் என்றல்ல எந்த நாவலையும் சுருக்க ஆரம்பித்தால் அதன் மிகச்சிறிய ஒரு வடிவமே கையில் சிக்கும். அதிலிருந்து பண்பாடு, அரசியல், தனிமனித உளவியல் என விரிந்துசெல்லும் பார்வையே சரியான வாசிப்பு. அதற்காகவே படைப்புகள் எழுதப்படுகின்றன.
ஜெ
***
வண்ணதாசன் அவர்களின் கிருஷ்ணன் வைத்த வீடு சிறுகதைத் தொகுப்பைப் பற்றி:
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முறை கவிதை வாசிப்பு பற்றி சொல்கையில் தான் கவிதைகளை கொத்து கொத்தாக வாசிக்க மாட்டேன்.. ஒவ்வொறு கவிதைக்கும் போதிய காலம் தந்து இடைவெளி விட்டு அடுத்த கவிதைக்குள் செல்வேனென்றும் சொன்னார். நான் அவ்வாறுதான் இச்சிறுகதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இரண்டு மாதத்திற்கும் மேல் ஆகிறது. இன்னும் மூன்று கதைகள் மீதமிருக்கின்றன. அவ்வாறுதான் இக்கதைகளைப் படிக்க முடியும் அல்லது படிக்க வேண்டும்.
எங்கோ படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு இளைஞன் ஞானம் வேண்டி குருவிடம் செல்கிறான். அவர் ஒரு இடத்தைச் சொல்லி அங்கு ஒருவர் இருக்கிறார், அவரைப் போய்ப் பார் என்று அனுப்புகிறார். அந்த நபரைப் போய்ப் பார்த்த இளைஞனுக்கு ஒரே அதிர்ச்சி. குரு சொன்ன நபர் ஒரு இறைச்சி வெட்டுபவராக இருக்கிறார். இவரிடம் எப்படி தான் ஞானம் பெறுவேன் என்று குழம்புகிறான். அவனின் அதிர்ச்சிக்கு காரணம் ஞானம் தருபவர் இவ்வாறுதான் இருப்பார் என்ற முன்முடிவு . மேலும் சராசரி வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவர் எவ்வாறு ஞானியாக இருக்க முடியும் என்ற கேள்வி. வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு பிறர் சொல்லியிருக்கும் பதிலை எடுத்துக்கொண்டு குருவிடம் சென்று விளக்கம் கேட்பது இது. ஜெ.மோ அவர்கள் ஊட்டி குருகுலத்தில் இருக்கும் ஒருவரைப் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது. அந்த நபர் அங்கு நடக்கும் கூட்டங்களில் பெரும்பாலும் கலந்துகொள்ளாதவராய் இருக்கிறார். வருபவர்களுக்கு உணவு சமைப்பது, தோட்ட வேலைகள் செய்வது, சிகிரெட் குடிப்பது என்று இருப்பவர் ஒரு நாள் பேசுகையில் அவரின் ஞானம் வெளிப்படுகிறது. வாழ்க்கையைப் பற்றின சுயமான பார்வையுள்ளவர்கள் நமக்கு ஆச்சிரியமூட்டுபவர்களாகவே இருப்பர்.
நான் பெரிய விசயங்களின் ரசிகனல்ல. எனக்கு அவற்றை உள்வாங்கிக்கொள்ளுதலில்லுள்ள சிரமம் ஒருபுறம் இருந்தாலும் என் இயல்பிலேயே இருக்கும் சின்ன சின்ன விசயங்களில் அதிகம் சந்தோஷப்படும் குணம். என்னிடம் ஆகச்சிறந்த தத்துவம் எது என்று கேட்டால் சிரிப்பும், அழுகையும் என்பேன். சிரிப்பிற்கும் அழுகைக்கும் நடுவில் உள்ளதுதான் வாழ்க்கை. நாம் எப்பொழுது தலை சாய்ந்தாலும் இந்த இரண்டில் ஏதோ ஒன்றின் மீதுதான் சாய்கிறோம். ஆயிரம் பக்கங்களில் வாழ்க்கையின் ஆகச் சிறந்த தத்துவங்களை போதிக்கும் நாவல் எனக்கு இமையமலையேற்றம்போல். வண்ணதாசன் அவர்கள் நான்கைந்து பக்கங்களில் அதற்கு ஒப்பான மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறார். ஒரு பெரியவருக்கும், படிக்கும் பையனுக்கும் நடக்கும் உரையாடல்கள் ஒரு கதையாய் வருகிறது. பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் அக்கதையைப் பற்றிச் சொல்லி வருகிறேன்.
எனக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகள் மிகப் பிடித்தமானவையாக இருப்பதற்கு காரணங்கள்:
1.சிறுகதை என்றால் எப்படி இருக்க வேண்டும் (வடிவ ரீதியாக) என்ற என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்பவையாக இக்கதைகள் இருப்பது.
2.மிகச் சிறிய லென்ஸில் வாழ்க்கையின் நுட்பமான விசயங்களைப் படம்பிடித்துக்காட்டுவது.
*
இது விமர்சனம் இல்லை. படிக்க படிக்க என்னுள் எழுந்த எண்ணங்கள். கதைகளைப் பற்றி நான்கு வரிகள் எழுதிவிட்டு வேறேதேதோ எழுதியிருக்கிறேன். ஆனால் நீங்கள் படிக்கும் பட்சத்தில் உங்களுக்கும் புரியக்கூடும்.
ஒரு வாசகனாய் கவிஞர் இசையின் கவிதைகள் பற்றி…
இவ்வுலகில் யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி அல்லது எல்லோரிடமும் ஒரே பதிலைப் பெற முடியாத கேள்வி ஒன்று உண்டு என்றால் அது வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்வியாய் இருக்கும். ஒரு சிறுவனாய் இந்த கேள்வியை நீங்கள் யாரிடமும் கேட்க முடியாது. கேட்டால் அதற்குள் என்ன அவசரம் என்பார்கள். இளமைப் பருவத்தில் கேட்டால் காலமிருக்கிறது அவசரப்படாதே என்பார்கள். நாற்பதைத் தாண்டிய பின் அநேகமாக உங்களுக்கு இந்தக் கேள்வி நினைவிருக்காது. மறந்துபோயிருப்பீர்கள். முதுமையில் நீங்கள் கேட்க்கும்பொழுது அது யார் காதிலும் விழுவதில்லை. வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு தோராயமான பதிலை நீங்களேதான் கண்டடைந்துகொள்ளவேண்டும். இதை ஒத்ததுதான் இன்று கவிதை வாசித்தலும். கவிஞர் இசை கவிதைகள் பற்றி நான் கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு நான் அடைந்த பதில்கள்தான் இனி வருவன….
நான் இசையின் கவிதைக்குள், கவியுலகிற்குள் அவர் ஜானக்கூத்தனின் கவிதைகள் பற்றி பேசும்பொழுது சொன்ன வரிகளின் வாயிலாக உள் நுழைகிறேன்.
“நாம் மாசற்றதற்கு ஏங்குகிறோம். மாசற்றதையும் மகத்தானதையும் ரொம்பவும்ஆராதிக்கிறோம். மாசற்ற அழகு.. மகத்தான அன்பு… மாசற்ற கவிதை.. மகத்தானசித்தாந்தம்.. மாசற்ற மொழி.. மகத்தான தலைவர் ..என. இப்படியாக நாம் பளிங்கில்கீறல்களைப் பொறுப்பதில்லை. லட்சியத்தின் உடலில் ஒரு சின்னஅழுக்குத்திட்டைக் காட்டினால் ” பார்க்கமாட்டேன் “ என்று நாம் தலையைத் திருப்பிக்கொள்கிறோம்.”
இசை தலையை திருப்பிக்கொள்ளவதில்லை. அவர் பார்க்கிறார். ஏழைகளும்,நடுத்தர வர்க்கத்தினரும் ஒவ்வொரு நாளும் கடந்து போகும் ஒவ்வொருவரையும்அவர் பார்க்கிறார். அவர் சோ கால்ட் புனிதங்களை, அப்புனிதங்கள் உருவாக்கும்புனிதர்களைப் பார்த்து சிரிக்கிறார். வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ள சிரைக்காதயோகிகளை அல்ல ரிமோட் கடைக்காரர்களிடம் போங்கள் என்கிறார். உன்அப்பனுக்கு சிரட்டையில் தண்ணி ஊற்றிய பாவந்தான் நான் இப்படி ஒற்றைசொல்லிற்கு நாயாய் சாகிறேன் என்று வருந்துகிறார்.
கவிஞர்கள் அனைவருக்கும் மிக புகழ்பெற்ற கவிதைகள் என்று ஒன்று இருக்கும்.தமிழ்தான் என் மூச்சு ஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன் என்றால் கவிஞர்யாரென்று தெரிந்துவிடும். காற்றின் தீராத பக்கங்களில் வாழ்க்கையை எழுதிப்போனசிறகு யாருடையது என்று நாம் சொல்லத்தேவையில்ல. இருப்பதற்குதான்வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்று சொன்னவர் சுசிலாவிற்கு வேண்டியவர்என்பது ஊரறிந்த ரகசியம். இசையின் நைஸ் கவிதை அப்படி ஒரு முத்தாய்ப்பானகவிதை. எனக்கு நைஸை விட பிடித்தது அவரின் கழிவிரக்க கவிதைதான்.
ஒரு கழிவிரக்க கவிதை
கண்ணைக் கசக்கிக் கொண்டு
என் முன்னே வந்து நிற்கிறது
அதன் மேனியெங்கும் கந்தலின் துர் நாற்றம்
ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதை
கண்டாலே எரிச்சலெனக்கு
“போய்த்தொலை சனியனே….
கண்ணெதிரே இருக்காதே…”
கடுஞ்சொல்லால் விரட்டினேன்.
காலைத் தூக்கிக் கொண்டு
உதைக்கப் போனேன்
அது தெருமுக்கில் நின்றுகொண்டு
ஒருமுறை திரும்பிப் பார்த்தது
நான் ஓட்டோடிப் போய்க் கட்டிக்கொண்டேன்.
ஒரு வகையில் இக்கவிதை வெளிப்படுத்தும் கவிமனம் மேலும் பல கவிதைளில்வெளிப்படுகிறது. அல்லது அக்கவிதைகள் மூலம் இசையின் கவி மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது இல்லை நம்மையும் நம் மனம் பல நேரங்களில் செயல்படும்விதத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நைஸ்தான் வேண்டுமோ என்றுநிதனாமாக கேட்கும் இசை லூஸ் ஹேருக்கு மயங்குகிறார். பின் அவரே அதிகாலை5 மணிக்கு எல்லாக் கண்ணும் பீளையுண்ணும் கண் என்கிறார் ( இவ்விடத்தைபெண்ணியவாதிகள் நோட் பண்னிக்கவும்) இந்த வீக்கெண்ட் ஜாலியா மகாபலிபுரம்போலாமா என்று காதலை கழட்டிவிடும் அவர் ஏனோ உன் நினைவாக இருக்கிறதுஎன்று கவிதை எழுதுகிறார்.
இசையின் கவிதைகளின் சிறப்பம்சாகமாக நான் நினைப்பது அவரது கவிதைமாந்தர்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. ஏன் ஓர் கவிதையில்கடவுளும் கிடவுளாகிப் போகிறார். இசையின் கவிதை மாந்தர்கள் நாம்அன்றாடம்சந்திப்பவர்கள். உடற் திறன் குறையுள்ள குழந்தை, மன நலம் குறைந்தவர்கள்,பரோட்டா மாஸ்டர், மேலும் முத்துவேல், ஞானவேல், தங்கவேல்போன்றவர்கள்தான். பரோட்டா மாஸ்டர் என்றவுடன் நினைவுக்கு வருகிறது-ஒருகவிதையில் உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்.பி.பி என்று கேட்பது அழகு.
போலித்தனைங்களை, அல்லது போலியான நம்பிக்கைகளுக்குள் அல்லது பிறர்தரும் சட்டைக்குள் நம்மை அடைத்துக்கொள்ளுவதைப் பற்றி கேலி செய்யும்அவர்தான் போங்கடா நீங்களும் உங்க இதுகளும் எனக்கு என் ப்ரவுன் கலர் ஜட்டிதான்முக்கியம் என்கிறார். நாம் சில நேரங்களில் நம்மை மட்டுமல்லாது பிறரையும்எவ்வாறு புனித வார்த்தைகளால் வஞ்சிக்கிறோம் என்பதற்கு இடமுலை வடிவக்கல்என்கிற கவைதையை வாசிக்கிறேன்
ஒரு வழியாக
கவர்மெண்ட் கக்கூஸிலிருந்து
வெளியே வந்துவிட்டான்
துரத்தியடித்த நாய்களில் ஒன்று
திரும்ப வந்து உறுமி நிற்கிறது
நடப்பதும் ஊர்வதும் கண்ட அதற்கு
தவழ்வது பிடிக்கவில்லை
இவன் பாக்கெட்டில் கைவிட்டுத் தேடினான்
இன்னுமொரு கல் மிச்சமிருந்தது
அதை எடுத்து ஓங்கி எறிந்தான்
மொழியியல் வல்லுனனும்
தன்னம்பிக்கைப் புழுத்தியும்
திடுக்கிட்டு எழுந்திருக்க
உடைந்து சிதறியது
“மாற்றுத்திறனாளி” எனும் சொற்கட்டு.
மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில் எழுந்து போகும் வாய்ப்பு உனக்கும் எனக்கும்சரி சமமாக வழங்கப்படவில்லை என்ற வரி ஒன்று வரும். நெஞ்சின் ஆழத்தைதைத்த வரி. அன்றிலிருந்து யாரிடமோ நான் பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டேன்.கண்களை திடீர் திடீரென்று குளமாக்கும் வரி அது. இரண்டு கவிதைத் தொகுப்புகளில்இரண்டு மூன்று இடங்களில் இசை அவ்வரியை நினைவுபடுத்தினார். தன்னிம்பிக்கை புழுத்தி போடா என்று திட்டுவது மனுஷ் அவர்களின் வரியின்இன்னொரு பக்கம்.
என் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், ஒவ்வொரு காதலர் தினத்தின் போதும் நாம்இன்றைக்கு யாருக்கேனும் நம் காதலைச் சொல்லுவோம் அல்லது நம்மிடம்யாரேனும் ஒருவர் வந்து தன் காதலைச் சொல்லுவார் என்று நினைப்பதுண்டு. இந்தவருடம் கூட அப்படித்தான் போனது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட கவிஞர்எழுதுகிறார்.
ஒவ்வொரு அதிகாலையிலும்
அவசர அவசரமாகப் பல்துலக்கி முடிக்கையில்
ஒரு நினைப்பு
இன்று எவளோ ஒருத்தியின் இதழ்கடித்துத் தின்போமென
தம்பி
இன்னும் கொஞ்சம் பேஸ்டை பிதுக்கி
இன்னும் கொஞ்சம் துலக்குகிறான்
எனக்கு கவிஞர் என் தோள் மேல் கை போட்டு கவிதை பாடுவது பிடித்திருக்கிறது.எனது குறைந்த வாசிப்பனுபவத்தில், குறைந்த பட்ச புரிந்துணர்வில் எனக்குத்தோன்றுவது. பெரும்பாலான கவிஞர்கள் அகத்தைப் பேசினாலும், புறத்தைப்பேசினாலும், ஒரு மேடையின் மீது ஏறி நின்று கொண்டு பேசுகிறார்கள். வாசகன்எதிரே நின்று கொண்டு கேட்கிறான். இசை வாசகனோடு நின்று கொண்டுபேசுகிறார்.இதற்கு வாசகன் மீது நம்பிக்கை கொண்ட மனம் தேவை. அதனினும்,மேலாக தன் மீது அசாத்திய நம்பிக்கையுள்ள மனம் தேவை. படைப்பதனாலே என்பேர் இறைவன் என்று பாடும் மனதிற்கு ஒப்பான நம்பிக்கை. கவிதைகள் என்பது ஒருரகசிய உலகம் அல்லது கவிதைக்குள் நுழைவது என்பது பல ரகசியங்கள் நிறைந்தகுகைக்குள் நுழைவது போன்றது என்ற சராசரிப் பொதுப் புரிவுகள் உள்ள வாசகனைஇசை அவன் வாழும் உலகிற்கு கூட்டிச் செல்கிறார். அவன் வாழ் நாளின் ஒரு நாளைஅவனுக்குப் போட்டு காட்டுகிறார். பைத்தியத்தின் டீயை அவனை சுவைக்கவைக்கிறார். கிரிக்கெட் பார்க்க அழைத்துச் செல்கிறார். பரோட்டா மாஸ்டரின்கானத்தை கேட்க வைக்கிறார். ஸ்கூட்டிகளுக்குப் பின்னால் போலாம் என்கிறார்.நாம் பார்த்திராத மகிழ்ச்சி ததும்பும் சுந்தர மூர்த்திகளின் முகங்களை நமக்குகாட்டுகிறார். நாம் மனம் தளரும்போது தம்பி கோட்டைக் கழட்டு ஒரு வேம்பின் கீழேகுறையுடையில் கிடப்போம் வா என அழைக்கிறார். அப்பொழுதும் மனம் ஆறுதல்அடையாத பொழுது ஆம் தற்கொலைக் கவிதைகள் க்ளீஷே ஆகியிருக்கலாம்,தற்கொலையைப் பார் எவ்வளவு புத்தம் புதிதாய் ஜொலிக்கிறது என்று நம் தோள் மீதுகை போடுகிறார். சற்று மனம் தேறும் வேளையில் நம் அறவுணர்வைச் சீண்டுகிறார்.சரி சரி வா மூக்கைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு போவோம் என்று அழைத்துச்செல்கிறார்.
இசை சமகாலத்தின் கவிஞர் என்பதை பலர் முன் வைக்கின்றனர். சமகாலத்தைத் துல்லியமாக ப்ரதிபலிக்கிறார் என்கின்றனர்.சமகாலம் என்பது லட்சியவாதக் காலம் முடிவடைந்து அதன் மீது அவ நம்பிக்கையை ஏன் எல்லாவற்றின்மீதும் கேலி, கிண்டல், பகடி, நம்பிக்கையின்மை கொண்ட மனங்கள் நிறைந்த காலமாக நான் புரிந்துகொள்கிறேன். சரி. ஒரு குறிப்பிட்ட காலத்தை முன்வைப்பதனாலேயோ அல்லது அவற்றை அதிகம் அடையாளம் காட்டுவதனாலேயோ ஒருவர் எத்தனைக்காலம் ஒரு மொழியில் முக்கியமானவராக இருக்க முடியும் என்று நான் என்னைக் கேட்டுக்கொள்கிறேன். (ஜெ.மோ வாசகன் நான் :) ) எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றுகின்றன.
- எனது பள்ளிகாலத்தில் எனக்கு வரலாறு பாடம் எடுத்த ஆசிரியர் சொன்ன ஒரு விசயம் ஸ்மைலி பாலில் முள் தைத்தது போல் என் மனதில் பதிந்த்துவிட்டது. அவர் சொன்னது:- இந்தியா நான் படிக்கும்பொழுதும் வளரும் நாடுதான். இன்று நான் உங்களுக்கு பாடம் நடத்துகிறேன். இன்றும் வளரும் நாடுதான். உங்களுக்கு அடுத்த தலைமுறையிலும் அது வளரும் நாடாகாத்தான் இருக்கும் என்றார். எங்கோ படித்தேன், நாம் வளரும் நாடுகளின் பட்டியலிலிருந்தும் கீழிறங்கிவிட்டோமாம். (என் அசிரியர் தீர்க்கதரிசி. எனக்கு அவரைப் பிடிக்காது எனபதால் அவரின் பெயரைச் சொல்லப்போவதில்லை). ஆக இந்தச் சமகாலம் என்பது நீண்டுகொண்டேதான் போகப் போகிறது. நாம் மீண்டும் லட்சியவாதத்தை நோக்கி திரும்புவோம் என்று தோன்றவில்லை. அதற்கான புறகாரணங்கள் (பெரும்பாலும் அரசியல் காரணங்கள்) அதிகம் இருந்தாலும் அறிவியல் வளர்ச்சி ஏற்படுத்திய சோம்பேறித்தனம் மற்றும் நமக்குள் இருக்கும் கூட்டு ஒழுங்கின்மை ஆகியவை நம்மை லட்சியவாத்தை நோக்கித் திருப்பாது. அவ நம்பிக்கை என்பது நம்பிக்கையில் இருந்து தோன்றுவது. இவை இரண்டுமே இல்லாத ஒரு காலக்கட்டம் வரும் வரை இசை முக்கியக் கவிஞராக இருப்பார் என்று நினைக்கிறேன். ( இசைக்கு முன்னோடிகள் இருப்பர். இதை எழுதும்பொழுது அவர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் அவர்களின், ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு..” என்ற கவிதை இன்றளவும் பொருளுள்ளதாய் இருப்பது அந்த அரசியல்தான் இன்றும் நிகழ்கிறது என்பதனால்)
- இசைக்குள் இருக்கும் நம் மரபார்ந்த மனம். புனிதங்கள் என்று ஏதுமில்லை வாழ்க்கையின் கடைசி கணங்களில் நமக்கு எல்லாமே அற்பமாகத் தோன்றுமில்லையா அதைப் படம்பிடித்துக்காட்டிக்கொண்டே இருக்கும் மனம்.
இவ்விரண்டும் எனக்குப் பிடித்த கவிஞர்களுக்குள் ஒருவராக இசையை வைக்கிறது.
இவையெல்லாம் பேசவேண்டுமே என்பதற்காகவோ அல்லது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒருவரை நாமும் புகழ்ந்து தள்ளுவோம் என்பதற்காகவோ எழுதியவை அல்ல. ஆரம்பத்திலேயே சொன்னதுபோல் ஏன் என்று நான் எழுப்பிக்கொண்ட கேள்விகளுக்கு கண்டடைந்த பதில்கள். தொடர் வாசிப்பின் மூலமும், வாழ்க்கைத் தரப்போகும் பாடங்களின் மூலமும் நாளை ஓர் நாள் என் கருத்துக்கள் மாறலாம். (அப்பொழுது கூட நான் லட்சியவாதியெல்லாம் ஆகிவிடமாட்டேன்) அதுவரை அனைவருக்கும் அன்பு.