[ 6 ]
அடுமனை வாழ்க்கை சொல்லற்றதாக இருந்தது. அங்கே ஒற்றைச்சொல் ஆணைகள் இருந்தன. பின்னர் அவையும் மறைந்தன. நாள்முழுக்க சொற்களில்லாமலேயே சென்றது. கைகளும் கால்களும் விரைந்துகொண்டிருந்தபோது உள்ளம் சொற்களை கொப்பளித்துக்கொண்டிருந்தது. செயலும் சொல்லும் இரு தனி ஓட்டங்களாக சென்றன. எப்போதாவது சொற்பெருக்கு செயலை நிறுத்தச்செய்தது. மெல்ல சொற்கள் தயங்கலாயின. ஒரு சொல்லில் சித்தம் நின்று அதுவே குயிலோசை என மாறாது நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருப்பதை செயலின் நடுவே உணர்ந்து மீளமுடிந்தது. பின்னர் அதுவும் நின்றது. செயல் ஓய்ந்து அமர்கையில் நீராழத்திலிருந்து மீன்கணம் எழுந்து வருவதுபோல சொற்கள் தோன்றின.
ஆனால் அப்போது அவை பெருக்கெடுக்கவில்லை. தயங்கியவையாக எழுந்து தனித்தே மிதந்தன. சொற்கள் கனவிலென ஒலிப்பதுபோல சில தருணங்களில் தோன்றும். சொல்லடங்கிய உள்ளத்தின் பெரும்பகுதி ஒழிந்துகிடப்பதை கண்டார். காட்சிப்பெருக்காக உணர்வுப்பெருக்காக எண்ணப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தவை வெறும் சொற்களே என்றுணர்ந்தது அவரை மீண்டும் மீண்டும் வியப்பிலாழ்த்தியது. அடுமனைப் பணி ஓய்ந்து காட்டில் ஓடைக்கரையிலோ மரத்தடியிலோ அமர்ந்திருக்கையில் தாடியை நீவியபடி வெறுமனே நோக்கியிருப்பது அவர் இயல்பென்றாயிற்று. ஓயாது சொல்முழங்கும் கொட்டகைகளில் அமர்ந்திருக்கையில் அங்கு ஒலிக்கும் சொற்களை தொடாமல் விலகியிருந்தன அவர் செவிகளும் விழிகளும்.
சொல்லில் இருந்து விடுதலை என எப்போதோ ஒருமுறை அவர் எண்ணிக்கொண்டார். நகுலனும் சகதேவனும் வழக்கம்போல தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். நகுலன் அவரிடம் “உங்கள் குரல் எழுந்தே நெடுநாளாயிற்று, மூத்தவரே” என்றான். அப்போதுதான் அவரே அதை உணர்ந்தார். “சொல்லற அமர்தல் என்கிறார்கள். அமர்ந்தபின் சொல்லை அறுப்பது இயலாது. அறுத்தபின்னரே அமரவேண்டும்” என்றான் நகுலன். அவர் தாடியை நீவியபடி புன்னகை செய்தார். “நீங்கள் சொல்லும் முறை இவனுக்கும் கைவந்திருக்கிறது, மூத்தவரே” என்றான் சகதேவன்.
அப்போதுதான் தருமன் அது தன்மொழி என நினைவுகூர்ந்தார். எத்தனை சொற்களால் நிறைந்திருந்தது தன் உள்ளம். கற்ற ஒவ்வொன்றுக்கும் நிகரிவடிவை உருவாக்குவதை ஒயாது செய்துகொண்டிருந்தது. அதையே எண்ணத்திறன் என்றும் மெய்மையறிதல் என்றும் மயங்கியது. அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் பிறிதொருவரின் மெய்யறிவு. மொழியென்றானது அதன் தொலைநிழல். அந்நிழலின் நிழலுடன் ஆடி அவர் அமர்ந்திருக்கிறார். அவர் புன்னகைப்பதைக் கண்டு நகுலன் “நீங்கள் சுவடிகளையும் நாடுவதில்லை இப்போது” என்றான். அவர் ஆம் என்பதுபோல தலையசைத்தார்.
ஆனால் சொல்லற்ற வெற்றுப்பரப்பில் ஆழப்பதிந்த சொற்கள் உடல் துடிக்கச்செய்யும் ஆற்றல்கொண்டிருந்தன. சொல் கொதிக்கும் பொருளென தொடமுடியும் என்றும் விடாத பேயெனத் தொடரமுடியும் என்றும் கொடுநோயென கணம்தோறும் பெருகமுடியும் என்றும் அவர் உணர்ந்தார். எரிவைத்து விளையாடும் குழந்தையைப்போல அத்தனைநாட்களும் சொல்லாடிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. கூட்டமில்லாத பிற்பகலில் தட்டுகளை கழுவிக்கொண்டிருந்தபோது மூத்த மாணவரான சலபர் உள்ளே அவர் பேசிக்கொண்டிருந்த கதையொன்றின் தொடர்ச்சியுடன் வெளியே வந்தார். முண்டகர் என்னும் முனிவர் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது யானை ஒன்றால் துரத்தப்பட்டு கால் உடைந்து கடும் மழையில் நொண்டிக்கொண்டே ஓடி ஒரு குகைக்குள் ஒடுங்கிக்கொண்டார்.
“குகைக்குள் இருந்து அவரால் வெளிவர முடியவில்லை. அவர் கையில் அவர் அகழ்ந்து வைத்திருந்த கிழங்குகள் இருந்தன. அவர் எரிவளர்த்து வேள்விசெய்து அவிமிச்சத்தை மட்டுமே உண்ணும் இயல்புகொண்டவர். அக்குகைக்குள் எரிவதென மரமோ சருகோ ஏதுமில்லை. அங்கு முன்பு தங்கியிருந்த நரிகளின் மலம் புழுதியில் உலர்ந்து சிதறிக்கிடந்தது. முண்டகர் அவற்றை பொறுக்கிச் சேர்த்தார். இரு கற்களை உரசி அனலெழுப்பி அவற்றைப் பற்றவைத்து எரியெழுப்பி வேதம் ஓதி ஆகுதிசெய்தார். அந்த அனலில் சுட்ட கிழங்குகளை அவிமிச்சமென உண்டார். அந்த தூயவேள்விக்கு திசைகாக்கும் தேவர்கள் எண்மரும் வந்திருந்தனர். அவிமிச்சத்தை அவருடன் ஏழு வான்திகழ் முனிவரும் உண்டனர்.”
அவர் அச்சொற்களை செவிமடுக்காமல் வெண்கலத்தட்டுக்களை கழுவி வைத்துக்கொண்டிருந்தார். பதினெட்டுபேர் தட்டுகளை கழுவிக்கொண்டிருந்தமையால் அந்த ஓசையே சூழ்ந்திருந்தது. சலபர் “அடிக்கடி ஆசிரியர் அந்தக் கதையை சொல்வதுண்டு. தூய மங்கலப்பொருட்களால் மட்டுமே வேள்வி செய்யப்படவேண்டும். ஆனால் நெருப்புக்கு இனிய அன்னமும் மலமும் ஒன்றே. இங்குள அனைத்தையும் ஒன்றெனவே தீ கருதுகிறது. ஆவலுடன் நா நீட்டி அணுகுகிறது. ஆறாப்பசியுடன் கவ்வி உண்கிறது. பிற பருப்பொருட்கள் நான்கும் அதன் ஆடல் தோழர்கள். அது மண்ணுள் இருந்து எழுகிறது. உயிர்கொண்ட மண்ணை அன்னமென உண்கிறது. நீரில் ஒளிந்துகொள்கிறது. ஐந்து காற்றுகளையும் தோழிகளாகக் கொள்கிறது. விண்ணில் கொடிவிட்டுப் படர்கிறது. அனைத்தையும் இணைப்பது அதுவே. எந்நிலையிலும் தூயது. ஒளியே உடலானது. ஒருகணமும் நில்லாதது. விண்நோக்கிச் செல்வது. அதுவே நம் தெய்வமென்றாகவேண்டும்” என்றார்.
“அகல்சுடர் எரிகிறது. மண்ணால் ஆனது அகல். நெய் அதன் ரசம். எரியே அதன் ஆத்மா. ஒளி அதன் அறம்” என்றார் வணிகர்களுடன் வந்த முதியவர். சலபரின் சொற்களிலிருந்து அச்சொல்லுக்கு பலநாட்கள் கடந்து வந்து இணைந்துகொண்டிருந்தார் தருமன். சாங்கியரின் சொல்லில் சொல்லிச் சொல்லி தேர்ந்த கூர்மை இருந்தது. “நெய்தீர்கையில் எங்கு செல்கிறது சுடர்? சுடராகும் முன் எங்கிருந்தது ஒளி? நெய்யென்றான பசுவில் உறையும் அனல் எது?” அவரை நோக்காது அச்சொற்களை கேட்டுக்கொண்டு அவர் இருளுக்குள் படுத்திருந்தார். ஒலிபொருள் படலமென மானுடச்சொற்கள் அனைத்தும் ஆகுமொரு இருள்வெளி. “பொருளின் இருப்பு இருவகை. பருண்மை நுண்மை. அகலென்றும் நெய்யென்றும் அனலென்றுமான பருப்பொருட்களின் இணைவு உருவாக்கும் ஒன்றின் நுண்மையே ஒளி.”
“அனைத்தும் பருப்பொருளே என்றறிந்தவன் மருளிலிருந்து விடுபடுகிறான். ஐம்புலனால் அறிவதும் நாளை அவ்வறிதலாக மாறக்கூடுவதும் என இருபாற்பட்ட இருப்பு கொண்டது பருப்பொருள். ஆடல்மேடையில் கூத்தர் தோன்றி அமைக்கும் நாடகம். அணியறையில் அது அவர்களின் உள்ளத்தில் உறைகிறது. அவர்கள் அணியப்போகும் வண்ணங்கள் காத்திருக்கின்றன. சொற்கள் மூச்சுவடிவில் உருக்கொண்டவாறுள்ளன” என்று சாங்கியமுதியவர் சொன்னார். “இணைந்தும் பிரிந்தும் அவர்கள் ஆடும் அக்கற்பனையை வாழ்த்துக! அணிகளைந்து அவர்கள் மீள்கையில் எங்கு செல்கிறது அரங்கு எழுந்த கூத்து? அது அங்கு விழிகொண்டு செவிதிறந்து அமைந்த பிறரில் மீண்டுமெழும் நிகழ்வாய்ப்பென சென்றமைகிறது. கருப்பொருள் பருப்பொருளென்றும் பருப்பொருள் கருப்பொருளென்றும் மாறிமாறியாடும் இது முடிவிலாப் பெருஞ்சுழல்.”
சொல்லப்பட்ட மறுகணமே அவை முழுமையாக மறைந்துவிடுவதை காலைநீராட்டுக்குச் செல்லும்போது தருமன் உணர்ந்தார். நெஞ்சில் விழுந்த சொற்களை உருட்டு உருட்டி விளையாடும் அந்த இளமைந்தன் எங்கு மறைந்தான்? அவன் அடைந்த உவகைகளுக்கு என்ன பொருள்? இன்று பிறிதொரு சொல் செவிப்படுகையில் மட்டுமே முந்தைய சொல் நீர்பட்டு எழுப்பப்பட்டு முளைகொண்டு வந்தது. “பொருள் ஒரு நிகழ்வாய்ப்பென இருக்கும் பெருவெளி அறிதலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இவை இங்கிருப்பதே அது அங்கிருக்கிறது என்பதற்கான சான்றாகும்.” எவர் சொன்னது? பழுத்த விழிகளும் மணியொலிக்கும் குரலும் கொண்ட சாங்கியரா? தொண்டைமுழை எழுந்த கழுத்தும் தொங்கும் குண்டலங்களின் நிழல்விழுந்த நீள்முகமும் கொண்ட வைசேடிகரா? முகங்களை உதறி குரல்கள் மட்டும் வாழும் காற்றுவெளி சூழ்ந்திருந்தது அவரை.
சாலையின் ஒருநுனியில் தோன்றுகிறார்கள் மனிதர்கள். பொருளோ சொல்லோ கொண்டு வந்தமர்கிறார்கள். பின்பு எழுந்து மறு எல்லையில் மரக்கிளைகளுக்கு அப்பால் சென்று மறைகிறார்கள். முகங்களை அன்னசாலை நினைவுகூர்வதே இல்லை. தொடக்கத்தில் நினைவில் நின்ற முகங்களும் காலப்போக்கில் உருகி பிற முகங்களுடன் கலந்தன. வருவதும் செல்வதுமென காட்டில் என்றுமிருப்பது ஒரு திரள். ஒரே பசி. ஒரே நிறைவு. “பொருட்களில் உறைகின்றன பொருளியல்புகள். அவை பொருளென ஆவதற்கு முன் இயல்புகள் மட்டுமே. பொருட்களில் அவை தங்களை வெளிப்படுத்துகின்றன. கூத்தனில் உறையும் தெய்வம் போல.” சொற்கள் எப்போதுமிருந்தன. அறைந்து மழையெனச் சொட்டி ஓய்ந்து துளித்துளியாக விடுபட்டபின் அவை தூய ஒளிப்பரப்பென சித்தத்தை ஆக்கிச்சென்றன.
“வடிவுகொண்டவை அனைத்தையும் தழுவி உண்டு எழும் நெருப்பு வடிவற்றது. நெருப்பு உண்ட அவ்வடிவங்கள் நெருப்புக்குள் எங்கு உறைகின்றன?” சாங்கியம் பருப்பொருளின் நுண்மையை தேடித் தவிக்கும் பெரும்பதற்றமன்றி வேறில்லை. “கசக்கும் காயை இனிய உணவாக ஆக்கும் நெருப்பில் எங்கு உறைந்திருந்தது அவ்வினிமை?” சொல் தேனீபோல ரீங்கரித்தபடி உள்ளத்தைச் சூழ்ந்து பறந்தது. அரைத்துயிலில் ஒரு சொல் எஞ்சியிருக்க சித்தம் மூழ்கி மறைந்தது. சித்தமழிந்தபின் அச்சொல் எங்கு காத்திருக்கிறது, விழித்தபின் வந்தமர்ந்துகொள்ள? சித்தமே மானுடன். அன்னம் சித்தத்தை சூடியிருக்கிறது, விறகு நெருப்பை என. எரிந்தாடும் சித்தம் உடலை சமைத்துக்கொள்கிறது.
“ஒன்றில் இல்லாதது அதில் வெளிப்படமுடியாது. அதில் வெளிப்படுவதனாலேயே அதனுள் அது உள்ளது என்று பொருள். பொருளில் வெளிப்படும் இயல்புகள் அனைத்தும் அதுவே. பொருள் என்பது அதன் இயல்புகளின் தொகையே.” வைசேடிகர் பொருளை அறியும் பெருந்திகைப்பை அளைபவர். ஒரு சொல் பிறிதொன்றில் இருக்கும் எந்த இடைவெளியை கண்டுகொண்டு தன்னை இணைத்துக் கொள்கிறது? ஒரு சொல் பிறிதொன்றுடன் தன்னை இழக்காது இணைந்துகொள்ள இயலுமா என்ன?
“சொல் உள்ளத்தில் ஒடுங்குக! உள்ளம் ஆத்மனில் ஒடுங்குக! ஆத்மன் பிரம்மனில் ஒடுங்குக! பிரம்மன் தன்னில் ஒடுங்குக!” என்றார் முதியமாணவரான தாலகர். “இங்கு எழும் இத்தனை சொற்களுக்கு நடுவே மூடிக்கொள்பவன் அறிவிலிகளுக்குரிய உவகையை அடைகிறான். திறந்தவன் நோய்கொண்டு பெருந்துன்பத்தை அடைகிறான். அரசே, இந்தக் கல்விநிலையிலிருந்து ஆறுமாதங்களுக்குள் சித்தம் குலைந்து தப்பி ஓடியவர்களே மிகுதி. அம்புகள் பறக்கும் போர்க்களத்து வானம் இது. ஊடே செல்லும் செம்பருந்துகள் சிறகற்று வீழ்கின்றன. கொசுக்களும் ஈக்களும் அம்புகளை அறிவதே இல்லை. ஒடுங்குக! ஒடுங்கலே இங்கு வென்று வாழும் வழி.”
கொதித்துக் குமிழியிட்டுக்கொண்டிருக்கும் கலத்தருகே நின்று அதை நோக்கிக்கொண்டிருக்கையில் உள்ளம் அமைதிகொள்வது ஏன்? எரிந்தாடும் தழலில் இருந்து விழிவிலக்கமுடியாது செய்யும் ஈர்ப்பு எது? கலைந்து பூசலிட்டு கூவி ஆர்த்து அமர்ந்து ஐயம்கொண்டு எழுந்து அமைந்து மெல்ல அனைத்துப் பறவைகளும் கூடணைந்தபின் கருக்கிருட்டினுள் இருந்து இறுதியாக குரலெழுப்பும் தனிப்பறவை எதை வேண்டுகிறது? இருத்தல் என்பது அங்கு மட்டுமே வாய்த்தது என அவர் அறிந்தார். உழைத்து உடலோய்ந்தபின் குருதி மெல்ல அடங்கும்போது உள்ளமிருப்பது தெரியும், அது ஏற்கெனவே அணைந்துகொண்டிருக்கும்.
சமையலுக்கு அவர் கையும் காலும் பழக பல மாதங்களாயின. முதல்நாள் செய்த அதே உடலுழைப்பில் ஐந்துமடங்கு வேலைசெய்பவராக ஆனார். “பரிமாறக் கற்றுக்கொள்வதற்கு முன் தட்டுகளை கழுவக் கற்றுக்கொள்க! சமைக்கக் கற்றுக்கொள்வதற்கு முன் பரிமாறக் கற்றுக்கொள்க” என்று தாலகர் அவரிடம் சொன்னார். தட்டுகளைக் கழுவி விளிம்பொருமையுடன் அமைக்கத் தொடங்கிய அன்று அடைந்த நிறைவை அவர் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு. சீராக அடுக்கப்பட்டவை அளிக்கும் உவகைக்கு பொருள் என்ன? அவற்றை அடுக்குவதனூடாக உள்ளம் தன்னை சீரமைக்கிறதுபோலும். அடுக்கப்பட்ட ஒன்றில் படிகையில் உள்ளம் தன் முழுமைநாட்டத்தை கண்டடைகிறதுபோலும்.
காய்கறிகள் நறுக்குவதை கற்றுக்கொள்ள நெடுநாளாயிற்று. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு வெளிவடிவில் இருந்தது. வெளிவடிவுக்குத் தொடர்பற்றதெனத் தெரிந்த உள்வடிவின் தொடர்பைத் தெரிந்துகொள்ள கண்கள் உதவாதென்று அறிந்தார். கைதொட்டு அறியமுடிந்தது காய் எனும் உயிர்க்குமிழியை. பின்னர் கைகளே அவற்றை அரிந்தன, பிளந்தன, நறுக்கின. ஒவ்வொரு காயும் மண்ணிலிருந்து உயிர்கொண்டு உப்புகொண்டு அன்னம் கொண்டு தன்னைக் கோத்து அமைத்த வடிவை மீண்டும் இழந்து சீரான துண்டுகளாகப் பிரிந்து அடுத்த இணைப்புக்கென காத்திருந்தன.
“குழம்புகள் கொதிக்கும் மணங்களை நினைவில் கொள்க! உணவின் நுண்வடிவம் மணமே” என்றார் மூத்தமாணவராகிய காலகர். காய்கறிகள் நீர்விட்டு நெகிழத்தொடங்குகையில் கறைமணம். வெந்து குழைகையில் பச்சை மணம். உப்பும் புளியும் காரமும் ஏற்று கறியென்றாகுகையில் அவை முற்றிலும் பிறிதொன்று. சற்று பிந்தினாலும் அவற்றிலிருந்து கரிமணம் எழத்தொடங்கிவிடும். உலை குமிழியிடுகையில் அரிசிமணம். ஏதோ ஒருபுள்ளியில் அன்னத்தின் மணம். அப்பங்களின் நீராவி மணத்தில் எப்போது மாவு அன்னமாகும் மணம் எழுகிறதென்று அறியமுடிந்த நாள் அன்று பிறந்தவரென உணர்ந்தார். “மணம் அறிவிக்கிறது, பிறிதொரு பருப்பொருள் பிறந்திருக்கிறது என்று” என்றார் காலகர்.
“சமையல் என்பது கலவை” என்றார் காலகர். உப்பு, புளி, காரம் என்னும் மூன்று. மாவு, ஊன், நெய் எனும் மூன்று. மூன்றும் நிகரமைகையில் உருவாகின்றது சுவை. ஒவ்வொன்றிலும் அந்த நிகர்ப்புள்ளி ஒவ்வொன்று. அப்புள்ளியில் மிகச்சரியாக அடுசெயல் நின்றால் சுவை.” பீமன் உரக்க நகைத்து கருணைக்கிழங்கு கூட்டை மரப்பிடியிட்ட சட்டுவத்தால் கிண்டியபடி “ஒருகணம் முன்னால் நின்றுவிட்டால் எழாச்சுவை. ஒருகணம் கடந்துசென்றால் மறைந்த சுவை. சுவையற்ற உணவென ஏதுமில்லை” என்றான். காலகர் வெண்டைக்காய் பொரியலை இளக்கியபடி “ஆம், சமையலறிந்தவருக்கு சுவை ஒரு பொருட்டல்ல” என்றார். “சுவை என்பது நாவறிவது. உணவிலிருப்பது சுவைக்கான ஒரு வாய்ப்புமட்டுமே” என்றான் பீமன்.
“ஆம், அரசே. உணவென்றாவது மீண்டும் ஒரு இணைவு வழியாகவே சுவையென்றாகிறது. நாவும் பசியும் உள்ளமும் என மீண்டுமொரு மும்மை. அவைகொள்ளும் ஒருமை” என்றார் காலகர். “இணைவின் கலையை அறிந்தவர்களுக்குரியது அடுமனைத் தொழில்.” முதல்நாள் உப்பும் புளியும் கலந்து கொதிக்கவைத்து காந்தாரத்துப் பசுமிளகாய் உடைத்துச்சேர்த்து அமைத்த எளிய புளிக்காய்ச்சல் மெல்லக்கொதித்து மணமெழுந்தபோது அதை முதலில் நாக்கு அறிந்தது. கிளர்ச்சியுடன் அதில் ஒரு சொட்டை அள்ளி நாவில் விட்டார். அச்சுவையை உள்ளம் அறிந்தபோது உடலெங்கும் அந்த உவகை பரவியது. திரும்பி அருகே நின்றிருந்த மாணவனிடம் “எப்படி இருக்கிறது?” என ஒரு துளியை அளித்தார். “அவ்வளவுதான், இனி சமையலில் அறிவதற்கு ஒன்றும் இல்லை. அடைவன முடிவதே இல்லை” என்று அவன் சொன்னான்.
அதன்பின் சமையல் ஒரு பித்தென்றாகி சூழ்ந்துகொண்டது. ஒவ்வொருநாளும் அன்று சமைக்கவிருப்பதை எண்ணி விழித்துக்கொண்டார். அன்று சமைத்ததை எண்ணியபடி துயின்றார். வெந்து எழுந்த உணவு இறக்கிவைக்கப்பட்டு காத்திருக்கையில் அதனருகே நின்று நோக்கிக்கொண்டிருந்தார். முன்பிலாத ஒன்று. பருப்பொருளில் எங்கெங்கோ எவ்வடிவிலோ இருந்தது. அவர் சித்தத்தில் உறைந்தது. பிறத்தலென்பது ஒன்றிணைதல். ஆதலென்பது மாறுதல். பரிமாறப்படும் போது அவரே பந்திகள்தோறும் சென்று அவை உண்ணப்படுவதை நோக்கினார். கைகளால் கலந்து அள்ளி வாயிலிடப்பட்டு உமிழ்நீருடன் மெல்லப்பட்டு உடல்நுழைந்து உடலென்றே ஆனது அவ்வுணவு. அவரிடமிருந்து எழுந்து அவர்களாக மாறியது. இதோ உண்பவர் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டிருக்கிறேன். அந்த முகத்தின் நிறைவு நான். இந்த உடலின் இனிய களைப்பு நான்.
சமையல் எங்கோ ஒருபொழுதில் சலிக்கும் என எண்ணியிருந்தார். ஆனால் சலிப்பு எழாது ஆர்வமே மேலும் மேலுமென வளர்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு புதுச்சுவையும் நூறு சுவைகளுக்கான வாய்ப்புகளாகத் தெரிந்தது. ஆக்கி ஆக்கி கைதேரும்போது ஆக்குதல் மேலும் நுண்மைகொண்டது. ஆனால் அவருடைய நாக்கின் சுவை மட்டும் மட்டுப்பட்டது. அவர் சமைத்த எவ்வுணவையும் உண்ண அவருக்குத் தோன்றவில்லை. அவற்றின் மணமே போதுமென்றாயிற்று.
அன்னத்தின் நுண்மை உடலின் நுண்மையால் அறியப்பட்டது. கொதிப்பதும் பொரிவதும் வறுபடுவதும் நொதிப்பதும் உருகுவதும் அவிவதுமான அனைத்தினூடாகவும் மெல்ல நடந்து மீள்கையில் அவர் உண்டு முடித்திருப்பார். நாவுக்கோ வயிற்றுக்கோ சுவை தேவைப்படவில்லை. பசி தீர்க்க மோர்விட்டு நீர்க்கக் கரைத்த அன்னம் மட்டுமே போதுமானதாக இருந்தது. அதை உண்டு எழுந்து ஏப்பத்துடன் கைகழுவச் செல்லும்போது ஒருமுறை இளைய யாதவர் “முனிவரில் நான் கபிலன்” என்று சொன்னதை நினைவுகூர்ந்தார்.
[ 7 ]
சுயம்புவமனு புடவி சமைத்த மன்வந்தரத்தில் பிரம்மன் மண்ணுக்கு வந்து தன் நிழலை சரஸ்வதி நீர்ப்பெருக்கில் நோக்கினார். அந்நிழல் அலைகளில் நெளிந்தமையால் வளைவுகள்கொண்டு பெண்ணென ஆயிற்று. தன்நிழலை பிரம்மன் புணர்ந்தபோது ஒரு மைந்தன் பிறந்தான். அவனை தந்தை கர்தமர் என்றழைத்தார். தந்தையிடம் வேதச்சொல் பெற்ற கர்தமர் சரஸ்வதியின் கரையில் பிந்துசரஸ் என்னும் குளக்கரையில் அவ்வேதச்சொல் ஒவ்வொன்றையும் தன்னுள் முளைக்கவைக்கும்பொருட்டு தவம்செய்தார். தன்னை அறிந்து எழுந்த அவரை ‘நீ அறிந்தவை இப்புவி திகழ்க!’ என்று பிரம்மன் வாழ்த்தினார்.
சுயம்புவமனு ஒரு சொல் நூறெனப்பெருகும் விழைவின் தெய்வம். அவர் துணைவி நூறுமுகம் கொண்ட சதரூபை. அவர்கள் தங்கள் காமத்தை அனலாக்கி பெருவேள்வி ஒன்றை நிகழ்த்தினர். சுயம்புவமனுவின் ஒருநெருப்பைச் சூழ்ந்தெரிந்தது சதரூபையின் நூறு இதழ்கொண்ட நெருப்பு. அவ்வேள்வியில் பிறந்த மகள் தேவாகுதி. பொன்றாப் பெருங்காமமே பெண்வடிவுகொண்டவளாக இருந்தாள் தேவாகுதி. காதல்கொண்டு ‘நீ விழைவதை கேள்’ என்று கூறிய கர்தமரிடம் ‘காலம் நுழையாத ஓர் இல்லம். கண்கள் இல்லாத ஒளிகொண்ட அறைகள். அங்கே காமம் ஓயாத ஒரு மஞ்சம்’ என்று அவள் கேட்டாள். காமரூபம் என்னும் அந்த இல்லம் காலம்திகழ்ந்த மண்ணில் எங்கும் தொடாது விண்ணிலேயே விளங்கியது. அங்கே தவவல்லமையால் காமப்பேருரு கொண்டிருந்த கணவனுடன் அவள் உவந்திருந்தாள்.
உள்ளம் காலமற்றிருந்தது என்றாலும் அவள் உடலில் முதுமை படர்ந்தது. ‘நிறைவுகொண்டாயா?’ என்று கோரிய கணவனிடம் ‘இல்லை, இன்னும் எனக்கு இளமை வேண்டும்’ என்றாள். ‘சரஸ்வதியில் ஆடுக! இளமை மீளும்’ என்றார் கர்தமர். தேவாகுதியின் கைபற்றி நீராடி தானும் இளமைகொண்டார். அவ்வாறு ஏழுமுறை இளமை மீண்டனர். ஏழாவது முறை இளமை மீண்டு காமம் நுகர்ந்து முதுமைகொண்டதும் ‘நிறைந்தாயா?’ என்றார் கர்தமர். ‘இன்னும் இன்னும் என்றே என் உள்ளம் விழைகிறது’ என்றாள் தேவாகுதி. ‘இக்காமப் பெருவிழைவை வென்று கடக்க விழைகிறேன்.’
‘காமத்தை காமத்தால் வெல்ல இயலாது’ என்றார் கர்தமர். ‘நான் இதை கடப்பதெப்படி?’ என்று அவள் கேட்டாள். ‘பெண்கள் அன்னையராகி காமத்தை கடக்கிறார்கள்’ என்று கர்தமர் சொன்னார். ‘எனக்கு ஒரு மகவு பிறக்கட்டும்’ என்று அவள் கேட்டாள். அவள் வயிறு கனிந்து ஒரு பெண்மகவு பிறந்தது. அவள் மதநீர் முலைப்பாலென ஊறி மகவுக்குச் சென்றது. ‘இன்னும் எஞ்சுகிறது என்னில் மதம்’ என்றாள் தேவாகுதி. ‘பிறிதொரு மகவு எழுக!’ என்றார் கர்தமர். அவள் கலை, அனசூயை, சிரத்தை, ஹவிர்ஃபு, கீதை, கிரியை, கியாதி, அருந்ததி, சாந்தி என்னும் ஒன்பது மகள்களை ஈன்றாள்.
‘ஒன்பது மகவுக்கும் பின்னர் என்னிடம் எஞ்சும் துடிப்பு என்ன?’ என்று அவள் கணவனிடம் கேட்டாள். ‘உன்னுள் இருப்பது என்னை வெல்லும் விழைவு. என்னை விஞ்சும் ஒரு மைந்தனுக்கு அன்னையாகுக! நீ நிறைவடைவாய்’ என்றார் கர்தமர். தேவாகுதி கருக்கொண்டு ஒரு மைந்தனை பெற்றாள். எளிய உருவிருந்தாலும் ஐந்துமடங்கு எடைகொண்டிருந்த அம்மைந்தன் வெளிவந்ததுமே அவள் படுத்திருந்த மஞ்சம் வளைந்தது. அவனை கையிலெடுக்க அவளால் முடியவில்லை. அவன் உதடுகளில் முலைக்காம்பை வைத்த மறுகணமே அவள் உடலெங்கும் குருதி இழுபட்டு தசைகள் இழுபட்டு துடிக்கத் தொடங்கின. மாந்தளிர் நிறம் கொண்டிருந்த அவனை தந்தை கபிலன் என்றழைத்தார்.
மைந்தன் மூன்றுமாதத்தில் முதற்சொல்லை உரைத்தான். ஏழுவயதில் வேதங்களை முற்றோதி முடித்தான். பன்னிருவயதில் வேதமுதன்மையாகிய பெரும்பருக் கொள்கையை பிரம்மனிடமிருந்து தானே அறிந்தான். கற்றவற்றில் ஏறி மெய்மையை தொட்டறிந்து அவர் மீண்டுவந்தபோது அன்னை தேவாகுதி இறப்புக்கிடக்கையில் இருந்தாள். அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார் மைந்தர். ‘மைந்தா, எனக்கு இனி காலமில்லை. இப்போதும் என்னுள் நிறைவுறாதிருக்கும் விழைவு என்ன?’ என்றாள் தேவாகுதி.
‘பெண்ணென்றும் அன்னை என்றும் ஆன நீ இப்புவியே. புவியென்றான முதற்பேரியற்கையே. அதிலுறையும் நிறைவின்மையே இவையனைத்தும்’ என்றார் கபிலர். ‘இணைந்து உடலாகிவந்த பருப்பொருட்கள் மீளும். அந்த முதற்பெரும் நிறைவின்மை எப்போதும் வாழும்.’ அன்னை விழிநீர் பெருக்கி மைந்தனை நோக்கி கிடந்தாள். ‘பசியென, காமமென, வெற்றியென, புகழென, எஞ்சிநிற்றல் என உருக்கொண்டாடும் அப்பெரும் நிறைவின்மையால் ஆட்டிவைக்கப்படும் பொருண்மையின் அலைக்கழிவையே வெளியே புடவியெனக் காண்கிறோம். உள்ளே சித்தமென அறிகிறோம்.’
“சாங்கிய மெய்ப்பொருளை அன்னைக்குரைத்து அவள் துயரழித்து நிறைவுகொள்ளச்செய்தார் கபிலர். அரசே அறிக, இப்புவியில் அன்னமென ஆயிரம் பொருட்கள் உயிர்கொண்டெழுந்தபடியே உள்ளன. அத்தனை அன்னங்களையும் சமைப்பது ஒரே அனல். மெய்ப்பொருட்கள் எதுவும் ஆகலாம், கபிலமெய்மை இணையாமல் அவை பயன்படுவதில்லை” என்றார் குறுகிய உடலும் கூர்ந்த முகமும் சிறிய மணிக்கண்களும் கொண்டிருந்த திரிவக்ரர். கொட்டகையில் அனைத்துக் கட்டில்களும் ஒழிந்துகிடந்தன. சிறிய கட்டில் ஒன்றில் மரவுரி போர்த்தி அவர் படுத்திருந்தார். அருகே தருமன் அமர்ந்திருந்தார்.
“சாங்கியம் தொட்டு தொடங்குக! ஏனென்றால் இதுவே மண். மண்ணை உதறி எழுபவை ஒவ்வொன்றும் மண்ணில்வந்து விழுந்தாகவேண்டும். மண்ணில் வேர்கொள்பவை மட்டுமே விண்ணைச்சூடி நிற்கமுடியும்” என்றார் திரிவக்ரர். “ஒவ்வொரு கொள்கையிடமும் அறிவன் கேட்கவேண்டிய வினா ஒன்றே. இது எவருக்கு அன்னம்? இப்புவியில் உயிருள்ள அனைத்தும் அன்னமே.” தருமன் “ஆம்” என்று தலையசைத்தார். “சாங்கியத்தை அறிய மிகச்சிறந்த வழி அன்னத்தை தொடர்வதே. குருநிலை மாணவனைவிட அடுமனைப் பணியாளன் அதை அணுகமுடியும்” என்று திரிவக்ரர் சொன்னார்.
பயணிகள் மிகவும் குறைந்திருந்த கார்காலம். மலைப்பாதைகள் முழுக்க வழுக்கும் சேறால் ஆனவையாக மாறிவிட்டிருந்தன. மலைக்கு வருவதில் முதன்மையானதாகிய உப்பும் செல்வதில் முதன்மையானதாகிய மரவுரியும் மழைக்கு வீணாகிப்போகின்றவை. அவ்வப்போது அவ்வழி செல்லும் துறவிகளும் இரவலரும் வேதமாணவர்களுமன்றி வணிகர்கள் அரிதாகிவிட்டிருந்தனர். வணிகரில்லாமையால் சூதரும் பாணரும் இல்லாமலாயினர். அடுமனைப்பணிகள் பெரிதும் குறைந்து அனைவரும் கொட்டகைகளில் நாளெல்லாம் ஓய்வுகொள்ளலாயினர்.
ஆனால் அடுமனையாளர்களின் உள்ளத்தில் சொல்லவிந்துவிட்டிருந்தது. ஓய்ந்து சேர்ந்தமர்ந்திருக்கையிலும் அவர்கள் ஏதும் பேசிக்கொள்வதில்லை. ஏதேனும் கைப்பணிகளை அவர்கள் கண்டடைந்திருந்தனர். சலபர் செம்புநிலைவாய்களை உருட்டி ஓடைக்குச் சென்று மணலிட்டு நார்கொண்டு தேய்த்து மின்னும் அனல் என ஆக்கி கொண்டுவந்து வைத்தார். பித்தளை உருளிகள் பொன்னாயின. சட்டுவங்கள் வாளொளி கொண்டன. காலகர் மழைக்குள் சென்று விறகுகொண்டு வந்து கீற்றுகளென்றாக்கி அடுமனையில் அடுப்புகளுக்கு மேல் தொங்கவிட்டார். தருமன் கொடிகளால் கூடைகளும் உறிகளும் பின்னினார். சிலர் மரத்தாலான அகப்பைகளையும் கரண்டிகளையும் செதுக்கினர்.
தொலைவிலிருந்து நோக்குபவர்களுக்கு அன்னசாலை முழுமையாக கைவிடப்பட்டு கிடப்பதாகவே தோன்றியது. களைத்த காலடிகளுடன் அணுகி வருபவர்கள் அங்கே வெவ்வேறு ஒலிகள் கேட்பதைக் கண்டு திகைத்தனர். அருகணைந்து அங்கு வேலை செய்துகொண்டிருப்பவர்களை நோக்கி அவர்கள் இறந்தவர்களோ என ஐயுற்றனர். அவர்களுக்காக எப்போதும் அடுப்பில் கனலிடப்பட்டு புகையெழும்படி செய்யப்பட்டது. பெருமழைக்குள்ளும் அனல்மணம் எழுந்து அங்கு அன்னமிருப்பதை தொலைவிலேயே பயணிகளுக்கு உணர்த்தியது.
திரிவக்ரர் “பருப்பொருட்களில் வாழ்வது பொருண்மையில் குடிகொள்ளும் முதல் நிறைவின்மை. மூன்று குணங்களின் நிகர்நிலை நாடல். ஒவ்வொருவருக்குள்ளும் நின்றிருக்கும் தேடல் அதுவே. இது தன்னை தானென உணர்வது அந்த நிறைவின்மையினால்தான். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் தனித்தன்மைகொண்டிருப்பது அந்நிறைவின்மையை மையமென சூடியிருப்பதன் வழியாகவே. பொருளின் சாரமென்பது அந்நிறைவின்மை மட்டுமே. எனவேதான் ஒவ்வொரு பொருளும் பிறிதொரு பொருளில் இணையத் துடிக்கிறது. பிறிதொன்றாக விழைகிறது. பிறிதொன்றை நிரப்பி பிறிதொன்றில் நிறைந்து நிறைவுகொள்ள வெம்புகிறது. அதுவே புடவிச் செயல்பெருக்கென்றாகி நம்மைச் சூழ்ந்துள்ளது. நாமென்றும் ஆகியுள்ளது.”
“அதற்கப்பால் பொருளுக்கென சாரம் ஏதுமில்லை. பொருளென்றுணரும் பொருளான மானுடனுக்கும் ஆத்மா ஏதுமில்லை” என்றார் திரிவக்ரர். தருமன் தலையசைத்தார். மரவுரியை இழுத்துப் போர்த்திக்கொண்டு “ஆம், ஆத்மா இல்லை. பருப்பொருளின் நிறைவின்மையை பரம்பொருளுக்கான தவிப்பென எண்ணி மயங்கியவர்களால் உருவாக்கப்பட்டது ஆத்மா என்னும் எண்ணம். ஆத்மாவின் தவிப்பைக் கொண்டே உருவகிக்கப்பட்டது பரம்பொருள் என்னும் மையம். ஆத்மா இல்லை என்பதனால் அதுவும் இல்லை என்றாகிறது” என்றார். விழிகளை மூடிக்கொண்டு “ஆம், இல்லை” என்றார்.
மழையின் ஓசை அணுகிவந்தது. கூரையை பேரோசையுடன் அறைந்து பெய்யத்தொடங்கியது. பின்னிக்கொண்டிருந்த நாராலான உறிகளை எடுத்துக்கொண்டு தருமன் வெளியே சென்றார். மழைக்காமணத்தை எடுத்து தலையில் அணிந்தபடி அடுமனைக்குச் சென்று அதை அங்கே அடுக்கிவைத்தார். அங்கே அர்ஜுனன் மரம்குடைந்து கலம் செய்துகொண்டிருந்தான். அப்பால் நகுலன் ஈச்சைநாரால் சிறியபெட்டிகளை பின்னிக்கொண்டிருந்தான். அவர்கள் அவரை அறியவில்லை. அவர் மீண்டும் வெளிவந்தபோது மழைக்கு அப்பால் ஒருவர் நனைந்தபடி சீராக நடையிட்டு வருவதைக் கண்டார். ஆடையற்ற உடல்கொண்ட திசையுடலர். மயிர்பிடுங்கப்பட்ட உடலில் மழை வழிந்தது. தருமன் கூப்பிய கைகளுடன் அருகே சென்று “அருகரே, கொட்டகைக்குள் வந்தமரவேண்டும். தங்களுக்கு உணவளிக்கும் பேறுபெற அருளவேண்டும்” என்றார்.
மழைக்குள் மின்னிய அழகிய சீர்பல்நிரையுடன் புன்னகைத்து “நலம்சூழ்க! நீர் அரசரென எண்ணுகிறேன். அருள் நிறைந்த கோல் சூடுக! கோல் துறந்து நிறைவடையும் பேறு சூழ்க!” என அவர் வாழ்த்தினார் “இந்தக் கூரைநீழலில் நான் தங்கிக்கொள்கிறேன். என் வெறும்கையில் ஒருமுறை உண்ணுமளவு அன்னம் எனக்குப் போதும். என் தவநெறி அது.” தருமன் “மரவுரி கொண்டுவருகிறேன். ஈரத்தை துடைத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவர் மீண்டும் புன்னகைத்து “அந்த ஆலமரத்தை அதில் வாழும் பறவைகளை விரட்டிவிட்டு ஈரம்போக துடைப்பீரா?” என்றார்.
தருமன் வெறுமனே கைகூப்பினார். “இவ்வுடலில் அதைவிட கூடுதலாக உயிர்கள் வாழ்கின்றன. விழிக்குத் தெரியாத சிற்றுயிர்கள். ஒவ்வொன்றும் ஓர் ஆத்மா. இன்பதுன்பங்களும் பிறவிப் பெருஞ்சுழலும் மீட்பும் கொண்டவை.” தருமன் மெல்லிய திகைப்பை அடைந்து “சிற்றுயிர்களுக்கு ஐம்புலன்கள்கூட இல்லை என்பார்களே, உத்தமரே” என்றார். “இக்கல் புலன்களே அற்றது. அந்தமரம் ஒற்றைப்புலன் கொண்டது. அவற்றிலும் ஆத்மா உறைகிறது. ஆத்மா இல்லாத எதுவும் இங்கில்லை” என்றார் அருகப்படிவர். “வட்டமொன்று சுழலுமென்றால் மையமொன்று அமைந்தே தீரும், அரசே” என்று உரைத்து முடித்தார். தருமன் மீண்டும் தலைவணங்கினார்.