மௌனியின் இலக்கிய இடம்

images

 

மெளனியும் தமிழிலக்கியச் சூழலும்

மெளனியின் சிறுகதைகளின் தொகுப்பில் அவரைப்பற்றி புதுமைப்பித்தன் சொன்ன வரிகள் எடுத்து தரப்பட்டுள்ளன.’ தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்தவர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைபேரில் எழுதிவருபவரை சொல்லவேண்டும். அவரை தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபடமறுக்கும் கருத்துக்களை மடக்கிக் கொண்டுவரக்கூடியவர் அவர் ஒருவரே’இக்குறிப்பில் மெளனி, சிறுகதையின் திருமூலர், கற்பனையின் எல்லைகோடு ஆகிய சொற்கள் அடிக்கோடிடப்பட்டுள்ளன. மெளனியைப்பற்றி கடந்த ஐம்பது வருடங்களில் உருவாகியுள்ள எல்லா சாதக மதிப்பீடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தவை இந்த வரிகளே.

மறுபக்கமாக இரு தரப்புகள் உள்ளன. ஆரம்பகால மார்க்ஸிய விமரிசனத்தின் யந்திரவாதக் குரலை ஒலித்த கைலாசபதி மெளனியை மேட்டிமைவாதம், இருண்மைவாதம், குறுங்குழுவாதம் ஆகியவற்றின் அடையாளமாக கண்டார். தி க சிவசங்கரன் அக்குரலை எதிரொலித்தார். கு அழகிரிசாமி மெளனி மொழியை வைத்துப் பம்மாத்து செய்பவர் அவரது எழுத்து உள்ளீடற்றது என்று சொன்னார்.

மெளனி பற்றிய மதிப்பீடுகள் இவ்விரு எல்லைகளில்தான் பொதுவாக உள்ளன. இவை ஒன்றால் ஒன்று தூண்டப்படுபவை என்பதே உண்மை. மெளனி பற்றி ஒப்புநோக்க அதிகமான விமரிசனங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. முதற்கட்ட விமரிசகர்களில் சி சு செல்லப்பா அதிகமாக எழுதியுள்ளார். செல்லப்பாவின் ஆய்வு முறை அவரே சொன்னதுபோல அலசல் விமரிசனம். அலசல் என்பது அவரை பொறுத்தவரை மேற்கத்திய அழகியல் கொள்கைகளை ஒட்டி வடிவங்களையும் மொழியையும் ஆராய்வதே. அவ்வகையில் மெளனி பற்றிய அவரது ஆய்வுகளின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. ஆனால் ஏன் மெளனி முக்கியமானவர் என்ற கேள்விக்கான பதிலாக செல்லப்பாவிடம் புதுமைப்பித்தன் சொல்லிய வரிகளின் எதிரொலிகளையே காணமுடியும். மெளனி முன்வைத்த வாழ்க்கைநோக்கு காந்தியவாதியான செல்லப்பாவுக்கு சற்றும் ஏற்புடையதாக இருக்க முடியாது. மெளனியின் கதாபாத்திரங்கள் உள்முகமாக திருப்பபட்ட போக வேட்கை கொண்டவை. உலகியலே அவற்றின் வலிமை. செல்லப்பா இலட்சியவாதி. மெளனி உணர்ச்சிகளின் சலனநிலைகளை மட்டுமே ஆராய்ந்தவர் செல்லப்பா தருக்கம் மிகுந்தவர், அறிவார்ந்தவர். செல்லப்பா மெளனியில் எதைக் கண்டார் என்பது புதிரே. மெளனியின் சாரம் கண்டவர், அதை அங்கீகரித்தவர் எப்படி பி எஸ் ராமையாவை மாபெரும் படைப்பாளியாக காணமுடிந்தது?

மெளனியை தொடர்ந்து குறிப்பிட்டு அவரது இலக்கிய இடத்தை உருவாக்கியவர் க நா சுப்ரமணியம். ஆனால் அவர் வழக்கம்போல மெளனியைப்பற்றிய ஆய்வு எதும் மேற்கொள்ளவில்லை. மெளனியைப்பற்றிய இன்றைய பிரமிப்பை உருவாக்கியவர் பிரமிள். மெளனி கதைகளுக்கு அவர் எழுதிய புகழ்பெற்ற முன்னுரை புதுமைப்பித்தனுக்குப் பிறகு மெளனிக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறந்த புகழாரம். ஆனால் பிரமிளின் விமரிசனம் மெளனியின் இருண்மைத்தன்மையை மீபொருண்மை [மெட்ட ஃபிசிக்ஸ்] நோக்கில் மேலும் அடர்த்தியாக்கவே உதவியது. மெளனி கதைகளைப்பற்றிய பல அழகிய, அதேசமயம் தெளிவற்ற சொல்லாட்சிகளை பிரமிள் உருவாக்கி அவற்றை மெளனியைச்சுற்றி தேவதைச்சிறகுகளுடன் பறக்கவிட்டார். இக்கட்டுரை அவரது பிற்கால மனமாற்றங்களுகேற்ப திருத்தப்பட்டு’ தமிழின் நவீனத்துவம்’ என்ற விமரிசனத்தொகையில் சேர்க்கப்பட்டது. மெளனி குறித்த சுந்தர ராமசாமியின் மதிப்பீடு பல இடங்களிலாக சிதறிக்கிடக்கிறது. ஆனால் அது அதுவரையிலான மதிப்பீடுகளின் எளிய எதிரொலியே. சுந்தர ராமசாமியை கவர்ந்தது மெளனியின் வடிவம்தான். அதாவது வடிவமாக மாறாத சொற்தீற்றல்களினாலானதும் வாசகனை மிகவும் கற்பனைக்குத் தள்ளுவதுமான வடிவம். அதை ஒட்டியே அவர் மெளனி குறித்த புகழ்மொழிகளை சொல்லியிருக்கிறார். மெளனியை பற்றிய வெங்கட் சாமிநாதனின் விமரிசனம் நமது பக்தி இலக்கியங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்துவது. பிற்காலத்தில் எம்.டி.முத்துக்குமாரசாமி அமைப்பியல் நோக்கில் மெளனியைப்பற்றி கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார். மெளனியின் மொழி அகவயமானது எனவே மானுட அறத்தை கையாள திறனற்ற மொண்ணை மொழி என்பது அவரது முக்கியமான குற்றச்சாட்டு

முதன்மையான முன்னோடிப்பார்வை

மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான், அது பிறகு நீர்க்கப்பட்டு’ மெளனியுடன் கொஞ்ச தூரம்’ என்றபேரில் நூலாக வானதி வெளியீட்டாக வந்தது. நமது விமரிசன மரபில் மிக மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை நான் காண்கிறேன். இக்கட்டுரையின் பல பகுதிகளை என்னால் மனப்பாடமாகவே சொல்லமுடிவதை இப்போது இதை எழுதும்போது சற்று ஆச்சரியத்துடன் உணர்கிறேன். இலக்கிய விமரிசனக்கட்டுரைகள் சலிப்பூட்டும் என்ற பொது நம்பிக்கையை மீறி இக்கட்டுரை அடர்த்தியான ஆனால் மிக ஆர்வமூட்டும் நடையில் எழுதப்பட்டுள்ளது. மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப் குமார்’ என்னைப்பொறுத்தவரை ஒர் தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான்.’ என்று மிக சிறப்பாக வகுத்துக்கூறி தன் ஆய்வைத் துவங்குகிறார்.

பல்வேறு வடிவங்களில் எழுதிய, பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் ‘இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகளுக்கு பின்னிருந்து இயக்கிய ஓர் அற இயல்புதான் அது’ என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ‘தன்னளவில் தன்மையற்றது’ என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார். இப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார். இக்கோணம் குறித்த விமரிசனம் ஒருபக்கம் இருக்கலாம். ஆனால் இலக்கிய விமரிசனத்துக்கு இப்படி தெளிவான ஓர் சுய அடிப்படையை வகுத்துக் கொண்டு எழுத முற்பட்ட விமரிசகர்கள் நம்மிடையே குறைவுதான்.

மெளனி குறித்த சில மதிப்பீடுகளை திலீப் குமார் நிராகரித்துவிடுகிறார்.

(அ) மெளனி முன்னோடியே இல்லாத படைப்பாளி என்ற பிரபலக் கூற்றை மறுத்து பொதுவாக படைப்பிலக்கியவாதிகள் எவருக்குமே முழுமையான முன்னோடி இருப்பதில்லை, முன்னோடிகளே இல்லாமலும் இருப்பதில்லை என்கிறார்.

(ஆ) மெளனி இந்திய மாயாவாதத்தாலோ அல்லது அதேபோன்ற ஏதேனும் மேற்கத்திய தத்துவத் தரப்பாலோ ஆட்கொள்ளப்பட்டவரல்ல என்று சொல்லி மெளனி தன் கதைகளின் வழியாக கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்று சொல்லலாம் என்று வகுக்கிறார்.

(இ) மெளனி ஒரு சனாதனி என்ற கூற்றை மறுத்து மெளனி எப்போதுமே தன்னை தன்னுள் மட்டுமே காணமுயன்ற மனிதர் என்று வகுக்கிறார்.

(ஈ) மெளனியின் கதைகள் சிதைந்த அல்லது புகைமூட்டமான வடிவம் கொண்டவை என்பதை மறுத்து அவை மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வடிவம் கொண்டவை என்கிறார்.

மெளனியின் இயல்புகளாக திலீப் குமார் கூறுவனவும் முக்கியமான கருத்துக்களே.

அ.] மெளனிக்கு பின்னோடிகள் இல்லை. அவரது கலை குறுகிய வட்டத்தில் நிகழ்ந்து தன்னை முழ்மை செய்துகொண்ட ஒன்று

ஆ]மெளனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை, உறவில் உள்ள நிலையின்மை மற்றும் மரணம் உருவாக்கும் பொருளின்மை

இ] மெளனியின் கதைகள் குறுகலான தீவிரமாக கருக்களை கொண்டிருப்பதனால் அவை எளிதாகவே வடிவம் சார்ந்த ஒழுங்கை கொண்டுவிடுகின்றன.

ஈ] மெளனியின் பாத்திரப்படைப்பு எப்போதுமே புறவயமான அடையாளங்களற்ற ஒருவகை பிரக்ஞை நிலைகளாகவே உள்ளது

உ] மெளனியின் மொழிநடை அவற்றின் ஒலிநயம் மற்றும் பூடகத்தன்மை காரணமாக வாசகனை கவர்வது

ஊ] மெளனியின் மீது காஃப்காவின் செல்வாக்கு கணிசமானது. மெளனி காஃப்காவை தனக்காகவே எழுதிய எழுத்தாளர் என உணர்ந்தார்.

 

mouni1_thumb[1]

மெளனியின் புறவுலகம்

தமிழில் நான் தனிப்பட்ட இலக்கியவாதிகளைப்பற்றி விமரிசனங்கள் எழுதத் தொடங்கியபோது எவரைப்பற்றியும் இப்படி எனக்கு முன்னோடியாக அமையக்கூடிய கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருப்பதைக் காணவில்லை. ஆகவே என் விமரிசனத்தை திலீப்குமாரிலிருந்து மேலதிக வினாக்களை எழுப்பியபடிதான் துவங்க முடியும்.

முதலில் மெளனியின் புறவுலகம் குறித்த கேள்வியை முதலில் விவாதிக்கவேண்டும். மெளனியின் உலகில் புறவுலகம் என்ற ஒன்று இல்லை என்பது பொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டு. இதை ஓர் அங்கீகாரமாக ஏற்று ‘புறவுலகமே இல்லாத’ கதைகளை எழுதமுற்படும் சிலர் தொடர்ந்து வந்தனர். இலக்கியப்படைப்புக்கும் புறவுலகுக்கும் இடையேயான உறவு என்ன? நமது ஆசைகளும், கனவுகளும், மனப்பதிவுகளும் கொண்டு உருவானது அகவுலகம். இவ்வக உலகுக்கு வெளியே இதன் விதிகளுக்கு கட்டுப்படாமல் தன்னுடைய சொந்த விதிகளின்படி இயங்கும் பொருண்மை உலகமே புற உலகம். இவை இரண்டுமே ஒருவகையில் தத்துவார்த்தமான உருவகங்களே. புறவுலகை அறியும் மூளை பொருண்மையுலகின் கூறுதான். பொருண்மையுலகின் அத்தனை சிறப்பியல்புகளுமே மூளையின் நரம்புகளின் இயல்புக்கு ஏற்ப அறியப்படுபவையே. நம் மரபின் ஆரம்பகாலம் முதல் இவ்விரு உலகங்களின் பரஸ்பர பாதிப்பு, பரஸ்பர பிரதிபலிப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மேற்கே கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற பேரில் நடைபெற்ற விவாதமும் இத்தகையதே. அவற்றை இங்கே நினைவுகூர்ந்துகொள்ளலாம். அகவுலகம் என்பது புறவுலகின் பிரதிபலிப்பே என்பதும் புறவுலகம் அகவுலகின் மீது தான் பிம்பம்கொள்கிறது என்பதும் படைப்புலகிலும் செல்லுபடியாகும் விதிதான்.

இப்படிச் சொல்லலாம். பூமணி போன்ற இயல்புவாதப் படைப்பாளியின் படைப்புலகில் புறவுலகம் மட்டுமே உள்ளது. அதே நிலப்பகுதியை எழுதும் கோணங்கியின் உலகில் உள்ளது அகவுலகம் மட்டுமே. ஆனால் பூமணியின் உலகம் அவரது கதாபாத்திரங்களின் அகவுலகால் காணப்படுவது, அவரது படைப்புமனதால் சித்தரிக்கபடுவது. கோணங்கியின் அகவுலகம் முழுக்க அவரது புறவுலகிலிருந்து கொள்ளப்பட்ட பிம்பங்கள்தான். வரண்ட கரிசல்நிலம், பனைமரங்கள், மொட்டைமரங்கள் ஆகியவற்றாலானது அந்த அகம். [ அவரது படைப்பூக்கம் கொண்ட ஆரம்ப கால கதைகளை வைத்து. காதில் விழுந்ததையெல்லாம் சொற்குவியலாக மாற்றும் இக்கால படைப்புகளை நான் பொருட்படுத்தவில்லை.] இரு தளங்களும் ஒரு போதும் ஒன்றையொன்று உதறாதவை. நித்ய சைதன்ய யதியின் சொற்களில் கடும்பசியுடன் ஒன்றை ஒன்று உண்ண ஆரம்பித்த இரு அமீபாக்கள் அவை.

மெளனியின் சித்தரிப்பு முறை அகவுலகை முன்னிறுத்தியது என்று சொல்வதே பொருத்தமானது. அவரது எழுத்தின் தேவை அப்படிப்பட்டது. அகவுலகை எழுதவே முடியாது, ஆகவே அது படைப்பாளியின் வேலை அல்ல என்று நம்பிய ஜி நாகராஜனின் தேவைக்கு நேர் மாறானது அது. அகவுலகு சார்ந்த எழுத்து என்பதனால் மெளனிக்கு சிறப்போ இழிவோ வருவதில்லை. புறவுலகு முன்வைக்கப்படும் ஜி நாகராஜன் போன்றவர்களின் படைப்புகள் படிக்கப்படும்போது அதற்கு அடிப்படையாக அமைந்த அகவுலகம் வாசகனால் கற்பனை செய்யப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. அதேபோல மெளனி கதைகளின் புறவுலகம் கற்பனை மூலம் விரித்தெடுக்கப்படலாம். அது நம் சூழலில் போதிய அளவில் செய்யப்படவில்லை என்பதே மெளனி படைப்புகள்மீது தேங்கியுள்ள புகைமூட்டத்துக்கு முக்கியமான காரணம்.

மெளனியின் கதாபாத்திரங்களை அடையாளம் காணும் முயற்சி செய்யப்பட்டுள்ளது. பிற்கால ஆய்வுகளில் பிரமிள் மெளனி தன் கதாபாத்திரங்களை தன் சாயலிலோ தன் தோற்றம் மற்றும் இயல்பு என்று அவர் நம்பிய சாயலிலொ உருவாக்கியிருக்கிறார் என்று ஆராய்ந்து சொல்லியுள்ளார். அது உண்மைதான். மெளனி போன்ற அகவய எழுத்தாளர் தன்னைத்தவிர வேறு எவரையுமே கவனித்திருக்க வாய்ப்பில்லை. லா.ச.ரா போன்ற அகவயநோக்குள்ள எழுத்தாளர்களிடமும் இதைக் காணலாம். மெளனியின் பெண் கதாபாத்திரங்களும் ‘பெண் ‘ என்ற உருவகங்களாகவே தெரிகிறார்கள். குணச்சித்திர அம்சமே அவர்களிடம் இல்லை. அவை ஆண்கதாபாத்திரங்களின் மனதில் உருவாகும் பெண் முகங்கள் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் முதிரா இளமைக்காலத்து ஆண்மனதில் உருவாகும் பெண்களைப்போன்றவர்கள் அவர்கள். அழகாலும், காதலாலும் தவிர வேறு எதனாலும் அடையாளப்படுத்தப்படாதவர்கள்.

மெளனி எழுதும் சூழல் ஒரு கோவில் நகரம் [சிதம்பரம்] ஒரு பெரு நகரம் [சென்னை] ஆகிய இரண்டும்தான். இந்த இடங்களிலிருந்து மன அவசம் காரணமாக சென்று மீளக்கூடிய, அல்லது கற்பனை செய்யக்கூடிய சில இயற்கைக் காட்சிகளின் இடங்கள். மெளனியின் கதாபாத்திரங்கள் கல்வி கற்க நகருக்கு சென்று மீள்கிறவர்கள். தங்களை சிறு கோவில்நகரில் இயல்பாக உணர்பவர்கள். மெளனியின் கதைகளின் இடம் பலசமயம் இருண்ட கோவில். அனேகமாக முகப்பு. அவருக்கு அந்தி மீது மோகம் அதிகம் உள்ளது. இவை மெளனியின் புகழ்பெற்ற கதைகளில் உள்ள சூழல்கள். அவரது சில புறவயமான கதைகளில் உள்ள சூழல்கள் திடமானவை. உதாரணமாக சாவில் பிறந்த சிருஷ்டி மற்றும் குடும்பத்தேர். இங்கே சம்பிரதாயமான ஒரு பிராமணக் குடும்பச்சூழல் தெளிவாகிறது. மேலும் அதன் மீது மெளனிக்கு இருந்த பற்றும்.

இத்தகவல்களிலிருந்து மெளனியின் புறவுலகை ஓரளவு ஊகிக்க முடியும். ஒரு நடுத்தர கோவில் நகரில் பிறந்து வளர்ந்து, சம்பிரதாயமான குடும்ப சூழலில் முற்றும் பொருந்தி, அதன் பாதுகாப்பபையும் நிலைத்த தன்மையையும் ஏற்றுக் கொண்டு வாழும் ஒருவன் கல்வியின் நிமித்தம் பெருநகரம் ஒன்றுக்கு செல்கிறான். கல்வி மூலம் வேறு உலகங்களில்ன் மன ஓட்டங்களை அடையாளம் காண்கிறான். அவற்றில் ஈடுபட விரும்பினாலும் அது அவனுக்கு முடியவில்லை. மீண்டுவந்து அவ்வுலகை தன் அந்தரங்கமான பகற்கனவாக வைத்திருக்கிறான். அப்பகற்கனவுகளில் அவன் வாழும் நிஜ உலகமும் அவன் கற்ற கற்பனை உலகும் முயங்கும் போது ஓரு தனி உலகம் உருவாகிறது. அதுதான் மெளனியின் படைப்புகள் காட்டும் உலகம். மெளனி கதைகளை குறுக்கி விடுவதற்காக இதை சொல்லவில்லை. அவரது புறவுலகை சுருக்கமாக இப்படி வகுத்தபிறகு மேலே செல்வது வசதியானது.

இதன் நீட்சியாக மெளனியின் கதாநாயகனின் பிரச்சினையை பொதுமைப்படுத்திப் பார்க்கலாம். நமது சூழலில் நடுத்தரவற்கத்தை சேர்ந்த, கிராமம் அல்லது சிறு நகரை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி மூலம் புது உலகம் திறந்து கிடைக்கும்போது ஏற்படும் கலாச்சார அதிர்ச்சிகளில் ஆண்பெண் உறவு சார்ந்த திகைப்பு முக்கியமானது. [ அடுத்தபடியாக நிலப்பிரபுத்துவமரபு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும் ஆசாரங்களும் முதலாளித்துவ கல்விச்சூழலில் கொள்ளும் மாற்றங்களை எதிர்கொள்வது. ஊரில் பண்ணையாரின் மகனான குட்டிப் பண்ணையாரை கல்லூரியில் டேய் போட்டுக் கூப்பிடும் நிலை] இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உடனே நினைவு கூரலாம். நமது வாழ்வில் பருவம் வந்த ஒரு ஆண் பெண்ணுடன் பேசுவதே கற்பனையில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் ஓர் அனுபவம். கணவன் மனைவி கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள நள்ளிரவை மட்டும் தெரிவு செய்த ஒரு காலமும் இருந்தது, மெளனி அக்காலகட்டத்தை சேர்ந்தவர்.

நவீனக் கல்விக்குள் செல்லும்போது முதலில் ஏற்படும் பதற்றமும் பரவசமும் நிரம்பிய அனுபவம் பெண்களுடன் பழக நேர்வது. என் கல்லூரி முதல் வருடம் என்னிடம் முதலில் பேசிய பத்மா என்ற மூத்த வகுப்பு தோழியின் முகம், அன்று அவள் அணிந்திருந்த உடை நகை அனைத்துமே எனக்குள் அழியா ஓவியமாக உள்ளன. அது எனக்கு முதல் காம அனுபவத்தை விட உக்கிரமானது. ஒருவேளை இந்த வாழ்க்கைச்சந்தர்ப்பம் என் தலைமுறையுடன் வழக்கொழிந்து போயிருக்கலாம். இரண்டாவது அனுபவம் கல்லூரியில் அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியின் ஒருபகுதியாக கற்பிக்கப்பட்ட ஆங்கில கற்பனாவாதக் கவிதைகள். காதலை வாழ்க்கையை விட மகத்தானதாக, மரணத்துக்கு சமானமான பிரம்மாண்டம் கொண்டதாக, சித்தரித்துக் காட்டிய அக்கவிஞர்கள் என் இளம் மனதில் உருவாக்கிய புயல் மிகப் பெரியது. நடுத்தரக் குடும்பப் பழக்கம் காரணமாக என்னால் பெண்களுடன் பழக முடிந்ததில்லை. அப்போது தொடைகள் வெடவெடப்பதும் சிறுநீர் வந்து முட்டுவதும் மூளை ஸ்தம்பித்து போய்விடுவதும்தான் வழக்கம். நாகர்கோவில் கிறித்தவப் பெண்களுக்கு அப்பிரச்சினை இல்லை. சர்ச்சில் பலவகையான மனிதர்கள சந்தித்து பேசும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அவர்களை தொலைவில் நின்று பார்த்து பகற்கனவுகளை நெய்வதே எனக்குச் சாத்தியமானது. ஆங்கில கற்பனவாதக் கவிஞர்களின் உத்வேகம் மிக்க கற்பனைகள் அவற்றுடன் கலக்கையில் மனம் கொள்ளாத ஒரு தனி உலகம் உருவாயிற்று. அதற்குச் சமானமான உலகமே மெளனி எழுதுவது.

மெளனியின் கதாபாத்திரங்களில் பலவற்றுக்கு கலாசாலை மிக முக்கியமான இடம். அவற்றில் பயின்ற நாட்கள் வாழ்வின் திருப்புமுனைகள். காதலும் கலசாலையும் பல இடங்களில் கலந்தே வருகின்றன. கலாசாலையையும் காதலையும் நடுவயதில் நினைவுகூரும் கதாநாயகர்களினாலானது அவரது உலகம். காதலுக்காக ஏங்கிய காதலிக்க முடியாத மன அமைப்பை வளர்ப்பிலிருந்து பெற்றுக்கொண்ட அதனாலேயே காதலை கல்விமூலம் பிரம்மாண்டமாக வளர்த்து பகற்கனவுகளை நிரப்பிக் கொண்டவர்கள் அவர்கள். மெளனி உருவாக்கும் அகஉலகத்தின் புறம் இதுதான் என்றால் அது மிகையல்ல. இப்புறவுலகின் நேரடி வெளிப்பாடுதான் அவரது படைப்புலகம் என்றும் சொல்லவரவில்லை. ஆனால் இவ்விளைநிலத்திலேயே அவரது மனப்பிம்பங்கள் முளைக்கின்றன என்று மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

பகற்கனவுகளின் வெளி

குடும்பத்தேரிலிருந்து இறங்க முடியாத, விரும்பாத, மெளனியின் தயக்கத்தின் விளைவாக அவரிடமிருந்து விலகிப்போனவற்றைப் பற்றிய மனக்கோலங்கள்தான் அவரது கதைகள். மெளனியின் படைப்புலகின் இந்த பகற்கனவுத்தன்மையை எப்படி அவரது முந்தைய வாசகர்கள், விமரிசகர்கள் பொருட்படுத்தாமல் விட்டார்கள் என்பது இன்றும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவரது கதைகளின் தலைப்புகளே பகற்கனவுத்தன்மை கொண்டவை. பிரபஞ்ச கானம், அழியாச்சுடர், நினைவுச்சுழல், பிரக்ஞை வெளியில், மனக்கோட்டை… மெளனியின் கதைக்கருக்களில் மிகப்பெரும்பாலானவை பகற்கனவின் சில பக்கங்கள் என்று சொல்லத்தக்கவை. உதாரணமாக மனைவி நோயுறும்போது சிகிழ்ச்சைக்கு வரும் டாக்டர் மீது கணவன் காதல் கொள்கிறான். மனைவி இறந்து விடுகிறாள். நீண்ட காலம் கழிந்து அவனை சந்திக்கும் டாக்டர் அவனில் மனைவியின் நினைவுகள் நிரம்பியிருப்பதைக் கண்டு அதனாலேயே அவனை மணக்கிறாள். [ சிகிழ்ச்சை] தனியாக இருக்கும் ஒருவன் பக்கத்து வீட்டான் மனைவி தன்னை தேடி வருவாள் என கற்பனை செய்து வந்ததாகவே எண்ணி பரவசமும் பயமும் அடைகிறான் [மனக்கோலம்] இக்கதைகளின் பொதுவான பாணி மெளனியின் எல்லா கதைகளுக்கும் உள்ளது. இக்கதைகளின் நீட்சிகள் என்று சொல்லத்தக்க கதைகள் முறையே பிரக்ஞை வெளியில் மற்றும் சாவில் பிறந்த சிருஷ்டி.பகற்கனவுகளை சொல்லத்தான் மெளனியின் மொழிநடை பெரிதும் பிரயத்தனப்படுகிறது. பகற்கனவுகளின் ஒன்றோடொன்று ஏறிமுயங்கிச்செல்லும் பிம்பங்கள் மற்றும் முரண்பாடுகளினூடாகச் செல்லும் சலனகதி ஆகியவற்றை அவரது பலவீனமான மொழிப்பயிற்சி எதிர்கொள்ளமுடியாமல் போகும்போது உருவாகும் சிக்கலும் தயக்கங்களும் மீறல்களும்தான் அதன் தெளிவற்ற தன்மையை உருவாக்குகின்றன. அவை பகற்கனவுகளை ஊகிக்கச் செய்து வாசகக் கற்பனையைத் தூண்டுவதனால் அந்த பலவீனமான மொழியே கிளர்ச்சியடையவைக்கப் போதுமானதாக உள்ளது. அதாவது மெளனியை வழிபடும் வாசகன் இப்பகற்கனவுலகை மட்டுமே முக்கியமாக கண்டு பிற இலக்கியக் கூறுகளை எல்லா துறக்கச் சித்தமானவன்.

மெளனியின் பெண்கதாபாத்திரங்கள் பூஞ்சையான ஆண்மகனின் பகற்கனவில் உள்ள பெண்கள். ‘ பயங்கர வசீகரம் ‘ என மெளனி அவர்களைப்பற்றி சொல்லும்போது அடிக்கடி குறிப்பிடுகிறார். அவரது பெண்களுக்கு மண்ணில் கால்கள் பதிவதேயில்லை. ஒரு உக்கிர்மான பாடலை பாடி அப்படியே செத்துவிடுபவர்கள் [பிரபஞ்ச கானம்] ஆண்மகனின் துக்கத்தை விரும்பிச் சுமப்பவர்கள் [சிகிழ்ச்சை, பிரக்ஞை வெளியில்] பதிமூன்று வயதில் ஒருவனுக்கு காட்சியளித்த அதே ‘பயங்கர வசீகரத்துடன் ‘ ஒன்பதாண்டுகள் கழித்தும் தோற்றம் கொள்பவர்கள் [அழியாச்சுடர்] ஏன் என்ற வினாவாக மட்டுமே முகத்தோற்றம் கொண்டு புகைச்சித்திரம் போல கலைந்து மறையக் கூடியவர்கள் [ ஏன்] மெளனியின் விபச்சாரிகள் அல்லது தாசிகள் பற்றிய சித்திரத்தில் அவரது ஆண்சார்ந்த பகற்கனவுதன்மையை வெளிப்படையாகக் காணலாம். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மீது மர்மம் நிரம்பிய காதலால் நிரம்பியிருக்கிறார்கள் [உறவு பந்தம் பாசம்] வாடிக்கையாளர்களிடம் உறவுகொண்டு அவர்களுடைய நுண்மையன சஞ்சலங்களை மிகுந்த ஆதுரத்துடன் உள்வாங்கி நெகிழ்பவர்கள்[ குடைநிழல்]

மெளனியின் ஆண்கதாபாத்திரங்கள் இப்பெண்கதாபாத்திரங்களை தங்கள் பகற்கனவுகளில் கண்டு உக்கிரமான பிரக்ைஞைத் ததும்பலை அடைகிறார்கள். பகற்கனவுகளுக்கு ஓர் அடிப்படைக் குணம் உண்டு, அவை அவற்றின் நாயகர்களின் வீங்கிய தன்னகங்காரத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும். தன்னகங்காரம் தன்னளவில் இயங்க முடியாது, ஏனெனில் எந்த சலனத்துக்கும் ஒரு முரணியயக்கமே அடிப்படை. ஆகவே அந்த தன்னகங்காரத்துக்கு எதிரான கோடாக தன்னிரக்கம் உருவாகிறது. இவை இரண்டும் ஒன்றின் வாலை ஒன்று விழுங்கும் பாம்புகள் போல ஒரு முடிவற்ற சுழற்சியில் இயங்குகின்றன. எல்லா பகற்கனவுகளின் உலகிலும் இந்த இயங்கியலே செயல்படுமென நான் எண்ணுகிறேன். மெளனியின் கதாநாயகர்களின் எண்ண அலைகள் இந்த இரு புள்ளிகளிடையே ஊசலாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். மெளனியின் ஆண் கதாபாத்திரங்களைப்பற்றி பேசும்போது பிரமிள் அவர்கள் எப்போதுமே சிவந்த நிறமும் தீர்க்கமான மூக்கும் ஒளிவீசும் கண்களும் கொண்ட அழகர்களாகவே வருகிறார்கள் என்கிறார். இதைப்பற்றி குறிப்பிடும் பிரமிள் இதற்குக் காரணம் மெளனியின் சாதிசார்ந்த பார்வையே என்று முடிவுக்கு வருகிறார். ஆனால் எல்லா பகல் கனவுகளிலும் கனவு காண்பவன் அழகனாகவே வரமுடியும். மேலும் அவனை பெண்கள் நேசிக்காமல் இருக்க முடியாது. அவனை அவர்கள் எல்லையற்ற துன்பத்துக்கும் ஆளாக்குவார்கள், ஏனெனில் அத்துன்பம் இன்பத்தின் பிறிதொரு வடிவம்.

மெளனி கதைகளின் பிராதனமான குணம் தன்னிரக்கம் என்பதை இந்தக் கோணத்தில்தான் புரிந்துகொள்ளமுடியும். தன்னிரக்கம் முற்றிய நிலையில் அர்த்தமற்ற அரற்றலாக மனம் விரிந்து பரவி செல்வதை சொல்லும் இடத்திலேயே மெளனியின் கலை அதன் உச்சத்தைக் கொள்கிறது. தன்னிரக்கத்தை உருவக்கிக் கொள்ள, வளர்த்தெடுக்க அவசியமான சந்தர்ப்பங்களை அவர் கதைகள் உருவாக்கிக் கொள்கின்றன. மரணம், காணாமல் போதல், நீண்டபிரிவுக்கு பின்னான சந்திப்பு, எப்போதைக்குமான விடைபெறல் என. சிந்தித்துப் பார்த்தால் மெளனி கதைகளின் உலகம் நமது முதிரா மனங்களை கொள்ளைகொள்ளுவதற்கெனவே உருவாக்கப்பட்ட எழுத்துக்களின் அதே உலகம்தான். ஆனால் அப்படைப்புகள் ஜோடனைகள், மெளனியோ அவற்றை தன் இதய ரத்தத்தால் தான் எழுதுகிறார். அக்கதைகளில் உள்ள தந்திரங்கள் இவர் உலகில் இல்லை, மாறாக பகற்கனவுகளுக்குரிய மென்மையும் தூய்மையும் கொண்ட பாவனைகள்தான் உள்ளன. அவற்றை தன் வெளிப்பாட்டு முறைமூலம் செறிவு படுத்துகிறார் என்பதே மெளனியின் சாதனை.

மெளனியின் கதைகளைப் பற்றி பேசுகையில் என் நண்பர் மலையாள கவிஞர் பி.ராமன் சொன்ன உவமைதான் நினைவுக்கு வருகிறது. அடியில் தெளிந்தும் மேலே கலங்கியும் இருக்கும் தடாகம். ஆகவே இக்கட்டுரை அடியிலிருந்து மேலே எழுவதாக அமைக்கப்பட்டுள்ளது. மெளனியின் சிறிய புறவுலகிலிலிருந்து விதையிலிருந்து முளைபோல அவரது பகற்கனவின் உலகம் எழுகிறது. அவரது இலக்கிய, தத்துவ வாசிப்பு மற்றும் இசைஞானத்துடன் தொடர்பு கொண்டு வளர்கிறது.

 

 

rbrownin
ராபர்ட் பிரௌனிங்

 

கற்பனாவாதத்தின் பின் தூறல்

மெளனி கதைகளின் பாழ்பட்ட வசீகரம் பற்றி விதந்தோதியவர்களில் எவருமே பிரிட்டிஷ் கற்பனாவாத கவிஞர்களுடன் அவருக்கு இருந்த உறவை ஏன் கவனிக்கவில்லை என்ற ஆச்சரியம் என்னை மீட்டுகிறது. மெளனியின் உலகுக்கு முதல் முன்னோடித்தளம் அதுதான். இலக்கிய விமரிசன ரீதியாக மெளனி கதைகளில் வரும் அந்தக் காதலை நாம் மேற்கத்தியக் கலைச்சொல்லான ‘ பிளாட்டானிக் லவ் ‘[Platonic Love] என்ற சொல்லால்தான் விவரிக்க முடியும். அச்சொல்லிலிருந்து நீண்டு அவர்கள் எளிதில் பிரிட்டிஷ் கற்பனாவத்க் கவியுலகை அடைய முடியும். ஏன் அடையவில்லை ?

நமது அகதுறை மரபு மிகப்பெரியது, ஒப்பிடும்போது மேற்கத்திய காதல்கவியுலகு சிறிதுதான். ஆனால் மெளனியை அது எவ்வகையிலும் பாதித்திருப்பதாக தெரியவில்லை. நமது அகமரபின் சிறப்பியல்புகள் என்ன ? இங்கே ஆண் பெண் இருவருமே சமானமான காம வேகத்துடன் உள்ளனர். இரண்டு அது மனமும் உடலும் ஒரேசமயம் பங்கெடுக்கும் ஒரு நிகழ்வு. ஆகவே நமது அகப்பாடல்களில் திரிபுநிலைக் காதல்கள் மிகக் குறைவு. கைக்கிளை பெருந்திணை என்ற இரு புறத்திணைகளுக்குள் அவை ஒதுக்கி நிறுத்தப்பட்டன. நமது அகத்துறைப்பாடல்களில் மனமும் இயற்கையும் ஒன்றையொன்று சரிசமமாக பொருள்படுத்துகின்றன., மனதின் உணர்வுகள் இயற்கையின் தோற்றங்களாகின்றன, ஆகவே மனம் இயற்கையின் படிமங்களினாலானதாக உள்ளது. அதாவது ஆணும் பெண்ணும், மனமும் உடலும், அகமும் புறமும் சரிசமானமாக இடம் பெறும் ஓர் உலகம் அது. அதன் இயல்பு சமநிலைதான் .அதனாலேயே அதில் எதுவுமே கட்டற்று பாய்வதில்லை .நமது அகமரபை செவ்வியல்தன்மை கொண்டது என்று வகுத்துக் கூறலாம். அதை தொடர்ந்து வந்த காப்பியங்களிலும் இதே செவ்வியல் தன்மை நீட்சி பெறுகிறது. நமது பக்தி இலக்கியங்களில்தான் அந்தச் செவ்வியல் சமநிலை இல்லாமலாகிறது. உணர்ச்சிகளின் பீரிடல் நிகழ்கிறது. அப்போதுகூட அவை கற்பனாவாதத்தின் கட்டற்ற தன்மையை கொள்ளவில்லை. அவற்றின் அடித்தளமாக சங்கச்செவ்வியலின் கடிவாளம் இருந்தபடியேதான் உள்ளது.

மெளனியின் காதலில் உடல் இல்லை. புறம் இல்லை, அகவுலகம் மட்டுமே தெரிகிறது. ஆணின் காமம் மட்டும்தான் அது . ஆகவே அது ஒரு திரிபு நிலைக் காதல் மட்டுமே. அந்த உத்வேகமே அதன் இயல்பு மீறிய நிலையிலிருந்து உருவானது தான். இந்த தீவிரத்தினை நாம் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளில்தான் அதிகமும் காண முடிகிறது . பிளாட்டானிக் காதல் என்பதை இப்படி வரையறை செய்யலாம். பிளேட்டோ தன் உரையாடல்களில் [சிம்போசியம்] சொன்னதன்படி ஒவ்வொன்றுக்கும் அதன் உச்ச இலட்சிய வடிவம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு பொருளும் கருத்தும் அந்த உச்ச வடிவின் முழுமையற்ற பிரதிகளே. அப்படியானால் ஒரு தனிநபரின் அழகிலிருந்து தொடங்கும் காதலானது உண்மையில் பொதுவாக மனித அழகு நோக்கி விரிகிறது. பிரபஞ்சம் முழுக்க நிரம்பியுள்ள அழகு என்ற கருதுகோளை நோக்கி பரவுகிறது. அந்த கருத்தின் உச்ச எல்லை நோக்கியே அது சென்று முழுமை கொள்கிறது. உடலழகு, மன அழகு, ஆன்மீக அழகு, மீட்பு என ஒரு உருவகத்தை பிளேட்டோ உருவாக்குகிறார் என கூறலாம்.. இந்த கோணத்தில் ஆண் பெண் உறவினை பார்ப்பதே பிளாட்டானிக் காதல். அது போக நுகர்வு , பிள்ளைப்பேறு போன்ற இலக்குகள் அற்றது. அதாவது அது ‘மிருக ‘ அம்சம் அற்ற காதல். எனவே உடலில் இருந்து விடுபட்டது. அகம் சார்ந்தது மீட்பை நோக்கமாக கொண்டது. பைரன், டென்னிசன், ஷெல்லி போன்ற கவிஞர்களின் உலகம் இத்தகைய காதலை முக்கிய பாடுபொருள்களில் ஒன்றாக கொண்டது. இது அவர்களுடைய கவித்துவ நோக்குக்கு — கவிதை என்பது வலிமையான உணர்வுகளின் பொங்குதல் என்ற கோணத்துக்கு — முற்றிலும் ஒத்துப் போகிறது. சென்ற தலைமுறையில் இவை நம் கல்லூரிகளில் அதிகமாக கற்பிக்கப்பட்டன என எண்ணுகிறேன், அதிகமாக படிக்காத என் அப்பாகூட இவர்களை அறிந்திருந்தார் . இவர்கள் அக்கால இளம் மனங்களில் வலுவான பாதிப்பை உருவாக்கியிருக்க வேண்டும். மெளனியிலும்.

மெளனியின் கதைகள் கவிதைக்குரிய மொழிவழி தருக்கத்தையே கொண்டிருக்கின்றன. கதைகளுக்குரிய நிகழ்ச்சித் தருக்கத்தையல்ல. மெளனி கதைகளின் சிறபியல்பு அவற்றின் பாவியல்பு [Lyrical Nature] என்று சொல்லலாம் . அவரது மொழிநடையை ஆராயுமிடத்து இது விரிவாக பேசப்படும். இது பிரிட்டிஷ் கவிதையின் பாதிப்புள்ள நடைதான். குறிப்பாக ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ? ‘ ‘காலத்தை கனிந்த காதலுடன் கட்டித்தழுவினாலும் நழுவிசென்றபடியேதான் இருக்கும் ‘ ‘ஆழித்தண்ணீரில் எல்லை பிரித்து கோடிட்டதுதான நம் வாழ்க்கை ? ‘ போன்ற அவரது புகழ்பெற்ற வரிகளுக்கு ஊற்றுமுகம் அதுதான். இவற்றுக்கு சமானமான பல வரிகளை நாம் ஜான் டன் போன்ற ,மீமெய்மை கவிஞர்களின் படைப்புகளிலும் டென்னிசன் பிரவுனிங் போன்ற கற்பனாவாதக் கவிஞர்களின் கவிதைகளிலும் காணமுடியும்.*1 இவ்வரிகள் அவற்றின் புனைவுத்தன்மையாலோ, தத்துவ விவேகத்தாலோ அடையாளப்படுத்தப்பட்டவை அல்ல. அவற்றில் உணர்ச்சிப்பாடல்தன்மையினால்தான் முக்கியமாகின்றன. மெளனி கதைகள் இன்று முக்கியப்படுத்தப்படுவதன் காரணமும் அவற்றின் மொழியில் ஊடாடும் அந்த உணர்ச்சிகர அரற்றல் தன்மையினால்தான். உதிரி வரிகளாகவும் பிம்பங்களாகவுமே மெளனி நம் நினைவில் நிற்கின்றார்.

மெளனி கதைகளில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ‘பாழ்பட்ட வசீகரம் ‘ . ‘பயங்கர அழகு ‘ போன்ற வருணனைகளுக்குரிய படைப்புலகம் உண்மையில் ராபர்ட் பிரெளனிங்கின் கவியுலகம்தான். பிரெளனிங்கைபேசாமல் மெளனியைப்பற்றி பேசவே முடியாதென்றே எனக்குபடுகிறது.

ராபர்ட் பிரெளனிங் விக்டோரிய யுக கவிஞர்களில் முக்கியமானவர். நாடகீயத்தன்னுரை என்ற வடிவில் உச்சங்களை சாத்தியமாக்கியவை அவரது கவிதைகள்.கதாபாத்திரங்கள் நேரடியாக தன் மன ஓட்டங்களை சொல்வதோ நினைப்பதோ ,அவர் கவிதைகளில் மிகுந்த உணர்ச்சிப்பாங்குடன் வெளிப்படுகிறது. அறிவார்ந்த தன்மைக்கு எதிரான உணர்ச்சிகரத்தை ஆழ்மனதின் நேரடி வல்லமையை நம்பிய கவிஞர் பிரெளனிங். இந்த தேட்டத்தை மனிதனின் ஆதி மூர்க்கம் வரை கொண்டு சென்றவர். ஒருவகையில் பிற்கால மீ -மெய்மை [சர்- ரியலிச ] ஆக்கங்களின் முன்னோடியும் அவரே. பிரெளனிங் அவரது காலகட்டத்தின் கவிஞர்களான ஷெல்லி , கீட்ஸ், டென்னிசன் ஆகியோரிடம் ஒன்றுபடுவது அவரது கவிமொழியின் கட்டற்ற உணர்ச்சிகரத்தால்தான். ராபர்ட் பிரெளனிங்எழுதியவை கவிதைக் கதைகள்[dramatic lyric] என்றால் மெளனி எழுதியவை கதைக்கவிதைகள். ராபர்ட் பிரெளனிங் தன் பல கவிதைகளில் பெண்மையின் புதிரையும் மரணத்தின் பயங்கரத்தையும் காதலின் நிச்சயமின்மையுடன் இணைத்து புகைமூட்டமான ஒரு புனைவுலகை படைக்கிறார். ராபர்ட் பிரெளனிங் கதைக் கவிதைகளின் பெரும்பாலான இயல்புகள் மெளனி கதைகளில் உள்ளன, ஆனால் பிரவினிங் கவிதை உருவாக்கும் ஒரு பிரமிப்பை மெளனி உருவாக்கவில்லை என்பது என் அனுபவம்.

பிரவுனிங்கின் கவிதைகள் மெளனி எழுதிய சூழலில் பெரிதும் கவனிக்கப்பட்டு பேசப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. புதுமைப்பித்தன் பிரவுனிங்கின் கவிதைகளை தழுவி மூன்று கதைகளை எழுதியுள்ளார். பிரவுனிங்கின் என் கடைசி சீமாட்டி [My Last Dutches] என்ற கவிதை தமிழில் மொழிபெயர்க்கட்டிருப்பதாக எம் .வேதசகாயகுமார் குறிப்பிட்டுள்ளார் . தன் கடைசி சீமாட்டியின் சுவர் ஓவியத்தைக் காட்டி ஒரு நிலப்பிரபு [ Duke of Ferrara] அனேகமாக அவரது அடுத்த மனைவியை சேர்ந்த ஒருவரிடம் அல்லது அந்த ஓவியத்தை வாங்க வந்த ஒருவனிடம் சொல்வதுபோன்ற உணர்ச்சிப்பாங்கில் அமைந்த பிரவுனிங்கின் கவிதை மெளனி கதைகளுக்குரிய அதே உலகில் உள்ளது. சீமாட்டியின் முகத்தில் தெரியும் இனம் புரியாத மலர்ச்சியும் துக்கமும் அவள் இறந்த பிறகும் பிரபுவை தொடர்கின்றன. அவள் உயிர் வாழ்ந்தபோது சீமாட்ட்க்குரிய கம்பீரத்துடன் நடக்கவில்லை , தன்னை விட கீழானவர்களுடன் பழகினார் என்கிறார் பிரபு. அந்த ஓவியத்தை வரைந்த ஓவியனுடன் சீமாட்டிக்குள்ள உறவா அம்மலர்ச்சிக்கு காரணம் என ஐயம் கொள்கிறார். அவளை கொலைசெய்யும்படி உத்தரவிடுகிறார் என்பது கதை. ஆனால் கவிதையின் உணர்ச்சிகர தன்னுரையின் தயக்கமும் உத்வேகமும் மாறி மாறி வரும் சொற்பரப்பில் இது தெளிவாக இல்லை. ‘ அந்த தீவிரப் பார்வையின் ஆழமும் உணர்ச்சிவேகமும் ‘ *2 என்ற வரியில்தான் கவிதையின் ஜீவன் உள்ளது. இறந்து பல்லாண்டுகளாகியும் பிரபுவை அந்த ஓவியம் பார்த்துக் கொண்டிருக்கிறது எனும்போது அது எங்கே வரையப்பட்ட ஓவியம் என்ற வினா எழுகிறது. மெளனியின் கதைகளில் இதற்கு சமானமான பல வரிகளைக் காணலாம். ‘பயங்கர வசீகரம் தோன்ற இருந்த ‘ ‘ கண்களைப்பற்றி மெளனி அடிக்கடி சொல்கிறார்.

பிரவுனிங்கின் கவிதைகளின் புலன்மயக்கதன்மையை மெளனியிலும் காணமுடிகிறது. பல கவிதைகளில் பிரவுனிங் கவிதையின் நிகழ்வுகள் நடப்பது கதாபாத்திரங்களின் நனவிலா பிரமையிலா என்ற ஐயத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகிறார். ஆரம்பத்திலேயே கவிதையை புலன்மயக்கத்தன்மையுடன் உண்மையிலேயா நடந்ததா என அறியாமல் தொடங்கி தடுமாறி நகரும் உணர்ச்சிகர வரிகள்மூலம் முற்றிலும் இருண்மையான உலகில் சென்று சேர்வது அவரது பாணி. பிரவுனிங்கின் பிரபல கவிதையாகிய ஃபோர்பிரியாவின் காதலன் [ Porphyria ‘s Lover ] மர்மம் மிக்க ஒரு கதை. தன் காதலியை காதலினாலேயே ஓர் அணைப்பின் உச்சநிலையில் அவள் கூந்தலினால் மும்முறை கழுத்தை சுற்றி நெரித்துக் கொல்கிறான் காதலன். ஏன் என்று கவிதை குறிப்பிடவில்லை. காமமும் , உடைமையுணர்வும், காதலின் பூரணம் பற்றிய ஒரு கனவும் அதற்குக் காரணமாகின்றன. ‘அவள் கண்களைப்பார்த்தேன். உவகையும் பெருமிதமும். இறுதியில் அறிந்தேன் ஃபோர்பிரியா என்னை காதலித்தாள். வியப்பு என் இதயத்தை விம்மச் செய்தது என்ன செய்வதென நான் உழன்ற போது அது வளர்ந்தது. அக்கணம் அவள் என்னவள். என்னவள். அழகி, முற்றிலும் தூயவள். அப்போது செய்வதற்கு ஒன்றைக் கண்டுகொண்டேன். அவளது நீண்ட பொன்னிறக் கூந்தலை ஒரு சரடாக்கி அவள் மெல்லிய கழுத்தில் மும்முறை சுற்றி இறுக்கினேன். எந்த வலியுமில்லை. எனக்குத்தெரியும் அவள் வலியையே அறியவில்லை! ‘ *3 என அவன் சொல்லுகிறான்

மரணமும் காதலும் சந்திக்கும் புள்ளிீயையும் , மனமும் ஆழ்மனமும் முயங்கும் பிரமைநிலையையும் பொதுவாக நாம் பிரிட்டாஷ் கற்பனாவாதக் கவிஞர்களிடமெல்லாம் காணமுடிகிறது. பிரவுனிங்கில் மேலும் மூர்க்கமாக. இதை புரிந்துகொள்ள பிளாட்டானியக் காதலின் இயல்பை கூர்ந்து கவனிக்கவேண்டியுள்ளது .அது ‘சதையை ‘ தவிர்த்துவிடுகிறது. அழகனுபவமாகவும் ஆழமான அகநிகழ்வாகவும் காதலை வகுக்கிறது.பிரவுனிங்கே வகுத்ததுபோல அழகனுபவத்தில் துவங்கி கடவுள் வகுத்த அனைத்தையும் நோக்கி செல்லும் உன்மத்த நிலையை அது தொட முயல்கிறது.* 4 ஆகவே காதலுக்குரிய பற்பல வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் ,அச்சந்தர்ப்பங்கள் வழியாக உருவாகும் முரண்கள் அதற்கு இல்லாமல் போகின்றன. அது உச்ச அனுபவமாக கற்பனை மூலம் பெரிது படுத்தப்படும்போது மானுடத்தின் மற்ற அடிப்படைநிலைகளான இயற்கையின் சிறு பகுதியாக உணர்தல், மரணம் மற்றும் வாழ்வின் நிலையின்மை ஆகியவற்றுடன் மட்டுமே அதை தொடர்புகொள்ள செய்யமுடிகிறது. அதாவது காதல் ஓர் பருண்மை அனுபவமாக அன்றி , ஓர் கருத்துநிலை அனுபவமாக மாற்றப்படும்போது மானுட மனதின் மற்ற அடிப்படை கருத்துநிலைகளுடன் மட்டுமே அது உறவாட முடிகிறது. இயற்கை, மரணம் அல்லது பிரிவு ஆகியவற்றால் செறிவுபடுத்தப்பட்ட காதலனுபவங்கள் பிளாட்டானியக் காதல் கவிதைகள்.

இன்று வரை நமது காதல் கவிதைகளில் பிளாட்டானிய காதலே செல்வாக்கு செலுத்திவருகிறதென்பதை இன்றைய புதுக் கவிதையை படித்தால் உணர முடியும். நமது அகத்துறையின் பாதிப்பு ஏனோ நவீன காதல் கவிதைகளில் மிக மிகக் குறைவு. அதற்கான காரணங்கள் விரிவாக ஆராயத்தக்கன. ஆனால் முக்கியமான காரணம் என எனக்கு படுவது உடல் கிடைப்பதற்கரியதாக இருக்கும் சமூகச் சூழ்நிலைதான் என. உதாரணமாக இப்போது காதல் பற்றி எழுதப்படுகிறது, களவு பற்றியும் பரத்தமை பற்றியும் கவிதைகள் எழுதப்படுவதே இல்லை .கிடைக்காத பெண்ணுடல் , நிறைவேறாத அகவயக் காமம் பகற்கனவுகளில் பெருகி பேருருவம் கொள்வதையே நாம் நமது காதல்கவிதைகளில் காண்கிறோம். உயர்ந்த ரக உதாரணமாக பிரமிள் மற்றும் யூமா வாசுகியின் கவிதைகளைச் சொல்லலாம் . ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்தது ஒரு சங்கு ‘ , ‘இரவுகளின் நிழற்படம் ‘ ஆகிய கவிதைத் தொகுப்புகள் முன்வைக்கும் பல கவிதைகள் பிளாட்டானிய காதலின் அதே மனநிலையை , இலக்கணத்தை கொண்டிருப்பதைக் காணலாம். மெளனி இந்த படைப்புக் கூறின் முதற்கட்ட உதாரணம். அவரது பாவியல்பு ஒரு துவக்கப்புள்ளி .

ஆனால் பிளாட்டானிய இலட்சியக் காதலானது ‘அழகனுபவத்தினூடாக மீட்பு ‘ என்ற கனவை உள்ளடக்கியது . மெளனியின் கதைகளில் ‘பிரபஞ்ச கானம் ‘ மட்டுமே அந்த இயல்பை துல்லியமாகச் சொல்கிற கதை. மற்ற கதைகளில் மீட்புக்கு பதிலாக சரிவுதான் அடையாளப்படுத்தப்படுகிறது. வெறுமை. மெளனியின் சொற்களில் ‘பாழ் ‘ . இந்த புள்ளி மெளனியின் நவீனத்துவ சார்பிலிருந்து பெறப்பட்டது.

 

 

[மேலும் ]

முந்தைய கட்டுரைபுதிய கடவுள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44