‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51

[ 5 ]

அடுமனைப்பணி உடலின் அனைத்துத் தசைகளையும் களைப்படையச் செய்வதாக இருந்தது. முதல்நாள் புலர்காலை எழுந்ததுமே அடுமனை ஒரு பூசல்களம்போல ஒளியும் ஓசையுமாக இருப்பதை தருமன் கண்டார். எழுந்துசென்று நீராடி வருவதற்குள் அங்கே வேலை நெடுநேரம் கடந்திருந்தது. அடுமனை உதவியாளர்கள் ஒவ்வொருவரும் எதையோ மறந்துவிட்டுத் தேடுபவர்கள்போல, எங்கோ செல்ல விழைபவர்கள் போல, எதையோ முடித்துவிட்டு கிளம்புபவர்கள் போல வெறிகொண்டு சுழன்றனர்.

அங்கிருந்த பெருந்திரளில் அவர்கள் தங்களுக்குத் தேவையானவர்களை மட்டுமே நோக்கினர், பேசினர். கைகளின் வீசலாக கால்களின் அசைவாக அவர்கள் நிறைந்திருந்தனர். சிலகணங்களில் அவர்கள் மறைந்து கலங்களும் அகப்பைகளும் சட்டுவங்களும் தங்கள் விருப்பப்படி முட்டி மோதி ஒலித்து முழங்கி முனகி சுற்றிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தருமன் என்ன செய்வதென்றறியாமல் தயங்கியபடி நின்றிருந்தார். அவரை எவரும் கருத்தில்கொள்ளவில்லை. பீமன் அங்கே நீர்ப்பரப்பில் ஒரு சுழி எனத்தெரிந்தான். அவனை நோக்கியே மானுடரும் கலங்களும் சென்றன, அவனிலிருந்து விலகி வளைந்து ஓடின. அப்பால் இன்னொரு சுழியாக பிரபவர் தெரிந்தார்.

தன்னைச் சூழ்ந்து செல்லும் உடல்களுக்கு விலகி விலகி வழிவிட்டு சுவர் ஓரமாகவே சென்று அசையாமல் நின்றார். அர்ஜுனன் காய்களை நறுக்குமிடத்தில் நான்குவகையான கத்திகளுடன் பணியாற்றிக்கொண்டிருந்தான். அவன் கைகளால் காய்களும் கிழங்குகளும் சீரான துண்டுகளாக மாறி அப்பால் குவிந்தன. நகுலன் பொருட்களை சீராகப் பிரித்து அடுப்புகளுக்கு கொடுத்தனுப்பினான். சகதேவன் அடுமனைக் களஞ்சியத்தில் அமர்ந்து எடுக்கப்படும் பொருட்களை கட்டுப்படுத்தினான். அவர்கள் எவரும் அவர் வந்ததை அறியவில்லை. அவர்களின் கைகள் தாங்களே இயங்க விழிகள் அவற்றுடன் இணைந்து கொண்டன. எங்கிருக்கிறோம் என்பதையே அவர்கள் உணரவில்லை.

வெளியே முந்தையநாள் இரவெல்லாம் வந்துகொண்டிருந்த வணிகர்களும் அந்தணரும் காலையிலேயே எழுந்து நீராடி நீர்வணக்கங்களை முடித்து ஊண்மனைக்குள் குழுமிக்கொண்டிருந்தனர். மைத்ரியக்காட்டின் மரக்கூட்டங்களுக்கு அப்பால் வைதிகர் அமைத்திருந்த வேள்விச்சாலைகளில் புலரியின் எரிகொடை முடிந்து மங்கல வாத்தியங்கள் முழங்கத்தொடங்கின. “விரைவு! விரைவு!” என சரிவிறங்கும் குதிரைப்படைபோல அடுமனை முழங்கிச் சென்றுகொண்டிருந்தது.

தருமன் மெல்ல நகர்ந்து அருகே கலங்களை மூடும் பெரிய செம்புத்தட்டுகளை கழுவிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஒருவரிடமிருந்து அதை வாங்கினார். ஒருவர் அவரிடம் “அங்கே என்ன பார்வை? மூன்றாவது அடுப்பு… மூன்றாவது அடுப்புக்குப் போ” என்றார். அவர் அதை அங்கே கொண்டுசென்று வைத்து மீள்வதற்குள் மறுபக்கம் மேலும் தட்டுகளுடன் வந்தவர் “விரைவு… விரைவு!” என்றார். தருமன் ஓடிச்சென்று அதை வாங்கிக்கொண்டார். “நாலாவது அடுப்பு… விரைவு!”

நூற்றுக்கணக்கான அடுப்புகளில் தழல்கள் நின்றாடின. அவற்றின் மேலிருந்த செம்புக்கலங்கள் அனல்கொண்டு மெல்லிய விரிசல்மணி ஓசையுடன் செந்நிறமாயின. அவற்றில் குழம்புகளும் அவிநீரும் கொதித்து குமிழியுடைந்து தெறித்தன. வெல்லப்பாகு உருகும் மணம். கிழங்குகள் வேகும் மணம். காய்கறிகளின் கறைமணம். வெந்த அன்னம் பெரிய மரசல்லரிகளால் அள்ளி விரிக்கப்பட்ட ஈச்சம்பாயில் குவிக்கப்பட்டது. அதிலிருந்து எழுந்த புதுஅன்னத்து வெந்தமணம் பிற அனைத்து மணங்களையும் அள்ளி தன்மேல் சூடிக்கொண்டது. ஓர் இடத்தில் நசுக்கப்பட்ட சுக்கின் மணம் கூரிய ஊசி என மூக்கை குத்தியது. தட்டுகள் வந்துகொண்டே இருந்தன. தோள்கள் கடுத்தன. கெண்டைக்கால் தசைகள் இழுபட்டு வலிதெறித்தன.

“அங்கே, விளம்புகலங்கள்!” என ஒருவர் தருமனை நோக்கி கூவினார். “பரிமாறவேண்டியதுதான்! உடனே!” என இன்னொரு குரல். அவர் விளம்புகலங்களை நோக்கி ஓடினார். அப்பால் ஓடைநீரில் கழுவப்பட்ட கலங்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றைக் கொண்டுசென்று நிறைகலங்கள் அருகே அடுக்கினார். அவற்றில் குழம்புகளையும் அன்னத்தையும் அப்பங்களையும் அள்ளிக்கொண்டு விளம்புகாரர்கள் பந்திகளுக்குச் சென்றனர். “குடிநீர் தொன்னைகள்!” என கூச்சலிட்டபடி ஒருவர் அன்னப்பந்தலில் இருந்து ஓடிவந்தார். தருமன் ஓடிச்சென்று தொன்னைகளை கலவறையிலிருந்து பெற்றுக்கொண்டு அன்னப்பந்தல் நோக்கி சென்றார். “விரைவு… இன்னும் கால்நாழிகையில் முதல்பந்தி!”

அவருடன் எட்டுபேர் வந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணவில்லை. எறும்புகள் போல தலைஎதிர் வந்ததும் ஒற்றைச்சொல் உரைத்து விலகினர். பந்தலில் நீண்ட எட்டு நிரைகளாக ஈச்ச ஓலைப்பாய்கள் சுருள் நீட்டி விரிக்கப்பட்டன. ஆறுநிரை சிவப்பும் இருநிரை வெண்மையும். பாய்களின் அருகே தைக்கப்பட்ட காட்டிலைகள் விழுந்து நீண்டு இலைமாலை போல எழுந்தன. தொன்னைகளில் குடிநீர் வைக்கப்பட்டது. விளம்புபவர்கள் எதையும் எண்ணாத கையுறுதியுடன் பணியாற்றினர். முதலில் உப்பு. பின் இனிப்பு. அதன்பின் ஒரு கனி. எளிய தொடுகறிகள். ஒவ்வொரு இலையும் வண்ணப்பொட்டுகள் கொள்ள நீண்ட இலைமாலையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது. இளம்பச்சை இலைத்தொடர் வண்ணமலர்மாலை என ஆகியது.

“பந்தி அழைப்பு!” என்றார் ஒரு விளம்புகாரர் ஓடியபடியே. ஒருவர் தருமனை நோக்கி “முதியவரே, பந்தியழைப்பு!” என்று கூவிவிட்டு தொன்னைகளுடன் சென்றார். ஒருகணம் தயங்கிவிட்டு தருமன் வெளியே சென்று அங்கே கூடிநின்று கலைந்த பேரோசையென பேசிக்கொண்டிருந்த கூட்டத்திடம் கைகூப்பி “விருந்தினர்களே, அன்னம் உண்ண வரவேண்டும்… எங்களை வாழ்த்துகொள்ளச் செய்யவேண்டும்” என்றார். ஓர் இளைஞன் சென்று மரத்தாலான மணியை அடித்தான். அவ்வொலி கேட்டதும் அவர்கள் ஒருவர் இன்னொருவரை அழைத்துக்கொண்டு இயல்பாக ஒதுங்கி எட்டு நிரைகளாக அணி வகுத்தனர்.

முதலில் முதியவர்களும் இறுதியாக இளையோருமென அமைந்த அந்த நிரையின் தலையில் நின்றிருந்த முதியவரை பிரபவரின் முதிய மாணவர் ஒருவர் கால்தொட்டு சென்னி சூடி “வந்து அமர்க, மூத்தவரே!” என்றார். அவர் தலைதொட்டு வாழ்த்தியபின் உள்ளே சென்றார். தருமனும் இன்னொரு நிரை நின்ற முதியவரின் கால்தொட்டு பணிந்து உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். எட்டு நிரைகளாக உள்ளே வந்தவர்கள் ஓசையின்றி உடை சுருட்டி கால்மடித்து அமர பூவும் சருகுமாக நீர்நிறையும் வயல்போல அன்னசாலை வடக்குமூலையிலிருந்து நிரம்பியபடி வந்தது.

ஒருவர் “ஏன் இங்கே இத்தனை ஆட்கள்? கலங்கள் எங்கே?” என்றார். தருமன் “இதோ” என்று அடுமனை நோக்கி ஓடினார். அங்கே அடுப்பிலிருந்து அடுகலங்களை காதுகளில் கயிறு கட்டி மூங்கில் ஊடே கொடுத்து தூக்கி ஊன்றுகோல் நாட்டி மெல்ல அசைத்து அப்பால் இறக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் உழைப்புக்கூச்சல் கூரையை முட்டியது. வியர்வை வழியும் முதுகுடன் பீமன் ஒருவனாகவே ஒரு செம்புக்கலத்தை தூக்கி இறக்கிவைத்தான். “மேலும் தட்டுகள்!” என ஒருவர் தருமனை நோக்கி கூவ அவர் ஓடை நோக்கி ஓடினார். “கலங்கள் உடனே வேண்டும்… இரண்டாம்நிலை உணவுகள் சென்றுகொண்டிருக்கின்றன! யாரங்கே?”

பிரபவர் வெளியே சென்று ஓடையருகே நின்று உடலில் இரண்டு தொன்னை நீரை அள்ளிவிட்டு வியர்வையை கழுவிக்கொண்டு இன்னொரு மரவுரி ஆடையை அணிந்தபடி பந்திநோக்கச் சென்றார். அவருடன் சென்றபடி அவருடைய முதன்மை அணுக்கன் “எட்டுநிரைகள், நாநூற்றி எழுபத்தெட்டு இலைகள்… முதல் ஆறு நிரைகள் இரவுண்ணா அருகநெறியினர். ஆகவே அன்னமே போட்டுவிடலாமென எண்ணம்” என்றபடி அவருடன் சென்றார். அவர் தருமனை அறியா விழிகளுடன் நோக்கியபடி கடந்துசென்றார். ஊண்புரைகளில் கலங்கள் முட்டும் ஒலியும் உணவு கலங்கும் ஓசையும் மெல்லும் மூக்குறிஞ்சும் இருமும் கனைக்கும் ஓசைகளுடன் கலந்து ஒலித்தன. உண்ணும் ஒலி. அதை அவர் அப்போதுதான் கேட்பதாக உணர்ந்தார். அப்படி ஓர் ஓசை உலகில் உண்டென்றே அறிவதுபோல.

தருமனை நோக்கி வந்த ஒருவர் “தொன்னைகளும் இலைகளும் பந்திக்குச் செல்லவில்லை!” என்று கூவியபடி அகப்பைகளுடன் ஓடினார். தருமன் தொன்னைகளையும் இலைக்கட்டுகளையும் கொண்டுசென்று ஊண்நிரைகளுக்குப் பின்னால் நின்றிருந்த விளம்புகாரர்களுக்கு கொடுத்தார். “சுக்குநீர்! சுக்குநீர்!” என ஒரு குரல் எழுந்தது. அவர் ஓடிச்சென்று சுக்குநீர்க் குடங்களை தோளில் சுமந்துகொண்டுவந்து வைத்தார். அவை கொதித்துக்கொண்டிருந்தன. கரிந்த வாழையிலைகளைச் சுருட்டிவைத்து தோளில் ஏற்றிக்கொண்டபோதும்கூட தளும்பி தோளில் சொட்டி விதிர்க்கச்செய்தன.

“மறுபக்கம் அமர்வுக்கொட்டகைகளுக்கு வெற்றிலைச்சுருளும் நறுமண வாய்மங்கலங்களும் செல்லட்டும்… இதோ எழப்போகிறார்கள்” என்றபடி ஒருவர் அவரைக் கடந்து ஓடினார். வாய்மங்கலங்களை வெளிக்கொட்டகைக்குள் கொண்டுசென்று அடுக்கிவிட்டு அவர் வரும்போது ஓசையாலேயே முதல்பந்தி முடிந்தது தெரிந்தது. நிறைவான ஏப்பங்களும் மூச்சொலிகளும் எழுந்தன. முதியவர் ஒருவர் மெல்ல கனைத்ததும் அனைவரும் நிரையென எழுந்தனர். தொலைவிலிருந்து பார்த்தபோது அலையொன்று எழுவதுபோல் தெரிந்தது. அவர்கள் ஆடை கலையும் ஒலிகளுடன் எதுவும் பேசாமல் வெளிப்பாதையில் நடந்து கைகழுவும் ஓடையை நோக்கி சென்றனர்.

எச்சில் கைகளை இடைக்குக் கீழாக நீட்டியபடி நிரையாகச் சென்று தோண்டிகளிலும் தொன்னைகளிலும் நீரள்ளி அப்பால் சென்று கழுவினர். கழுவப்பட்ட நீர் வழிந்து அங்கே பாத்திகளாக விரிந்துகிடந்த கீரைக்கொல்லை நோக்கி சென்றது. கலந்து உண்ணப்பட்டதுமே உணவின் மணம் எச்சிலின் மணமாக ஆகிவிட்ட விந்தையை அவர் உணர்ந்தார். எச்சில் இலைகள் சீராக மடிக்கப்பட்டு கிடந்தன. இலைகளை எடுப்பவர்கள் பெரிய கூடைகளுடன் வந்தனர். “விரைவு! இலையகற்றுக!” என கூவியபடி ஒருவர் அப்பால் சென்றார். தருமன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.

முதல் இலையைத் தொட்டு வணங்கியபின் எடுத்து கூடையிலிட்டார். இருபக்கமும் கை நீட்டி இலைகளை எடுத்து கூடையிலிட்டபடியே சென்றார்கள். இலைகள் நிறைந்ததும் கூடைகளைத் தோளிலேற்றி வெளியே கொண்டுசென்று அங்கே நின்றிருந்த அத்திரிகளின் மேல் கட்டினர். அவை கால்மாற்றி எடை ஏற்றுக்கொண்டபின் தும்மி பிடரி சிலிர்த்து சரிவிறங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் சென்றன. தருமன் அடுமனைக்குள் சென்று அங்கிருந்து வந்த முதுமாணவரிடம் “பெரும்பாலும் கீரைக்கூட்டு இலைகளில் எஞ்சியிருந்தது. கிழங்கு அப்பமும் ஓரளவு எஞ்சியிருந்தது” என்றார். “கீரையையும் கிழங்கையும் நோக்குக!” என அவர் அடுமனையாளர்களுக்கு ஆணையிட்டார்.

“இரண்டாம்பந்தி தொடங்குகிறது, வெயில் எழுவதற்குள் மூன்றாம் பந்தி முடிந்தாகவேண்டும்” என்று ஆணை ஒன்று ஒலித்தது. “குந்திரிக்கம் செல்க!” என்று ஒருவர் ஒரு பொட்டலத்தை அளித்தார். தருமன் பந்திக்கு ஓடினார். “குந்திரிக்கமா?” என ஒருவர் அதை பெற்றுக்கொண்டு இலைகளும் பாய்களும் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்ட பந்தியில் புகையிட்டு உணவுமணத்தை அகற்றினார். உணவுச்சிதறல்களுக்காக தேடிவந்திருந்த ஈக்களும் அகன்றன. “அடுத்தபந்தி தொடங்குகிறது. இலைகள், தொன்னைகள்!” என்றார் ஒருவர். தருமன் மீண்டும் அடுமனை நோக்கி ஓடினார். அவர் எதிரே நகுலன் ஒரு பொதியுடன் வந்து கடந்துசென்றான்.

இலைப்பொதிகளை கொண்டுசென்று முடித்ததும் அடுமனையாளர் அவரிடம் “நான்காம்பந்திக்கு மேலும் கிழங்குகள் தேவைப்படும்” என்றார். அவர் சென்று அர்ஜுனனிடம் அதைச் சொன்னபோது “மூன்றுமூட்டை கிழங்குகள் உடனே வரவேண்டும். இன்கிழங்குகள் வேண்டாம்!” என அவர் முகம் நோக்கி ஆளறியாமல் சொன்னான். அவர் “ஆம்… இதோ” என கலவறை நோக்கி ஓடினார். அடுத்த பந்திக்கான உணவுக்கலங்கள் சென்றுகொண்டிருந்தன. ஒழிந்த அண்டாக்களையும் நிலைவாய்களையும் வளைவாய்களையும் நீர் ஊற்றி அலம்பி அப்பால் சென்ற ஓடையில் கொட்டிவிட்டு மீண்டும் கயிறுகட்டித் தூக்கி அடுப்பில் ஏற்றினர். “விறகு! எரி எழுக!” என்று பீமனின் குரல் கேட்டது. தருமன் வெளியே சென்று விறகுக்குவைகள் அருகே நின்றவர்களிடம் “விறகு!” என்றார். “இதோ” என சொல்லி அவன் விறகுகளை அள்ளி கொண்டுசென்றான். அவரும் உடன் சென்றார்.

ஐந்தாம்பந்தி அரையளவே இருந்தது. அதன் இலைகளை அவரே எடுத்தார். அத்திரிகள் இலைகளுடன் சென்றதை நோக்கிவிட்டு அடுமனைக்கு வந்தபோது அது முழுமையாக ஓய்ந்து அமைதிகொண்டிருப்பதைக் கண்டு திகைத்தார். அத்தனை ஒழிந்த கலங்களும் திறந்து கிடந்தன. உணவுக்கலங்கள் மூடிவைக்கப்பட்டு விளிம்புகளில் ஆவி உமிழ்ந்தன. சற்றுமுன்புவரை சிறுகுன்றென குவிந்து வாழையிலையால் மூடப்பட்டிருந்த அன்னம் இருந்த இடத்தில் ஈச்சையோலைப் பாய் மட்டும் பரந்திருந்தது. உணவின் கலவைமணம். ஆனால் அப்போதுகூட அது எச்சில்மணமாக இல்லை, உண்ணத்தூண்டும் மணமாகவே இருந்தது. அடுப்புகளுக்குள் அனல் இளங்காற்றில் சீறிக்கொண்டிருந்தது.

குறுக்காகச் சென்ற ஒருவன் அவரை அடையாளம் கண்டு “அரசே, நீங்களா? உணவருந்தினீர்களா?” என்றான். “இல்லை” என்றார் தருமன். “அங்கே பின்கொட்டிலில் உணவருந்துகிறார்கள். தாங்கள் உள்ளறையில் அமர்ந்தால் நான் உணவு கொண்டுவருகிறேன்” என்றான் அவன். “நான் பின்கொட்டிலில் உணவருந்துகிறேன்…” என்றபின் அவர் வெளியே சென்று ஓடையில் கைகால்களை கழுவிக்கொண்டார். உடம்பு முழுக்க வியர்வை வழிந்து உப்பரித்திருந்தது. அத்தனை தசைகளும் வலியுடன் தளரத்தொடங்கின. அப்படி ஒரு பசியை அதற்கு முன் உணர்ந்ததே இல்லை என்று தோன்றியது.

பசி என எண்ணியதுமே பசி பற்றி எரியலாயிற்று. அடுமனைப் பின்கொட்டில் நோக்கி செல்லும்போது ஒவ்வொரு காலடிக்கும் பசி மேலெழுந்து உடல் எரிகொள்ளி போல தழல்கொண்டது. கொட்டிலில் அடுமனையில் பணியாற்றிய அனைவரும் கலைந்த நிரைகளாக அமர்ந்திருந்தனர். அன்னமும் அப்பமும் கூட்டும் குழம்புமாக எஞ்சிய உணவு மரக்குடைவுக் கலங்களில் குவிக்கப்பட்டு அவர்கள் நடுவே வைக்கப்பட்டிருக்க அவர்களே அதை நீண்ட அகப்பைகளால் அள்ளி தங்கள் தொன்னைகளில் போட்டு கலந்து உண்டனர். பனையோலையாலும் கமுகுப்பாளையாலும் மரப்பட்டைகளாலுமான பெரிய தொன்னைகளின் குவியல்களில் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு தருமன் உணவுத்தாலத்தை அணுகி அன்னமும் அப்பமும் குழம்பும் கூட்டுமென அனைத்தையும் அள்ளி வைத்துக்கொண்டார்.

வேறு எவரையும் நோக்க விழி கூடவில்லை. சித்தம் ஐம்புலன்களை ஆண்டு உணவின் மேல் படிந்திருந்தது. விரைவாக அள்ளி உண்டபோது அவையனைத்தும் ஒன்றெனக் கலந்தன. தனிச்சுவைகள் மறைய அறியாத புதுச்சுவை ஒன்று நாக்கை துடிக்கச்செய்தது. அனல்மேல் உணவுவிழுந்து அமையும் தண்மை. அதை குருதி உடலெங்கும் கொண்டுசெல்ல பதறித்துடித்த தசைச்சரடுகள் இழுவையிழந்து தளர்ந்தன. அடிபட்ட நாகமென துடித்த அடிவயிற்றுத் தசைகள் சொக்கி சுருளவிழ்ந்தன. உணவை உடலே ஒருங்கிணைந்து உண்ணும் உவகையை அன்று அறிந்தார். கனவு என, ஊழ்கமென.

ஓர் எல்லையில் உணவால் உடல் நிறைந்த உணர்வு எழுந்தது. வெளியே சென்று கைகால்களை கழுவிக்கொண்டு உடம்பின்மேலும் நீரள்ளிவிட்டு உப்பை தூய்மைசெய்துகொண்டார். உணவுண்ட அடுமனையாளர்கள் அனைவருமே மதுக்களிகொண்டவர்கள் போல விழி பாதிமூட கால்கள் தளர நடந்தனர். உள்ளே சென்று அங்கு குவிக்கப்பட்டிருந்த மரவுரிப்பொதிகள், கொடிச்சுருள் கூடைகளின் குவியலை அடைந்து சாய்ந்துகொண்டபோது விழியிமைகள் உருகி வழிந்து ஒட்டிக்கொண்டதுபோல துயில் வந்து அழுத்தியது.

எவரோ “அடுத்த பந்திக்கு பன்னிருநிலவாய் அன்னம் தேவை என்றார் ஆசிரியர்” என்றார். “பிருஹதாரண்யகத்தில் பெருவேள்வி. அங்கு செல்கிறார்கள்” என இன்னொருவர் சொன்னார். அப்பால் கேட்ட ஒரு குறட்டை ஒலி நகுலனுடையது போலிருந்தது. அவர் தன் முகம் மலர்ந்திருப்பதை தானே உணர்ந்தார். ஏன் புன்னகைக்கிறேன்? காட்டுக்குக் கிளம்பியபின்னர் முதல்முறையாக என் முகம் இப்படி மலர்ந்திருக்கிறது. நான் எதை எண்ணிக்கொண்டிருந்தேன்? எண்ணிக்கொள்ளவே இல்லை. விரையும் புரவியை பற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு கணமும் முன்பின் இல்லாதது. எண்ணங்களால் மறைக்கப்படாதபோது கணங்கள் எத்தனை முழுமைகொள்கின்றன! உணவுசூழ இருந்தேன், ஒரு கணமும் பசியை உணரவில்லை.

பசியுடன் உணவுண்பவர்கள் ஏன் அப்படி தவிக்கிறார்கள்? காதலியை காணச்செல்பவர்கள் போல. கண்டு முத்தமிடுபவர்கள் போல. உடல்சேர்ந்து ஒன்றாக விழைபவர்கள் போல. உண்டு எழும் நிறைவில் அவர்கள் மானுடர் அடையும் உச்சமொன்றில் இருக்கிறார்கள். அதுவரை ஒருவரோடொருவர் எத்தனை பேச்சு! எவ்வளவு முறைமைச்சொற்கள்! பிறரை மதித்தல், தான் மதிக்கப்படுகிறோமா என கண்காணித்தல். உண்டபின் முழுத்தனிமை. தனிமையில் மட்டுமே எழும் எண்ணங்கள். தனிமைகொண்டவர்களுக்கு இசைகேட்பவர்களின் முகம் எப்படி அமைகிறது? அல்லது இசைகேட்பவர்கள் தனிமையில் இருக்கிறார்களா என்ன?

சற்றுநேரம்தான் துயின்றிருப்பார். மரத்தாலான மணி ஒலித்து எழுப்பியபோது உடல் மீண்டுவந்திருந்தது. எழுந்தபோது ஊழ்கம் விட்டெழுந்த புத்துணர்வு. “அடுமனையாளர்கள் செல்க!” என்று ஆணை ஒலித்தது. பீமன் மிகப்பெரிய சல்லரி ஒன்றை வலக்கையிலும் மரப்பிடி கொண்ட சட்டுவத்தை இடக்கையிலும் ஏந்தியபடி செல்வதைக் கண்டார். அர்ஜுனன் முன்னரே காய்கறி வெட்டுமிடத்தில் விரைவுகொண்டிருந்தான். வெளியே விறகுடன் நின்றிருந்த அத்திரிகளையும் கழுதைகளையும் வெறும் கையசைவாலேயே நிரைவகுக்கச்செய்து கொண்டுவந்தான் நகுலன். நினைவிலிருந்தே அத்தனை களஞ்சியக் கணக்குகளையும் தொகுத்து ஓலையில் பொறித்து அடுக்கிவிட்டு மீண்டும் பொருள் அளிக்கத் தொடங்கியிருந்தான் சகதேவன். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன். பாண்டவர்களில் அவர் மட்டுமே பிறர் ஆணைகேட்டு பணியாற்றுபவராக இருந்தார்.

மீண்டும் பணியில் பொருத்திக்கொண்டபோது அனைத்தும் முன்னரே வகுக்கப்பட்டிருந்ததை உணரமுடிந்தது. முந்தையமுறையைவிட உழைப்பு எளிதாக இருந்தது. வெளியே உணவுப்பந்தல் நிறைந்து ஒழிந்து நிறைந்தது. வெயில் சரிந்து நிமிர்ந்து மீண்டும் சரிந்தது. மாலையானதும் அப்பொழுதுக்குரிய அடுமனைப்பணியாளர்கள் துயிலெழுந்து நீராடி வந்துசேர்ந்தனர். முன்பிருந்தவர்கள் களைத்த உடலுடன் அவர்களை நோக்கி வாழ்த்துரைத்தனர். அவர்கள் கேலியுடன் சீண்டி சொல்லாடினர். தருமன் இளையோருடன் காட்டுக்குள் நடந்தார். கால்தளர இருமுறை நிற்கவேண்டியிருந்தது. “இங்கேயே ஏதாவது மரநிழலில் துயிலலாம் என்றுகூட தோன்றுகிறது, இளையோனே. நாகம் ஏறிக் கடந்துசென்றால்கூடத் தெரியாது” என்றார். “உண்ணுதல் இத்தனைபெரிய வேள்வி என இன்றுதான் அறிந்தேன், மூத்தவரே” என்றான் நகுலன். சகதேவன் “உண்ணல் அல்ல சுவை. சித்தமோ நாவோ விழியோ செவியோ சுவை என உள்ளவை அனைத்தும் பெரும் உழைப்பால் உருவாக்கப்படுபவையே” என்றான்.

நகுலன் “ஆம், முரசறைபவர்களை நோக்கும்போது மண்வெட்டி பற்றுபவர்களைவிட மும்மடங்கு உழைப்பு என நான் எண்ணிக்கொள்வதுண்டு” என்றான். “சுவை என்பது என்ன? இப்புவியின் பருப்பொருட்களில் உள்ளுறைந்துள்ள நுண்மை ஒன்றை பிரித்தெடுக்கும் முயற்சி அல்லவா? இந்த புளிக்காயிலிருந்து புளிப்பை. அந்த விளாங்காயிலிருந்து துவர்ப்பை. யாழிலிருந்து இசையை. அவற்றைக் கலந்து கலந்து அவையனைத்துமாகி நின்றிருக்கும் ஒன்றை சென்றடைகிறோம்” என்றான் சகதேவன். அவனே வெடித்துச் சிரித்து “மீண்டும் பிரம்மத்திற்கே வந்துவிட்டோம்!” என்றான்.

நகுலனும் சிரித்து “விளாங்காயின் துவர்ப்பையும் யாழின் செம்பாலைப்பண்ணையும் இணைக்கும் ஒரு கலை உருவாகவேண்டும். அதுதான் பிரம்மத்தை அறியும் வழி” என்றான். “மூத்தவர் பீமனிடம் கேட்டால் சொல்லக்கூடும். ஒருமுறை வங்கநாட்டு இசைஞன் ஒருவனின் குழலோசையைக் கேட்டு மிகவும் புளிக்கிறது இளையோனே என என்னிடம் சொன்னார்” என்றான் சகதேவன். “ஆம், முரசின் ஓசைக்கு மத்தகம் இருக்கிறது என்று ஒருமுறை அவர் சொன்னார். அவர் புலன்களுக்கு சித்தத்தின் துணையில்லாமல் ஒன்றுடன் ஒன்று உரையாடிக்கொள்ளமுடியும்.” அவர்கள் சிரித்துக்கொண்டே வர தருமன் அச்சொற்களைக் கேட்டும் உளம்கொள்ளாமல் நடந்தார்.

சூழ்ந்திருந்த சாறிலைச் செடிகளில் இருந்து குளிர் பரப்பிய சிற்றாறு இருண்ட நீர்கொண்டிருந்தது. அதில் இறங்கியபோதுதான் உடல் எத்தனை வெம்மைகொண்டிருந்தது என புரிந்தது. அத்தனை வெம்மையையும் அது தன்னுள் இருந்தே எடுத்திருக்கிறது. நீராட நீராட உள்ளிருந்து வெம்மை எழுந்து தோலுக்கு வந்துகொண்டே இருந்தது. நெடுநேரம் கழித்து காதுமடல்கள் குளிரத் தொடங்கின. பின்பு மூக்குநுனிகள். அப்போதும் உடலுக்குள் வெப்பமிருந்தது. அதைத் தணிப்பவர்போல அவர் நீரை அள்ளி துப்பிக்கொண்டே இருந்தார். நடுக்கம் தொடங்கியபோதுதான் கரையேறத் தோன்றியது. விழிகள் அனல்கொண்டவைபோல எரிந்தன. அப்பால் காட்டுக்குள் சென்று மீண்ட நகுலன் “அமிலமென வருகிறது சிறுநீர்” என்றான். “நன்று, குருதியிலிருந்து வெம்மை அகல்கிறது” என்றான் சகதேவன்.

கொட்டகையை அடைந்தபோது அவர் அரைத்துயிலில் இருந்தார். அந்தி வணக்கம் முடித்து அந்தணர்கள் வந்துசேரவில்லை. உணவுண்டு ஓய்வெடுத்து மறுநாள் புலரியிலேயே கிளம்ப முனையும் வணிகர்கள்தான் கட்டில்களில் படுத்து துயின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் பொதிகளும் கூடைகளும் தரையெங்கும் நிறைந்திருந்தன. அவ்வேளையிலேயே கட்டில்களிலிருந்து குறட்டை ஓசை கேட்டது. தருமன் தன் மஞ்சத்தை அடைந்து உடலை சரித்தார். அக்கணமே அத்தனை மூட்டுகளும் பொருத்து அவிழ்ந்தன. உடல் பல துண்டுகளாக ஆகி மரவுரிமேல் படிந்தது. நகுலன் ஆடைகளை மடித்துவைத்துவிட்டு அருகே கட்டிலில் படுத்தான்.

அருகே கட்டில்களை சேர்த்துப்போட்டு அமர்ந்திருந்த வணிகர்குழு ஒன்று உரத்த குரலில் உரையாடிக்கொண்டிருந்தது. அவர்களின் நடுவே அமர்ந்திருந்த பெரிய வெண்தலைப்பாகை அணிந்த மனிதர் புலவர்போல தெரிந்தார். “மூன்றியல்புகளால் ஆன இவ்வியற்கையின் ஒவ்வொரு பொருளும் முதலியற்கையின் சிறுவடிவே. பொருளென்பது பொருண்மையென்றான நிலை. எதிர், நிகர் இயல்புகளின் தொகைக்குமேல் அமர்ந்த நோக்கன். நோக்கனின் கூறு உள்ளுறையாத பொருள் இல்லை. நோக்கன் விலகுகையில் பொருள் தன் பொருண்மைக்குப் பொருள்கொடுக்கும் அடிப்படையை இழந்துவிடுகிறது.”

“அப்போது பொருள் இருக்குமா?” என்று ஒருவன் கேட்டான். சாங்கியர் “பொருள் என்றுமிருக்கும். ஆனால் அதை பொருளெனக் காட்டும் எவ்வியல்பும் இருக்காது” என்றார். புன்னகையுடன் “அறியப்படாத பொருளின் இருப்பென்பது என்ன?” என்று கேட்டார். சூழ இருந்தவர்கள் அவர் சொல்லுக்காக காத்தனர். “ஒருவராலும் ஒருபோதும் அறியப்படாதது இருப்பா இன்மையா?” என்று மீண்டும் சாங்கியர் கேட்டார். “அது இருப்பு என அறியப்படுவதற்கான வாய்ப்பு” என்றார் அப்பால் ஒருவர். “நீங்கள் சூனியவாதிபோலும்” என்றார் சாங்கியர். “ஆம், என்றோ ஒருநாள் எவ்வண்ணமேனும் இருப்பென அறியப்பட வாய்ப்பற்றதே இன்மை.”

“இன்மையென்பது ஓர் அறிதல். இருப்பென்பதும் ஓர் அறிதலென்பதனால் இன்மையும் ஒரு இருப்பே” என்றார் இன்னொருவர். “வேதாந்திகள் வந்துசேராமல் சொல்லாடல் முழுமையடைவதில்லை” என்று நகுலன் சொன்னான். “சொல்புகாவிட்டால் வேதாந்திகள் இல்லையென்றாகிவிடுவார்கள். கண்ணுக்கு அசைவும் வேதாந்திக்கு சொல்லாடலும்” என்றான் சகதேவன். “சாங்கியரே, அறியும்தன்னிலை பொருளில் கலந்த இயல்பிலியா என்ன? இல்லை எதிர்நிலையை அது காண்கையில் தான் மறுநிலையென்றாகிறதா? அது மறுநிலை என்றாவதனால் அவ்வெதிர்நிலை உருவாகிறதா?” என்றார் வேதாந்தி “அறிபடுபொருளை ஆக்குவது அறிவே. அறிவென்றாகி அதை ஆக்குகிறது அறிபடுபொருள்” அவர் தொடர்ந்தார்.

நகுலன் “இன்னும் எட்டுச் சொற்றொடர்களில் பூனை நான்குகால்களில் நிலம்தொட்டுவிடும்” என்றான். வேதாந்தி “இடக்கையால் அறிபொருளையும் வலக்கையால் அறிபவனையும் ஆக்கி நடுவே நின்றுள்ளது அறிவு” என்றார். நகுலன் “இரண்டு” என்றான். சகதேவன் சிரித்தான். வேதாந்தி “ஆகவே வெறுமையென்றிருப்பதும் அறிவென்றாகும் வாய்ப்புள்ளதே. அறிவென்றாகும் வாய்ப்பில்லாத எதுவும் இங்கு எஞ்சமுடியாது” என்றார். நகுலன் “மூன்று” என்றான். தருமன் “இளையோனே” என்றார். நகுலன் “இல்லை” என்றான். “துயில்கொள். இந்தச் சொற்கள் நமக்கெதற்கு? நாம் நாளை புலரியில் எழுந்து அடுமனைக்குச் செல்லவேண்டியவர்கள்” என்றார் தருமன்.

“அறிவென்றாகி தன்னைக் காட்டுவதனாலேயே முடிவிலிகூட இருப்பு கொள்கிறது” என்று வேதாந்தி சொன்னார். தருமன் கண்களைமூடிக்கொண்டு இமைகளுக்குள் அவ்வோசையை செந்நிறச் சிறுகுமிழிகளாக நோக்கிக்கொண்டிருந்தார். “அறிவென்றாகும்போது அது குறைகிறதா என்பதே அடுத்த வினா.” அறிவு. எவருடையது? நான் அறிந்துகொண்டே இருப்பவை என்னுள் எங்கு செல்கின்றன? திரண்டு புது அறிவை யாக்கின்றன என்றால் நானறியும் அறிவே நான் திரட்டிக்கொள்வதா? தன் குறட்டை ஒலியை தானே கேட்டு விழித்துக்கொண்டு வாயைத் துடைத்தபடி திரும்பிப் படுத்ததையே இறுதியாக அவர் பிரக்ஞை அறிந்தது.

முந்தைய கட்டுரைராமனின் நாடு
அடுத்த கட்டுரைஎதிர்மறை மதச்சடங்குகள்