பாகவதமும் பக்தியும்

8

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது பதிவுகளை இணையத்தின் மூலமாக கடந்த ஆறு மாதங்களாக படித்து வருகிறேன். குறிப்பாக, இந்திய ஞான மரபு பற்றிய உங்களது பதிவுகள் மீது எனக்கு தனி ஆர்வம் உண்டு. வேதாந்தம் குறித்த தங்களது பார்வை ஆழமானது. தமிழில் இது போன்ற எழுத்துக்கள் மக்களிடையே சனாதன தர்மம் குறித்தும், நமது பண்பாடு குறித்தும் சரியான புரிதலை அளிக்கும் என்பது திண்ணம்.

எனக்கு கடந்த பத்து வருடங்களாக கீதை, பாகவதம், அத்வைதம் குறித்த அறிமுகம் உண்டு. திரு. நொச்சூர் வெங்கட்ராமன் அவர்களின் சொற்பொழிவுகளின் மூலமே இவ்வறிமுகம். அவர் ஒரு அத்வைத வேதாந்தி. ரமண மகரிஷியின் சம்பிரதாயத்தை பின்பற்றுபவர். அவரது சொற்பொழிவுகளில் இருந்து நான் அறிந்து கொண்டது, பக்தியும், ஞானமும் வெவ்வேறு பாதைகளானாலும் அதன் இலக்கை அடையும் முன், பக்தி மார்க்கம் ஞானத்தையும், ஞான மார்க்கம் பக்தியையும் அடைந்தே தீரும் என்பதே. அவர் ரமணரின் வாக்கை இதற்கு மேற்கோள் காட்டுவார். அவரின் வாக்கின் படி “அறிந்தவன் அடங்கியாகணும், அடங்கினவன் அறிந்தாகணும்”. அதாவது ஞானம் அடைந்தவன் பக்தியை உணர்கிறான், பக்தியுடையவன் ஞானத்தை அடைவான். இவ்வாறே  சாதாரணமாக பக்தி நூலாக கருதப்படும் பாகவதம் கூட உயர்ந்த அத்வைத ஞான கருத்தை தன்னகத்தே கொண்டது என்பார் நொச்சூர் வெங்கட்ராமன். அவருடைய பாகவத சொற்ப்பொழிவு ஒலிப்பதிவின் ஒரு பகுதியை இங்கே இணைத்துள்ளேன். ( shared in google drive)

நான் உங்கள் எழுத்துக்களை படித்தவரை தங்களது பார்வையில் பாகவதம் ஒரு பக்தி நூலாகவே தெரிகிறது. நான் அறிந்த வரை தர்ம சாஸ்திரம் குறித்த விஷையங்கள் சில பகுதியில் இருந்தாலும், பெரும்பாலும் பக்தி கலந்த ஞான நூலாகவே பாகவதம் உள்ளது.  பாகவதம் குறித்த அறிமுகம்  தமிழகத்தில் சாதாரண மக்களிடையே  இல்லாத நிலையில் தாங்கள் அது குறித்து எழுதவேண்டும் என்பது என் விருப்பம், அதற்காகவே இக்கடிதம். தவறிருந்தால் திருத்தவும்.

ராஜேஷ்

கோவை

 

 

அன்புள்ள ராஜேஷ்

 

பாகவதம் ஒரு பக்திநூல்தான், ஐயமே தேவையில்லை. பக்திநூலுக்கு இரு வடிவங்கள் உண்டு. ஒன்று,புராணங்கள். பாகவதம் அவ்வகைப்பட்டது. இன்னொன்று, பக்திப்பாமாலைகள். நாலாயிரத் திவ்யபிரபந்தம்போல. அஷ்டபதி போல. புராணங்கள் உருவகங்களாகவும் குறியீடுகளாகவும் தத்துவத்தையும் வரலாற்றையும் அவற்றினூடாக ஓடும் மெய்யறிதல்களையும் சுட்டக்கூடியவை. எல்லா புராணங்களும் அல்ல. புராணங்களில் கணிசமானவை சாரமற்ற வெற்று உருவாக்கங்கள் என்பதும் ஓர் உண்மை

 

பக்திவழியைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாக பக்தியை ஒரு நிபந்தனையாக முன்வைப்பார்கள். ரமணரின் வாயிலிருந்தே அதை வரவழைக்காமல் அடங்கமாட்டார்கள். அவர்களுக்கு ரமணர் அதை அளித்துவிட்டிருப்பார். பொதுவாக ஞானவழியை தேர்வுசெய்பவர்கள் பக்தியைப் பழிப்பதில்லை.

 

பக்தி உறுதியான நம்பிக்கையைச் சார்ந்தது என்பதனால் அதை மீளமீள வலியுறுத்தவேண்டியிருக்கிறது. ஒப்புநோக்க எளிய மனிதர்களுக்குரியது என்பதனால் அதை எளிமைப்படுத்தவேண்டியிருக்கிறது. தீவிரம் தேவையானது என்பதனால் அதை ஒற்றைப்படையாக ஆக்கவேண்டியிருக்கிறது. ஆலயம் போன்ற பெரிய அமைப்புக்கள் பக்தியைச் சார்ந்தவை என்பதனால் அதற்கான களங்கள் மிகமிகப்பெரியவை

 

வேதாந்தம் போன்ற அறிவுமரபு சார்ந்தவர்கள் தெய்வ உருவகங்களை தியானவடிவங்களாகக் கொள்வதற்கும் பக்திமரபின் வழிபாட்டுப்போக்குக்கும் பெரியவேறுபாடுண்டு. ஆனால் பொதுவாக பக்திமரபைச் சேர்ந்தவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் என்பதனால் அவர்களிடம் எந்த விவாதமும் சாத்தியமில்லை. எந்த மதமானாலும்

 

எனக்கு இத்தகைய பக்தியில் நம்பிக்கை இல்லை, என் ஆசிரியமரபுக்கும். ஆகவே பக்திமரபினரின் பேச்சுக்களை கொஞ்சம் விலகியே செவிகொள்கிறேன்.

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42