ஆத்மாநாம் பதிப்புச்சர்ச்சை

athmanam_thumb3

மை டியர் ஜெமோ,

நலம்தானே நண்பரே?

காலச்சுவடு 200-ஆவது சிறப்பிதழில் ‘ஆத்மாநாம் முழுத்தொகுப்பு’ சார்ந்து ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’  என்ற கட்டுரை வெளிவந்துள்ளது.

பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் கவிதைகளில் சில ஐயங்களைக் கட்டுரையாளர் கல்யாணராமன் எழுப்பி இருக்கிறார்.

http://www.kalachuvadu.com/current/issue-200/சூனியத்தில்-வெடித்த-முற்றுப்புள்ளி

இதுசார்ந்து முகநூலில் பகிர்ந்தபோது கே.என். சிவராமன் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்.

காலச்சுவடு பிரம்மராஜனை அழிக்க நினைக்கிறதா? / தாக்க நினைக்கிறதா? என்ற விவாதத்தை முன்னெடுத்தார். ஆத்மாநாம் கவிதை இரண்டாம் பட்சமாகி, #isupportbrammarajan என்ற முழக்கம் நண்பர்களிடம் கிளம்பியது.

தமிழ் இலக்கியப் போக்கில் ஒரு  பாய்ச்சலை நிகழ்த்தியவர் பிரம்மராஜன், அவரது பங்களிப்பைத் தெரிந்துகொள்ளாமல் பேசாதீர்கள் என்றும், பிரம்மராஜனின் பெயருக்குக் கலங்கம் கற்பிக்காதீர்கள் என்றும் ஒருசேரக் குரல் எழுப்பினார்கள்.

இடையில் ‘காலச்சுவடு அரசியல்’ செய்கிறது என சிவராமன் குரலெழுப்ப, இதெல்லாம் ‘காலச்சுவடு வெறுப்பரசியல்’ என நான் குரலெழுப்ப விஷயம் ஆத்மாநாம் கவிதை சர்ச்சையிலிருந்து விலகி வேறெங்கோ சென்றுவிட்டது.

அப்படிச் செல்லக் காரணம்…

இணையத்தில் பிரம்மராஜனைப் பற்றித் தேடியதில் – ஜேமோ இணையப் பக்கத்தில் – ‘நிழல் நாடுவதில்லை நெடுமரம்’ என்ற பதிவை வாசித்தேன். அதை முகநூலில் பகிர்ந்தேன். அதற்கு மேல் சொல்ல வேண்டுமா?

இலக்கிய கர்த்தாக்களின் சாதியை நான் தோண்டிப் பார்ப்பதாகக் குறைபட்டுக் கொண்டார்கள். சுபமங்களாவில் பிரம்மராஜன் கவித்துவம் பற்றி நீங்கள் கிண்டலடித்ததை இப்பொழுதும் எனது நண்பரொருவர்களில் ஒருசிலர் கண்களில் குரோதம் பொங்கப் பகிர்வார்கள். ஜெமோ அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்பார்கள்.

பிரம்மராஜனை நான் அதிகம் படித்ததில்லை எனினும் படைப்பாளியாக, இலக்கிய ஆர்வலர்ராக அவரை மதிக்கிறேன்.

வன்னிய இலக்கியப் பாசரையில் இலக்கியவாதிகளுக்கு என்ன வேலை? ஜெமோ இப்படி எழுதியிருக்கிறாராரே என்றுதான் பகிர்ந்தேன். தமிழ்ச் சூழலே பொங்கி எழுகிறது. இதுவரை மெளனம் காத்த பிரம்மராஜனே கூட ‘நான் வன்னிய குல ஷத்ரியந்தான். அதனால் யாருக்கென்ன?’ என்று முகநூலில் எழுதினார்.

என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றுதான். ஆத்மாநாம் கவிதையில் வார்த்தைகள் மாறி இருப்பதற்கு பிரம்மராஜனின் பதில் என்ன என்பதுதான்.

ஆனால், 2008-ல் அப்படி ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை, ஜெமோ எழுதியது எப்பொழுதும் போலப் புறந்தள்ள வேண்டியது என்கிறார்கள்.

வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ள பெரியார் வந்தார், பங்கெடுத்தார், சென்றார் என்று நீங்கள் சொல்லுவது போல, ராமதாஸ் உருவாக்க நினைத்த இலக்கிய பாசரைக்கு பிரம்மராஜன் வந்தார், இருந்தார், சென்றார் (12 மணி நேரம் கூட அங்கு இல்லை) என்கிறார்கள்.

உங்களுடைய பதிவில் பிரம்மராஜன் துணைத் தலைவராகக் கலந்துகொண்டார் என்று இருக்கிறது. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.

விளக்கம் தர முடியுமா?

கிருஷ்ணப்பிரபு

126_3

அன்புள்ள கிருஷ்னப்பிரபு,

சரிதான் மறுபடி ஒரு ஃபேஸ்புக் கும்மி.

இந்தவிஷயத்தை ஃபேஸ்புக்கில் விவாதிக்கும்போதுள்ள சிக்கல் என்னவென்றால் நீங்கள் அனுப்பிய ஸ்கிரீன் ஷாட்களில் உள்ளதுபோல சம்பந்தமில்லா சத்ரியர்கள் எல்லாம் கிளம்பிவந்து கருத்துச்சொல்ல ஆரம்பிப்பார்கள் என்பதே

மறைந்த ஆசிரியர்களைப் பதிப்பிப்பது, பிரதிசெம்மையாக்குவது போன்றவை தொடர்ச்சியாக நிகழவேண்டிய பண்பாட்டுப்பணிகள். பாரதி முதல் அனைவருக்கும் அது நிகழட்டும் . அதிலுள்ள பண்பாட்டுச் சிக்கல்கள், நடைமுறைப்பிரச்சினைகள், மொழிச்சிக்கல்கள் ஆகியவை அனைத்தும் பேசப்படவேண்டியவை. ஆனால் இப்படி அக்கப்போராக அல்ல

அக்கப்போரை தொடங்கிவைத்திருப்பது காலச்சுவடு கட்டுரைதான். அதிலுள்ள சிக்கல்களை இவ்வாறு சொல்வேன். அறியாத ஒரு புதுவாசகருக்கு  ஏட்டைக்கெடுத்தவரே பிரம்மராஜன்தான் என்னும் சித்திரம் வரும்படி அது எழுதப்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் ஆரோக்கியமான மனநிலை அல்ல.

சிற்றிதழ்ச்சூழலில் கவிஞர்களின் படைப்புக்கள் சீந்துவாரின்றிக் கிடந்த காலம் – இப்போதும் பெரிய மாற்றம் இல்லைதான், ஆனால் இணையம் இருக்கிறது- ஒன்றிருந்தது. அன்று தனிப்பட்ட ஈடுபாட்டால் படைப்பாளிகளைத் தேடித்தொகுத்து நூலாக்கி நிலைநாட்டியவர்கள் சிலர் உண்டு. மௌனிக்கு கி.ஆ.சச்சிதானந்தம், பிரமிளுக்கு கால சுப்ரமணியம் போல. அவர்களின் பங்களிப்பை மறுத்தோ மறைத்தோ புதிதாகக் கிளம்பிவந்தவர்கள் பேச ஆரம்பிப்பது ஒரு பண்பாட்டியக்கத்தை சிறுமைசெய்வது

brammarajan9
பிரம்மராஜன்

ஆத்மாநாம் அவரது மறைவுக்குப்பின் பிரம்மராஜனால்தான் நினைவில் நிறுத்தப்பட்டார். நான் அவரை பிரம்மராஜன் வழியாகவே அறிந்தேன். தமிழ்ச்சூழலில் பிரம்மராஜன் பதிப்பித்த ஆத்மாநாம் கவிதைகளின் பெருந்தொகைதான் ஆத்மாநாமின் இடத்தை நிலைநாட்டியது. ஒன்று, அன்றையசூழலில் அந்நூலின் அழகிய அமைப்பு. இன்னொன்று, அன்றைய சூழலில் அந்நூலின் அளவு. பிரம்மராஜன் தன் நண்பருக்காகச் சொந்தச்செலவில் செய்த முயற்சி அது.

காலச்சுவடு கட்டுரையாளர் இதைப்பற்றி எழுதி, ஆத்மாநாமின் வாசகர் என்னும் நிலையில் பிரம்மராஜனின் பங்களிப்புக்கு ஒரு வணக்கத்தைச் சொல்லிவிட்டு மேலே எழுதியிருந்தால் அது பதிப்புலக நாகரீகம். முப்பதாண்டுக்காலமாக பிரமிளை நிலைநிறுத்திவருபவர் கால சுப்ரமணியம். நாளை ஒரு தொழில்முறை தொகுப்பாளர் கால சுப்ரமணியத்தின் தொகுப்புமுறையில் பிழைகாணலாம். கால சுப்ரமணியம் பிரமிளுக்கு துரோகமிழைத்ததாக ஒரு அவர் போகிறபோக்கில் ஒரு கட்டுரையை எழுதினால் ஏற்கமுடியுமா என்ன?

கல்யாணராமனின் அந்தக்கட்டுரையை ஒரு நல்ல செம்பதிப்பின் ஆய்வுப்பின்னுரையாக அமைத்திருக்கவேண்டும். ஒரு வம்புக்கட்டுரையாக தனியாகப் பிரசுரிக்கையிலெயே இச்சிக்கல்கள் எழுகின்றன. ஏனென்றால் இவற்றையெல்லாம் முழுமையாக வாசிப்பவர்கள் குறைவு. வம்பை மட்டும் வாசிப்பவர்கள்  ‘பிரம்மராஜன் ஆத்மாநாமை தப்பா அச்சடிச்சிட்டாராமே என்ன கொடுமை!’ என்று சூள்கொண்ட்டிக்கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது

இதுதான் பிரச்சினை. இதை முன்வைக்கையில் வழக்கமான காலச்சுவடு வெறுப்பாளர்களும் வந்துகலந்துகொள்கிறார்கள்.அவர்களின் அஜெண்டா வேறு, காலச்சுவடு ஒரு பிராமணர்குடும்பம் நடத்தும் இதழ் என்பதற்குமேல் அதை வாசிக்கவேண்டிய அவசியமே கூட அவர்களுக்கு இல்லை. இந்தக்கும்பல்தான் நீங்கள் சொன்னது போல இலக்கியவிமர்சனத்தை  ‘குரோதம்பொங்க’ எடுத்துக்கொள்பவர்கள்.இவர்களுடன் இலக்கியவாசகனோ எழுத்தாளனோ பேச ஏதுமில்லை

 

*

Sachithanantham_spl5
கி ஆ சச்சிதானந்தம்

 

 

அத்துடன் ஒன்று, போகிறபோக்கில்  சாதகமான வரலாறுகளை ‘உருவாக்குவதும்’ காலச்சுவடு கட்டுரையின் உள்ளடக்கமாக உள்ளது. ‘நல்லவேளையாக’ புதுமைப்பித்தனுக்கு ஆ.இரா.வெங்கடாசலபதி வந்தார், இல்லையேல் இழந்துவிட்டிருப்போம் என்னும் வரி இன்றைய தலைமுறைக்கு ஒரு போலிவரலாற்றைச் சொல்கிறது. புதுமைப்பித்தன் படைப்புகளைத் தேடித்தொகுக்கும் பெரும்பணியை குறைவான வசதிகளுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செய்தவர் எம்.வேதசகாயகுமார். அவருடைய ஆய்வின் தொடர்ச்சியே ஆ.இரா.வெங்கடாசலபதி செய்தது.

வேதசகாயகுமாரின் முனைவர் பட்ட ஆய்வேடு சுந்தர ராமசாமியின் இல்லத்திலேயே பல்லாண்டுக்காலம் கிடந்தது. அதில் இருந்த பின்னிணைப்பில் புதுமைப்பித்தன்  கதைகளின் கிட்டத்தட்ட முழுமையான பட்டியல் இருந்தது. அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புதுமைப்பித்தன் பல்வேறு பெயர்களில் எழுதிய கதைகளைத் தேடி எடுத்ததில், அவை அவரால் எழுதப்பட்டவை என உறுதிசெய்ததில் வேதசகாயகுமாரின் பங்களிப்பு முக்கியமானது. நேரடியாகவே பி.எஸ்.ராமையா போன்றவர்களுடன் உரையாடி தகவல்களை சேர்க்கும் வாய்ப்பும் வேதசகாயகுமாருக்கு அமைந்தது.

காலச்சுவடு செம்பதிப்புக்கு ஆ.இரா.வெங்கடாச்சலபதியை ஆசிரியராக்கியபோது அதற்கு ஒத்துழைக்க வேதசகாயகுமார் மறுத்ததாகக் கூறப்படுகிறது. வேதசகாயகுமாரின் ஆய்வுப்பட்டியலில் இருந்து மேலும் முன்சென்று ,மேலும் துல்லியப்படுத்தி, இன்னமும் முறைமைசார்ந்து ஆய்வுசெய்து உருவாக்கப்பட்டதே ஆ.இரா.வெங்கடாச்சலபதியின் ஆய்வுப்பதிப்பு. கண்டிப்பாக அது ஒரு பெரும்பங்களிப்பே. ஆனால் அது சூனியத்தில் நிகழவில்லை. முன்னோடி ஆய்வாளர்களை மட்டம்தட்டிவிட்டோ கண்டுகொள்லாமலோ ஆய்வுகளைச்செய்யும் முறைமை மிகப்பிழையானது.

வேதசகாயகுமாரின் பட்டியலை தான் பார்க்கவில்லை, ஆகவே ஆய்வை தானே ‘ஒரிஜினலாக’ செய்தேன், ஆகவே அவரை குறிப்பிடவேண்டியதில்லை என்று ஆ.இரா.வெங்கடாச்சலபதி சொன்னார். அப்படி இருந்தால்கூட  வேதசகாயகுமாரின் ஆய்வு இல்லாமலாவதில்லை. எந்த ஆய்வாளனும் அதற்கு முன்னிருந்த ஆய்வாளர்களை முழுக்க வாசித்துவிட்டு மேலே செல்லவேண்டும் என்பதே நெறி. முந்தைய ஆய்வாளர்களின் பிழைகளை சுட்டிக்காட்டுவதும், மட்டம்தட்டி எழுதுவதும் ஆய்வுமனநிலையே அல்ல. முந்தையது முழுமையானதல்ல என்பதனால்தான் அடுத்த பதிப்பு தேவையாகிறது. தொடர்ச்சியான பிழைமேம்படுத்தல் வழியாகவே ஆய்வுகள் முன்னகர்கின்றன.

காலச்சுவடு கட்டுரையில் உள்ள இந்த மனநிலையே சிற்றிதழ்சார்ந்தவர்களைச் சினம்கொள்ளச் செய்கிறது. மற்றபடி ஆத்மாநாம் கவிதைகளுக்கு ஆதாரபூர்வமான பிழைதிருத்தங்களுடன் ஒரு நல்ல பதிப்பை கல்யாணராமன் கொண்டுவருவார் என்றால் அது ஓர் அரும்பணி. அவருக்குத் தமிழ் வாசகனாகக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நாளை ஆத்மாநாம் கவிதைகளின் பதிப்பு பற்றிப் பேசும்போது அவரை ஆத்மாநாமின் ரட்சகன் என்று எவரேனும் சொன்னார் என்றால் இல்லை அவர் பிரம்மராஜனின் தொடர்ச்சியாக வந்தவர், ஆத்மாநாம் பதிப்பை மேம்படுத்திப் பிரசுரித்தவர் என்றுதான் சொல்வேன்.

*

kaala-subramaniam
கால சுப்ரமணியம்

நான் பிரம்மராஜன் கவிதைகளைப்பற்றிச் சொன்ன விமர்சனம் விரிவாகவே எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் அது புதிய கருத்தும் அல்ல, பிரமிள் முதல் முதன்மையான கவிதை விமர்சகர்கள் பலர் சொன்னதுதான். அது இப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டது அல்ல

நிழல்நாடுவதில்லை நெடுமரம் கட்டுரையும் இப்பிரச்சினையுடன் இணைந்தது அல்ல. நான் என் தம்பியான கண்மணி குணசேகரனுக்கு எழுதியது. அவருக்கு என் அறிவுறுத்தல் அது. அதையே முன்னர் நாஞ்சில்நாடனுக்கும் சொல்லியிருந்தேன். சுயசாதி அமைப்புகளில் பங்கெடுப்பதென்பது எழுத்தாளனின் ஆன்மாவைக் கறைபடியச்செய்கிறது என்பது என் எண்ணம். ஆனால் கண்மணி அதை பொருட்படுத்தவில்லை. அது அவரது சொந்த விஷயம் என நானும் விட்டுவிட்டேன்.

 

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியத்தில் இன்று …
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41