[ 18 ]
“அரசே, ஜராசந்தனின் அனைத்து தோல்விகளுக்கும் என் அனைத்து வெற்றிகளுக்கும் பின்னணியாக அமைந்தவை எங்களைப் பற்றிய பிழைமதிப்பீடுகளே” என்றார் இளைய யாதவர். “அவரை எப்போதும் மிகைமதிப்பீடு செய்தார்கள். அவரே அவரை அவ்வண்ணம் எண்ணிக்கொண்டார். மகதத்தின் வெல்லமுடியா பெரும்படை, அவரது இரக்கமற்ற போர்த்திறம். அவரை பீமன் இயல்பாக வென்றது அந்தப் புறவாயில் வழியாகச் சென்றமையால்தான்.”
என்னை எப்போதும் குறைமதிப்பீடே செய்தனர். என்னைப் பற்றி உருவாகிப் பரவிய சூதர்சொல் என் வெற்றிகளை மட்டுமே சொன்னது. நான் வெல்லற்கரியவன் என்ற எண்ணமே உள்ளது. ஆயினும் ஷத்ரியர் உள்ளங்களில் அந்த நம்பிக்கை மீதான உள்ளுறை ஐயமும் எப்போதும் திகழ்கிறது. அது ஷத்ரியர்களுக்கு அவர்களின் குலம் அளிக்கும் குருதியில் கலந்த எண்ணம். அவர்கள் ஷத்ரியர்கள் என்பதனாலேயே சூத்திரர்களைவிட போர்த்திறம் கொண்டவர்கள், வெல்பவர்கள் என்று.
என் வெற்றிகளைக் கண்டு ஷத்ரியர் அஞ்சுவதனால் எளிதில் என் மேல் படைகொண்டு எழ துணியமாட்டார்கள். துணிந்தபின் மெல்ல வெல்லமுடியுமென எண்ணத்தலைப்படுவர். என் படைகள் பயிற்சியற்றவை. என் படைத்தலைவர் போர்மரபற்றவர். யாதவர்கள் பூசலிட்டுப் பிரிபவர்கள். அத்தனைக்கும் மேலாக நான் பேருருவம்கொண்டவன் அல்ல. என்னைக் கண்டபின் என் கரிய மெலிந்த உடலே நான் என அவர்களின் விழிமுன் எழுகிறது. அது அனைத்து மெய்ப்புரிதல்களையும் திரிபடையச் செய்கிறது. சால்வனையும் அந்தக் குறைமதிப்பீடே தோற்கவைத்தது. அவன் என்னை அவ்வாறு குறைமதிப்பீடு செய்கிறான் என்பதை அவன் அமைத்த படைசூழ்கையைக் கண்டே நான் உய்த்தறிந்தேன். அதனை முற்றிலும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்.
வஜ்ரவாகத்தில் என் படைத்தலைவர்களைக் கூட்டி ஹேகயர் எழுதிவாங்கிய ஓலையைப்பற்றி சொன்னேன். என் மைந்தரும் படைத்தலைவர்களும் கொதித்தெழுந்தனர். உடனே படை கொண்டெழுந்து அவர்களை வென்று சிறைபிடிக்கவேண்டுமென கூச்சலிட்டனர். ‘இனி பொறுப்பதென்பது நம் பெருந்தன்மை அல்ல, கோழைத்தனம். நாம் வஞ்சனையை பொறுத்தோம் என்றால் வீணர்கள் என்றே அறியப்படுவோம்’ என்று சாம்பன் கூவினான். ‘எனக்கு ஆணையிடுங்கள் தந்தையே, அவர்கள் விழைவதென்னவோ அதை அவர்களுக்களிக்கிறேன்’ என்றான் பிரத்யும்னன். ‘வேண்டாம், நாம் அவர்கள் மேல் கொள்ளும் சினம் நம்மை அழிக்கும் நோய். நாம் பூசலிட்டால் நம் கூரைகளை கொளுத்திக்கொள்வதாகவே பொருள்’ என்றேன்.
“அவையில் அதைச் சொல்லிவந்ததுமே கண்ணீர்விட்டேன். என் அவையினர் அதைக் கண்டு திகைத்து அமைந்திருந்தனர்” என்றார் இளைய யாதவர். “அரசே, அது பொய்த்துயர் அல்ல, உண்மையிலேயே யாதவரின் அவ்வுளப்பிளவு கண்டு என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. இரவுகளில் அதை எண்ணி விழித்துக்கொண்டேன் என்றால் துயில்நீத்து இருள்நோக்கி விடியும்வரை நின்றிருப்பேன். காலம்கடந்து நோக்கமுடிவதென்பது பெருந்துயர். இவர்கள் ஒருநாள் பூசலிட்டு முற்றழிவார்கள் என்று உணர்கிறேன்.” அச்சொற்கள் யுதிஷ்டிரரை நடுங்கச்செய்தன. அவர் ஏதோ கேட்க உன்னுபவர் போல உடலசைவுகொண்டாலும் சொல்லெழவில்லை.
“நினைவறிந்த நாள்முதல் இவர்களுக்காக வருந்திக்கொண்டிருக்கிறேன். என் இளமையில் என் ஆற்றலாலும் அறிவாலும் இவர்களை ஒன்றென ஆக்கிவிடலாம் என்று எண்ணினேன். அதன்பொருட்டே நான் வந்தேன் என மயங்கினேன். முதுமை நெருங்குகையில் மேலும் மேலுமென தெளிந்து வருகிறது ஊழ். கையறுநிலையில் அதை நோக்கி நிற்பதன்றி நான் செய்யக்கூடுவது பிறிதில்லை” இளைய யாதவர் தொடர்ந்தார். “அன்றிரவு நான் உருகி நீர்மைகொண்டு ஒழுகி பின் உறைந்து உறுதிகொண்டேன்.”
மறுநாள் காலை சாம்பன் தலைமையில் என் மைந்தர்கள் நடத்திய அந்தகர்களும் விருஷ்ணிகளும் அடங்கிய படை ஹேகய, போஜ, குங்குரப்படைகளை தாக்கியது. அப்போரின் செய்தியை பறவைச்செய்தி வழியாக அறிந்த சால்வன் அன்று அந்தியில் அப்பூசல் முடிவதற்குள் வஜ்ரவாகத்தை தாக்கலாமா என்று தன் படைத்தலைவர்களுடன் மதிசூழ்ந்துகொண்டிருந்தபோது நான் சிறிய படை ஒன்றுடன் அவன் படைகளை தாக்கினேன். அந்த நேரடியான விரைவுத்தாக்குதலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னால் வஜ்ரவாகத்தைவிட்டு விலகமுடியாதென்றே எண்ணியிருந்தான். அவன் படைஎழுவதற்குள் மறுபக்கக் காடுகளிலிருந்து ஜாம்பர்கள் தாக்கத் தொடங்கினர். கங்கையின் கிளையாறுகள் வழியாக வந்த மச்சர்களும் அவன் படையை தாக்கலாயினர்.
மிதக்கும் இரும்புக்கோட்டையாகிய சௌபத்தை வெல்லும் வழிமுறையை நானே எண்ணி அமைத்திருந்தேன். என் படைகள் கொண்டுவந்திருந்த அரக்குருளைகள் தேர்களில் அமைந்த சுருள்வில் பொறிகளால் சௌபத்தின் இரும்புக்கூரைகள் மேல் எறியப்பட்டன. தொடர்ந்து எரியம்புகள் சென்று அவற்றில் விழுந்தன. உருகும் அரக்கு சொட்டியதும் யானைகள் பிளிறியபடி கவசங்களை வீசிவிட்டு திரும்ப சௌபம் உடைந்து சிதறியது. என் படைகள் அம்புகளைத் தொடுத்தபடி அவ்விடைவெளிகளில் நுழைந்தன. இருளில் எங்கள் படைகள் நுழைந்தமையால் நாங்கள் எத்தனைபேர் என்றும் எத்திசைகளில் உள்ளோம் என்றும் அவர்களால் அறியக்கூடவில்லை. சற்றுநேரம் அத்திகைப்பு நீடித்தது. அதற்குள் நாங்கள் அவன் படைசூழ்கையை முறித்துவிட்டிருந்தோம்.
சால்வனின் துணிவு எதனாலென்று அப்போர்க்களத்தில் தெரியவந்தது. பீதர்நாட்டு எரிப்பொடிப் பொதிகளை சுருள்விற்களில் தொடுத்து வானிலெறிந்து பற்றவைத்தான். இருளில் அவை சிறு சூரியன்களைப்போல வெடித்து கதிர்பரப்பின. அவ்வெளிச்சத்தில் அவன் காவல்மாடங்களில் இருந்தவர்கள் எங்களை முழுமையாகவே பார்த்துவிட்டனர். அவர்கள் முரசொலிகள் வழியாக எங்கள் படைகளைப்பற்றிய செய்திகளை பகிரத்தொடங்கியதுமே காவல்மாடங்களை அழிக்கும்படி என் படைகளுக்கு ஆணையிட்டேன்.
போர் நெடுநேரம் நிகழமுடியாதென்று உணர்ந்தேன். விரைவே வெற்றி என்று அறிந்து மேலும் மேலுமென என் படைகளை ஊக்கிக்கொண்டிருந்தபோது என்னைத் தேடி மதுராவிலிருந்து தூதன் ஒருவன் வந்தான். தாருகன் என்னும் பெயர்கொண்ட அவனை நான் நன்கறிவேன். என்னால் பயிற்றுவிக்கப்பட்டு மதுராவின் எதிரிகளை உளவறிந்து எனக்குச் சொல்லும்பொருட்டு அமைக்கப்பட்ட திறமைவாய்ந்த ஒற்றன். புரவியில் என்னை அணுகி ‘யாதவரே, தீயசெய்தி!’ என்று கூவினான். அருகே வந்து ‘மகதப்படைகளால் தங்கள் தந்தை வசுதேவர் கொல்லப்பட்டார்’ என்றான்.
அதை என்னைச் சூழ்ந்திருந்தவர்களும் கேட்டனர். ‘அரசே, ஏகலவ்யனின் தலைமையில் மகதப்படைகள் மதுராநகரை தாக்கின. நகரம் அத்தாக்குதலுக்கு சித்தமாக இல்லாமலிருந்தமையால் நிலைகுலைந்தது. நிஷாதர்களின் படைகள் நகருள் புகுந்து சூறையாடின. எதிர்கொண்டு சென்ற தங்கள் தந்தை களப்பலியானார்’ என்று அவன் சொன்னான். நெஞ்சிலறைந்து அழுதபடி ‘எஞ்சியபடைகள் தங்கள் அன்னையைக் காத்தபடி வெளியேறி மதுவனம் நோக்கி செல்கின்றன. மதுவனத்தில் தங்கள் பிதாமகரிடமும் படைவல்லமை இல்லை. நாளைமாலைக்குள் மகதம் மதுவனத்தை சூழ்ந்துகொள்ளும்’ என்றான்.
கையிலிருந்த வில்லும் அம்பும் செயலற்று தழைய ஒருகணம் திகைத்தேன். எப்படியோ யாதவப்படைகள் அனைத்தும் அத்தருணத்தை உணர்ந்து மெல்ல விரைவழிந்தன. என்னருகே நின்றிருந்த என் மைந்தன் சாம்பன் ‘படைகள் திரும்புக… நாம் மதுவனத்திற்கு செல்வோம்’ என்றான். அச்சொல் எழுந்ததுமே தாருகன் விழிகளில் எழுந்த நிறைவை கண்டேன். மறுகணமே என் ஆழியால் அவன் தலையை வெட்டி வீழ்த்திவிட்டு திரும்பி குருதிவாளை ஓங்கி ‘முன்செல்லுங்கள்!’ என்று கூவினேன். தாருகனின் அன்னை ஹேகய குலத்தவள் என்று அதன்பின்னரே என் சித்தம் உணர்ந்தது.
ஒவ்வொரு கணமும் நூறிலொன்றாக சுருங்கியாகவேண்டும் என்பதே எங்கள் போர்முறை. எண்ணவும் இடம்கொடாது தாக்கி வென்று அவ்வெற்றியை எதிரி உணர்வதற்குள்ளாகவே மீண்டாகவேண்டும். என் சிறிய விரைவுப்படையைவிட பன்னிரண்டு மடங்கு பெரியது சால்வனின் படை. பின்திரும்பி ஓடிய யானைகளில் மூன்றிலொருபங்கை திரும்ப கொண்டுவந்தார்கள் என்றால் அதன்பின் யாதவர்கள் எவரும் திரும்பிச்செல்லமுடியாது. வெற்றி வெற்றி என்று கூவுவதற்கு மாறாக ‘விரைவு! விரைவு!’ என்றே போர்க்கூச்சலெழுப்பிக்கொண்டிருந்தனர் என் படைத்தலைவர்கள்.
என்னை வழிநடத்திச்சென்றவன் வேளக்காரர் தலைவனாகிய கூர்மன். அவன் கையில் மின்னிய எரியம்பின் ஒளியைத் தொடர்ந்து படைகளை ஊடுருவி போரிட்டுச் சென்றபோது ஓர் இடத்தில் பிழையை உணர்ந்துகொண்டேன். திரும்புவதற்குள் சால்வனின் படைகளால் சூழப்பட்டேன். என் படைப்பிரிவைச் சுற்றி எரித்தூளை பற்றவைத்து புகை எழுப்பினார்கள். நான் முற்றிலும் நோக்கிலிருந்து மறைந்ததும் நான் எதிரிகளால் சூழ்ந்து கொல்லப்பட்டேன் என்று கூர்மன் செய்தியறிவித்தான். சால்வனின் படைகள் வெற்றி எக்காளமிடத்தொடங்கின. துயர்க்குரலுடன் யாதவப்படைகள் மீண்டும் பின்னடைந்தன.
அது ஒரு தருணம், அத்தகைய காலச்சுழிகள் கனவுகளைப்போன்றவை. இங்கிரு இதிலிரு என நம்மை இனிதாக்கி அணைத்து உள்ளிழுத்து வைத்திருக்கும் தன்மைகொண்டவை கனவுகள். என் மூச்சு திணறியது. கண்கள் முற்றிலும் இருண்டன. தேர்த்தட்டிலிருந்து விழப்போனேன். விழுந்திருந்தால் அப்போர் அங்கே முடிந்திருக்கும். துவாரகையின் வரலாறும் அறுந்திருக்கும். அத்தருணத்தில் என்னை உயிர்கொண்டு எழச்செய்தது என்னுள் சீறிய ஓர் அருஞ்சினமே. இழிமகன் ஒருவனின் வஞ்சனையால் வீழ்ந்தேன் என்றா என் கதை சொல்லப்படவேண்டும் என எண்ணினேன். எரிந்து வான்நோக்கும் அம்பு போல என்னைத் திரட்டி எழுந்தேன்.
அப்பால் சால்வனின் படைகளைச்சேர்ந்த கழைநோக்கி ஒருவன் தன் நீள்கழையுடன் சென்றுகொண்டிருப்பதை கண்டேன். பாய்ந்து அவனை வெட்டி வீழ்த்தியபின் கழையின் கணுக்களில் கால்வைத்து மிதித்து மேலேறி நுனிக்குச் சென்று என் இடையிலிருந்து பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதினேன். அந்த ஒலியை அறியாத யாதவர் இல்லை. அக்கணமே பின்னெட்டு எடுத்துவைத்துக்கொண்டிருந்த யாதவர் வாழ்த்துக்கூச்சலும் போர்விளியுமாக பெருகி சால்வனின் படைகள்மேல் மோதினர். நான் இறக்கவில்லை என்றறிந்து சால்வனின் படைகொண்ட குழப்பமும் யாதவரின் புத்தெழுச்சியும் சந்தித்த கணத்தில் எங்கள் வெற்றி உறுதியாயிற்று. சால்வனின் படைகள் சரிந்து விழும் பெருமரம்போல ஓசையிட்டபடி பின்னகரத்தொடங்கின.
போர்க்களத்தில் அரசன் அத்தனை உயரத்துக்கு மூங்கில்மேல் ஏறுவது மதியுடைமை அல்ல என்பதனால் கீழே என் மெய்க்காவலர் கூச்சலிட்டனர். என்னை நோக்கி வந்த அம்புகளைக் கண்டேன். அதிலொரு அம்பு சால்வனுடையதென்று அறிந்த அக்கணமே என் ஆழியால் அவன் கழுத்தை அறுத்தெறிந்தேன். கழை சரியத்தொடங்கியதை உணர்ந்தும் குதிக்காமல் மீண்டும் பாஞ்சஜன்யத்தை முழக்கினேன். அது வெற்றிமுழக்கம். சால்வன் இறந்ததை அறிந்து யாதவர் வெற்றிக்குரலெழுப்பினர். வாள்களையும் வேல்களையும் தலைக்குமேல் வீசி அமலையாடினர். மூங்கிலுடன் சரிந்து படைநடுவே விழுந்த என்னை மெய்க்காவலர் சூழ்ந்துகொண்டனர். என் தோளிலும் விலாவிலும் அம்புகள் பாய்ந்திருந்ததை அதன் பின்னரே அறிந்தேன். கூர்மனின் தந்தை போஜன் என்பதை உணராதுபோனமைக்காக என் உள்ளம் எரிந்தது.
சால்வனின் படைகள் சிதறி பின்வாங்கத் தொடங்கின. யாதவர் அங்கு நின்று வெற்றிக்களியாட்டு கொள்ளவும் நகருக்கு திரும்பிச்செல்லவும் விழைந்தனர். ‘இல்லை, இறுதிப்படைவீரனும் எஞ்சும் வரை போர் புரியுங்கள். ஒருவன்கூட சிறைப்படுத்தப்படலாகாது. ஒருவன்கூட புண்பட்டு எஞ்சலாகாது. அத்தனைபேரும் கொல்லப்பட்டாகவேண்டும். இது என் ஆணை!’ என்றேன். போர்வெற்றிக்களிப்பு சற்றுநேரத்திலேயே கொலைவெறியாகியது. புண்பட்டு துடித்தவர்கள் தலைவெட்டி வீழ்த்தப்பட்டனர். தப்பி ஓடியவர்களை துரத்திச்சென்று கொன்றனர் யாதவர்.
அது உண்மையில் மிக எளிது. போராடுபவர்களே படையென இணைந்தவர்கள். தப்பி ஓட முடிவுசெய்த கணமே அவர்கள் தனியர்கள். அவர்களில் பின்தங்கியவர்கள் களைத்தவர்கள், புண்பட்டவர்கள், அஞ்சி நடுங்குபவர்கள். பிடிபட்டதுமே விழிமூடி இறப்பை ஏற்பவர்கள். எதிர்க்காதவர்களை கொல்வதன் இன்பம் ஒன்றுண்டு. அது மானுடனை விலங்கு என, அரக்கன் என ஆக்குவது. அதை அவன் தெய்வமென ஆகிவிட்டதாக எண்ணிக்கொள்கிறான். கொல்லக் கொல்ல வாள்கள் ஒளியேறுகின்றன. கொல்லப்படுபவர்கள் மானுடரல்லாது வெறும் தசைக்குவியல்களாக ஆகிக்கொண்டே செல்கிறார்கள்.
நான் என் படைவீரர்களை அவர்களின் இறுதி உளத்தடைகளும் உடைந்து வெறும் கொலைக்கருவிகளென ஆக்க விழைந்தேன். சால்வனின் படைகளுக்கு நிகழ்ந்ததென்ன என்று நூறாண்டுகளுக்கு சூதர் பாடவேண்டும் என திட்டமிட்டேன். என் படைகள் சிறைவைக்கப்பட்டிருந்த என் மைந்தரை மீட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட சால்வனின் ஏழு மைந்தரையும் அங்கேயே தலைவெட்டி சரித்தனர். என் படைகளை சால்வனின் சௌபபுரிவரை அவர்களை துரத்திச்சென்று கொல்லும்படி ஆணையிட்டு அனுப்பினேன். நானும் என் மெய்க்காவல்படையும் மட்டும் மீண்டும் வஜ்ரவாகத்திற்கு வந்தோம்.
வஜ்ரவாகத்தில் நிகர்நிலையில் போர் நடந்துகொண்டிருந்தது. சால்வனின் படைகளை என் படைகள் வென்ற செய்தியை அறிந்ததுமே அவர்களின் துணிவு தளரத்தொடங்கியது. உடனே அவர்களுக்குள் பூசல் எழுந்தது. குங்குரர்களும் போஜர்களும் பணிய விரும்பினர். ஹேகயர் போரிட்டபடியே பின்வாங்கி சிபிநாட்டுப்பாதையில் செல்ல விரும்பினர். அப்பூசலே அவர்களின் ஆற்றலை அழித்தது. பாஞ்சஜன்யத்தை ஊதியபடி நான் அந்தகர்களும் விருஷ்ணிகளும் போரிட்டுக்கொண்டிருந்த களத்தில் தோன்றியதுமே எதிர்ப்படை சூழ்கை சரிந்து மூன்றுபிரிவுகளாகப் பிரிந்து பின்வாங்கத் தொடங்கியது.
மூன்றுநாழிகைக்குள் போர் முடிந்தது. ஹேகயர்குடி படைத்தலைவர் ஜஹ்னி களத்தில் இறந்தார். பிறர் விருஷ்ணிகளிடம் வாள்தாழ்த்தி களம்பணிந்தனர். நான் ஆனர்த்தநகரிக்குச் சென்று அங்கே படைநிறுத்தினேன். அந்நகரும் சூழ்ந்திருந்த ஊர்களும் சால்வனின் படைகளால் சூறையாடப்பட்டு எரிபரந்தெடுக்கப்பட்டு சுடுகாடுபோல் கிடந்தன. அந்நகரில்தான் படைநிலையும் உண்டாட்டும் நிகழவேண்டுமென எண்ணினேன். அங்கு வந்த ஒவ்வொரு விருஷ்ணியும் அந்தகனும் குருதி கொதித்துக்கொண்டிருந்தான். அவர்கள் வரும்வழியெல்லாம் சூறையாடப்பட்ட ஊர்களில் இருந்த குடிகள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறியபடி எதிர்நின்று முறையிட்டனர்.
சௌபநாட்டின் எல்லைவரை சென்று கொலையாட்டு செய்து யாதவப்படை மீண்டு வந்தது. சால்வனின் படைகளில் ஐந்திலொன்றே சௌபபுரிக்கு மீண்டது. ‘யானையால் நசுக்கிக் கொல்லப்பட்ட விலங்கின் குருதித்தீற்றல் போல சௌபபுரி முதல் ஆனர்த்தம் வரை சால்வப்படையினரின் குருதி நீண்டு கிடந்தது’ என அதை பிறகு ஒரு சூதன் பாடினான். குருதியாலான செய்தி ஒன்றை ஷத்ரியர்களுக்கு அனுப்ப விழைந்தேன், அதை அனுப்பினேன். ஷத்ரிய அரசுகள் அனைத்திலும் குளிர்ந்த செயலற்ற அமைதி பரவியது.
ஆனர்த்தநகரியில் சிறைப்பட்டோரை நான் மன்றுநிறுத்தினேன். தாருகனின் தலையையும் ஹேகயரான ஜஹ்னியின் தலையையும் கொண்டுவந்து ஆனர்த்தநகரியின் கோட்டைமுன் ஈட்டியில் குத்திவைத்தேன். அதன் முன் குங்குரர்களின் படைத்தலைவர் வாகுகரையும் போஜர்படைத்தலைவர் சீர்ஷரையும் கழுவிலேற்றினேன். ‘போரில் பணிந்தவர்களை கழுவேற்றுவது என்ன மரபு?’ என்று சீர்ஷர் கண்ணீருடன் கூவினார். ‘படைவீரர்களுக்குரிய மதிப்பை எங்களுக்கு அளியுங்கள், யாதவரே. உங்கள் நகருக்காக படைநின்றவர்கள் நாங்கள் என்றாவது நினையுங்கள்’ என்றார் வாகுகர்.
‘நீங்கள் போர்நெறிப்படி எனக்கு எதிராக படைகொண்டு வந்த எதிரிமன்னர்கள் அல்ல. என் கோலுக்கு வஞ்சமிழைத்தவர். குடிவஞ்சமிழைத்தவருக்கு இறுதிநீருக்கும் விண்ணேற்றும் சடங்குகளுக்கும் சூதர்பாட்டில் புகழ்மொழிக்கும் உரிமை இல்லை என்பதே நெறி’ என்றேன். அவர்களுடன் அவர்களின் அணுக்கப்படையினர் நாநூறு பேர் கழுக்கூர்களில் நின்று சுழன்று கதறித் துடித்து அமைந்தனர். அவர்களுக்கு சுற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட ஹேகயர்களையும் குங்குரர்களையும் போஜர்களையும் நிறுத்தி அதை பார்க்கவைத்தேன்.
அதன்பின் அவர்களில் நூற்றுக்குடையோர் அனைவரின் கால்களின் கட்டைவிரல்களையும் வெட்டும்படி ஆணையிட்டேன். அவர்களின் ஆண்விதைகளை மருத்துவர்களைக்கொண்டு அகற்றி நெற்றியில் தொழும்பர்க்குறியை சூடுபொறித்தேன். அவர்களின் உள்ளங்கைகளில் துளையிட்டு அதன்வழியாக வடம் செலுத்தி சேர்த்துக்கட்டி ஒற்றைத்திரளென இழுத்துச்சென்று துவாரகையின் துறைமேடைகளில் அடிமைகளாக பணிக்கமர்த்தினேன். என்னை கைபிணைத்துக் கட்டிய சரபனையும் என்னை சால்வனுக்கு ஒற்றுக்கொடுத்த கூர்மனையும் கால்கள் சேர்த்துக்கட்டி குதிரைகளுடன் பிணைத்து ஆனர்த்தநகரியிலிருந்து துவாரகைவரை தரையில் இழுபட்டுச் செல்லவைத்தேன். துவாரகையை அடைந்தபோது அவர்களின் உடலில் வெள்ளெலும்புக்கூடு வெளித்தெரிந்தது.
துவாரகையில் அவர்களை தெருக்களினூடாக இழுத்துச்சென்றபோது நகர்மக்கள் இருபக்கமும் விழிதெறிக்க நின்று நோக்கினர். செல்லும்வழியிலேயே தளர்ந்துவிழுந்தவர்கள் கழுவில் குத்தி வைக்கப்பட்டார்கள். அவர்களை நிறுத்திய செண்டுவெளியில் மன்றெழுந்து ‘உங்கள் தந்தையென்றிருந்தேன். உங்கள் வாயில்கள்தோறும் வந்து நின்று விழிநீர் விட்டு இரந்தேன். உங்கள் நெறியின்மையால் அதை உருவாக்கிய அறிவின்மையால் என்னை கொலைவாள் ஏந்தச்செய்தீர்கள். இன்று உங்களுக்கு நிகழ்ந்தது யாதவர்கள் ஒருபோதும் மறக்காத செய்தியாகட்டும்’ என்று சொன்னேன்.
‘இனி இந்நகரில் ஆள்வது ஒருசொல்லே. மறுசொல் உங்கள் எண்ணங்களில் ஒருமுறை எழுந்தால்கூட உங்கள் மைந்தர் தலையறுந்து இறந்தார் என உறுதிகொள்ளுங்கள். உங்கள் எண்ணங்களுக்குள் புகுவேன். உங்கள் கனவுகளை கண்காணிப்பேன். மறுசொல்லற்ற பணிவன்றி இனி எதையும் பொறுக்கமாட்டேன்’ என்றேன். திகைப்பு நிறைந்த விழிகளுடன் யாதவர் என்னை நோக்கி நின்றனர். கதைகளில் அவர்கள் மதுராவில் குருதியாடிய அச்சிறுவனைப்பற்றி கேட்டிருந்தனர். அது சூதர்கதையென்றே ஆகிவிட்டிருந்தது. அவன் பேருருவைக் கண்டு அவர்களின் அகம் நடுங்கியதைக் கண்டேன்.
என் தமையனின் அரசி ரேவதி பெண்டிர் அமர்ந்த பேரவையில் எழுந்து கண்ணீருடன் கூவினார் ‘என் குடி அழிக்கப்படுவதைக் கண்டு நான் வாளாவிருக்கமாட்டேன். போரில் வெல்லமுடியாமலாகலாம். இந்த அவையில் நான் சங்கறுத்துச் செத்துவிழுவேன். அதை எவர் தடுப்பார் என்று பார்க்கிறேன்.’ அவர்கள் விழிநோக்கி சொன்னேன் ‘அரசி, நீங்கள் சாகலாம். ஆனால் அப்படி நிகழ்ந்தால் உங்கள் தந்தையையும் தமையன்களையும் இளையோரையும் மறுநாளே நகர்மன்றில் கழுவேற்றுவேன்.’ திகைத்து வாய்திறந்து நின்ற குக்குட நாட்டு அரசி திரும்பி உள்ளே ஓடினார்.
பதறி அமர்ந்திருந்த என் அரசியரை நோக்கி திரும்பியபோது அவர்கள் கைகூப்பினர். விழிதெறிக்க நோக்கிய சத்யபாமையிடம் சொன்னேன் ‘இது என் நகர். என் சொல்லே எவர் சொல்லும். மறு எண்ணம் எவரில் எழுந்தாலும் அவர்கள் தங்கள் குடும்பத்தினரை கழுவேற்றுகிறார்கள்.’ ஒரு நடுக்கத்தின் அசைவு மட்டுமே அவர்களில் தெரிந்தது. ‘இன்றுமாலை சத்யபாமை ஒற்றை மரவுரியுடன் சென்று போஜர்களின் குடித்தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் கால்பொடி சென்னி சூடி பொறுத்தருளும்படி கோரவேண்டும். இன்றுமுதல் ஒருவாரம் ஊர்மன்றில் உணவு ஒழித்து நோன்பிருக்கவேண்டும்’ என்றேன்.
அனைத்து குலப்பூசல்களும் முற்றிலும் முடிவுக்குவந்தன. நகரில் குலமென்னும் சொல்லைச் சொல்லவே யாதவர் அஞ்சினர். என் படைகளனைத்தையும் மீண்டும் திரட்டிக்கொண்டு சால்வனின் சௌபபுரியை தாக்கினேன். அங்கே அவன் முதிரா இளமைந்தனை அரசனாக்கி அவன் தேவி ஆட்சிசெலுத்திக்கொண்டிருந்தாள். அந்நகரை வென்று அதன் துறைமுகப்பையும் அங்காடிகளையும் எரித்தேன். அதன் அத்தனை கட்டடங்களையும் கரியும் சாம்பலுமாக எஞ்சவைத்தேன். அக்கரியில் ஒருபிடி அள்ளிக் கொண்டுசென்று அஸ்தினபுரியின் கங்கைவாயிலில் சிலையென நின்றிருக்கும் காசிநாட்டு இளவரசி அம்பையன்னைக்குப் படைத்து ஒரு பூசனை செய்யும்படி சூதர்களை அனுப்பினேன்.
சால்வனுக்கு ஆதரவளித்த திரிகர்த்தர்களையும் உசிநாரர்களையும் தாக்கி அவர்களின் நகர்களைச் சூறையாடி எரியூட்டி மீண்டேன். கூர்ஜரனுக்கும் மாளவனுக்கும் ஓலை அனுப்பி எனக்கு நேர்ந்த போரிழப்புகளுக்காக அவர்களின் நாட்டை நான் தாக்காமலிருக்கவேண்டும் என்றால் உரிய தண்டத்தொகையை அவர்கள் துவாரகைக்கு அனுப்பவேண்டும் என ஆணையிட்டேன். ஜயத்ரதனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் என் சொல்லாக ஓலையனுப்பி அவர்கள் என் கையால் இறப்பதை விரும்பவில்லை என்றால் மறுமுறை துவாரகை என்னும் சொல்லையே நாவில் ஏற்றலாகாது என எச்சரித்தேன்.
அதன்பின்னரே போர் முடிந்தது என நிறைவடைந்தேன். ஷத்ரியநாடுகள் அனைத்திலும் என்னைப் பற்றிய அச்சமே திகழ்வதை ஒற்றர்கள் சொன்னார்கள். இந்திரப்பிரஸ்தமும் அர்ஜுனனின் வில்லும் இல்லையேல் நான் வீழ்வேன் என எண்ணியவர்கள் மறுமுறை அவ்வெண்ணத்தை உரைக்கவே நாவஞ்சினார்கள். அஸ்தினபுரியின் அவையில் கர்ணன் சகுனியிடம் ‘அஸ்வத்தாமனை அறிவுடையோன் என எண்ணியிருந்தேன். மூடன், பெருமூடன். அவன் அம்புகள் யாதவனுக்கு சிறுபூச்சிகளுக்கு நிகர் என அறிந்திருக்கவில்லை என்றால் அவன் கற்றதுதான் என்ன?’ என்றான். ‘போர் வெல்லப்படுவது தலைவர்களால், படைகளால் அல்ல என்றறிந்தால் வீணனாகிய சால்வனை அனுப்புவானா அவன்?’ ஹேகயர்களுக்கு ஆதரவளித்த சகுனி தலைகுனிந்து நிலம் நோக்கி அமர்ந்திருந்தார் என்று அறிந்தேன்.
அனைத்தும் சிலமாதங்களுக்கே என நான் அறிந்திருந்தேன். மானுடர் இன்பங்களையே விழைகிறார்கள். இன்பத்திற்காக அவர்கள் அனைத்தையும் பொறுத்துக்கொள்வார்கள். பெருஞ்சிறுமைகளை, ஈடில்லா இழப்புகளை, அணையமுடியாத வஞ்சங்களை, செரிக்க முடியாத கசப்புகளை. துவராகையில் மீண்டும் கலைகளையும் விழாக்களையும் அமைத்தேன். முதல் விழவறிவிப்புதான் கடினமானது. அது மக்களை சீண்டக்கூடாது. அதற்காக ஒரு தருணத்தை நோக்கியிருந்தேன். கம்சரால் கொல்லப்பட்ட மதுராவின் இளமைந்தருக்காக நீர்க்கடன் அளிக்கும் ஆடிமாதக் கருநிலவுநாள் வந்தது. அதற்கான அரசறிவிப்பு வெளிவந்தபோது எவரும் மறுப்பு எதுவும் சொல்லமுடியவில்லை.
மேலும் மூன்று மாதங்களாக அவர்கள் சோர்வில் இருந்தனர். உளச்சோர்வு பெரும் சுமை. நாள் செல்லச் செல்ல எடைவளர்வது. வாழ்க்கையின் பிற அனைத்தையும் அது பொருளற்றதாக்குகிறது. இறப்பை நோக்கி மட்டுமே அதனூடாகச் செல்லமுடியும். உயிர்த்துடிப்புள்ளவர்கள் அதிலிருந்து விடுபட விழைவுகொண்டனர். குழந்தைகள் துயரத்திலும் சோர்விலும் வாழ விழைவதில்லை. எங்கும் விளையாடுவதற்கென ஒரு வாய்ப்பையே அவர்களின் உள்ளம் விழைகிறது. குழந்தைகளுக்கு அண்மையானவர்கள் என்பதனால் பெண்களும் அதையே நாடுகின்றனர். அவர்களின் அவ்விழைவை கெஞ்சலாகவும் பின் சிணுங்கலாகவும் மீறலாகவும் ஆண்களுக்கு அளிக்க அவர்களால் இயலும்.
மூன்றுமாதகாலம் ஓர் இறுதி எல்லை. வஞ்சங்களும் கசப்புகளும் பேசிப் பேசி, நினைவில் ஓட்டி ஓட்டி பழையதாயின. பலதடவை பேசப்பட்ட, நினைக்கப்பட்ட ஒன்று எத்தகையதாயினும் எளிதும் சிறிதுமாக தோன்றத்தொடங்குவது மானுட உள்ளத்தின் விந்தைகளில் ஒன்று. அனைத்தையும் பேசிப் பேசி மானுடர் கடந்துசெல்வது அதனால்தான். அனைத்தும் குருதியுலர்ந்து தசைகூடி பொருக்காடி தழும்பானபோது அனைவரும் வாழ்வுக்கு வர விழைந்தனர். நிறைவுதரும் அடிப்படை ஒன்று அமைந்த ஒரு கொண்டாட்டம் அறிவிக்கப்பட்டபோது அவர்கள் அதை நோக்கி பெருகி எழுந்தனர்.
இளமைந்தருக்கான விழவைத் தவிர்ப்பது குலமூதாதையர் விரும்பாச்செயல் என்று சொல்லிக்கொண்டனர். துயருற்றிருப்பது அவர்களின் குருதிபலியை வீணாக்குவது. தங்கள் மைந்தர் கொண்டாடுவதை அவர்கள் விண்ணிலிருந்து நோக்கி மகிழ்வார்கள். சொல்லில் இருந்து சொல்லென அவ்வெண்ணங்கள் பெருகின. சொல்லப்பட்டு செவிகளால் கேட்கப்பட்டதுமே அவை பொருண்மையான ஆற்றல்கொண்டன.
நீர்க்கடன் விழவுக்கு பலிப்பொருட்களுடன் கடற்கரைக்கு திரண்டு வந்து, அன்னம் சமைத்து அருகம்புல்லுடன் உருட்டி இலைவிரித்துப் படைத்து வணங்கி, நீருக்கு அளித்து, மூழ்கி எழுந்து வருவது வழக்கமான சடங்கு. துவாரகையின் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் கடலுக்கு வந்தால்கூட அதை வெற்றி என்றே எண்ணினேன். காலையில் மக்கள் வரத்தொடங்கியபோது கால்பங்கு மக்கள் வரவே வாய்ப்பு என்று அக்ரூரர் கணித்துச் சொன்னார். ஆனால் சாலைகளில் மக்கள் பலிப்பொருட்களேந்திய தட்டுகளுடன் செல்லக்கண்டதும் மேலும் மேலுமென மக்கள் வந்தனர். மாலைக்குள் துவாரகையின் குடிகளில் பெரும்பாலும் அனைவருமே கடல்நீராடினர்.
மறுவாரமே மூதாதையருக்கான ஒரு பூசையை நிகழ்த்தும்படி ஆணையிட்டேன். அதனுடன் சூதர்களின் பாடலும் நாடகமும் அரங்குகண்டன. அதில் துவாரகையினர் கலந்துகொள்வதைக் கண்டபோது அங்கு ஏதேனும் துயர் முன்பு நிகழ்ந்ததா என்னும் ஐயமே எழுந்தது. இழந்தவற்றை நோக்கி மீளும் வெறியுடன் துவாரகையினர் களியாட்டுக்களை நோக்கி வந்தனர். கடலாட்டும், பாலையில் வேட்டையாடலும், கன்றுபூட்டலும், புரவிமெருக்குதலும், ஏறுதழுவுதலும், செண்டுவெளியின் படைக்கலப்பயிற்சிப் போட்டிகளுமாக நகர் முழுமையாக பொலிவுகொண்டது.
துவாரகை அமைந்ததைக் கொண்டாடும் பெருவாயில் விழாவுக்கு நகர் முன்பைப்போலவே அணிகொண்டது. முன்பைவிட என்றார் அக்ரூரர். யவனரும் பீதரும் சோனகரும் காப்பிரிகளும் தென்னவரும் வந்து என் அவை நிறைத்தனர். அங்காடிகளில் புதுப்பொருட்கள் வந்து குவிந்தன. கள்ளும் காமமும் பெருகின. நகரெங்கும் மீண்டும் கட்டற்ற களியாட்டு ததும்பியது. பெருவாயில் பூசனைக்கு நான் என் தேரில் நகர்வீதிகளினூடாகச் செல்லும்போது கற்சுவர்களும் முரசுத்தோற்பரப்புகள் என அதிரும்படி எழுந்த வாழ்த்தொலிகளால் சூழப்பட்டேன். களிப்பு நிறைந்த முகங்கள் அலையலையெனத் ததும்பின. அரிமலர் மழை பொழிந்த திரையை கிழித்துக் கிழித்துச் சென்றேன். என்னை வாழ்த்திய வீரர் முகங்களில் யாதவரின் அத்தனை குடிகளும் ஒன்றெனக் கலந்திருப்பதை கண்டேன்.