‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46

[ 17 ]

“சால்வனின் படைகள் தாக்கிய செய்தி வந்தபோது நான் அரசவையில் இருந்தேன். பறவைச்செய்தியுடன் அக்ரூரர் ஓடி அவைக்குள் நுழைந்து என்னை அடைந்து என் காதில் செய்தியை சொன்னார். அவர் சொல்லத் தொடங்கியதுமே நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன். குட்டிக்குரங்கை அனுப்பியிருக்கிறார்கள், ஆனால் அதன் கைகளில் இருப்பது கூர்வாள்” என்றார் இளைய யாதவர். “அப்போதே அவையை முடித்துக்கொண்டு மந்தணஅறை நோக்கி சென்றேன். அமைச்சர்கள் அனைவரையும் அங்கு வரச்சொன்னேன். மூத்தவர் வேட்டைக்குச் சென்றிருந்தார்.”

அரசவை கூடும்போது என் நெஞ்சிலிருந்த எண்ணம் ஒன்றே, துவாரகையில் படைப்பிளவு நிகழ்ந்திருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆகவே நகரத்தை வல்லமைகொண்டதாக ஆக்கவேண்டும். கீழிருந்து மாளவமோ மேலிருந்து கூர்ஜரமோ சிந்துவோ நகரை தாக்கக்கூடும். மாளவத்தின் துறைமுகமாகிய மாண்டவபுரத்தில் இருந்து கலங்கள் ஒரே இரவில் துவாரகையை வந்தடையமுடியும். சிந்துவழியாக தேவபாலபுரத்தை அடைந்து படகுகளில் துவாரகையை தாக்குவதும் எளிது. துவாரகை வெல்லப்படாமல் யாதவர்கள் அழியவும் மாட்டார்கள். ஆகவே நான் துவாரகையிலேயே இருந்தேன்.

நகரின் அனைத்து காவல்மேடைகளிலும் எரியம்புகள் பொருத்தப்பட்ட பொறிவிற்களும், பீதர்நாட்டு எரியுருளைகள் கொண்ட சதக்னிகளும் சித்தமாக்கப்பட்டன. அம்பரீஷங்கள் அரக்கும் எண்ணையும் பீதர்நாட்டு எரிகரியும் கொண்டு நிறைக்கப்பட்டு காத்திருந்தன. பாலைநிலத்து வழிகளில் ஆயிரம் இடங்களில் புதைகுழிகள் அமைக்கப்பட்டு அவற்றுக்குள் நச்சுதடவிய நாவுகளுடன் கூர்வேல்கள் நடப்பட்டன. குதிரைகளும் ஒட்டகங்களும் அத்திரிகளும் எந்நேரமும் சேணம் அணிவிக்கப்பட்டு உணவும் நீரும் அளிக்கப்பட்டு சித்தமாக்கி நிறுத்தப்பட்டன. நகரை அணுகும் பாலங்களனைத்தும் உடைக்கப்பட்டன. அகழிகளில் கடல்நீர் நிறைக்கப்பட்டது.

SOLVALARKAADU_EPI_46

விரைவுக்காவல்படகுகள் துவாரகையின் கடல் எல்லைவிளிம்புகளில் உலவின. அத்தனை கண்காணிப்புமேடைகளிலும் இரவும் பகலும் காவலர் நிறுத்தப்பட்டனர். வட எல்லை கதனாலும் தென்னெல்லை உத்தவனாலும் காக்கப்பட்டது. நகரில் மதுச்சாலைகள் மூடப்பட்டன. சூதர்களும் பாணர்களும் நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவையனைத்துக்கும் அடியிலிருந்தது ஒன்றே, நகருக்குள் வாழ்பவர்களில் எவர் நம் எதிரிகள் என்று உய்த்தறியக்கூடவில்லை. போஜர்களையும் ஹேகயர்களையும் குங்குரர்களையும் நான் தனித்து ஐயப்படமுடியாது. எனவே நகருக்குள் நுழைபவர் அனைவரும் முத்திரைகாட்டி ஒப்புதல் பெறவேண்டுமென ஆணையிட்டேன். அத்தனை காவல்நிலைகளிலும் அத்தனை யாதவகுலங்களிலிருந்தும் ஓரிருவர் இருந்தாகவேண்டுமென ஏற்படுத்தினேன். வேறுவழியிருக்கவில்லை.

ஆனால் அப்படி ஓர் ஆணையை பிறர் அறியாமல் இடுவது நடக்காது. காவலர் தெரிவுசெய்யப்படும்போதே அவர்கள் எந்த குலம் என்னும் வினா எழுந்தது. அந்தகர்களும் விருஷ்ணிகளும் பிறரை காட்டிக்கொடுத்தவர்கள் என்றே எண்ணினர். அவர்களை கண்காணிப்பது தங்கள் பொறுப்பு என்று எடுத்துக்கொண்டனர். அவர்கள் தங்களை அந்தகர்கள் சிறுமைப்படுத்துவதாக எண்ணினர். ஒவ்வொரு காவல்நிலையிலும் காவலுக்கு நிகராக இந்த நிகழாப்பூசல் விளங்கியது.

துவாரகையின் வடக்கு எல்லைக்கு அருகே இருந்த காவல்கோட்டையான ஆனர்த்தநகரியில் என் மைந்தன் பிரத்யும்னன் தன் உடன்பிறந்தாருடன் தங்கியிருந்தான். அவனுக்குத் துணைநின்ற சாருதோஷ்ணனும் சாம்பனும் தாம்ரப்தனும் தீப்திமானும் சுபத்ரனும் பிருஹத்சேனனும் வஹ்னியும் விற்கலையில் சிறந்தவர்கள். சால்வனின் படைத்தலைவனாகிய க்‌ஷேமதூர்த்தி நால்வகைப்படைகளுடன் என் எல்லைக்குள் புகுந்து பதினெட்டு காவல்நிலைகளை முறித்து நூறு சிற்றூர்களையும் எட்டு சுங்கநிலைகளையும் நான்கு சந்தைகளையும் தாக்கி சூறையாடினான். ஒவ்வொருநாளும் அவன் படைகள் ஊர்களுக்குள் புகுந்த செய்தி வந்துகொண்டிருந்தது.

அச்செய்தியை எனக்கு அனுப்பாமல் தானே வென்றுவிடலாமென்று பிரத்யும்னன் எண்ணினான். தன் இளையோன் சாம்பன் தலைமையில் படையை அனுப்பினான். சாம்பன் தன் இளையோருடன் சென்று க்‌ஷேமதூர்த்தியை பலாசவனம் என்னும் ஊரருகே இருந்த பொட்டல்நிலத்தில் சந்தித்தான். உண்மையில் அங்கு சென்றபின்னரே சால்வனின் படைகள் எத்தனை பெரியவை என்று தெரிந்தது. படைகள் எல்லைமீறி வந்து சிறுபூசல்களிலும் கொள்ளையிலும் ஈடுபடுவது எப்போதுமுள்ள வழக்கம். க்‌ஷேமதூர்த்தியின் தலைமையிலிருந்த படைகள் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகுழுக்களாக எல்லைக்குள் வந்தமையால் அவற்றின் விரிவை உணரமுடியவில்லை.

ஆனர்த்தநகரியில் இருந்து சாம்பன் கிளம்பியதுமே அச்செய்தி அங்கே சென்றுவிட்டிருந்தது. அத்தனை குழுக்களும் இணைந்து ஒற்றைப்படையாக ஆயின. நான்குநாழிகைநேரம் நடந்த அப்போரில் தாம்ரப்தனும் தீப்திமானும் சுபத்ரனும் பிருஹத்சேனனும் காயம்பட்டு களத்தில் விழுந்தனர். அவர்களை மீட்டு தேரிலேற்றிக்கொண்டு சாம்பன் திரும்பவந்து ஆனர்த்தநகரியை அடைந்தான். அவனுக்கும் தோளில் அம்புபட்டு ஆழ்குருதிப்புண் ஏற்பட்டிருந்தது. அதன்பின்னரே அவர்கள் துவாரகைக்கு செய்தியறிவித்தனர்.

மறுநாள் என் மைந்தன் பிரத்யும்னன் அனைத்துப் படைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு க்‌ஷேமதூர்த்தி மேல் போர்கொண்டு சென்றான். அவர்கள் செல்வதற்குள் சால்வனின் பிறிதொரு அமைச்சனாகிய வேகவானின் தலைமையில் பெரும்படை ஒன்று வந்து க்‌ஷேமதூர்த்தியுடன் சேர்ந்துகொண்டிருந்தது. தான் எண்ணிச்சென்றதைவிட இருமடங்குப் படையை எதிர்கண்டும் பிரத்யும்னன் சோர்வுறவில்லை. ஆனால் யாதவப்படை தளர்ந்துவிட்டது. காளத்ருமம் என்னும் ஊரை ஒட்டிய குறுங்காட்டில் ஒருநாள் முழுக்க அப்போர் நிகழ்ந்தது. அதைச் சூழ்ந்திருந்த பன்னிரு சிற்றூர்கள் எரியம்புகளால் சாம்பலாயின. அங்கிருந்த காளவதி என்னும் ஓடை குருதிப்பெருக்காக மாறியது.

அந்தப் போரில் என் மைந்தர்களான உன்னதனும் அனிலனும் சகனும் பிரபலனும் களத்தில் காயம்பட்டு விழுந்தனர். சத்யபாமையின் மைந்தர்களான பானுவும் சுபானுவும் ஸ்வரபானுவும் பிரபானுவும் மித்ரவிந்தையின் மைந்தர்களான விருகனும் ஹர்ஷனும் மகாம்சனும் சிறைபிடிக்கப்பட்டனர். பிரத்யும்னன் படைகளுடன் திரும்பி ஓடி நகருக்குள் புகுந்து அரணிட்டுக்கொண்டான். சால்வனின் படைகள் அவ்வெற்றியைக் கொண்டாட யாதவச் சிற்றூர்களை எரியூட்டிக்கொண்டு நம் எல்லைக்குள் படையோடினர்.

நான் அனுப்பிய ஆணையைப் பெற்றதும் பிரத்யும்னன் தன் பிற உடன்பிறந்தார் அனைவருக்கும் செய்தி அனுப்பி தன்னுடன் சேரும்படி ஆணையிட்டான். வடமேற்கில் சிபிநாட்டுக்குச் செல்லும் வணிகவழியைக் காத்து அமைந்திருந்த சக்ரசிலை என்னும் கோட்டையிலிருந்த நக்னஜித்தியின் மைந்தர்களான வீரனும் சந்திரனும் அஸ்வசேனனும் சித்ராகுவும் தங்கள் படையுடன் வந்து பிரத்யும்னனுடன் சேர்ந்துகொண்டனர். கூர்ஜரத்தின் எல்லைக்காவலில் இருந்த பத்ரையின் மைந்தர்களான சங்க்ரமஜித்தும் பிருகத்சேனனும் சூரனும் பிருகரனனும் தங்கள் படைகளுடன் வந்து இணைந்தனர். சிந்துவைக் காக்கும் துறைநகரான கருடத்வஜத்தில் இருந்த சாத்யகியை நான் முழுப்படைகளுடன் என் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு அனுப்பினேன்.

அவர்கள் சால்வனின் மீது படைகொண்டு செல்லும்போதே திரிகர்த்தர்களின் படைத்தலைவனாகிய விவிந்தியன் தன் படைகளுடன் வந்து சால்வனின் படைகளுடன் இணைந்துகொண்டான். மீண்டும் தாங்கள் எண்ணிவந்ததைவிட மும்மடங்கு பெரிய படையை என் மைந்தர் எதிர்கொண்டார்கள். ஜம்புதலம் என்னும் ஊரில் நிகழ்ந்த அப்போரில் என் மைந்தன் சாருதோஷ்ணன் விவிந்தியனைக் கொன்றான். அவர்கள் தரப்பில் நிகழ்ந்த முதல் அழிவு அது. அவர்களின் படைகளை அது கலங்கச்செய்தது. சிறியபடை என்றாலும் இளையோர் என்பதனால் வெறிகொண்டு போரிட்டனர் அவர்கள்.

அப்போதுதான் சால்வன் தன் புதியமுறை படைசூழ்கையான சௌபத்தால் காக்கப்பட்டு களத்திற்கு வந்தான். அதை பறக்கும் கோட்டை என்று அவர்கள் அழைத்தனர். நூற்றுக்கணக்கான யானைகள்  இரும்பாலான பெருங்கவசங்களை சுமந்து தங்களை அவற்றின் பின் முழுமையாக மறைத்துக்கொண்டு வந்தன. அக்கவசங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இரும்பாலான கோட்டை போல  தெரிந்தன. அவற்றுக்குப் பின்னால்  வில்லவர்கள் ஒளிந்து வந்தனர். அவர்களின் தலைக்குமேலும் இரும்புப்பாளங்கள் யானைகளால் தூக்கிப்பிடிக்கப்பட்டு முற்றிலும் மூடியிருந்தன. யவனர்களின் போர்சூழ்கை அது.

இரும்பு உருகி வெள்ளமென வருவதுபோல சௌபம் அணுகுவதைக் கண்டு யாதவப்படைகள் திகைத்தன. சௌபத்தின் இரும்புக்கூரை வாய் விட்டு விலக உள்ளிருந்து எழுந்த பல்லாயிரம் அம்புகள் மழையென விழுந்து உயிர்குடித்தன. யாதவர்கள் எய்த அம்புகள் மறுகணமே மூடிக்கொண்ட இரும்புக்கோட்டைமேல் முட்டி மணியோசைகள் எழுப்பி உதிர்ந்தன. சாத்யகி ’முகப்பை மட்டும் உடையுங்கள்… வென்றுவிடலாம்’ என்று கூவியபடி சௌபத்தை தாக்கச் சென்றான். அவன் நெஞ்சின் கவசம் பிளந்து தாக்கியது சால்வனின் அம்பு. அவன் புரவியிலேயே குப்புற விழுந்து குருதி சிந்தலானான்.

தளர்ந்து பின்னால் சரிந்துகொண்டிருந்த யாதவப்படைகளை நோக்கி ’முன்னேறுக! அஞ்சற்க! வெற்றி பெறுவோம்… நாம் வென்றே தீர்வோம்’ என்று கூவியபடி பிரத்யும்னன் முன்னேறிச் சென்றான். அவனால் செலுத்தப்பட்ட புரவிப்படை முகப்பிலிருந்த இரும்பரணை உடைத்தது. ஆனால் சால்வனின் அம்பு அவன் கழுத்தெலும்பை முறித்தது. தேரிலிருந்து தெறித்து அவன் நிலத்தில் விழுந்தான். சாருதோஷ்ணன் ஓடிச்சென்று பிரத்யும்னனைப் பற்றித் தூக்கி தன் தேரிலேற்றிக்கொண்டான். சிறந்த சூதனாகிய பூருவன் புரவிகளைத் தூண்ட அவர்கள் களம் விட்டு திரும்பி ஓடினர். யாதவப்படைகள் சிறுகூட்டங்களாகச் சிதறி காடுகள் வழியாக தோற்றோடின. சென்றவர்களில் பாதிபேர்கூட மீளவில்லை.

அவர்கள் காவல்நகரைக் கைவிட்டுவிட்டு சிந்துவின் கரையிலிருந்த வஜ்ரவாகம் என்னும் காவல்கோட்டைக்குச் சென்று அங்கே ஒருங்கிணைந்தனர். சால்வன் படைகளுடன் பெருகி வந்து ஆனர்த்தநகரியை கைப்பற்றினான். அங்கிருந்த கருடக்கொடியைக் கிழித்து குருதியில் நனைத்துப் பறக்கவிட்டான். சூழ அமைந்திருந்த ஊர்கள் அனைத்தும் எரித்தழிக்கப்பட்டன. சுங்கநிலைகளிலிருந்து பல்லாயிரம் பொன் கவரப்பட்டது. வணிகர்களும் குடித்தலைவர்களும் சிறைபிடிக்கப்பட்டு பிணைப்பொருள் பெற்று திருப்பி அனுப்பப்பட்டனர். பிணை அளிக்கப்படாதவர்களின் மூக்கும் செவிகளும் சீவி எறியப்பட்டன. பெண்கள் இல்லங்களிலிருந்து இழுத்துக் கொண்டுசெல்லப்பட்டு வீரர்களால் உரிமைகொள்ளப்பட்டனர்.

சூறையாடுவதென்பது போரின் தொன்மையான வழிமுறை. அது படைவீரர்களை கட்டற்ற விலங்குக் களியாட்டம் நோக்கி செலுத்துகிறது. அவர்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகிறது. அவர்களின் எதிரிகளிடம் அச்சம் நிறைகிறது. படைகள் ஓர் ஊருக்குள் நுழைகையிலேயே ஓநாய் நுழைந்த ஆட்டுக்கூட்டமென ஆகின்றனர் மக்கள். உண்மையில் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சிறு எதிர்ப்பை அளிப்பார்கள் என்றால் படைகள் முன்னால் நகரமுடியாது. அச்சம் மக்களை ஓலமிடும் கோழைகளாக ஆக்கி படைகளை சூடான வாள் அரக்கை வெட்டுவதுபோல கடந்து செல்லவைக்கிறது.

வஜ்ரவாகத்தில் எஞ்சிய யாதவப்படைகள் ஒருங்கிணைந்ததும் பிரத்யும்னன் படுத்துக்கொண்டே அந்த அவையை தலைமைதாங்கி நடத்தினான். என்ன நிகழ்ந்தது என்று ஒவ்வொருவரும் தங்கள் நோக்கை சொல்லிவரும்போதே அனைவருக்கும் ஒன்று தெரிந்தது, யாதவர்களின் படைகள் எவை, அவை எங்கிருந்து எப்போது கிளம்புகின்றன என்னும் அனைத்துச் செய்திகளும் முன்னரே சால்வனின் படைகளுக்கு அளிக்கப்பட்டிருந்தன. அவை யாதவர்களிடமிருந்தே சென்றிருக்கவேண்டும். இயல்பாகவே பேச்சு நின்றுவிட்டது. மேற்கொண்டு பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் நச்சுவிதை என முளைக்கும் என்று அனைவரும் அறிந்திருந்தனர். எங்கே எச்சுவரில் காதுகள் அமைந்துள்ளன என்று திகைத்தார்கள்.

சால்வனின் படைகள் பெருகிக்கொண்டிருந்தன. சூறையாடுவதற்கான அரசொப்புதல் இருந்தமையால் ஒவ்வொரு காட்டிலிருந்தும் அசுரப்படைகள் படைக்கலங்களுடன் எழுந்து வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டிருந்தார்கள். மூன்று பிரிவுகளாகப் பிரிந்து அவர்கள் ஆனர்த்தநகரியைக் கடந்து வஜ்ரவாகத்தைச் சூழ்வதற்காக எழுந்தனர். க்‌ஷேமதூர்த்தி தலைமையிலான முதற்படையும் வேகவானின் தலைமையிலான இணைப்படையும் நண்டின் கொடுக்குகள் போல நீண்டுவர நடுவே சால்வனின் சௌபம் மழைவெள்ளம்போல காட்டின் ஒளிப்பாவைகள் பட்டுநெளிய ஒழுகிவந்தது.

பிரத்யும்னன் தன் படைகளுக்கு வஜ்ரவாகத்தை விட்டு பின்வாங்கிச் செல்லும்படி ஆணையிட்டான். புலர்காலையில் யாதவப்படைகள் முரசறைந்து பின்வாங்கும்பொருட்டு கிளம்பியதுமே பிறிதொரு முரசொலி நேர் எதிராகத் திரும்பி முன்னேறிச் சென்று தாக்கும்படி அறைகூவியது. அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளின் தலைவர்களுக்கு மட்டும் முன்னரே அச்செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. போஜர்களும் குங்குரர்களும் ஹேகயர்களும் திகைத்து அங்கேயே நிற்க விருஷ்ணிகளும் அந்தகர்களும் கிளர்ந்தெழுந்து சென்று அன்று உச்சிப்பொழுதிலேயே சால்வனின் படைகளைத் தாக்கினர்.

அந்த எதிர்பாராத தாக்குதலை சால்வனால் சந்திக்கமுடியவில்லை. அவர்கள் வந்துகொண்டிருந்த இடம் சகதிநிறைந்த வயல்வெளி. சால்வனின் புரவிகள் குளம்பு சிக்கி நின்று கனைத்தன. தேர்கள் சகதிகளில் சகடம் உருள நின்றுவிட்டன. நேருக்குநேர் நான்குநாழிகைநேரம் மட்டுமே அப்போர் நிகழ்ந்தது. சால்வன் பிரத்யும்னனின் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்தான். நண்டின் இருகொடுக்குகளும் திரும்பி வருவதற்குள் விருஷ்ணிகளும் அந்தகர்களும் பின்வாங்கி தங்கள் கோட்டைக்கு மீண்டனர். சால்வனின் படைகள் பின்வாங்கிச் சென்று மீண்டும் ஆனர்த்தநகரியை அடைந்தன.

சால்வன் ஆனர்த்தநகரியை மேலும் மேலும் படைகொண்டு உறுதியான நிலையாக ஆக்கிக்கொண்டான். அதற்குள் துவாரகை மும்முறை தோற்கடிக்கப்பட்ட செய்தியை ஷத்ரிய அரசர்கள் கொண்டாடத் தொடங்கினர். சந்தைகளிலும் தெருமுனைகளிலும் சூதர்கள் பாடலாயினர். அது ஒரு தொடக்கமென நான் அறிந்தேன், ஏனென்றால் என் தோல்வியைப் பாடும் வாய்ப்பே அதுவரை சூதர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்கு வெற்றியைப்போலவே தோல்வியும் பாடுபொருள் மட்டுமே. அவர்கள் என் தோல்விக்கென எண்ணிச் சேர்த்திருந்த சொற்களை எல்லாம் பொழியத்தொடங்குவார்கள் என நான் உணர்ந்தேன்.

என் மைந்தரை கொல்லப்போவதாகவும் பிணையாக பன்னிரண்டாயிரம் பொன்னை பணிவு அறிவிக்கும் கடிதத்துடன் ஏழு நாட்களுக்குள் தூதனை அனுப்பவேண்டும் என்றும் சால்வன் எனக்கு செய்தி அனுப்பினான். என் துணைவியர் விழிநீருடன் வந்து என்னை சூழ்ந்துகொண்டார்கள். துவாரகை எங்கும் அச்செய்தி பரவியதும் தெருக்களில் அன்னையர் இறங்கி அழத்தொடங்கினர். துவாரகையில் என் அவையைக் கூட்டி நானே சால்வன்மேல் படைகொண்டு செல்வதாக சொன்னேன். என் அமைச்சர் அது உகந்ததல்ல என்றனர். சால்வனின் வெற்றி அவன் தனியாக வரவில்லை என்பதையே காட்டுகிறது என்றார் ஸ்ரீதமர்.. சிறுதோல்விகூட துவாரகைக்கு பெரும்புண்ணாக அமைந்துவிடக்கூடும் என்றார் பத்ரசேனர்.

ஆனால் அவர்கள் சொல்ல அஞ்சியதை அக்ரூரர் நேரடியாகவே சொன்னார். ’அரசே, பிரத்யும்னனின் இறுதி வெற்றியால் உண்மையில் சிறுமைகொண்டிருப்பவர்கள் ஹேகயரும் போஜரும் குங்குரரும்தான். அவர்களில் எவரோதான் செய்தியை சால்வனுக்கு அளித்தனர் என்பது உறுதியாகிவிட்டது. அவர்களின்றிச் சென்று விருஷ்ணிகள் போர்வென்று மீண்டிருக்கின்றனர். அச்சிறுமையை வெல்ல அவர்கள் தாங்கள் ஐயத்துக்குள்ளானதை சிறுமை என காட்டிக்கொள்கின்றனர். அவர்கள் இனி துவாரகைக்காக எந்தப் போரிலும் கலந்துகொள்வதில்லை என்கின்றனர்.’

நான் ’அவர்களை நான் அமைதிப்படுத்துகிறேன்’ என்றேன். ’அது எளிதல்ல, அரசே. அவர்கள் கிருதவர்மனுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று உளவுச்செய்தி உள்ளது. கிருதவர்மன் இன்று அஸ்வத்தாமனுடன் இணைந்துள்ளான். அவர்கள் தன்னுடன் சேர்ந்துகொண்டால் அஸ்வத்தாமனின் உதவியுடன் வடக்கே யாதவநிலத்தில் ஒரு புதிய அரசை உருவாக்க உதவுவதாக வாக்களித்துள்ளான். ஹேகயர்கள் கார்த்தவீரியனின் மாகிஷ்மதியை அங்கே மீண்டும் உருவாக்கும் கனவிலிருக்கிறார்கள்’ என்றார் அக்ரூரர்.

நான் சற்று அறிந்தவைதான், முற்றறிய விரும்பாது தவிர்த்தவை. அவைச்சொற்களாக அதைக் கேட்க அஞ்சினேன். நான் ஆற்றலிழந்து எளிய மானுடனாக நின்றிருப்பது யாதவர்களின் குலப்போரைக் காணும்போது மட்டும்தான். தந்தையரின் அனைத்து ஆற்றல்களையும் மைந்தர்களின் பூசல் இல்லாமலாக்கிவிடுகிறது. பெண்களைப்போல அவர்கள் ஏங்கி அழும்படி ஆக்குகிறது அது. சொல்லிழந்து அரியணையில் அமர்ந்திருந்தேன். ’ஒற்றுமையை உருவாக்குவதற்கான காலம் நமக்கில்லை. போரில் நீங்கள் தோற்றால் அதன்பின் துவாரகை எழமுடியாது’ என்றார் அக்ரூரர்.

அவையனைத்தும் உண்மை என நான் அறிந்திருந்தேன். ஆனால் நான் செய்வதற்கு பிறிதொன்றும் இல்லை. நான் சால்வனை வென்றாகவேண்டும். அவன் நகரை அழித்து அவன் படையைச் சிதறடித்து அவனுக்கு நிகழ்ந்ததை எண்ணியதுமே ஷத்ரியர் அஞ்சி உளம் நடுங்குமாறு செய்தாகவேண்டும். வேறுவழியே இல்லை. எனவே துவாரகையிலிருந்து சிறுபடையுடன் கிளம்பி வடக்கே சென்றேன். என் படையில் யாதவகுலங்கள் அனைத்தும் இருந்தன. அவர்களிலிருந்த ஒற்றர்கள் வழியாக என் படைஎழுச்சியை சால்வன் அறிந்திருப்பான் என அறிந்திருந்தேன். ஆகவே பகலில் முழுக்க மூடப்பட்ட தேரிலேயே பயணம் செய்தேன்.

இரவில் என் படைகளிலிருந்து எவருமறியாமல் கிளம்பி சால்வனின் சௌபநாட்டை நோக்கி புரவியில் சென்றேன். என் திரை மூடிய தேர் அவ்வண்ணமே மறுநாளும் தொடர்ந்துசென்றது. எனக்கு உடல்நலமில்லை என்னும் செய்தியை சால்வன் அடைந்தான். ஆனால் நான் என் படைவீரர்களான ஆஹுகன், விப்ருது, சதன், சரணன் ஆகியோருடன் ஜாம்பவதியின் மைந்தர்களான சுமித்ரன், புருஜித், சதாஜித், சகஸ்ரஜித் ஆகியோரை சேர்த்துக்கொண்டு ஜாம்பவானின் ஜாம்பபுரியை சென்றடைந்தேன்.

ஜாம்பவதியின் மூத்தவரான ஜாம்பவான் என்றும் எனக்கு அணுக்கமானவர். அவரிடமிருந்து தேர்ந்த கரடிகுலப் போர்வீரர்கள் நூற்றுவரை நானே எண்ணி என்னுடன் சேர்த்துக்கொண்டு ஒரே இரவில் சால்வனின் வணிகத்தலைநகரான மத்ரவதியை சென்றடைந்தேன். ஜாம்பவர்களின் மென்மரப்படகுகள் பாய்விரித்தால் புரவிகளைவிட மும்மடங்கு விரைவுகொள்பவை. அப்படி பாயும் படகுகளில் அமர்ந்தபடியே அம்புதொடுக்கும் ஆற்றல்கொண்டவர்கள் ஜாம்பவர்கள்.

சால்வனின் தலைநகர் சௌபபுரி நன்கு காவல் காக்கப்பட்டிருக்கும் என்றும் மத்ரவதி கங்கையோரமாக திறந்துகிடக்கும் கோட்டை என்றும் அறிந்திருந்தேன். எனவே பின்னிரவில் நாங்கள் மத்ரவதியை தாக்கினோம். ஒருநாழிகைக்குள் நகரை எரியம்புகளால் பற்றி எரியச்செய்தோம். புகைமண்டிய நகரில் பதறி ஓடிக்கொண்டிருந்த வணிகர்கள் நடுவே புகுந்தோம். விழிகளில் பட்ட அத்தனை ஷத்ரியர்களையும் கொன்றுவீழ்த்தினோம். அதை போர் என்பதைவிட கொலையாட்டு என்பதே பொருத்தம். அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த சால்வனின் மைந்தர்களான கம்பணன், ஜடாசூரன், முஜகேது, விவர்த்தனன், சங்கிரமஜித்தன், சதுர்முகன், விஸ்வசேனன் ஆகியோரை வென்று சிறைப்படுத்தினேன்.

அவர்களில் சதுர்முகனையும் விஸ்வசேனனையும் தலைகொய்து மத்ரவதியின் முகப்பில் கட்டி தொங்கவிட்டேன். பிறரைக் கட்டி இழுத்து ஜாம்பபுரிக்கு கொண்டுசெல்ல ஆணையிட்டபின் நானும் ஆஹுகனும் சதனும் மீண்டும் எங்கள் படைகளுடன் வந்து சேர்ந்துகொண்டோம். சரணனையும் விப்ருதுவையும் புருஜித், சதாஜித், சகஸ்ரஜித் ஆகியோருடன் களிந்தமலை வாழும் மச்சர்களிடம் அனுப்பினேன். காளிந்தியின் மைந்தர்களான சுருதன், கவி, விருஷன், வீரன் ஆகியோரை நேராக அங்கு வரச்சொல்லியிருந்தேன். அங்கு விரைவுப்படகுகளுடன் மச்சர்கள் நூற்றுவர் அவர்களுக்காக காத்திருந்தார்கள்.

நாங்கள் யாதவப்படைகளை வந்தடைந்த அதே இரவில் சரணும் விப்ருதுவும் சுருதனும் கவியும் தலைமைதாங்கிய மச்சர்களின் படகுப்படை எரிமருந்துக்குவையுடன் சௌபபுரியை தாக்கியது. அதன் துறைமுகப்பு தீப்பற்றி எரிந்தது. களஞ்சியங்கள் சாம்பலாயின. நகருக்குள் நூற்றுக்கணக்கான இடங்களில் எரியம்பு விழுந்து தீ எழுந்தது. சௌபபுரியின் காவலர்கள் திருப்பித் தாக்கியதில் நாற்பது களிந்தர்கள் உயிரிழந்தார்கள் என்றாலும் அவர்கள் உருவாக்கிய அழிவு பெரிது. களிந்தர்கள் உடனே தப்பி மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.

சால்வன் அத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. அது அனைத்து திட்டமிடல்களையும் கடந்த துணிவான பாய்ச்சல். இளவரசர்களைக் கொன்று கட்டித்தொங்கவிட்டது அனைத்து நெறிகளையும் மீறிய கொடுஞ்செயல். சால்வன் முதல்முறையாக அவனை எதிர்கொள்ளும் எதிரியின் உள்முகத்தை அறிந்தான். அவன் அகம் நடுங்கிவிட்டது. அப்போதே அவன் தோற்பது உறுதியாகிவிட்டது. மத்ரவதி தாக்கப்பட்டபோது அதன் படைமுகப்பில் நான் இருந்தேன் என்பதை பல்வேறு ஒற்றர்கள் அவனுக்கு சொன்னார்கள். நான் சௌபநாட்டு எல்லைக்குள் இருக்கிறேன் என அவன் அஞ்சினான். தன் படைப்பிரிவுகளில் ஒன்றை வேகவானின் தலைமையில் சௌபநாடு நோக்கி அனுப்பினான்.

ஆனால் நான் மத்ரவதியை தெரிவு செய்ததே சௌபபுரியின் காவலைக்கண்டு அஞ்சிதான் என்றான் வேகவான். அப்படைத்தாக்குதலுடன் நான் காடுகளுக்குள் மறைந்திருப்பேன், இளவரசர்களை வைத்துக்கொண்டு சால்வனிடம் சொல்மாற்றாடுவதற்கு தூதனுப்புவேன், என் மைந்தரை மீட்கமுயல்வேன் என்று அவன் சொன்னான். ஆனால் வேகவானின் படைகள் கிளம்பிய மறுநாளே சௌபபுரியை களிந்தர்கள் தாக்கி எரியூட்டினர். அந்தப் படைகளின் முகப்பில் என் மைந்தன் புருஜித் என்னைப்போலவே ஆடையும் தோற்றமும் கொண்டு நின்றிருந்தான். நான் அத்தாக்குதலை நடத்தினேன் என்றே ஒற்றர்கள் சௌபனுக்கு சொன்னார்கள்.

நான் அங்கிருப்பதனால் மீண்டும் ஒரு தாக்குதல் சௌபபுரியில் எங்கும் நிகழக்கூடும் என சால்வன் பதற்றம்கொண்டான். எனவே மறுநாளே க்‌ஷேமதூர்த்தியின் தலைமையிலான படைகளையும் சௌபபுரிக்கே திருப்பியனுப்பிவிட்டு அவன் ஆனர்த்தநகரியைக் கைவிட்டு துவாரகையின் எல்லையை அடைந்து அங்கு அவன் முன்னரே வெற்றிகண்ட காளத்ருமத்தில் தன் படைகளைத் திரட்டி சௌபம் என்னும் பறக்கும் கோட்டையுடன் நிலைகொண்டான்.

நான் வஜ்ரவாகத்தை அடைந்தபோது அங்கே பிரத்யும்னனும் சாருதோஷ்ணனும் சாத்யகியும் போரில்பட்ட புண்களுடன் நோயில் கிடப்பதை கண்டேன். யாதவப்படைகள் சோர்வும் சலிப்பும் கொண்டிருந்தன. படைவீரர்களில் புண்படாதவர்கள் மிகச்சிலரே.  கோட்டைக்கு வடமேற்கே இருந்த அரைச்சதுப்புவெளியில் யாதவப்படைகளில் இருந்த ஹேகயர்களும் போஜர்களும் குங்குரர்களும் பிரிந்து சென்று தளம் அமைத்திருந்தனர். யானைகளையும் தேர்களையும் சூழ நிறுத்தி கோட்டைபோல ஆக்கி உள்ளே காவல் அமைத்திருந்தனர். பாடிவீடுகளின்மேல் கருடக்கொடி இறக்கப்பட்டு ஹேகயர்களின் காளைமுத்திரை பொறிக்கப்பட்ட கொடியும் குங்குரர்களின் இரட்டைக்கன்றுக் கொடியும் போஜர்களின் பசுக் கொடியும்  பறந்துகொண்டிருந்தன.

நான் அவர்களை என்னிடம் பேச அழைத்தேன். அவர்கள் அதை மறுத்துவிட்டனர். நான் அவர்களை பார்க்க வரலாமா என்று அவர்களுக்கு செய்தி அனுப்பினேன். அவர்கள் என்னை ஒருநாள் காக்கவைத்தபின் வரலாமென அழைத்தனர். நான் தன்னந்தனியாகவே செல்லவேண்டும் என்று அவர்களின் தூதன் கட்டளையிட்டான். என் மைந்தரும் படைவீரரும் அஞ்சினர். இருந்தாலும் நான் கிளம்பினேன். அவர்கள் என் படைவீரர், ஒவ்வொருவரும் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்றப்பட்டவர்கள். என் தோழரும் உடன்பிறந்தாரும் உறவினருமாக உடனாடியவர்கள். அவர்களிடம் எனக்கு அஞ்ச ஏதுமில்லை என்றேன்.

காலையில் படைக்கலமேதுமில்லாமல் அவர்களை நோக்கி சென்றேன். அங்கிருந்து வந்த நால்வர் என்னை அணுகினர். நான் அவர்கள் முகமன் சொல்லப்போகிறார்கள் என எண்ணியிருக்க என் கைகளைப் பிடித்து பின்னால் சுழற்றி என் தலைப்பாகையாலேயே கட்டி இழுத்துச்சென்றனர். ‘நான் தூதன், என்னை இப்படி கட்டி இழுத்துச்செல்லும் வழக்கம் இல்லை’ என்றேன். ‘வாயைமூடு விருஷ்ணியே, இனி உன் சொல் எங்களை ஆளாது’ என்றான் அந்தப் படைத்தலைவன். அவனை நான் அறிவேன், சரபன் என்று பெயர் கொண்டவன். நான் அவனை என் படைக்கு தேர்வுசெய்தேன். அவனுக்கு அரசியலும் படையியலும் கற்பித்தேன். என் தோள்சேர்ந்து நின்று ஏழு படைஎழுச்சிகளில் பங்கெடுத்தவன். அவனிடமிருந்த அந்தக் களிப்பையே நோக்கிக் கொண்டிருந்தேன். அவன் அறியாத் தென்றல் ஒன்றில் திளைத்துக்கொண்டிருந்தான். உடல் மிதப்பதுபோல  சென்றது.

நான் மானுடரை எப்போதும் எதிர்மறையாகவே புரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு முறையும் அது மேலும் சரி என நிறுவப்படுகிறது. ஆனால் நிகழ்வுகள் அவ்வெதிர்பார்ப்பையும் கடந்துசென்றபடியே உள்ளன. ஆம், என்னால் மானுடரை புரிந்துகொள்ள முடிந்ததே இல்லை. ஆனால் மானுடரை முற்றிலும் புரிந்துகொண்டவர் இருவரே என்று என்னையும் மகாவியாசரையும் மட்டுமே சொல்கிறார்கள் சூதர்.

என்னை அவர்கள் இழுத்துச்சென்று மூன்றுகுடிகளின் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்த மன்றுக்கு கொண்டுசேர்த்தனர். அங்கே சிறுபடைத்தலைவர்களும் வீரர்களும் இணைந்த உடற்சுவர் எங்களை சூழ்ந்திருந்தது. அவர்கள் பீடங்களில் அமர்ந்திருக்க நடுவே என்னை நிறுத்தினர். நான் அவர்களை அரசர்களுக்குரிய முறைமை காட்டி சொல் வணங்கினேன். என் கைகளை அவர்கள் அப்போதும் அவிழ்த்துவிடவில்லை. நான் பேசத்தொடங்கியதுமே ’நிறுத்து! நாங்கள் இங்கே உன் சொற்பெருக்கைக் கேட்க வந்து அமர்ந்திருக்கவில்லை’ என்றார்கள்.

நான் பேசச்சென்ற எதையும் கேட்க அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தங்கள் தரப்பை ஓங்கி சொன்னார்கள். ’ஹேகயர்களின் மாகிஷ்மதி ஏட்டில் அமைந்துவிட்டது. சிபிநாட்டு எல்லையில் உள்ள சித்ரபாகம் என்னும் ஊரில் கோட்டை எழவிருக்கிறது. மாகிஷ்மதியுடன் அஸ்வத்தாமனின் உத்தரபாஞ்சாலம் நட்புமுறைக்கு ஓலைச்சாத்து இட்டுவிட்டது’ என்றனர். அஸ்வத்தாமனின் நட்புநாடாகிய அஸ்தினபுரியும் அவர்களுக்கு நட்புநாடாகிவிட்டது. சால்வனின் சௌபபுரியுடனும் கூர்ஜரம் சிந்து பால்ஹிகம் போன்ற நாடுகளிடமும் உறவுபேச தூதர்கள் சென்றுவிட்டனர். ’கார்த்தவீரியனின் ஆயிரம் கைகள் எழுந்துவிட்டன. இனி எதிரிகள் என எவருமில்லை’ என்றார் ஹேகயகுலத்துப் படைத்தலைவர் ஜஹ்னி.

நான் அவர்களிடம் போரின்றி அமையவிரும்பினால் அவர்கள் சொல்லும் ஐந்து நெறிகளுக்கு கட்டுப்படுவதாக அவர்களுக்கு சொல்லுறுதி அளிக்கவேண்டும் என்றனர். நான் எந்நிலையிலும் மூன்று யாதவர்குலங்களை தாக்கலாகாது. யாதவப்படைகளில் உள்ள மூன்றுகுலங்களைச் சேர்ந்த அனைவரையும் விடுவிக்கவேண்டும். அம்மூன்று யாதவர் குடிகள் ஈட்டிய செல்வத்தால் அமைந்தது துவாரகை என்பதனால் அதற்கீடான செல்வத்தை நான் அவர்களுக்கு அளிக்கவேண்டும். அல்லது அச்செல்வத்தில் ஒருபகுதியையேனும் உடனே அளிக்கவேண்டும். மூன்று யாதவகுடிகளின் விழவுகள் எதிலும் விருஷ்ணிகளும் அந்தகரும் கலந்துகொள்ளக் கூடாது. யாதவர்களின் பேரரசன் என நான் என்னைச் சொல்லிக்கொள்ளக்கூடாது, துவாரகை விருஷ்ணிகளின் அரசு என்றே அறிவிக்கப்படவேண்டும்.

அந்நெறிகளில் எது மீறப்படுமென்றாலும் அவர்கள் விருஷ்ணிகளைத் தாக்கி கொன்றழிப்பது முறையே என்றாகிவிடும் என்பது இறுதி நெறி. நான் துயருடன் அவர்கள் மேல் நான் கொண்டிருந்த நம்பிக்கையைப்பற்றி சொன்னேன். அவர்கள் பிரிந்துசென்றால் நான் ஷத்ரியர்களால் அழிக்கப்படுவேன் என்றும் துவாரகை மண்மேடாக ஆகும் என்றும் சொன்னபோது விழிநீர் சிந்தினேன். அவர்கள் அதைக் கண்டு புன்னகைத்தனர். மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே சென்றனர்.

இறுதியாக அவர்கள் எந்நிலையிலும் ஷத்ரியர்களிடம் சேர்ந்துகொண்டு துவாரகையை தாக்குவதில்லை என்னும் உறுதிமொழியை மட்டும் கேட்டேன். நான் ஐந்துநெறிகளை பேணுவேன் என்றால் அந்த உறுதிமொழியை அளிப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். நான் என் உறுதிமொழியை ஓலையில் எழுதி என் கருடமுத்திரை பொறித்து அவர்களுக்கு அளிக்க ஒப்புக்கொண்டேன். அங்கேயே அவர்கள் ஓலையெழுதினர். அவர்களின் ஒப்புதல் ஓலை மூன்றுகுடிகளின் படைத்தலைவர்களின் முத்திரையுடன் எனக்கு அளிக்கப்பட்டது. என் ஓலை கருடமுத்திரையுடன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

’எங்களை நீங்கள் எதிரிகளாக எண்ணலாகாது’ என்று அவர்களிடம் இறுதியாக நான் கண்ணீருடன் மன்றாடினேன். ’அது நீ நடந்துகொள்ளும் முறையில் உள்ளது, யாதவனே’ என்றார் ஹேகயகுலத்துப் படைத்தலைவர் ஜஹ்னி. ’நீ நெறிபேணினாலும் விருஷ்ணிகள் தங்கள் ஆணவத்தால் அழியச் சித்தமாவார்கள் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை’ என்றார் குங்குர குடித்தலைவர் வாகுகர். ’குருதியினாலன்றி நம் குலக்கணக்கு தீராது, யாதவனே. அக்குருதியை நீ எத்தனைநாள் ஒத்திவைப்பாய் என்பது மட்டுமே வினா’ என்றார் போஜர்குல படைத்தலைவர் சீர்ஷர். தலைவணங்கி ஒரு சொல் பேசாமல் கண்ணீருடன் நான் கோட்டைக்கு மீண்டேன்.

“ஆம் அரசே, அது நடிப்பு. நான் அளித்த அந்த ஓலை  முற்றிலும் பொய். அவர்கள் அரசர்கள் அல்ல, என் படைநீங்கிய வஞ்சகர்கள் மட்டுமே. அவர்களுக்கு நான் சொல்லளிக்கவேண்டிய தேவையே இல்லை. மறுநாள் அந்திக்குள் அனைத்துக் கணக்குகளையும் முற்றாக முடித்தேன்” என்றார் இளைய யாதவர்.

முந்தைய கட்டுரைஅத்தனையும் பைத்தியங்கள்
அடுத்த கட்டுரைமீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா