சிதையப்போவது பிரபஞ்சமன்று, நாமே!(அறத்தாறிது)

unnamed

அன்பு ஜெயமோகன்,

சொற்கள் தரும் வசீகரத்தை ஒருபோதும் சொற்களுக்குள் கொண்டு வந்துவிடவே முடியாது. ஒரு உரையாடல், நாவல், சிறுகதை, கவிதை அல்லது கட்டுரை ஒன்றிலிருந்து அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் சில அல்லது பலசொற்களால் வாழ்வுக்குப் புதுவண்ணம் வந்ததைப் போன்றிருக்கும். கனிகளில் ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கும் விதைகளைப் போன்றுதான் சொற்கள் எனக்குக் காட்சி தருகின்றன. சொற்களைத் தேடி அலையும் நாடோடியாக இருப்பதில் உள்ளார்ந்த கர்வமும் எனக்குண்டு.

சொற்களுக்கும் எனக்குமான உறவை, என் மூச்சுக்கும் காற்றுக்குமான உறவாகவே கருதுகிறேன். அதீத சோகமான தருணங்கள் பலவற்றிலிருந்து சொற்களே என்னை மீட்டு வந்திருக்கின்றன. உச்சபட்ச மகிழ்ச்சிகரமான கணங்களையும் சொற்களாலேயே பெற்றிருக்கிறேன். எப்போதிருந்து சொற்களின் பின்னே ஓடத்துவங்கினேன் என்பதை உத்தேசமாகக் கூடச் சொல்லத்தெரியாது. எனினும், சொற்களோடு நட்பு கொண்ட பின்தான் என் வாழ்வு வெளிச்சமாகியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

சொற்கள் என்றவுடனேயே தட்டையாக சொற்களைப் புரிந்துகொண்டுவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. சொற்களின் வழியே நாம் பெறும் பரவச அனுபவங்களே சொற்கள். ஒரு சொல்லில் இருந்து ஒருவிதமான அல்லது ஒரே மாதிரியான அனுபவத்தை மட்டுமே நமக்குப் பழக்கப்படுத்தி இருக்கின்றனர். அதுவன்று நான் குறிப்பிடுவது. ஒரு சொல்லில் இருந்து முளைக்கும் பல்வேறுவிதமான பரிணாமங்களே நான் சொல்ல விழைவது. பறவை என்ற சொல் துவக்கத்தில் ஒரு உயிரினத்தை மட்டுமே குறிப்பதாகக் கருதியிருந்தேன். சொற்களின் வசீகரத்தில் பறிகொடுத்தபோதே அது வானமாக, மரத்தின் கிளையாக, சிறகின் தொகுப்பாக, மென்மையின் முகமாக.. இப்படி பல பரிமாணங்களைக் காட்டியது; இன்னும் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறது. அதனாலேயே பறவை எனும் சொல் எனக்கு ஒவ்வொரு முறையும் புதிதாய் இருக்கிறது. தயைகூர்ந்து சொற்களைத் தட்டையான அர்த்தங்களுக்குள் அடக்கி அவற்றைச் சிறுமைப்படுத்திவிட வேண்டாம்.

இதுகாறும் நான் கடந்து வந்த அல்லது எதிர்கொண்ட சொற்களில் மிகப்பலமாக என்னை உலுக்கியது அறம் எனும் சொல்தான். அறம் எனும் சொல்லை பிரபலப்படுத்தியதில் உங்களுக்கு அதிகப்பங்குண்டு என்றே நினைக்கிறேன். கல்லூரி காலத்தில் அச்சொல்லை ஒற்றை அர்த்தத்திலேயே நான் விளங்கிக்கொண்டு இருந்தேன். பொய் பேசாதேஎன்பதை அறமாகக் கொண்டால், எச்சூழலிலும் பொய்பேசிவிடக்கூடாது என்பதாகத்தான் நான் புரிந்திருந்தேன். திருக்குறளை வாசிப்பாகப் படித்தபோது பொய் பேசுவதைஓரிடத்தில் அவர் அறமாக வலியுறுத்தி இருப்பதை அறிந்து திகைத்துப் போனேன். திருக்குறள் ஒரு அறநூல். அது பொய் பேசாதே என்றும் சொல்கிறது. சில இடங்களில் பொய் பேசு என்றும் சொல்கிறது. எது சரியானது?” என எனக்கு நானே குழம்பிக் கொள்வேன். அக்குழப்பம் பலவருடங்களுக்கு முன்புவரை என்னில் தொடர்ந்தது. அக்குழப்பத்தை உங்கள் முரணியக்கம் எனும் சொல்லே தீர்த்து வைத்தது.

அறம் எனும் சொல்லைக் கொண்டு நீங்கள் கட்டி எழுப்பிய விஷ்ணுபுர நாவலை நான் இன்னும் உள்ளார்ந்து வாசிக்கவில்லை. கடவுள் தேடலில் நச்சரித்துக் கொண்டிருந்த மனதுக்குத் தீனி போடுவதற்காகவே விஷ்ணுபுர வாசிப்புக்கு வந்தேன். ஒட்டுமொத்த இந்தியாவின் தத்துவப்பின்புலத்தை இத்தனை செறிவாக ஒரு புனைவில் கொண்டு வர முடியுமா என அதிசயித்துப் போய்விட்டேன். ஒரு தத்துவம்தான் சிறந்ததாக இருக்க முடியும்எனும் என் மொண்ணைப் புரிதலை முதலில் முருகவழிபாட்டின்போதான் சில ஆய்வுகள் முறியடித்தன என்றால், விஷ்ணுபுரம் இன்னும் அகலமாக என் புரிதலைச் சிதறடித்தது. மனதின் நமைச்சல் ஒடுங்குமளவிலான உரையாடல்களை விஷ்ணுபுரம் இயல்பாக நிகழ்த்திச் சென்றிருந்தது. பல அமர்வுகளில் நான் வாசித்த அந்நாவலில் இன்று பல பெயர்களும், சமபவங்களும் நினைவில் இல்லை. ஆனால், மகாதர்மம் எனும் சொல் ஆழப்பதிந்திருக்கிறது. அறம் எனும் சொல்லின் ஒரு பரிமாணமாகவே மகாதர்மத்தைக் கண்டேன்.

சமீபமாய் ஆனந்தின் காலவெளிக்காடு கட்டுரைத்தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பமைந்தது. உங்கள் எழுத்தில் நான் கண்டது மாய வசீகரம் எனில், ஆனந்தின் எழுத்தில் நான் கண்டது யதார்த்த வசீகரம். அவரின் நான் காணாமல் போகும் கதை எனும் குறுநாவலை முன்னர் படித்திருக்கிறேன். வெகுயதார்த்தமான பாணியில் அமைந்திருந்த அந்நாவலின் காட்சிகள் வழியேயும், காலவெளிக்காடு கட்டுரைத் தொகுப்பு வழியேயும் அவர் முன்வைத்திருந்த பிரபஞ்ச நான் எனும் சொல் வழியே திரும்பவும் மகாதர்மத்தை வந்தடைந்தேன். அறம் எனும் சொல்லையே அதிகம் கையாண்டிருக்க மாட்டார் ஆனந்த். ஆனாலும், அவர் சொல்ல விழைகின்ற கருப்பொருளாக அதுவே நின்றிருந்தது. அறத்தை எவ்விடத்தும் புனிதப்படுத்தாமல் அதைக் கட்டுடைப்பதன் ஊடாக அதை இன்னும் எளிமையாக அணுகுவதற்கு அழகாக உதவி இருப்பார் அவர்.

காலத்தைக் கடப்பது என்பது காலத்தைப் புரிந்து கொள்வதுதான்.”, “உண்மையில் நாம் புதிதாக எதுவும் கற்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் வேண்டியது அனைத்தும் எப்போதும் உள்ளது.”, “சமூகத்தளத்தின் எல்லைகளுக்குள் மட்டுமே இயங்கும் வாழ்க்கை அரைகுறையானது. அடிப்படையிலேயே பொய்யானது.”, “சூரிய ஒளி சூரியனின் செயல்பாடு அல்ல. அதன் அடிப்படைத்தன்மை. அவ்வாறே நான்உணர்வு அறிவுணர்வாக இருப்பது அதன் தன்மை; அதன் செயல்பாடு அல்ல.”, “ நதியின் நீர் நதியல்ல. நதியிலிருந்து அள்ளப்பட்ட ஒரு வாளி நீரும் நதியல்ல. நதியின் ஓட்டமே நதி.”, “ கதவுகளைத் திறந்துவிட்டால் சிறையும் வீடுதான். வீடுகளை மூடிவைத்தால் வீடும் சிறைதான்.”, “தியானிப்பவர் இல்லாத நிலைதான் தியான நிலைபோன்ற வாக்கியங்கள் வழியே ஆனந்த் என்னைத் திணறடித்து விட்டார். இன்னும் கட்டுரைகளில் வாக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை வாசித்து அனுபவிக்க என்று தவிர்த்திருக்கிறேன். அறமெனும் சொல்லில் இருந்து கிளைத்த வாக்கியங்களாகவே அவை எனக்குப் படுகின்றன.

அறம் தொடர்பாய் ஒரு வரைபடம் தரலாம் எனப் பார்க்கிறேன். துவக்கத்தில் இருந்தது பிரபஞ்ச அறம். அதை மையமாகக் கொண்டே சமூக அறம், உயிர் அறம், மனித அறம், ஊர் அறம், தொழில் அறம், குல அறம் போன்றவை கிளைத்திருக்கின்றன. இப்படியான புரிதல் இன்று நமக்கு இல்லை. அதனால்தான் குல அறம் சாதிகளுக்கு இடையேயான மோதல்களாகவும், ஊர் அறம் முட்டாள்தனமான பிற்போக்குத்தனமாகவும், உயிர் அறம் ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமேயான தகுதியாகவும் கருதப்படும் அபத்த நிலைக்கு வந்திருக்கிறோம். ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாதது பிரபஞ்ச அறம். அதை மறந்தால் சிதையப்போவது பிரபஞ்சமன்று; நாமே.

முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39
அடுத்த கட்டுரைதன்னறம்