கடிதங்கள்

kadalngkudi

ஐயா,

சாங்கிய காரிகை பற்றி முழுமையான தமிழ் நூல் உள்ளதா? நான் இணையத்தில் தேடினேன், கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் கே.பி.பகதூர் எழுதியதை மட்டும் படித்திருக்கிறேன்

பகவதிராஜன்

***

அன்புள்ள பகவதி ராஜன்

சாங்கிய காரிகை தமிழில் கடலங்குடி நடேச சாஸ்திரி மொழியாக்கம் மற்றும் உரையுடன் 1910 வாக்கில் வெளிவந்தது. என்னிடம் பிரதி உள்ளது. வாங்கவும் கிடைக்கும். கடலுங்குடி பிரசுரம்

ஆனால் மொழி மிகமிகப்பழமையானது

ஜெ

 

unnamed

 

இனிய ஜெமோவிற்கு ,

வணக்கங்கள். அங் மோ கியோ வாசக வட்ட சந்திப்பில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி. பேரிலக்கியம் பற்றிய விவாதமும் தொடர்புடைய கேள்வி பதில்களின் உரையும் பல சிந்தனைகளுக்கு வித்திட்டன. குறிப்பாக சமநிலை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, தரிசனம் என்னும் மூன்று முக்கிய அடிப்படையில் பேரிலக்கியங்களை பிரிக்கலாம் என்பதை கேட்கப்பெற்றதில் மகிழ்ச்சி. ஒப்புநோக்க தமிழில் கம்பராமாயணம் ஆக சிறந்த எடுத்துக்காட்டு எனும்பொழுதே ஒரு நாள் இல்லை ஒரு நாள் படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியதென்றால் அது மிகையில்லை.

உரைநடை ஜன்மங்களான எங்களுக்கு, கம்பரை தங்கள் கைவண்ணம் ‘மூலம் கொஞ்சம் கட்டுரை எழுதி கோடிட்டு காட்டினால் இன்னும் சிறப்பு.

வரலாற்றுத்தன்மை அற்ற படைப்புகள் பேரிலக்கியம் ஆகா என்னும் இடத்தில் ஒரு சிறிய நெருடல், உதாரணத்திற்கு மோகமுள்ளில் வசதியான இடங்களில் கதை பயணிப்பதில் தொடங்கி கதை நடக்கும் சுற்றுப்புற பகுதிகளை குறிப்பிடாமையும் கதையின் சிற்சில classic இல்லாமற்போனதற்கான குறைகள் என்றும் சிறுகதைகளை பற்றி பேசும்பொழுது திரு புதுமைபித்தனே ஓர் முன்னோடி என்றும் கூறியதை கேட்கப்பெற்றேன். என்னுடைய கேள்வி என்னவெனில் வரலாற்றுத்தன்மை அவசியப்படாவிடில் அதை ஏன் உள்நுழைக்க முயற்சி செய்யவேண்டும், அடுத்தது புதுமைப்பித்தன் நவீன இலக்கியங்களில் முன்னோடி எனும்பொழுது, முன்பொரு தடவை இதே அரங்கில் புதுமைப்பித்தனின் எந்தவொரு படைப்பிலும் விடுதலைப்போராட்ட சுவடுகள் எழுதவில்லை என்றும் தங்கள் கூறியதை கேட்கப்பெற்றேன், மேலும் விளக்கினால் தெளிவுறுவேன்.

நீங்கள் பேசிய தலைப்பை தவிர்த்து மனதில் கேட்கவேண்டும் என்று இங்கே சில, நேரமிருந்தால் பதில் அளியுங்கள், சந்தோஷப்படுவேன்.

  1. விஷ்ணுபுரத்தின் யானையின் மதத்தை விவரிப்பதில் ஆகட்டும், காட்டில் கீரக்காதனின் சிறப்பையும் காட்டிற்கு ராஜா சிங்கமல்ல யானையே என்பதிலும், Dr. K என்று அறியப்பட்டவரை “யானை” டாக்டர் என்று பெயரிட்டு பிரம்மாண்டபடுத்தலும், ஐஸ் கட்டி அல்லது ஐஸ் பாறை என்னும் கதையை வெள்ளை’யானை என்று பிரபலப்படுத்தி கொண்டுசெல்வதிலும் உங்களுக்கும் யானை பற்றிய ஒரு பிம்பத்திற்கும் ஒரு பெரிய தொடர்பு இருப்பது அல்லவா தோன்றுகிறது, என்ன தொடர்பு அது?
  2. பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திர என்னும் வர்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டனராம் நாம்..! இப்பொழுது நினைக்கும்பொழுது புன்னகை மட்டுமே மிச்சம்! இங்கே அனைவரும் வைஸ்யனே என்னும் நினைப்பு மேலோங்குகிறது. நடைமுறை பிராமணன் என்ன படிச்சா எவ்வோளோ சம்பளம் வரும் என்றும், ஆளும் பரம்பரை புராணம் பேசும் அன்பர்கள் எதை பிடித்தால் எவ்வளவு பெயர்க்கலாம் என்றும், நடைமுறை (கொடைத்தன்மை’அற்ற) வைசியர்கள் மேலும் சம்பாதிக்க முயற்சி செய்வதும், மனதிற்கு தெரியப்படுத்துவது என்னவெனில் இங்கு பணமே பிரதானம், மற்றவை வெறும் பேச்சு. இங்கு அனைத்தையும் capitalize செய்யவேண்டும் என்னும் காலகட்டத்தில் எப்படி உங்களுக்கு ஒரு வெண்முரசு போன்ற படைப்பை எவ்வித வியாபார யுக்தியும் இல்லாமல் இணைய உலகத்திற்கு இலவசமாக அளிக்க முடிகிறது? எப்படி இந்தவொரு மனநிலை, தெரிந்தால் நாங்களும் தூய்மையடைவோம்.
  3. வெண்முரசு என்னும் இன்ப புதைகுழியில் சிக்கியுள்ள தாங்கள் எப்பொழுது பின் தொடரும் கதை, காடு போன்ற பெரு நாவல்களை எழுத போகிறீர்கள், விரைவில் எதிர்பார்க்கலாமா?
  4. முடிவாக சிங்கையின் ஒரு மாத வாழ்க்கை எத்தனை ஸ்வாரஸ்யமானது, அனுபவத்தை பகிர முடியுமா? நேரமிருப்பின் இன்னுமொரு வாசக சந்திப்பு சாத்தியமா?

உங்களின் புத்தகங்களை படிப்பதிலும், உங்களை நேரில் கண்டு உரையாடியதிலும் மிக்க மகிழ்ச்சி. உங்களின் எழுத்துப்பணி மென் மேலும் சிறப்பாக தொடர இந்த எளிய அடியேனின் பிரார்த்தனைகள்.

லங்கேஷ்.

***

அன்புள்ள லங்கேஷ்,

ஒருபடைப்பு பேரிலக்கியம் ஆகியே தீரவேண்டும் என நான் சொல்லவில்லை. அதை பேரிலக்கியம் ஆக்குவது எப்படி என்றும் சொல்லவில்லை. நான் சொன்னது எதை நாம் பேரிலக்கியமாகக் கருதிவருகிறோம் என்றுதான். அதன் ஆசிரியனின் பார்வையின் விரிவு, அதன் கருவின் ஆழம், அதன் வரலாற்றுத்தேவை ஆகியவற்றின் மூலம் அவ்வாறு ஒருபடைப்பு விரிவடைகிறது. எந்த ஒருகருவையும் ஆசிரியன் தன் பார்வையின் விரிவின்மூலம் வரலாற்றுப்பெருக்கின் ஒரு பகுதியாக வைத்து அணுகமுடியும், அதுவே வரலாற்றியல்பு -Historicity – என்று சொல்லப்படுகிறது. எந்த ஒருகதையையும் சிலமனிதர்களின் கதையாக அன்றி மானுடக்கதையாக மாற்றமுடியும். அது அவ்வாசிரியன் அக்கருவில் எத்தனை தொலைவுக்குச் செல்கிறான் என்பதைச்சார்ந்தது. அவ்வாறுசெல்லும்போதே அது பேரிலக்கியம். இதை விரிவாக என் இலக்கியமுன்னோடிகள் வரிசை நூல்களில் விளக்கியிருக்கிறேன்

யானை என் இளமைமுதலே அணுக்கமான விலங்கு. எழுத்தாளர்களுக்குச் சில விஷயங்கள் அவர்களுக்குரிய குறியீடுகளாக உருவகங்களாக மாறிவிட்டிருக்கும். அவை அவர்களின் உள்ளத்தை வெளிப்படுத்தும் கருவிகள். எல்லா எழுத்தாளர்களும் சில விஷயங்களை நுணுக்கமாகத் திரும்பத்திரும்ப சொல்லி மேம்படுத்தியபடியே செல்வதைக் காணலாம். அவ்வுருவகங்களைத் தொகுத்து அவனை மேலும் அறிவது ஒரு நுண்வாசிப்பு

நால்வருணம் பற்றி நீங்கள் சொல்வது சொல்லிச் சொல்லி நம் மரபால் அளிக்கப்பட்ட ஒர் உருவகம் மட்டுமே, என்றுமே அப்படி தெளிவான குணாதிசயங்கள் இருந்ததில்லை. ஓர் அரசரின் அமைச்சர் பதவிக்காகவும், வேள்வியில் அளிக்கப்படும் பசுக்களைப் பரிசாகப் பெறவும் போட்டியிட்ட அந்தணர்களை உபநிஷதக் கதைகள் சொல்கின்றன. குயவப்பெண்ணின் மகனும் காட்டுப்பெண்ணின் மகனும் பிரம்மஞானம் நோக்கிச் சென்றதையும் அவை காட்டுகின்றன. நீங்கள் வெண்முரசு வாசித்துப்பார்க்கலாம். மானுடரின் தனிப்பட்ட குணங்களை வெளியே இருந்து எந்த அமைப்பும் வகுத்துவிடமுடியாது.

நால்வருணங்கள் என்பவை நாலாயிரம் நாற்பதாயிரம் நாலுலட்சமாக பிரிந்துபெருகிக்கிடந்த குலங்களை, குடிகளை, கோத்திரங்களை, கூட்டங்களை ஒரு பொதுச்சட்டகத்திற்குள் தோராயமாகத் தொகுக்கும் ஒரு முயற்சி. அரசமைக்க அப்படித் தொகுப்பது அவசியமானது. 1891 ல் முதல் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது வெள்ளைய அரசும் அதையே வேறுவகையில் செய்தது. சமானமான சமூக நிலையும் குணங்களும் கொண்ட சாதிகளை ஒன்றாக்கி ஒரே அடையாளம் அளித்தது. அந்தத் தொகுப்புகளே பெருஞ்சாதிகளாக இன்று தொடர்கின்றன.

இந்தயுகம் வணிக யுகம் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் பொருள் அடிப்படையில் விலைபொருளாக மாறிவிட்டிருக்கிறது. ஆகவே உழைப்பும் விலைபொருளே. அது இயல்பு. ஆனால் எல்லா பொருளும் விலைபொருள் அல்ல. சேவைகள், அறிவியக்கங்கள் முழுக்க விலைபொருளாக ஒருபோதும் ஆகாது

வெண்முரசு இன்னும் சில வருடங்கள் நீளலாம். பார்ப்போம்

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38
அடுத்த கட்டுரைகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2