‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43

[ 13 ]

அவை முடிந்ததும் எழுந்த இளைய யாதவரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் அவரிடம் பேச ஒருவரை ஒருவர் கடந்து முண்டியடிப்பதைக் கண்டபின் தருமன் புன்னகையுடன் வெளியே நடந்தார். நகுலனும் சகதேவனும் அவரைத் தொடர்ந்து சென்றனர். அர்ஜுனன் இளைய யாதவர் அருகிலேயே நின்றுகொண்டான். “அவர் மேல் சினம் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை மறந்துவிட்டனர், மூத்தவரே” என்றான் நகுலன். “ஆம், பத்ரர் அவருக்கு நன்று செய்தார். அவர் அங்கு வந்து பேசிய சொற்களின் கீழ்மையே மாணவர்களை அவரிடமிருந்து அகற்றி இளைய யாதவைரை நோக்கி கொண்டுவந்துவிட்டது. அதை சாந்தீபனி முனிவர் அழுத்திச் சொல்லியும் காட்டிவிட்டார்” என்றார் தருமன்.

“நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்று நகுலன் சொன்னான். “இக்கல்விநிலையின் பெரும்பாலான மாணவர்கள் எளிய குடிப்பிறப்பு கொண்டவர்கள். யாதவர்கள் பலர். சூத்திரர்களும் நிறையபேர் உள்ளனர். அவர்கள் இவ்விழிசொற்களைக் கேட்டு சினமே கொள்வார்கள்.” தருமன் “அவர் இன்று பேசியதும் இளநெஞ்சங்களுக்கு எழுச்சியளிப்பதே. தத்துவத்தை எதிரீடுகளாகப் பிரிப்பது மிக எளிது. நன்று தீது என. எளியது கடியது என. நின்றது செல்வது என. அவர் இன்று மிக இயல்பாக அதை பழையது வருவது என பிரித்துக்காட்டினார். இளையோரின் உள்ளம் என்றும் வருவதையே ஏற்கும். அது உகந்ததா அல்லவா என்பதுகூட அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல” என்றார்.

அவர்கள் பேசியபடியே வெளியே சென்று முற்றத்தில் நடந்தனர். “உண்மையில் இவ்விளையோர் அவரை வெறுத்தனரா என்றே எனக்கு ஐயம்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும்போக்கில் அடித்துச்செல்லப்பட்டனர், அவ்வளவுதான். சிலர் அவருடன் உள்ளத்தால் ஓயாது உரையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அவரை எதிரியாக நிறுத்திப்பேசித்தான் பழக்கம். அவரிடம் அவர்கள் கேட்கும் வினாக்களை எல்லாம் அப்போது உணர்வெழுச்சி நிறைந்த குற்றச்சாட்டுகளாக ஆக்கிக்கொள்ளலாம். அவருக்கு எதிராக நின்றிருக்கையில் அவருக்கு நிகரென்றும் தோற்றமளிக்கலாம்” என்றார் தருமன்.

“இன்று அவர் தன்னியல்பான எளிமையுடனும் பேரறிவுடனும் தங்கள் முன் தோன்றியபோது அந்த மாற்றுருக்கள் அனைத்தும் கழன்று உதிர்ந்துவிட்டன. அவரை என்றுமே அவர்கள் வழிபட்டனர், அவ்வியல்புநிலைக்கே அவர்கள் மீண்டனர். அவரை எதிர்த்தோம் என்பது இன்று அவர்களுக்கு தங்களைப்பற்றி ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. வெறுமனே வழிபடவில்லை என்றும் எதிர்த்து உரிய விடைகள் பெற்றே ஏற்றுக்கொண்டோம் என்றும் சொல்லிக்கொள்ள முடிகிறது” என்று தருமன் சொன்னார். “காமத்திற்கு ஆயிரம் மாற்றுருக்கள் என்பார்கள், அறிவியக்கத்தில் அது பல்லாயிரம். ஏனென்றால் ஆணவத்தைக் கடந்து அறிவிலாடுவது மானுடருக்கு எளிதல்ல. அவ்வாறு கடந்தவர்கள் பின்னர் மானுடரும் அல்ல.”

“அவர்களை அவர் வென்றுவிட்டார். இனி அவரை அவர்கள் வழிபடத் தடையேதுமில்லை” என்றான் நகுலன். தருமன் பேசாமல் வந்த சகதேவனை நோக்கி “நீ என்ன எண்ணுகிறாய், இளையோனே?” என்றார். “எழுச்சிகொண்ட வழிபாட்டுணர்வு இங்கு இருந்துகொண்டுதான் இருக்கும்” என்று அவன் சொன்னான். அவனை சிலகணங்கள் நோக்கி சொல்லெதிர்பார்த்த தருமன் “சொல்!” என்றார். “ஆனால் மானுட உள்ளத்தின் இருட்பாதைகள் எளியவை அல்ல. அதேயளவுக்கு காழ்ப்பும் இங்கு நீடிக்கும்.”

தருமன் நெற்றி சுருங்க “ஏன்?” என்றார். “ஏனென்றால் காழ்ப்பு தன்னளவிலேயே சுவைமிக்கது. மூத்தவரே, மானுடன் தேடுவதென்ன? அவன் உள்ளத்தை மிச்சமின்றி நிறைத்து அவன் நாட்களை விரைவுகொள்ளச் செய்யும் ஒன்றுக்காகத்தானே? காழ்ப்பைப்போல அதை அளிக்கும் பிறிது எது? காமமும் ஆணவநிறைவும் தோன்றி உடன் மறையும் இன்பங்கள். காழ்ப்பு தொடத்தொட வளர்வது. அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு தான்மட்டுமே எனத் திகழ்வது” என்றான் சகதேவன். “காழ்ப்புகொண்டவனை அது ஆற்றல்கொண்டவனாக ஆக்குகிறது. பழுக்கக் காய்ச்சிய வாள் மும்மடங்கு வல்லமை கொள்கிறது.”

“பிராமணரும் ஷத்ரியரும் அவரை ஏற்கமாட்டார்கள் என்கிறாயா?” என்றார் தருமன். “அது அத்தனை எளிதல்ல, மூத்தவரே. தங்கள் பெருமையுணர்வாலேயே அந்தணர் அவரை ஏற்கலாம். தங்கள் கூரிய நேருள்ளத்தால் ஷத்ரியரும் அவரை ஏற்கக்கூடும். தங்கள் இழிவுணர்வால் யாதவர் அவரை வெறுக்கலாம். தாங்கள் சூத்திரர் என்பதனால்தான் அவரை விரும்புகிறோம் என எவரும் எண்ணிவிடலாகாதென்பதற்காக அவர்கள் அவரை புறக்கணிக்கலாம். இப்படித்தான் இது நிகழுமென எவரேனும் சொல்வதனாலேயே அப்படி அல்லாமலாகலாம். வெறுப்பும் விருப்பும் அவற்றை அடைபவர்கள் தங்களை எவ்வகையில் இங்கு முன்வைக்கிறார்கள் என்பதை மட்டுமே சார்ந்துள்ளன.”

சிலகணங்களுக்குப்பின் தருமன் “இளையோனே, வரவர உன் சொற்களைக் கேட்பதே அச்சமும் துயரமும் அளிப்பதாக உள்ளது. ஒரு சொல்லாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடிவதில்லை. என் ஆழம் சொல்கிறது நீ சொல்வனவெல்லாம் உண்மை என்று” என்றார். “உண்மைமுன் நின்றிருக்க பயின்றோமென்றால் முதலில் எழும் திகைப்பும் துயரமும் விலகி மெல்ல ஓர் ஆறுதலை அடையத்தொடங்குவோம், மூத்தவரே. அது நிலையழிந்து நீரில் செல்பவன் காலடியில் பாறையை உணர்வதுபோல” என்றான் சகதேவன். நகுலன் புன்னகைத்து “பாறை கால்கீழிலென்றால் நன்று. கூரையென மெல்லிய புல்அமைவதே உகந்தது. தலைமேல் விழுந்தாலும் தீதில்லை” என்றான். சகதேவன் சிரித்துவிட்டான்.

அவர்கள் குடில்களை அணுகும்போது தொலைவிலேயே தருமனின் குடில்முற்றத்தில் பிருகதர் நிற்பதைக் கண்டனர். “உங்களுக்காகக் காத்து நின்றிருக்கிறார்” என்றான் நகுலன். “என்ன நாடகத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. வரவர எவரைப் பார்த்தாலும் கூத்தரங்கில் அமர்ந்திருக்கும் உணர்வு வந்துவிடுகிறது, இளையோனே” என்றார் தருமன். பிருகதர் அவர்களை நோக்கி வந்து “அந்த இழிமகனுடன் வருவீர்கள் என்று அஞ்சினேன். அவனுடன் வந்திருந்தீர்கள் என்றால் என் சுடுமொழிகளை அவன் கேட்டிருப்பான். வீணன்” என்றார். “பார்த்திருப்பீர்கள், அத்தனைபேர் முன்னிலையிலும் என் கால்களில் விழுகிறான். என்னவென்று நினைத்தான் என்னை? இவன் காலில் விழுந்தால் அனைத்தையும் மறந்து இவனை நெஞ்சில் சூடுவேன் என்றா?”

“நான் வேண்டுவதென்ன? எனக்கு முறைமை செய்யவேண்டுமென்று எவரிடம் கேட்டேன்? ஆம், நான் அவன் ஆசிரியன். அவனுக்கு எழுத்தறிவித்தவனே நான்தான். ஆனால் எனக்கு அது ஒரு பொருட்டே அல்ல. நான் எதையும் எதிர்பாராது இங்கே வாழ்ந்து எளிய மனிதனாக மடியப்போகும் ஒருவன். இங்குள்ள எத்தனை பேருக்கு இன்று தெரியும், நான் பெரியவருக்கு அணுக்கன் என்று? என் கையால்தான் வேததரங்கிணியையும் பிரஸ்னசமுச்சயத்தையும் ஏட்டில் எழுதினேன் என்று சொன்னால் இவர்கள் நம்பப்போவதில்லை. நான் அதை ஒரு பொருட்டென எண்ணவுமில்லை.”

“என் வஞ்சம் நேரடியானது. என் ஆசிரியரை அவன் சிறுமைசெய்து அவர் கடந்தேக வழிவகுத்தான். அதை அவர் மைந்தர் மறக்கலாம், நான் மறக்கப்போவதில்லை. என் நோக்கில் அவன் ஒருபோதும் சாந்தீபனிக் கல்விநிலைக்கு உரியவன் அல்ல, அவன் நச்சுச்செடி. பிடுங்கிக் களையவேண்டியவன். ஆம்.” அவர் மூச்சிரைத்தார். “அதைத்தான் அவனிடம் சொல்ல விழைகிறேன். எனக்கு இங்கே எந்த இடமும் இல்லை. என்னை குருநிலையின் எப்பொறுப்பிலும் விட்டுச்செல்லவில்லை ஆசிரியர். ஆனால் அவரை நான் நெஞ்சில் சூடியிருக்கிறேன். ஒருநாளும் அவர் அடிகளை சென்னிசூடாமல் நாள் விடிந்ததில்லை எனக்கு. என் உடலை மண்தின்னும் வரை அவ்வண்ணமே இருப்பேன்.”

“சென்று சொல்லுங்கள் அவ்விழிமகனிடம், நான் அவனை எவ்வகையிலும் ஏற்கவில்லை என்று! நான் எதையுமே பொறுத்துக்கொள்ளவில்லை என்று… ஆம்!” மேலும் சொல்லப்போகிறவர் போல இருமுறை உடலெழுந்துவிட்டு அவர் திரும்பிச்சென்றார். அவர் குரல் இடறியதை, தொண்டை ஏறியிறங்கியதை, விழிகள் நீரணிந்ததை தருமன் திகைப்புடன் நோக்கி நின்றார். “உணர்ச்சிகளை செம்மையாக உருவாக்கிக்கொண்டுவிட்டார். இப்போது அவர் உள்ளம் நிறைவுகொண்டிருக்கும்” என்றான் நகுலன். “அவர் வாழ்நாளெல்லாம் சூட ஒரு அரிய தோற்றம் அமைந்துவிட்டது. சரியான சொற்கள். உகந்த உணர்வுகள். நாளைக்குள் இங்குள்ள அத்தனை பேரிடமும் அதை சொல்லிவிடுவார்.”

“நாம் இரக்கமற்றவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா?” என்றார் தருமன். “இரக்கமற்றவராக ஆகப்போகிறவர் இவர்தான். தோற்றங்களைவிட மாறுதோற்றங்கள் விசை மிக்கவை, முழுமையாக்கப்பட்டவை. நல்ல நடிகர்களை தேர்ந்த புரவிகளை போர்வீரர்கள் என தெய்வங்கள் விரும்புகின்றன” என்றான் சகதேவன். குடிலருகே சென்றதும் “நன்று, நான் ஓய்வெடுக்கிறேன்” என்றார் தருமன். குடுமியில் எடைகொண்ட கதவென ஒருகணம் ஒரு சொல்லில் நின்று சுழன்று பின் “இன்றே அவளை அவர் சந்திக்கிறாரா?” என்றார். “ஆம், அங்குள்ள முறைமைகள் முடிந்ததும் சந்திக்கக்கூடும்” என்றான் நகுலன்.

“நன்று!” என்றபின் தருமன் உள்ளே சென்றார். தலைவணங்கி நகுலனும் சகதேவனும் தங்கள் குடில்களுக்கு சென்றனர். தன் அறைக்குள் நுழைந்ததும் தருமன் பெரும் விடுதலையுணர்வை அடைந்தார். பாயை விரித்து விழிமூடி எண்ணங்களின்றி படுத்துவிடவேண்டுமென்று தோன்றியது.

[ 14 ]

அர்ஜுனன் வந்து குடிலுக்குள் தலைவணங்கி நின்றான். பாயில் படுத்திருந்த தருமன் துயில் மயக்கம் எஞ்சிய விழிகளுடன் “ம்?” என்றார். “அரசியை இளைய யாதவர் பார்க்கச் செல்கிறார். தாங்களும் உடனிருக்கவேண்டுமென்றார்.” தருமன் “நானா? அவர்கள் தனியாக சந்திக்க விழையலாம்” என்றார். “இளைய யாதவர் அது ஒரு முறைமைச் சந்திப்பாகவே அமையவேண்டுமென விழைகிறார்.” தருமன் சிலகணங்கள் எண்ணிவிட்டு “அப்படி அவர் சொன்னாரா?” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். “சரி” என அவர் எழுந்துகொண்டார்.

உடல்தூய்மை செய்துகொண்டு அவர் அவனுடன் சென்றார். செல்லும் வழியில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. தொலைவில் அரசமரத்தடியில் திரௌபதி தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் தருமன் மெல்லிய குரலில் “இளைய யாதவர் ஏன் நான் உடனிருக்கவேண்டும் என்றார்?” என்றார். “அதை அவரே அறிவார். ஆனால் அவர் அரசியை தனியாக சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிந்தது. இன்றிருக்கும் அவரது உளநிலை அதற்குரியதல்ல என்று நீங்களும் அறிவீர்கள்.” தருமன் “ஆம்” என பெருமூச்சுவிட்டு “அவரிடம் அரசி எந்நிலையில் இருக்கிறாள் என்று சொன்னாய் அல்லவா?” என்றார். “ஆம், சொன்னேன்” என்றபின் அர்ஜுனன் “தாங்களே செல்லலாம்” என்று நின்றுகொண்டான்.

அவர் அரசமரத்தடியை அடைந்ததும் திரௌபதி ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள். அவள் விழிகளில் வியப்பில்லாததைக் கண்டு அவளுக்கு அவர் வருவது தெரியும் என அவர் உய்த்தறிந்தார். அரசமரத்தடியில் அமர்ந்து பேசுவதற்காக மரத்தாலான பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவர் அவளுக்கு நிகராக ஆனால் சற்று விலகி அமர்ந்தார். அவள் அவர் அமர்ந்ததையே உணராதவள் போலிருந்தாள். அவர் அவளை ஓரக்கண்ணால் பார்த்தார். நிமிர்ந்த தோள்கள், சொடுக்கி எழுந்த தலை. கருங்குழல் சரிந்து பின்னால் பீடத்தில் விழுந்து வளைந்திருந்தது. ஆடையணிகளின்றியும் அரசியென்றே தெரிந்தாள்.

அவள் அவர் நோக்குவதை உணர்கிறாள் என எண்ணியதும் அவர் தன் விழிகளை விலக்கிக்கொண்டார். விழிகள் விலகியதுமே அவள் தோற்றம் மேலும் முழுமையுடன் உள்ளே தோன்றியது. நோக்கியபோது அறியாத குறுநிரைகள் அப்போது தங்கள் மென்நிழலுடன் அசைந்தன. அவர் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. முற்றிலும் அறியாத பெண்மீதென பெரும் ஈர்ப்பு அவள் மேல் ஏற்பட்டது. அவள் உடலின் மெல்லிய வியர்வை மணத்தை, வெம்மையை உணரமுடிந்தது. முதிரா இளைஞன் என அவர் உள்ளம் கிளர்ந்தபடியே சென்றது. அறியாது அவருடல் அவளை நோக்கி நகர்ந்தது. நகரவில்லை, அப்படி ஓர் அசைவு உடலுக்குள் நிகழ்ந்தமைந்தது. அதை அஞ்சி அவர் மறுபக்கம் விலக அவ்வசைவு அவர் உடலில் நிகழ்ந்தது.

அச்சிறு அசைவால் அவர் உணர்வுகள் கலைந்தன. ஏக்கமெழுந்து நெஞ்சு எடைகொண்டது. கண்ணீர் குளிர்ந்த விழிகளை இமைகளால் அடக்கினார். அப்போது தெரிந்தது, இழந்தது என்ன என்று. இழக்கப்பட்ட பெண்ணைப்போல இனிதான சுட்டெரிக்கும் பிறிதொன்றுண்டா? விரும்பும் பெண்ணை இழந்தவர்கள் எப்படி உயிர்வாழ்கிறார்கள்? என் அகம் உருகிக்கொண்டிருக்கிறது. மிக அருகே இருந்தும் எங்கோ என்றிருக்கிறாள். அவளறிவாளா? அறிவாள். அவள் நுண்ணுணர்வின் கூர்மை அவர் அறிந்ததே. வியந்து திகைத்து அஞ்சி அடைக்கலமான நஞ்சு அது. அவள் அறிவாள் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் சிறுபூச்சியை என உதறிவிட்டு அமர்ந்திருக்கிறாள். பெண்களால் அது முடியும்.

தொலைவில் இளைய யாதவர் வருவதைக் கண்டதும் அவர் பெருமூச்சுவிட்டார். நன்று, இல்லையேல் இத்தன்னிரக்கம் சினமாக பற்றி எழுந்துவிடக்கூடும். புறக்கணிக்கப்படுகையில்தான் நாம் எத்தனை ஆணவம் கொண்டவர்கள் என்று தெரிகிறது. இளைய யாதவர் வருவதையே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் சிறுவனைப்போல மேடுகளை தாவிக்கடந்தும் அருகே நின்ற மரங்களின் கிளைகளைப் பற்றி ஆட்டிவிட்டும் அப்பால் எழுந்து பறந்த பறவை ஒன்றை நின்று நோக்கி முகம் மலர்ந்தும் வந்தார். அவர் தலையில்சூடிய மயிற்பீலி காற்றில் நலுங்கியது. அத்தனைக்கும் அப்பால் அவரை ஒரு சிறுவன் என்று நிலைநிறுத்துகிறது அது.

அவர் அரசமரத்தடிக்கு வந்ததும் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரையும் அரசியையும் வணங்குகிறேன். முறைமைசார்ந்த சந்திப்பு என்பதனால் என் கையுறையாக இதை கொண்டுவந்தேன்” என்று தன் இடையிலிருந்து ஒரு சிறு கருவியை எடுத்து அவர்கள் முன் வைத்தார். “பீதர்களிடமிருந்து இதை பெற்றேன். கலங்களில் அமைக்கப்படும் வடக்குநோக்கிக் கருவியை கையில் கொண்டுசெல்லும்படி சிறிதாக அமைத்துள்ளனர்” என்றார். அக்கருவியில் வட்டமான சிறுவெள்ளிப்பேழைக்குள் கல்லிரும்பாலான சிறிய கரியமுள் நின்று நடுங்கிக்கொண்டிருந்தது. அதன் அசைவுகள் அடங்கியதும் முள் வடக்கு நோக்கி நிலைத்தது.

“பீதர்நாட்டில் சில இடங்களில் இத்தகைய ஆற்றல்கொண்ட கல்லிரும்புப் பாறைகள் உள்ளன” என்றார் இளைய யாதவர். “அவற்றை அவர்கள் கரிய ஆமை என்று வழிபடுகிறார்கள். மண்ணுக்குள் உள்ள தெய்வங்களின் செல்வத்தைக் காக்கும் வல்லமைகொண்ட தெய்வம் அது.” தருமன் புன்னகையுடன் “ஆம், குபேரன்” என்றார். அந்தப் பேழையை கையிலெடுத்து மும்முறை சுற்றியபின் கீழே வைத்தார். நிலையழிந்து தடுமாறி மெல்ல மீண்டும் வடக்கையே அது காட்டியது. “நிலைபெயராமை” என்று இளைய யாதவர் சிரித்தார். தருமன் “குபேரனை எண்ணிய மனம் வேறெங்கும் நிலைப்பதில்லை. வடவன் இப்புவியின் பல்லாயிரம் கோடி உள்ளங்களை தன்னில் நிலைபெறச் செய்பவன்” என்றார்.

அந்தச் சிறிய கருவி தருமனின் உள்ளத்தின் அனைத்துத் துயரங்களையும் விலக்கிவிட்டது. திரௌபதி முறைப்படி குனிந்து அக்கையுறையை ஒருமுறை தொட்டு அதை ஏற்றுக்கொண்டாள். “அரசி, தங்களை ராஜசூயம் வேட்டு அமர்ந்திருக்கும் கோலத்தில் சந்தித்துச் சென்றேன். இன்று இங்கே மரவுரி அணிந்து அமர்ந்திருக்கிறீர்கள். ஒன்றுமட்டும் சொல்ல விழைகிறேன். அரசர் அரியணையாலோ மணிமுடியாலோ அமைந்தவர்கள் அல்லர். அவர்கள் ஆளும் மக்களின் உள்ளங்களில் உள்ளது அவர்களின் பீடம். அங்கமர்ந்து நீங்கள் இன்றும் ஆள்கிறீர்கள். நாளை அரியணையும் மணிமுடியும் செங்கோலும் தேடிவரும், ஐயம் வேண்டியதில்லை.”

நெடுநாட்களாகவே பேசாமலிருந்தமையால் திரௌபதி தன் குரலையே இழந்துவிட்டவள் போலிருந்தாள். அவள் நெஞ்சுக்குள் இருந்த சொற்கள் தொண்டையை முட்டுவதை தருமனால் உணரமுடிந்தது. பெருமூச்சுடன் உடலை அசைத்தபின் அவள் இருமுறை தொண்டையை சீரமைத்தாள். பின்னர் “வெற்று முகமன்கள் சொல்லாதவர் என்று உங்களைப்பற்றி எண்ணியிருந்தேன். கூர்மதியர், சொல்வலர், களவீரர், காத்துநிற்பவர், கைவிடாதவர், தளர்ந்தமையாதவர் என்றெல்லாம் எண்ணியிருந்தேன். எஞ்சியது இவ்வெண்ணம் ஒன்றே. அதையும் இப்போது இழந்தேன்” என்றாள். இளைய யாதவர் அவள் முகத்தையே நோக்கி அமர்ந்திருந்தார். “அணிச்சொற்களை சொல்லிவிட்டீர்கள். கடமை முடிந்தது. நீங்கள் செல்லலாம்” என அவள் எழுந்தாள்.

“அரசி…” என அழைத்தபோது அவர் குரல் உணர்வெழுச்சி கொண்டிருந்தது. “தன்னடக்கம் கருதி நீங்கள் சொன்ன அச்சொற்களை மறுப்பவன் அல்ல நான். ஆம், நான் கூர்மதியன், சொல்வலன், களவீரன்தான். ஐயமே தேவையில்லை, காத்துநிற்பவன், கைவிடாதவன், ஒருபோதும் தளர்ந்தமையாதவன். என் சொற்கள் வெறும் முகமன்கள் அல்ல.” திரௌபதி சீற்றத்துடன் “அவைநடுவே நான் சிறுமைகொண்டு நின்றேன். காத்து நிற்கும் வீரராகிய நீங்கள் எங்கிருந்தீர்கள்?” என்றாள்.

இளைய யாதவர் “ஆம், நான் அங்கிருக்கவில்லை. அத்தனை விரைவாக அனைத்தும் முடிவாகுமென நான் எண்ணியிருக்கவில்லை. குடிப்பூசலில் எரிந்துகொண்டிருந்த யாதவர்களின் ஊர்கள்தோறும் சென்றுகொண்டிருந்தேன் அப்போது. என் எல்லைகள் மேல் சால்வனின் படை எழுந்த அன்றே அஸ்தினபுரியில் சூது நிகழ்ந்தது” என்றார். “அரசி, நான் வெல்லற்கரியவனே. ஆனால் ஊழாலும் அல்ல. நான் மானுடன், தெய்வம் அல்ல.”

“அப்படி என்றால் இப்போது எழட்டும் உங்கள் படை. சென்று அவ்வீணரின் நெஞ்சுபிளந்த குருதியை கொண்டுவந்து எனக்கு அளியுங்கள். என் குழல்சீவி ஐந்துமுடி போட்டு அமைகிறேன்…” அவள் குரல் எதிர்பாராதபடி உடைந்தது. “வஞ்சம் சுமந்து வாழமுடியவில்லை, யாதவரே. நாளும் எரிந்துகொண்டிருக்கிறேன். இவ்வஞ்சத்துடன் இறப்பேன் என்றால் பேரணங்காகி இக்காடுகளில் குருதிவெறிகொண்டு அலைவேன். என்னை காப்பாற்றுங்கள். நீங்களன்றி எனக்கு யாருமில்லை. இத்தனிமையில் ஒவ்வொருநாளும் உங்களையே எண்ணி உங்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன்.”

முதல்முறையாக தருமன் திரௌபதியின் அழுகையொலியை கேட்டார். அவர் உடலில் குளிர்ந்த வாள் பாய்ந்ததுபோல இருந்தது. இடக்கால் நடுங்கலாயிற்று. அவள் விம்மியும் விசும்பியும் அழுதாள். “மாவீரருக்கு மகளும் தங்கையும் ஆனேன். ஐவருக்கு மனைவியானேன். பெருவீரர்களை மைந்தரெனவும் பெற்றேன். எவரும் எனக்கு உதவவில்லை. சிற்றில்பிறந்த சிறுகுடிப்பெண்ணுக்குக் கூட இழிவு நேர்ந்தால் சினந்து வேல்கொண்டு எழ ஆண்மகன் ஒருவனேனும் இருப்பான். எனக்கு எவருமில்லை. தன்னந்தனிமை… இத்தனை தனிமையை நான் எப்போதும் உணர்ந்ததில்லை. யாதவரே, கைவிடப்பட்டபின் உணரும் தனிமை ஆயிரம்மடங்கு எடைகொண்டது.”

“அரசி, அவர்கள்…” என இளைய யாதவர் தொடங்கியதும் அவள் ஒரே கணத்தில் உச்சகட்ட சினம்கொண்டாள். “ஆம், அவர்களின் அறக்கணக்குகள் எனக்குத் தெரியும். அவர்களின் அரசியல்கணக்குகளும் தெரியும். பெண்ணென நான் தேடுவது எக்கணக்கும் இன்றி எனக்கென வந்து நிற்கும் ஓர் ஆண்மகனை. இயலாமையின் உச்சத்தில் ஒருவர் அங்கேயே சங்கறுத்துக்கொண்டு செத்துவிழுந்திருந்தால் அடங்கியிருக்கும் என் அழல்.” அவள் உடல் நடுங்கியது. கரிய தோலுக்குள் அனலென செங்குருதி ஓடுவது தெரிந்தது. கழுத்திலிறங்கிய நீலநரம்பு தோள்வளைவில் எழுந்து கைகளில் இறங்கியது.

“அரசி!” என இளைய யாதவர் சொன்னதும் அவள் மேலும் சினத்துடன் கைநீட்டி “போதும், சொல்லவருவது அரசியல் கணக்குகளை என்றால் அதை நான் முன்னரே அறிந்துவிட்டிருக்கிறேன் என்று கொள்ளுங்கள். அறம், அரசு, வேறென்ன சொல்லப்போகிறீர்கள் ஆண்கள்? காமம் கொண்டாடவும் மைந்தரைப் பெற்று மகிழவும் குலமகள் வேண்டும் உங்களுக்கு. உங்கள் அரசியலுக்கு முன் அவள் வெறும் பகடை. உங்கள் கணக்குகள் முடிந்தபின் வெறும் பழைய ஆடை” என்றாள். அவள் விழிகள் சிவந்திருந்தன. மூச்சு ஏறியிறங்கியது.

அவளை சிலகணங்கள் நோக்கியிருந்தார் இளைய யாதவர். அவள் மூச்சு அடங்கி தலைதாழ்த்தி கைவிரலால் விழிநீர்ப்பிசிறைச் சுண்டி உதடுகளை இறுக்கி மூச்செறிந்ததும் மெல்லிய குரலில் “அரசி, அங்கே நீங்கள் உரைத்துவந்த வஞ்சினத்தைக் கேட்டு நடுங்கினேன். குலமாதர் அவ்வண்ணம் குடிவேரையே அகழ்ந்தெடுப்பதாக வஞ்சினம் உரைப்பதில்லை” என்றார்.  வெறிக்குரலில் அவள் “நான் குலமாதல்ல. நான் அரசி! கோலேந்தி அரியணை அமர்பவள். இப்பெருநிலத்தை குடைகவிழ்த்து ஆள்பவள்” என்றாள்.

“ஆம், நீங்கள் அரசி. அதனாலேயே இது அரசியலென்றாகிவிடுகிறது. இது குடிப்பூசல் அல்ல. ஆகவேதான் இதன்பொருட்டு குருதிபெருகவிருக்கிறது” என்றார் இளைய யாதவர். “இது உங்கள் தனிமதிப்பைப் பற்றியதென்றால் நாளை களத்தில் கழுத்தறுபட்டு விழவிருக்கும் பல்லாயிரம் தந்தைகள் பல்லாயிரம் தனயர்கள் பல்லாயிரம் உடன்பிறந்தோர் ஏன் அதற்கு வாள்கொண்டு எழவேண்டும்? அவர்களுக்கு இதிலென்ன? எந்த உரிமையில் அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்த வஞ்சினத்தை அவைமுன் உரைத்தீர்கள்?”

அவள் சினத்துடன் ஏதோ சொல்ல வர கையமர்த்தித் தடுத்து “அங்கு நீங்கள் நின்றது அரசியென. சொன்ன சொற்களெல்லாம் அரசியென்றே” என்றார் இளைய யாதவர். “அரசி, இப்பாரதப் பெருநிலத்தில் எத்தனை அரசர்கள் களத்தில் தலையுடைந்தும் நெஞ்சுபிளந்தும் இறந்திருக்கிறார்கள்? எத்தனை அரசர்கள் தேர்க்காலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கிறார்கள், அறிவீர்களா? அரசர்கள் கழுவேற்றப்பட்டிருக்கிறார்கள். உயிரோடு தோலுரிக்கப்பட்டிருக்கிறார்கள். எண்ணைக்கொப்பரைக்குள் வெந்திருக்கிறார்கள். அவர்களின் தலைகள் வெட்டி கோட்டைமுகப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் பற்கள் அரண்மனைமுகப்பில் மாலையென தொங்கவிடப்பட்டிருக்கின்றன. ஆம், அப்படித்தான் இங்கு அரசியல் நிகழ்ந்திருக்கிறது. அங்கு அறமென்பது வெற்றிக்குரிய வழியென்றே பொருள்படுகிறது.”

“நீங்கள் அரசியென முடிசூடிக் கோலேந்தியதுமே இந்த ஆடலுக்குள் வந்துவிட்டீர்கள். படைகொண்டு நாடுகளை வெல்லும்போது நீங்கள் பெண்ணல்ல. திறைகொண்டுவந்த மன்னர் உங்கள் காலடியில் முடிசரிக்கும்போதும் நீங்கள் பெண்ணல்ல. ஆனால் அரசியல் தோற்று அவைமுன் நிற்கும்போதுமட்டும் பெண்ணென்று ஆகிவிடுவீர்களா என்ன? அரசி, அந்தணன் ஒருவன் வேள்விக்கரண்டியை கீழே போட்டுவிட்டு செங்கோலேந்தினால் அவன் அரசனே. அவன் மறத்துக்கு தன்னை கொடுத்தவன். களத்தில் தோற்று வீழ்ந்து தன் நெஞ்சுக்கு நேராக வாளை ஓங்கும் எதிரியிடம் அவன் நான் அந்தணன், நீ என்னைக் கொன்றால் அந்தணக்கொலைக்கான பழிசேரும் என்று சொன்னானென்றால் அவன் எத்தகைய வீணன்?”

“பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆடல். நீங்கள் தொடங்கியது இது. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென்றாக விழைந்தவர் இவர் அல்ல, நீங்கள். ஐவரும் உங்கள் கனவுக்கான பகடைகள் மட்டுமே. நம்மை நம்மைவிட அறிந்தவர் நம் எதிரிகள். உங்களை வெல்லாமல் தன் வெற்றி முழுமையடையாதென்று கௌரவமுதல்வன் அறிந்திருக்கிறான். அரசியலில் வெற்றி என்பது முற்றழிப்பதே. எதிரியைக் கொன்று அவன் பற்களை மாலையெனச் சூடுபவன் வீணன் அல்ல. அவன் அவ்வெதிரியின் குலத்திற்கு அழியாத அச்சுறுத்தலை அளிக்கவிரும்புகிறான். சிறுமையின் சுமைகொண்டு அக்குலம் சுருங்கிச் சிறுக்கவைக்க முயல்கிறான். உங்கள் நிமிர்வை அழிக்காமல் வெற்றியில்லை என்று மூத்தகௌரவன் எண்ணியிருந்தால் அது மானுடநெறிமீறல். ஆனால் அரசுசூழ்தலில் உகந்த வழியே.”

அவள் குத்திட்ட விழிகளுடன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் விழிகளை ஓரக்கண்ணால் நோக்கிய தருமன் அகம் நடுங்கி தலைகுனிந்தார். அந்தச் சொல்லாடல் அப்போதே முடிந்துவிடவேண்டுமென்று மட்டுமே அப்போது விழைந்தார். “அவைநின்று சொல்லுரைத்துவிட்டீர்கள். உங்கள் கொழுநர் ஐவரையும் அதற்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்கிவிட்டீர்கள். அரசி, உங்கள் சொல்லுக்கு நானும் முழுதும் கட்டுப்பட்டவனே. கௌரவர் ஒவ்வொருவரும் தலையுடைந்து களத்தில் மறைவர். குருதியாடி நீங்கள் கூந்தல் முடிவீர்கள். விழிநீரும் கண்ணீரும் விழுந்த களம்வழியாக நடந்து நீங்கள் முடிசூடுவீர்கள். ஐயமே தேவையில்லை, இது நிகழும்.”

அவள் உதடுகள் மெல்லப் பிரிந்த ஒலி கேட்டதுபோல் தோன்றியது. “அரசி, அதில் உங்கள் விழிநீரும் கலந்திருக்கும். உங்கள் வயிற்றுக்குருதியும் அங்கு வீழ்ந்திருக்கும்.” திரௌபதி நடுங்குவது தெரிந்தது. உதடுகளை மடித்து இறுக்கி அத்தருணத்தைக் கடக்க அவள் முயன்றாள். “என்ன சொல்கிறீர்கள், யாதவரே?” என்றபோது அவள் குரல் மிக ஆழத்திலிருந்து வந்தது. “அரசி, சிம்மங்களுக்கு குருதிச்சுவை காட்டுவதைவிடக் கொடியது தெய்வங்களுக்குக் காட்டுவது. தங்கள் பீடம்விட்டு எழுந்த தெய்வங்கள் குளிர்ந்தமையாமல் திரும்பா” என்றார் இளைய யாதவர். “தெய்வங்களுக்கு அனைவரும் எளிய சிற்றுயிர்கள் மட்டுமே. வென்றவரும் தோற்றவரும் வெறும் குருதிதான்.”

அவள் இருகைகளையும் சேர்த்து பற்றிக்கொண்டாள். அவள் கழுத்துத்தசை இழுபட்டு அதிர்ந்தது. ஏதோ சொல்லவருபவள்போல் தோன்றினாள். ஆனால் உடனே எழுந்து ஆடையைப்பற்றி இழுத்துச் செருகியபடி நடந்து அகன்றாள். இளைய யாதவர் அவளையே நோக்கி அமர்ந்திருந்தார். தருமன் “கூரிய சொற்கள், யாதவரே” என்றார். “ஆம், ஆனால் பிறிதெவரும் அவர்களிடம் இதை சொல்லப் போவதில்லை” என்றார் இளைய யாதவர்.

முந்தைய கட்டுரைலவ்வுல்லா!
அடுத்த கட்டுரைபுதிய கடவுள்