அறத்தாறிது…

1

நண்பர்களே,

என் சொந்த ஊர் திருவட்டாறு. குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் சங்க இலக்கிய காலகட்டத்தில் இருந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு ஊர்களில் ஒன்று திருவட்டாறு. இன்னொன்று தென்குமரி. ‘வளநீர் வாட்டாறு’ திருவட்டாறை புறநாநூற்றில் மாங்குடி மருதனார் சொல்கிறார்.

அங்கே இந்தியாவில் மிகப்பெரிய விஷ்ணு சிலைகளில் ஒன்று உள்ளது. இருபத்திரண்டு அடி நீளம் உள்ள ஒற்றைப்பெரும் சிலை. மூன்று கருவறைகளிலாக நிறைந்து கிடக்கும். கன்னங்கரிய திருமேனி. கடுசர்க்கரை என்ற பொருளால் ஆனது என்று சொல்வார்கள். கல்லுக்கு நிகரானது. இந்த மூன்று கருவறைகளையும் இப்போது ஒவ்வொரு நாளும் திறக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு மட்டும்தான் திறப்பார்கள்.

அதைப்பார்ப்பதற்கு அன்று பெரிய வரிசை நிற்கும். சாலையிலிருந்து போய்க்கொண்டே இருப்பார்கள் . நாலைந்து மணிநேரம் நின்று இரண்டு நிமிடம் மூன்று கருவறைகளிலாக பரந்து கிடக்கும் அந்த திருமேனியைப்பார்க்க முடியும். முதல் கருவறையிலே கால். இரண்டாவது கருவறையிலே உந்தி. மூன்றாவது கருவறையிலே திருமுகம் .அந்த சிலையை தரிசிப்பதை ஒரு பெரிய புனித செயலாக என் பாட்டி கருதினார்கள். அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன்.

என்னை சின்ன வயதிலே கூட்டிக் கொண்டுபோகும்போது அதை விஷ்ணுவின் ‘தர்மகாயம்’ என்றுதான் பாட்டி சொன்னார்கள். விஷ்ணுவின் தர்மவடிவம். பேரறத்தோற்றம். புராணத்தில் அதை மகாயோகநிலை என்று சொல்வார்கள். அதாவது பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு முந்திய கணம். வெறும் இருளாக, தான் இருப்பதை தான் மட்டுமே அறிந்தவராக விஷ்ணு படுத்திருக்கும் நிலை. அந்நிலையில் பிரம்மா உதிக்கவில்லை. அதன் பிறகு தான் அவர் தொப்புளிலிருந்து ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்து அதில் பிரம்மன் உருவாகி அதிலிருந்து பிரபஞசங்கள் தோன்றி சிருஷ்டி தொடங்கியது. அதற்கு முந்திய நிலை. முற்றிருள் நிலை.
அது அவ்வளவு மகத்தான ஒரு படிமம். நெடுங்காலம் என் சிந்தனையை பாதித்திருந்த ஒரு படிமம் அது. அந்த சிலையைத்தான் விஷ்ணுபுரம் என்ற நாவலாக நான் எழுதியிருக்கிறேன். இந்த மேடையில் அறம் என்ற சொல்லுடன் அச்சிலை நினைவில் எழுந்தது. அதனுடன் இணைந்த பல நினைவுகள் வருகின்றன.

திருவட்டாறு ஆலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம். அது தமிழகத்திற்கு அண்மையில் இருப்பதாலும் தொடர்ந்து படையெடுப்புகள் நிகழ்ந்ததாலும் அவர்கள் தங்கள் தலைநகரை திருவட்டாறிலிருந்து 1795ல் திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்கள். அப்போதுதான் திருவனந்தபுரம் ஆலயம் பெரிதாக கட்டப்பட்டது. இந்த சிலையை விட ஒரு அடி சிறிதாக அங்கே ஒரு சிலை அமைக்கப்பட்டது. இதே போன்ற பெருஞ்சிலை. அனந்தபத்மனாபன்.

உங்கள் அனைவருக்கும் அந்த ஆலயத்தைப்பற்றிய ஒரு முக்கியமான செய்தி தெரிந்திருக்கும். சில வருடங்களுக்கு முன்னால் சுந்தரராஜ ஐயங்கார் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ‘திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் உள்ளன. அதில் சில ரகசிய செல்வங்கள் உள்ளன. இதை மன்னர் தன் பொறுப்பில் வைத்திருக்கிறார். முடியாட்சி சென்று குடியாட்சி வந்தபிறகும் கூட ஆலய நிர்வாகமும் அது சார்ந்த பொறுப்புகளும் மன்னர் குடும்பத்தில் தான் இருந்தன. இங்கு நிலவறைகளில் இருக்கும் செல்வம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. இதை நீதிமன்றம் தன் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அவர் நீதிமன்றத்தில் கோரினார்.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம் மகாராஜாவிடமிருந்து சாவியை வாங்கி நிலவறைகளை பரிசோதிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. நடுவர்குழு சென்று அறைகளைத் திறந்து பார்த்தனர். முதல் அறையில் பூஜைப் பொருட்கள் இருந்தன. சில பொருட்கள் பொன்னாலானவை. அதன்பிறகு மேலும் ஆறு அறைகள் இருந்தன. அந்த ஐந்து அறைகளில் திறந்து எடுத்த செல்வம் இன்று உலகத்தில் ஒரே இடத்தில் இருக்கும் மிகப்பெரிய செல்வக்குவைகளில் ஒன்று. கலைமதிப்பைக்கொண்டு அதை விலைமதிப்பிடவே முடியாது என்று சொல்கிறார்கள்.

அதை மதிப்பிட்ட ஒருவரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த போது அதில் இருக்கும் வைரங்களை பொதுச் சந்தையில் கொண்டு வந்தால் அதன் கலைமதிப்புக்காக ஏலம் போட்டால் இந்திய கருவூலத்தை விட அதிகமாக வரும் என்றார். வைரக்கற்களே குவியல்களாக உள்ளன. அதை இந்த மகராஜா குடும்பம் இத்தனைநாள் தன் கையிலே வைத்திருந்திருக்கிறது. அதில் ஒரு பத்து வைரத்தை அவர்கள் அள்ளிக் கொண்டு சென்றிருந்தால் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்திருப்பார்கள். ஆனால் அவருடைய மொத்தக் குடும்பமும் கீழ் நடுத்தர நடுத்தர வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள். கடைசி வரைக்கும் மகாராஜா ஒரு அம்பாசிடர் காரை அவர்தான் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அவருடைய குடும்பத்தில் வாரிசுகள் யாருமே பணக்காரர்கள் கிடையாது. ஆனால் அவர்களுக்குத் தெரியும் அந்தச்செல்வம் அங்கிருப்பது

யோசித்துபாருங்கள், உலகத்தின் மகத்தான செல்வத்தின் மேல் அமர்ந்து ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ அவர்களால் முடிந்தது. நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு நிலை அது. டாக்டர் அ.கா.பெருமாள் அவர்கள் ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார். அது திருவனந்தபுரத்தில் இருக்கும் மதிலகம் ஆவணங்களையும் திருவனந்தபுரத்திற்கு எழுதப்பட்ட கடிதங்களையும் தொகுத்து போடப்பட்ட ஒரு ஆய்வுநூல். ’முதலியார் ஆவணங்கள்’ என்று அதற்கு பெயர். குமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் முதலியார் என்ற குடும்பத்தில் இருந்த ஓலைகள் அவை. அவற்றில் கணிசமான பகுதியை ஏற்கனவே கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பதிப்பித்திருக்கிறார். எஞ்சிய ஓலைகளை அ.கா.பெருமாள் அவர்கள் பார்த்து பிழை தீர்த்து பதிப்பித்திருக்கிறார்.

அந்த நூல் எனக்கு நெருக்கமானது. ஏனென்றால் எனக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் அது. அந்த நூலில் ஒரு கடிதம் இருக்கிறது. அழகிய பாண்டியபுரம் முதலியார் குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாட்டு மக்களின் வரியை வசூலித்து மன்னருக்கு கொடுக்கும் பொறுப்பில் இருந்தவர். அழகிய பாண்டியபுரம் முதலியாருக்கு திருவிதாங்கூர் மன்னர் எழுதிய கடிதம் அதில் இருக்கிறது. அதில் மன்னர் சொல்கிறார், பதினைந்து நாட்களுக்குள் அரிசியை அரண்மனைக்கு அனுப்பி வைக்கவும். இல்லையென்றால் இங்கு சாப்பாட்டுக்கே கஷ்டமாகிவிடும் என்று.

உண்மையிலேயே பலமுறை சாப்பாட்டுக்கு கஷ்டமான நிலைமை திருவிதாங்கூர் அரசருக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் வெள்ளையரின் வரிவிதிப்பு அப்படி. வருடாவருடம் வரி ஏறிக்கொண்டே செல்லும். அது திருவிதாங்கூர் அரசரின் வருமானத்துக்கு ஏற்ற வரி அல்ல, வெள்ளை அரசின் தேவைக்கு ஏற்ற வரி. ஆகவே கடுமையான நெருக்கடி. ஆனால் ஒருபக்கம் அவர் உலகத்திலே மிகப்பெரிய செல்வத்தை கையில் வைத்திருக்கிறார். மறுபக்கம் பட்டினி. தொடர்ந்து வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிக மிக ரகசியமான குலச்செல்வமாக இதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளையர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒரு நாணயம் கூட இருந்திருக்காது.

நண்பர்களே, திருச்செந்தூர் ஆலயத்திலும் ஸ்ரீரங்கம் ஆலயத்திலும் சிதம்பரம் ஆலயத்திலும் இதே போன்ற நிலவறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கே எதுவுமே இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நிலவறைகள் இருக்கின்றன. இந்த ஒரு ஆலயம் மட்டும் தான் செல்வத்தோடு இருக்கிறது. அப்படியெனில் எவ்வளவு செல்வம் இருந்திருக்கிறது, அது எங்கு சென்றிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஆகவேதான் அது அத்தனை ரகசியமாக இருந்திருக்கிறது

ஆனால் 1780லும் 1876லும் தமிழக நிலப்பகுதியில் மாபெரும் பஞ்சம் வந்தபோது திருவிதாங்கூர் பகுதி முழுக்க கஞ்சித் தொட்டிகளைத் திறந்தார்கள். இந்தக் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கும்முறை இதுதான். அந்தந்த ஊரிலுள்ள வேளாள நிலப்பிரபுக்களை பிடித்து “நீங்கள் கஞ்சி தொட்டி திறக்கவேண்டும், காலையில் பத்து மணியிலிருந்து சாயங்காலம் மூன்று மணி வரைக்கும் கஞ்சிகொடுக்கவேண்டும்” என்று மகாராஜா ஏற்பாடு செய்கிறார். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அத்தனை சாதிக்கும் கஞ்சி அளிக்கப்பட்டது – கண்டிப்பாக அதில் சாதிக்கேற்ற இடவேறுபாடு இருந்தது. அந்தக்கால பார்வை அது. ஆனால் அனைவருக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டது

அந்தக்கஞ்சித்தொட்டிகளால் திருவிதாங்கூரின் மக்கள்தொகை இருமடங்கு ஆகியது என மதிலகம் ஓலைகள் காட்டுகின்றன. திருவிதாங்கூரின் இன்றைய ஊர்கள் உருவாகி வந்ததெல்லாம் அப்போதுதான். அந்தக் கஞ்சித்தொட்டி முறை மதத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் பஞ்சம் விலகியும் நீடித்தது. சுதந்திரம் கிடைத்தபின்னரும் பல இடங்களில் இருந்தது. நிலச்சீர்திருத்தங்கள் வரும் காலம்வரை. தோவாளை கஞ்சித்தொட்டியில்ன் அ.கா.பெருமாள் கஞ்சி குடித்திருக்கிறார். இன்றும் கஞ்சிமடம் போன்ற ஊர்கள் இங்கு நிறையவே உள்ளன.

நண்பர்களே, தர்மதுரைகளும் நவீனர்களுமான வெள்ளையர் ஆண்ட நிலப்பகுதிகளில் கோடிக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் செத்து அழிந்தனர். பழைமைவாதிகளும் சாதியவாதிகளுமான திருவிதாங்கூரில் ஒருவர் கூட பட்டினியால் சாகவில்லை. நவீனத்துவ அறம் வேறு. அங்கு உணவு என்பது ஒரு விலைபொருள். வணிகப்பண்டம். நிலப்பிரபுத்துவகால அறம் சாதிவேறுபாடுகள் மிக்கது. பலவகை அடிமைத்தனங்கள் கொண்டது. ஆனால் அங்கே உணவு அன்னம், தெய்வ வடிவம். பகிர்ந்துண்ணுதல் அதன் நெறி.

மகாராஜா கஞ்சித்தொட்டி திறப்பதற்கு அந்த ஊரிலிருந்தே தேவையான செல்வத்தை சேர்ப்பவதற்குரிய அமைப்பை உருவாக்கினார். இன்றைக்கு என்ன சொல்கிறார்கள் என்றால் , அன்றைக்கு பஞ்சகாலத்தில் அப்படி ஓர் அமைப்பை ஊரிலிருந்து உருவாக்க முடியாது என்று. அவ்வளவு பணம் அன்று மக்களிடம் இல்லை. மகாராஜா வரும்போது அவர்தான் கையோடு பணம் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் ஊரில் எவரிடமாவது கொடுத்து ‘உங்கள் செலவாக நீங்கள் நடத்துங்கள்’ என்று சொன்னார். அந்தச் செல்வம் அனந்தபத்மநாபனின் கருவூலத்தில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும். அதற்கு அந்தப்பணத்தை அவரால் எடுக்க முடிந்திருக்கிறது. ஆனால் தனக்கு என்று எடுக்க மனம் வரவில்லை.

1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தபோது அன்றைக்கு திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயர் திருவிதாங்கூர் இந்தியாவுடன் சேரக்கூடாது என்று வாதிட்டார். மகாராஜாவையே அதற்காக வற்புறுத்தினார். அவர் அதற்கு சொன்ன காரணம், திருவிதாங்கூர் தனித்து நின்றால் மிகவளமான நாடாக ஆகமுடியும், அதற்கான நிதி இருக்கிறது என்பதே. அவரை ஒரு சரியான மரபுவழிப் பிராமணர் என்று சொல்லலாம். அவர் மகாராஜாவின் ஊழியர், அமைச்சர். மகாராஜாவுக்கு எது சிறந்ததோ அதைச் சொன்னார்.

திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைந்தால் இந்தியா என்ற வறுமை நிறைந்த நாட்டின் பிரதிநிதியாக ஆகவேண்டியிருக்கும். உண்மையில் திருவிதாங்கூர் மிகப்பணக்கார நாடு என்றார். அவர் கடிதங்களில் நெடுங்காலம் அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே இருந்தது. இன்றைக்கு இந்த பெரும் செல்வம் தெரியவந்தபிறகு அந்தக் கடிதங்களை பார்த்தால் அவர் என்ன சொல்கிறார் என்று புரிகிறது என்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ்காரர்கள் அவருக்கெதிராக கலவரம் செய்தார்கள். மணி என்னும் கம்யூனிஸ்ட்காரர் அவரை வெட்டினார். திருவிதாங்கூர் மகாராஜா அவரை வேலையை விட்டு நீக்கினார். அய்யர் வேலையை விட்டு நீங்கும் போது தன் சம்பளத்தில் எஞ்சியிருந்த பணத்தை மட்டும் எழுதி எடுத்துக் கொண்டார். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வழியாக அன்றைய தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார் என்கிறது வாய்மொழிக்கதை. ஆரல்வாய்மொழியில் வண்டியை நிறுத்தி திருவிதாங்கூரிலிருந்து தான் பெற்றுக் கொண்ட தன் கார் உட்பட அனைத்து வசதிகளையும் அங்கே விட்டு விட்டு வேறு காரில் ஏறி சென்னைக்கு போனார் என்பார்கள்

ஆனால் அப்போதும் அவருக்குத் தெரியும், உலகத்திலேயே மிகப்பெரிய செல்வங்களில் ஒன்றைப்பற்றி. எப்போது வேண்டுமானாலும் அவரால் அதைத் திறந்து எடுத்துக் கொள்ளவும் முடியும். ஒரு கைப்பிடி வைரத்தை அள்ளிக் கொண்டு போனால் போதும், அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் செய்யவில்லை. எளிமையான பிராமணராகத் திரும்பிச்சென்று தன் ஆசிரியப்பணிக்கு மீண்டார். அரசனும் அந்தணனும் அப்படி இருந்திருக்கிறார்கள்

இது என்ன அறம்? இந்த நூற்றாண்டில் ஏன் இது நமக்கு சாத்தியமில்லாமல் போகிறது? ‘எதுக்குடா இதைத் திறந்தோம்’ என்று மனமுடைந்து வழக்கு போட்ட சுந்தர ராஜன் இறந்து போனார். ஏனெனில் அவருக்குத் தெரியாது ,இவ்வளவு பெரிய செல்வம் இருக்கும் என்று. இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகள் கையில் அதைத் திறந்து கொடுத்துவிட்டு போயிருக்கிறார். நீங்கள் பார்க்கலாம், நம் பேரப்பிள்ளைகள் காலத்தில் ஒர் அறிக்கை வரும். அவை எல்லாமே கண்ணாடிக்கற்கள்தான், எதுவுமே வைரம் கிடையாது என. அங்கு பொன்னே இல்லை என்று. எங்கே போனதென்றே தெரியாது. ஏற்கனவே அப்படி எவ்வளவோ செல்வங்கள் நம் நவீன ஜனநாயகத்தில் காணாமல் போயிருக்கின்றன. இதைவிடப்பலமடங்கு கோயில் நிலங்கள், பொதுச்சொத்துக்கள்….

இந்தக்காலகட்டத்தில் இல்லாத, அந்தக் காலகட்டத்தில் இருந்த, ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது. அது நம் கைகளில் தட்டுப்படுகிறது. அதைக் குடிஅறம் அல்லது குலஅறம் என்று சொல்லலாம். பழங்காலத்தில் நம் குடிபாரம்பரியமாக, குலபாரம்பரியமாக சில அறங்கள் கைமாறி வந்து கொண்டே இருந்தன. அதை மீறவே மாட்டார்கள் நம் முன்னோர். அது தான் அறத்தின் ஒரு தொடக்கம்.

மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் உணவு தேடி, எப்படி வேண்டுமானாலும் உறவை அடைந்து ,சக மனிதனை வென்று வாழலாம் என்ற ஒருகாலம் இருந்திருக்கும். அதிலிருந்து ஒருவிதமான நெறிக்குள் கொண்டு வந்தார்கள்.பழங்குடிகள் சில விஷயங்களை உயிரே போனாலும் செய்ய மாட்டார்கள் . சிலபழங்குடிகள் பால் குடிப்பதில்லை. செத்தாலும் சரி. Taboos எனலாம். அல்லது Faiths எனலாம். ஆனால் அந்த நெறிகளின் அடிப்படையில்தான் அவர்களின் குடி கட்டியமைக்கப்பட்டுள்ளது. அதைமீறினால் அவர்களின் குடி அழியும். ஆகவே மீறமாட்டார்கள். அது குடியறம்.

ஒரு பனையேறி ஆயிரம் மூடநம்பிக்கைகளும் சாதிப்பற்றும் கொண்டவராக இருக்கலாம், ஆனால் குடிப்பதற்கு என கேட்டால் பதநீருக்குக் காசு வாங்கமாட்டார். பிள்ளைக்குச் சமைப்பதற்கு என்று கேட்டால் மீனவர் மீனுக்குக் காசுவாங்கமாட்டார். பகிர்ந்துண்ணுதல் இயல்பான அறமாக இருந்தது. அதை அவர்கள் பண்டமென்றே பார்க்கவில்லை.

நம் தாத்தாக்கள் பாட்டிகள் எல்லாருமே குடி அறத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். அதற்கு மேல் உள்ள அறங்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தனவா என்பது வேறு விஷயம். நம் பழைய நூல்களை பார்க்கும்போது, நம் நாட்டார்க்கதைகளில் அந்த குடியறத்தைத்தான் நாம் பார்க்கிறோம். நமக்கு அது ஒரு பிரமிப்பையும் மனவிலகலையும் இன்று உருவாக்குகிறது. ஒர் அறத்தின் பொருட்டு ஒரு குலமே விலக்கப்பட்ட கதைகளைக் கேட்டு என்ன காலம் அது என்று பிரமிப்போம். ஒர் அறத்தின் பொருட்டு ஒருவன் சாகிறான் என்பது நமக்கு இன்று ஒரு திகைப்பையே உருவாக்கும்.

தமிழகம் முழுக்க பரவலாக காணப்படும் ஒருவகை நடுகற்சிலைகள் உண்டு. தன் தலைமுடியை தன் கையால் பிடித்து தன் கழுத்தை தானே வெட்டிக் கொள்ளும் சிலை. அதை நவகண்டம் என்று தமிழ்நாட்டிலே சொல்வார்கள் ஒரு மேலான தர்மத்துக்காக தன் கழுத்தை தானே அறுத்து செத்தவனுக்கு வைக்கப்பட்ட சிலை அது. போருக்கு முந்தைய களப்பலியாக. ஓர் ஏரியோ ஆலயமோ இடரின்றி கட்டப்படவேண்டும் என்பதற்கான தன்பலியாக அவன் இறக்கிறான். என்ன காரணத்துக்காக என்றாலும் இப்படி ஒரு மனிதன் செய்ய முடியுமா என்பதே நமக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. ஆனால் அவன் நம்பிய ஒரு விஷயத்துக்காக இதை செய்திருக்கிறான். இங்கே தான் சமூகஅறம் ஆரம்பிக்கிறது. ஒரு குடியிலிருந்து ஒரு சமூகத்திற்காக அவன் தன்னை அளிக்கிறான். தான் அழிந்தாலும் தன் சமூகம் வெல்லவேண்டுமென விழைகிறான்.

அந்த அறத்தின் முகங்களை பழைய இலக்கியங்களில் பார்த்துக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக ராமாயணம் மகாபாரதம் போன்ற பெருங்காவியங்களில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தின் சமூக அறத்தின் பல முகங்களை நாம் பார்க்க முடியும். மகாபாரதத்தில் ஓர் இடம். வெண்முரசில் அதை எழுதி வந்தபோது பெரிய விவாதம் வந்தது. குந்திக்கு குழந்தைகள் இல்லாத போது நியோகம் என்ற முறைப்படி வேறு ஆண்களுடன் கூடி குழந்தை பெறலாம் என்று ஆலோசனை சொல்லப்படுகிறது. தன் கணவன் மேல் உள்ள பிரியத்தினால் முடியாதென்று சொல்கிறாள்.

அப்போது பாண்டு பல்வேறு நியோகமுறைகளைப்பற்றிச் சொல்கிறான். எப்படியெப்படியெல்லாம் குழந்தை பெறலாம் என்று விளக்கும் ஒரு பகுதி அது. அந்த விளக்கத்தில் பலவகையான மைந்தர்களைப்பற்றி விளக்கம் வருகிறது. கானீனன் என்று ஆரம்பித்து பதினெட்டு வகையான பிள்ளைகள். எல்லாவகையான பிள்ளைப்பிறப்பும் அந்த பட்டியலில் அடங்கிவிடுகிறது.

அதாவது, ஒரு பெண்ணுக்கு பிள்ளை என்று ஒன்று பிறந்தால் அது எப்படி பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கு ஒரு பெயர் போட்டு அந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சமுதாயத்தில் Bastard என்று ஒருவன் கிடையாது. புறக்கணிக்கப்பட்டவன், அன்னியன் என்று ஒருவன் கிடையாது அவன் இன்னவகையான மைந்தன், அவ்வளவுதான்.

சரி, ஒரு கேள்வி. ஒரு மனைவி கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இன்னொரு காதலனிடம் ரகசியமாகப் போய் ஒரு குழந்தை பெற்றால், அது அவனுக்குத் தெரியும் என்றால் அந்தக் குழந்தை அந்தக் கணவனுக்கு பித்ரு கடன்கள் செய்யமுடியுமா? செய்ய முடியும். அவன் அவளை சட்ட பூர்வமாக விவாகரத்து செய்யும் வரை அவள் பெறும் எல்லாக் குழந்தைகளும் அவன் குழந்தைகள்தான் .அந்தக் குழந்தை நீர்க்கடன் செலுத்துமென்றால் அவன் மோட்சத்துக்கு போக முடியும். சரி, அவள் விவாகரத்து செய்து இன்னொருவன் கூட போய்விட்டாள். பிறகு ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையிடம் அவள் ’இவர் உன் அப்பா’ தான் என்று சொன்னால் அந்தக் குழந்தை அவர் மைந்தன் ஆகுமா? ஆகும். அவன் அந்த தந்தைக்கு நீர்க்கடன் செய்யலாம்.

அம்மா ஒருவரை இவர் உன் தகப்பன் என்று சொன்னால் அவன் அம்மைந்தனுக்குத் தகப்பன் தான். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்தவனும் அவள் கணவனின் சட்டபூர்வமான மகனே. ஏன் ஒருவனை ஒரு தந்தை மானசீகமாக தன் மைந்தன் என்று சொன்னால்போதும், அவன் மைந்தனேதான். ஆக அந்தச் சமூகம் ஒரே ஒரு மனிதனைக்கூட அடையாளம் இல்லாமல் ஆக்கிவிடக்கூடாது, சமூகத்தை விட்டு வெளியே அனுப்பக்கூடாது என்பதில் வைத்திருந்த ஒரு பிடிவாதம் அதில் தெரிகிறது. அது ஒரு குலஅறம்.

மெய்சிலிர்க்க வைக்ககும் பல இடங்கள் இருக்கின்றன மகாபாரதத்தில். யக்ஷப்பிரசன்னம் ஒர் இடம். பாண்டவர்கள் காட்டுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள். கடுமையான் தாகம். ஒரு இடத்தில் பாஞ்சாலி விழுந்து விடுகிறாள். ‘தண்ணீர் கொண்டு வா இனி ஒரு அடி கூட காலெடுத்து வைக்க முடியாது ’என்று சொல்கிறாள். பீமன் தண்ணீர் கொண்டுவர தனியாக போகிறான். அங்கே ஒரு அழகான குளிர்ச் சுனையை பார்க்கிறான். குடிப்பதற்காக கையில் நீரள்ளுகிறான். ஒர் அசரீரி கேட்கிறது. ஒரு யக்ஷன் சொல்கிறான் ‘ இது என் குளம் நான் சொல்லாமல் இந்த தண்ணீர் நீ குடிக்க கூடாது’

‘சரி என்ன செய்யவேண்டும்?’ என்று பீமன் கேட்கிறான். யக்ஷன் ‘நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல். சரியான பதில் சொன்னால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்று சொல்கிறான். பீமன் ‘இல்லை, என் தாகம் அதுவரை பொறுக்காது’ என்று சொல்லி தண்ணீர் குடிக்கிறான். இறந்துவிடுகிறான். சற்று நேரம் கழித்து அங்கு அர்ஜுனன் வருகிறான். அண்ணன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறான். இருந்தும் நீரள்ளி குடிக்க்க முயல்கிறான். அசரீரி தடுக்கிறது. கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி கேட்கிறது. ‘இல்லை முதலில் தாகம் தீரட்டும்’ என்றபடி நீர் குடித்து அவனும் இறந்து விடுகிறான். அது போல நகுலனும் சகதேவனும் இறந்து விழுகிறார்கள்.

கடைசியாக தம்பியரைத் தேடி தர்மன் அங்கு வருகிறான். தண்ணீர் அள்ளப்போகும்போது மறுபடியும் அசரீரி குரல் கேட்கிறது. தண்ணீரை கீழே விட்டுவிடுகிறான். அந்த அசரீரி நூறு கேள்விகளைக் கேட்கிறது. யக்ஷப் பிரஸ்னம் என்ற அற்புதமான ஒரு குட்டி உபநிஷத் அது. அதில் அற்புதமான, யோசித்துப்பார்க்கவேண்டிய வினாக்கள் இருக்கின்றன. உதாரணமாக உலகிலேயே மிகப்பெரிய சுமை எது என்று கேட்கும்போது கர்ப்பம் என்று சொல்கிறான். உலகத்தில் மிகப்பெரிய துயரம் எது என்று கேட்கும்போது புத்திர துக்கம் என்று சொல்கிறான். தந்தைக்கு மகன் இறக்கும்போது வரும் துயரம் அது. தாய்க்கு மகன் இழக்கையில் வருவதை விட ஒருபடி பெரியது அது. ஏனெனில் தாயைவிடவும் தந்தைக்கு மகன் முக்கியமானவன். ஏனெனில் அவன் நீட்சி மைந்தன். அவன் இந்த உலகத்தில் எஞ்சியிருக்கப்போவது மகன் வடிவில் தான். அதுதான் துயரங்களில் உச்சகட்ட துயரம் என்று யக்ஷபிரஸ்னம் சொல்கிறது.

எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி முடித்த உடனே யக்ஷன் மனம் மகிழ்ந்து கேட்கிறான். ‘இவ்வளவு அற்புதமான பதிலை நீ சொல்வாயென்று நான் நினைக்கவில்லை. இங்கு படுத்திருப்பவர்களில் ஒருவனை உயிருடன் தருகிறேன். கூட்டிக் கொண்டு போ. என்கிறான். அப்போது தருமன் நகுலனை உயிர்ப்பித்துத் தரும்படி கேட்கிறான். யக்ஷனுக்கு ஆச்சரியம். ‘அர்ஜுனன் இல்லையென்றால் நாட்டை திரும்ப பெறமுடியாது. பீமன் இல்லையென்றால் இந்தக் காட்டைவிட்டே வெளியே போக முடியாது நகுலனை ஏன் கேட்கிறாயே?” என்று கேட்கிறான்.

தர்மன் சொல்கிறான் , ‘என் தந்தைக்கு இரண்டு மனைவியர். குந்தியின் மகனாக நான் இங்கு இருக்கிறேன். மாத்ரியின் மகன்கள் நகுலனும் சகதேவனும். அதில் ஒருவன் இருக்க வேண்டும் அதுதான் நியாயம்’.யக்ஷன் வெளியில் வந்து ‘என்றைக்கு தர்மதேவனை நான் கண்ணில் பார்க்கிறேனோ அன்று எனக்கு மீட்பு என்று சொன்னார்கள். இன்று எனக்கு மீட்பு’ என்று சொல்லி பாண்டவர்களை உயிர்ப்பித்துவிட்டு விண்ணுலகு செல்கிறான்.

யோசித்துப்பார்க்கும்போது அந்த மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குலத்திற்குள் செயல்படும் உச்சகட்ட அறம் ஒன்று இருக்கிறது. குலதர்மங்களின் அறம் அது. ஒரு காலகட்டத்தில் அதுவே முதன்மையாக இருந்தது.

என் குடும்பத்தில் ஒரு நிகழ்வு. என் அப்பா தற்கொலை செய்து இறந்து போனார். அவர் மனம் கலங்கி இருந்த ஒரு காலம். அம்மாவின் தற்கொலை காரணமாக நான் விரக்தி அடைந்து வீட்டை விட்டு சென்றுவிட்ட ஒரு காலம். எஞ்சியிருக்கும் சொத்தை முழுக்க அப்பா என் தங்கை பெயருக்கு எழுதி வைத்தார். கேரளக்குல வழக்கப்படி சொத்து பெரும்பாலும் பெண்களுக்குத்தான் போகும். திருமணத்தின்போது அவளுக்கு கொடுத்த சொத்து போக எஞ்சியிருந்தது அந்த வீடும் நிலமும் மட்டும்தான். அதையும் தங்கை பெயரில் எழுதி வைத்துவிட்டார்.

அவர் இறந்து போனபின் உயில் வாசிக்கும்போது தான் இது தெரியவந்தது. அப்போதும் தங்கைக்கு அது தெரியவில்லை. அவள் மாமியாருக்கு தான் அது தெரிகிறது. மாமியார் உற்சாகமாக போய் தங்கையிடம் ‘உனக்குதான்டீ வீடு நிலம் எல்லாம் கிடைச்சிருக்கு’ என்று சொன்னாள். பெரிய வீடு அது. தங்கை சீறி எழுந்தாள். ‘எப்படி அப்பா அப்படி எழுதி வைக்கலாம் ? அது எங்கள் அண்ணன்களின் சொத்து’ என்றாள்.

காலை பத்து மணிக்கு அவளுக்குத் தெரிகிறது செய்தி. பத்தரைக்கு பஸ் பிடித்து திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஊருக்கு வந்து மறு நாளைக்கே அதை திருப்பி எங்கள் பெயரில் எழுதி வைத்தாள். மாமியார் ‘எதுக்கு சொத்தையெல்லாம் திருப்பி எழுதி வைக்கிறே?” என்று கேட்டதற்கு ‘சங்கைக் கடிச்சு துப்பிருவேன். என் அண்ணன்களின் சொத்து அது. போ அந்தப்பக்கம்’ என்று தங்கை அவரிடம் சொன்னதாக மாமியார் பிற்பாடு என்னிடம் சொன்னார். ‘காளி மாதிரி நிற்கிறாள்” என்று மாமியார் சொன்னார். இது ஒரு குல அறம். ஒரு சராசரி மலையாளிப்பெண்ணின் அறம் அது. இதுதான் நம் குடும்பங்களை இதுவரைக்கும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது

நான் பட்டப்படிப்பு கடைசி வருஷம் படிக்கும் காலம். அப்போது கல்லூரிக்கு அடிக்கடி போகும் வழக்கம் கிடையாது. ஒரு வருஷத்திலேயே 45 நாட்கள் தான் கல்லூரிக்கு போயிருக்கிறேன். ‘அப்பாவைக் கூட்டிட்டு வரலேன்னா உள்ளே விடமாட்டேன்’ என்றார் முதல்வர் ஆர்தர் டேவிஸ். அப்பாவிடம் போய் அதை சொல்ல முடியாது. ஆகவே நான் சுற்றிச்சுற்றி அம்மாவிடம் சொன்னேன். ஒருவழியாக அம்மாவுக்கு புரிந்தது. ‘சரி வரேன்’ என்று சொன்னார்கள்.

என் அம்மா உலக இலக்கியத்தில் ஆழமான பரிச்சயம் கொண்டவர்கள். சமகால ஆங்கில இலக்கியப்படைப்புகள் அனைத்தையும் படித்தவர்கள்.ஆனால் ரொம்ப சின்ன கிராமத்தில் மாடு மேய்த்து புல்பறித்து வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு. வெளியே போன அனுபவமே கிடையாது. நான்தான் முதலில் வெளியே போவதற்காக செருப்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். அவர்கள் மலையாளி முறைப்படி வெள்ளை ஆடை அணிந்து என்னுடன் வந்தார். தக்கலை என்பதே அவர்களுக்கு ஒரு பெரிய ஊர். தக்கலை பஸ் ஸ்டாண்டுக்குள் எங்க அம்மாவை கொண்டு வந்து நிறுத்தினேன். நான் அருகே நின்றேன்

அங்கே ஒரு சின்ன சுவர். அதற்கு அந்தப்பக்கத்தில் ஒரு சிறிய சாலை. அங்கிருந்து ஒரு பத்து வயசு பெண் ஓடிவந்தாள். அவள் பின்னால் ஒருவன் ஓடிவந்தான். வந்து அந்த பொண்ணை முடியைப் பிடித்து படபடவென்று அடிக்க ஆரம்பித்தான். நல்ல மூர்க்கமாக அடித்தான். மொத்த பஸ்ஸ்டாண்டும் பார்த்துக்கொண்டே இருந்தது. “டேய் எதற்கடா அடிக்கிறான்?” என்று பதறியபடி கேட்டார்கள். “அவள் ஏதாவது பண்ணியிருப்பாள்” என்று நான் சொன்னேன்.

அவன் அடித்துக்கொண்டே இருந்தான்.சட்டென்று அம்மா ஓடிப்போய் ( அம்மா போன அந்த வேகத்தை இன்றைக்கு யோசித்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கும்) அவனை ஒரு அறை விட்டார்கள். அடியை வாங்கிக்கொண்டு “இவதான்! இவதான்!” என்று ஏதோ சொன்னான். உக்கிரமாக அம்மா “போடா” என்றார்கள். அபப்டியே அவன் திரும்பிப் போய்விட்டான். அம்மா அந்தப்பெண்ணை அணைத்துக் கொண்டார்கள்.

மொத்த நிகழ்ச்சியையும் நான் அப்பால் நின்றுதான் பார்த்தேன். எனக்கு கைகால் எல்லாம் நடுங்கிவிட்டது. அவன் திருப்பி அடித்துவிட்டால்? நான் அப்படியே கூட்டத்துக்குள் பதுங்கி பின்னால் வந்துவிட்டேன். அடிவாங்கியவன் கையால் காதைப் பொத்தியபடி திரும்பி போய்விட்டான். பெரிய உடல்கொண்ட ஆள். அதன் பிறகுதான் நான் பக்கத்தில் போனேன். அம்மா அவளை சமாதானப்படுத்தி திருப்பி கொண்டு போய் விட்டார்கள். அவன் மகள் தான். “டேய், கையை வெச்சா கொன்னுபோடுவேன்” என்று அம்மா சொன்னார்கள். “இல்ல அம்மணி …” என்று ஏதோ சமாதானம் சொன்னான்.

பின்பு சுந்தரராமசாமியிடம் இந்த சம்பவத்தைச் சொன்னபோது ‘எப்படி அம்மாவுக்கு அடிக்க தோன்றியது? எப்படி அவன் அடிவாங்கிக் கொண்டு போனான்?’ என்றேன் ராமசாமி சொன்னார் “சரி, ஒருவேளை அவன் திருப்பி உங்கள் அம்மாவை அடித்திருந்தால் என்ன ஆகும்? அந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து அவன் வெளியே போகவே முடியாதே?” ஆம் அந்தப் பெண்ணை அவன் அடிக்கலாம் .அது அவன் பெண் .ஆனால் ஒரு அம்மாவை அடிப்பதை பஸ்ஸ்டாண்டில் நிற்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம் சமூகத்தின் கூட்டுமனம் கொதித்து எழும். நம் குடியறத்தில் அதற்கு இடமே இல்லை.

அந்த குடியறமே இன்றைக்கும் நம் காவல். நாம் அதை நம்பித்தான் நம் பெண்களை தனியாக பஸ்ஸில் அனுப்புகிறோம். நான்கு பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறோமே. நான்குபேர் அருகே நின்றால் ஏதோ ஒன்றை நம்புகிறீர்கள் அல்லவா? பத்து பேர் சேர்ந்தால் நியாயம் பிறக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா? அதுதான் எப்போதும் இருந்து வரும் குல அறம் என்பது. அதன் மேலேதான் மேலதிகமான அறங்கள் அனைத்தும் கட்டி எழுப்பப்படுகின்றன.

[மேலும் ]

Jun 29, 2015 – டொரெண்டோ மெட்றாஸ் கலை கலாச்சாரக் கழகத்தில் ஆற்றிய உரை

முந்தைய கட்டுரைஓஷோவின் பைபிள் வரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36