கைவிடுபசுங்கழை -கடிதம்

 

 

maxresdefault

அன்பு ஜெயமோகன்,

உங்களுக்குக் கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன. வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும். உடல்நலனில் இன்னும் கவனமான அக்கறையோடு இருங்கள்.

உங்கள் உரையை எவ்வளவு கவனமாகக் கேட்டாலும் அதை வாசிக்கும்போதுதான் அதன் கனம் புரிகிறது. உங்கள் பேச்சை, எழுத்திலேதான் எங்களால் உள்வாங்கிக்கொள்ள முடிகிறதோ என்றும் தோன்றுகிறது. உங்களைப் பேசக்கூப்பிடுபவ்ர்கள் உண்மையிலேயே உங்கள் உரையை ஆராதிக்கின்றனரா அல்லது உங்கள் பிம்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனரா எனும் அபத்த சந்தேகம் எப்போதும் எனக்குண்டு. எது எப்படியோ, சமீபமாய் நான் வியந்து வாசித்த கைவிடு பசுங்கழை உரைக்கு வருகிறேன்.

ஒரு சங்ககாலப் பாடலின் சிறுவாக்கியம்(கைவிடு பசுங்கழை) ஒன்று உங்களுக்குள் விளைத்திருந்த  பரவசத்திலிருந்து உரையைத் துவக்கி இருந்தீர்கள்; மிக அழகான துவக்கம். ஒரு காட்சியை நுட்பமாக அவதானிக்கும் நுண்ணுணர்வு சங்கக்கவிதைகளில் மிகுந்திருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் தம்மளவில் தனித்துவமானவையாக இருந்தபோதும், அவற்றின் மையமாய் பல்லுயிர் வாழ்க்கைச் சூழல் இருந்ததை நாம் கவனித்தாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மனிதனால் செயற்கையாய் கட்டப்பட்ட சமூக வாழ்வின் உணர்வுகளை இயற்கையின் நிகழ்வுகளைக் கொண்டு சொல்ல முனைந்திருக்கின்றனர் சங்கப்புலவர்கள். இங்குதான் கவிதை என்பது உரைநடையிலிருந்து மாறுபட்டதாகத் தொனிக்கிறது. உரைநடையில் கோக்கும் புறவயமான தகவல்களை வரலாறு எனச்சொல்ல முடியும் நம்மால், கவிதையில் சொல்லப்படும் புறவயச்சித்தரிப்புகளை அங்கனம் கறாராய்ச் சொல்லிவிட முடிவதில்லை. காரணம், உரைநடையில் ஒருபோதும் உணர்வுச்சித்தரிப்பைக் கொண்டுவந்துவிடவே முடியாது. அதுதான் கவிதையின் ஆகச்சிறந்த தனித்துவமும் கூட.

சங்ககால வாழ்க்கை முறையினை அறிந்துகொள்ள மட்டுமே சங்க இலக்க்கியங்கள் பயன்படுகின்றன எனும் பொதுப்புத்திக்கு அதிர்ச்சியளிக்கும் சொல்லாடலாக அகநிலக்காட்சி நிச்சயம் இருக்கும். செவ்வியல் எனும் சொல்லாட்சியே உருவாகாத காலமான சங்கத்தில் செவ்வியல்தன்மை அழகுறச் செறிந்திருப்பதை நாம் வியக்காமல் இருக்க முடியாது. நுண்ணுணர்வில் துவங்கிய தமிழ்க்கவிதைகள் இன்று நுண்ணறிவில் வந்து நின்றிருப்பதாகப் படுகிறது. அன்று கவிதைகள் தானாக உருவாகின; இன்று கவிதைகள் நெய்யப்படுகின்றனவோ எனும் அச்சம் எழுகிறது. எப்படி இருப்பினும், கவிதைகளின் வழியே உள்ளுக்குள் நிகழும் பரவசத்திற்காகவே அவற்றைக் கொண்டாடலாம்.

சங்ககாலம் துவங்கி நவீனகாலம் வரையிலான கவிதை இயங்கியலை மிக அழகாக முன்வைத்திருந்தீர்கள். இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளின் வடிவத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பத்திலிருந்து தமிழ்க்கவிதை இயங்கி வந்த வரலாற்றை நாம் ஓரளவேனும் தெரிந்து கொண்டாக வேண்டும். தமிழ்க்கவிஞர்கள் பலருமே கவிதை இயங்கியலை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. நீங்கள் கொடுத்திருக்கும் பரிணாமக்கோட்டைக் கூட மிகத்துல்லியமான யூகம் என்ற அளவிலேயே நான் ஏற்கிறேன்.

முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),

கோபிசெட்டிபாளையம்.

***

அன்புள்ள முருகவேலன்,

நீங்கள் வாசிப்பு சார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர். ஆகவே கேட்பதைவிட வாசிப்பதே உங்களுக்கு உகந்ததாக உள்ளது. சிலர் செவிநுண்ணுணர்வு மிக்கவர்கள். பொதுவாக அவர்கள் குரல்நினைவுகள் மிக்கவர்களாகவும் இசையார்வம் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம். அவர்களுக்கு கேட்பதே உள்ளே நிற்கிறது. வாசிப்பு இரண்டாம்பட்சமே

அத்தகைய பல வாசகர்களுக்கு உரைகள் மிகுந்த பயன் அளிப்பதைக் கண்டிருக்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரைஅம்மோக்கியோ சந்திப்பு
அடுத்த கட்டுரை‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’