‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38

[ 5 ]

“பெரும்பாலான வெற்றிகளை இளைய யாதவன் படைவல்லமை இல்லாமல்தான் அடைந்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அரசே” என்றார் சாந்தீபனி முனிவர். தருமன் புன்னகையுடன் “ஆம்” என்றார். “இரு வகையில் அவன் வெற்றிகள் அமைந்துள்ளன என்று கதைகள் காட்டுகின்றன. ஒன்று மிகச்சிறிய படையுடன் எதிர்பாராத தருணத்தில் சென்று பெருந்தாக்குதலை நிகழ்த்தி வென்றதுமே விலகிச்சென்றுவிடுவது. அது வேங்கையின் வழி. அது வருவதையும் செல்வதையும் விழிகளறிய முடியாது. கூர்ஜரத்தின் கருவூலங்களை அவன் வென்றது அவ்வண்ணமே.”

“பிறிதொன்று தனிக்களிறின் வழி” என அவர் தொடர்ந்தார். “மத்தகம் குலுக்கியபடி அது தன்னந்தனியாக வந்து மன்றில் நிற்கும். துதிக்கை தூக்கி தூக்கி சின்னம் விளித்து அறைகூவும். தன் தனிவல்லமையாலேயே வென்று நின்றிருக்கும். துவாரகையின் ஒற்றர்கள் பஞ்சஜனத்தை உளவறிந்துகொண்டிருப்பதை நான் அறிந்திருந்தேன். ஒருநாள் துவாரகையின் தலைவன் பஞ்சஜனம் மீது போர்கொள்வான் என எண்ணியும் இருந்தேன். உண்மையில் எனக்கு அதில் உணர்வுகள் ஏதுமில்லை. அந்த ஆடல் எவ்வகையில் முடியும் என்றறிவதற்கான மெல்லிய ஆர்வம் மட்டுமே இருந்தது.”

வணிகர்களாகச் சென்ற என் ஒற்றர்களிடமிருந்து இளைய யாதவன் என்னைப் பற்றி விசாரித்தறிந்ததை நானும் உணர்ந்துகொண்டேன். என்னைத் தேடி அவன் வருவான் என எதிர்பார்த்தேன். வேங்கையாகவா யானையாகவா என்று எண்ணி எண்ணி நோக்கினேன். அப்போதறிந்தேன், அவனுடன் நான் உளப்போரில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை. நான் விலகிய இடைவெளியில் எந்தைக்கு இனியவனாக ஆனவன் என அவனை அறிந்திருந்தேன். எங்கோ மைந்தன் என என் உள்ளம் தந்தையை உரிமைகொண்டிருந்தது. மைந்தனுக்கும் மாணவனுக்குமான சமர் வரலாற்றில் முடிவதேயில்லை.

அவன் வந்தால் அவனை வென்று நின்றிருக்கவேண்டும் என உறுதிகொண்டேன். அவனைவிட ஒரு படி மேலானவன் என அவன் என்னை உணரும் தருணமே என் இறுதி வெற்றி. நான் ஆற்றியவை அனைத்தும் தந்தைக்குமேல் நான் கொண்ட வெற்றிகள் என நன்கறிந்திருந்தேன். அவர் அளித்த மொழியும், அவர் கற்பித்த வேதமும் முற்றிலும் பயனற்ற சூழலில் வந்து என் தனித்திறனால் முளைத்தெழுந்து அரசொன்றை அமைத்திருக்கிறேன். அவர்களுக்குரிய வேதங்களை அருளியிருக்கிறேன். அவர் தன் முழுதறிவால் ஆக்கிய முதன்மை மாணவனை வென்றால் எந்தையிடம் நான் பிறிதொன்றும் சொல்வதற்கில்லை. அந்தத் தருணத்தை எட்டுத்திசைகளிலும் எக்கணமும் என எதிர்நோக்கியிருந்தேன்.

இன்று எண்ணுகையில் வியப்புடனும் நாணத்துடனும் எண்ணிக்கொள்கிறேன். நான் ஆற்றிய அனைத்துக்கும் பின் எந்தையிடம் “பாருங்கள், என்னால் என்ன இயலும் என்று” என மீளமீள சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறேன். என் முன்னிருந்து அவர் விலகி நின்ற தருணமே இருந்ததில்லை. நான் அவரை விட்டு வந்ததே அவரை மீறி வளர்வதற்காகத்தான். ஆனால் அவர் பொருட்டே நான் வாழ்ந்திருக்கிறேன். அவரற்ற உலகில் எனக்கு இலக்குகளே இல்லை.

நான் இளைய யாதவன் சோனகர் அல்லது யவனர் துணையுடன் ஒரு கூர்த்தாக்குதலை பஞ்சஜனம் மீது தொடுப்பான் என்றே எண்ணினேன். உண்மையில் ஒரு பெரிய யவனக்கப்பல் தன் விற்பொறிகளுடன் வந்து கரையணைந்தது என்றால் பஞ்சஜனம் வீழ்ச்சி அடைந்துவிடும். ஆகவே மகாசங்க மலையின் பாறைமடிப்புகள் முழுக்க சிறிய நோக்குமேடைகளை அமைத்து அங்கு இரவும் பகலும் எரியம்புகளுடன் தொலைவில்லவரை நிறுத்தினேன். மகாசங்க முடிமேல் ஒரு காவல்மாடத்தை அமைத்து தொலைகடலை கூர்நோக்க ஆணையிட்டேன்.

பஞ்சஜனத்திற்கு வரும் இரண்டு மலைப்பாதைகளிலும் காவலரண்களை அமைத்து படைகளை நிறுத்தினேன். பெரியபடை வந்ததென்றால் உடனே அறிவிக்கும்படி மலைக்காவல்மாடங்களில் ஆட்களை வைத்தேன். முள்ளம்பன்றி என அஞ்சி கூர்சிலிர்த்து நின்றிருந்தது பஞ்சஜனம். சங்கன் என்னிடம் “எதை அஞ்சுகிறீர், அந்தணரே?” என்று கேட்டான். “துவாரகை நம்மை வென்றாகவேண்டும்” என்றேன். “நம்மை எவரும் வெல்லமுடியாது. ஏனென்றால் நிலத்தைக் கைவிட்டு காடுகளுக்குள் புகுந்துகொள்வோம்” என்று அவன் சொன்னான். “மூடா! நீ சேர்த்த செல்வம் இருக்கும்வரை எங்கும் படைகள் உன்னை நாடிவரும்” என்றேன். புரியாமல் என்னை விழித்துப்பார்த்தான்.

ஏழுமாதகாலம் நான் யாதவர்களுக்காக காத்திருந்தேன். அவன் வரவில்லை. துவாரகையிலிருந்து படை எழுவதற்கான எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. மெல்ல சங்கனும் படைகளும் எச்சரிக்கை இழந்தனர். அவ்வாறு எச்சரிக்கையை இழக்கச்செய்வதே அவன் நோக்கமா என்று எண்ணி நான் மேலும் எச்சரிக்கை கொண்டேன். அத்தனை கதைகளை கேட்டிருந்தும்கூட அவன் அவ்வாறுதான் செய்வான் என என்னால் ஏன் எண்ணமுடியவில்லை என்று இன்று வியக்கிறேன். அவன் பஞ்சஜனர்களின் அலைவிழா அன்று விழவுக்களத்தில் தோன்றினான்.

தரங்கர்களின் தொல்விழா அது. அவர்களுக்கு கடலே முழுமுதல் தெய்வத்தின் கண்தொடு வடிவம். பெருந்தோற்றம் கொண்ட அன்னையின் ஆடைநுனி என அவர்கள் கடலை எண்ணினர். ஒவ்வொருநாளும் அதைத்தொட்டு வணங்குவர். மலரும் அன்னமும் கொண்டு அதை வழிபடுவார்கள். அலைகளின் கை வந்து தங்கள் படையல்களை வாங்கிச் செல்லும்போது குரவையிட்டு கண்ணீர் மல்குவர். குழந்தை பிறந்த ஏழாவதுநாளே சிறு மரப்படகில் ஏற்றி அலைகளுக்குமேல் கொண்டுசெல்வது அவர்களின் சடங்கு. ஏழாவது வயதில் தன்னந்தனியாக கடலுக்குள் ஊர்ந்து அலைப்பரப்பைக் கடந்து ஆழ்கடல் வரை சென்றுவரவேண்டும். பதினெட்டு வயதில் ஆழ்கடலுக்குள் சென்று அவன் உருவை விடப் பெரிய ஒரு மீனை பிடித்துவரவேண்டும்.

பஞ்சஜனத்தின் கடற்கரை பேரலைகள் எழுவது. அது ஏன் என்று நான் கண்டடைந்திருந்தேன். இருபக்கமும் இரு மலைகள் கடலுக்குள் இறங்கிச் சென்றிருக்க நடுவே நின்றிருக்கும் நிலம் அது. அலைகள் மலைநீட்சிகளில் அறைபட்டு வெண்ணுரை சிதற எழுந்து சுழன்று கொப்பளிக்கும். அங்கு எழும் அலைகளின் திசைகளையும் சுழிகளையும் அங்கேயே பிறந்து வளர்ந்த முதியோராலும் கணிக்க முடியாது. கடலோட்டமும் காற்றும் அப்பாறைகளின் அமைப்பும் இணைந்து ஆற்றும் பெருநடனம் அது. அறியாதோர் அந்தக் கரையில் நின்றிருப்பதே கூட உயிரிடர் அளிக்கலாம். அலை வலமிருந்தோ இடமிருந்தோ மட்டுமல்ல சுழன்று நேர்பின்னாலிருந்துகூட வரும். ஒரு மரத் தடியை நீரிலிட்டால் விறகுத்துகள்களாகவே அதை காணலாம். பஞ்சஜனர் மட்டுமே அவ்வலைகளில் ஆட இயலும்.

அலையற்ற கடற்கரைகளையே மீனவர்குடிகள் நாடுவது வழக்கம். ஆனால் தரங்கர் இக்கடற்கரையை அறியாத தொல்காலத்திலேயே தெரிவுசெய்திருந்தனர். சிலமீன்கள் அலைநுரைக்கும் அருவிமுனையை நாடுவதுபோல. ஏனென்றால் அவை அங்கு வாழப் பழகிக்கொண்டால் எதிரிகளை அஞ்சவேண்டியதில்லை. தரங்கர்களுக்கு அங்குள்ள கொலைக்கடலே பெரும்காவல். அவர்களன்றி எவரும் அக்கடல் வழியாக அவர்களை அணுகமுடியாது. இருபக்கமும் எழுந்த மலைச்சுவர்கள் பக்கக் காவல். எதிரிகளற்றிருந்தமையால் அவர்கள் நட்புகளும் அற்றவர்கள் ஆனார்கள். ஆகவே காலத்தால் கைவிடப்பட்டு அங்கேயே மாற்றமின்றி வாழ்ந்தனர். பாரதத்தை அலைக்கழித்து கோத்திணக்கிய வேதப்பொற்சரடு அங்கு வந்துசேரவேயில்லை.

அவர்கள் பிற நான்கு குடிகளுடன் இணைந்தபோதுதான் உண்மையில் உரையாடவே கற்றனர் என்பார்கள். பஞ்சஜனர் அரசமைத்து சுங்கம் கொள்ளவும் வணிகம் செய்யவும் தொடங்கிய பின்னர் ஐந்துகுடிகளின் மொழிகளும் இணைந்து பஞ்சஜனம் என்னும் மொழியாகியது. வணிகர்களுடன் பேச அவர்கள் செம்மொழியின் சொற்களை கற்றனர். அரசே, நீர்ப்பாசியின் ஒருதுளி போன்றது செம்மொழியின் ஒரு சொல். அது எங்கோ வேதத்தில் இருந்து வந்திருக்கும். துளி ஈரம்போதும், அது முழுவேதத்தையும் கொண்டுவந்து அங்கே பரப்பிவிடும்.

ஐங்குடி அமைந்தபின் அங்கு வந்து அவர்களில் ஒருவனாகிய முதல் வைதிகன் நான். நான் அங்கு வேதமெழச் செய்தேன். விண்மீன் கணிக்கவும் கடல்மீன் கணிக்கவும் வேதம் உதவுவதை அவர்கள் கண்டனர். அங்கு சங்கன் காவலென அமர முதல்பெருவேள்வியை நான் இயற்றியபோது அவர்களும் இப்பெருநிலத்தின் வேர்ப்பின்னலில் இணைந்து இதன் குடிகளானார்கள். அவர்கள் கடலன்னையின் குரல் குடிகொண்ட சங்கத்தை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். அவர்களின் குடிமூத்தோர் தலையில் ஒரு சங்கை அணிந்தபடியே அவையமரும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர்களின் தெய்வச்சொல்லின் வெண்ணிறவடிவம் என அமைந்திருந்தது பாஞ்சஜன்யம்.

பாஞ்சஜன்யத்தின் ஓங்காரமே வேதத்தின் முதல் ஒலித்துளி என நான் அவர்களுக்கு கற்பித்தேன். அவர்களின் அனைத்து இறைவழிபாடுகளிலும் பாஞ்சஜன்யம் மையமென அமர்ந்தது. தரங்கர்களின் அலைவிழவை ஐங்குடியினரும் கொண்டாடும் பெருவிழவென நான் மாற்றினேன். அதன் முதல்நாள் வேள்வியின் எரிகொடையும் மூன்றாம்நாள் கடற்கொடையும் நிகழும். கடற்கொடைநாளில் முதற்புலரியில் அலையன்னைக்கு அன்னமும் மலரும் அளித்து வணங்கியபின் பகல் முழுக்க போர்விளையாட்டுகளும், பெண்டிரின் நடனங்களும் நிகழும். அதன்பின் இளையோர் அலையிலிறங்கி கடலாடுவார்கள்.

உணவுக்கும் மதுவுக்கும் பின் அலைநீராட்டு நிகழ்ந்துகொண்டிருந்தது. வெற்றுடல்கொண்ட ஆணும் பெண்ணும் கொந்தளித்துச் சுழன்றடித்த அலைகளுக்குள் பாய்ந்து நீந்தித் துடித்தனர். சினந்த புரவிகள் போல பிடரி பறக்க எழுந்து வந்த அலைகள்மேல் தாவி ஏறி கைவீசி பறந்தனர். அறைந்து சுருண்ட அலைகளில் சென்று கரியபாறைகளை கைகளால் கவ்விக்கொண்டு ஏறி மேலே சென்றனர். ஆண்களும் பெண்களும் உடல்தழுவி நீருக்குள் புகுந்தனர். வெண்பற்கள் ஒளிவிடச் சிரித்தபடி மேலெழுந்து வந்தனர்.

முதியோர் கரைமுழுக்க நிரைநின்று கைவீசிக் கூவியும் துள்ளி ஆர்ப்பரித்தும் அவர்களை ஊக்கினர். கரைமீள்பவர்களுக்காக மணல்வெளியில் ஊனுணவும் மீனுணவும் சமைக்கப்பட்டன. அரசமேடையில் சங்கன் கோல்சூடி மணிமுடி அணிந்து பொன்னணிகளும் மணியாரங்களும் ஒளிவிட அமர்ந்திருந்தான். அவனருகே ஐங்குலத்தைச்சேர்ந்த அவன் ஐந்து அரசியரும் முடிசூடி அமர்ந்திருந்தனர். பின்னால் அமைச்சர் குழு நின்றிருந்தது. அரசமேடையின் வலப்பக்கம் பொன்மேடையில் பாஞ்சஜன்யம் மலர்சூடி அமர்ந்திருந்தது. அதனருகே வைதிகனுக்கான தர்ப்பைமேடையில் நான் அமர்ந்திருந்தேன். இடப்பக்கம் மங்கலமுழவுகளும் கொம்புகளும் குழல்களுமாக இசைச்சூதர் நின்றனர்.

அலைகளில் பெருங்கூச்சல் எழுவதை நான்தான் முதலில் கண்டேன். சுறாமீன் வந்திருக்குமென முதலில் எண்ணினேன். ஆனால் அத்தகைய அலைவெளியில் பெருஞ்சுறா நீந்த முடியாது. எப்போதாவது தவறிவரும் பெருமீன்கூட பாறைகளின் அறைபட்டு உயிரிழந்து உடல்சிதறிக் கரையொதுங்குவதே வழக்கம். அனைத்து இளையோரும் ஒருங்கு திரண்டு ஒரு மீன்சுழி என ஆவதை, அவர்கள் அலைகளில் எழுந்தமைந்து ஏதோ கூவுவதை கேட்டேன். அலை ஒன்று மேலெழுந்து அமைந்தபோது அதன் உச்சியில் ஒருகணம் யானைமருப்பிலென அமர்ந்து கைவீசி இறங்கி மறைந்த இளைய யாதவனை அடையாளம் கண்டுகொண்டேன்.

SOLVALAR_KAADU_EPI_38

வந்தவன் இளைய யாதவன் என்று நான் சொன்னதும் சங்கன் சினத்துடன் எழுந்து நின்றான். “படைகொண்டு வந்துள்ளானா? எங்கே?” என்றான். “தனியாக வந்துள்ளான். கடல்வழியாக” என்றேன். “நீந்தியா? இக்கடல் வழியாகவா?” என்றான் சங்கன். நான் “ஆம்” என்றேன். அவன் திகைப்புடன் நோக்கி நின்றான். அவன் மனைவியர் வியப்புடன் கிளர்ந்து எழுந்து நின்று நோக்கினர். தங்களுக்குள் துள்ளும் குரலில் மொழியாடிக்கொண்டனர்.

முதலில் இளையோரிடம் எழுந்த திகைப்பும் விலக்கமும் அகல்வதை கண்டேன். அவன் அந்த அலைகளில் ஏறிவந்தான் என்பதே அவனை அவர்களில் ஒருவனாக ஆக்கியது. அவனை அவர்கள் பிடிக்க முயன்றனர். அவன் அவர்களின் தோள்களை மிதித்து தாவி அகன்றான். தழுவிய கைகளினூடாக நழுவிச்சென்றான். ஒரு கட்டத்தில் அது ஓர் விளையாட்டாகியது. நீர்த்துளிகள் பளிங்குமணிகளாகத் தெறித்து ஒளிவிடும் வெளியில் அவன் கரிய முகம் எழுந்து சிரித்து மறைந்துகொண்டிருந்தது. கரையில் இருந்த அனைவருமே சொல்லின்றி அதையே நோக்கிக்கொண்டிருந்தனர். “அலைபிறந்தவன் போலிருக்கிறான்” என்று ஒரு பெண் சொன்னாள். “அவனை அலைமகள் கொழுநன் என்கிறார்கள்” என்று இன்னொருத்தி சொன்னாள். இக்கதைகளை எல்லாம் இவர்கள் எப்படி அறிந்தனர் என்று நான் வியந்தேன்.

பின்னர் அவன் கரையணைந்தான். அவனைச் சூழ்ந்து ஐங்குடியின் இளம்பெண்கள் முலைததும்பும் இளைய உடல்களுடன் கைவீசி நீந்தி வந்தனர். அவனைத் தழுவியும் அவன் உடல்தொட்டு வழுக்கியும் நீந்திச் சிரித்தனர். மணல்விளிம்பில் அவன் கரையேறியபோது அவன் உடலையே அங்கிருந்த அனைவரும் முழுவிழியாலும் நோக்கிக்கொண்டிருந்தனர். முற்றிய எருமைக்கொம்பு போல என நான் எண்ணிக்கொண்டேன். கருமையின் ஒளி. உறுதியின் ஒளி. உயிரின் ஒளியும்கூட. அத்தசை வளைவுகள், எலும்பசைவுகள்.

அவன் வந்து சங்கனின் அரசமேடைக்கு முன்னால் நின்றான். “அரசே, யாதவனாகிய நான் இங்கே உங்கள் குடியென வந்து நின்றிருக்கிறேன். தங்கள் பாதங்களை வணங்குகிறேன்” என்றான். சங்கன் அச்சொற்களை எதிர்பார்க்கவில்லை. முகம் மலர்ந்து அரியணையில் அமர்ந்து நிமிர்ந்த தலையுடன் “நன்று, வாழ்க!” என்று வாழ்த்தினான். “நான் இங்கு உங்கள் குலத்தை போருக்கு அறைகூவுகிறேன். படைக்கலம் எதுவாயினும் போர்முறை எதுவாயினும் எவருடனும் தனிப்போருக்கு நான் ஒருக்கமாக உள்ளேன். வென்றால் உங்கள் ஐங்குலமும் எனக்கு அடங்கவேண்டும்” என்றான்.

அவனைச் சூழ்ந்து வேலியென நின்றிருந்த ஐங்குடியினர் அதை எதிர்பார்க்கவில்லை. சிலகணங்கள் அமைதிக்குப்பின் ஒலிகள் கலைந்தன. மெல்லிய குரலில் அவன் என்ன சொன்னான் என்று பேசிக்கொண்டனர். மெல்ல குரல்கள் எழுந்து முழக்கமாயின. “பாரதவர்ஷம் முழுக்க இருக்கும் நடைமுறை இது. நீங்கள் என்னிடம் போர்புரிய மறுக்க முடியாது” என்றான். நான் சங்கனிடம் “வேண்டாம், மறுத்துவிடு!” என்றேன். என் விழிகளை அவன் சந்திக்கவில்லை. பீடத்தில் கைகளை வைத்தபடி விழிசுருக்கி நோக்கி அமர்ந்திருந்தான்.

இளைய யாதவன் “இங்குள்ள கன்னியர் சொல்க, நான் கோருவது பிழையா என” என்றான். அத்தனை பெண்களும் கைகளைத் தூக்கி “பிழையல்ல! ஆண்கள் எழுக! போர் நிகழ்க!” என்று கூவினர். பற்கள் ஒளிவிட கிள்ளைக்குரல்களுடன் கூவிச்சிரித்தனர். நான்கு பெண்கள் ஓடிச்சென்று அவனைத் தூக்கி தங்கள் தோள்மேல் உயர்த்தினர். “ஆம்! இளைய யாதவனுக்கு இங்கே யார் நிகர்?” என்று ஒருத்தி உரக்கக் கூவினாள். “ஆம்! ஆம்! சொல்க!” என்று மற்ற பெண்கள் கூவினர்.

சங்கன் எழுந்து தன் செங்கோலையும் மணிமுடியையும் எடுத்து அமைச்சர்களிடம் கொடுத்தான். நான் “வெறும் மற்போர் போதும். வென்றான் என்றால் அவன் கோருவதை அளிப்பேன் என சொல்லளிக்க வேண்டாம்” என்றேன். “இச்சிறுவன் வெல்வான் என்கிறீர்களா, அந்தணரே?” என்றான் சங்கன் சினத்துடன். ஒன்றும் சொல்லமுடியாதென்று உணர்ந்து நான் அமைதியானேன். சங்கன் மேலாடையைக் களைந்தபடி “இளையோனே, என்னுடன் தோள்கோத்து களம் நில்!” என்றான்.

“அவ்வண்ணமே” என்றான் இளைய யாதவன். “வெற்றிக்குப்பின் நான் கோருவது ஐங்குலத்தின் அரசனாக அமர்தலை” என்றான். “முதலில் நீ களத்தில் எத்தனை கணம் நிற்பாய் என்று பார்… தன்னந்தனியாக கடலுக்குள் சென்று சுறா கொண்டுவந்து அரசனாக ஆனவன் நான்” என்றான் சங்கன். “ஆம், அதை அறிந்தே உங்களை வெல்லவந்தேன். அச்சுறாவையும் இன்று வென்றவனாவேன்” என்றான் இளைய யாதவன். பெண்கள் கூவிச்சிரித்து “வெல்க! வெல்க!” என்றனர்.

அவர்கள் மணலில் இறங்கி தோள்விரித்து நின்றனர். கொடுக்கு விரித்த கடல்நண்டின் முன் ஒரு சிறு கருவண்டு நிற்பதுபோலத்தான் இருந்தது. தன் பெருந்தோள்களைத் தட்டியபடி சங்கன் சுற்றிவர அவனை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவன் சுழன்றான். அப்போதும் அவன் முகத்தில் இளநகைப்பு இருந்தது. அவனை நோக்கிக்கொண்டிருந்தபோது எனக்கு ஏற்பட்ட வியப்பை இப்போதும் நினைவுகூர்கிறேன். அவனுக்கு அச்சமென்பதே இல்லையா? வென்றுவிடுவோம் என அத்தனை உறுதியாகவா எண்ணுகிறான்? தனிப்போரில் எந்தப் பெருவீரனும் தோற்பதற்கு வாய்ப்புள்ளது என்று அறிந்திருக்கிறேன். தான் யாரென அறிந்தவர்களுக்குரிய உறுதியா அது? அல்லது எதையுமே அறியாத குழந்தையாடலா? அனைத்தையும் வெறும் லீலை என்று கற்பிக்கும் எந்தையின் சொற்களை அவ்வண்ணமே தலைசூடிக்கொண்டானா?

ஆனால் போர் தொடங்கியதுமே தெரிந்துவிட்டது, அவனே வெல்வான் என. அவனே வென்றாகவேண்டும். அதை பின்னாளில் பலமுறை பகுத்து ஆய்வு செய்திருக்கிறேன். நம் எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் கதைகளுக்கான இடம் பற்றி எண்ணிப்பாருங்கள். கதைகளில் உள்ள ஒத்திசைவு வாழ்க்கையில் இல்லை. எனவே நாம் கதைகள் வாழ்க்கையை வழிநடத்தவேண்டுமென விழைகிறோம். கதை போல வாழ்க்கையை ஆக்க நம்மையறியாமலேயே முயல்கிறோம். அப்படியே கதைபோல நிகழ்ந்தது என்பதே நாம் ஒரு நிகழ்வைப்பற்றி சொல்லும் உச்சநிலை பாராட்டு. அது கதையல்ல என்றால் கதையென்றாக்கிக் கொள்வோம். கதையென ஒத்திசையாத ஒன்றை நினைவிலிருந்தே அகற்றுவோம்.

அரசே, நம் வாழ்க்கையில் பெரும்பாலும் கதையாக நாம் கேட்டவற்றையே மீளவும் நடிக்கிறோம். அந்நிகழ்வின் அறமோ நெறியோ அல்ல, அதில் செயல்படும் ஆற்றல்கள் அல்ல, அதன் பின்னாலுள்ள கதையின் வடிவமே நம் உள்ளத்துள் கரந்து அத்தருணத்தை முடிவுசெய்கிறது. அங்கே இளைய யாதவன் வெல்வதை அத்தனை இளையோரும் உளவிழிகளால் நோக்கிவிட்டனர். ஏனென்றால் அதற்கிணையான கதைகளை அவர்கள் பலமுறை கேட்டு அதில் பலமுறை உளம்நடித்திருந்தனர். அவனை நீங்கள் நன்கறிவீர்கள் அரசே, தன்னை ஒரு கதையென ஆக்கிக்கொள்வதையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறான். ஓர் எழுச்சிமிக்க நாடகத்தருணமென அனைத்தையும் ஆக்கிக்கொள்கிறான். அன்று அவன் அலைகளின் மீதேறி பஞ்சஜனத்தின் விழாவுக்கு வந்ததே சிறந்த நாடகத் தொடக்கம்.

தனித்த அழகிய இளைஞன், ஒளிவிடும் சிரிப்புடன் மழலையின் தெளிந்த விழிகளுடன் வந்து மற்களத்தில் நிற்கிறான். எதிரே அவனைவிட பல மடங்குபெரிய தோள்கள் கொண்ட மல்லன். அங்கிருக்கும் அன்னையரும் கன்னியரும் யார் வெல்லவேண்டுமென விழைவார்கள்? அத்தனைபேரின் விழிகளும் வேண்டிக்கொண்டிருந்தன. உள்ளங்கள் ஏங்கிக் கனிந்திருந்தன. நான்குமுறை அவன் சங்கனை தோள் தவிர்த்துத் தாவியகன்றபின் இளையோரும் அவன் வெல்வதையே விழைந்தனர். ஏனென்றால் அவன் வென்றால்தான் புதுவரலாறு நிகழ்கிறது. ஏதோ ஒன்று முன்னகர்கிறது. இளையோர் விழைவதெல்லாம் புதியனவற்றை மட்டுமே. அது அழிவேயாக இருப்பினும்.

அங்கு அது புதிது. ஆனால் எத்தனைமுறை நிகழ்ந்த கதை! அங்கு கதை மெல்ல அனைவரையும் கைப்பற்றிக்கொண்டு தன்னை நிறுவியது. இனி அதன் விழைவே நிகழுமென நான் நன்கறிந்திருந்தேன். வியப்பென்னவென்றால் அதை சங்கனும் உள்ளூர அறிந்திருந்தான். அங்குள்ள உள்ளங்கள் திரண்டு வந்து எதிரே நின்றபோது அவன் தோள்கள் அவ்வெடை தாளாது தழையத் தொடங்கின. அத்தனைபேரையும் கதைமாந்தராகக் கொண்டு அந்த நாடகம் நிகழ்ந்து முடிந்ததுமே நேராகத் தொன்மமாக ஆகியது. அவன் சங்கனை தூக்கிச்சுழற்றி தரையில் அறைந்து அவன் இரு கைகளையும் பற்றி முறுக்கி ஒன்றாக பிடித்துக்கொண்டு கைதூக்கி வெற்றிக் குரலெழுப்பினான். கூடி நின்ற அனைவரும் அவனுடன் சேர்ந்து ஆர்ப்பரித்தனர்.

அவன் எழுந்தபோது இளங்கன்னியர் பாய்ந்துசென்று அவனைப் பற்றித் தூக்கி தலைமேல் வீசி கூவி ஆர்த்தனர். இளையோர் அவன் மேல் மேலாடைகளையும் கிளிஞ்சல்களையும் வீசி கூச்சலிட்டனர். அன்னையர் அவனை தொட்டு நோக்க முண்டியடித்தனர். அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த உணர்வுக்கொப்பளிப்பை என் பீடத்தில் அமர்ந்தபடி நான் நோக்கிக்கொண்டிருந்தேன். எத்தனை முறை நிகழ்ந்த நாடகம் இது. இன்னும் எத்தனை முறை இது இங்கே நிகழும். ஒருவேளை மண்மீது எங்கோ ஒவ்வொரு நாளும் கணமும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறதுபோலும். ஒரு தலைவனை தங்களுக்குள் இருந்து எடுத்து முன்வைக்கிறார்கள். எவர் முன்? இதோ தலைக்குமேல் தூக்குகிறார்கள். அப்படியென்றால் தெய்வங்களுக்கா காட்டுகிறார்கள்?

அவன் வீரர்களுக்குரிய முறையில் நடந்துகொண்டான். சங்கன் முடிதுறக்க அதை வாங்கி தான் அணிந்துகொண்டு ஐங்குடியின் கோல்சூடி அரியணையில் அமர்ந்து அலைவிழவை தலைமைதாங்கி முடித்துவைத்தான். உடனே அந்த முடியை எடுத்து சங்கனின் மூத்த மைந்தனின் தலையில் சூடி அரிமலரிட்டு வாழ்த்தி அவனை ஐங்குடியின் அரசனாக ஆக்கினான். சங்கனின் ஐந்து துணைவியரையும் அன்னை என ஏற்று அடிபணிந்து மலர்கொண்டு வாழ்த்து பெற்றான். தன் வெற்றிக்கு ஈடாக அவன் கோரியது இரண்டே. ஐங்குலம் என்றும் துவாரகைக்கு அணுக்கர்களாக இருக்கவேண்டும். என்னை அங்கிருந்து அழைத்துச்செல்ல ஒப்பவேண்டும்.

ஐங்குலத்து மூத்தோர் கூடி அவனை வணங்கி அவர்களின் அருங்கொடையாக பாஞ்சஜன்யத்தை அவனுக்கே அளித்தனர். ஐங்குலம் என்றும் துவாரகையின் ஒருபகுதி என்பதை அக்கொடை வழியாக அவர்கள் உறுதியளித்தனர். இன்று அவ்வுறவு மேலும் வலுவாகிவிட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பட்டத்து இளவரசர் பிரத்யும்னர் சங்கனின் மகளை மணம் புரிந்துகொண்டிருக்கிறார். துவாரகையின் வல்லமை வாய்ந்த கடலோடிகளில் பெரும்பாலானவர்கள் ஐங்குலத்தோரே.

பாஞ்சஜன்யம் இன்று துவாரகையின் அரசவையில் பொற்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் துவாரகையின் குடிப்பேரவை கூடும்போது குலங்கள் இணைந்தமர்வதற்கான அறைகூவலாக அது ஒலிக்கிறது. அவை நிறைவில் இளைய யாதவன் தன் ஆணைகளை உரைத்து முடித்ததும் அவன் சொல்லுக்கு தெய்வங்கள் அளிக்கும் ஆதரவுக்குரலாக அது ஒலித்தமைகிறது. பாஞ்சஜன்யமே அவனுள் வாழும் தெய்வத்தின் ஓசை என்கிறார்கள் துவாரகையின் சூதர்.

அவன் என்னிடம் வந்து பணிந்து “உங்களுக்காகவே இங்கே வந்தேன், ஆசிரியமைந்தரே. உங்களை என் ஆசிரியரிடம் அழைத்துப்போவதாக உறுதி கொடுத்தேன்” என்றான். “நான் அதை அறிந்திருக்கிறேன். எந்தையை சந்திப்பதில் எனக்கும் ஆர்வமிருக்கிறது. நீ செல்க! நான் இங்கு என் பணிகளை இருநாட்களில் முடித்துவிட்டு உன்னைத் தொடர்ந்து உஜ்ஜயினிக்கு வருகிறேன்” என்றேன். “நன்று, உங்கள் சொற்களை ஆசிரியரிடம் அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் துவாரகைக்கு மீண்டான்.

நான் அங்கே செய்து முடிக்க பல பணிகளிருந்தன. எனக்குப்பின் அங்கு வைதிகனாக அமர்வதற்கு என் முதல்மாணவனாகிய சக்ரனை அமைத்தேன். ஐங்குடிக்குரிய முதல்நூல்களையும் வழிநூல்களையும் வகுத்து அந்நெறிகளை அரசவை ஏற்க வைத்தேன். அங்கு வேள்விகளும் பூசனைகளும் நிகழவேண்டிய முறைமையையும் குடிகளின் ஒழுக்கமும் அறமும் செல்லவேண்டிய வழிகளையும் வகுத்து நான் எழுதிய சங்கஸ்மிருதி என்னும் நூலை அவர்களின் குடியவை ஏற்க வைத்தேன். அனைத்தையும் ஒருக்கியபோது அங்கு நான் இருந்தாகவேண்டுமென்பதில்லை என்று ஆயிற்று. அவர்களிடம் விடைபெற்று நான் கிளம்பினேன்.

ஐங்குடியினரும் விழிநீர் வார வந்து என்னை வழியனுப்பினர். என் கால்களில் இளையோர் நிரையென வந்து விழுந்து வணங்கி மலரும் சொல்லும் கொண்டனர். இளங்குழவியரை என் காலடித் தடங்களில் வைத்து எடுத்தனர். என் கால்பொடியை எடுத்து ஆடைகளில் முடிந்துகொண்டனர். பஞ்சஜனத்தின் எல்லையில் நின்று திரும்பி நோக்கியபோது அழுநீர் நிறைந்த ஆயிரம் விழிகளைக் கண்டபோது ஒன்றுணர்ந்தேன், நான் முன்னரே அங்கிருந்து கிளம்பிவிட்டிருக்கவேண்டும்.

அங்கே அதுவரை நான் இருந்தது என் ஆணவத்தால்தான். அந்தணன் விதைக்கவும் காக்கவுமே கடமைப்பட்டவன், அறுவடையை செய்வான் என்றால் அவன் சூத்திரனாவான். களஞ்சியம் நிறைப்பான் என்றால் வைசியன் ஆவான். கோல்கொண்டு அதை காக்கையில் ஷத்ரியன் ஆவான். பசித்தவருக்கு பகிரமறுத்தான் என்றால் வருணமற்றவன் ஆவான். ஒருபோதும் தன் அந்தண்மையை மீண்டும் அடையமாட்டான்.

நீள்மூச்சுடன் திரும்புகையில் எண்ணிக்கொண்டேன், எந்தை காலடியில் சென்று பணிவேன். வெல்வதன் தோல்வியை அறிந்துவிட்டேன் தந்தையே. அனைத்தும் லீலையே என்பதை விழிமுன் கண்டு மீண்டுவிட்டேன். இனி என்னை மாணவனாக ஏற்றுக்கொள்க. இனி உங்கள் மெய்மையை எனக்குள் ஊற்றுக. இவையனைத்தும் இக்கலம் இவ்வண்ணம் ஒழிவதற்காகத்தான் நிகழ்ந்தன போலும்.

ஆனால் நான் மீண்டு வந்தபோது எந்தை சாந்தீபனி குருநிலையில் இல்லை. நான் வந்துசேர்வதற்கு முந்தையநாள்தான் இளைய யாதவன் வந்து எந்தையிடம் சொல்லாடிச் சென்றிருந்தான். அன்றுகாலை எந்தை குருநிலை நீங்கியிருந்தார். அவர் எனக்கிட்ட ஆணை மட்டும் அங்கிருந்தது. நானே சாந்தீபனி குருநிலையின் ஆசிரியனாக அமர்ந்து அதை நடத்தவேண்டும் என்று தந்தை கூறியிருந்தார்.

அதை என்னிடம் சொன்ன அவரது மாணவர்களிடம் நான் திகைப்புடன் கேட்டேன் “நானா? எனக்கு அவர் எதையும் கற்பிக்கவில்லையே?” அவர்கள் “இல்லை, கற்பிக்கவேண்டிய அனைத்தையும் அவனுக்கு அளித்துவிட்டேன். அவனே அமர்க என்றே முதலாசிரியர் சொன்னார்” என்றனர். “குருகுலக் கல்வி முடித்து அவன் மீள்கிறான். தந்தையின் வாழ்த்து அவனுக்கு உண்டு என்று சொல்லுங்கள் என்றார் முனிவரே” என்றனர்.

“அவர் சொல்லிச்சென்றது என்ன என்று எனக்குப்புரியவில்லை. ஆனாலும் அவர் ஆணையை ஏற்று நான் இக்குருநிலையின் தலைவனாக ஆனேன். அதன் பின் அறிந்தேன் அவர் சொன்னதன் பொருளென்ன என்று” என்றார் சாந்தீபனி முனிவர். “அவர் கற்பிக்க விழைந்தது பெருவிளையாட்டை. அவரது மாணவர்கள் அதை லீலை என்னும் கருத்துருவாகவே அறிந்தனர். நான் அதில் ஆடி மீண்டு வந்திருந்தேன்.”

முந்தைய கட்டுரைகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி
அடுத்த கட்டுரைகடிதங்கள்