சோழன் கடிதங்கள்

திரு ஜெய மோகன்

ராஜ ராஜன் குறித்த கட்டுரை படித்த பின் எழுதுகிறேன். (தமிழ் ஹிந்து வில் பார்த்த சுட்டி) (http://www.jeyamohan.in/?p=8712 )

கவனத்தை ஈர்த்த விஷயம் பிராம்மணர்களும் அரசு நிர்வாகமும். கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்

பிராம்மணர்கள் = பூசகர்கள் என்ற ஒரு விஷயத்தை எடுக்கிறேன். பிராம்மணர்களில் முதல் வகை வைதீகம். இரண்டாம் வகை பௌராணிகம். (பாகவதம் போன்ற புராணங்களில் ஈடுபாடு கொண்டு அதன் படியே தங்கள் மதங்களை வகுத்துக் கொண்டவர்கள்) உ ம் ; தமிழ் ஸ்மார்த்தர்கள் பெரும்பாலோர், வைணவர், மாத்துவர், போன்றோர். மூன்றாவது சமய குருமார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள். இவர்கள் தாந்திரீக சைவ மற்றும் வைணவ (சில சமயம் சாக்த ) பூசகர்கள். நான்காம் வகை வேதாந்திகள் . இவர்களில் துறவு பூணும் விஷயம் சாதாரணம். இந்த வேதாந்திகளே பரிவ்ராஜகர்களாய் சுற்றி தர்ம பிரச்சாரம் செய்தவர்கள். தாங்கள் கூறிய பூசகர் அடைமொழி மூன்றாமவர்களுக்குத்தான் பொருந்தும். இன்னும் ஐந்தாவத் பிரிவாயும், இந்த நான்கனுள் உட்பட்டதும் ஆக குருகுல ஆசிரியர் என்பவரையும் சேர்ப்பேன்.

தவிர சோதிட அறிவு குருகுலத்தில் பயிலும் எல்லாருக்கும் இருந்தது. விசேட அறிவு பிராம்மனர்களிடம் இருந்தது. கோசாம்பியின் வாதம் நிச்சயம் தவறு. அரசன் ஒரு ஊரை நிர்மாணம் செய்யுமுன் அங்கே குடியிருப்போர் அனைவரையும் தேர்வு செய்வான். வைதீகர், கோவில் சிவாசாரியார், குரு, மறவர், வேளார், வண்ணார், கொல்லர், தச்சர், நாவிதர், போன்றோர் அனைவரும் அதில் அடங்குவர். தேர்வு செய்யப்பட இடம் ஆகம விதிகளின் படி சோதனை செய்யப்படும். பிறகே குடியேற்றம் நடைபெறும். பிராம்மணர் மற்றும் முதலில் குடியேறுவது என்பது கற்பனை. ஹிமாலயன் அக்கடமி (http://www.himalayanacademy.com/resources/books/agamas/) தளத்தில் ஆகமங்களின் மூலமே உள்ளது.

என் கணிப்பில் பிராம்மணன் வெறும் மன்னனின் லாப நஷ்டக் கணக்குகளுக்காக ஏற்பட்டவன் அல்ல. அவன் உடல் பலம் மற்றும் பொருள் பலம் அற்ற அறிவுக் கூட்டத்தை சேர்ந்தவன். அறிவும் பொருள் ஆசையும் சேர்ந்தால் என்னவாகும் என்பதை ஆங்கிலேய ஆட்சியில் பிராம்மணன் பங்கேற்ற பிறகு நடந்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதனாலேயே , முதல் ஏற்பாட்டின் படி சம்பாதிக்கவும் (சம்பாதிக்கப் படவும் ) கூடாதவன் அவன்.

வேதம் மருவிய காலத்தில் தான் பணம் பிராம்மனனைத் தீண்டியது. சில ஆயிரம் வருஷம் அது அவனுக்கு நன்மையைத் தந்தாலும், அது அவனுக்கு கடைசியில் அழிவையே தந்துள்ளது. வெறும் மத அறிவும், சோதிட அறிவும், சாஸ்திர அறிவும் தான் பிராம்மணனுக்கு சொந்தம் என்று கோசாம்பி கருதுவது சிறு பிள்ளைத் தனம். இன்று அரசன் இலாத போதும், கண்காணிப்புகள் இல்லாத போதும் நாலில் ஒரு பங்கு பிராம்மணர் சந்தியா வந்தனம் செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஏதும் வெகுமதி கிடைப்பதில்லை. இதில் இருந்தே வேத ஏற்பாடு என்ன என்பது தெரியும். என்னைக் கேட்டால் சோதிடமும், புராணமும், பிற்காலத்திய இணைப்புகளான இசையும் , நாட்டியமும், பிராம்மணனுக்கு வீழ்ச்சியையே கொடுத்தன.

அவன் ஆசானாக, மத வழிகாட்டியாக, வேத விற்பன்னன் ஆக , வேள்வி புரிபவனாக இருந்த வரை மன்னர் அவனைப் பணிந்தனர். ஆகமங்கள் வந்த பிறகு ஒரு கூட்டம் அதன் வழி சென்று விட, வெறும் பூசகன் ஆனான் அவன். உண்மையான் வேதாந்திகள் இன்று ராமகிருஷ்ண மடத்தில் தான் உருவாகிறார்கள். மிகச்சிறு பிராம்மண பாரம்பரியங்களிலே மட்டும் வேதாந்த பயிற்சி உள்ளது. இந்த வீழ்ச்சியில் மொத்த சமுதாயத்திற்கும் பங்கு உண்டு. மாதம் மும்மாரிக்கு தவறாத வேள்விகளும், பெண்களின் கற்பும், மன்னனின் செங்கோலும் தான் வித்தாக சங்க காலம் முதலே கூறப்பட்டு வந்துள்ளது. வேள்வி இல்லாவிட்டாலும், குறைந்தது பிராம்மணனை சந்தி மட்டுமாவது செய்ய சமூகம் ஊக்குவிக்க வேண்டும்.காலம் போகிற போக்கில் இழுத்துக் கொண்டு போகப்பட்ட சமூகம் அல்ல நம்முடையது. எக்காலமும் நிமிர்ந்து நிற்கும் அறங்களைப் பற்றி நிற்பவர் நாம். சனநாயகமும், சோஷலிசமும், கம்ம்யூநிசமும் நாம் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. அவற்றுக்கும் கடமை சார்ந்த இந்திய சமூகக் கட்டுக்கும் சம்பந்தமே இல்லை.

வேங்கடசுப்பிரமணியன்

அன்புள்ள வேங்கடசுப்ரமனியன் அவர்கலுக்கு

கோஸாம்பி தன் ஆய்வுகளில் இந்தியா முழுமைக்குமாக ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கவே முயல்கிறார். பிராமணர்களை பூசகர்கள் என்னும்போது அவர் ஐரோப்பாவை முன்னுதாரணமாக கொண்ட சமூக முன்வரைவை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுக்கும் அப்படி ஒன்றை உருவாக்க முயல்கிறார். ஏனென்றால் மார்க்ஸியத்தின் ஆய்வுப்பொருளாக அமைந்தது ஐரோப்பிய சமூகமே.

ஐரோப்பிய சமூகம் ஆட்சியாளர், பூசகர், நிலவுடைமையாளர்,குடியானவர்கள், அடிமைகள் மற்றும் புறச்சமூகத்தார் என்ற ஐந்து படிகளால் ஆனது. இதே சமூகப்படிநிலை அமைப்பு ஏறத்தாழ எல்லா நிலவுடைமைச் சமூகங்களிலும் உண்டு என்பது ஒரு மார்க்ஸிய ஊகம். பூசகர்கள் அல்லது மதகுருக்களின் இடத்தில் இங்கே பிராமணர்களை வைத்துப்பார்ப்பது ஒரு மார்க்ஸிய அணுகுமுறை. அதாவது ஒட்டுமொத்தமாக ஒரு குறைந்தபட்ச பொதுச்சித்திரத்தை அளிக்கவே கோஸாம்பி முயல்கிறார். அது உலகளாவியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை சமூகவியல் கோட்பாடாக கொள்ள முடியும். இது குறைத்து தொகுத்துப்பார்க்கும் பார்வை.

நீங்கள் அதில் இந்தியா சார்ந்த, தமிழகம் சார்ந்த நுட்பமான மேலதிக பிரிவினைகளையும் தகவல்களையும் சேர்க்கிறீர்கள். இது விரித்து தொகுத்துப்பார்க்கும் பார்வை. ஒரு கோட்பாடு முன்வைக்கப்பட்டபின்னரே அக்கோட்பாட்டைச் சார்ந்து இந்த விவாதத்தை உருவாக்க முடியும். உங்கள் கருத்துக்கள் எனக்கு புதியனவாக உள்ளன. சிந்தித்து விரிவாக்கவேண்டிய தரப்பாக உள்ளன

நன்றி

ஜெ

**

அன்புள்ள ஜெ,
தங்களின் “தஞ்சை தரிசனம் 3” கட்டுரை படித்தேன். அதில் தாங்கள் தஞ்சையில் உள்ள சிவலிங்கம் மண் (அப்பு)-வால் ஆனதாக குறிபிட்டு இருந்தீர்கள்.
அதில் ஓர் சிறு திருத்தம். அப்பு என்பது மண்-ஐ குறிப்பது அல்ல. அப்பு என்பது நீரை குறிப்பது.

பொதுவாக சிவ பெருமான் ஐம்பூதங்கள் என்று சொல்லக்கூடிய நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவையின் உருவமாக இருப்பதாக நம்பிக்கை. அதிலும் குறிப்பாக இவை ஐந்துக்கும், ஐந்து திருத்தலங்கள் முக்கியமாக சொல்லப்படுகின்றன.
நீர் – திருவானைக்காவல், திருச்சி, நிலம் – காஞ்சீவரம், நெருப்பு – திருவண்ணாமலை, ஆகாயம் – சிதம்பரம், காற்று – காளஹஸ்தி.
இதில் நீரை குறிக்கும் திருவானைக்காவல் சிவ பெருமானே “அப்பு லிங்கம்” என்ற பெயர் கொண்டுள்ளார். அதுவே நான் பிறந்து, வளர்ந்த ஊர்.

இதோடு இந்த கடிதத்தை நிறுத்தி விடலாம் என்று தான் எண்ணி இருந்தேன். ஆனால் திருவானைக்காவல் பற்றி ஓர்-இரு வரிகள் எழுதலாம் என்றும் தோணிற்று.

ஏனென்றால் எங்கள் ஊர் மற்றும் கோவிலுக்கு நிறைய பெருமைகள் என்றாலும் அவை வெளியே தெரிவதில்லை. இந்தக் கோவிலும் சோழர்களால் எழுப்பப்பற்றது. தமிழகத்தில் மிகச் சிறந்த சிற்பங்கள் நிறைந்த கோவில். இங்கு இருக்கும் குறவன் குறத்தி மண்டபம் சிற்பக்கலையின் அற்புத வெளிப்பாடு. இங்கு ஒரே கல்லில் யானையும் காளையும் கலந்த சிற்பம் ஒன்று இருக்கும். இரண்டும் நேருக்கு நேர் முட்டிக் கொள்வது போன்று இருக்கும். யானையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் தலை காளை போலவும், காளையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் யானை போலவும் தோன்றும். இதைப் போல் வேறு எங்கும் காணக் கிடைக்காது. அதே போல் கல்லால் ஆன சங்கிலிக் கோர்வை, 12 ராசிகளும் ஒரே கல்லில் சதுரமாக செதுக்கப்பட்டு இருப்பது போன்றவை எங்கள் ஊர் கோவிலின் தனிச் சிறப்பு.

அதே போல் இந்தக் கோவிலின் தலப் (அஜித் அல்ல) புராணத்தின் படி, ஒரு சிறு யானைக் கூட நுழைய முடியாத கற்பகிரகம் வேறு எங்கும் கிடையாது. ஆனால் இவை அனைத்தும் வெளியே தெரிவதில்லை. எனக்கு தெரிந்து இணையத்தில் கூட (நிறைய பேர் எழுதுவதால்) யாரும் எழுதுவது இல்லை. இதற்க்கு முக்கியமான காரணம் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கமும் திருவானைக்காவலும் இரட்டை கிராமங்கள். ஆனால் ஸ்ரீரங்கத்தின் பெருமை, புகழுக்கு முன்னால் திருவானைக்காவல் வெளியே தெரியாமல் போய்விட்டது. பரப்பளவில் தமிழகத்தின் மிகப்பெரும் சிவாலயங்களில் இதுவும் ஒன்று.

தங்களால் முடிந்தால் ஒரு முறை திருவானைக்காவல் சென்று வந்து எங்கள் ஊர் கோவிலின் சிற்பச் சிறப்புகளை எழுதுமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
விஜய்வீரப்பன் சுவாமிநாதன்.
http://vijayveerappan.blogspot.com/

அன்புள்ள வீரப்பன்

நன்றி.

அப்பு என்பது நீர்தான். அது ஒரு பிழை. சமீபகாலமாக வரும் இத்தகைய கவனப்பிழைகள் என்னை கொஞ்சம் கவலைக்குள்ளாக்குகின்றன.

திருவானைக்காவலுக்கு இருமுறை வந்திருக்கிறேன். சாண்டில்யனின் பேரனான ஸ்ரீரங்கம் கண்ணன் நல்ல வாசகர். அவருடன் கடைசியாக வந்தேன். என்னை கவர்ந்த மாபெரும் ஆலயங்களில் ஒன்று

ஜெ

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களே!
‘ராஜராஜ சோழன்’ காலம் பொற்காலமா? என்ற உங்களது கேள்விக்கு அது ஒரு பொற்காலத்தின் துவக்கம் என்று சொல்லலாம். குலோத்துங்கன் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தமைக்கு அப்போது மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்ந்ததால் புலவர்களை அழைத்து இன்ப நூலாம் ‘சீவக சிந்தாமணி’யைப் படித்தனராம். அந்த நிலை மாற மன்னன் அமைச்சர் சேக்கிழாரை அழைத்து மக்கள் நீதி நூல்களைப் படிக்கவைக்க விரும்பியதன் விளைவு, சுந்தரமூர்த்தியின் அடிச்சுவட்டில், அவர் திருத்தொண்டர் திருத்தொகையில் கண்ட பெரியோர்களின் வரலாற்றை கற்பனை கலந்து வர்லாற்று நூலாக அவர் இயற்றினார் என்பது பேரா.அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் முடிவு.

ஆகவே மன்னன் ராஜராஜன் ஒரு பொற்காலத்துக்கு வித்திட்டான் என்ற அளவில் முதல் விடையை அளிக்கிறேன். அடுத்த‌து, அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் பிராம‌ண‌ர்க‌ள் அதிக‌ ச‌லுகைக‌ள் பெற்ற‌ன‌ரா என்ப‌து. இப்போது சாதிப்பிரிவினைக‌ளைப் பார்க்கும் க‌ண்ணோட்ட‌த்தில் அன்றைக்கு நில‌விய‌ சாதிப் பிரிவினைக‌ளைப் பார்க்க‌ முடியாது. தொழில் அடிப்ப‌டையில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ நில‌வி வ‌ன்த‌ சாதிப் பிரிவுக‌ள் உய‌ர்வு தாழ்வு என்ற‌ அடிப்ப‌டையில் ஏற்க‌ப்ப‌ட‌வில்லை. மாறாக‌ ச‌மூக‌த்தின் தொழில்க‌ளைப் ப‌ல‌ கூறுக‌ளாக‌ப் பிரித்துக் கொண்ட‌த‌ன் விளைவு, நாடு காக்க‌ தோள் வீர‌த்தை ந‌ம்பிய‌ ஒரு பிரிவு, வ‌யிற்றுக்குச் சோறிட‌ப் பொருட்க‌ளை விற்க‌ ஒரு பிரிவு, ம‌க்க‌ளுக்குத் தேவையான‌ அனைத்துப் ப‌ணிக‌ளையும் செய்ய‌ ஒரு பிரிவு, இப்ப‌டி அவ‌ர‌வ‌ர் த‌ங்க‌ள் ப‌ணிக‌ளை ஆற்றுகையில் அவ‌ர்க‌ளுக்குக் க‌ல்வியின் சார‌த்தைப் பிழின்து கொடுக்க‌வும், அனைத்துப் பிரிவின‌ர்க்கும் ந‌ல்வாழ்வுக்காக‌ யாக‌ங்க‌ள் முத‌லிய‌ன‌ செய்ய‌வும், இறைவ‌னைத் தொழுது ம‌க்க‌ள் ந‌ல் வாழ்வை வேண்ட‌வும், க‌ற்ற‌லும் க‌ற்பித்த‌லும் என‌ வாழ்ன்த‌ அந்த‌ண‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ள‌க்கூடாது என்ற‌ த‌ர்ம‌ வாழ்வை வாழ்ந்த‌தால் அவ‌ர்க‌ளுக்குத் த‌ங்க‌ இட‌மும், உண‌வுக்கு ஆதார‌மும் த‌ந்து வ‌ர‌த் தொட‌ங்கிய‌ கால‌ம் சோழ‌ர் கால‌ம்.

இந்தப் பிரிவுகளுள் உயர்வு தாழ்வு கிடையாது. இருந்ததில்லை. இருந்ததாக பிரிட்டிஷாருக்கு முந்தைய இலக்கியம் எதனையாவது திராவிட இயக்கத்தார் காட்டமுடியுமா? ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தில் இருப‌த்தி நான்கு வ‌கையான‌ யாக‌ங்க‌ளைச் செய்து, தான‌ த‌ரும‌ங்க‌ளைச் செய்த‌ ஒரு அந்த‌ண‌ர் ப‌ற்றிக் கூற‌ப்ப‌டுகிற‌து. கோவூர் கிழார் பாடிய‌ அந்த‌ப் புற‌நானூற்றுப் பாட‌லில் பாட‌ல் த‌லைவ‌ன் பெய‌ர் “சோணாட்டுப் பார்ப்பான் க‌வுணிய‌ன் விண்ணந்தாய‌ன்” என‌ப்ப‌டுவோன். (இங்கு கவுணியன் என்பது கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவன் என்பது) ஆனால் பிரிட்டிஷ் ஆதிக்க‌ம் வ‌ன்த‌ பின் இங்குள்ள‌ பிரிவுக‌ளைப் பிரிவினைக‌ளாக‌ ஆக்கி அதில் ஆதாய‌ம் க‌ண்ட‌ன‌ர். இன்றைய‌ திராவிட‌ பார‌ம்ப‌ரிய‌த்தின‌ரின் க‌ண்ணோட்ட‌ம் வேறு. அன்றைய‌ வாழ்க்கை முறை, ம‌ன்ன‌ர்க‌ளின் க‌ண்ணோட்ட‌ம் இவை வேறு. இவைக‌ளைக் குழ‌ப்பிக் கொண்ட‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ வ‌க்கிர‌ம், தாழ்வு ம‌ன‌ப்பான்மையின் விளைவு ஜாதித் துவேஷ‌ம். தமிழகத்தில் ஜாதி வித்தியாசத்தை வைத்து அரசியல் எழுந்தது எப்போது. அதன் அடிப்படை, அதன் வளர்ச்சி, அதன் இன்றைய பலன் இவை பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு விருப்பு வெறுப்பற்ற மனம் வேண்டும். நல்ல வரலாற்று ஆய்வு வேண்டும்.

எல்லாவற்றையும் காட்டிலும் இன்றைய அரசியலின் தாக்கம் இல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தில் இவை விவாதிக்கப்பட வேண்டும். கடந்த அறுபது ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் நிலவிய சூழலில் படித்தவர்கள், வாழ்ந்தவர்கள் பெரும்பாலோர் இந்த விவாதத்தில் நேர்மையாக நடந்து கொள்ள முடியுமென்று நான் எண்ணவில்லை. ஆரியம், திராவிட பேதம், தமிழன், தமிழரல்லாதோன் இப்படி எப்போதும் வேறுபாட்டின் மையத்தில் வாழ்ந்தவர்களால் நேர்மையாகச் சிந்திக்கமுடியாது. உங்கள் சிந்தனை எப்போதுமே மாறுபட்டிருப்பதை அறிவேன். எனவே உங்கள் மனநிலையை அறிய, இது குறித்து மேலும் எழுதுவேன். ந‌ன்றி.

த‌ங்க‌ள்,

த‌ஞ்சை வெ.கோபால‌ன்.

முந்தைய கட்டுரைகோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்
அடுத்த கட்டுரைகோதையின் மடியில் 2