முத்து – கடிதங்கள்

1

 

ஜெ,

“நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்…” என்று சுஜாதா சொன்னதாக வாசித்தேன். உண்மையில் அதுதான் நிகழ்ந்தது என நினைக்கிறேன். வருத்தமாக இருந்தது

செல்வராஜ்

***

அன்புள்ள செல்வராஜ்

இறுதியாகச் சந்தித்தபோது இதைத்தான் நா.முத்துக்குமாரிடம் பேசினேன். மிகவும் கடுமையான மொழியில். உண்மையில் சினிமா இருவகையில் விழுங்குகிறது, வெற்றிவழியாக, தோல்வி வழியாக. தோல்வி கசப்பை நிறைக்கிறது. எதிர்மறை மனநிலையைக் கொண்டுவருகிறது. வேறு எதிலும் சென்று வெற்றிபெற முடியாமலாக்குகிறது. அப்படிப் பலரைக் கண்டிருக்கிறேன்

வெற்றி நேரத்தை முழுமையாகப் பறித்துக்கொண்டுவிடுகிறது. உடலை எவ்வகையிலும் பேண முடியமாலாக்குகிறது. குறிப்பாக மிக அதிகமாகப் படங்கள் தயாரிக்கப்படும், இரவுபகலாக படங்கள் முடிக்கப்படும் மலையாளத்தில் இச்சிக்கல் மிக அதிகம். என் நண்பர்கள் பலர் அந்நிலையில் உள்ளனர்.

மனித உடலில் தூக்கம், உணவு இரண்டுமே சீராக அமைந்தாகவேண்டும். இளமையில் அதனுடன் விளையாடலாம். நானும் விளையாடியிருக்கிறேன். அதற்கு ஓர் எல்லை உண்டு. அதற்கான நேரக்கணக்கை அமைத்துக்கொள்வதை உடல் கைவிட்டதென்றால் பிறகு அனைத்துமே சிக்கலாகிவிடும். இன்று என் மகனிடம் அதை மேலும் மேலும் அழுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

சினிமாப் பாடலாசிரியர்கள் ஒரு தனி உலகில் வாழநேர்கிறது. பெரும்பாலும் படங்களுக்கான பாடல்கள் அமைக்கப்படுவதும் பதிவுசெய்யப்படுவதும் இரவில்தான் என்றாகிவிட்டிருக்கிறது. நா.முத்துக்குமார் மாலையில் எழும் வாழ்க்கைக்குச் செல்லவேண்டியிருந்தது. காலையில் தூங்குவதும் எப்போதும் சாத்தியமல்ல. அதிலிருந்து ஒவ்வொன்றாக அனைத்துக் கட்டாயங்களும் உருவாகின்றன.

உண்மையில் இதிலிருந்து முழுமையாகத் தப்ப முடியாது. மூர்க்கமாக ஓர் ஒழுங்கை நமக்கென அமைத்துக்கொள்ளலாம். ஆனால் இனிய பழக்கவழக்கங்கள் கொண்டவர்களுக்கு அது எளிதல்ல. உணர்வுநிலைகளின் சிக்கல்கள்கொண்டவர்களுக்கு இன்னும் கடினம். இதை தமிழில் நான் முக்கியமானவர்கள் என நினைக்கும் பல சினிமாக்கலைஞர்களை நோக்கிச் சொல்ல விழைகிறேன். தூக்கம் உணவு இரண்டிலும் ஒழுங்கை ஓரளவுக்குமேல் மீறவேண்டாம். உடல் மிகமிக நொய்மையான ஒன்று

முத்துவை சினிமா விழுங்கியது என்று சொல்வதற்கான காரணங்களில் பிறிதொன்று, அவர் எழுதுவதாக இருந்த சுயசரிதை நாவல். அதன் கட்டமைப்பு தெரிந்தவர்களுக்கு எழுதப்பட்டிருந்தால் தமிழில் முக்கியமான ஒரு படைப்பாக இருந்திருக்கும் என்னும் எண்ணம் இருக்கும்.

ஜெ

***

இனிய ஜெயம்,

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களை, சில முறை பவாவின் இல்லத்தில் சந்தித்து இருக்கிறேன். முதல் சந்திப்பு வெண் முரசு ப்ரமோ காணொளி எடுப்பதற்காக.

பெரும்பாலானோர் போல ஜெயமோகனின் கருத்தியல் தளத்துக்கு மாற்றானவராகவே இருந்தார். அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே இலகுவாக பேச முடிந்தது. தீவிர இலக்கிய வாசிப்பாளர். அவரது இலக்கிய ஈடுபாடே திரைத் துறையில் அவரது பாடல்களின் தனித்துவமும் சாரமுமான உணர்ச்சிகரத்துக்கு வழி வகுத்தது என எண்ணுகிறேன்.

நான் அவரைக் கண்ட சில சந்திப்புகளில், அவர் புகையிலும், மதுவிலும், அளவற்ற ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார்.

அவரது குடும்பத்தை கண்ட சில தினங்களில்,அவரது மனைவியும் மைந்தனும், அவர் மேல் வைத்திருக்கும் பிரியமும், அவர் அவர்கள் மேல் கொண்ட பிரியமும் கண்டு விதிர்த்துப் போனேன். ஒரே சொல்லில் சொல்ல வேண்டும் எனில், காட்டுத் தனமான பிரியம். கோடி கோடி தந்தையர் கொண்ட பிள்ளைப் பாசத்தை ஒருவனே ஏந்தி, அனைத்தையும் மைந்தன் மேல் பொழிதை, அத்தினங்களில் கண்டேன்.

ஒரு முறை அவர் ஒரு விருந்தளித்தார். (அன்று அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது) அவரே எனக்கு பரிமாறியபடி ” தண்ணி அடிக்க மாட்ட, தம்மடிக்க மாட்ட, 24 மணி நேரமும் புத்தகம், அநியாயத்துக்கு ஜெயமோகன் சிஷ்யனா இருக்கியேயா” என்று சிரித்தவாறு ” இப்படித்தான் ஒரு தடவை எங்க வாத்தியார் பாலு… என துவங்கி அப்படியே நிறுத்தினார், முகம் சிந்தனையில் ஆழ, விழி எங்கோ நிலைத்தது. அன்றிரவு அவர் எய்திய மது , இப்போது நினைத்தாலும் அச்சம் அளிக்கிறது.

கடலூர் சீனு

***

மோகன்,

இன்னும் குற்றாலத்தில்தான் இருக்கிறேன். நீங்கள் நேற்று முத்துக்குமாரைப் பற்றிப் பேசும் போது கவனமாக அதிலிருந்து விலகி வேறு பேச்சு பேசிக் கொண்டிருந்ததை கவனித்தீர்களோ, என்னவோ! இரண்டு நாட்களாக ஏதேதோ செய்து பார்க்கிறேன். முத்துவைப் பற்றிய நினைவுகள் சுற்றி சுற்றி வந்துக் கலங்கடிக்கின்றன.

கூடவே கிடந்த பயல். பத்து வருடங்களாக முதல் இடத்தில், பிஸியாக இருந்தான். ஆனாலும் அவனது பிறந்த நாளுக்கு ஃபோன் பண்ணி பேசுவான். அதற்கு முன் வாத்தியார், சீமான், மற்றும் எனக்கு தனித்தனியாக ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கிச் செல்வான். இந்த பிறந்த நாளுக்கும் ஃபோன் பண்ணிப் பேசினான். அதுதான் கடைசிப் பேச்சு.

‘உபசாரம் படிச்சேண்ணே. ஏற்கனவே படிச்ச கட்டுரைகள்தான். ஆனாலும் புஸ்தகத்துல படிக்கும் போது அத்தனை சுவாரஸ்யம். வீட்ல ரெஸ்ட்ல இருக்கேன். உங்க புஸ்தகம் எனக்கு எவ்வளவு உற்சாகத்தை தந்தது தெரியுமா? எப்பேர்ப்பட்ட சோர்வையும் உங்க எழுத்து போக்கிடும்ணே. திருநவேலி ஹோட்டல்லல்லாம் போயி சாப்பிட்டிருக்கேந்தான். ஆனாலும் நீங்க எழுதிப் படிக்கும் போது உங்கக் கூட வந்து சாப்பிடணும்னு ஆசையா இருக்குண்ணே. சாலிகிராமம் பக்கம் வரும் போது உங்களை வந்து பாக்கறேன்.

அடுத்த படத்துல புதுமை பண்றேன்னு நாஞ்சில் நாடன், ராமகிருஷ்ணன், ஜெயமோகனையெல்லாம் பாட்டெழுத வச்சீங்கன்னா அவ்வளவுதான். எல்லா பாட்டையும் தம்பிதான் எழுதுவேன். மீறி ஏதாவது பண்ணுனீங்க. வீட்டுக்கு வந்து அண்ணிக்கிட்ட சொல்லி பெரிய சண்டை போடுவேன்’.

இப்படி பேசியவனை எப்படி மறப்பேன்! கண்களை மூடினால் இந்தக் குரல்தான் ஒலிக்கிறது. சற்று நேரத்துக்கு முன் தனியாக அமர்ந்து வாய்விட்டு கதறி அழுது தீர்த்தேன். வேறென்ன செய்வது?

சுகா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31
அடுத்த கட்டுரைகைவிடு பசுங்கழை -2