[ 11 ]
இருளில் வெளியே இறங்கி குடில்முற்றத்தில் நின்று அப்பால் தெரிந்த திரௌபதியின் குடிலை தருமன் நோக்கிக்கொண்டிருந்தார். தொலைவில் எங்கோ ஒரு காட்டுநாயின் ஊளை கேட்டது. இருளிலும் காகங்கள் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பதை கண்டார். அவற்றின் கருமை வானத்தின் கருமையை குறைத்துக்காட்டியது. இருட்டுக்குள் அங்கு அவர் நிற்பதை அவரன்றி வேறெவரும் அறியவில்லை. அவ்வெண்ணமே பெரும் கோட்டையென சூழ்ந்து பாதுகாப்பளித்தது. ஆனால் அதுவே அதை பொருளற்ற செயலாகவும் ஆக்கியது.
என்ன எண்ணுகிறேன் இப்போது? இவ்விருளில் இப்படி நின்றபடி அவளையே எண்ணிக்கொண்டிருப்பதை அவள் அறியவேண்டும் என்று விழைகிறேனா? அவள் குடில்விட்டு வெளியே வருகிறாள். ஏதோ நினைப்பில் விழி சுழற்ற அவரை காண்கிறாள். அவர் அத்தனிமையில் அவளுக்காக நின்றிருப்பதை அறிந்ததும் அவள் முகம் மாறுகிறது. விழிகள் கனிகின்றன. மெல்ல அருகே வருகிறாள். எத்தனை எளிய உளநாடகம். மானுடர் தங்கள் பகற்கனவுகளுக்குள் ஆணவம்மிஞ்சிய மூடர்களாக மட்டுமே இருக்கமுடியும்போலும்.
அங்கே ஆயிரம் ஆண்டுகாலம் நின்றிருக்கலாம். தெய்வங்களும் மூதாதையரும் அன்றி எவரும் அறியப்போவதில்லை. விண்மீன்கள் என விழிதிறந்து மண்நோக்கிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு அது ஒருபொருட்டும் அல்ல. அங்கேயே ஒரு கற்பாறையாக மாறி அவர் காலத்தில் நிலைத்தாலும் தலைக்குமேல் விண்மீன்கள் மாறாது சிமிட்டிக்கொண்டிருக்கும். பெருமூச்சுடன் அந்த வீண் எண்ணங்களை விரட்டினார். உள உச்சங்களில் எண்ணங்கள் ஏன் கட்டவிழ்ந்து சிதறுகின்றன? முனைகூர்ந்தால் கொள்வதற்குப் பொருளில்லை என்பதனாலா? அல்லது கொள்ளும் அப்பொருளின் எடையை அஞ்சியா? மீண்டும் பொருளற்ற எண்ணங்கள்…
அங்கே நின்றிருக்கமுடியாமல் அவர் தன் அறைக்குள் சென்றார். நெய்யகல் மெல்லிய ஒற்றை இதழசைவாக நின்றிருந்தது. தூண்நிழல் அருகே அதன் காவல்பூதமென நின்றாடியது. பீடத்தில் அமர்ந்து அருகே வைக்கப்பட்டிருந்த சுவடியில் ஒன்றை எடுத்துப்புரட்டினார். மைத்ரேயியின் வினாக்களுக்கு யாக்ஞவல்கியர் அளித்த விடைகள் அடங்கிய சிறுநூல் அது. கைபோன போக்கில் ஏடுகளை புரட்டினார். “கணவர்கள் அவர்கள் கணவர்கள் என்பதனால் விரும்பப்படுவதில்லை, மைத்ரேயி. மாறாக அவன் ஆத்மா என்பதனால் விரும்பப்படுகிறான். மனைவி மனைவி என்பதனால் விரும்பப்படுவதில்லை. அவள் ஆத்மா என்பதனால் விரும்பப்படுகிறாள்.” கண்களை மூடி அச்சொற்களை அவர் தனக்குள் ஓடவிட்டார். உள்ளம் அச்சொற்களுக்கு அப்பால் தனியாக ஒரு சொல்நிரையென சென்றுகொண்டிருந்தது.
“அனைத்தும் அவற்றின் பொருட்டு விரும்பப்படுவதில்லை. அனைத்தும் ஆத்மா என்பதனாலேயே விரும்பப்படுகின்றன.” அவர் அவ்வெழுத்துக்களையே நோக்கிக்கொண்டிருந்தார். பூர்ஜமரப்பட்டையில் கடுக்காய் கலந்த மையால் இறகுமுனைகொண்டு எழுதப்பட்ட வரிகள். அவை எழுதப்பட்டு எத்தனை ஆண்டுகளாகியிருக்கும்? முப்பதாண்டுகளுக்கு குறையாது. அவற்றை எழுதிய இளமாணவன் முதிர்ந்திருப்பான். அவன் அறிந்துவிட்டானா அவன் எழுதியதன் பொருளென்ன என்று?
அவர் சுவடியை வைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றார். மீண்டும் முற்றத்தில் நின்றிருந்த கொன்றையின் அடியில் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு நின்று அவள் குடிலை நோக்கிக்கொண்டிருந்தார். அவள் துயின்றிருப்பாளா? அவள் காட்டுக்குள் வந்த அன்று நன்கு துயின்றாள். மறுநாளும் துயின்றாள். எப்போது துயில்மறக்கலானாள்? துயின்றுகொண்டிருக்கவும்கூடும். இனி அவளுக்கு ஊசலாட்டம் இல்லை. இறுகி இரும்புக்குண்டு என ஆகிவிட்டது அவள் உள்ளம். அது குளிர்ந்த உலோகம் அல்ல. நஞ்சு குளிர்ந்தது. தொட்டால் கை எரிவது. அவளால் துயில முடியாது.
அவள் குடில்கதவைத் தட்டி அவள் பெயர் சொல்லி அழைத்தால் என்ன? அவள் எழுந்து வந்தால் அவளிடம் மென்குரலில் ‘அன்னையிடம் மைந்தன் என வந்துள்ளேன்’ என்று சொல்லவேண்டும். அப்போது குரல் உடையலாம். கண்களில் நீர் நிறையலாம். அவரே இருளுக்குள் புன்னகைத்துக்கொண்டார். அவள் முகம் அப்படியேதான் இருக்கும் என்பதில் ஐயமே எழவில்லை. இருளுக்குள் இருண்ட தேவிசிலை போல. கல்விழிகள், கல்லுதடுகள். கண்களைக்கொட்டினாலும் இருளில் எழுந்த அந்தப் பாவை விழிகளுக்குள் நின்றது. நிமிர்ந்து வானில் அலைந்த காகங்களை பார்த்தார்.
அப்படி அவள் முன் சென்று நிற்கும் உரிமையை அளிப்பது எது? அவளுடன் காமத்திலாடிய பொழுதுகளின் நினைவுதான். ஆணுக்கு மட்டும்தான் அது அத்தனை முதன்மையானதா? பெண்ணை ஆட்கொண்டுவிட்டதாக, அவளுக்குள் புகுந்து முற்றிலும் அறிந்துவிட்டதாக எண்ணுகிறானோ? அந்தத் தனிமையின் தருணங்களை அவளால் கடக்கவேமுடியாதென்று எண்ணிக்கொள்கிறானோ? ஆனால் ஆணுக்கு தன் உடல் எதுவோ அது அல்ல பெண்ணுக்கு என்று தோன்றியது. ஆண் உடல் அவனுக்கு மட்டும் உரியது. அவள் உடலோ முதன்மையாக அவள் குழந்தைகளுக்குரியது. குழந்தைகளுக்குப்பின் அது அவளுக்கு முற்றிலும் வேறுபொருள் கொண்டுவிடுகிறதோ? அவள் கொள்ளும் தனிமையின் தருணங்கள் காமத்தில் மட்டுமல்ல…
எண்ணங்கள் அழுத்த அவர் இருளில் நடந்தார். நின்றபோது சுமைகொண்ட எண்ணங்கள் நடந்தபோது உடன்பறப்பதன் விந்தையை உணர்ந்து புன்னகைத்துக்கொண்டார். முற்றிலும் அகன்று சென்றுவிட்டாளா? மீளவே மாட்டாளா? ஆம், அவ்வாறுதான், ஐயமே இல்லை. அதுவே முறை. அதுவன்றி பிறிது எதுவும் அத்தருணத்தை, அங்கெழுந்த சொற்களை பொருளற்றவையாக்கிவிடும். ஆனால் அவ்வாறு அது முற்றிலும் முடியாது என்றே அரற்றிக்கொண்டிருக்கிறது உள்ளம். அது வெறும் விழைவு. ஏக்கம். ஆனால் அதை தொடும் அருகமைவில் பார்க்கமுடிகிறது.
இருளில் தன் காலடிகள் ஒலிக்க நடந்தார். மரக்கிளைகளில் கூடணைந்திருந்த பறவைகள் எழுந்து சிறகடித்துப் பறந்தன. புதர்களுக்குள் ஒரு சிற்றுயிர் சருகின் சலசலப்புடன் ஓடி மறைந்தது. தொடர்பில்லாமல் வாரணவதம் நினைவுக்கு வந்தது. அந்த எரிமாளிகையை குகைமுடிவில் எழுந்து இருளில் நின்று நோக்கியபோது அது ஒரு சிதை எனத் தோன்றியது. அதில் தானும் உற்றோரும் எரிந்துகொண்டிருப்பதுபோல. அதிலெரிந்தவர்கள் அறுவர். அறியாத ஆறுமுகங்கள். அவர்களாகி அங்கே எரிந்தமைந்தது அவரும் ஐவரும்.
பிருஹதாரண்யகத்தின் கதை சொல்லிக்கொண்டுவந்த வைரோசனனிடம் திரௌபதி கேட்டாள் “அவர்கள் ஏன் இங்கிருந்து கிளம்பிச்சென்றார்கள்? அவர்களுக்குரியதல்லவா இந்தக் கல்விநிலை?” வைரோசனன் “இல்லை, அரசி. இதன் நிலமும் பொருளும் மட்டுமே அவர்களுக்குரியவை. இங்குள்ள கல்வி யாக்ஞவல்கியரால் வகுக்கப்பட்டது. சுலஃபை மைத்ரேயி இதை தலைமை தாங்கி நடத்தியபோதுதான் பெண்கள் இங்கு சேர்க்கப்பட்டார்கள். பெண்களுக்கு வேதம் கற்கவும் வேள்விகளில் அமரவும் இணையுரிமை அளிக்கப்பட்டது” என்றான்.
“யாக்ஞவல்கியரின் காலத்திலேயே இங்கு வேதாங்கங்களும் உபவேதங்களும் முழுமையாக கற்பிக்கப்பட்டன. மைத்ரேயிதேவி இங்கு இயற்கலைகள் அனைத்தும் கற்பிக்கப்பட ஆணையிட்டார். வேள்வியை பெரும் களியாட்டமாக ஆக்கியதும் அவர்தான். ஆனால் ஒருநாள் அனைத்தையும் விட்டுவிட்டு அவர்கள் இங்கிருந்து கார்கியின் கல்விநிலையை சென்றடைந்தனர். இங்குள்ள ஒருதுளிப் பொன்னோ ஒரு பசுவோ அங்கு செல்லவில்லை.”
“கார்கியின் கல்விநிலையில் மெல்லமெல்ல ஆண்கள் அனைவருமே விலகிச்செல்ல பெண்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருந்தனர். தலைமை மாணாக்கி வதவா பிரதித்தேயியின்கீழ் அவர்கள் அமைந்தனர். அவர்கள் அங்கு ஏழாண்டுகாலம் ஊழ்கம் பயின்றனர். பின்னர்தான் ஜனகரின் அவையில் யாக்ஞவல்கியரை கார்கி கண்டுகொண்ட மெய்யவை நிகழ்ந்தது. அதன்பின் மூன்றாண்டு கடந்து கார்கி முழுமையடைந்தார். வதவா பிரதித்தேயியும் உடன் அமர்ந்து முழுமைகொண்டார். பின்னர் பதினெட்டு ஆண்டுகள் கார்கியின் வேதநிலை மைத்ரேயியால் நடத்தப்பட்டது. அக்காட்டுக்கு இன்று கார்கவனம் என்று பெயர்.”
அவள் “அங்கு வேதம் கற்பிக்கப்பட்டதா என்ன?” என்றாள். “ஆம், அங்கு கற்பிக்கப்படும் வேதம் பிறிதெங்கும் இல்லாதது. அதை சாக்தவேதம் என்கிறார்கள். அதில் ரிக் யஜுர் சாமம் மூன்றும் பிற எங்கும்போலவே. அதர்வத்தில் தொல்லன்னையரைத் தொழும் பாடல்கள் ஆயிரம் மிகையாக உள்ளன” என்றான் வைரோசனன். “இங்குள்ள வேதநிலைகள் எதனுடனும் அதற்கு தொடர்பில்லை. அவர்களின் சடங்குகள் முற்றிலும் மந்தணமானவை. அவர்கள் பாடும் சந்தமும் வேறுபட்டுள்ளது.”
“இன்றுள்ள மைத்ரேயியை நான் ஒருமுறை அதர்வவேதப் பெருவேள்வி ஒன்றில் கண்டிருக்கிறேன். அவர் விழிகளை நோக்க அஞ்சி விலக்கிக்கொண்டேன். கார்கக் காட்டை பிற வைதிகமுறைமைகள் முழுமையாகவே விலக்குகின்றன. ஆயினும் ஒவ்வொருநாளும் ஒரு பெண் பாரதவர்ஷத்தில் எங்கோ இருந்து தன் இல்லத்தைத் துறந்து நிலைகொண்ட விழிகளுடன் ஊர்களையும் அடர்காடுகளையும் கடந்து அங்கே சென்றுகொண்டிருக்கிறாள். பிற வேதநிலைகளில் இருந்து மாணாக்கர் வெளியேறுவது உண்டு. கார்கக் காட்டிலிருந்து எவரும் வெளியேறியதே இல்லை.”
“அவர்கள் மைத்ரேயிக்கும் கார்கிக்கும் யாக்ஞவல்கியரால் சொல்லப்பட்ட மெய்ச்சொற்களை நூல்களாக்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்றாள் திரௌபதி. “இல்லை அரசி, முதுமை வருவதை அறிந்து தன் பொருள்களை மனைவியருக்கு பங்கிட்டளித்துவிட்டு கானேக முடிவுசெய்த யாக்ஞவல்கியரிடம் மைத்ரேயி ஏழு வினாக்களை கேட்கிறார். அவை இங்குள்ள நூல்களில் சொல்லப்பட்டிருப்பவையே. அவற்றுக்கு மறுமொழி அறியாது திகைத்த யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி அளிக்கும் மறுமொழிகளாக அமைந்துள்ளன அவர்களின் நூல்கள்” என்றான் வைரோசனன். “கார்கியுடனான உரையாடலிலும் கார்கியே மெய்மையுரைப்பதாக அந்நூல்கள் சொல்கின்றன.”
அவர்கள் குடில்முற்றத்தை அடைந்துவிட்டிருந்தனர். தருமன் அவள் முகத்தை நோக்க முயன்றான். நெய்விளக்கின் செவ்வொளியில் அது உணர்வற்றிருந்தது. அவள் ஒன்றும் சொல்லாமல் தன் குடிலுக்குள் புகுந்து மறைந்தாள். வைரோசனன் “அரசே, ஓய்வெடுங்கள். நாளை காலை இங்கே சொற்பேரவை நிகழ்கிறது. பிருஹதாரண்ய மரபின் துணைமரபுகளான முண்டகவனம், மாண்டூக்யவனம், பிக்ஷுகவனம், முக்திகவனம் போன்ற பதினெட்டு தரப்புகளும் வந்து ஒரே களத்தில் சொல்லாடலுக்கு நிற்கிறார்கள்” என்றான்.
இருண்ட காட்டுக்குள் சென்றுவிட்டதை அறிந்து தருமன் நின்றார். வழிதவறிவிட்டால் புலரிவரை சுற்றிவரவேண்டியதுதான். கால்களில் வந்த வழியின் நினைவு இருக்கக்கூடும் என்று தோன்றியது. அப்படியே திரும்பி நடந்தால் குடில்களுக்கு சென்றுவிடமுடியும். ஆனால் ஒரு அடி தவறான திசையில் வைத்தாரென்றால் அது முற்றிலும் பிழையான எல்லைக்கு கொண்டுசெல்லக்கூடும். இன்னும்கூட கந்தகம் கொந்தளிக்கும் குழிகள் கொண்டது இக்காடு. மானுடர் வாழ்ந்து வாழ்ந்து இதன் ஒரு சிறுபகுதியைத்தான் பழக்கி எடுத்திருக்கிறார்கள்.
திரும்பி நடந்தபோது அவர் தைத்ரியக்காட்டின் அந்தக் குட்டிக்குரங்கை நினைத்துக்கொண்டார். அங்கிருந்த நாளெல்லாம் அவர் மடியில் உறங்கியது அது. அதன் அன்னை பலமுறை அதைத் தொடர்ந்து வந்து அவரை நோக்கி அமர்ந்திருந்துவிட்டு சென்றது. சிலநாட்களில் அவர் குடிலிலேயே அது தங்கத் தொடங்கியது. அவரது மரவுரிகளைக் கொண்டுசென்று கூரைமேல் போட்டது. காட்டுக்கனிகளைக் கொண்டுவந்து குடிலெங்கும் உருளவிட்டது. சுவடிகளை ஒருமுறை அது தொட்டபோது அவர் சினம்கொண்டு கை ஓங்கினார். பற்களைக் காட்டிச் சீறியபடி தூணில் ஏறிக்கொண்டது. இருகைகளாலும் கால்களாலும் குறுக்குச்சட்ட மூங்கிலைப்பற்றிக்கொண்டு அமர்ந்து ஊசலாடுவதுபோல ஆடி ‘ஹஹ் ஹஹ்’ என்று ஓசையிட்டது.
அவர் மீண்டும் அதை அதட்ட மேலே சென்று சிறுதுளி சிறுநீரை அவர் அருகே பீய்ச்சியது. அதன் நாற்றத்தால் அறை நிறைந்தது. அன்று முழுக்க மேலேயே அமர்ந்திருந்தது. அவர் இரவு படுத்தபோது மெல்ல அருகே வந்து அமர்ந்து ‘ர்ர்ர்’ என்றது. அவர் அதன் தலையின் புன்மயிரை மெல்ல தடவினார். அவர் அருகே உடலை ஒட்டிக்கொண்டு குழந்தைபோல சுருண்டு படுத்துக்கொண்டு உடனே துயிலில் ஆழ்ந்தது. ஆனால் அதன் பின் அது சுவடிகளை தொடவே இல்லை.
அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது அது மரக்கிளைகளில் தாவியபடி கூடவே வந்தது. அதன் பின்னால் ஓசையிட்டபடி அதன் அன்னை வந்தது. அவர்கள் தைத்ரியத்தின் எல்லையெனத் திகழ்ந்த ஓடையை கடந்தபோது அது இருகால்களில் எழுந்து தலைமேல் கைவைத்து நின்று எம்பி எம்பி ஓசையிட்டு அழுதது. கண்களில் நீர் வழிய தலைகுனிந்து தருமன் நடந்தார். பற்களை இறுகக்கடித்து கைகளை முறுக்கிப் பற்றியிருந்தார். எல்லைக்கு அப்பால் அவர் மறைந்ததும் தொலைவில் அதன் கூரிய அழுகை ஒலி கேட்டது. நெஞ்சுலைய அவர் விம்மிவிட்டார்.
இருளில் நின்று அவர் விழிநீர் உகுத்தார். முதல் துளி விழிநீரின் வெம்மையை கன்னங்களில் அறிந்ததும் அனைத்துத் தடைகளும் அவிழ்ந்தன. அவர் விம்மியும் தேம்பியும் அழுதார். நின்று மீண்டும் கிளர்ந்து அழுதுகொண்டே இருந்தார். கால் தளர்ந்து ஒரு சாலமரத்தின் அடியில் அமர்ந்தார். அழுகை முற்றிலும் ஓய்ந்ததும் அவர் உள்ளம் இனிய துயிலுக்குப்பின் விழித்ததுபோல தெளிவடைந்திருந்தது. வழியை சித்தம் நன்றாக அறிந்தது. தன் குடிலுக்குத் திரும்பி மரவுரிச்சேக்கையிட்ட மஞ்சத்தில் படுத்துக்கொண்டார். மரவுரிச்சுருள் ஒன்றை அருகே போட்டுக்கொண்டபோது அந்தக் குரங்கு அருகே படுத்திருப்பதைப்போல உணர்ந்தார். அதற்கு சூக்தன் என்று பெயரிட்டார். அதை வருடியபடி துயிலில் ஆழ்ந்தார்.
[ 12 ]
காலையில் நீராடி மீண்டபோது குடில்முற்றத்தில் காலன் காத்து நின்றிருந்தான். அவர் அவனை நோக்கி வணக்கங்களை ஏற்றபின் தன் குடிலுக்குள் சென்று ஈர ஆடைகளை மாற்றிக்கொண்டார். வெளியே வந்தபோதும் அவன் அங்கேயே மரத்தடியில் நின்றிருந்தான். “சுருக்கமாகச் சொல், நான் எரிசெயலுக்கு சென்றாகவேண்டும்” என்றார் தருமன். காலன் விதுரரை அறியாமல் அவருடன் அஸ்தினபுரிக்கு சென்றிருந்தான். அவர்கள் செல்லும் பாதையில் அவர்களுக்குச் சற்று முன்பென அவன் சென்றான்.
“அமைச்சர் நலமாக சென்று சேர்ந்தார்” என்றான் காலன். “அவர் தன் வருகையை முன்னரே ஓலையினூடாக அறிவித்திருந்தார். எனவே காட்டெல்லை கடந்ததுமே அவருக்கு அரசவரவேற்பு முறைமைகள் கிடைக்கத் தொடங்கிவிட்டன.” தருமன் அதில் இடக்கு இருக்கிறதா என அகத்தால் தேடினார். “ஆனால் பேரரசிக்கு அவருக்கு ஏதாவது ஆகக்கூடுமென்ற ஐயம் இருந்தது.” தருமன் புருவம் சுருக்கி “எவரிடமிருந்து?” என்றார். “அஸ்தினபுரியின் அரசரிடமிருந்தும் தம்பியரிடமிருந்தும்தான். விதுரர் பாண்டவர் பக்கம் உளம்சாய்ந்தவர் என அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதில் ஐயமில்லை.”
“அதனால் அவரை அவர்கள் கொல்வார்களா? துரியோதனனை என்னவென்று எண்ணினார் அன்னை? அவன் புவியாளப் பிறந்த சக்ரவர்த்தி” என்றார் தருமன். “ஆம், ஆனால் அவருக்குப் பிடிக்கும் என ஏதாவது அமைச்சனோ ஒற்றனோ எல்லை மீறலாம் அல்லவா? வழிகள் முழுக்க காக்கப்படவேண்டுமென்பது அன்னையின் ஆணை. ஆகவே நான் முழுமையான விழிகளும் கண்களுமாக கடந்துசென்றேன்” என்றான் காலன். தருமன் பெருமூச்சுடன் “சொல்க!” என்றார்.
“அரசே, விதுரர் கிளம்பிய நாள் முதல் பேரரசர் உடல்நலம் குன்றி படுத்துவிட்டார். உணவு உண்பது குறைந்து அவர் உடல் மெலிந்து என்பும்தோலுமென ஆகியது. இசையோ மைந்தர்களோ அவரை மகிழ்விக்க முடியவில்லை. உயிர்துறக்க முடிவுசெய்தவர் போலிருந்தார். யுயுத்ஸுவும் சஞ்சயனும் மட்டுமே அவருடன் இரவுபகலென எப்போதும் இருந்தனர். அவர்களால்தான் அவர் உயிர்வாழ்ந்தார். ஒருநாள்கூட பேரரசரின் மைந்தர்கள் வந்து அவரைப் பார்க்கவில்லை. அரசர் அவர் இறந்த செய்தி உண்டென்றால் எனக்குச் சொல். பிறிதேதும் எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.”
“யுயுத்ஸூ மதிநுட்பம் மிகுந்தவர். விதுரர் குறித்த செய்தி மட்டுமே பேரரசரை மீளச்செய்யும் என்றுணர்ந்து ஒற்றர்களை வரவழைத்து விதுரர் குறித்த தகவல் வந்துவிட்டது என்று சொல்லி அவருக்கு நம்பிக்கையூட்டி உணவுண்ணச் செய்வார். நாளுக்கு முப்பதுமுறை அவர் கேட்டுக்கொண்டே இருப்பார். வருகிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்நிலை சிலநாட்கள் நீடிக்கும். மீண்டும் பேரரசர் உணவை மறுக்கத் தொடங்குவார். சிலநாட்கள் கழித்து மீண்டும் ஒரு பொய்ச் செய்தி அவருக்கு கிடைக்கச்செய்யப்படும். அவரை அவ்வாறு உயிர்தக்கச் செய்தனர் அவ்விளையோர்.”
“ஆனால் உண்மையிலேயே விதுரர் வருகிறார் என்னும் செய்தி வந்தபோது அதை பேரரசரிடம் சொல்லி நம்பவைக்க முடியவில்லை. அவர் பலநாட்களாக உடல் நலிந்து மஞ்சத்திலேயே படுத்திருந்தார். நினைவு எப்போதாவது திரும்பி அலைபாய்ந்து மீண்டும் சுஷுப்தியில் மூழ்கிக்கொண்டிருந்தது. ஒருநாள் இரவு உச்சகுரலில் அலறியபடி எழுந்தமர்ந்து இளையோனே இளையோனே என்று கூவியிருக்கிறார். கைகளால் அரண்மனைத்தூண்களை அறைந்தபடி அங்குமிங்கும் முட்டிமோதியிருக்கிறார். அருகணைந்து அவரை அமரச் செய்தபோது அவர் விதுரர் இறந்துவிட்டதாக கனவுகண்டது தெரியவந்தது. அரசே, இங்கு விதுரர் நோயுற்று இறப்பை அணுகிய அந்த இரவுதான் அது.”
“இங்கு நோய்மீண்டு விதுரர் எழுந்தநாளில் அவரது கனவில் அவர் வந்து புன்னகை புரிந்திருக்கிறார். அவர் மீண்டுவருகிறார் என்று களிகொண்டு கூவி ஆர்ப்பரித்திருக்கிறார். ஆனால் உடனே நம்பிக்கையிழந்து அது விண்ணிலிருக்கும் இளையோனின் குரல் என எண்ணத் தொடங்கிவிட்டார். அவர் உண்மையில் வரும் செய்தியை சொன்னபோது யுயுத்ஸுவை அறைந்து விலகிச்செல் மூடா, உன் சொற்களை நம்ப நான் சிறுமைந்தன் அல்ல என்று கூவினார். மீண்டும் மீண்டும் நினைவு தவறிக்கொண்டிருந்தது. அரைத்துயிலில் இளையோனே என்ற சொல்லன்றி எதுவும் அவர் நாவில் எழவில்லை.”
“விதுரர் கோட்டைமுகப்பை அடைவதுவரை அவரிடம் அரசர் நோயுற்ற செய்தி சொல்லப்படவே இல்லை” என்று காலன் தொடர்ந்தான். “சொல்லப்பட்டதும் அவர் தேரிலமர்ந்து கண்ணீர்விட்டு அழுதார். விரைவு விரைவு என கூவிக்கொண்டே இருந்தார். பேரரசர் நோயிலிருப்பது நகரில் பரவியிருந்தமையால் விதுரரின் வரவை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவரைக் கண்டதும் வசைபாடத் தொடங்கினர். குலமகளிர் மாளிகை முகப்பில் நின்று அவரை கைசுட்டி பழிச்சொல் கூறினர். அவர் எதையும் கேட்கவில்லை. அரண்மனை முகப்பில் இறங்கி இடைநாழியில் ஏறி ஓடினார். இருமுறை கால்தவறி விழுந்தவரை கூடவே ஓடிய ஏவலர் பற்றிக்கொண்டனர்.”
“பேரரசரின் மஞ்சத்தறைக்குள் புகுந்து அவர் அருகே அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டார் விதுரர். அவர் பாதங்களில் தன் தலையை வைத்து ஓசையின்றி குலுங்கி அழுதார். பேரரசரும் அவர் குரலைக் கேட்டதுமே விழித்துக்கொண்டார். அவர் நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. தொண்டைக்குள் சிக்கிய ஒலி அங்கே நின்று பதைத்தது. அவர் கைகளை நீட்டி விதுரரின் தலையை தொட்டார். குழலைப்பற்றி இழுத்து தூக்கி ‘உணவு உண்டாயா? நெடுந்தொலைவு வந்திருப்பாய்’ என்றார். ‘இல்லை’ என்றார் விதுரர். ‘உணவருந்து… யுயுத்ஸு, இளையோனை உணவருந்தச் செய்’ என்றார் பேரரசர்.”
“யுயுத்ஸு ‘தந்தையே, நீங்கள் உணவருந்தவேண்டும்’ என்றான். ‘ஆம், கொண்டுவா’ என்றார். அதன்பின் கண்ணீர்விட்டு விசும்பி அழலானார். அவர்கள் அவர் அருகே நின்று அவர் அழுது ஓய்வதுவரை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் மீண்டதும் ‘உணவு கொண்டுவா… ஊனுணவு…’ என்றார்.” காலன் சிரித்து “அவ்வளவுதான், நீர் நீரை கண்டு இணைந்துகொண்டது. ஒரு சொல் பேசப்படவில்லை. மறுநாள் காலை பேரரசர் பீடத்தில் இசைகேட்க அமர்ந்திருக்க அருகே விதுரர் அமர்ந்து ஓலைச்சுருக்கங்களைச் சொல்வதை நோக்கினால் அங்கே ஏதும் நிகழ்ந்தமைக்கான எந்தச் சான்றும் இருக்கவில்லை” என்றான்.
“விதுரர் மீண்டும் அமைச்சர் ஆனாரா?” என்றார் தருமன். “ஆம், அதைத்தான் அஸ்தினபுரியில் விந்தையாக பேசிக்கொண்டார்கள். விதுரர் அகன்றதுமே அமைச்சுப்பொறுப்பு முழுமையாகவே அங்கரின் கைகளுக்குச் சென்றது. அவரும் பால்ஹிகரும் அதை நடத்தினர். அவர் மீண்டுவந்ததும் அவரையே அமைச்சராக மீண்டும் அமைத்து அரசர் ஆணையிட்டார். அவரே கிளம்பிவந்து அமைச்சரைக் கண்டு பணிந்து இயல்பாக முகமன் சொல்லி அவ்வாணையை அளித்தார். விதுரரும் ஒன்றும் நிகழாததுபோல அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் உங்களை சந்தித்ததை சொல்லவில்லை, உங்களைப்பற்றி அரசர் ஏதும் கேட்கவுமில்லை.”
“அவனுக்குத் தெரிந்திருக்கும்” என்றார் தருமன். “ஆம், இங்கு எப்போதும் அவரது ஒற்றர்கள் சூழ்ந்துள்ளனர்” என்றான் காலன். “அவரை மீண்டும் அமைச்சராக ஆக்க பூரிசிரவஸுக்கு விருப்பமில்லை என்று அறிந்தேன். அதை அவர் சொன்னதாகவும் ‘அவர் என் தந்தை. அவ்வண்ணமே இங்கிருப்பார்’ என்று அரசர் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. நான் அதை உறுதி செய்துகொள்ளவில்லை.” தருமன் “அவன் அவ்வாறு சொல்லக்கூடியவனே. சிறியன அவன் இயல்பல்ல” என்றார்.
காலன் தலைவணங்கி அகல தருமன் வேள்விச்சாலைக்கு சென்றார். நகுலனும் சகதேவனும் முன்னரே அங்கிருந்தனர். அவர் அவர்களுக்கு அருகே அவருக்கென இடப்பட்ட தர்ப்பைப்புல் இருக்கையில் அமர்ந்தார். பிருஹதாரண்யகத்தில் வழக்கமான மாபெரும் வேள்விச்செயல் நடந்துகொண்டிருந்தது. அவி உண்ட நெருப்பு ஒளியிழந்து சுருண்டது. மெல்ல எழுந்து கொழுந்து விட்டு தாவி காற்றில் ஏறி நின்று துடித்தது. பீதர்நாட்டுப் பட்டை விரித்து உதறும் ஒலிபோலிருந்தது அதன் ஓசை. வேதச்சந்தத்தில் அது மட்டும் தனியாக ஒலித்தது. கட்டப்பட்டு திமிறி தாவும் சிம்மம். மண்ணில் கட்டப்பட்டுள்ளது எரி. மாதரிஸ்வானுக்கு அன்னையிலிருந்து விடுதலையே இல்லை.
வேள்விமீதம் உண்டபின் அவர்கள் எழுந்து வெளியே வந்தனர். தருமன் சுருக்கமாக காலனின் செய்தியை சொன்னார். “ஆம், நான் அதையே எதிர்பார்த்தேன்” என்றான் நகுலன். வைரோசனன் அவர்களருகே வந்து “வரும் முழுநிலவுநாளில் இங்கே பெரும் பூதவேள்வி ஒன்று நிகழவிருக்கிறது, அரசே” என்றான். “அதை நிகழ்த்துபவர் அஸ்தினபுரியின் அரசர். பேரரசர் உடல்நலம் குன்றியிருந்தபோது நாளும் அவருக்காக அவியிட்டு வேண்டிக்கொள்ள ஆணையிட்டிருக்கிறார். இப்போது அவர் உடல்நிலை செம்மையாகிவிட்டமையால் அதை பெருங்கொடை வேள்வியாக ஆக்கும்படி ஆணை.”
நகுலன் “அஸ்தினபுரியில் நாளும் வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்” என்றான். “அஸ்தினபுரியின் செல்வம் அத்தனை வேதநிலைகளுக்கும் சென்றுகொண்டிருக்கிறது. வைதிகர் அனைவருமே இன்று அஸ்தினபுரிக்கான வேள்விகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.” வைரோசனன் “உண்மையில் இன்று பாரதவர்ஷம் முழுக்கவே வேள்விகள் பெருகிவிட்டிருக்கின்றன. அத்தனை ஷத்ரிய மன்னர்களும் தொடர்வேள்விகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோல வேள்வி பெருகிய காலம் பிறிதில்லை என்கிறார்கள். வேள்விப்புகை நீர் சுமக்காத கார்மேகம்போல நகர்கள் மேல் பரவி நின்றிருக்கிறது என ஒரு சூதன் பாடினான்” என்றான். நகுலன் புன்னகை செய்து “சூதர்கள் நஞ்சு கலந்தால்தான் சொல் மணக்கும் என்று அறிந்தவர்கள்” என்றான்.
“ஒவ்வொருவரும் வேள்விப்புரவலர் என்னும் பெயர் பெறுவதற்காக போட்டியிடுகிறார்கள். பெருவேள்வி புரிபவன் முதன்மை ஷத்ரியன் என்று எண்ணுகிறார்கள்” என்றான் வைரோசனன். சிரித்துக்கொண்டு “முன்பெல்லாம் அயோத்தி, கோசலம் போன்ற தொன்மையான அரசகுடியினர் வேள்விகளை பெரிதாகச் செய்ததில்லை. அதனால் அவர்கள் அடைவதற்கொன்றுமிருக்கவில்லை. உருவாகி வரும் புதிய அரசர்களும் குலத்தூய்மை அற்றவர்களுமே தங்களை உயர்ந்தோர் என நிலைநாட்டும்பொருட்டு வேள்விகளை செய்வார்கள். வேள்விகளைச் செய்வதே குலத்தகுதிக் குறைவு என்பதற்கான சான்றாக ஷத்ரியர்களின் அவைகளில் இளிவரலுக்கு ஆளாகும்” என்றான்.
“நாம் கிளம்புவோம்” என்றார் தருமன். “எங்கு, மூத்தவரே?” என்றான் நகுலன். “கார்க குருநிலைக்குச் செல்வோம். அங்கிருக்கும் இன்றைய மைத்ரேயியை பார்ப்போம்” என்றார் தருமன். நகுலன் தயங்க வைரோசனன் “அவர்கள் ஆண்களை அங்கு விரும்புவதில்லை” என்றான். “சென்று பார்ப்போம். உள்நுழைய ஒப்புதல் இல்லை என்றால் நாம் நின்றுவிடுவோம். திரௌபதி மட்டும் செல்லட்டும்” என்றார் தருமன். “அவர்களின் வேதநிலையை பிற வேதநிலைகள் ஏற்றுக்கொள்வதில்லை” என்றான் நகுலன். “நாம் அவ்வாறு பிரித்துப் பார்க்கவில்லை. நாமும் எவருடனும் இல்லாதவர்களே” என்றார் தருமன். அவர்கள் தலையசைத்தனர்.
ஆனால் மாலையில் காட்டில் இருந்து திரும்பிவந்த அர்ஜுனன் அதை உறுதியாக மறுத்துவிட்டான். “மூத்தவரே, நாம் சாந்தீபனி குருநிலைக்குச் செல்வோம்” என்றான். “ஆம், அங்கும் செல்லவேண்டும். ஆனால்…” எனத் தொடங்கிய தருமனிடம் “நாம் அங்குதான் சென்றாகவேண்டும், மூத்தவரே. சிலநாட்களில் அங்கே இளைய யாதவர் வருவார். நாம் அவருக்காக காத்திருப்போம்” என்றான் அர்ஜுனன். “ஆம், நன்று” என்றார் தருமன். “திரௌபதியும் அதையே விரும்புவாள்.” அர்ஜுனன் அதற்கு மறுமொழி என ஏதும் சொல்லவில்லை. அவன் சொல்வான் என எதிர்பார்த்து பின்பு தருமன் “அவள் அவரிடம் மட்டுமே பேசவிழைவதாக என்னிடம் சொன்னாள்” என்றார். அதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை.