கனல்:கடிதங்கள்

அன்பு ஜெ சார். கேபிஆர் சாருக்கு ஒரு செவ்வணக்கம். எங்கேயொ படித்தது- இருபது வயதில் கம்யுனிஸ்டாகாதவனும், முப்பது வயதில் அதைக்கை கழுவாதவனும் அவனிடம் ஏதோ தப்பு என்று. பெரும்பாலோர் இப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது ஆயிரமாண்டுகளாய் மனித இனத்தில், குணத்தில் ஊறிப்போன சில உணர்வுகளுக்கு (உம்-தனிஉடமை வேட்கை-பெண்ணோ, மண்ணோ) எதிரான எந்த தத்துவங்களும் தாக்குப்பிடிப்பது மிக கடினம் என்று. அதற்கு இன்னும் பல நூறோ, ஆயிரமோ ஆண்டுகள் பிடிக்கலாம். அதுவரை, தனிமனித உரிமை என்ற அடிமடியில் கை வைக்காமல் குறைந்த பட்சம் இங்கே பசி பட்டினியில் சாகாமலும், வெயில் மழையில் வாடாமலும், சாதி, மத, இன வேறுபடுகளைச்சொல்லி ஈனப்படுத்தாமலும் இருக்க வழிமுறை செய்யும் சமூக அமைப்புகள் வேரூன்றினால் நல்லதில்லையா?
அன்புடன் ரகுநாதன்.
அன்புஜெ
கெ.பி.ஆர். கோபாலனைப்பற்றிய கனல் கட்டுரையைப் படித்தேன். நான் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொள்வது ஒன்று உண்டு. புரட்சியாளர்கள் ஒரு சமூகத்துக்கு இல்லாது போகும்போது என்ன நடக்கிறது என்று. இரண்டு விஷயங்கள் நடக்கும் என்று நினைக்கிரேன். லௌகீகவாதம் அதிகரிக்கும். சுகிப்பதுதான் வாழ்க்கை என்ற எண்ணம் ஏற்படும். அதேபோல அடிப்படைவாதமும் அதிகரிக்கும். ஏனென்றால் புரட்சிவாதி முன்னால் பார்க்கிறான். அடிப்படை வாதி பின்னால் பார்க்கிறான். உண்மையான புரட்சிவாதி சுயநலமே இல்லாதவன். ஆகவே அவன் தோற்றால்கூட ஜெயித்தவன்தான். நமக்கு இப்போது புரட்சிவாதிகள் கிடையாது. அந்த இடத்தில் அடிப்படைவாதிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். அடிப்படைவாதிகள் எல்லா இடங்களிலும் புரட்சிவாதிகளைப்போலத்தான் வேஷம் போடுவார்கள். இங்கே தனித்தமிழ்நாடு கேட்டும் இனவாதம் பேசியும் மொழி வாதம் பேசியும் மதவாதம் பேசியும் சத்தம்போடுபவர்கள் எல்லாருமே அடிப்படைவாதிகள். உண்மையான புரட்சிவாதிகள் இல்லாத நிலை இருப்பதுதான் நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்
செல்வம்
சென்னை  
88
அன்புள்ள ஜெ
கனல் கட்டுரையைப்பற்றி எழுத என்னிடம் சொற்கள் இல்லை. கெ.பி.ஆர் கோபாலனின் இலட்சியவாதம் அசமூட்டுகிறது. சே குவேராவைப்போல அவரும் நிரந்தரப்புரட்சியில் மட்டுமே ஆர்வமுடையவராகத் தோன்றுகிறார். அந்த தீவிரமே சேவை கியூபாவில் அவருக்கு காத்திருந்த பல முக்கியமான பதவிகளை துறக்கச்செய்தது. ரிசர்வ் வங்கி கவர்னராகவும் பின்னர் நீதியமைச்சராகவும் அவர் பணியாற்ற  அழைக்கப்பட்டார். அவற்றைத்துறந்து பொலிவியக்காடுகளுக்கு இடதுசாரி கெரில்லாக்களுடன் சேர்ந்து போராடுவதற்காகச் சென்றார் அவர். கே.பி.ஆர் போன்ற மனிதர்களை மதிப்பிடுவதும் தீர்ப்பு சொல்வதும் மிகவும் கடினம். சில நண்பர்கள் கெ.பி.ஆர் கோபாலன் இ.கெ.நாயனாரின் மாமா என்று சொல்லியிருக்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ரயரப்பன் முதல் கம்யூனிஸ்டு மந்திரிசபையில் இல்லை என்றுதான் நினைக்கிறேன்
கோலப்பன் பகவதி’
சென்னை 
**
அன்புள்ள ஜெ,
கே.பி.ஆர் கோபாலனைப்பற்றிய கட்டுரையை வெறும் குணச்சித்திர வார்ப்பு போலவே எழுதியிருக்கிறீர்கள் என்றுதான் என் வாசிப்புக்கு முதலிலே தோன்றியது. ஆனால் வாசித்து முடிந்த்த பின்னும் என் நினைவிலே அந்தக் கட்டுரை மறையாமல் இருந்தது. ஏன் அபப்டி இருக்கிறது என்று யோசித்தபோதுதான் அந்த ”கனல்” அதற்குக் காரணம் என்று புரிந்தது. அந்த பீடி நெருப்பை நீங்கள் ஒரு கவிதையில் பயன்படுத்துவதுபோல பயன்படுத்தி ஒரு குறியீடாக ஆக்கியிருக்கிறீர்கள். அதுதான் அந்தக் கட்டுரை ஓர் இலக்கியப் படைப்பாக மாறியிருக்கிறது
ஜெயராமன் 
முந்தைய கட்டுரைஅழிமுகம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிளையாடல்:கடிதங்கள்