[ 9 ]
பாலென நுரைபொங்கும் தூத்மதியே மிதிலையை அணைத்து ஓடிய முதன்மை ஆறு. ஜலதையும் பலானையும் கமலையும் ராத்வதியும் அதில் மலைச்சேற்று நிறங்களுடன் பெருகி வந்து இணைந்துகொண்டன. அங்கு எப்போதும் இளஞ்சேற்றின் நுரைமணம் இருந்தது. வடமேற்கே எழுந்த மலையடுக்குகளின் குளிர் ஊறிவந்த அந்த ஆறுகளின் பெருக்கால் மிதிலையின் அனைத்துச் சுவர்களும் எப்போதும் பனித்திருந்தன. அங்குள்ள மக்களின் விழிகளும் சொற்களும்கூட குளிர்ந்தவையே என்றனர் கவிஞர்.
மலையுருண்டு வந்த கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையால் சூழப்பட்டிருந்தது மிதிலை. கோட்டையின் வாயில்முகப்பில் மட்டும் மரத்தாலான உயர்ந்த காவல்கோபுரமும் அதன்மேல் மூன்று எச்சரிக்கைமுரசுகளும் இருந்தன. அதன்மேல் கவிழ்ந்த தாமரைக்கூரைக்குமேல் மிதிலையின் மேழிக்கொடி பறந்தது. தேர்கள் செல்வதற்கான மையச்சாலை மரத்தடிகள் பதிக்கப்பட்டிருந்தது. தேவதாரு மரங்களால் கட்டப்பட்ட மூன்றடுக்கு அரண்மனையை அது சென்றடைந்தது.
அரண்மனையின் முற்றத்தில் மிதிலையின் அரசர்களின் குலதெய்வமான பூமாதேவி ஒருகையில் அமுதகலமும் மறுகையில் மலரும் கொண்டு கோயில்கொண்டிருந்தாள். அரண்மனையைச் சுற்றி காவல் ஏதுமிருக்கவில்லை. அரண்மனை முற்றத்தையே மக்கள் சந்தையாகவும் பயன்படுத்தினர். மலையிறங்கி வரும் மக்கள் கொண்டுவரும் மதிப்புமிக்க கம்பளியாடைகளும் தோலாடைகளும் கீழே மலைச்சரிவுக்கு அடியிலிருந்து வணிகர்கள் கொண்டுவந்த வெண்கலப்பொருட்களும் இரும்புக்கருவிகளும் உப்புப்பாறைகளும் மரவுரியாடைகளும் அங்குதான் விற்கப்பட்டன.
மரங்களால் கட்டப்பட்ட உயரமற்ற சிறியவீடுகள் செறிந்த மிதிலையில் காலை மிகப்பிந்தியே வந்தது. ஒளியில் வெம்மை ஏறிய பின்னரே மக்கள் கணப்பின் சூடு பரவிய அறைகளின் கம்பளிப்போர்வைக்குள் இருந்து வெளிவந்தனர். சுருக்கங்கள் பரவிய முகங்களுடன் வெயிலை நோக்கியபடி நெடுநேரம் அமர்ந்திருந்தனர். அவர்களின் கால்நடைகள் அதன்பின்னரே மெல்ல தொழுவங்களிலிருந்து ஆவியெழும் உடலுடன் வெளிவந்தன. சூரியனை ஏற்று உடல் சிலிர்த்தன. குழந்தைகள் சிவந்த கன்னங்களுடன் வந்து தந்தையரை அணைத்துக்கொண்டு அமர்ந்தன. அவர்கள் முன்னால் ஒளியிலாடிய இறகுகளுடன் சிறிய பறவைகள் வந்து தெருக்களில் கிடந்த பழைய சாணியைக் கிளறி சிரித்து எழுந்து அமைந்து அப்பொழுதை கொண்டாடின.
அவர்கள் உச்சிப்பொழுதின் ஒளிமட்டுமேயான சூரியனின் கீழ் நின்றபடியே வயல் திருத்தினர். பெரும்பாலும் காய்கறிகளும் சோளமுமே அங்கு பயிரிடப்பட்டது. ஆண்டில் மூன்றுமாதம் மலைச்சரிவுகள் கரைந்து வழியும்படி பெருமழை பெய்தது. மக்கள் தங்கள் மரக்குடில்களில் ஒடுங்கி கணப்புகளுடன் ஒண்டியபடி மழையை கேட்டுக்கொண்டிருப்பார்கள். மக்களில் ஒருசாரார் ஐந்து ஆறுகளிலும் இறங்கி அவற்றின் கரையோர வண்டலை அள்ளி நீரில் கழுவி அதில் அருமணிகள் உள்ளனவா என்று பார்த்தனர். மிதிலையின் வருவாயின் பெரும்பகுதி அவ்வாறுகளில் அருமணிகளாகவே கிடைத்தது. அதை வாங்க கீழே பெருங்கடல் அலைக்கும் தாம்ரலிப்தியிலிருந்து வணிகர்கள் வந்தனர்.
மிதிலையின் மண்ணும் புழுதியும் காற்றும் அனைத்துமே ஐந்தாறுகளின் வண்டலால் ஆனவை. அவற்றை எவ்வகையிலும் தவிர்க்க முடியாதென அங்கு வந்த சிலகாலத்திலேயே வணிகர்கள் அறிந்தனர். மிதிலை நகரினர் புழுதியை ஒருபொருட்டென எண்ணுவதில்லை. அங்குள்ள வீடுகள் அனைத்தும் புழுதியால் மூடப்பட்டிருந்தன. அரண்மனையே மென்புழுதிப்படலத்துக்குள் இருந்தது. ஆலயத்திற்குள் தெய்வமும் ஐந்தாற்றுச் சேறு குழைத்து உருவாக்கப்பட்டதே.
ஐந்து ஆறுகளின் வண்டல் சந்தன நிறமான அலைவடிவாக படிந்திருந்த அப்படுகைக்கு தொல்பழங்காலத்தில் குடிவந்த மக்கள் தாரிகள் என அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வாழ்ந்த தொல்நிலம் கீழே சரஸ்வதி ஓடிய சமவெளியில் அமைந்திருந்தது. பல்லாயிரமாண்டுகளாக அவர்கள் அங்கே கன்றுபெருக்கியும் மேழியோட்டியும் மதில்சூழ்ந்த சிற்றூர்கள் அமைத்து வாழ்ந்தனர். விண்ணிலிருந்து எழுந்த ஆணையொன்றால் சரஸ்வதி ஒழுக்கு நின்றது. அதன் நீர் ஆங்காங்கே சிறுகுளங்களென்றாகியது. அக்குளங்களின் நீருக்கென மக்கள் ஒருவருக்கொருவர் போரிட்டனர்.
பின்னர் அக்குளங்களும் சுருங்கி மண்ணுக்குள் மறையத் தொடங்கியபோது அவர்கள் நான்குதிசைகளிலும் நீரும் வாழ்வும் தேடி கிளம்பினர். ஒரு நிலத்தைக் கண்டடைந்தவர் அங்கு பிறர் வராதபடி செறுத்துப் போரிட்டனர். பெரியகுடிகள் ஈரமுள்ள நிலங்களைக் கண்டடைய சிறுகுடிகள் துரத்தப்பட்டு மேலும் மேலும் சிதறிப்பரந்தன. ஆண்களால் தலைமை வகிக்கப்பட்ட குடிகள் போர்த்தன்மை கொண்டிருந்தன. பெண்களால் தலைமை வகிக்கப்பட்ட குடிகளே மேலும் தொன்மையானவை. அவற்றால் அவர்களை எதிர்த்துப் போரிடமுடியவில்லை. அவை எல்லைகளுக்கு அகற்றப்பட்டன.
அவ்வாறு சிதறியவர்களில் ஒரு சிறுமலைக்குழு அவர்களின் முதுதலைவியாகிய சூசிகையால் மலைமீது வழிநடத்தி கொண்டுசெல்லப்பட்டது. அவர்களே ஐந்துஆறுகள் ஓடிய சேற்றுப்படுகையை கண்டடைந்தனர். தாரிமொழியில் மண் மிதி எனப்பட்டது. எனவே அந்நிலம் சூசிகையால் மிதிலை என்று அழைக்கப்பட்டது. அன்னை அங்கு அவர்கள் வாழ்வதற்கு ஆணை அளித்தாள். மேழி பற்றத்தெரிந்த அம்மக்களால் விரைவிலேயே அங்கு வளமான சிறுகழனிகள் அமைக்கப்பட்டன. பச்சைப்படிக்கட்டுகள் போல அவை மலைச்சரிவில் இறங்கி ஐந்து ஆறுகளை சென்றடைந்தன. சேறு அவர்களுக்கு வற்றாத உணவை அளித்தது.
நெடுங்காலம் மிதிலை சின்னஞ்சிறு மலைச்சிற்றூராக எவராலும் அறியப்படாமல் அங்கே இருந்தது. சேற்றைக்குழைத்து சிறுவீடுகளை கட்டிக்கொண்டனர். சேற்றிலேயே வாழ்ந்தமையால் அவர்கள் நீங்கா சேறுபடிந்த உடல்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களையும் மிதிகள் என்றே அழைத்துக்கொண்டனர். அவர்களின் காலடியில் அருமணிகள் புதைந்துகிடந்தன. அவர்கள் அதை அறியாமல் நிறைவாழ்வு வாழ்ந்தனர். மூதன்னையே அவர்களின் அரசி. அவள் முன்னிலையில் நன்றும் தீதும் முடிவாயின.
அவர்கள் அந்நிலத்தைக் கண்டடைந்த நாளை மிதிநாள் என கொண்டாடினர். அது பெருமழைக்காலம் முடிந்து வெள்ளம் வடிந்து மலைச்சரிவுகள் அனைத்தும் சேற்றுக்குழம்பு குமிழியிட்டு நொதித்துக்கொண்டிருக்கும் பருவம். மிதிநாளுக்கு முந்தைய பதினான்கு நாட்களுக்குள் பிறக்கும் பெண்குழந்தைகளில் மூத்ததை தெரிவுசெய்து அதை கொட்டும் குரவையுமாக மூங்கில்கூடையில் கொண்டுவந்து அச்சேற்றில் புதைத்துவைப்பார்கள். பூசைகள் செய்து நீர்தெளித்து அகழ்ந்து அவளை வெளியே எடுப்பார்கள். மண்ணன்னையின் மகள் அவள் எனக் கருதி கொண்டுசென்று இளவரசி என முடிசூட்டுவார்கள். வாழும் மூதன்னை மறைந்து கோல் ஒழியும்போது அவள் அரசியாவாள். மிதிலையின் அரசி என்பதனால் அவள் மைதிலி என்றும் குளிர்ந்தவள் என்பதனால் சீதை என்றும் அழைக்கப்பட்டாள்.
நெடுங்காலத்திற்குப் பின்னர்தான் மிதிலைக்கு அரசன் உருவானான். மிதிலையின் அருமணிகள் மேழியில் தட்டுப்படத் தொடங்கின. அவற்றை அவர்களின் குழந்தைகள் குழியாடலுக்கும் விரலாடலுக்கும் பயன்படுத்தின. அவ்வழியாகச் செல்கையில் அம்மலைக்குடிக்கு வந்து தங்கியிருந்த மலைவணிகன் ஒருவன் அதை கண்டான். குறைந்த விலைக்கு அவற்றை அவன் வாங்கிக்கொண்டான். சின்னாட்களிலேயே மிதிலையை நாடி வணிகர்கள் வரத்தொடங்கினர்.
செல்வம் வந்ததும் கள்வரும் வந்தனர். கள்வரை வெல்ல மிதிலை படைக்கலம் ஏந்தவேண்டியிருந்தது. படைகளை நடத்துவதற்காக மூதன்னையின் முதல்மைந்தன் தலைவனாக தெரிவுசெய்யப்பட்டான். அன்னையின் உடலின் ஒருபகுதியாக அவன் கருதப்பட்டான். அன்னையின் உடலாகப் பிறந்தவன் என்னும்பொருளில் அவன் ஜனகன் என்றழைக்கப்பட்டான். பின்னர் போருக்கு அரசனும் அறநெறிகளுக்கு மட்டுமே அன்னையின் அவையும் என்று ஆயிற்று.
காலப்போக்கில் மிதிலையின் அனைத்து அரசர்களும் ஜனகன் என்று அழைக்கப்பட்டனர். அரசனின் மூத்தமகளை சேற்றிலிருந்து அகழ்ந்தெடுத்து குலத்தலைவியாக்கினர். அவளே மண்ணன்னையின் ஆலயத்துப் பூசனைமுறைகளை ஆற்றக் கடமைப்பட்டவள். மைதிலி என்றும் சீதை என்றும் ஜானகி என்றும் அவள் அழைக்கப்பட்டாள். நெடுங்காலம் கழித்து மிதிலை பிற அரசகுடியினருடன் மணவுறவுகொள்ளத் தொடங்கி இளவரசி பிறநகருக்கு குடிபெயர்ந்தபோது அவள் தங்கை அப்பொறுப்புக்கு வந்தாள்.
நூற்றெட்டாவது ஜனகராகிய பூமித்வஜர் வேதமறிந்த அறச்செல்வர் என புகழ்பெற்றார். அவர் அவைக்கு கார்கியும் கௌதமரும் காத்யாயனரும் சிறப்பளித்தனர். அவர் செல்வத்தால் ஐதரேயக்காடும் பிருஹதாரண்யகமும் செழித்தன. பானுமதர், சத்குமான்யர், சூசி, ஊர்ஜநாமர், சத்வயர், கிருதி, அஞ்சனர், அரிஸ்நாமி, சுருதாயு, சுபாஸ்யு, சுர்யாசு, சிருஞ்சயர், சௌர்மாபி, அனேனர், பீமரதர், சத்யரதர், உபாங்கு, உபகுப்தர், ஸ்வாகதர், சனானந்தர், சுப்ராச்சயர், சுபாஷணர், சுச்ருதர், சுஸ்ருதர், ஜயர், விஜயர், கிருது, சுனி, வித்ஹப்யர், த்வதி, பகுலாஸ்வர், கிருதி, திருதியர் என்னும் ஜனகர்கள் அவர் பெருமையாலேயே சூதர்களின் பாடல்களில் அழியாது வாழ்ந்தவர்கள்.
கிருதி திருதியரின் கொடிவழியில் வந்தவர் எட்டாவது ஜனகராகிய ஸீரத்வஜர். அவர் மகளாகப் பிறந்த சீதையை அயோத்தியின் ரகுகுல ராமன் மணந்தான். இலங்கையின் அரக்கர்கோன் ராவணனால் அவள் கவர்ந்து செல்லப்பட்டாள். படை கொண்டுசென்று அவளை ராகவ ராமன் மீட்டுவந்த கதையை சூதர்பாடல்கள் பலவாறாகப் பாடின. எரிபுகுந்து சொல்திகழ்ந்த அவளை மண்ணன்னையின் பெண்வடிவு என புற்றுறைமுனிவர் பாடிய தொல்காவியம் அனைவர் நாவிலும் அழியாது வாழ்ந்தது.
எப்போதும் வேதம் முழங்கிக்கொண்டிருக்கும் அவை என்று மாமன்னர் பூமித்வஜ ஜனகரின் அவையை சொன்னார்கள் கவிஞர்கள். அங்கதக்கவிஞன் ஒருவன் ‘உடல்பழுத்த முதுவைதிகர்கள் அணிபொலியும் நடனப்பெண்களைவிட கண்களைக் கவரும் அவை’ என அதைப்பற்றி பாடினான். “நூறாண்டுகள் ஒழியாது வேதம் ஒலித்த மண் ஆகையால் அங்கே மானுடர் பேசுவதெல்லாம் வேதச்சந்தமாகவே ஒலிக்கிறது” என்றனர் கவிஞர். ஐதரேய மரபில் வேதமெய் கற்றுத்தேர்ந்த அந்தணராகிய அஸ்வலனர் ஜனகருக்கு அமைச்சராக அமைந்து அவைகளனைத்தையும் வழிநடத்தினார்.
சொல்தேர்பேரவை என அது பாரதவர்ஷம் முழுக்க அறியப்பட்டபோது அதைத் தேடி பாரதவர்ஷம் எங்கும் இருந்து வைதிகர்களும் புலவர்களும் வரலாயினர். எனவே ஒவ்வொரு நாளும் அங்கு புதிய மெய்யறிவு ஒன்று எழுந்தது. மறுநாள் எழுந்த ஒன்று அதை மறுத்தது. நிலைக்காத துலாமுள் என அந்த அவையின் மையம் மாறிக்கொண்டே இருந்தது. “அந்த அவையில் ஒருநாள் அமர்பவன் மெய்யறிவான். மறுநாளும் அமர்பவன் அதை இழப்பான்” என்றனர் அங்கதக்கவிஞர்.
நாளும் பெருகிக்கொண்டிருந்த மெய்ப்பூசலைக் கண்டு ஜனகரே கவலைகொள்ளத் தொடங்கினார். அனைத்தும் அறிந்த அரசமுனிவர் என அவர் அறியப்பட்டும்கூட அவரது அவை என்பதனாலேயே அவர் எங்கும் சொல்முதன்மைகொள்ள முடியவில்லை. வரவேற்பவருக்குரிய பணிவை அவர் பேணியாகவேண்டியிருந்தது. “அவை என்றால் இறுதிச்சொல் ஒன்று இருந்தாகவேண்டும். அதை ஒரு நாக்குதான் உரைக்கமுடியும். அது எது என்று வகுப்போம். அவ்வாறின்றி நிகழும் சொல்லாய்வுகள் வெறும் பறவைப்பூசல்களாகவே எஞ்சும்” என்றார் அமைச்சர் அஸ்வலனர். “இங்கு பகுதட்சிணைப் பெருவேள்வி ஒன்றை கூட்டுவோம். அதன் மெய்யவையில் முடிவாகட்டும் முதல்வர் எவர் என.”
அதை ஏற்று ஜனகர் ஒரு பெருவேள்வியை தொடங்கினார். அரச அறிவிப்பு நகர்முனைகளில் பொன்முகப்படாம் அணிந்த களிறுமேல் எழுந்த திருமுகத்தானால் பட்டோலை விரித்து வாசிக்கப்பட்டது. கொம்புகளும் முரசுகளும் முழங்கி அதை ஆதரித்தன. பாரதவர்ஷத்தின் அனைத்து கல்விச்சாலைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மானுடமொழி பேசும் எவரும் வந்தமர்ந்து தங்கள் மெய்யறிவை அங்கு தொடுக்கலாமென்று அறைகூவப்பட்டது.
பாரதவர்ஷத்தின் அத்தனை நகரங்களுக்கும் திருமுகங்கள் சென்றன. பாரதவர்ஷத்தின் தலைமை வேதப்படிவர் எவர் என அந்த அவையில் உறுதியாகுமென பேச்சு பரவியது. அது அறிஞரென அறியப்பட்டிருந்த அனைவரையும் அந்த அவைக்குச் செல்லத் தூண்டியது. “ஜனகரால் ஏற்கப்பட்டவர் நான்குவேதங்களாலும் ஏற்கப்பட்டவர்” என்றனர் சூதர்.
[ 10 ]
அவைகூடல் குறிக்கப்பட்டிருந்த சித்திரை மாதம் வளர்பிறை முதல்நாளை நோக்கி வைதிகர்களும் அறிஞர்களும் வரத்தொடங்கினர். மிதிலை நகரில் கோடைகாலம் முழுக்க முகில்குவைகள் போல புழுதி நிறைந்திருக்கும். அந்நகரை தொலைவிலிருந்து நோக்கியவர்கள் மலைச்சரிவில் ஒரு செந்நிறமுகில்மேல் அதன் கோபுரமுகடுகள் மட்டும் வெயிலில் மிதந்து நிற்பதை கண்டனர். அணுகும்தோறும் திரைக்குள் என அதன் கட்டடங்களும் மனிதர்களும் தெரியலாயினர். உள்ளே நுழைந்ததும் தாங்களும் அதில் கரைந்து மறைந்தனர். ஒவ்வொரு முகமும் புழுதிக்குள் இருந்து எழுந்து சிரித்து அணுகி சொல்லாடி புழுதிக்குள் மறைந்தது. “மிதிலை அன்னைமிதியின் நகரம். இங்கு காற்றும் ஒளியும் வானும் மண்ணாலானதே. அங்கு வேள்வியில் காண்பீர், எரிதழலும் மண்ணென்றே எழுந்து நிற்பதை” என்றனர் வணிகர்.
வேள்வியின் மெய்யவையில் வெல்லும் வேதப்படிவருக்கு ஆயிரம் வெண்பசுக்களும், அவற்றின் கன்றுகளும் ஆகொடையாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பசுக்களின் கொம்புகள் பொன்கட்டப்பட்டிருக்கும். அவற்றை உரிமைகொண்டவரை பிற வைதிகர் எழுந்து வேதமுதல்வர் என சுட்டி வாழ்த்துவர். வேள்விக்கெனத் தேர்ந்து திரட்டப்பட்ட ஆயிரம் பசுக்களும் தூத்மதியின் கரையில் அமைந்த கொட்டகைகளில் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொருநாளும் அவற்றைக் காண அயலூர் மக்கள் வந்து குழுமினர். “வெண்முகில்கள் போல. வெண்பளிங்குப் பாறைகள் போல. வெண்பட்டுக்குவியல்கள் போல” என்று சூதர்கள் அவற்றைப்பற்றி முச்சந்திகளில் நின்று பாடினர்.
வேள்விக்கு ஆரியவர்த்தத்தின் அனைத்து வேதநிலைகளிலும் இருந்து முதலாசிரியர்கள் தங்கள் மாணாக்கர்களுடன் வந்தனர். அவர்கள் தங்குவதற்கான குடில்கள் ஐந்து ஆறுகளின் கரைகளில் நிரைவகுத்தன. அவர்களைக் கண்டு வணங்கவும் தங்கள் குழவியரை அவர்கள் தொட்டு வாழ்த்தவும் விரும்பிய இல்லறத்தார் வைதிகர் தங்கள் நீர்வணக்கமும் நெருப்புக்கடனும் முடிந்து ஓய்வெடுக்கையில் அவர்களின் குடில்கள் முன் நிரைவகுத்து நின்று கண்டு வணங்கினர். பொன்னையும் வெள்ளியையும் காணிக்கை வைத்தவர்களுக்கும் வெறும்பழங்களுடன் வந்தவர்களுக்கும் நடுவே எண்ணத்துளியாலும் வேறுபாடு காட்டாமல் வாழ்த்தினர் அந்தணர்.
முதல்நாள் அஸ்வலனர் “மெய் என்பது சொல்லில் அமையும் தன்மைகொண்டது. எனவே அறியக்கூடியது. அழியாதது. எனவே மெய்யமைந்த சொல் அழியாதது. அழியாச்சொல்லே வேதம். அழிபவர் அனைவருக்கும் அழிவின்மையே அமுதம்” என்னும் முதற்சொல்லை அவையில் நிறுத்தி சொல்லாடலை தொடங்கினார். கௌதம மரபின் சால்வரும், சௌனக மரபின் உத்தாலகரும், வைசம்பாயனரும், கண்வரும், மத்யாதினரும் ஒவ்வொருநாளிலும் தங்கள் மெய்ச்சொற்களை முன்வைத்தனர். ஜரத்காரு முனிவரின் வழிவந்த அர்த்தபாகர், லஹ்ய முனிவரின் வழிவந்த ஃபுஜ்யர், கௌஷிதிய மரபில் வந்த கஹோலர் ஆகியோருக்குப்பின் உஷஸ்தி சக்ராயனரின் வழிவந்த உஷஸ்தர் ஆகியோர் மெய்யுரையை முன்வைத்தனர்.
ஒரு மெய்யறிதலை பிறிதொன்று வென்று சென்றது. வெல்லற்கரிய முழுமைகொண்டது என ஒரு மெய்ச்சொல் தோன்றும்போதே கனியினுள் இருந்து விதை என அதற்குள் இருந்தே சொல்லெடுத்து அடுத்த மெய்யறிவை வளர்த்து நிலைநாட்டினார் இன்னொருவர்.
பதினான்காம் நாள் முழுநிலவு. குருபூர்ணிமையாகிய அன்று காலைக்குமுன்னரே மாணவர்கள் எழுந்து இருளுக்குள் விழிமூடியபடியே சென்று நீராடி மணம்கொண்டு தேடி மலர்கொய்து தங்கள் ஆசிரியர்களின் குடில்களை அணுகி துயிலும் அவர்களின் கால்களில் மலரிட்டு வணங்கி விழிதிறந்து அக்கால்களை நோக்கினர். அதை நெஞ்சில் நிறுத்தி “வழிகாட்டுக! துணைவருக! இறைவடிவாக எழுந்தருள்க!” என வணங்கினர். மாணவர்களாகச் சேர விழைந்த இளையோர் கைகளில் மலர்களுடன் ஆசிரியர்களைக் காத்து குடில்கள் நடுவே நின்றிருந்தனர். அவர்களின் விழி தங்கள் மேல் பட்டபோது நிலம்படிய விழுந்து “அறிவுக்கொடை அளியுங்கள், ஆசிரியரே” என வணங்கினர்.
அன்றோடு அந்த அவை நிறைவுகொள்கிறது என்றறிந்தமையால் அனைவரும் அரண்மனை முகப்பிலிருந்த வேள்விப்பந்தலில் கூடினர். வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அங்கு நீண்ட சடைமுடிக்கற்றைகள் தோளிலும் மார்பிலும் புரள எரிவிழிகளுடன் வந்த ஒரு யோகி உரத்த குரலில் “சமஸ்ரவஸே, வருக! இதோ உனக்கு நான் வாக்களித்த பசுக்களும் பொன்னும். கொண்டு சென்று உன் குடிபுரந்து ஆள்க!” என்றார். அனைவரும் திரும்பி நோக்கினர். அவரைப்போலவே தாடியும் சடையும் கொண்டிருந்த சமஸ்ரவஸ் என்னும் மாணவன் கையில் கோலுடன் அங்கு வேள்விக்கொடைக்காக கட்டப்பட்டிருந்த பசுக்களை நோக்கி சென்றான்.
சினந்தெழுந்த அஸ்வலனர் “நில்லும், யார் நீர்? இங்கு என்ன நிகழ்கிறதென்று அறிவீரா?” என்றார். “ஆம், அறிவேன். நான் உதறிச்சென்ற மரவுரிகளுக்கு நிகராகப் பெறத்தக்கவை இப்பசுக்கள்.” அப்போதுதான் சௌனகர் அவர் எவரென அடையாளம் கண்டுகொண்டார். “முனிவரே, நீங்கள் யாக்ஞவல்கியர் அல்லவா?” என்றார். “ஆம், அது என் முந்தைய வாழ்க்கை” என்றார் அவர். “இந்த அவை தங்களுக்குரியது. வந்தமர்ந்து வெல்க!” என்றார் கௌதமர். “என் மாணவன் இவன். என்னிடம் இந்த அவைகூடுவதை சொன்னான். அவனுக்கு இப்பசுக்கள் அவன் நாடுவதை அடைய உதவும் என்றான். பசுக்களை பெற்றுத்தருகிறேன் என்றேன். அதன்பொருட்டே வந்தேன்” என்ற யாக்ஞவல்கியர் திரும்பி சமஸ்ரவஸிடம் “பசுக்களை கொண்டுசெல்க!” என ஆணையிட்டார்.
“நில்லுங்கள், மாமுனிவரே! நான் உங்களை நன்கறிவேன். இப்போதுதான் நேரில்காண வாய்த்தது. வேதமுணர்ந்து மூத்தவர் நீங்கள் என்று அறிவேன். ஆயினும் இந்த அவையில் வேதமெய் உரைத்து இங்குள்ளவர்கள் அனைவரையும் சொல்வென்று மட்டுமே அந்த ஆநிரைகளை கொண்டுசெல்ல முடியும்” என்றார் அஸ்வலனர். “நன்று” என்றபடி யாக்ஞவல்கியர் உள்ளே வந்தார். “என்னுடன் சொல்லாட விழைபவர் எழுக!” அஸ்வலனர் “முதலில் நானே எழுகிறேன். இந்த அவையில் நான் முன்வைத்த முதல்வரிகளை மீண்டும் உங்களுக்காக உரைக்கிறேன்” என்றார்.
அவர் சொல்லிமுடித்ததும் யாக்ஞவல்கியர் கேட்டார் “அஸ்வலனரே, உணர்த்துவதும் உணர்வதும் இன்றி நின்றிருக்கும் மெய் உண்டா?” “ஆம்” என்றார் அஸ்வலனர். “அவ்வண்ணமென்றால் சொல்வதும் கேட்பதும் இன்றி நின்றிருக்கும் சொல் உண்டா?” அஸ்வலனர் “ஆம், அதுவே வேதம்” என்றார். “கேட்கப்படுகையில் அது குறைகிறதா மிகுகிறதா?” என்றார் யாக்ஞவல்கியர். அஸ்வலனர் திகைத்தார். “கேட்கப்படுபவனால் அது உருமாற்றம் அடைகிறதா?” என யாக்ஞவல்கியர் தொடர்ந்தார்.
“ஆம்” என்றார் அஸ்வலனர். “ஆகவேதான் வேதங்கள் மாறுபாடுகொள்கின்றன.” “அந்த மாறுபாடுகள் அனைத்தையும் தொகுத்துச் சுருக்கினால் தோன்றுவது மெய்மையா அல்லவா?” என்றார் யாக்ஞவல்கியர். திகைத்த அஸ்வலனரை நோக்கி “அதுவும் மெய்மையே. ஏனென்றால் இங்கு மெய்மை அன்றி பிறிதொன்றுமில்லை” என்றார் யாக்ஞவல்கியர். “அதெங்ஙனம்?” என எழுந்தார் உத்தாலகர். “ஏனென்றால் ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்” என்றார் யாக்ஞவல்கியர்.
அவர்களின் சொற்கள் ஒன்றை ஒன்று கூர்முனையில் மட்டுமே சந்திக்கும் அம்புகள் போல எழுந்தன. சொற்களனில் ஜனகர் எழுந்து கேட்டார் “முனிவரே, ஒன்று உரையுங்கள். இங்கு ஒவ்வொருநாளும் ஒரு முனிவரின் குரலாகத் திரண்டு வந்தது ஒரு கருத்து. உண்மைகள் ஏன் மாறுபடுகின்றன?” யாக்ஞவல்கியர் சொன்னார் “அரசே, நீங்கள் சிறுமகவாக அன்னையின் இடையிலிருக்கையில் அவள் சொன்ன ஏதேனும் நினைவிருக்கிறதா?” “ஆம், இன்றும் நினைவுள்ளது ஒரு வரி” என்றார் ஜனகர். “உணவை வீணாக்கலாகாது. அரசன் என்றான பின்னர் ஒவ்வொரு கூலமணியையும் ஓர் உழவனின் உழைப்பாக மட்டுமே பார்க்க அது எனக்கு கற்பித்தது.”
“உங்கள் தந்தையின் ஒரு சொல் என இன்றும் நின்றிருப்பது என்ன?” என்றார் யாக்ஞவல்கியர். “முற்றிலும் தண்டிக்கத்தக்க பிழை என்றோ முழுமையாகவே பேணப்படவேண்டிய நன்மை என்றோ ஏதுமில்லை என்று அவர் எனக்கு சொன்னார்” என்றார் ஜனகர். “அரசே, உங்கள் முதல் ஆசிரியரின் சொற்களில் உகந்தது எது?” என்றார். “எண்ணம் எழுத்தாவதற்கு நடுவே நின்றுள்ளது அறியாமை” என்றார் ஜனகர். “அரசே, உங்கள் வேதஆசிரியரால் சொல்லப்பட்டது என்ன?” என்றார் யாக்ஞவல்கியர். “அழியாத ஒன்றை அடைவது வரை அடைவதை அழியாமல் பேணுக!” என்றார் ஜனகர்.
“அரசே, இவையனைத்தும் உண்மை என்றால் இவை ஏன் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றிருக்கின்றன?” என்று யாக்ஞவல்கியர் கேட்டார். “இவை நான் என்னும் தொடர்ச்சியால் இணைக்கப்பட்டுள்ளன. இவை என் வளர்ச்சிநிலைக்கேற்ப சொல்லப்பட்டவை.” யாக்ஞவல்கியர் “அவ்வண்ணமே வேதமும் வேதமெய்மையும் மானுடம் வளர்வதற்கேற்ப தாங்களும் வளர்ந்து வந்து சேர்கின்றன என்று கொள்க!” என்றார். “இவையனைத்தும் உண்மையே. இவ்வுண்மைகளை ஒன்றென இணைக்கிறது நாளும் வளரும் மானுடம்.” ஜனகர் கைகூப்பினார். “ஆனால், உங்கள் மெய்குரு ஒரு சொல்லையும் சொல்லவில்லை, ஜனகரே” என்றார் யாக்ஞவல்கியர்.
அப்போது பல்லக்கு ஒன்று வந்து அவ்வேதசாலை முன் இறங்கியது. அதை சுமந்துவந்தவர்கள் விலக அதைச் சூழ்ந்து வந்தவர்கள் உள்ளிருந்து மெலிந்து குறுகிய சிற்றுடல்கொண்ட கார்கியை வெளியே எடுத்தனர். இரு மாணாக்கியரின் கைகள் தாங்க அவர் மெல்ல நடந்துவந்தார். அவருக்குப் பின்னால் மழித்த தலையும் மரவுரியும் அணிந்த ஊழ்க மாணாக்கியர் மூவர் நடந்துவந்தனர். கார்கி அவைநடுவே வந்து “மாமுனிவராகத் திகழ்ந்த யாக்ஞவல்கியர் மீண்டும் வந்துள்ளார் என்று அறிந்தேன். அவருடன் சொல்கோக்கவே வந்தேன்” என்றார்.
“அமர்க, வேதப்படிவரே!” என்றார் ஜனகர். அவர் அமர்ந்ததும் “நான் கேட்க விழையும் வினா இது. மாமுனிவரே, மாமன்னன் ஒருவனின் அஸ்வமேதப்புரவி எதனால் ஆற்றல் கொண்டதாகிறது?” என்றார். “அவன் கொண்டுள்ள ஆள்தேர்யானைபுரவிப் படைகளால். அதைவிட அவன் குடிகள் அவன்மேல் கொண்டுள்ள பற்றால். அதைவிட அவன் உள்ளத்தின் உறுதியால். அதைவிட அவன் கொண்ட விழைவால். அதைவிட அவன் மூதாதையரின் வாழ்த்துக்களால். அதைவிட அவன் ஆற்றிய நல்வினைப்பயனால்.”
“யாக்ஞவல்கியரே, அவன் புரவி எதனால் தடுத்து வெல்லப்படுகிறது?” என்று கார்கி கேட்டார். “அறிவரே, அவனை எதிர்க்கும் அரசர்களால். அவர்களை குறைத்து மதிப்பிட்ட அவன் அறியாமையால். அதைவிட தன்னை மிகையாக எண்ணிய அவன் ஆணவத்தால். அதைவிட அவன் சினத்தால். அதைவிட அவன் பொறுமையின்மையால். அதைவிட அத்தருணத்தில் அமைந்த ஊழின் வலைப்பின்னலால்.” கார்கி கேட்டார் “முனிவரே, அவ்வாறு எங்குமே நிறுத்தப்படாத அஸ்வமேதப்புரவி இறுதியில் சென்றடையும் இடம் எது?”
அன்று பகல் முழுக்க, அந்தி அணைந்து, இரவு எழுவதுவரை அந்த வினாவும் விடையும் தொடர்ந்தன. கார்கி ஆயிரத்தெட்டு வினாக்களை கேட்டார். அனைத்துக்கும் விடைசொன்ன யாக்ஞவல்கியரை கார்கி வணங்கியபோது வெளியே முழுநிலவு உருகிய பொற்தாலமென எழுந்து வந்தது. அதன் ஒளிக்கற்றைகள் சரிந்து வேதசாலையை பொன்மெழுகின. அவை செவிகூர்ந்து அமைதிகொண்டிருக்க அனல்கொழுந்துகள் ஆடும் ஓசை மட்டுமே கேட்டது. கார்கி தன் இறுதிவினாவை கேட்க வாயெடுத்தபோது யாக்ஞவல்கியர் கைகூப்பியபடி “அவ்வினாவை நீங்கள் கேட்கலாகாது. நான் சொல்லலாகாது. அது எந்நிலையிலும் ஒரு வினாவல்ல, எதற்கும் விடையும் அல்ல” என்றார். “ஆம்” என்று கார்கி கைகூப்பினார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கியபடி அசைவிழந்து அமர்ந்திருக்க அவர்களை நோக்கியபடி ஜனகரும் அவையினரும் அமைந்திருந்தனர்.
அஸ்வலனர் முதலில் மீண்டார். “அவை வென்றீர், முனிவரே! அப்பரிசு தங்களுக்குரியது. பாரதவர்ஷத்தின் அந்தணமுதல்வர் தாங்களே. வேதமெய் முற்றுணர்ந்தவரும் தாங்களே” என்றார். அவரை திகைத்தவர் போல திரும்பிப்பார்த்தார் யாக்ஞவல்கியர். பின்பு தன் மாணவனை நோக்கி கையசைத்தார். அவன் சென்று அந்தப் பசுக்களை அவிழ்த்து ஓட்டிச்சென்றான். முற்றிலும் தனித்தவராக நீள்மூச்சுடன் எழுந்த யாக்ஞவல்கியர் “என் ஆசிரியை ஆனீர், கார்கி. என் விடைகளை எல்லாம் நான் உதறிவிட்டேன். விடையென ஆகாதது அன்றி இனி எதையும் கருத்தில் கொள்ளமாட்டேன்” என்றார். கார்கி அவரை வணங்கி “அவ்வண்ணமே என்னிடம் வினாக்களும் இல்லை, முனிவரே. எனக்கு மெய்மையை காட்டினீர். வினாக்களைக் கடந்ததை இனி நாடுவேன்” என்றார்.
யாக்ஞவல்கியர் மெல்லிய குரலில் கார்கியை வாழ்த்திப்பாடினார் “இன்மையில் இருந்து இருப்புக்கு, இருளில் இருந்து ஒளிக்கு, இறப்பிலிருந்து அமுதத்திற்கு…” கார்கி தலைவணங்கி “ஆம், அவ்வறே ஆகுக!” என்றார். சூழ்ந்து நின்ற முனிவரும் வைதிகரும் அவர்கள் அங்கு சொல்கடந்து சென்று கண்டதென்ன என்று அறியாமல் திகைத்து நோக்கி நின்றனர். வேறு எவரிடமும் விடைகொள்ளாது வடதிசை நோக்கி யாக்ஞவல்கியர் நடந்து மறைந்தார். எவரையும் உணராதவராக தென்திசை நோக்கி தன் மாணவிகளுடன் கார்கி சென்றார்.
கார்கியின் புகழ்மிக்க அம்மாணவிகளை அவையினர் அறிந்திருந்தனர். முதல் மாணவி வதவா பிரதித்தேயி கோசல அரசகுலத்தைச் சேர்ந்தவர். இரண்டாம் மாணவியான அம்பை காத்யாயனி காத்யாயன முனிவரின் மகள். மூன்றாம் மாணவியான சுலஃபை மைத்ரேயி ஜனகரின் முன்னாள் அமைச்சரும் வேதப்படிவருமான மித்ரரின் மகள். காத்யாயனியும் மைத்ரேயியும் யாக்ஞவல்கியரை விழிகளால்கூட அறியவில்லை. அவர் அவர்களை எண்ணத்தாலும் உணரவில்லை. அவர்கள் பிரிந்துசென்ற அந்தக் கணத்தை நகர்மக்கள் நெடுநாட்கள் நினைவில் சூடியிருந்தனர். அவர்கள் தங்கள் பாதைகளில் எங்கோ மீண்டும் சந்தித்தேயாகவேண்டும் என்றனர் கவிஞர். சந்திக்கவே முடியாதபடி விரிந்ததே பெருவெளி என்றனர் முனிவர்.