‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 32

[ 7 ]

பிருஹதாரண்யகத்தில் மைத்ரேயி இளைய அறத்துணைவியாகவும் காத்யாயனியின் ஏவல்பெண்டாகவும் வாழத்தொடங்கினாள். இருபதாண்டுகளாக பிருஹதாரண்யகக் கல்விநிலை வளர்ந்து பேருருக்கொண்டிருந்தது. ஒவ்வொரு கிளையிலிருந்தும் பறவைச்செய்திகள் வழியாகவே தொடர்புகள் நிகழ்ந்தன. வரும்செல்வத்திற்கு கணக்குகள் வைத்துக்கொள்வதும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவற்றை முறையாக பகிர்ந்தளிப்பதும், ஒவ்வொருநாளுமென வந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான பூசல்களுக்கும் மனக்குறைகளுக்கும் தீர்வுகாண்பதும் ஓர் அரசு நடத்துவதற்கிணையான செயல்களாக இருந்தன.

அப்பொறுப்பை தன் எட்டு மாணவர்களுக்கும் நான்கு மைந்தர்களுக்குமாக பகிர்ந்தளித்திருந்தார் யாக்ஞவல்கியர். ஆயினும் இறுதியில் அவரே அனைவரும் ஏற்கும் முடிவை எடுத்தாகவேண்டியிருந்தமையால் மெய்ப்பொருள் எண்ணுவதும் ஊழ்கத்திலாழ்வதும் அவருக்கு அரிதாகவே வாய்த்தன. ஐவேளை எரியோம்புவதே அடையாளச் சுருக்கமாகத்தான் செய்யமுடிந்தது. முதற்புலரியில் எழுந்து அவர் கதிர்வணக்கம் புரிகையிலேயே கரையில் அவருக்காக மாணவர்களும் ஆசிரியர்களும் ஏவலர்தலைவர்களும் காத்து நின்றிருப்பது வழக்கமென்றாயிற்று. அவர் நாளின் அனைத்துக் கணங்களும் பங்கிடப்பட்டிருந்தன.

நாளும் அரசர்களின் தூதர்களும் முனிவர்களும் அக்கல்விநிலைக்கு வந்தனர். அயல்நிலத்து முனிவர் நெடுந்தொலைவு கடந்து அவரைக் காணவென்றே வந்தனர். அரசர்களும்கூட காணவருவதுண்டு. அவருடைய நாட்கள் அச்சந்திப்புகளுக்காக நேரத்தை பகுப்பதிலேயே கழிந்தன. அவ்வாழ்க்கையின் பொருளின்மைகூட சித்தத்தில் படாத அளவுக்கு அவர் ஓடிக்கொண்டிருந்தார். எப்போதாவதுதான் அவர் தன் அறத்துணைவியர் இருந்த குடிலுக்கு வந்தார். அங்கு தனக்கு இரு மனைவியர் இருப்பதை அப்போதுதான் நினைத்துக்கொண்டதுபோல விழிப்புகொண்டு உளம் திரட்டி அவர்களிடம் இன்சொல் உரைப்பார்.

நாள்போக்கில் களைத்து தளர்ந்து மஞ்சத்திற்கு வரும்போது நிழலென விழிக்கு தோன்றும் இளம்துணைவியிடம் ஓரிரு சொற்கள் பேசுவதும் அரிதாயிற்று. மகளிருடன் மகிழ்கையிலும் உள்ளே துறவுநிலை கொண்டவர்கள் உண்டு, துறவுக்குள்ளும் காமம் கரப்பவர் போல. அவருள் வாழ்ந்த வேதப்படிவர் உண்மையில் மணம்புரிந்து மகளிரை அறியவே இல்லை. காத்யாயனியின் காதலில் உவந்திருந்தபோதும், அவள் அளித்த இளமைந்தரை கையிலேந்தி களித்தபோதும்கூட அந்த வேதப்படிவர் அதை உணரவில்லை. அன்று மேற்பரப்பு மட்டும் உருகிய அரக்குக்கட்டி போன்றிருந்தார், பின்னர் அதுவும் உறைந்து நிலைமீண்டது. ஓயாக்காற்றில் ஏற்று நின்றிருக்கும் காற்றாடிப்பொறியின் அச்சு என அவர் தேய்ந்துகொண்டிருந்தார்.

ஆனால் மைத்ரேயி தன்னை இயல்பாக அச்செயற்பெருக்கில் பொருத்திக்கொண்டாள். அவள் வருகையில் எந்த எதிர்பார்ப்புடனும் இருக்கவில்லை. தன்னை எவ்விதமாகவும் உருவகித்துக் கொண்டிருக்கவுமில்லை. எனவே வந்ததுமே அங்குள்ள மண்ணில் புதுமுளை என தளிர்விட்டெழ அவளால் இயன்றது. யாக்ஞவல்கியருக்குரிய பணிவிடைகளை அவர் குடிலுக்கு வரும்போது இயல்பாக ஆற்றினாள். அவரில்லாதபோதும் அங்கு அவர் இருப்பதாகவே எண்ணிக்கொண்டாள். கொல்லையின் கன்றுகளையும் அடுமனையின் ஏவல்பெண்டுகளையும் புரந்தாள். தன் மூத்தவளுக்கு இயல்பான தோழியாகவும், ஏவல்பெண்ணாகவும் இருந்தாள்.

மெல்ல அவள் கைகள் விரிந்து அக்கல்விநிலையின் அனைத்து அன்றாடப்பணிகளையும் நிகழ்த்தத் தொடங்கின. கல்விநிலையில் இளமைந்தரின் நலன்களை நோக்கத் தொடங்கியவள் செல்வம் வருவதையும் போவதையும் வழிநடத்தலானாள். பின்னர் நெறி நிறுத்தவும் மீறல்களைக் கண்டு சுட்டவும் தொடங்கினாள். யானை தன் பாகனை கண்டுகொள்வதுபோல அக்கல்விநிலை தன் தலைவியை மத்தகத்தில் ஏற்றிக்கொண்டது.

யாக்ஞவல்கியருக்காகக் காத்திருந்த பலமுடிவுகள் அவளால் எடுக்கப்பட்டன. அவள் எடுக்கும் ஒரு சிறந்த முடிவு பத்து புதிய முடிவுகளை கொண்டுவந்து வாயிலில் நிறுத்தியது. நாளடைவில் அவளே பிருஹதாரண்யகக் கல்விநிலையின் அனைத்துப் பிரிவினராலும் ஏற்கப்பட்ட முதல்வி என்றானாள். யாக்ஞவல்கியரின் நான்குமைந்தரும் அவளையே முதன்மை அன்னை என கருதினர். ஆசிரியர்கள் அவளை யாக்ஞவல்கியரின் மாற்றுருவென எண்ணினர். முதற்புலரியிலெழுந்து மங்கலத் தோற்றத்தில் தன் குடிலருகே இருக்கும் கொட்டகைக்கு ஏவல்பெண்டிருடன் அவள் வரும்போது அங்கே அவளுக்காக கல்விநிலைகளின் தலைவர்களும், அரசதூதர்களும், ஆசிரியர்களும், பொருள்காப்பாளர்களும் காத்து நின்றிருந்தனர்.

அவளால் யாக்ஞவல்கியரின் பணிச்சுமைகள் குறைந்தன. ஆனால் விடுவிக்கப்படும்தோறும் அவர் விலகிச்சென்றார். ஒருகட்டத்தில் அப்பெரும் கல்விநிலையில் அவர் ஆற்றுவதற்குரிய செயல்கள் மிகக்குறைவாக ஆயின. அப்பெருக்கு அவரைக் கடந்து முன்னால் சென்றுவிட்டிருந்தது. அவர் அந்த மாற்றத்தையும் அறியவில்லை. அவர் உள்ளம் வேதச்சொல்லை நாடியது. நாட்கணக்கில் மீளாச்சித்தத்துடன் சொற்களைத் தொடர்ந்து புறமென்றான மொழியிலும் உள்ளென்றான காட்சிகளிலும் அலைந்தார். அவரைக் காணவென வந்த வேதப்படிவர்கள்கூட ஓரிரு சொற்களுக்குப்பின் மைத்ரேயியை சந்தித்து மீள்வதையே விரும்பினர்.

மைத்ரேயி கூடவே காத்யாயனியுடன் மேலும்மேலும் அணுக்கமாகிக்கொண்டிருந்தாள். யாக்ஞவல்கியர் நாளெல்லாம் ஓடிச்செய்த பணிகளை அரைநாளிலேயே முடித்து இல்பேணவும் அவளுக்கு நேரமிருந்தது. இரவுகளில் மூத்தவளுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது அவள் வழக்கம். தொடக்கநாட்களில் கோயிற்சிலை என சொல்அறியாதவளாக இருந்த காத்யாயனியின் விழிகள் பின்னர் மெல்ல அவளை அடையாளம் கண்டுகொண்டன. அவளுக்காக தேடலாயின. பின்னர் அவளிடம் மட்டுமே மூத்தவள் பேசினாள். மழலைபோல மெல்லிய குரலில் பறவைகளைப்பற்றியும் பசுக்களைப்பற்றியும் அவள் சொன்னாள். சிரித்து நாணினாள்.  விண்மீன்களைச் சுட்டி புரியாத சொற்கள் பேசுகையில் கனவுக்குள் சென்று நீள்மூச்சுடன் மீண்டாள்.

அவள் பேச்சின் உள்ளடக்கம் என்பது எப்போதுமே அங்கிருந்து கிளம்புவதாகவே இருப்பதை அவள் ஒருநாள் உணர்ந்தாள். வெளியே என கைசுட்டியபடிதான் அவள் பேசத்தொடங்கினாள். பேசிப்பேசி களைத்து அவள் துயிலும்போதும் கைகள் வெளியே என சுட்டப்பட்டிருக்கும். அச்சுட்டுவிரலை நோக்கியபடி அவளருகே அமர்ந்திருக்கையில் மைத்ரேயி பெரும் உளக்கிளர்ச்சியை அடைந்தாள். அவளருகே படுத்து அவளுக்கிணையாக தலைவைத்து அந்த சுட்டுவிரல் காட்டிய திசையை நோக்கிக்கொண்டிருந்தாள். அப்பால் கரிய வானம் விண்மீன்சிமிட்டல்கள் பெருகிப்பரக்க வளைந்திருந்தது. வெட்டவெளி. பொருளின்மை. அறியமுடியாமை. அனைவரும் சென்றுசேரும் கருமை அது என்கின்றன நூல்கள்.

அவள் விட்டுத்தாவி சுழன்று மீண்டும் ஆடும் எண்ணங்களை தொடர்ந்து கொண்டிருக்கையில் ஒரு விண்மீன் கீழிறங்கியது. அது கிழித்த செந்நிறக்கோடு சிலகணங்கள் எஞ்சியிருந்தது. அவள் அது மறைவதைக் கண்டு கண்களைமூடி இமைகளுக்குள் மேலும் சிலகணங்கள் அதை நீட்டித்தாள். எங்கோ இலைகள் கலையும் ஒலி. கன்றின் சாணிமணத்துடன் காற்று வந்து குழல்கலைத்துச் சென்றது.

அவள் விழிமூடப்போகும்போது ஒருவிண்மீன் சுழன்று பறந்தபடி அணுகுவதைக் கண்டாள். அது அவளை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தது. நோக்கியிருக்கையிலேயே ஐயமெழுந்தது. அதை விழிகளுக்குள் தேக்கிக்கொள்ளவேண்டுமென முனைந்தாள். விழிமூடி அந்த ஒளித்துளியை அசையாது நிறுத்தினாள். வேதச்சொல் ஒன்றை அதனுடன் இணைத்து இசைக்க வைத்தாள். அச்சொல் ஒளிச்சுடராக அவள் விழிகளுக்குள் நின்றிருந்தது.

ஒருநாள் யாக்ஞவல்கியர் தன் ஊழ்க அறையிலிருந்து எழுந்து தான் உருவாக்கிய கல்விநிலையினூடாகச் சென்றுகொண்டிருந்தபோது எதிரேவந்து வணங்கி அகன்ற மாணவன் ஒருவனின் விழிகளுக்கு தான் முற்றிலும் அயலான் எனக் கண்டுகொண்டு உளம் அதிர்ந்தார். அது வெறும் ஐயமா என்று திகைத்து ஒவ்வொருவர் விழிகளாக நோக்கிக்கொண்டு சென்றார். அனைவருமே அவரை முற்றிலும் அயலான் என்றே நோக்கினர். பின்னர் உணர்ந்தார், உண்மையில் அவர்கள்தான் அவருக்கு அயலவர் என்று. எவர் பெயரும் முகமும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் மாணவர்களை சந்தித்து உரையாடியே பல்லாண்டுகள் ஆகியிருந்தன. ஆசிரியர்கள் பலரை அவர் முழுமையாகவே மறந்துவிட்டிருந்தார். அடையாளம் காணாவிழிகளை விழிகள் அடையாளம் காண்பதில்லை.

அப்படியென்றால் நான் இறந்துவிட்டேனா என அவர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். அலைகளை நீர்ப்பரப்பு என இறந்தவர்களை மானுடம் அக்கணமே மறந்துவிடும் என அவர் கற்றிருந்தார். உடலென எஞ்சும்போதே ஒருவன் இறந்துவிடக்கூடுமா? அவ்வெண்ணமே பேரச்சத்தை எழுப்பியது. ஒவ்வொருவரையாக அழைத்து “நான் இறக்கவில்லை” என்று கூவவேண்டுமென வெறி எழுந்தது. ஒருநாள் முழுக்க அந்தக்கொந்தளிப்பு நீடித்தது. பிருஹதாரண்யகக் கல்விநிலை அமைந்தபோதே அங்கு வந்த மூத்த ஆசிரியர் ஒருவரை தேடிச்சென்றார். அவரைக் கண்டதுமே எழுந்து வணங்கி நின்ற அவர் விழிகளில் இருந்தது இறந்துபட்ட மூதாதையர் மேல் கொண்ட பணிவே என உணர்ந்ததும் ஒரு சொல் பேசாது மீண்டார்.

அன்று ஆற்றங்கரையில் நீரொழுக்கை நோக்கி அமர்ந்திருக்கையில் அஸ்வாலாயனரின் சொற்றொடர் எண்ணத்தில் ஓடியது. “மூன்றுமுறை பிறக்காதவன் முறையாக இறப்பதில்லை.” பலநூறுமுறை பேசி ஆய்ந்த சொற்றொடர் ஆயினும் அத்தருணத்தில் அது திகைப்புடன் எழச்செய்தது. வைசம்பாயனரின் குருநிலையில் இருந்து கிளம்பும்போது அதே போன்று தான் இறந்துவிட்டதாக அவர் உணந்திருக்கிறார் என நினைவுகூர்ந்தார்.

அன்று நோக்கும் விழிகளெல்லாம் மிக அப்பால் பிறிதெவரோ என தோன்றின. அவர்கள் வாழும் ஒவ்வொரு இடத்தையும், அவர்கள் சொல் ஒவ்வொன்றையும் இது அல்ல இது அல்ல என்று விலக்கியே அவர் பிருஹதாரண்யகக் காட்டுக்கு வந்தார். சூரியரைச் சந்தித்து அவர் அளித்த மெய்சொல்லைப் பெற்றபோது மீண்டும் பிறந்தெழுந்தார். ‘இது இரண்டாவது இறப்பு, நான் மூன்றாவதாகப் பிறந்தெழவேண்டும்’ என சொல்லிக்கொண்டார். சொல்லென அமைத்தபோது முதலில் திகைப்பூட்டும் பொருளின்மைகொண்டிருந்தது அவ்வெண்ணம். சொல்லச்சொல்ல அணுகி காற்றென வெளியென சூழ்ந்துகொண்டது. அதில் வாழத்தொடங்கினார். மெல்ல அது இனிதாகியது. ஆம், இரண்டாவது இறப்பு, மூன்றாம் பிறப்பு.

தன் இல்லறக்குடிலை அவர் அடைந்தபோது நாளும் அவர் அங்கே வந்துசெல்வதுபோன்ற இயல்புடன் மைத்ரேயி வந்து அவரை வரவேற்றாள். அவர் கைகால் கழுவி பீடம்கொண்டதும் இன்னீர் கொண்டுவந்தளித்தாள். அவர் அருகே வணங்கி நின்றாள். அவளுடைய அழகிய இளமுகத்தை அவர் அன்று புதிதென நோக்கினார். அவர் புன்னகைத்தபோது அவளும் அது புதிதல்ல என்பதுபோல புன்னகைசெய்தாள். “இளையவளே, உன் மூத்தவளையும் இங்கு அழைத்துவா” என்றார் யாக்ஞவல்கியர். “இன்று நான் உங்களுக்கான இறுதிச்சொற்களை சொல்லவிருக்கிறேன்.”

மைத்ரேயி சென்று காத்யாயனியை அழைத்து வந்து அருகே நிறுத்தினாள். “இல்லத்தரசிகளே, நான் இன்றுமாலையுடன் இந்த வாழ்க்கையிலிருந்து இறந்து அகலவிருக்கிறேன். நாளை முற்றிலும் புதிய வாழ்வொன்றில் பிறிதொருவனாக மீளப்பிறப்பேன். செல்வதற்கு முன் இப்பிறவியில் நான் இயற்றிய அனைத்தையும் முழுமையாக முடித்துச்செல்ல விரும்புகிறேன்” என்றார் யாக்ஞவல்கியர். மைத்ரேயியின் முகத்தில் புன்னகை அவ்வண்ணமே இருந்தது. காத்யாயனி அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை.

காத்யாயனியிடம் “எனக்கு இனியதுணைவியாக இருந்தாய். என் மூதாதையர் மகிழும் மைந்தரை அளித்தாய். நான் உனக்கு ஆற்றியவற்றில் குறைகளும் பிழைகளும் இருந்தால் அவை முழுமையாகவே என்னைச் சார்ந்தவை. என் மூதாதையர் பொருட்டும் என் மைந்தர் பொருட்டும் அவற்றை நீ பொறுத்தருளவேண்டும் என்று கோருகிறேன். உன் கணவனாக வந்தவன் முதிர்ந்து மைந்தனாகி அமைந்துள்ளேன். உன் கால்களில் தலைவைத்து இன்சொல்லை கோருகிறேன்” என்றார். அவள் முகம் அச்சொற்களுக்கு அப்பால் இருந்தது.

மைத்ரேயியிடம் “இளையவளே, நீ விழைந்து வந்தது என்ன என நான் அறியேன். மானுடரை ஒவ்வொரு வயதுக்கும் அப்பருவத்திற்குரிய பூதங்கள் பிடித்தாட்டுகின்றன. என்னை சொல்பூதம் ஆண்டது. பின்னர் காமம் கைப்பற்றியது. பொருள்பூதம் கையிலிட்டு விளையாடியதுண்டு. நீ வந்தபோது என்னை ஆண்டது நானறியா பூதம் ஒன்று. அது என்னை கொண்டுசென்று காட்டியவை எவையென இன்றும் என்னால் சொல்லிவிட இயலாது. உன்னை நான் புறக்கணித்தேன். கணவன் என உனக்கு நான் அமையவில்லை. நீ எனக்கு அளித்த அனைத்துக்கும் பிறிதொரு உலகில் ஈடுசெய்கிறேன். என்னை வாழ்த்தி நற்சொல் உரைக்கவேண்டும்” என்றார். அவள் புன்னகையுடன் “எப்போதுமிருக்கும் சொல்லுக்கு அப்பால் ஏதுமுரைக்கவேண்டியதில்லை” என்றாள்.

“இக்கல்விநிலையின் பொறுப்புகளை அடித்தளம் முதலே பகிர்ந்தளித்துக்கொண்டுதான் வந்துள்ளேன். என் மைந்தருக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய பொறுப்புகளை எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் யாக்ஞவல்கியர். “இனி உங்களுக்கு நான் செய்யவேண்டியது. குலமகளிருக்குரியவை இல்லங்களும் நிலங்களும் ஆநிரையும் பொன்னும் என்கின்றன நூல்கள். இக்கல்விநிலையில் நான் தங்குவதற்கென அமைக்கப்பட்ட குடில்கள் உங்களுக்குரியவை. இக்கல்விநிலைக்கு அப்பால் எனக்கு மட்டுமென மன்னர்கள் அளித்த கழனிகளை இருவருக்கும் இணையாக பகிர்ந்தளிக்கிறேன். எனக்கு வேள்விக்கொடை என அளிக்கப்பட்ட ஆநிரைகள், எனக்கு கல்விக்கொடை என அளிக்கப்பட்ட பொன் ஆகியவற்றையும் இரண்டாகப் பகுத்து இருவருக்கும் அளிக்கிறேன். உங்கள் வாழ்க்கை துயரற்றதாக ஆகவேண்டும் என்றும், நீங்கள் நிறைவடையவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்” என்றார்.

மைத்ரேயி புன்னகை மாறாமல் “இவற்றை நீங்கள் ஏன் அளிக்கிறீர்கள்?” என்றாள். “ஏனென்றால் இவற்றால் எனக்கு இனி பயனில்லை. நான் இப்பிறப்பில் இனி வாழப்போவதில்லை” என்றார் யாக்ஞவல்கியர். “அப்படியென்றால் இங்கிருந்து பயனுள்ள எதை எடுத்துச்செல்கிறீர்கள்?” என்றாள் மைத்ரேயி. அக்கேள்வியை எதிர்கொண்டதும் அவர் ஒருகணம் திகைத்தார் “நீ கேட்டபின்னரே எண்ணினேன். மானுடன் மறுபிறவிக்கு கொண்டுசெல்லக்கூடியவை இரண்டே, வினைப்பயனும் மெய்யறிவும். வினைப்பயன் தானாக உடன் வரும், மெய்யறிவு எடுத்துச்செல்லப்படவேண்டும்.”

“ஆசிரியரே, பயனுள்ளவற்றை நீங்கள் எடுத்துச்செல்கிறீர்கள் என்றால் பயனற்ற பழையவற்றை எங்களுக்கு விட்டுச்செல்கிறீர்கள் என்றல்லவா பொருள்?” என்றாள் மைத்ரேயி. “நான் அளிப்பவை இப்புவியில் கணவன் மனைவிக்கு அளிக்கக்கூடியவை அனைத்தும் அல்லவா? இவையே இவ்வாழ்வின் பொருள் என்பதனால்தான் பொருளென அழைக்கப்படுகின்றன” என்றார் யாக்ஞவல்கியர். “இவற்றில் என்றுமழியாதவை எவை?” என்று அவள் கேட்டாள். “அழிவதே பொருள்” என்றார் யாக்ஞவல்கியர். “அழிபவை அழியாத ஒன்றை அளிக்க இயலுமா?” என்றாள் மைத்ரேயி. “இல்லை, அவை அளிக்கும் அனைத்தும் அழிபவையே.”

“ஆசிரியரே, அழியக்கூடிய ஒன்று எப்படி நிறைவை அளிக்கமுடியும்? மாறாநிலையே நிறைவு எனப்படுகிறது” என்றாள் மைத்ரேயி. “நிறைவை அளிக்கும் செல்வம் எது?” என்று அவள் மீண்டும் கேட்டாள். “விடுதலை” என்று அவர் சொன்னார். “விடுதலையை அளிப்பது எது?” என்றாள் மைத்ரேயி. “கட்டியிருப்பது அறியாமை. அறிவே விடுதலையாகும்” என்றார் யாக்ஞவல்கியர். “அறிவின் உச்சம் என்ன?” என்றாள். “தன்னை அறிதல்” என்றார் யாக்ஞவல்கியர். “முழுவிடுதலை எப்படி அடையப்பெறும்?” என்றாள் மைத்ரேயி. “அறியும்தோறும் அறிதலே கட்டுகளாகின்றது. அறிவிலிருந்து அடைவதே முழுவிடுதலை” என்றார். “ஆசிரியரே, விடுதலை அடைந்தவன் எப்படி இருப்பான்?” என்றாள். “அறிவழிந்து அறிவென அமைந்திருப்பான்” என்றார் யாக்ஞவல்கியர். “ஆசிரியரே, அந்த மெய்யான செல்வத்தை எங்களுக்கு அருளவேண்டும்” என்று அவள் கோரினாள்.

அப்போதுதான் அவர்களை பெண்கள் என்றே தான் எண்ணியதை யாக்ஞவல்கியர் உணர்ந்தார். மாணவர்களாக அவர்கள் ஏன் ஒருகணமும் விழிகளில் தென்படவில்லை என வியந்தார். அப்போது தன்னுள் ஓடிய உளச்சித்திரங்களில் காத்யாயனியின் விழிகளைக் கண்டபோது அதிலிருந்த தீராத ஏக்கம் எதன்பொருட்டு என்று அறிந்தார். இரு கைகளையும் கூப்பியபடி “பெரும்பிழை செய்துவிட்டேன், இப்போது அறிகிறேன் அனைத்தையும். இங்கு நான் இயற்றிநிறைவுசெய்யாத பெரும்பணி என்பது உங்கள் இருவருக்கும் நானறிந்த மெய்யறிவை முற்றளிப்பதே” என்றார்.

“அருகமர்க!” என அவர்களை அழைத்தார். அவர்களை அணைத்து தலையை சுற்றிப்பற்றி காதில் அவர்களுக்கு மட்டுமேயான குரலில் ஊழ்கச்சொல்லை சொன்னார் “அஹம் பிரம்மாஸ்மி.”

 

[ 8 ]

பிருஹதாரண்யகத்திலிருந்து முதற்காலடியை எடுத்துவைப்பதைப்பற்றி யாக்ஞவல்கியர் அன்றிரவு முழுக்க எண்ணிக்கொண்டிருந்தார். கொந்தளித்த உள்ளத்துடன் தன் குடிலுக்குள் சுற்றிவந்தார். வெளியே மின்மினிகள் செறிந்த இருட்டு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. பல்லாண்டுகளுக்கு முன்பு சூரியரைப்பார்ப்பதற்காக அக்காட்டுக்குள் முதற்காலடியை எடுத்துவைத்த நாளை மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாகவே உளக்காலத்தில் மறைந்து விட்டிருந்த நாள் அது. அப்போது ஒவ்வொரு மணற்பருவும் ஒவ்வொரு ஒலித்துளியும் தெளியும்படியாக எழுந்துவந்தது.

அவர் இடையாடை அன்றி ஏதுமில்லாது அந்தப்பெயரற்ற காட்டின் அருகே வந்து சுழித்தோடிய வெண்ணிறஓடையை நோக்கியபடி நின்றார். அக்காடு பிற எங்குமில்லாத ஒன்றை கொண்டிருந்தது, அது என்ன என்று கூர்ந்தார். பறவைகளின் ஒலிகள். அணில்களும் பிற சிற்றுயிர்களும் எழுப்பிய ஒலிகள். காற்றின் ஒலி. கந்தகம் கலந்த மணம். பின்னர் உணர்ந்தார், அக்காடு எவரையும் கொல்வதில்லை என. அங்கு நாகங்களோ கொலைவிலங்குகளோ இல்லை. அதை அறிந்ததுமே அக்காட்டின் ஒலி பெரும் கொண்டாட்டமாக ஆகியது. மாற்றிலாத வாழ்வு மட்டுமே தேங்கிய ஒரு பசும்பரப்பு.

அங்கு பிறமானுடர் எவருமில்லை என்றே அப்போது எண்ணினார். சூரியர் குகைக்குள் தவம்செய்வதை ஓர் உள்ளுணர்வாக அவர் அடைந்தது அதன்பின்னர்தான். அந்த ஓடையை தாண்டுவதா என எண்ணி ஒருகணம் தயங்கிநின்றார். அப்பால் புதருக்குள் இருந்து வெளிவந்த கீரி ஒன்று இளவெயிலில் பிசிறிநின்றிருந்த மென்மயிர் உடலுடன் குழந்தைமுகத்துடன் இருகால்களில் அமர்ந்து எழுந்து நின்று அவரை நோக்கியது. அதன் மணிக்கண்களில் ஒரு திகைப்பு இருந்தது. அவர் தன் இடையாடையை எடுத்து அப்பால் வீசிவிட்டு ஓடைகடந்து காட்டுக்குள் காலடி எடுத்துவைத்ததும் அது திடுக்கிட்டு அமர்ந்திருந்த இடத்திலேயே இல்லாமலாயிற்று. அவர் நடந்தபோது அவருக்குப்பின் அது வளையிலிருந்து எழுந்து அமர்ந்து அதே திகைப்புடன் நோக்கியது.

அவர் அக்காலடியை பேருவகையுடன் உடல்முழுக்க உணர்ந்தார். மீண்டுமொரு கால்வைத்தபோது “இதோ! இதோ!” என்று கூச்சலிட்டு கொப்பளித்தது உள்ளம். “இத்தருணம்! இது என்றுமிருக்கும். நான் அதை அத்தனை அழுத்தமாக எனக்குள் உணர்கிறேன்.” அதை அவர் பின்னர் பலமுறை மாணவர்களுக்கு சொல்லியிருக்கிறர். பிருஹதாரண்யக கதாமாலிகாவிலும் மற்ற சில நூல்களிலும் அத்தருணம் பலவகையாக காவியத்தன்மைகொண்டு மொழியில் பதிந்திருக்கிறது. பின்னர் அது காவியநிகழ்வாகி அவரிடமிருந்தும் அகன்றது.

மறுநாள் புலர்வதற்காக அவர் காத்திருந்தார். கருக்கிருட்டு செறிந்தபோது, காற்றின் குளிர் அழுத்தம்கொண்டபோது வெளியே சென்று வானை நோக்கினார். விடிவெள்ளி தோன்றுவதைப் பார்க்க அங்கே காத்து நின்றார். வானம் விண்மீன்வெளியாக கிடந்தது. பெரும்பெருக்கொன்று கிழக்கிலிருந்து மேற்குநோக்கி ஒழுகிச்செல்வது போல, அல்லது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியா? அவ்வாறு எண்ணியதுமே அது தீப்பந்தப்பொறி போல நாலாபக்கமும் தெறித்துப்பரவுவதை காணமுடிந்தது. ஒருகணத்தில் மாறாது காலக்கருமையில் அமைந்திருந்தது. விடிவெள்ளி எப்படி தோன்றும்? சூரியனையும் சந்திரனையும்போல தொடுவான் கோட்டிலிருந்து உதித்தெழுமா?

முதல் கரிச்சானின் மெல்லிய குரலை கேட்டார். அது விடிவெள்ளி கண்டபின்னரே குரலெழுப்பும் என்பார்கள். விழிதூக்கியபோது விடிவெள்ளி அங்கிருந்தது, அது எப்போதுமே அங்குதான் அமைந்திருக்கும் என்பதுபோல. திகைப்புடன் அவர் அதையே நோக்கிக்கொண்டிருந்தார். இருளிலிருந்து பிதுங்கி வந்ததா? இல்லை பிறிதொரு விண்மீனிலிருந்து துளித்துச் சொட்டியதா? இல்லை தன் விழிகளிலிருந்து அங்கு சென்றதா? தன் எண்ணத்தில் அது முளைத்ததா? அவ்வெண்ணம் ஒருகணம் அவரை உடல்திறந்து காற்றாக ஆக்கி பரப்பியது. “இவை நான்!”

SOLVALAR_KAADU_EPI_32

மீண்டபோது விடிவெள்ளி மேலெழுந்திருந்தது. பறவைக்குரல்கள் சூழ ஒலித்தன. உள்ளே சென்று தன் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லவேண்டுமென எண்ணியதுமே புன்னகை எழுந்தது. அங்கிருந்தே கிளம்பி இருளுக்குள் காட்டுப்பாதையில் நடந்தார். மையச்சாலையில் அப்போது பேச்சுக்குரல்கள் ஒழுகத்தொடங்கிவிட்டிருந்தன. ஆனால் காடு இருட்டுக்குள்தான் கிடந்தது. தலைக்குமேல் விடிவெள்ளியால் எழுப்பப்பட்ட பறவைகளின் ஒலி நிறைந்திருந்தது. நீரின் ஒலி கூடவே வந்துகொண்டிருந்தது.

பின்புலரியில் அவர் காட்டின் அறியாத மறு எல்லை ஒன்றை அடைந்திருந்தார். அங்கு அவருடன் புதருக்குள் வந்துகொண்டிருந்த வெண்ணிற ஓடை வளைந்து புல்வெளியில் ஒளிவிட்டபடி கிடந்தது. அதற்கப்பால் சென்ற பசும்புல்பரப்பை கண்டார். ஓடைக்கரையை அடைந்ததும் மறுபக்கமிருந்து வந்த காற்றே சொன்னது, அது பிருஹதாரண்யகத்தின் எல்லை என்று. அங்கு மேய்ந்துகொண்டிருந்த மான் அவரைக் கண்டதும் தலைதூக்கி காதுகளை முன்கோட்டி மூக்கு கூர்ந்தது.

தனக்குள் எந்த எண்ணம் எழுகிறது என்று பார்த்தார். தன் எண்ணங்களை நோக்கியபடி நடந்துகொண்டே இருந்தார். ஒன்றும் நிகழவில்லை. உள்ளம் மிக இயல்பாக ஓடிக்கொண்டிருந்தது. ஓடையைக் கடந்தபின்னர்தான் அவர் அதை கடந்திருப்பதையே உணர்ந்தார். மான் இடச்செவியை மட்டுமே அவருக்காக ஆட்டியது. முன்வலக்காலை உதறியபடியும் தும்மலோசை எழுப்பியபடியும் அது மேய்ந்துகொண்டிருந்தது. அவர் அதை கடந்துசென்றதை விழியுருளலால் மட்டுமே அது எதிர்கொண்டது.

தன் குருநிலைகளில் இருந்து யாக்ஞவல்கியர் மறைந்துவிட்டதை மெல்லமெல்லத்தான் அனைவரும் அறிந்தனர். சிலநாட்கள் அது உணர்வெழுச்சியுடன் பேசப்பட்டது. யாக்ஞவல்கியர் காட்டில் ஒரு மானால் கொல்லப்பட்டார் என்றன சில கதைகள். அவர் ஒரு வேட்டுவப்பெண் வயிற்றில் பிறந்து சிறுவனாக புதியகாட்டை அறிந்துகொண்டிருக்கிறார் என்றன. அவரை நீண்ட சடைமுடிக்கற்றைகளுடன் இமயக்குகை ஒன்றில் கண்டதாக சொன்னார்கள் சிலர்.

பிருஹதாரண்யகம் சொல்தழைத்து வளர்ந்தது. அரசர்களின் கொடைகளைச்சுமந்து அதன் களஞ்சியங்களை நோக்கி வண்டிகளும் அத்திரிகளும் வந்துகொண்டிருந்தன. அதன் கல்விநிலைகளை நோக்கி இளமைந்தர் கண்களில் வினாக்களுடன் அணுகிக்கொண்டிருந்தனர். மைத்ரேயி அங்கே அதன் தலைவி என இருந்து ஆண்டாள். அவளை ஆசிரியரின் மெய்யுரு என வழிபட்டனர் மாணவர்கள். ஒவ்வொரு உயிரசைவையும் நோக்கும் இமையா விழிகொண்டவள் அவள் என்று அவளைப்பற்றி பாடினர் சூதர்.

ஆனால் அவள் மேலும் மேலும் தனிமைகொண்டவளாக மாறிக்கொண்டே சென்றாள். தன் ஊழ்கச் சொல்லுடன் காட்டுக்குள் சென்று அமர்ந்திருப்பதையே அவள் விரும்பினாள். ஒருநாள் அவள் அக்காட்டின் எல்லைக்குச் சென்று அமர்ந்திருந்தபோது வெண்ணிற நீர் சுழித்தோடிய ஓடைக்கு அப்பால் விழிசுருக்கி நின்றிருந்த இளமைந்தன் ஒருவனை கண்டாள். அவனருகே சென்று “எங்கு வந்தாய்?” என்றாள். “எனக்கு மட்டுமே உரியதொன்றை அறிய” என அவன் சொன்னான். “என்ன கற்றிருக்கிறாய்?” என்று அவள் கேட்டாள். “இதுவரை எதையும் கற்கவில்லை” என்று அவன் சொன்னான்.

அவன் அழகிய விழிகளை நோக்கி அவள் வியந்து நின்றாள். “இவ்வழியை எப்படி அறிந்தாய்?” என்றாள். “இளமையிலேயே எனக்குப் பிடித்த மணம் ஒன்றிருந்தது. நான் அதை மட்டும் தேடித்தேடி அலைந்தேன். அது வலுத்துவலுத்து என்னை இங்கழைத்து வந்தது” என்றான் அவன். “உன் பெயர் என்ன?” என்று அவள் கேட்டாள். “சூரியன்” என்றான். அவள் கைகளை விரித்து “இது உன் இடம், வருக மைந்தா!” என்றாள். அவனைத் தழுவியபடி தன் கல்விநிலைக்கு மீண்டாள்.

அவனுக்கு ஒருநாள் முதல்விடியலில் “நானே பிரம்மம்” என்னும் ஊழ்கவரியைச் சொல்லி ஆற்றுப்படுத்திவிட்டு மைத்ரேயி அங்கிருந்து கிளம்பினாள். பிருஹதாரண்யகத்திலிருந்து காத்யாயனியை அழைத்தபடி மைத்ரேயியும் கிளம்பியபோது அனைவரும் கண்ணீர்விட்டனர். உளக்கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டனர். அதுவும் சின்னாட்களில் பழங்கதை என்றாகியது.

முந்தைய கட்டுரைகைவிடு பசுங்கழை -2
அடுத்த கட்டுரைசிலைகள் -கடிதம்