போகன்!

1

போகன் பற்றி நண்பர் சரவணன் விவேகானந்தன் அவரது செல்பேசியில் காட்டினார். மிகமிக உற்சாகமாக இருந்தது. இப்படிப்பட்ட செயல்கள்தான் இன்றைய பெண்குலத்திற்கு அவசியமானவை. பெண்கள் இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். ஓலா வண்டிகளில் கூட ஓட்டுநர்கள் கத்திமாதிரி கைகாட்டும் காலம். இந்தச்சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பாக போகன் களமிறங்கியிருப்பது மிகுந்த நம்பிக்கை ஊட்டுகிறது. இவ்வகையான செயல்களைச் சில பெண்ணியர்கள் எதிர்க்கக்கூடும். ஆனால் போகன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர் அல்ல என்பது தெரிகிறது.

”எண்ணிய எண்ணாங்கெய்துப எண்ணியார் பெண்ணியராகப் பெறின்’ என்பது வள்ளுவர் வாக்கு. பெண்ணியம் பூத்த புரட்சிப்பெண் லெதர் ஜாக்கெட்டுடன் எதிரிகளைப் பந்தாட இறங்கியிருக்கும்போது இருபக்கமும் ஜெயம் ரவியும் அரவிந்தசாமியும் மேலும் லெதர்ஜாக்கெட் குல்லா, மனவாடு கூலிங் கிளாஸ் அணிந்து இருபக்கமும்  மோட்டார் பைக்கில் ர்ர் ர்ர் என நின்றிருக்கும் அந்த ஸ்டில்லை எம்.டி.எம்மார் உரை இல்லாமல் தெள்ளிதின் குறியீட்டு  ஆய்வு செய்து பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

போகன் மிகத்திறமையானவர் என்றார்கள். இருக்கலாம். ஏனென்றால் நவபாஷாணச்சிலையை அவர்தான் செய்ததாகச் சொல்வார்கள். அச்சிலையின் பின்பக்கத்தைச் சுரண்டி சிலர் உண்டு ஆண்மையை விருத்தி செய்ததை தீப்பொறி ஆறுமுகம் சொல்லியிருக்கிறார். போகன் படத்தின் காட்சிகளிலேயே ஆண்மை மிளிர்கிறது.  குறிப்பாக தினவெடுத்து திண்தோள் தட்டிக் களமிறங்கும் தோழிக்கு இருபக்கமும் காவலென வந்து நின்ற காளையர் அதைத்தானே காட்டுகிறார்கள்.

போகனை வரவேற்போம். போகன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26