மண்ணு வீசும் வாசனையும்…

கோயில்பட்டி வழியாக பேருந்திசென்றுகொண்டிருந்தேன். சட்டென்று ஒரு குரல் காதில் விழுந்தது. அரைத்தூக்கம். மனம் நெகிழ்ந்த நிலை. அப்பாடல் மனதைக் கலக்கிவிட்டது. தெரிந்த குரல்தான். நாட்டுப்புறப்பாடகி வைகை பிரபா பாடியது. உடனே இறங்கிச்சென்று அந்த ஒலித்தட்டை வாங்கினேன். எந்த குறிப்பும் இல்லாமல் குத்துமதிப்பாக பதிவுசெய்யப்பட்ட பாடல்கள் அவை.

வீட்டுக்கு வந்து அவற்றைக் கேட்டேன். தென்பாங்கு அல்லது தெம்மாங்கு பாட்டுக்கு எப்போதுமே ஐந்தாறு மெட்டுக்கள்தான். சோகம், களியாட்டம் இரண்டும் அந்த மெட்டுகளில்தான். பாடுவதன் வேகத்தை மட்டும் மாற்றிக்கொள்வார்கள். பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது தென் தமிழகத்தின் சருகும்புழுதியும் வெயிலில் வெந்து மணக்கும் பெரும்பொட்டல்களும் கரிய முகங்களின் வெண்சிரிப்புகளும் நினைவுக்கு வருகின்றன என்பதே இவற்றின் பெரும் கவற்சி.

வைகை பிரபாவின் குரல் நாட்டுப்புறப்பாடல்களுக்கே உரியது. செயற்கையான இனிமை இல்லை. நேரடியானது. தேவையான இடங்களில் ஒரு வகை கம்மல். மேலே செல்லும் போது இயல்பான உடைவு. ஒரு நாட்டுப்புறப்பெண் பாடுவதுபோலவே ஒலிக்கின்றன இப்பாடல்கள். உணர்ச்சிகரமாக பாடல்களுடன் இணைந்துவிடும் ஆன்மா இவருக்கிருப்பதனால் பாடல்கள் நெஞ்சை மீட்டுகின்றன

இப்பாடல்களில் மூன்றுபாடல்களை நான் மீண்டும் கேட்டேன். அவை நாட்டுப்புறப்பாடல்கள் அல்ல. கவிஞர்களால் எழுதப்பட்டவை. ‘அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு’ பாடலை எழுதியவர் கதிரை நீலமேகம். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சாரக் கவிஞர். அதிகம் எழுதியவரல்ல. ’எத்தனைமுறை காபி கொடுப்பா’ பாடலை எழுதியவர் கவிஞர் பரிணாமன். தருமபுரி மாவட்டத்தில் மொரப்பூர் அருகே ஆசிரியர். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர்

முதல்பாடல் எல்லாவகையிலும் நாட்டுப்புறப்பாடல். நாட்டுப்புறப்பாடலுக்கே உரிய எளிமை நேரடித்தன்மை. ஆனால் அந்த கடைசி திருப்பம் ஒரு புதுக்கவிஞனால் அளிக்கப்படுவது. சாதாரணமாக அதை நாட்டுப்புறப்பாடல்களில் பார்க்க முடியாது. பரிணாமனின் பாடலில் கடைசியில் வரும் வேண்டுகோள் கட்சிபிரச்சாரகன் மட்டுமே எழுதக்கூடியது.

மூன்றாவது பாடல் ‘மண்ணு வீசும்’ அதை ஒரு கவிஞன் எழுதியது என நான் ஊகிக்கிறேன். இத்தனை தெளிவான ஒரு எதுகைமோனை நாட்டுப்புற பாடல்களின் அமைவதில்லை

முந்தைய கட்டுரைகஞ்சிராவின் கதை
அடுத்த கட்டுரைநூல்கள்,கடிதங்கள்